Sunday, January 24, 2010

தீப்பெட்டி லேபல்களைச் சேர்த்தது உண்டாஇந்த நீலப் பறவையும் ஐந்து தம்படிதான்

ஐந்து தம்படி தீப்பெட்டி .
சிறிய வயது பழக்கங்கள்,ஆசைகள் அவ்வளவு சீக்கிரம் மனதை விட்டுப் போவதில்லை.
திருமங்கலத்தில் நங்கள் இருந்தபோது ,சிவகாசித் தீப்பெட்டித் தொழிற்சாலையின் ஆதிக்கம் எங்கள் ஊர் வரை நீண்டிருந்தது.

எங்கள் வீட்டிலிருந்து நான்கு வீடுகள் தாண்டியிருந்த ஒரு சின்ன போர்ஷனில்,திண்ணையில் வைத்து
இந்தத் தீப்பெட்டிக் குச்சிகளை அடுக்கும் சட்டங்களும் தீக்குச்சிகளும்
ஒரு பெரிய லாரியில் வந்து இறங்கும். அந்த வீட்டிலிருந்த அனைவரும்

உடனே முனைப்பாக வேலையில் இறங்கி விடுவார்கள்.
நான் ,விடுமுறை நாட்களில் ,
பெற்றோர் மத்தியான தூக்கத்தில் ,ஆழ்ந்ததும் உச்சிவெயில் சுட்டெரிக்கும் 1 மணிக்கு,நான் வாயில் கதவைச் சத்தம் போடமல் திறந்து ,ஓடி விடுவேன் அந்த வீட்டிற்கு.

அம்மாவும் ,பெண்பிள்ளைகளும்,ஒரு அண்ணனுமாக கட்டைகளில் உள்ள பள்ளங்களில் ,
மருந்து இடப்படாத குச்சிகளை அவர்கள் அடுக்கும் வேகம் என்னை அதிசயிக்க வைக்கும்.
மிகவும் கெஞ்சிய பிறகு எனக்கு ஒரு சிறிய வேலை கொடுப்பார்கள். நான் ஒவ்வொரு குச்சியாக அத இடத்தில் வைத்து முப்பது குச்சிகள் கொண்ட

மரத்தகடை கொடுப்பதற்குள், அவர்கள் இருபது முடித்திருப்பார்கள்.
சரியாக நான்கு மணிக்கு,
அந்தத் தீப்பெட்டித் தொழிற்சாலையின் வண்டி வரும்.
ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கப்பட்ட ஒரு ஐம்பது மரப் போர்டுகளைக் கொடுத்தால் அவர்களுக்குஒரு சிறிய தொகை கிடைக்கும்.
அதை எடுத்துக் கொண்டு அன்றைக்கான மளி''சாமான்களை வாங்கப் பறக்கும் சிறுமிசெல்வியோடு நானும் போவேன்.

கொஞ்சம் வெங்காயம்,கொஞ்சம் பயறு, கொஞ்சம் கடலைப் பருப்பு, பொறுக்கி எடுத்த சின்னக் கத்திரிக்காய்,தக்காளி,மிளகாய்த்தூள்.மல்லித்தூள்,பூண்டு ரெண்டு பல்லு.,கொஞ்சம் மஞ்சள்தூள் என்று சிறிய பொட்டலங்களாகவே பையில் போட்டு வாங்கி வருவாள்.

என்ன செய்யப் போறீங்க செல்வின்னு நான் கேட்டால் ''குளம்பும் ,சோறும்தான்'' என்று பதில் கொடுத்துவிட்டு வீட்டுக்குள் மறைவாள்.
சற்று நேரத்தில் விறகு வாசனை, புழுங்கல் அரிசி கொதிக்கும் அருமையான மணம், அதற்கு மேல் கத்திரிக்காயும், குழம்பு மசால அரைத்துவிட்ட கலவையின் மணம் மூக்கைத் தாக்கும்.

