Showing posts with label கொசுவத்தி. Show all posts
Showing posts with label கொசுவத்தி. Show all posts

Thursday, January 13, 2011

1982 ஜனவரி 14, ஒரு பொங்கல் நாள்

  மத்தியானம்  சாப்பிட்ட போளியே  இன்னும் ஜீரணம்  ஆகவில்லை, அதுக்குள்ள இன்னோரு  மண்டை வெல்லத்தை எடுத்தாச்சு உன் மாமியார்,  போ போ !"" விரட்டினார் மாமியார்.

அவரது மாமியார்  என் மாமியார் ஆவது இந்த மாதிரி சமயங்களில் தான்.;)
''ஏன்  மா, நாளைக்குத் தானே பொங்கல் ,இன்னிக்கே என்ன ஏற்பாடு'' இது
என்' ஞே'  டைப்  கேள்வி:)
பொங்கப் பானைகார்த்தாலை 9 மணிக்கு வைக்கணும். அதுக்கு மத்த விஷயமெல்லாம் ரெடியாக் வேண்டாமா.
இருக்கிறதிலியே நீ தானே யங்கஸ்ட்....போ போ.
இல்லாட்ட  பாட்டி எங்களையும் அழைத்து விடப் போகிறார்;'' கிண்டல் தொனிக்க விரட்டும் நாத்தனார்.


சரிடா சாமி.என்னதான் செய்யறாங்க பார்க்கலாம்  என்று நினைத்த வண்ணம்,
''வரேன் ஆஜி'' என்று குரல் கொடுத்தேன்.

87 வயசு ஆஜிப்பாட்டி,
அரிவாள் மணை, பெரிய   தினமணி பேப்பர் விரித்துவைக்கப் பட்ட நிலையில்...,ஏலக்காய்  25  எண்ணம்,மண்டை வெல்லம் இரண்டு  பங்களூரிலிருந்து ஸ்பெஷலாகத் தருவிக்கப் பட்டது.,
பெரிய வகை முந்திரிப் பருப்பு.(ஏதாவது ஒரு பேத்தி  குவைத்திலிருந்து கொண்டு வந்து கொடுத்திருப்பார்.)
''வா வா வா, சின்னப் பெண்ணெல்லாம் மத்யானம் தூங்கக் கூடாது பார்.

இப்ப இதெல்லாம் தயார் செய்துட்டால் நாளைக்குப் பொங்கல் பானைக்கு ரெடியா  இருக்கும் இல்லையா என்று என்னை ஆஜி பார்க்கும் பார்வையில் ,என் தலை சரி சரி என்று நாலு தடவை ஆடும்.

அந்த மத்யான வேளையில் தை மாத இள வெய்யிலில் அலுப்புத் தெரியாமல் இருக்கப் பழைய கதைகளை ஆஜி சொல்ல ஆரம்பிப்பார்.
நானும் அவர் சொன்ன பிரகாரம்,  சின்னக் குழவியால்  ஏலக்காயை  முதலில் பொடிப்பேன்.
இரண்டாவதாக  வெல்லம். ஏலக்காய்ப் பொடித்த இடத்திலேயே வைத்து மண்டை வெல்லத்தை உடைக்க வேண்டும். அதில் ஒரு பாதியை அந்த அரிவாள் மணையில் செதுக்கி எடுக்க வேண்டும்.
மிச்சத்தைப் பொடி வெல்லம் ஆக்க வேண்டும்.
பிறகு வரும் பச்சைக் கற்பூரம், ஜாதிக்காய்  வகையறா.

இதெல்லாம் செய்து முடிக்க  இரண்டு மணி நேரம் ஆகுமா.?
உடனே   காபிக்கடை.
ஆஜிக்கு நிறைய டிகாஷன் கஷாயம். எருமைப் பால் அப்போ கறந்து
வந்தது  தனியாகக் காய்ச்சி, அவருடைய வெள்ளி  டம்ப்ளரில் கொதிக்க கொதிக்கக் கொடுக்கணும்.
அப்பாடா என்று அவர் தன் பெரிய ஈஸிச்சேரில் சாய்ந்து கொள்வார்.

உள்ளே அரட்டை கலாட்டா நடக்கும் இடத்துக்கு நானும் போய்க் கலந்து கொள்வேன்.
''காரியக் கப்பல் வந்துவிட்டது.''என்று கலாட்டா  செய்வார்கள்.:)
ரங்காச்சாரி  கடையிலிருந்து  எடுத்து வந்திருந்த  புடவைகளைப் போட்டி  போட்டு ஆளுக்கொன்றாக எடுத்துக் கொள்ளுவோம்.


