Blog Archive

Saturday, July 31, 2010

சாரலின் அழைப்புத் தொடர்

அன்பு அமைதிச்சாரல் எனக்குப் பத்துக் கேள்விகளை
அனுப்பித் தொடரச்சொன்னார்.

இது ஒரு மாதிரி ''திரும்பிப் பார்க்கிறேன்'' ஆகிவிட்டது.
அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலம் . என்றாலும் ஒருவரையும் மறக்கவில்லை என்று நினைக்கிறேன்.
மறந்திருந்தால் கட்டாயம் மன்னிக்கணும்.

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

வல்லிசிம்ஹன்
2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

அது உண்மையில் பாதிப்பெயர். வீட்டுக்காரருடையது . வல்லிநாச்சியார். எப்பவும் புனை பெயர் வைத்துக் கொள்ளவேண்டும் என்று ஆசை.:) வேற காரணம் இல்லை.

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

கதை சொல்லப் பிடிக்கும். பேசப் பிடிக்கும். பேசுவதைக் கேட்க தற்போதைக்கு இங்க சாமிகளும்,ஆசாமியும் தான் இருக்காங்க.
இரண்டுமே திரும்பி பதில் பேசாது. நீ பெரியவளானாட்டு என்ன செய்வே என்று யாராவது கேட்டால் நிறையக் கதைப் புத்தகம் படிச்சு எழுதுவேன் என்று சொன்ன நினைவு இருக்கிறது.அதனாலதான் ரொம்ப லேட்டாக எழுத வந்தேன்.!!


4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

ஒன்றுமே செய்யவில்லை. செய்திருக்கலாம் வாழைப்பழத்தை உரித்துக் கொடுத்தால் சாப்பிட யோசிக்கும் சோம்பேறி.


5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

முக்கால் வாசிப் பதிவுகள் என் சொந்த அனுபவங்கள் தான்.

சிலது சிரிக்க வைக்கும். சிலது அய்யொடா இது ஏன் இந்த வல்லிம்மா இப்படி அழறாங்கன்னு சொல்ல வைக்கும்.

சிலது பக்திபூர்வமா இருக்கும்.அதுக்காக ஆன்மீகம் பக்கம் உறுதியாக இருந்தால் ஒழிய போக மாட்டேன்

சிலது போட்டோ,பயணமாக இருக்கும்.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா

சம்பாதிக்கலாம்னு தெரியாது. யாரும் கொடுக்கப் போகிறதில்லை.
இப்போதைக்கு இது ஒரு தொடர் அடிக்ஷனாகப் பீடித்திருக்கிறது.

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்து நிறுத்திவிட்டேன்.
குழந்தைகளுக்காக ஆரம்பித்து அதுவும் அப்பப்போ எழுதுகிறேன்.
படங்கள் மட்டும் போடுவதற்காக என்று ஒன்று.
நிச்சயமாக அப்டேட் செய்வது நாச்சியார் தளம் மட்டுமெ.

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்

வீணாக விவாதங்கள் நடக்கும்போது தோன்றும்,. கோபம்.

ஓ நிறைய பொறாமைப் படுவேன். வலிமையான எழுத்துக்குச் சொந்தக்காரர்களான என் சக பதிவாளினிகளைப் பார்த்து அதிசயப் பொறாமை வரும்.

படிக்கக் கண்கொடுத்த இறைவனை வேண்டி இவர்களை வாழ்த்திவிடுவேன்

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

முதல் என்றால், துளசி, அம்பி,அபி அப்பா, வடுவூர் குமார்,கீதா சாம்பசிவம்,கோவி.கண்ணன் நாகை சிவா,கோபிநாத்,,சுலைமான்,மௌலி .தருமி,ஓகை ,கண்மணி, ,பொன்ஸ்....................
என்னைப் பாடவைத்த ரவி,சர்வேசன்,இன்னும் என் பதிவு கலைமகளில் தெரியவைத்த ஷைலஜா ...
துளசிகோபால் மட்டுமே பின்னூட்டம் இட்ட பதிவுகளும் உண்டு.:))கீதாவும் துளசியும் என் எழுத்துக்கு உற்சாகம் கொடுப்பவர்கள்.

பிறகு ஆயில்யன்,இலவசம்,,சின்ன அம்மிணி, ,நானானி, திவா தம்பி .
ராமலக்ஷ்மி,தென்றல்,முல்லை,சாரல்,முத்துலட்சுமி,கோமதி தங்கச்சி

இப்போ மாதங்கி மௌலி,ஜயஷ்ரீ,சுமதி.,எல்.கே,.,திவா தம்பி .