அப்போது வருவான் சின்னத்தம்பி,
'அப்பா...... ஆண்டாள் இங்க இருக்கான்னு ''கத்திக் கொண்டே வீட்டுக்கு விரைவான்.
நேரமாகிவிட்டதையும்,
அப்பா போட்டு வைத்த கணக்குப் பாடங்களையும் முடிக்காததை அப்போதுதான் உணர்வேன்.
பிறகென்ன ஒரே ஓட்டம்தான் வீட்டுக்கு.

இது போல நாலைந்து ஞாயிறுகள் ஓடியபின், ஒரு நாள் செல்வி என்னிடம் சில தீப்பெட்டிப் படங்களைக் கொடுத்தாள்.
முன் பின் அது போலப் பார்த்ததில்லையா.'என்னப்பா இது?" என்று கேட்டால் தீபாவளி சமயத்தில் அந்தத் தீக்குச்சிகள் வைத்து வரும் அட்டைப் பெட்டியில் இந்தப் படங்கள் ஒட்டிவரும் என்று சொன்னாள்.
அதில் கிடைத்த படங்களின் அளவு,மூன்று அங்குலம் இண்டு இரண்டு அங்குலம் அளவில் இருக்கும். மறக்கமுடியாத தத்ரூபம்
ஒரு புலித்தலை, ஒரு சிறுத்தையும் மரவெட்டியும், இரண்டு அணில்கள், இப்படி வித விதமான படங்களை அவைகளின் புது கந்தக வாசத்துடன் கொடுத்ததை இன்று வரை மறக்க முடியவில்லை.

என்னுடைய பெரிய ரஃப் நோட்டில் ஸ்டாம்ப்,மயிலிறகுகள், ,பெரிய ஆலமரத்து இலைகள் பாடம் செய்து சேர்த்து வைத்திருக்கும் பொக்கிஷங்களோடு
இவற்றையும் சேர்த்து நெடு நாட்கள் கவனமாகப் பாதுகாத்தேன்.

பிறகு என்ன ஆச்சோ தெரியவில்லை.
இப்பொழுது பேரன் அனுப்பிய
அவனுடைய கலெக்ஷன் போட்டோக்களைப் பார்த்ததும் பழைய படங்கள் நினைவு வந்தது.:)
கூகிளில் கிடைத்த படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


பாரத மாதாவைப் போற்றும் யானை .

இதெல்லாம் விட நாங்கள் விரும்பிச் சேகரித்தது, பெரிய அளவில் வரும்

புலி போட்ட அட்டைகள் தான்.
எல்லோரும் வாழ வேண்டும்.

34 comments:

LK said...

Palaya Ninaivugalai ninaithu parthal oru sugam..Cheeta theepettigal appa rpmba famous. i still remember the lable


http://lkspic.blogspot.com/2010/01/pillayar.html

கோமதி அரசு said...

5வது முதல் ,7வது வரை மூன்று வருடங்கள் சிவகாசியில் படித்தேன்,
அப்போது நான் என் அப்பவுடன் தீப்பெட்டி ஆபீஸ்க்கு போய்ப் பார்த்தது, அங்குள்ள சிறுமிகள் தீக்குச்சி அடுக்கும் அழகு,தீப்பெட்டி பெட்டி ஒட்டும் வேகம்,எல்லாம் பார்த்தோம். நானும் அவர்கள் பக்கம் உட்கார்ந்து ,செய்துப் பார்த்ததும் நினைவுக்கு வந்தது.அங்கு இருந்து வாங்கி வந்த படங்களை நானும் என் அண்ணனும்( தீப்பெட்டி லேபிள்களை)பெரிய ஆல்பத்தில் ஒட்டி மகிழ்ந்ததும்
நினைவுக்கு வந்தது.சிவகாசி மக்கள்
மிகவும் அற்புதமான மனிதர்கள்.
மலரும் நினைவுகளை மலர வைத்த உங்களுக்கு என் நன்றி.