எனக்கோ மறு நாள் பொழுது விடிவதற்கு முன்னால் நடக்க வேண்டிய வேலைகளை எண்ணி இப்பவே களைப்புச் சேர்ந்தது போல இருக்கும்!
பொங்கல்  முடிந்து அடுத்த நாள் கனுப்பொங்கல். வீட்டில் இருக்கும் நண்டு,குஞ்சு குளுவான்கள்(பெண்கள்)   இருந்து என் பெரிய மாமியார் வரை அனைவரும்,   குளித்து முடித்த கையோடு புத்தாடை புனைந்து ஆஜி முன்னால்  நிற்க வேண்டும். அத்தனை பேர் நெற்றியிலும் கன்னத்திலும் பசு மஞ்சளை அழகாகத் தீற்றி விடுவார்.
திருமணமானவர்கள் தாலியை வெளியில் எடுத்து அவரிடம் காட்ட அதிலும் மஞ்சள் பூசுவார்.


ஒரு இருபது நபர்கள் இருப்போமா?

அத்தனை பேரும் வாழை இலை கரும்புத் துண்டுகள், முதல் நாள் வைத்த பொங்கல் பானை அத்தனையும்  மொட்டை  மாடியில் கொண்டு போய் வைத்து விட்டு, மாடியைக் கழுவித் தரையில் பத்து  எண்ணிக்கை  கோலங்கள் போட்டு அதில் மஞ்சள் இலைகளைப்    பரத்த வேண்டும்.
வயதில் மூத்தவர் ஆரம்பிக்க, இளையவர் வரை ஐந்து வரிசையாக சர்க்கரைப் பொங்கல்,வெள்ளை சாதம், மஞ்சள் சாதம், சிவப்பு சாதம்   என்று  ஐந்து ஐந்தாக நாலு வரிசை வைக்க வேண்டும்.

தட்டில் வைத்திருக்கும் வெற்றிலை,பாக்கு,மஞ்சள் ,வாழைப்பழ வரிசை எல்லாவற்றையும் சூரிய பகவானுக்குக் கை காண்பித்து விட்டு, ஆரத்தி எடுத்து,கனுப்பிடி வச்சேன்,காக்காய்ப் பிடி வச்சேன்,காக்காய்க்கும் குருவிக்கும்  கல்யாணம் என்று கோரசாக முழங்க வேண்டும்.
மனதில் அவரவர் சகோதரர்களுக்காகப் பிரார்த்தனையும் செய்து கொள்ளணும்.

கீழேயிருந்து வரும் ஏழு கறிக் குழம்பு வாசனையும், மற்ற சித்ரான்னக்களின் வரிசையும் பசியைக் கிளப்பிக் கீழெ  துரத்தும்.
ஆஜி எங்கள் எல்லோரையும் அமரவைத்து,  சமையல்காரரைப் பரிமாறச் சொல்லுவார்.
வயிறு நிறையச்  சாப்பிடுங்கோ    பொண்டுகளா'' என்னும் அன்புக்குரல்   இப்போதும் என் காதில் ஒலிக்கிறது.

அனைவருக்கும் இனிய தைப் பொங்கல் நன்னாள்  வாழ்த்துகள்.
பால் பொங்கி இன்பம் பெருகட்டும்.









எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Sunday, November 07, 2010

பொசல் வருது:)




''பசங்களா பொசல் வருது யாரும் வெளில போக வேண்டாம்.எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


ரேவதி நீ போய் கெரசின் இருக்கா பார்த்துக்கோ. ஹர்ரிக்கேன் லைட்

துடைச்சு வச்சுடுமா.

செட்டியார் கடைல மெழுகுவர்த்தி ஒரு டஜன்,கொத்துக்கடலை அரைக்கிலொ,

பொரி அரைக் கிலோ,வேர்க்கடலை எல்லாம் கொண்டுவரச் சொல்லு.

உருளைக் கிழங்கு,அவரைக்காய்,வாழைக்காய்

எல்லாம் நிறைய

வாங்கி வச்சுடு.

எத்தனை நாள்மழைபெய்யுமோ!''இவ்வளவையும்

சொல்லிவிட்டு, சென்னை ஒன்றின் வானொலிப் ப்ரொக்ராம்களைக்கேட்க ஆரம்பித்துவிடுவார்.



அதிலதான் மணிக்கொருதடவை புயல் சின்னம் நகரும்

வழிகளையும் வேகத்தையும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்!!!



