Thursday, January 21, 2010

எழுபத்தினாலில் ஒரு கடிதம் ..


492, ஆம் பதிவு .

வழக்கம்போல் எதையோத் தேடப் போய், இந்தக் கடிதம் அகப்பட்டது:)
1974ல் எழுதப்பட்ட இந்தக் கடிதம், மிக மிகச் சுவையான ஒரு கால கட்டத்தை நான் கடந்து வந்திருப்பதை, கோடிட்டுக் காண்பித்தது.

கடிதம் எழுதினவரை நான் மறக்கவில்லை என்றாலும் ஒரு கடிதத்திலியே இவ்வளவு செய்தி பரிமாறிக் கொண்டோம் என்றால்
மாடியும் கீழுமாகக் குடித்தனம் இருந்த போது எவ்வளவு பேசியிருப்போம் என்று அதிசயமாக இருக்கிறது.!!

பேரு,ஊர் எல்லாம் மாற்றி இருக்கிறேன். ஏனெனில் நமக்குத் தேவை என்கிறது சுவைதானே ஒழிய விவரங்கள் இல்லை.:)

சேலத்தில் நாங்கள் குடியிருந்த வீட்டு மாடியில் இந்த சுறு சுறுப்பு மாமி குடியிருந்தார்,. பெயர் கோமதி. களக்காடு என்ற ஊரில் பிறந்து சென்னையில் திருமணம் செய்து இப்போது கணவர் இரு குழந்தைகளுடன் சேலத்துக்கு வந்தவர். என்னை விட ஒரு ஏழு வயது மூத்தவர்.
கலகலப்பு ,வாய் ஓயாமல் பேச்சு, மூச்சுக்கு மூச்சு,"கோந்தே!! என்று பெண்ணை விளிப்பது.ஸ்ஸ்ஸ்ஸ். களைகட்டிவிடும் அந்த இடம். மெட்டி ஒலி வேற சலங் சலங் என்று இசைக்குமா!:)

எங்க கடைக்குட்டி மாடியத்தை வராங்க என்பான் சத்தம் கேட்டதுமே.
அவன் தான் அத்தை என்று பெயர் வைத்தவன். ஏன் என்ன என்று மூணு வயசுப் பையனிடம் கேட்டுப் பிரயோசனமில்லை என்று நாங்கள் அனைவரும் அவர்களை கோமதிஅத்தையாகவே ஏற்றுக்கொண்டோம்.

மூன்று குழந்தைகளையும் நான் மேய்த்துக் கட்டுவதற்கு அவ்வப்போது உதவி செய்வார். வெளியில் போகும்போது தேவையான பொருட்களை
வாங்கி வந்து தருவார்.
அப்போது வீட்டு எஜமானருக்குத் தொழிற்சாலை வேலைகள் மிக அதிகம்.(ஹ்ம்ம் எப்பத்தான் இல்லை)!!

சிலசமயங்களில் டவுன் பஸ்ஸிலும் அழைத்துச் சென்று பத்திரமாகப் பார்த்துக் கொள்வார். அவரது இரண்டு குழந்தைகளும் ,எங்கள் மூன்றும்
கைகளைப் பிணைத்துக் கொண்டு ஒரு முனையில் கோமதி அத்தையும்,மறுமுனையில் நானும் சேலம் வீதிகளில் போவதைப் பார்த்தவர்கள் ஒரு சிறிய புன்னகையாவது உதிர்த்திருப்பார்கள்.
ஒரு பனிரண்டு வயது ஆராதனா(அந்தப் படம் வந்த புதுசு.அதனால் பெண்ணின் பெயரை அத்தை மாற்றிவிட்டார்.),
8 வயசு ஈஸ்வர், ஏழு வயசில் எங்க பாபு, ஐந்து வயசுல எங்க பொண்ணு பாப்பு, மூணு வயசில எங்க கடைக்குட்டி, குட்டி.
அவர்களுக்கு எங்கள் இருவரிடமும் பிடிக்காதது இதுதான். குழந்தைகளுக்கு நல்ல பெயர்களை வைத்துவிட்டு, பாப்பு,பாபு,குட்டின்னு என்ன கொஞ்சல் என்று முகம் சுளிப்பார்.:))

அவர்களிடமிருந்து பிரிந்து மாற்றலாகி நாங்கள் திருச்சி வந்ததும் அவர்
எழுதிய பல கடிதங்களை ஒரு மஞ்சள் துணிப்பையில் போட்டு வைத்திருந்தேன்,.
நமக்குத்தான் கடிதங்களைப் பிரியும் வழக்கம் கிடையாது.