Kailashi said...

மலரும் நினைவுகள் அருமை நாச்சியார் அம்மா. பழைய தீப்பெட்டிகளின் பல படங்களை காணும் வாய்ப்பு கிட்டியது.

சந்தனமுல்லை said...

வாவ்!! எவ்வளவு அருமையாக இத்தனை நாட்கள் பாதுகாத்து வந்திருக்கிறீர்கள்! மலரும் நினைவுகள் நல்லாருந்து வாசிக்க!

கீதா சாம்பசிவம் said...

ஆஹா, ஆஹா, பழைய நினைவுகள் ஓடி வந்துடுச்சே!! இந்தத் தீப்பெட்டிப் படங்களை ரூபாய் நோட்டுக்கும் மேலே மதிப்பு வைச்சு, கல்லாட்டத்தில் மாத்திக்கிறது உண்டு, எங்க தெருவில். 5 கல், 7 கல் ப மாதிரியான கட்டத்தினுள் போட்டுவிட்டு, மற்றொரு பெரிய கூழாங்கல்லால் எதிராளி ஏழு கற்களுக்குள் சுட்டிச் சொல்லும் ஒரு கல்லை அடிக்கவேண்டும். நாம் அடிச்சு ஜெயிச்சுட்டா, நமக்குத் தீப்பெட்டிப் படங்கள் கிடைக்கும், கற்களின் மதிப்பைப் பொறுத்து, அவங்க ஜெயிச்சா, நம்ம கிட்டே இருந்து போகும். நமக்குப் பிடிக்காத படங்களைத் தள்ளிவிடும் போக்கும் உண்டு! :))))))))))))))))))))) அண்ணாவுக்கும், தம்பிக்கும் பதிலாக, நான் ஆடிக் கொடுத்திருக்கேன், (கண்டிப்பா அப்பாவுக்குத் தெரியாம அவர் இல்லாத நேரமாத் தான்! ) :)))))))))))))))))

வல்லிசிம்ஹன் said...

வாங்க எல்.கே. உண்மைதான்

வல்லிசிம்ஹன் said...

அங்கேயே போயிருந்தீங்களா கோமதி.
எத்தனை லாவகமா அந்தப் பெட்டியை ஒட்டுவாங்க இல்ல.. அந்தப் பச்சைப் பசை கூட ஞாபகம் இருக்கு.
ஆனால் அப்போ வந்த தீப்பெட்டி மாதிரி இப்ப வரதில்லை பார்த்தீங்களா.
ஒரே பிசுபிசுத்துப் போன சின்னப் பெட்டிகளுக்கு உள்ளே, எத்தனை தடவை கிழிச்சாலும் பத்தாத குச்சிகள்.
செய்திக்கு நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கைலாஷி. இப்போது எதுவுமே ஒரிஜினல் ஆக இல்லாத்த போது அவை
உண்மையான ரூபத்தில் இருந்தது பற்றி நினைத்து சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டும்:)

சதங்கா (Sathanga) said...

எனக்கும் இந்த ஆர்வம் இருந்தது வல்லிம்மா. நானும் என் தம்பியும் நிறைய படங்கள் சேகரித்திருக்கிறோம். உங்க ஸ்பீடுக்கே தீக்குச்சிகள் அடுக்கியிருக்கிறோம். மற்றவர் சர்ரென ஒரு அடுக்கு குச்சிகளை நொடியில் நிறப்புவதைப் பார்த்து அதிசயித்திருக்கிறோம். கொசுவத்தி எங்களையும் சேர்ந்து சுத்த வச்சிட்டீங்க :))

ராமலக்ஷ்மி said...

மலரும் நினைவுகள்! சேகரிக்க ஆரம்பித்த கதையையும் அழகாய் விவரித்து சொல்லியிருக்கீங்க வல்லிம்மா!