ஓ!பக்கத்தில வந்துடும் போலிருக்கே,

நெல்லூர் ,பிரகாசம்தானே போகும். சொல்லிக்கொனிருக்கும்போதே

மழை ,காற்று ஆரம்பித்துவிடும்.

வாயில் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு. வாயில் வழியெ

வரும் சாரலை அனுபவத்தபடி, தன் ஈசிச்சேரில் சாய்ந்தபடிக் கையில் இருக்கும்

கருங்குயில் குன்ற கொலையை நான்காவது தடவையாக ரசித்துப்

படித்துக் கொண்டிருப்பார்.

பக்கத்தில் ஒரு முக்காலியில் வேகவைத்த வேர்க்கடலை,நறுக்கி,

உப்பும் பச்சை மிளகாயும் அரைத்துப் பிரட்டித் தடவிய

பச்சை ஆப்பிள் துண்டுகளும் இருக்கும்.



பக்கத்திலியே எங்கள் பசங்களும்,அவர்கள் தோழிகள் தோழர்கள்செஸ்,காரம்போர்ட்

விளையாடிக் கொண்டும் மாடிக்கும் கீழுக்குமாக

ஓடி விளையாடிக் கொண்டும் இருப்பார்கள்.

இரண்டு நாட்கள் முழுவதும் ஒருதடவை மின்சாரம் இல்லை. 1977 என்று நினைக்கிறேன்.



மழையில் நனைந்து கொண்டே கிணற்றில் தண்ணீர்

இறைத்தது நினைவில் வருகிறது.!



இந்தத் தடவை ஜல்'' சூறாவளி ஏழைகளை வாட்டாமல், யாரையும் நோகடிக்காமல்

உலகம் நலம் பெறப் பெய்துவிட்டுப் போக வேண்டும்.
Posted by Picasa

Tuesday, September 21, 2010

டிரங்குப் பெட்டியின் பயணம்

சந்தனப் பேலா,கல்கண்டு கிண்ணம்

                                பெட்டி  அதனுடைய பயணத்தைத் தொடங்கிய இடம்:)    
கூகிளில் கிடைத்த குடம்

இப்படியாகத்தானே பசுமலைக்கும்  மதுரை டவுனுக்கும்  இரண்டு மூணு
 ட்ரிப் போயி 
வந்தார்கள். புதிதாக வென்னிர்த்தவலை அதற்கு மூடி வந்தது. அப்போ  எங்க ஊரில காஸ் கனெக்ஷன் எல்லாம் வரவில்லை. அதனால ஒரு இரும்புக் கரிஅடுப்பு .
சில பொருட்கள் சாக்குகளில் அடைக்கலம் புகுந்தன.
நகைகள் வெள்ளிப் பாத்திரங்கள் எல்லாம் இந்த   தரங்கில் இடம் பிடித்தன.
பித்தளை வெண்கலப் பாத்திரங்கள் அம்மாவின்      இன்னொரு பெட்டியில் புகுந்து கொண்டன.


புக்கக ஸ்டாண்டர்ட் படி இது சின்னப் பெட்டிதான்.:)

இதுவும் நாகப்பட்டினத்தில் சொல்லிச் செய்து வந்த பெட்டி.

மறதியாக பெயர் பொறிக்கும் போது என்.ரேவதி என்றே பொறித்து அனுப்பி இருந்தார்கள்.என்னப்பா,என்'' போட்டு இருக்கு என்று நான் கேட்டால்,

மாப்பிள்ளை நரசிம்மன் தானே மா,

அதனால் உன் முதலெழுத்து மாறவே இல்லை. நாராயணனுக்குப் பதில்
நரசிம்ஹன் என்று அப்பா சிரித்தார்.

இப்பொழுது(அதாவது  2010il   புதுப்பிக்கும்போது பெயிண்ட் அடிக்கிறவர் கிட்ட சொன்னதை நெளிவுசுளிவோடு எழுதிக் கொண்டுவந்து வைத்து விட்டார்.

தினசரி கட்டிக் கொள்ள கடாவ் வாயிலில் (19 ரூபாய் ஒரு புடவை)
ஒரு நாலு புடவை,
சின்னாளப் பட்டில்(7 ரூபாய்) நாலு புடவை. இவைதான்
என் ஜவுளி.

வைரத்தோடு மாமியாரின் மேற்பார்வையில் செய்ய வேண்டும் என்று
சொன்னதால்
சென்னை வந்தப் பிறகு அந்த வேலை நடந்தது.