அந்த மாதிரி ஒரு கடிதத்திலிருந்து சில வரிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.:0)

தேதி 9/4/74,சேலம்
*************************

அன்புள்ள ரேவதிக்கு,
உங்கள் பல பக்கக் கடிதத்தைப் பார்த்து ஒரே மகிழ்ச்சி.
பதில் எழுதத்தான் தாமதமாச்சு. வீடு நிறைய விருந்தாளிகள்.

குழந்தைகளுக்கு ஏப்ரில் 18லிருந்து லீவு. களக்காடு போக அதுகளுக்கு இஷ்டமில்லை.சென்னையில் மாமனார் வீட்டுக்குப் போக எனக்கு இஷ்டமில்லை. நடுவில் ராமன்(அவரது கணவர்) மாட்டிக்காம கோவாவுக்கு டூர் போயாச்சு.
என்ன இருந்தாலும் இந்த ஆம்பிளைகளுக்கு இருக்கிற சுதந்திரம் நமக்கு இருக்கா பாருங்க. இன்னும் இருபது நாட்களுக்கு இதுகளைக் கட்டி மேய்ப்பது எப்படி? வெய்யில் வேற கொளுத்துகிறது.
எத்தனை தடவை, டவுனுக்கும்,ராஜகணபதி கோவிலுக்கும் போறது.
நீங்க இல்லாதது இப்பத்தான் கஷ்டமா இருக்கு.
நம்ம தெரு செய்தியை முதல்ல சொல்லிடறேன்.
முன்னி(எங்கள் இருவருக்கும் ஒத்துப் போகாத இன்னோரு மாநிலத்தைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணுக்கு நாங்க வைய்த்த பெயர். ஏன்னெனில் அந்த அம்ம தமிழே பேசாது. ஒரே அச்சா, பச்சாதான்:) ) யை நான் பார்த்தே நாலு மாசமாச்சு. அதுக்கும் நர்சரி மிஸ் டிசூசாவுக்கும் சண்டையாம்!

சு.மாலினிக்கு மாப்பிள்ளை வீட்டொட வந்துட்டான்.மோட்டார்சைகிளை வைத்துக் கொண்டு காலனியைச் சுற்றிச் சுற்றி ஓட்டி ஒரே சத்தம் போடுகிறான். அவர்களோட அந்த டார்சான் (பேரு)நாயும் ஓடி வந்து ஒரேயடியாக் குலைக்கிறது பார்த்தியோ.!!
எதிர் வீட்டு ராஜிக்கு மே மாசம் ஒண்ணாம் தேதி பழனியில் கல்யாணம்.
நம்ம ஜோடிப்புறா(:))) ரிடையராகிப் பங்களூர் போகிறார்கள்.

அடுத்தவீட்டுப் பழனியப்பர் வீட்டில் மருமகள் எக்ஸ்பெக்டிங்கா இல்லை, இயல்பாவே இப்படி குண்டாக இருக்கிறாளான்னு தெரியவில்லை!!!
நீங்கள் புதிதாக ஐஸ் பெட்டி வாங்கி இருப்பது சந்தோஷம்.முன்னிகிட்ட சொன்னால் முகம் சகிக்காதேன்னு சொல்லவில்லை.
வாரப் பத்திரிக்கைகள் படிப்பதை விடவில்லை அல்லவா.
தொடர்கள், இளந்தளிர்,ரகசியம்,கதவு,கிண்டிரேஸ்,நீல நயனங்கள் எல்லாம் படிக்கிறீர்களா.????
(இதற்குப் பிறகு சினிமா கிசு கிசு)
இந்த சவம்(!).ஒரு நடிகை .......பார்த்தீர்களா. வேற ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிடுத்தாம்.
.இன்னொரு நடிகை ............பாஸ்கரை விவாகரத்துச் செய்தாச்சாம்.
நாட்டியம் ஆடுமே அது தற்கொலை பண்ணிக் கொண்டதாம். பாவங்கள்மா இதெல்லாம். சந்திரபாபு போய்ட்டாராமே. என்னமாப் பாடுவான்.பாவம்.
இவ்வளவு விஷயத்தையும் நேரில் வந்து அலச ஆசையா இருக்கு.
கௌரவம்,ராஜபார்ட் ரங்கதுரை பார்த்தாச்சா.
நான் பார்த்துவிட்டேன்.
(அத்தை எதிர் நீச்சல் பட்டுமாமி மாதிரி. ஒரு சினிமா விடமாட்டார்:) )
உங்க தம்பி ரங்கன் இதையெல்லாம் பார்த்து இருப்பான். அவனுக்கு சிவாஜி ரொம்பப் பிடிக்குமே!!