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா முல்லை. படங்கள் கூகிளாருதுப்பா.
என்னுது இல்ல. இதே போல சிகரெட் பெட்டிகளைக் கலெக்ட் செய்து அந்தப் படங்களை வைத்து ஒரு விளையாட்டு
இருக்கும். இப்போது அது என்ன என்பது மறந்துவிட்டது:)

வல்லிசிம்ஹன் said...

ஆஹா, கீதா இந்த விளையாட்டு நான் விளையாடியதில்லையே.
நல்ல குறி பார்த்து அடிக்கணும் இல்லை.?
நல்ல வாலாக இருந்திருப்பீங்க போல இருக்கு:)

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் சதங்கா. அவங்க எப்படித்தான் அப்படி லகுவாக அடுக்குவாங்களோ.
கையில ஒரு கட்டு குச்சி இருக்கும். அடுத்த நொடி அந்த மரச்சட்டத்தில் ஏறிவிடும்!!
சின்ன விரல்களின் ஜாலம்.

துளசி கோபால் said...

அச்சச்சோ....கொசுவத்தி!!!!!

இதுக்கெல்லாம் நாணய மதிப்பு வேற இருக்குப்பா. தங்க மயில் போட்ட ஒன்னு அப்போ ஒரு ரூபா. கில்லி , கோலி ஆட்டத்துக்கு இதை வச்சுத்தான் பந்தயம் கட்டணும்.

எங்க அண்ணனிடம் நல்லநல்லதெல்லாம் இருக்கும். பணக்காரனா இருந்தார் :-))))))

வேடிக்கைபார்த்துக்கிட்டு, வீட்டுக்கு வந்து அழுது ஆகாத்தியம் பண்ணி, பொட்டிக்கடையில் பத்து லேபிள்களா தனித்தனியா அட்டையில் வச்சுருப்பதை அஞ்சு பைசா பத்து பைஸா கொடுத்து வாங்குவேன்.

இப்ப அதெல்லாம் எங்கே போச்சு???? யாரோ கொள்ளை அடிச்சுட்டாங்க என் சொத்தை!!!!

அன்புடன் அருணா said...

தீப்பெட்டிப் பட மலரும் நினைவுகள் எனக்கும் நிறைய உண்டு!
சீட்டா ஃபைட் படம் பார்த்தீங்களா????http://oviyaaruna.blogspot.com/2010/01/cheeta-fight.html

Anonymous said...

நல்ல கொசுவத்தி வல்லிம்மா. டிக்கெட் கூட நான் கலெக்ட் பண்ணியிருக்கேன்.

கீதா சாம்பசிவம் said...

//அப்போ ஒரு ரூபா. கில்லி , கோலி ஆட்டத்துக்கு இதை வச்சுத்தான் பந்தயம் கட்டணும்.//

அதே! அதே!, வல்லி, மறந்துட்டேனே, கோலிக்குண்டு ஆட்டத்திலேயும் தீப்பெட்டிப் படங்கள் தான் பண்டமாற்று. அதுவும் ஆடியிருக்கேனே! அப்பாவுக்குத் தெரியாமல் தான். பம்பரம் ஆடி "அப்பீஈஈஈஈஈட்" எடுக்கும்போதுக் கீழே விழுந்து நெற்றியிலே அடிபட்டு ரத்தம் வந்து, வீட்டுக்கார மாமியோட தம்பி கம்பவுண்டர் மாமா, அப்பா வந்து அடிக்கப் போறாரேனு கவலையோட மருந்து போட்டது எல்லாம் பசுமையான நினைவுகள். அந்தத் தரம் அப்பா ஊரிலே இருந்து வரக் கொஞ்சம் நாளாச்சோ, என் காயம் ஆறினதோ! ஆனால் தழும்பு இப்போவும்! :)))))))))))))))))

வல்லிசிம்ஹன் said...