நானும், அம்மா,அப்பா ,சின்னத்தம்பி நால்வரும் ஜனவரி 27 ஆம்தேதி
அப்போதைய திருநெல்வேலி எக்ஸ்ப்ரஸ்ஸில்
ஏறினோம்.
அம்மாவும் அப்பாவும் ரயிலில் தூங்கவே இல்லை.
நான் எப்போதும்போல அம்மா மடியில் தலை வைத்துத் தூங்கிவிட்டேன்.
அடுத்த நாள் புகுந்த வீட்டுக்கு பிரச்சண்ட் சார் சொல்ல அப்பா
என்னை அழைத்து வந்தார் மைலாப்பூருக்கு.

கட்டத் தெரியாத புடவையை தசபுசா என்று கட்டிக் கொண்டு
''அன்னத்தைவிட படு ஸ்லோவாக ' நடந்துவிட்டு அந்தப் பெரிய பங்களாவுக்குள் நுழைந்தோம்.

பிறகு எல்லாம் வேகமாக நடந்தன.புடவைகள்   மணிசங்கர் கடையில் (பாரீஸ் கார்னரில்  ஒரு கடை)  என்  விருப்பப்படி வாங்கிக் கொண்டேன்.

நிறையப் பாடங்கள் கற்றுக் கொண்டேன்.

திருமணம் முடிந்து புதுக்கோட்டைக்கு வந்தோம். எங்களுக்கு முன்னால்

பெட்டிகள் வந்துவிட்டன, சதர்ன் ரோட்வேஸில்.

பாத்திரப் பெட்டியைத் திறக்கலாம் என்றால் சாவி அதனோடு வரவில்லை.

அதான் நம் வீட்டு ஹாண்டிமான் இருக்காரே, ஒரு நெம்பு நெம்பி
க்ரோபாரினால்
மேல் மூடியைத் திறந்துவிட்டார்.

இப்படியாக இனிதே திறப்பு விழா நடந்து முடிந்தது.

சொல்ல மறந்துவிட்டேனே. மாமியார் வீட்டிலும் ஒரு பழைய ட்ரங்குப் பெட்டி கிடைத்தது.அதைத்தான் சிங்கம் உடைத்து எடுத்தார்:))

இரண்டு நாட்கள் கழித்து என் அம்மாவும் அப்பாவும்

புதுக் குடித்தனம் செட் அப் செய்ய வந்துவிட்டு,

எல்லாவற்றையும் முறையாக அடுக்கி வைத்துவிட்டு அந்த மதியமே

மதுரைக்குக் கிளம்பி போனார்கள்.

சுபம்.






இது சின்னக் குடம்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Friday, September 17, 2010

பழைய டிரன்க் பெட்டி 1

இது எங்க மாமியாரின் பெட்டி யின் மாடல்
இது எங்கள் திருமண அழைப்பிதழ்
இது அம்மாவுக்கு அவங்க வீட்டில் கொடுத்த மரப் பெட்டியின் மாடல்.
***********************************************************************************************
எப்பவோ ஆரம்பித்த பதிவை இப்பதான்   எழுத தொடர்கிறேன்.
என் திருமணம் நிச்சயிக்கப் பட்ட உடனே ,நகை லிஸ்ட்,பாத்திரங்கள் வெள்ளிவகை,பித்தளை வகை ,ஸ்டெயின்லஸ்
ஸ்டீல் என்றுநீண்ட லிஸ்ட்
நகைகள் பாட்டியின் பழைய செயின் நெக்லஸ் ஆகியது.

என் அம்மாவின் மாங்காய் மாலையை
மாற்றி தோடுகளாக என் மறுத்தலையும் மீறி என் காதுகளை வந்து அடைந்து விட்டன.

அப்போது திரு.ராமனாதன் நகைக் கடை இருந்தது.
இப்பவும் இருக்கலாம்.

எப்படியோ லிஸ்ட் போட்டு நகைப் பட்டியலை
அன்பு அப்பா எழுதிவைத்தார்.
அடுத்தது பித்தளை வெங்கலப் பாத்திரங்கள்

ஒரு சின்னக் குடம்,வெங்கலப் பானை,சிப்பல் தட்டு, இரண்டு வெண்கலவிளக்குகள், கார்த்திகை அகல்கள்,சாதக் கரண்டிகள், குழிக் கரண்டிகள்,
ஊஞ்சல் சுற்றிவர தட்டும், சின்ன செம்புகளும்,ஒரு தாம்பாளமும்

(மாப்பிள்ளைக்குப் பாத பூஜை செய்ய.)