மற்றதெல்லாம் அடுத்த லெட்டர்ல எழுதறேன். குட்டிகளைப் பத்திரமாப் பார்த்துக் கொள்ளவும். ஹரி அடிக்கடி வெளில ஓடிடுவான். ஜாக்கிரதை.
அன்புடன்,
கோமதி.

ரசித்தீங்களா.அதற்கப்புறமா இந்த மாதிரி, கலகலா பெண்ணை நான் பார்க்கவில்லை.:)


எல்லோரும் வாழ வேண்டும்.

23 comments:

துளசி கோபால் said...

சூப்பர்மா:-)))))))))))

புதுகைத் தென்றல் said...

74ல எனக்கு ஒரு வயசு. உங்க நட்பு இப்பவும் தொடருதா??

கோமதி அரசு said...

கோமதி என்ற பெயர் மனதில் ஒட்டிக்கொண்டதோ,கடிதத்தில்
பெயர்மாற்றிய அத்தை பெயர் கோமதிஎன்று இருக்கிறதே.

மலரும் நினைவுகள் அருமை.

கிராமபடம் அழகு.

ஹுஸைனம்மா said...

எனக்கும் கடிதம் எழுதுவது என்றால் ரொம்ப இஷ்டம். ஆனா இப்ப எழுதினா படிக்கிறதுக்குத்தான் ஆளில்ல!!

நல்ல சுவாரசியமான கடிதம். கடிதம் வழி பகிர்தல் என்பதே தனி கலைதான்!!

KarthigaVasudevan said...

//நீங்கள் புதிதாக ஐஸ் பெட்டி வாங்கி இருப்பது சந்தோஷம்.முன்னிகிட்ட சொன்னால் முகம் சகிக்காதேன்னு சொல்லவில்லை.//

:)))

//அதற்கப்புறமா இந்த மாதிரி, கலகலா பெண்ணை நான் பார்க்கவில்லை.:)//

தேடுங்க ..தேடுங்க..தேடிக்கிட்டே இருங்க வல்லிம்மா கிடைப்பாங்க யாராச்சும். :)))
திண்ணைல உட்கார்ந்து நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருக்கற எபெக்ட்ல ஒரு லெட்டர் சூப்பர் லெட்டர் தான் போங்க.

வல்லிசிம்ஹன் said...

ஆஹா. துளசி.வசிஷ்டரே வருக,.:0)

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா தென்றல். இப்ப கோயம்பத்தூர்ல இருக்காங்க. போன் பேசிப்போம்.
மருமகள் ,மாப்பிள்ளை,பேத்தி,பேரன்கள் கல்யாணவயசுக்கு வந்துட்டாங்களாம்:)
அவங்க போன் செய்தா, நாம ''ம்'' மத்திரம் சொன்னாப் போறும்.!!
கபடில்லாத மனுஷி.

வல்லிசிம்ஹன் said...

வாங்க கோமதி.
அவங்க பெண்ணும் கணினி மேயறவங்க.

தமிழ்ப்பக்கம் வரமாட்டாங்க. இருந்தாலும் ஒரு ஜாக்கிரதைக்காக:)
கோமதிங்கற பெயர்ல ஒரு சலனமில்லாத அமைதி இருக்கறா மாதிரி தெரியும்.
அதனால் அந்தப் பெயரைப் போட்டேன்.

LK said...

idam matri irukiren endru sonnalum.. salemnu sonna udane enaku ennodda palaya ninaivulga vandiruchi ... i am frm salem

வல்லிசிம்ஹன் said...

கண்டிப்பா ஹுசைனம்மா.

அம்மா அப்பா எழுதின கடிதத்தில எல்லாம் என் வாழ்க்கையே தெரிகிறது.
இப்பதான் ஈமெயிலாப் போச்சே!!
எனக்குக் கடிதம் போடுங்க நானும் பதில் போடறேன்:))

வல்லிசிம்ஹன் said...