அடடா,சொத்துக் கணக்கு பார்க்கமுடியுமா துளசி. :)
இப்பப் பழைய கடிதங்களைச் சீர் செய்யும் வேலையில் இருக்கிறேன்.
தங்க மயிலா??? அதுவும் ஒரு ரூபாய்க்கா. அண்ணன் நிஜமாவே பணக்காரர்தான்:)
நினைவுகளைத்தான் பத்ரமாக வச்சுக்கலாம் துளசி. நம்மகிட்ட இருந்த தகர டப்பாவோ, எல்ஜி பெருங்காய டப்பாவோ,சாக்கலேட் வந்த டப்பாவோ ,
அம்மா மெருகு கலையாமல் வைத்து இருப்பார்.
ஊருவிட்டு ஊரு போகிற வேலையில் பெற்றோர் இருந்தால் நிறைய பொருட்கள் விட்டுத்தானே போகும்.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா ராமலக்ஷ்மி. நினைவுகள் எனக்கு நிறைய சத்துக்களை ஊட்டிவிடும்.
ரெண்டு நாள் ஜுரத்தில் உடம்பு தளர்ந்த போது, அம்மா பக்கத்தில் இருந்து ,ச்சூடா கொஞ்சம் கஞ்சி சாப்பிட்டுக்கோ,
ஆனை பலம் வரும்னு சொல்கிற மாதிரி கற்பனை.:)

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா அருணா, உங்களுக்குமா!இதோ உடனெ பார்க்கிறேன்.
முன்னாடி வர தீப்பெட்டி கொஞ்சம் பெரிசாவும் இருக்கும் இல்லையா.
சீட்டா ஃபைட் இப்போ வர மாதிரி தெரியவில்லை.
வித விதமா மெழுகு பெட்டிகள் எல்லாம் வந்து விட்டன. நாலு விளக்கு ஏத்தறத்துக்கு நாப்பது குச்சி வேண்டி இருக்கு:)
ரொம்ப நன்றிப்பா.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா அம்மிணி.
கொசுவத்திக்கு ஏது பஞ்சம்.:)

நானும் சென்னைக்கு விடுமுறையில் வந்து விட்டுத் திரும்பும்போது,பழைய டிக்கட்டுகள் கிடைத்தால்
ஸ்டேஷன் மாஸ்டரிடம் கேட்டு வாங்கிக் கொள்வேன்.:)
நன்றிம்மா.

பெருசு said...

எங்க காலத்துலே buffoon

அல்லது joker அதிக மதிப்பு.

நானும் நல்லாப்பொறுக்கி அப்பா கிட்ட உதை வாங்க்கியிருக்கேன்.

வல்லிசிம்ஹன் said...

வாங்க பெருசு. எத்தனை நாளாச்சு பார்த்து!
ஓ!இந்தப் பொறுக்கிற வேலையெல்லாம் சுப்புணி என்கிற பையன் கிட்ட விட்டுடுவோம்.,
அவன் வீட்டுக்குப் பக்கத்தில் நான்கு பாச்சுலர்ஸ் குடியிருந்தார்கள். அந்த ஜன்னல் வழியாக அவ்வப் போது பறந்து வரும்,
பாஸிங் ஷோ,பெர்க்க்லி, இன்னும் பேர் மறந்த அட்டைகள் எத்தனையோ.:)
நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

கீதா, கில்லி டண்டாவா.!!!!!
வாவ். சகலகலாவல்லிப்பா,!!
ஒரெ ஒரு தரம் மோவாக்கட்டையில் அடி வாங்கினதுல வெற்றிகரமா ஒதுங்கிட்டேன்:)
கோலி விளையாடி இருக்கிறீர்களா. வீட்டுக்குள் நானும் தம்பிகளும் விளையாடுவோம்.
கூடத்தில் மூணு வட்டம் போட்டு அதில் மூவரும் உட்கார்ந்து கொள்வோம் .
நகராமல் நடுவில் வைக்கப் பட்டிருக்கும் பல வண்ணக் குண்டுகளை அடிக்க வேண்டும்.ஹ்ம்ம்ம்.:)

ambi said...