வெள்ளியில் சாப்பிடும் தட்டு,நான்கு காப்பி சாப்பிடும் டபரா தம்ப்ளர்கள்,
மன்னார்குடி சொம்பும்,குளபாத்திரமும்.
கற்பூரத்தட்டு,சந்தனக் கிண்ணம்,குங்குமச் சிமிழ்,கூஜா,பன்னீர் சொம்பு
மாப்பிள்ளைக்கு மையிட மயில் வடிவில் மைடப்பா.

அடுத்தாப்பில எவர்சில்வர் பாத்திரங்கள்.
அரிசி,பருப்பு வகையறா கொட்டி வைக்க பெரிய டப்பாக்கள்.

அஞ்சறைப் பெட்டி,
சப்பாத்தி போட்டு வைக்க வட்ட டப்பா.
பால் சொம்பு.
ஒரு கிண்டி(சாஸ்திரமாம்)

இரண்டு பேருக்கு வேண்டிய காப்பி ஃபில்டர், காப்பிப் பாத்திரங்கள்,
இப்படி நீண்டு கொண்டே போயிற்று.
தயிர் உரை குத்த கல்கத்தா மங்கு எனப்படும் பீங்கான்

பெரிய கிண்ணங்கள்.(என்ன ஆச்சு அதற்கெல்லாம்)?

சரி இதை எல்லாம் பத்திரமாக மாமியார் வீட்டில் கொண்டு போய்ச் சேர்க்க ஒரு பெட்டி வேண்டாமா.

அதை அடுத்த பதிவில பார்க்கலாம்.:)







 





எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Sunday, January 24, 2010

தீப்பெட்டி லேபல்களைச் சேர்த்தது உண்டா















இந்த நீலப் பறவையும் ஐந்து தம்படிதான்





ஐந்து தம்படி தீப்பெட்டி .
சிறிய வயது பழக்கங்கள்,ஆசைகள் அவ்வளவு சீக்கிரம் மனதை விட்டுப் போவதில்லை.
திருமங்கலத்தில் நங்கள் இருந்தபோது ,சிவகாசித் தீப்பெட்டித் தொழிற்சாலையின் ஆதிக்கம் எங்கள் ஊர் வரை நீண்டிருந்தது.

எங்கள் வீட்டிலிருந்து நான்கு வீடுகள் தாண்டியிருந்த ஒரு சின்ன போர்ஷனில்,திண்ணையில் வைத்து
இந்தத் தீப்பெட்டிக் குச்சிகளை அடுக்கும் சட்டங்களும் தீக்குச்சிகளும்
ஒரு பெரிய லாரியில் வந்து இறங்கும். அந்த வீட்டிலிருந்த அனைவரும்

உடனே முனைப்பாக வேலையில் இறங்கி விடுவார்கள்.
நான் ,விடுமுறை நாட்களில் ,
பெற்றோர் மத்தியான தூக்கத்தில் ,ஆழ்ந்ததும் உச்சிவெயில் சுட்டெரிக்கும் 1 மணிக்கு,நான் வாயில் கதவைச் சத்தம் போடமல் திறந்து ,ஓடி விடுவேன் அந்த வீட்டிற்கு.

அம்மாவும் ,பெண்பிள்ளைகளும்,ஒரு அண்ணனுமாக கட்டைகளில் உள்ள பள்ளங்களில் ,
மருந்து இடப்படாத குச்சிகளை அவர்கள் அடுக்கும் வேகம் என்னை அதிசயிக்க வைக்கும்.
மிகவும் கெஞ்சிய பிறகு எனக்கு ஒரு சிறிய வேலை கொடுப்பார்கள். நான் ஒவ்வொரு குச்சியாக அத இடத்தில் வைத்து முப்பது குச்சிகள் கொண்ட

மரத்தகடை கொடுப்பதற்குள், அவர்கள் இருபது முடித்திருப்பார்கள்.
சரியாக நான்கு மணிக்கு,
அந்தத் தீப்பெட்டித் தொழிற்சாலையின் வண்டி வரும்.
ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கப்பட்ட ஒரு ஐம்பது மரப் போர்டுகளைக் கொடுத்தால் அவர்களுக்குஒரு சிறிய தொகை கிடைக்கும்.
அதை எடுத்துக் கொண்டு அன்றைக்கான மளி''சாமான்களை வாங்கப் பறக்கும் சிறுமிசெல்வியோடு நானும் போவேன்.