எழுத்துக்குத் தகுந்த பின்னூட்டங்கள் வரும்.10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

இனிமேல் சொல்ல ஒன்றும் கிடையாது.அநேகமாக என் எழுத்துக்களால் என்னைத் தெரிந்தவர்கள் என் நண்பர்கள்.

அவர்களுக்குச் சொல்ல வேண்டியது நன்றி மட்டுமே.

பதிவுகள் எனக்கு வடிகால். பின்னூட்டங்கள் எனக்கு மருந்து.

எழுத்து இல்லாவிட்டால்… இருத்தல் சுகமில்லை.


ஆடிப்பூரத்து அழகியும்

திருமலை வேங்கடவனும்

இன்னும் அழைக்கப் படாதவர்கள் யார் என்று தெரியவில்லை.
இருந்தாலும்
தம்பி திருமூர்த்தி வாசுதேவனையும்,
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
தக்குடுவையும்
&&&&&&&&&&&&&
பினாத்தலாரையும்,
&&&&&&&&&&&&&&&&&

நுனிப்புல் உஷாவயும்
&&&&&&&&&&&&&&&&
அழைக்க ஆசை.
முடிந்தால் நேரமிருக்கும்போது எழுதுங்கள்.:)எல்லோரும் வாழ வேண்டும்.

Posted by Picasa

Thursday, July 29, 2010

கூரையில் தங்கிய மழை


pulampeyarntha  porutkal
idam maariya  saappattuk koodam:0)

kaarai vizhuntha  koorai
refugees  from rain:(

வருஷா வருஷம் வெளியூர் போவதும், போயிருக்கும் நேரம் மழை பெய்வதும்


ஒரு ஆறு வருடங்களாக நடந்து வருகிறது.

ஏதாவது ஒரு எமர்ஜென்சி காத்து இருக்கும் நாங்கள் திரும்பி வரும்போது.முதல் தடவை என் அருமை துர்கா அம்மா சுவரில் பதிந்த ஈரத்தால்

கரைந்துவிட்டாள்.

அதற்குப் பிறகு கூரையில் மழைக்கான சிகிச்சை எல்லாம் செய்தது.

ரெயின் ப்ரூஃப் ரசாயனக் கலவை தடவி,

அதற்கு மேல் டைல்களைப் பதித்து எல்லாம் செய்தார். செய்தவர் பணம் வாங்குவதில்

காட்டிய ஆர்வத்தை பிரச்சினையில் காட்டத் தவறியதால் அடுத்த வருடம்

மழையில் சுவற்றில் மாட்டி இருந்த சாமி படங்கள் அனைத்தும் கறைபடிந்தன.

''இப்படியெல்லாம் எங்களை அவமானப் படுத்தவா ஆணி அடித்து
மாட்டினாய் ''என்று
அவர்கள் எல்லாரும் கேட்பது போல எனக்கு ஒரு பிரமை.:(
இப்போது மீண்டும் வேலை ஆரம்பித்திருக்கிறோம் . மழையோ ராத்திரி வந்து ,ஆட்டத்தைக் கலைக்கலாமான்னு  பார்க்குது.
சரியாகிவிடும் என்றே நம்புகிறேன்.
சரியான  பிறகு மீண்டும் படம் போடுகிறேன்.:)


எல்லோரும் வாழ வேண்டும்.
Posted by Picasa

Wednesday, July 28, 2010

கண்ணனின் கனியமுது
பாபூ,
என்னம்மா'
எங்கடா  சின்னவன் சத்தமே காணோமே. கொஞ்சம் என்ன செய்கிறான்னு  பாரு ராஜா.
இந்தச் செடியை மட்டும்  உரம் போட்டுட்டு  வந்துடறேன் ப்ளீஸ்?
அவதார் கார்ட்டூனில் மூழ்கி இருக்கும் பெரியவன்,
சிறிதே அலுத்துக் கொண்டு


''கிஷா  என்ன செய்யற. ரொம்ப சைலண்டா இருக்கியே''
ஐ யாம் பெயிண்டிங் அண்ணா''

ஓ  கார்ப்பெட்ல  ஒண்ணும் கொட்டிடாதே, ஓகே.?
சரிண்ணா''

பெண் தோட்டத்துக் கதவை  சார்த்திவிட்டு உள்ளே நுழையும் போது  மாவடு வாசனை வருகிறது.


பாபு  'பாட்டி  மாவடு' எடுத்துக் கொண்டாயா. ஒரே வாசனையா வருதே.
இல்லம்மா இட் இஸ் டூ ஏர்ளீ   டு தின்க்  அபௌட்  ஃபூட்.
பின்ன  என்ன  வாசனை. சின்னவன் எங்க.