இப்ப எல்லாம் ஏதோ மெழுகில குச்சிகள் வருது.

இவ்ளோ Passionateஆ நீங்க..? :))

//நல்ல வாலாக இருந்திருப்பீங்க போல இருக்கு//

ஹிஹி.. :)))

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் அம்பி. எல்லா விதத்திலும் ஒரு தேடல் தான். பாஷனேட்!!
ஹா ஹா:) நன்றிம்மா.:)

Anonymous said...

எனக்கு அப்பா-பாட்டி வீடு சாத்தூர். அங்க எங்க பெரியம்ம பிள்ளைங்க எல்லாம் கலக்குவாங்க தீக்குச்சி அடுக்கிறதுல! நானும் அடுக்கிருக்கேன் - விளையாடுறதுக்கு வராம அவங்க எல்லாம் சினிமா பாக்க காசு சேக்கும்போது நாம் மட்டும் என்ன செய்ய?! :) அடேங்கப்பா இவ்வளவு அடுக்கி இவ்வளவு தான் காசான்னு அப்பவே மலைப்பா இருக்கும் - ஆனா உழைச்ச துட்டுல சினிமா பாக்குற கிக்கு பாக்க நல்லாருந்தது (எனக்கு அப்ப சினிமா பிடிகாது - சரியா கான்வென்ட் ஸ்கூல் ஒழுக்க பைத்தியம் அப்போ!!! :) ... அவங்களோட குதூகலம் நல்லாருக்கும் பாக்க)

இந்த தீப்பட்டி படமெல்லாம் சூப்பரா இருக்கு - அழகா ஞாபகங்களை தூண்டுது! திருநெல்வேலில தீப்பட்டி வச்சு நாங்க சேர், டேபிள், வீடு கூட செஞ்சு, ஸ்கூல் இன்ஸ்பெக்ஷன் அப்ப வைப்போம்!

LK said...

//சீட்டா ஃபைட் இப்போ வர மாதிரி தெரியவில்லை.//

varuthu aana quality illa

வல்லிசிம்ஹன் said...

(எனக்கு அப்ப சினிமா பிடிகாது - சரியா கான்வென்ட் ஸ்கூல் ஒழுக்க பைத்தியம் அப்போ!!! :) ... அவங்களோட குதூகலம் நல்லாருக்கும் பாக்க)
//:)வாங்கப்பா மதுரா, சொன்னீங்களே ஒரு வார்த்தை. கான்வெண்ட் பத்தி.!!
வாழ்க்கைல எத்தனை சாமாசாரங்களை அது பாதிச்சிருக்குன்னு '
இப்ப நினைத்தால் கூட ஆச்சர்யமா இருக்கு.
அந்த ஸ்டிஃப்னஸ்,இன்னும் பிற சமாசாரங்கள் என்னைவிட்டுப் போக வருடங்கள் பிடித்தன.:)
நீங்களும் தீப்பெட்டி மேஜை பீரோல்லாம் செய்வீங்களா.
நாங்களும் செய்வோம்.
உண்மைதான் உழைத்துக் கிடைத்த காசுக்கு மதிப்பு ரொம்பவே ஜாஸ்திதான்.
ஒரு தீப்பெட்டி சப்ஜெக்ட் எவ்வளவு பேருக்கு நினைவுகளைக் கிளப்பியிருக்கு!!

குழந்தைகள் நலமாக இருக்கிறார்கள் என்று நம்புகிறேன்.

பாரதி மணி said...

வல்லீம்மா! இதைப்படித்ததும், எனக்கும் தமிழ்சினிமா கொசுவத்தி இன்னும் சுழன்றுகொண்டிருக்கிறது!