:))
வாங்கப்பா கார்த்திகா. கலகலா தோழிகள் இருக்காங்க.
இது வாழ்க்கையே ஒன்றிப் பிணைந்த மாதிரி ,என் கவலை உன் கவலை என் இன்பம் உன் இன்பம் என்று
ஒரு நாலு வருஷம் இருந்தோம்.
எனக்கு அப்போ முடி நல்ல நீளமா இருக்கும்.
அழகா இந்தி நடிகைகள் மாதிரி கொண்டையெல்லாம் போட்டு விடுவாங்க:0)

அமைதிச்சாரல் said...

சூப்பர் வல்லிம்மா!!!!

கடிதத்தில் உணரும் நெருக்கம் ஈமெயிலில் கொஞ்சம் குறைவாகத்தான் இருக்குதுங்க.

ambi said...

யப்பா என்ன ஒரு வம்பு, சும்மா அலசு அலசுன்னு அலசி இருக்கீங்க. :))

லெட்டர்லயே இப்டியா? :))

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் அம்பி,
வம்புக்கு ஏது ,குறைச்சலே கிடையாது. அநேக்மா உலகை
நிறையத் தெரிந்து கொண்டது இந்த கோமதி அத்தை மூலமாகத் தான்.

வல்லிசிம்ஹன் said...

We too were in Salem for sometimes L.K.
good place except for the pigs.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா அமைதிச்சாரல்,
கடிதம் போட்டால் சந்தோஷப்படுவது எல்லோருக்கும் உண்டானது.
அதுவும் தொலைபேசி இல்லாத நாட்களில்
அம்மா,அப்பா இருவரும் எழுதும் கடிதங்கள்
ஆதரவும்,அருமையும் கொடுக்கும் இதம் இருக்கே. அதைச் சொல்லி முடியாது.

Mukhilvannan said...

படிப்பதற்கு மிக ரசமாக இருக்கிறது.
கடிதம் எழுதுவது ஒரு கலை. டி.கே.சி., மகாராஜன், சத்தியமூர்த்தி ஆகியோர் கடிதங்கள் ஒரு பொக்கிஷம்.
உங்கள் தோழியின் கூர்ந்த நோக்கும், வாசனை பிடிக்கும் மூக்கும் மிக நேர்த்தியானவை என்பது அவர் எழுதிய சுவையான கடிதத்தின் மூலம் தெரிகிறது. வாழ்த்துக்கள்.
கிருஷ்ணமூர்த்தி

வல்லிசிம்ஹன் said...

வரணும் முகில்வண்ணன் கிருஷ்ணமூர்த்தி.
அதெப்படி அவங்களோட வாசனை பிடிக்கும் மூக்கு பத்தி உங்களுக்குத் தெரியும்?
நான் எழுதவில்லையே:)

கூர்ந்த நோக்கு சரிதான்.எதிர்காலத்துக்கு நல்ல
முறையில சேமிக்கக் கற்றுக் கொடுத்தவங்களும் அவங்கதான்.
நன்றி.

ராமலக்ஷ்மி said...

நேரிலே பேசுகிற மாதிரி எழுதியிருக்கிறார்கள். அருமை:)! பகிர்ந்து கொண்டிக்கும் விஷயங்களில் தெரிகிறது நட்பின் நெருக்கமும்.

எனக்கும் கடிதம் எழுதுவதும் பெறுவதும் ரொம்பப் பிடிக்கும்.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா ராமலக்ஷ்மி,
உங்க அட்ட்ரெஸ் தெரிந்தா ,நானும் பத்தி பத்தியா கடிதம் போடுவேன்.:)
இப்போ பிறந்தநாள் வாழ்த்திலிருந்து எல்லாம் ஈ மயமாகி விட்டதே:(
ரொம்ப நன்றிம்மா. உடல் நலம் பேணவும்.

NNC said...

கடிதம் மிக நேர்த்தியாகவும் மனதில் பட்ட அல்லது பதிவு செய்த நிகழ்வுகளை யதார்தமாகவும் எழுதியுள்ளார் அப்பெண்.பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வாங்க எனென்சி.
முதல் வரவா? நன்றி. அவர்கள் எப்பவுமே சளைக்காமல் யதார்த்தமாகப் பேசுவதில் வல்லவர்கள்.
நல்ல பெண்மணி.

வல்லிசிம்ஹன் said...

வாங்க எனென்சி.
முதல் வரவா? நன்றி. அவர்கள் எப்பவுமே சளைக்காமல் யதார்த்தமாகப் பேசுவதில் வல்லவர்கள்.
நல்ல பெண்மணி.