இங்க இருக்கேம்மா, ஸ்டடி ரூம்ல''
உடம்பில் ஏதோ அச்சம் தோன்ற அம்மாக்காரி அங்க போனால்....

கீழே தோட்டத்தில்   போட வேண்டிய  மரத் தூள்களால்
ஒரு படம் உருவாகிக் கொண்டிருந்தது.
நடுவில் மரங்களாக  சின்னசின்ன கம்புகள்.
மாமரம்  மா,சென்னை மாதிரி.....

நான்கு  மாவடுகள்   ஊறுகாய்  பாட்டிலிலிருந்து எடுக்கப்பட்டது.
அதாவது பரவாயில்லை.
ரியல்  ஷோவாம்.! ஊறுகாய்ச் சாறு  ஒரு சின்ன   கப்பில் எடுத்து
அந்த மரக் கம்புகள்,  தூள்கள்  எல்லாவற்றிலும்  கொட்டி வைத்திருக்கிறான்.

நீங்கள் கேட்கலாம். குழந்தையின்   கைக்கெட்டும் உயரத்தில் 
ஊறுகாய் ஏன் வைக்கணும்?

ரொம்ப்ப   உயரத்தில் வைத்தாலும்   நாற்காலியைப் போட்டு
 அலமாரியைத்   திறக்கத் தெரியுமே  எங்களுக்கு:)

இது கூடப் பரவாயில்லை.
கடிந்து கொண்ட அம்மாவின் கோபத்தைப் பற்றி சிறிதும் லட்சியமில்லை
அந்தப் பிள்ளைக்கு.
மூலையில் சுவரைப் பார்த்து  உட்கார வைத்த  அம்மாவைத் திரும்பி பார்த்து  இப்படிச் சொன்னானாம்.

''அதான்  வொர்க் ஓவராயிடுத்தேம்மா. இப்ப ஏன்   கோவிச்சுக்கறே!!! ''
முதல்லியே  சொல்லி இருக்கலாம் இல்ல.


எல்லோரும் வாழ வேண்டும்.

Posted by Picasa

Monday, July 26, 2010

காமிராக் கண்களுக்குப் பிடித்த காட்சிகள்

RHINE FALLs SWISS

Mannlichen ...a village


ஐபிக்ஸ் ,மான் வகை .
*********************
முதல் தடைவையாக சுவிட்சர்லாந்த் பயணித்தபோது எடுத்த படங்கள் கிடைத்தன.
மறக்க முடியாத காட்சிகள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.
எல்லோரும் வாழ வேண்டும்.

Posted by Picasa

Saturday, July 24, 2010

ஆலம்விழுதுகள் போல்....முடிவுரைவயதான பெற்றோர்களின் வாழ்வில் ஏற்பட்ட ஒரு சம்பவத்தை


இடம்,பெயர்,சூழ்நிலை எல்லாம் மாற்றி

ஒரு தொடர் பதிவு போட்டிருந்தேன்.

எப்பவும் வாழ்க்கையின் நிதர்சனங்கள் ரசிக்கக் கூடியதாக இல்லை.அதுவும் அந்தப் பதிவு இன்றைய சில இளம்பெண்களின் மனநிலையைப்

பிரதிபலிப்பதாக அமைந்துவிட்டது.

உண்மையாகவே இருந்தாலும், தங்கள் தரப்பிலும்

நியாயம் இருப்பதை எடுத்துக் காட்டி ஒருவர்

பெண்ணா,ஆணா தெரியவில்லை பின்னூட்டமிட்டிருந்தார்.நான் மறுக்கவில்லை.

அவரவருடைய லிமிடேஷன்ஸ் என்று ஒன்று இருக்கிறது. ஒருவருக்கும்

தங்கள் வாழ்க்கையில் யாரும் வந்து தினசரி ரிதம் கலைவதை விரும்புவதில்லை.அவர்கள் வயதானவர்களாக இருக்கும் போது வேண்டாத பயம்,

கற்பனை எல்லாம் வந்துவிடுகிறது.

நம் சுதந்திரம் சில நாட்களுக்காவது பறி போகிறது என்பதைப்

பொறுத்துக் கொள்ள இயலவில்லை.இந்த நடந்த சம்பவம் ஒரு பெரிய வீட்டில்,சர்வ சௌகரியங்களும்

இருக்கும் இடத்தில் நடந்தது.கொஞ்சம் அநுசரணை,அன்பு,உபசாரம் இவ்வளவே வந்தவர்கள் எதிர்பார்த்தது.

