Blog Archive

Thursday, August 01, 2019

பொறுமை எனும் நகை ....2

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக   வாழ வேண்டும்

பொறுமை எனும் நகை ....2
+++++++++++++++++++++++++++++
தம்பி ராஜகோபாலனுக்கு அக்கா அம்மாவிடம் இப்படிப் பேசுவது 
பிடிக்கவில்லை. 
அப்பாவின் நடத்தையில் தர்ம நியாயம் இருப்பதை 
அவன் உணர்ந்தவன். இன்னோருத்தருடைய பணத்தை 
எப்பொழுதும் விரும்புபவர் அல்ல.
உண்மைதான்  வசதியுள்ள சில விவசாயிகளிடம் அவர் ஏமாந்து போவதையும்
பார்த்திருக்கிறான்.
இன்னும் முஞ்சாக்கிரதையாக இருந்திருக்கலாமே என்று 
தோன்றும். இந்தப் பணம் வந்துதான் வீடு நடக்க வேண்டும் என்ற நிலைமை
இல்லாததால் சரிதான்.

ஆனால் ஏமாறக் கூடாது என்பதில் உஷாராக இருப்பான்.
அப்பாவுக்கு அவன் தான் குறிப்புகள் எழுதுவான்.
சில பேர் ப்ராமிசரி நோட் எழுதிக் கொடுப்பதையும்
பத்திரமாக எடுத்து வைத்துக் கொள்வான்.

இந்த அதிகப் பிரசங்கித்தனமான பேச்சுக்கு அம்மா என்ன பதில் 
சொல்லப் போகிறார் என்பதைக் கவனித்தான்.
மைதிலி, உக்கிரமாகப் பேசும் பெண்ணை
உறுத்துப் பார்த்தாள்.
எந்த விதத்தில் உன் அப்பா குறைந்து விட்டார்.
மற்றவர்கள் மாதிரி வெற்றிலை ,புகையிலை ,அத்தர் என்று வலம் 
வருகிறாரா, காசு வைத்து சீட்டாடுகிறாரா,
உன் நகைகள் எதையாவது எடுத்துப் போய் விற்று விட்டாரா.

ஒரு நாணயமான மனிதரை, அதுவும் உங்க அப்பா
மாதிரி தங்கமான மனிதரை இப்படி அலட்சியமாகப்
பேச எப்படி மனம் வந்தது உனக்கு.
என்று உஷ்ணமாகப் பேசும் அம்மாவை
பதிலுக்கு முறைத்தாள் வாரிஜா. நேத்திக்கு உன் அத்தை வந்திருந்தாரே
அதுதான் அந்த சின்னக் கோமளம்,
என்ன சொன்னார் தெரியுமா, அடியே உங்க வீடு இப்பக் காலி 
பெருங்காய டப்பா. 
முன்னே மாதிரி இரும்புப் பெட்டி, தங்கக் கிண்ணம் எல்லாம்
இல்லை. நீ என் பேரனைக் கல்யாணம் செய்ய வேண்டும் என்றால்
இப்பவே தீர்மானமா உங்க அப்பா கிட்டப் 
பேசிக்கொள்.
இதோ, எதிர் அகத்து திருமலை எப்படி சுலபமாக 
சப் ஜட்ஜ் ஆகிட்டான் பாரு. 
அந்த சாமர்த்தியம் உங்கப்பனுக்கு இல்லையே.
அவர்கள் எப்போது பார்த்தாலும் கும்பகோணத்து வீதிகளில் ,
புடவையோ,நகையோ வாங்கிக் கொண்டுதான்
இருக்கிறார்கள்.
உன் அம்மாகிட்ட அவள் அப்பா கொடுத்ததற்கு மேல்
என்ன இருக்கிறது. //என்று  எகத்தாளமாப் பேசினாரே
அம்மா. எனக்குக் கோபம் வராமல் என்ன செய்ய.//
என்ற பெண்ணை, வருத்தத்துடன் நோக்கினாள்.
 கோபித்துப் பயன் இல்லை. வயதுக் கோளாறு,
கூடா நட்பு எல்லாம் இப்படிப் பேச வைக்கிறது.

கணவர் கிராமத்திலிருந்து வந்ததும் இதற்கு
முடிவு கட்ட வேண்டும்.இப்படியே வளர விட்டால்,
அவள் புக்ககம் ,சென்றால் வாங்குவது 
நல்ல பெயராக இருக்காது என்று தீர்மானித்தாள்.

கணவரின்  அருமையை நன்றாக உணர்ந்தவள் .  அவருடைய 
முன்னோர்கள்  இல்லறம் துறந்து மடாதிபதிகளாக இருந்தவர்கள் .
இவருக்கும் அது போல, தெய்வ பக்தியும், காருண்யமும் 
இருந்ததில் அதிசயம் இல்லை. அந்த விசால மனதை புரிந்து கொள்ள தன மகளுக்கு மனமில்லையே 
என்று வருத்தமே மேலோங்கியது.

மகன் ராஜகோபாலன்  அப்பாவைப் புரிந்து செயல்படுவதில் 
அவளுக்கு நிம்மதி .
தன தந்தையின் அறுபதுக்கு அறுபது  அடுத்த மாதம் வர போவதை விட்டு செய்ய வேண்டிய ஏற்பாடுகளில்  தன்னை உட் படுத்திக் கொண்டே அந்த யோசனையில்  சின்னக் கோமளத்தின் பேரனைப் பற்றியும் விசாரிக்க முடிவு செய்தாள் . தொடரும் 





16 comments:

ஸ்ரீராம். said...