கொஞ்சம் வெங்காயம்,கொஞ்சம் பயறு, கொஞ்சம் கடலைப் பருப்பு, பொறுக்கி எடுத்த சின்னக் கத்திரிக்காய்,தக்காளி,மிளகாய்த்தூள்.மல்லித்தூள்,பூண்டு ரெண்டு பல்லு.,கொஞ்சம் மஞ்சள்தூள் என்று சிறிய பொட்டலங்களாகவே பையில் போட்டு வாங்கி வருவாள்.

என்ன செய்யப் போறீங்க செல்வின்னு நான் கேட்டால் ''குளம்பும் ,சோறும்தான்'' என்று பதில் கொடுத்துவிட்டு வீட்டுக்குள் மறைவாள்.
சற்று நேரத்தில் விறகு வாசனை, புழுங்கல் அரிசி கொதிக்கும் அருமையான மணம், அதற்கு மேல் கத்திரிக்காயும், குழம்பு மசால அரைத்துவிட்ட கலவையின் மணம் மூக்கைத் தாக்கும்.

அப்போது வருவான் சின்னத்தம்பி,
'அப்பா...... ஆண்டாள் இங்க இருக்கான்னு ''கத்திக் கொண்டே வீட்டுக்கு விரைவான்.
நேரமாகிவிட்டதையும்,
அப்பா போட்டு வைத்த கணக்குப் பாடங்களையும் முடிக்காததை அப்போதுதான் உணர்வேன்.
பிறகென்ன ஒரே ஓட்டம்தான் வீட்டுக்கு.

இது போல நாலைந்து ஞாயிறுகள் ஓடியபின், ஒரு நாள் செல்வி என்னிடம் சில தீப்பெட்டிப் படங்களைக் கொடுத்தாள்.
முன் பின் அது போலப் பார்த்ததில்லையா.'என்னப்பா இது?" என்று கேட்டால் தீபாவளி சமயத்தில் அந்தத் தீக்குச்சிகள் வைத்து வரும் அட்டைப் பெட்டியில் இந்தப் படங்கள் ஒட்டிவரும் என்று சொன்னாள்.
அதில் கிடைத்த படங்களின் அளவு,மூன்று அங்குலம் இண்டு இரண்டு அங்குலம் அளவில் இருக்கும். மறக்கமுடியாத தத்ரூபம்
ஒரு புலித்தலை, ஒரு சிறுத்தையும் மரவெட்டியும், இரண்டு அணில்கள், இப்படி வித விதமான படங்களை அவைகளின் புது கந்தக வாசத்துடன் கொடுத்ததை இன்று வரை மறக்க முடியவில்லை.

என்னுடைய பெரிய ரஃப் நோட்டில் ஸ்டாம்ப்,மயிலிறகுகள், ,பெரிய ஆலமரத்து இலைகள் பாடம் செய்து சேர்த்து வைத்திருக்கும் பொக்கிஷங்களோடு
இவற்றையும் சேர்த்து நெடு நாட்கள் கவனமாகப் பாதுகாத்தேன்.

பிறகு என்ன ஆச்சோ தெரியவில்லை.
இப்பொழுது பேரன் அனுப்பிய
அவனுடைய கலெக்ஷன் போட்டோக்களைப் பார்த்ததும் பழைய படங்கள் நினைவு வந்தது.:)
கூகிளில் கிடைத்த படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


































பாரத மாதாவைப் போற்றும் யானை .

இதெல்லாம் விட நாங்கள் விரும்பிச் சேகரித்தது, பெரிய அளவில் வரும்

புலி போட்ட அட்டைகள் தான்.




எல்லோரும் வாழ வேண்டும்.

Thursday, January 21, 2010

எழுபத்தினாலில் ஒரு கடிதம் ..






492, ஆம் பதிவு .

வழக்கம்போல் எதையோத் தேடப் போய், இந்தக் கடிதம் அகப்பட்டது:)
1974ல் எழுதப்பட்ட இந்தக் கடிதம், மிக மிகச் சுவையான ஒரு கால கட்டத்தை நான் கடந்து வந்திருப்பதை, கோடிட்டுக் காண்பித்தது.

கடிதம் எழுதினவரை நான் மறக்கவில்லை என்றாலும் ஒரு கடிதத்திலியே இவ்வளவு செய்தி பரிமாறிக் கொண்டோம் என்றால்
மாடியும் கீழுமாகக் குடித்தனம் இருந்த போது எவ்வளவு பேசியிருப்போம் என்று அதிசயமாக இருக்கிறது.!!