இந்த சம்பவம் முடிந்து அவர்கள் திரும்பி அவரவர்

இருக்கும் தேசத்திற்கும் போயாச்சு.ஆனால் இனி இப்படித்தான் இருக்கும் என்றும் புரிகிறது.வேறுயாரையாவது இந்தப் பதிவு வருத்தியிருந்தால்

அவர்கள் பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்.எல்லோரும் நல்லவரே. அவரவர் எல்லையில் நாம் நுழையாமல் இருந்தால்.:)

அன்புடன்,

வல்லிமா.
எல்லோரும் வாழ வேண்டும்.
Posted by Picasa

Thursday, July 22, 2010

தொடர்ந்து முடிந்தது பாகம் 7சாயந்திர நேரம் எல்லோரும் ஸ்ரீனிவாசனின் அறையில் உட்கார்ந்து

சஹஸ்ரநாமம் சொல்ல ஆரம்பித்தார்கள்.
பெற்றோர் இருக்கும் நாட்களிலிருந்து ராதையும் ஸ்ரீநிவாசனும்

பெற்றோருடன் உட்கார்ந்து ஆறு மணி அளவில் கடவுள் துதி சொல்வது வழக்கமாக
இருந்தது.

நடுவில் நின்றிருந்த பழக்கத்தை ஆரம்பிக்கவேண்டும் என்று நினைத்த
ராதை,தன் கணவனையும் பெண்கிருஷ்ணா,
மாப்பிள்ளை,பிள்ளை அனைவரையும் அழைத்து அண்ணன் அறைக்கு வந்து

அவரிடம் சொல்லவும் மகிழ்ச்சியோடு தலை அசைத்தார் அவர்.

அரைமணி நேரம் பக்திமணத்தில் கரைந்தது.

பாமவின் பிள்ளைகளும் ,மனைவியரும் கூடத்தில் தொலைக்காட்சி
பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அத்தையைப் பார்த்து எல்லோரிடமும் குசலம் விசாரித்ததோடு

கடமை முடித்தவர்களாகத் தம் தம் அறை நோக்கிப் போனவர்கள் மீண்டும் கீழே
வந்தது இரவுச் சாப்பாட்டுக்குத் தான்.

நாணிப்பாட்டியும் அவரது மகளும் சுவையாக அளவாகச் செய்திருந்த
சாப்பாட்டை ருசித்து உண்டனர் ராதையும் அவளது குடும்பத்தினரும்.


க்றிஸ்டினாவும் தங்களோடு உட்கார்ந்து அமைதியாகச் சாப்பிடுவதை
பாமாவின் பிள்ளைகளும் மருமகள்களும் அதிசயமாகப் பார்த்தனர்.

இயல்பாக இருக்கும் குழந்தைகளும் இனிமையாகப் பட்டுவுடன் அரட்டை

அடித்தவண்ணம் சாப்பிட்டு முடித்தனர்.

''அத்தை அவர்களுக்கு பீட்சா,பர்கர் அப்படிக் கேட்ப்பியோன்னு
நாங்க நினைத்தோம்'' என்று ஆச்சரியப் பட்ட தன் மருமகன்களைப்
புன்னகையோடு பார்த்தாள் பாமா.

அவர்களுக்கு எந்த இடத்திலும் எல்லாவிதமான சாப்பாட்டையும்
சாப்பிடப் பழக்கி இருக்கிறோம்பா. காரமில்லாத உணவு விரும்பிச் சாப்பிடுவார்கள்.

நம் நாணிப்பாட்டிக்கு அது பழகிய மெனு தானே என்றாள்.
சாப்பிட்டு முடித்த கையோடு அண்ணனின் அறைக்கு விரைந்தாள் ராதை.

அங்கே அண்ணனுக்குக் கஞ்சியும் தயிரும் கொடுத்துமுடித்திருந்த பாமாவைச்

சாப்பிடச் சொல்லி அழைத்தாள்.

நானும் இங்கேயே இந்தக் கஞ்சியைச் சாப்பிட்டுவீட்டேன்மா.இனி பழமும் பாலும்

போதும் என்றவளை மெல்ல அணைத்துக் கொண்டாள் ராதை.
விரதம் இருக்கியா என்று கேட்டதும், ஸ்ரீநிவாசன் அவளை அருகில் அழைத்துத்

தங்கள் தினசரி உணவே அதுதான்.காய்கறிகள் கலந்த சாலட் மட்டும் இல்லை,

என்று சைகையில் சொல்ல முனைந்தார்.

