Blog Archive

Sunday, December 28, 2008

பூமி ஆளலாம்.
Posted by Picasa
இன்னுமொரு மார்கழி.இன்னுமொரு வருடம்.
இன்னுமொரு பதிவு.
இன்னுமொரு சுனாமி நாள்.
இன்னும் இந்தக் கடலைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது.

உன்னைச் சொல்லி என்ன பயன். எய்தவன் யாரோ.
நீ வலியால் தூண்டப்படே கரையைத் தாண்டினாய் கடலே.
எத்தனை அழியாத நினைவுகளைக் கொடுத்து இருக்கிறாய். எத்தனை ஆனந்தமான சாயங்காலப் பொழுதுகளை நாங்கள் உன் மணலில் கழித்திருக்கிறோம்.
மகிழ்ச்சியை மட்டுமே கொடுக்கத்தெரிந்த உன்னைக் கரை மேல் ஏவிவிட்டது யார்.

இத்தனை கேள்விகள் என்னுள் எழுந்தன நேற்று மெரினாவில் நடந்த போது.
டிசம்பர் மாதக் காற்று இதமாக இருந்தது.
கடல் ஆர்ப்பரித்துக் கொண்டுதான் இருந்தது.
ஆனால் பயமாக இல்லை.
வங்கக் கடல் எனக்குத் தெரிந்த சிலரையும் உள்ளே வாங்கிக் கொண்டு இருக்கிறது.
அவர்களை நினைப்பதற்காக, மானசீகமாக அவர்களிடம் பேச நான் கடலின் கரைக்கு வருவேன்.

இதெல்லாம் பழைய கதை,இனிப் புது ஆண்டு வரப்போகிறது. புது நினைவுகளையும் ,புதுக் குழந்தைகளையும்,புதுப் பதிவுகளையும்,திண்ணிய எண்ணம் கொண்ட மனிதர்களையும் அடையாளம் காட்டப் போகிறது.
நல்லதே நடக்கட்டும்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
ஹாப்பி நியூ யியர் 2009.

Wednesday, December 24, 2008

நல்வாழ்த்துகள் அனைவருக்கும்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்
புத்தாண்டு வருகிறது. தயாராகுங்கள்

இது நானே பரிசோதித்துத் தயார் செய்த புத்தாண்டு வாழ்த்து.:)
ஒவ்வொரு வருடமும் நினைப்பது உண்டு.
என்ன செய்தோம். திட்டமிட்டோமா.
மற்றவர் திட்டப்படி நடந்தோமா என்று யோசித்தால்,
அது மற்றவர்கள் கைகாட்ட நான் நடந்திருக்கிறேன்.
அதுதான் உண்மை.
இரட்டை மாட்டு வண்டியில் ஒரு மாடு திரும்பினால் மற்ற மாடும் திரும்ப வேண்டியதுதானே.
அதனால் குழப்பம் இல்லாமல் வண்டி ஓடும்.
இறைவன் எல்லா விதத்திலும் கருணையோடு நடத்தி வந்திருக்கிறான்.
பாதுகாவல் கொடுத்து இருக்கிறான்,.
மேலும் நட்புகளை நல்ல நண்பர்களை அறிமுகம் செய்து
செய்து கொடுத்து இருக்கிறது இணையம்.
எத்தனை விதமான எண்ணங்கள்!!!
நினைப்புகள்
கணிப்புகள்,
கவிதைகள்,
எல்லாவற்றுக்கும் மேலான நட்புகள்.
அனைவரும்
நோய் நொடி இல்லாமல், ஆரோக்கியமாக, உற்சாகத்தோடு,குடும்பத்தோடு, குழந்தைகளோடு,
இருக்க வாழ்த்துகள்.
நல்லதொரு புத்தாண்டு நம்மை நோக்கி வருகிறது.
அந்த ஒளி வழியில் நாம் நடந்து கொண்டாடுவோம்.