தொடர்கிறேன் அம்மா. மகள் சீக்கிரமே மன்னிப்புக் கேட்பார் என்ற எதிர்பார்ப்புடன் தொடர்கிறேன். பாடல் இனிமை.

கோமதி அரசு said...

மகன் பொறுப்புடன் இருப்பது மகிழ்ச்சி.
மகளும் மனம் மாறுவாள் என்று நம்புகிறேன்.

கதையை சொல்லி செல்லும் விதம் அழகு.

பாடல் நன்றாக இருக்கிறது. அன்பான குடும்பம்.பார்க்க நன்றாக இருக்கிறது.

Geetha Sambasivam said...

தனக்கு ஒன்றும் இல்லாமல் போய்விடுமோ என்னும் பயம் போல! அதிலும் மனதுக்குப் பிடித்த இடத்தில் வாழ்க்கைப்பட முடியாமல் போய்விட்டால்? தானே சரியாகிவிடும் என எண்ணுகிறேன். அடுத்ததுக்குக் காத்திருக்கேன்.

KILLERGEE Devakottai said...

தவறுகளை உணரவும் வயது வரவேண்டும் இது பலருக்கு தாமதமாகவே வரும்.
தொடர்கிறேன் அம்மா.

திண்டுக்கல் தனபாலன் said...

விசால மனதை புரிந்து கொள்ளும் நேரம் வரும்...

அழகான பாட்டு...

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.
உண்மைதான். வழி தடுமாறுவதும் ,பின் சேருவதும் தான்
வாழ்க்கை. நல்லபடியே தொடரும். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா, இனிய காலை வணக்கம்.
கும்பகோணம் தோழியின் வாழ்வு பிறகு
பரிமளித்தது.
கேட்பார் பேச்சைக் கேட்டு எதிர்ப் பேச்சு
பேசியது நின்றது. என் சிறு வயதுத் தோழி
திருந்தினாள். தம்பி நீங்கள் சொல்வது போல் வயதில் சிறியவனாய்
குணத்தில் பெரியவனாய் இருந்தான். மாற வில்லை.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா இனிய காலை வணக்கம்.
உண்மைதான். நம் குடும்பங்கள் போல் எல்லோரும் இருப்பதில்லை.
போட்டியே இல்லாவிட்டாலும்,
அம்மா புழங்கினது என்று கற்சட்டியைக் கூட எடுத்துப்
போனவர்களைப் பார்த்திருக்கிறேன் மா.
இந்தப் பெண்ணும் கிட்டத்தட்ட அது போலத்தான். தூபம் போட ஒரு அத்தைப்
பாட்டி வந்தார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டை ஜி,

ஆமாம், வயதும், அறிவு முதிர்ச்சி இல்லாததும்
அந்தப் பெண்ணை இப்படிப் பேச வைத்தன.
புரிந்து கொண்டீர்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்,
அன்புமனம் கொண்ட பெற்றோரைப் புரியாத குணம்.
மாறும்.நன்றி மா.

மாதேவி said...

சிறுவயதுதான் துடுக்கான பேச்சுக்கு காரணம்.

வெங்கட் நாகராஜ் said...

பொறுப்புள்ள மகன். கொஞ்சம் துடுக்கான பெண்... மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன் மா...

ஆனந்தம் படப் பாடல் இனிமை. மீண்டும் கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறேன் மா.

Thulasidharan V Thillaiakathu said...

ரொம்ப நன்றாக இருக்கிறது அம்மா ...அப்படியே அந்தக்கால ப்ளாக் அண்ட் வொயிட் படங்கள் பார்ப்பது போல!!

ரசித்து வாசிக்கிறேன். வாரிஜா மாறுவாள்...அப்பருவத்தில் பல பெண்கள் இப்படியாக இருப்பதுண்டு. குறிப்பாகப் பெண் குழந்தைகள்தான் இருப்பார்கள் போலும்.

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி,
சுற்றுச் சூழலை வைத்துப் பெண் குழந்தைகள்
குணம் மாறும். பொறுப்பு வந்து விட்டால் திருந்தி விடுவார்கள்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் வெங்கட்.
ஒரே குடும்பத்தில் இரு குணம் படைத்த இரு
குழந்தைகள்.
ஒரே மாதிரி வளர்க்கப் பட்டாலும்
ஏதோ ஒன்று அவர்களை மாற்றுகிறது.

காலம் மாற்றும்

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா மா.
வாரிஜா என் தோழியின் பெயர்.
என் அம்மாவிடம் இப்படி அழகான பெயர்
வைக்கலியேன்னு அடம் பிடிப்பேன்.
அம்மாவுக்கு சிரிப்பு தாங்காது எத்தனை பெயர் வேணும் உனக்கு என்பார்.

உண்மைதான் காரணம் இல்லாமல்
கோபம் வரும் பெண்களுக்கு அந்த வயதில்
உலகமே ஏமாற்றப் புறப்பட்ட மாதிரி.
நன்றி மா. .