அவர் ஆரம்பிக்கப் பாமா முடிக்க நல்ல ஜோடி என்று கைகளை வளைத்து
அண்ணாவிடம் சூப்பர்' என்று காட்டினாள்.
*****************************************************************

''அப்போ கிளம்பலாமா ராதா. குழந்தைகள் களைப்பாக இருக்கிறார்கள்


என்றதும், இதோ வரென் கோவிந்தன்,என்ற வண்ணம்,

சமையலறைக்கு விரைந்தாள் ராதா.

நாணிப்பாட்டியும் அவரது பெண்ணும் சாப்பிட்டு முடித்து, அறையைச்

சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள்.பாட்டி, என்னுடன் எங்கள் இடத்திற்கு வரமுடியுமா, உங்களோடு பேச வேண்ட்டும்

என்ற ராதாவைப் பார்த்து ஒரு புரிதலோடு தலை அசைத்தார் பாட்டி.

பெண்ணிடம் மற்ற வேலைகளை முடித்துக் கொண்டு

படுத்துக் கொள்ளச் சொல்லிவிட்டு

ராதையுடன் பாட்டியும் கிளம்பினார். பாமாவிடமும் விஷயத்தைச் சொல்லி

அனுமதி வாங்கிக்கொண்டு எல்லோரிடமும் விடை பெறவும்,பட்டுக் குட்டி ஓடி வந்து ஏறிக்

கொண்டு விட்டது. அம்மா கிட்ட கேட்டியா செல்லம் என்று ராதா ஆச்சரியப்பட,

நான் பாட்டி கிட்டச் சொல்லிட்டேன் , ஒண்ணும் நடக்காது.பயப்படாதே அத்தே
என்று சிரித்தது அந்தப் பெண்.

வண்டி

அபார்ட்மெண்ட்டை நோக்கிக் கிளம்பியது.

வாசலில் விளக்கு வெளிச்சத்தில் நிற்கும் பாமாவைப் பார்த்து ,அது வரை அழாமல் இருந்த ராதா

நாணிப்பாட்டி மேல் சாய்ந்துகொண்டு கண்கலங்கினாள்.

ஏன் இந்த மாதிரி நடக்கிறது. அண்ணா, பாமா மாதிரி நல்லவா பார்க்க முடியாதே.

இப்படிப் பிள்ளைகள் பெற்றோரிடமு ஒட்டாமல் உற்றாரிடமும் ஒட்டாமல்

ஏன் இப்படியானார்கள்.எனக்குப் புரியலையே என்று மெல்லிய குரலில் புலம்பியவளை

பாட்டி சமாதானப் படுத்தினார்.
காலப் போக்கு மாறிவிட்டது ராதாம்மா.
இப்ப நடப்பது பெண்கள் குடும்பம். நம்வீட்டு வண்டித்தடங்கள் ,

கரூர்,கொடியாலம் நோக்கித்தான் இனிமேல் போகும்.
அதை உன் அண்ணா நன்றகப் புரிந்து கொண்டார். பாமாவுக்குப் பிள்ளைகள்


வெளியூரில் படிக்கப் போனபோதே அவர்களின்

மாற்றத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது.

திருமணம் ஆனதும் பெண்டாட்டிகளை அநுசரிக்க வேண்டிய கடமையும்,

அவர்களுக்குச் சேர்ந்து கொண்டது.

எல்லோரும் ஒரே வீட்டில் இருக்கிறார்களே ,என்று சந்தோஷப்படு.

நான் பாமாவையும் சீனுவையும் விட்டுக் கொடுக்க மாட்டேன். அவனைப்

பார்த்துக் கொள்ள வந்திருக்கிறானே ஒரு கைகால் டாக்டர்,அவன் என் பையன் தான்.

சம்பத்துனு அண்ணாவைக் குளிப்பாட்டி, மத்தவேலையெல்லாம் செய்வது

என் பெண்ணின் புருஷன். அவனுக்கும் நல்ல சம்பளந்தான் தருகிறார் உங்க அண்ணா.

என்று புன்னகை புரிந்தார் பாட்டி.

தொலைவில் தெரிந்த உச்சிப்பிள்ளையார் கோவில் விளக்குகளையும்,

ஸ்ரீரங்க நாதர் கோபுர விளக்கையும் வணங்கினாள் ராதா.

ஏனோ ஒரே ஒரு ஊரிலே ஒரெ ஒரு ராஜா'' பாட்டு நினைவுக்கு வந்தது.

பக்கத்தில் தூங்கி விட்ட இளந்தளிர் பட்டுக் குட்டியை இறுக அணைத்துக் கொண்டாள்.