Tuesday, December 23, 2008

தூமணி மாடம்


இன்று தூமணிமாடத்து நாள்.
ஒன்பதாம் திருப்பாவை.
இதுவும் பத்தாம் பாவைப் பாடலான நோற்றுச் சுவர்க்கமும் இரண்டு தடவை சேவிக்க வேண்டும் என்று பெரியோர் சொல்வார்கள்.
மார்கழி விசேஷம் பேசும் பதிவுகள் கேஆரெஸ் ,குமரன் என்னும் பண்பான பதிவர்கள் ஆன்மீகத்தோடு சொல்லும் வார்த்தைகள் இருக்கும் போது
நானும் மீண்டும் எழுத என்ன இருக்க முடியும்.
பாட்டைத்தான் கொடுக்க வேண்டும்.
பார்த்தால் அங்கே ஆண்டாளின் தோழியின் வீடு தெரிகிறது. அதிலோ ஒரு மணிக்கதவம்.
விழித்திருப்பது பெண்ணின் தாயார் மட்டுமே.
பாடலின் நாயகியோ மார்கழிப் பனிக்குத் துணையாக வடபத்ர சாயி யினை நினைத்துக் கொண்டு அவன் தந்த ஆதரவிலே அழகாகத் துயில்கிறாள்.
அவள் படுத்திருக்கும் இடமோ தூ...மணி...மாடம்.சுற்றும் விளக்குகள் எரிகின்றனவாம். தூபம் கமழ்கிறதாம்.

இந்த மாதிரி மென்மையான காலையில் இருளும் ஒளியும் கலந்த வேளையில்
இவளுக்கு மட்டும் ஒளி நடுவே எப்படித் தூக்கம் வருகிறது.
நாமோ நோன்பெடுத்துவிட்டோம். கேசவனைப் பாட. இவளுக்கு யாராவது ஏவல் வைத்துவிட்டார்களா.
சொப்பனத்தில் கண்ணனைக் கண்ட மயக்கத்தில் இன்னும் கண் திறக்க முடியாமல், ஊமையாய் உறங்குகிறாளா.

கண் திறந்தால் கண்ணன் ஓடிவிடுவான் என்ற பயமாக இருக்க வேண்டும். அதுதான் என்று தீர்மானித்த ஆண்டாளும் தோழியரும், பெண்ணின் அம்மாவை விளித்து,
மாமீர்! உங்கள் மகளை எழுப்புங்கள், மாதவனைப் பாட வேண்டும்,
அவன் கோவில் நாட வேண்டும் என்று விண்ணப்பிக்கிறார்கள்.
அவளும் எழுந்துவிடுவாள். அவர்களும் சேர்ந்து இன்னோரு பெண்ணை எழுப்பப் போவார்கள்.
என்ன ஒரு இனிமையான காலம்.
இப்போதோ இன்றொ நானும் இருக்கிறேன்.
மார்கழிக்கு என்று ஒரு கோலமும், இரு விளக்குகளும்தான் வாசலில் அத்தாட்சி.
இழைகளை இழுத்து முடிக்கவும், ஜயா,விஜய்,பொதிகை,ராஜ் டிவி என்று ரிமோட்டை அழுத்தி மார்கழி உபன்யாசங்களைக் கேட்டு விட்டு,
இன்னோரு காப்பியும் குடித்துவிட்டு, இதோ இணையத்துக்கு வந்தாகிவிட்டது.
நேற்றுதான் இந்தத் தமிழ்மணம் வரலாமா வேண்டாமா என்று யோசித்தது இன்று
ஆண்டாளின், சூடிக்கொடுத்த சுடர்க்கொடியின் தயவில் வலை ஏற்றிவிடலாம் என்று நினைக்கிறேன்.
தமிழ்மணம் இன்னும் என் இணையத்தில் தெரியவில்லை.
படிக்க முடிந்தவர்கள் கருத்துச் சொல்லுங்கள்.

அன்னவயல் புதுவை ஆண்டாள்
அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல்பதியம்
பாடிக்கொடுத்தாள்,
நல்பாமாலைச் சூடிக்கொடுத்தாள்.
சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே வாழிய நீ பல்லாண்டு.
ஆண்டாள் திருவடிகளே சரணம்.