பேரு,ஊர் எல்லாம் மாற்றி இருக்கிறேன். ஏனெனில் நமக்குத் தேவை என்கிறது சுவைதானே ஒழிய விவரங்கள் இல்லை.:)

சேலத்தில் நாங்கள் குடியிருந்த வீட்டு மாடியில் இந்த சுறு சுறுப்பு மாமி குடியிருந்தார்,. பெயர் கோமதி. களக்காடு என்ற ஊரில் பிறந்து சென்னையில் திருமணம் செய்து இப்போது கணவர் இரு குழந்தைகளுடன் சேலத்துக்கு வந்தவர். என்னை விட ஒரு ஏழு வயது மூத்தவர்.
கலகலப்பு ,வாய் ஓயாமல் பேச்சு, மூச்சுக்கு மூச்சு,"கோந்தே!! என்று பெண்ணை விளிப்பது.ஸ்ஸ்ஸ்ஸ். களைகட்டிவிடும் அந்த இடம். மெட்டி ஒலி வேற சலங் சலங் என்று இசைக்குமா!:)

எங்க கடைக்குட்டி மாடியத்தை வராங்க என்பான் சத்தம் கேட்டதுமே.
அவன் தான் அத்தை என்று பெயர் வைத்தவன். ஏன் என்ன என்று மூணு வயசுப் பையனிடம் கேட்டுப் பிரயோசனமில்லை என்று நாங்கள் அனைவரும் அவர்களை கோமதிஅத்தையாகவே ஏற்றுக்கொண்டோம்.

மூன்று குழந்தைகளையும் நான் மேய்த்துக் கட்டுவதற்கு அவ்வப்போது உதவி செய்வார். வெளியில் போகும்போது தேவையான பொருட்களை
வாங்கி வந்து தருவார்.
அப்போது வீட்டு எஜமானருக்குத் தொழிற்சாலை வேலைகள் மிக அதிகம்.(ஹ்ம்ம் எப்பத்தான் இல்லை)!!

சிலசமயங்களில் டவுன் பஸ்ஸிலும் அழைத்துச் சென்று பத்திரமாகப் பார்த்துக் கொள்வார். அவரது இரண்டு குழந்தைகளும் ,எங்கள் மூன்றும்
கைகளைப் பிணைத்துக் கொண்டு ஒரு முனையில் கோமதி அத்தையும்,மறுமுனையில் நானும் சேலம் வீதிகளில் போவதைப் பார்த்தவர்கள் ஒரு சிறிய புன்னகையாவது உதிர்த்திருப்பார்கள்.
ஒரு பனிரண்டு வயது ஆராதனா(அந்தப் படம் வந்த புதுசு.அதனால் பெண்ணின் பெயரை அத்தை மாற்றிவிட்டார்.),
8 வயசு ஈஸ்வர், ஏழு வயசில் எங்க பாபு, ஐந்து வயசுல எங்க பொண்ணு பாப்பு, மூணு வயசில எங்க கடைக்குட்டி, குட்டி.
அவர்களுக்கு எங்கள் இருவரிடமும் பிடிக்காதது இதுதான். குழந்தைகளுக்கு நல்ல பெயர்களை வைத்துவிட்டு, பாப்பு,பாபு,குட்டின்னு என்ன கொஞ்சல் என்று முகம் சுளிப்பார்.:))

அவர்களிடமிருந்து பிரிந்து மாற்றலாகி நாங்கள் திருச்சி வந்ததும் அவர்
எழுதிய பல கடிதங்களை ஒரு மஞ்சள் துணிப்பையில் போட்டு வைத்திருந்தேன்,.
நமக்குத்தான் கடிதங்களைப் பிரியும் வழக்கம் கிடையாது.

அந்த மாதிரி ஒரு கடிதத்திலிருந்து சில வரிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.:0)

தேதி 9/4/74,சேலம்
*************************

அன்புள்ள ரேவதிக்கு,
உங்கள் பல பக்கக் கடிதத்தைப் பார்த்து ஒரே மகிழ்ச்சி.
பதில் எழுதத்தான் தாமதமாச்சு. வீடு நிறைய விருந்தாளிகள்.