சுதந்திரம் வருவதற்குமுன்னால், திருவனந்தபுரத்தில் இருந்தோம். ரயில்வேஸ்டேஷன் கூப்பிடுதூரத்தில். வீட்டிலிருந்தே விசில் சப்தம் கேட்டு, ‘மதராஸ் மெயில்’ கிளம்பியாச்சு என்று அம்மா சொல்வார். தினமும் சாயங்காலம் ஸ்டேஷனுக்குப்போய் மதராஸ், திருநெல்வேலியிலிருந்து வரும் ரயில்களிலிருந்து பெருக்கிப்போட்ட குப்பைகளை அருவருப்பில்லாமல் கிளறுவோம். பீடி, சிகரெட் குப்பையில் மாணிக்கம் போல அபூர்வமான தீப்பெட்டிப்படங்கள் கிட்டும். அதிகமாகப்புழங்கும் WIMCO-வின் ‘டெக்கா’ படங்களுக்கு மதிப்பில்லை. 80 பேஜ் நோட்டு நிறைய ஒட்டிவைத்திருந்தேன். அந்த சாம்ராஜ்யம் எங்கே போயிற்றோ? நண்பர்களிடையே எக்ஸ்சேஞ்ச்/பரிமாற்றம் உண்டு.

வெள்ளிக்கிழமை தவறாது போய், மதராஸ் மெயிலில் வந்திறங்கும் ஆனந்தவிகடன், கல்கியை (அப்போது நாலணா தான்) பிளாட்பாரத்திலேயே உட்கார்ந்து சுடச்சுட பேப்பர் வாசனையுடன் படித்துமுடித்த அனுபவம்! (வீட்டில் அம்மா கைக்குப்போனால் ஒரு வாரமாகும்!)

ஐயோ! கொசுவத்தியை சுத்தவச்சிட்டீங்களே!

பாரதி மணி

வல்லிசிம்ஹன் said...

வரணும் பாரதி மணி சார். டின்னவேலி எக்ஸ்ப்ரஸும் ,ட்ரிவேண்ட்ரம் மெயிலும் ஓடின நாட்கள் அல்லவா அவை:)
தீப்பெட்டிப் புகை இத்தனை பேருக்குக் கொசுவத்தி ஏத்தி வைத்துவிட்டது.
நாங்கள் முதன் முதலில் வாங்கும்போது விகடன் குமுதம் எல்லாம் நாலணாதான்.

அப்பா குமுதம் வாங்க விட மாட்டார்:)
இந்த பொக்கிஷ நோட்புஸ்தகங்கள் எல்லாம் யாரிடம் போய்ச் சேர்ந்ததோ:(

துளசி கோபால் said...

எச்சூஸ் மீ திரு பாரதி மணி.

கொசுவத்திக்குக் காப்புரிமை உள்ளவரிடம் சொல்லி அனுமதி வாங்குனீங்களா இல்லையா?

உடனே தொடர்பு கொள்ளுங்கள். வல்லியம்மா போடும் போடில் அங்கே மொத்த ஸ்டாக்குமே வித்துப்போச்சுன்னு பராபரியாக் காதில் விழுந்தது:-)

வல்லிசிம்ஹன் said...

துள்சிம்மா, கொசுவத்தில உங்களை மிஞ்ச யாராவது உண்டா.
மணி சார் சொல்லியிருப்பது தமிழ்சினிமா
கொசுவத்தி. அதனால விட்டுடலாம்:)))

நானானி said...

ஹையோ...! கொசுவத்தித்தான், வல்லி! தீப்பெட்டி லேபில்கள் சேர்த்ததில்லை. ஆனால் பினாகா பேஸ்ட் கூட வருமே! அந்த ஒட்டுப் படங்கள், பிறகு ரப்பர்பேண்டில் கோத்து வரும் ரோல்ட் கோல்டில் அழகழகான டாலர்கள் சேகரிப்பதில் ரொம்ப ஆர்வம்.
செல்வியின் ப்ரொவிஷன் லிஸ்ட் மனதை நெருடிற்று.