Posted by Picasa

Monday, December 15, 2008

வந்தோம்ம்ம்ம்
இருபத்தேழு கிலோவோட எமிரேட்ஸ் வண்டி ஏறினோமா. அதுல ரொம்ப முக்கிய விஷயம் சாப்பாடுதான். உண்மையாவே நல்லா இருந்தது.ரசிச்சுச் சாப்பிட்டேன்.சென்னை வந்துடுத்து.லக்கேஜ் கிடைக்க ஒரு மணி நேரம் ஆச்சு. கஷ்டம் ஆபீசர்கள் சிரித்துச் சந்தோஷப் படுத்தினார்கள்.:)
கிட்டத்தட்ட 50 படங்கள் ஆப்ஷன் கிடைச்சுது. ஒண்ணே ஒண்ணுதான் பார்த்தேன். நல்ல ஏர்லைன் தான். பாகேஜ் அதிகப் படுத்தினாங்கன்னா நல்லா இருக்கும்.வீட்டுக்கு வந்தோம். பூட்டுத் திறக்க முடியவில்லை:)
மழையில் துரு பிடித்திருந்தது.
ஏற்கனவே
ஏற்பாடு செய்தபடி நீல்கிரீஸ் நெஸ்டில் இரு இரவுகள் தங்கள். டெலிபோன் கனெக்ஷன், டிவி கனெக்ஷன், இன்வெர்டர் ஆன் செய்தல். மளிகை பொருட்கள்.
அப்பாடி என்ன விலை.

வீட்டைத் திறந்ததும் தாக்கியது எலி நாற்றம்.
ஓஹோ இவங்க குடி வந்திருக்காங்களான்னு கேட்டு, ஜாக்கிரதையாக
ஒவ்வொரு அறையாகத் திறந்தோம்.
எதிர்பார்க்¸kaaத இடங்களில் அவை இறந்தே இருந்தன.
பிறகு தான் தெரிந்தது வேறு வீட்டில் வைத்த விஷத்தை உண்டு
இங்க வந்து இறந்திருக்கின்றன.:(
இதன் விபரீத பிற்பலன்களை எண்ணி இன்னும் பயமாக இருந்தது.
வீட்டின் மற்ற இடங்களையும் புத்தகங்களையும் ஒழித்துக் கொண்டு இருக்கிறோம்.
இணைய இணைப்பு நேற்றுதான் கிடைத்தது.
இதோ இன்றுவரையான விஷயங்களை எழுதியாச்சு.
இனிமேல்தான் மற்றவர்களின் பதிவுகளைக் கண்டு மகிழணும்.
எல்லோருக்கும் வணக்கம்.

Monday, December 08, 2008

சென்னையில் பதிவர்

வித விதமான சோழிகள், வாங்கி இருக்கலாமோ..
சூவனீர் கடை. நான் ஒரு பொம்மை கூட வாங்காமல் வந்தேன்:))

அட்லாண்டிஸ் அக்வாரியத்தில் சிற்பம்


முன்னைவிடப் பெருகிவிட்ட கட்டிடங்கள்
புர்ஜ் டவர்

எங்க மீனாட்சியோட அக்காவாம்.சொல்லித்து.


அட்லாண்டிஸ் முகப்புPosted by Picasa
என்ன வாங்கிட்டுப் போகலாம்....
தலை குடச்சல் தாங்கலை.
பட்டியல் நீளம்.
வயதுகள் வித்தியாசம்.
தேவைகளூம் அதே.
ஏழு மாதங்கள் கழித்து பட்டினப் பிரவேசம் செய்தால்,
காட்டிருக்கும் வேலைகள் பிரம்மாண்டம்.
எண்பது பூர்த்தி செய்தவர்களிலிருந்து,புதிதாகப் பிறந்திருக்கும் ஒரு பாப்பா வரை ஏதாவது கொண்டு போகவேண்டும்.
பெண்களுக்கென்றால் நல்ல புடவை போதும்.