எல்லோரும் வாழ வேண்டும்.

Monday, July 19, 2010

தொடருகிறது 6 ஆம் பாகம்

chicago arora temple 2007
Add captionஆயிற்று. குழந்தைகளை பாமா காவேரி ஆற்றங்கரையைப் பார்க்க ,காரியஸ்தர்

ராமனுடன் அனுப்பி இருந்தாள்.

காலணிகளை கழற்றாமல் நடக்க அவர்களுக்கு அறிவுரைகள் கொடுக்கப்பட்டன.

நாணிப்பாட்டி செய்து கொடுத்த தேங்காய் சேவையையும்,மோர்க்குழம்பையும் ருசித்தவாறே,

ஒருவிதமான அமைதியில் எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.மதிய சாப்பாட்டின் போது பாமா அந்த வீட்டு நிலவரத்தை எடுத்துச் சொல்லி

ராதாவுக்கும் கோவிந்தனுக்கும்

விளக்க வைக்க முயன்றாள். கிருஷ்ணா(ராதாவின் பெண்) மாமாவுடன் உட்கார்ந்து பாகவததில்

தசம ஸ்காந்தத்தை மிருதுவாகப் படித்துக் கொண்டிருந்தாள்.

கண்கள் திறந்த நிலையில் மருமகளீன் இனிமையான குரலைக் கேட்டுக் கொண்டிருந்தார்.குழந்தையாக இருக்கும் போது இதே கிருஷ்ணா ஊஞ்சலில் ஏறிக்கொண்டு

தன்னைத் தள்ளிவிடச் சொன்ன நாட்களை நினைத்துக் கொண்டார்.

இறங்கவே மாட்டேன் என்ற பிடிவாதம் வேறு.மாமாவின் பிள்ளைகளுக்கு ஈடு கொடுத்து சடுகுடு,ஓடிப்பிடிப்பது எல்லாம் விளையாடுவாள்.

அப்புறம் எங்க போயிற்று இந்த பந்தம் எல்லாம்.?

எல்லோருக்கும் பிந்திப் பிறந்தவள் கிருஷ்ணா.

பாமாவுக்கே அவளைத் தன் வீட்டு மருமகள் ஆக்கிக் கொள்ள ஆசை.

மாப்பிள்ளை ஒத்துக்கவில்லை.

இருபத்துமூன்று,இருபத்தைந்து என்றிருந்த தன் மகன்களுக்கு

கரூர், கொடியாலம் என்று பரம்பரையாகத் தெரிந்தவர்கள் வீட்டிலிருந்து

தான் பெண் எடுத்துத் திருமணம் செய்துவைத்தார்.

அந்தப் பெண்களுக்கு ஸ்ரீரங்கம் ஒரு குக்கிராமமாகத் தெரிந்தது.

சின்ன வயதிலேயே சென்னை சென்று படித்து,மீண்டும் ஒரு சின்ன ஊருக்கு வந்துவிட்டதாக
நினைத்தார்கள்.

அவர்கள் வசதிக்காக முதல் தளத்தில் பல வசதிகளையும் செய்தார்.
மகன்களையும் வீட்டு விஷயத்தில் தொந்தரவு செய்வதில்லை.
அவரவருக்குத் தனித் தனி வண்டி.
ஒட்டியது, இந்தப் பட்டுக் குட்டி ஒன்றுதான்.
நிலைதெரியாமல் மருண்ட பாமாவையும் புத்தி சொல்லி
இந்த நிலைமைக்கு பழக்கப் படுத்தினார்.

''நாம் நம் வீட்டிலேயே வானப் பிரஸ்தம் செய்யலாம் பாமா.
அவர்களுக்கும் வயது வரும்போது புரிந்து கொள்வார்கள் என்று சொன்னார்.

அவள் தான் குடும்ப நிகழ்ச்சிகள், தெய்வ ஆராதனை என்று ஒன்றிலும் பங்கெடுக்க
முடியாதவர்கள் இங்க இருந்துதான் என்ன பயன்,

திருச்சி, கொஞ்சம் பெரிய ஊர்,அங்கே போய் இருக்கட்டுமே என்று சொல்லிப் பார்த்தாள்.

அவருக்கு மகன்களைத் தினம் பார்க்கவேண்டும், ஒரு வார்த்தை பேச வேண்டும்

இதெல்லாம் அவர்களை இங்கே இந்த ஸ்ரீரங்கவிலாசத்தில்
நிறுத்திவைத்தது.


பட்டு மட்டும் திருச்சியில் இருக்கும் ஒரு நல்ல பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள்.
சின்ன மகனுக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை.