குழந்தைகளுக்கு ஏப்ரில் 18லிருந்து லீவு. களக்காடு போக அதுகளுக்கு இஷ்டமில்லை.சென்னையில் மாமனார் வீட்டுக்குப் போக எனக்கு இஷ்டமில்லை. நடுவில் ராமன்(அவரது கணவர்) மாட்டிக்காம கோவாவுக்கு டூர் போயாச்சு.
என்ன இருந்தாலும் இந்த ஆம்பிளைகளுக்கு இருக்கிற சுதந்திரம் நமக்கு இருக்கா பாருங்க. இன்னும் இருபது நாட்களுக்கு இதுகளைக் கட்டி மேய்ப்பது எப்படி? வெய்யில் வேற கொளுத்துகிறது.
எத்தனை தடவை, டவுனுக்கும்,ராஜகணபதி கோவிலுக்கும் போறது.
நீங்க இல்லாதது இப்பத்தான் கஷ்டமா இருக்கு.
நம்ம தெரு செய்தியை முதல்ல சொல்லிடறேன்.
முன்னி(எங்கள் இருவருக்கும் ஒத்துப் போகாத இன்னோரு மாநிலத்தைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணுக்கு நாங்க வைய்த்த பெயர். ஏன்னெனில் அந்த அம்ம தமிழே பேசாது. ஒரே அச்சா, பச்சாதான்:) ) யை நான் பார்த்தே நாலு மாசமாச்சு. அதுக்கும் நர்சரி மிஸ் டிசூசாவுக்கும் சண்டையாம்!

சு.மாலினிக்கு மாப்பிள்ளை வீட்டொட வந்துட்டான்.மோட்டார்சைகிளை வைத்துக் கொண்டு காலனியைச் சுற்றிச் சுற்றி ஓட்டி ஒரே சத்தம் போடுகிறான். அவர்களோட அந்த டார்சான் (பேரு)நாயும் ஓடி வந்து ஒரேயடியாக் குலைக்கிறது பார்த்தியோ.!!
எதிர் வீட்டு ராஜிக்கு மே மாசம் ஒண்ணாம் தேதி பழனியில் கல்யாணம்.
நம்ம ஜோடிப்புறா(:))) ரிடையராகிப் பங்களூர் போகிறார்கள்.

அடுத்தவீட்டுப் பழனியப்பர் வீட்டில் மருமகள் எக்ஸ்பெக்டிங்கா இல்லை, இயல்பாவே இப்படி குண்டாக இருக்கிறாளான்னு தெரியவில்லை!!!
நீங்கள் புதிதாக ஐஸ் பெட்டி வாங்கி இருப்பது சந்தோஷம்.முன்னிகிட்ட சொன்னால் முகம் சகிக்காதேன்னு சொல்லவில்லை.
வாரப் பத்திரிக்கைகள் படிப்பதை விடவில்லை அல்லவா.
தொடர்கள், இளந்தளிர்,ரகசியம்,கதவு,கிண்டிரேஸ்,நீல நயனங்கள் எல்லாம் படிக்கிறீர்களா.????
(இதற்குப் பிறகு சினிமா கிசு கிசு)
இந்த சவம்(!).ஒரு நடிகை .......பார்த்தீர்களா. வேற ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிடுத்தாம்.
.இன்னொரு நடிகை ............பாஸ்கரை விவாகரத்துச் செய்தாச்சாம்.
நாட்டியம் ஆடுமே அது தற்கொலை பண்ணிக் கொண்டதாம். பாவங்கள்மா இதெல்லாம். சந்திரபாபு போய்ட்டாராமே. என்னமாப் பாடுவான்.பாவம்.
இவ்வளவு விஷயத்தையும் நேரில் வந்து அலச ஆசையா இருக்கு.
கௌரவம்,ராஜபார்ட் ரங்கதுரை பார்த்தாச்சா.
நான் பார்த்துவிட்டேன்.
(அத்தை எதிர் நீச்சல் பட்டுமாமி மாதிரி. ஒரு சினிமா விடமாட்டார்:) )
உங்க தம்பி ரங்கன் இதையெல்லாம் பார்த்து இருப்பான். அவனுக்கு சிவாஜி ரொம்பப் பிடிக்குமே!!

மற்றதெல்லாம் அடுத்த லெட்டர்ல எழுதறேன். குட்டிகளைப் பத்திரமாப் பார்த்துக் கொள்ளவும். ஹரி அடிக்கடி வெளில ஓடிடுவான். ஜாக்கிரதை.
அன்புடன்,
கோமதி.

ரசித்தீங்களா.அதற்கப்புறமா இந்த மாதிரி, கலகலா பெண்ணை நான் பார்க்கவில்லை.:)






எல்லோரும் வாழ வேண்டும்.

சுதந்திரம் அடைய என்ன தேவை?

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் . விடுதலை பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன். குடும்பத் தளையிலிருந்து விடுபடுவது கூட அவ்வளவு சிரமம் இல...