ஆண்களுக்குத்தான் யோசிக்க முடியவில்லை. நான் சொல்லும் நபர்கள்
வயதானவர்கள்.....வாசனைத்திரவியங்களைத் தவிர்ப்பவர்கள். எளிமையான பழக்க வழக்கங்கள்.
டி ஷர்ட் சரியாக இருக்கும். இல்லை என்றால் நடப்பதற்கான வாக்கிங் ஷூஸ்.
சரி அது ஓவர்.
சின்னக் குழந்தைகளுக்கு ஃபான்சியான காது,கழுத்து,கைகளுக்கான விஷயங்கள்.
நடுத்தரவயதுப் பெண்மணிகளுக்கு வாசனை செண்ட், கைப்பைகள்.
பாதாம்,முந்திரி,திராட்சை,குங்குமப்பூ இதுபோல வகையறாக்கள்.

சரி வாங்கியாச்சுனு முடிக்க முடியாது.

முனிம்மா கேட்ட குடை,செருப்பு இதுக்கெல்லாம் இடம் வேணும்.
அவங்க பேத்திகளுக்கு உடைகள்,தலைக்கு ஹேர்பாண்ட்,
பேரனுக்கு இரண்டு ரெடிமேட் உடைகள்.

சிங்கத்தோட பொட்டிக்குள் அவரோட கைவேலைக்கான ஆயுதங்கள்,பொம்மைகள் இத்தியாதி. .அய்யா மேல போட்டு இருக்கிற துணிமணியோட ப்போய் இறங்க வேண்டியதுதான்.
ஆனல் சினேகிதர்களுக்கான பேரிச்சம்பழம்,பாதாம் எல்லாவற்றுக்கும் இடம் உண்டு:)

எல்லாவற்றையும் வைத்து நிமிர்ந்தால் ,என் புடவைகளுக்கு இடமில்லை:)
எமிரட்ஸில் ஒரு பயணிக்கு 20 கிலோ தான் உண்டு.
கையில் 7 கிலோ.
அதற்குள் எனக்கு இரண்டு நாட்களுக்கு வேண்டும் என்கிற துணிமணிகளைப் போட்டுக் கொண்டாகிவிட்டது. மருந்துகளை அடைத்தாகி விட்டது.
போய் இறங்கினதும் ஒரு ஹோட்டலில் தங்கல்.
வீட்டை முழுவதும் சுத்தம் செய்த ப்பிறகு, கிரகப் பிரவேசம் செய்ய நினைப்பு.
கார்த்திகைக்கு அங்கே விளக்கேற்றலாம். கடவுள் கிருபையில்.

இன்னும் மழை இருக்காம். நாகைப் பட்டினத்திற்கு அருகே புயல் வந்து கொண்டிருக்கிறதாம். அதுகிட்ட சொல்லி இருக்கேன்.
அம்மா, தயவு செய்து எங்க ப்ளேன் தரை இறங்கற வரை மெல்ல வீசு. அப்புறமா வங்களவிரிகுடாக்குள் போயிடு''ன்னு.:)
பார்க்கலாம்.

Thursday, December 04, 2008

டிசம்பர் புகைப்படங்கள்

Posted by Picasa
புகைப்பட போட்டிக்குப் படங்கள் கிடைத்து விட்டன.
மூன்று படங்கள பதிவுக்குக் கொடுத்துட்டு,
ஒன்றைத் தெரிவு செய்து அனுப்பி விடவேண்டும்.

கடற்கரை நிழல்கள்இவைகள், இங்கே துபாய் ஜுமைரா கடற்கரைக்குப் போனபோது எடுத்த படங்கள்.
மகன் எடுத்த படங்கள். அதனால் போட்டிக்கு அனுப்ப முடியாது:)
அப்போது அழகுக்காக எடுத்த வை. இப்போது நிழல்கள் தலைப்புக்கு
அருமையாக அமைகின்றன.