இந்த நிலையில் தான் சிகாகோவில் பிள்ளைகளொடு குடியேறிவிட்ட

ராதா, சில பிரார்த்தனைகளை நிறைவேற்ற ஸ்ரீரங்கம் வருவதாகவும்,
தன் பழைய அறையை ஒழித்து வைக்குமாறும் ஒரு மாதம் தங்குவதாகவும் மெயில் அனுப்பி இருந்தாள்.
அதுவும் சின்னவனுடைய கணினியின் மெயில் ஐடிக்குத் தான் வந்தது.
அவன் அந்த மெயிலைப் படித்த அடுத்த நிமிடம்,
''அம்மா, அத்தைக்கு வேறு ஏற்பாடு செய்து கொடு.
அவர்களுடைய அமெரிக்கப் பழக்கங்களுக்கு நம் வீடு ஒத்துக் கொள்ளாது''
என்று சொல்லிவிட்டான்.

யார் சொல்லி அந்த வார்த்தைகள் வெளிவருகிறது என்று புரிந்து கொண்டாலும்,
பாமா எத்தனையோ முயன்றாள்.

வீட்டுப் பெண் அவள்டா. அவளுக்கும் இந்த வீட்டில் உரிமை உண்டு
பிறந்து வளர்ந்த பாசத்தில் அவள் நம்மை வேறு

விதமாக நினைக்க மாட்டாள், பதினைந்து

வருடங்கள் கழித்துவருகிறாள்.

சுபாவத்திலயே நல்லவள்ப்பா ராதா,. வித்தியாசம் பார்க்காதே.
நம் பெரிய ஹால் ஒன்று போதும் அவர்களுக்கு, வாசல் பக்கம் இருக்கும்
ஆபீஸ் ரூமையும், தாத்தா ரூமையும் ஒழித்து வைக்கிறேன். எல்லாத் திருத்தலங்களுக்கும் போய் வரத்தான்
அவர்களுக்கு நேரம் இருக்கும். இரவு மட்டும் தங்க வருவார்கள்.
அப்பாவுக்கும் அவர்கள் வருவது உற்சாகமாக இருக்கும் என்றும்,

உங்களுக்கு ஒரு தொந்தரவும் இருக்காது என்றெல்லாம் வாதாடித் தோற்றுவிட்டாள்.சிறுவயதில் அத்தை பிள்ளைகள் போலத் தன்னால் அமெரிக்கா போய்ப்

படிக்க முடியாத குறை இருவர் மனதிலும் இருந்தது.

அவர்களுக்கு எந்த யூனிவர்சிடியிலியும் இடம் ,கிடைக்காதது,
வேறு(இருபது வருடங்களுக்கு முன்னால்) அவர்களைக் குறைப்பட வைத்தது.

இரு மகன்களும் தன் சகோதரியை ஒதுக்குவது ஸ்ரீநிவாசனைப் பாதித்தது.
அது ஸ்ட்ரோக் ரூபமாக அவரைப் படுக்க வைத்தது.
பாமா, தைரியமாக நிலைமையைச் சமாளிக்க முற்பட்டாள்.

கணவரைச் சிகித்சைக்காக திருச்சிக்கு அழைத்துச் சென்ற நாளிலிருந்து,

காரியஸ்தரை, வரும் விருந்தாளிகள் தங்கும்படியாக , ஒரு இடம் ஒரு மாதம் தங்குவதற்கான ஏற்பாடுகளைக் கவனித்தாள்.

அவரும் ஓரிடத்தைக் கண்டுபிடித்து விவரம் சொன்னார்.
அவர்கள் வீட்டிலிருந்து கொஞ்சம் தள்ளித் தான் இருந்தது.

இருந்தாலும் ராதா மனம் நோகாமல் எல்லா ஏற்பாடுகளையும்

செய்து முடித்தாள்.
ராதாவுக்குப்பிடித்த நாணிப் பாட்டியையும், சின்னப் பொண்ணுவையும்
மீண்டும் அழைத்துக் கொண்டாள்.ராதாவும் ,கோவிந்தனின் சென்னையில் இருக்கும் அவர் உறவுகளைப பார்த்துவிட்டு திருச்சிக்கு வண்டி ஏறினார்கள்.

எல்லோரும் வாழ வேண்டும்.
Posted by Picasa

Saturday, July 17, 2010

தொடரும்...பாகம் 5

குழந்தைகள் தோட்டத்தில் வேப்பமர ஊஞ்சலில்


விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களிட வந்த ராதா, நிதின்,நிகில் ரெண்டு பேரும்

மாமாவைப்

பார்த்தச் சந்தோஷமாப் பேசிண்டிருக்கணும் வாங்க.

அவருக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லை. அதனால் அங்க

இருக்கிற இடத்தில கேம்ஸ் ஏதாவது அதிக சத்தம் இல்லாமல்

விளையாடுங்கள் என்று அவரவர்களுக்கு உண்டான விளையாட்டு

வீடியோ கேம்ஸ்களை எடுத்துக் கொடுத்தாள்.

பட்டம்மா வரையா செல்லம்.என்றதற்கு அங்க போகக் கூடாதுன்னு

அம்மா சொல்லி இருக்காங்க. நான் வரலை அத்தை

என்றது அந்த சின்னப் பெண்.

''தாத்தாவைப் பார்த்தால் தாத்தாவுக்குச் சந்தோஷமாக

இருக்கும் மா, வாடா செல்லம்

நான் அழைச்சிண்டு போறேன் என்று மூன்று குழந்தைகளையும்

அழைத்துக் கொண்டு அண்ணனின் அறைக்குள்

நுழைந்தாள். இரண்டு பேரன்களையும் பார்த்து ஒரு கையை மட்டும்
நீட்டினார். அண்ணா.
முகம் முழுக்கப் புன்னகை. அவர்களும் அச்சமில்லாமல் பக்கத்தில்
சென்று தங்களை அறிமுகம் செய்து கொண்டார்கள்.

கதவு பக்கத்தில் நிற்கும் தன் பேத்தியைப் பார்த்துத்

தலை அசைத்து அழைத்தார். மெதுவாக

உள்ளே வந்த பட்டுவின் முகத்தில் கலவரம்.

தாத்தா நீ வெளில முன்ன மாதிரி வரமாட்டியா, என்னைக்

கோவிலுக்கு அழைச்சுண்டு போமாட்டியா'

என்று கேட்டாள்.

அவர் வாயத் திறந்து பேசுவத்ற்குள்,அவளுடைய

புது சிநேகிதர்கள், தாத்தாவின்

உடல் நிலையின் பொதுவான அசௌகரியத்தைச் சொல்லி

அவளைச் சமாதானப் படுத்தினார்கள்.

இப்பொழுது தாத்தாவின் அருகே வந்து குட்டி பட்டு'' தாத்தா

உன்னை நான் பாத்துக்கறேன்.

பயப்படாதே உனக்கு கைகாலெல்லாம் சரியாகி விடும்'' என்று

பெரிய

மனுஷியாகிப் பேசுவதைக் கேட்டது,ஸ்ரீனிவாசன் சற்றே

உணர்ச்சி வசப்பட.

பாமா கண்காட்டினாள்,புரிந்து கொண்ட

மாப்பிள்ளை ஸ்ரீராமும் ,கண்ணனும்

மாமா நாங்கள் சாப்பிட்டுவிட்டு வருகிறோம்.

உங்களோடு செஸ் விளையாடி

ரொம்ப வருஷமாச்சு''

என்று குழந்தைகளோடு வெளியேறினார்கள்.

கட்டிலின் இரு புறமும் ராதையும், பாமாவும் மெல்லிய குரலில்

பழங்கதைகளைப் பேச ஆரம்பித்தார்கள். அந்த இதமான தொனியில்,

தங்கையின் கைகளைத் தன் கையில் பிடித்தவாறே கண் அயந்தார் ஸ்ரீநிவாசன்.பேச்சை நிறுத்திய இருவரும் கண்மூடி தங்களைச் சுற்றியுள்ள

தெய்வங்களின் படங்களில் மனதை லயிக்க விட்டு

முழுமனதுடன் பிரார்த்தனை செய்தார்கள்.

ஒரு அரைமணி நேரம் அப்படியே இருந்துவிட்டு,

சம்பத்தை அருகில் இருக்கச் சொல்லிவிட்டு இருவரும் வெளியே வந்தனர்.இப்போ சொல் உனக்கும் பிள்ளைகளுக்கும் என்ன பிரச்சினை.

அப்பா இவ்வளவு சீரியசான நிலைமையில் இருக்கும்போது

அவர்களுக்கு வெளியே போக மனம் வந்ததா.

அவர்கள் துணைக்கு இருந்தால் அவருக்கு இன்னும்

தைரியம் வரும் இல்லையா

என்று படபடத்தாள் ராதா.

அப்படி என்ன அண்ணாக்கு வயசாகி விட்டது. அறுபத்தைந்து தானே.
என்றவளை அயர்ச்சியுடன் பார்த்தாள்  பாமா .

Friday, July 16, 2010

தொடரும்...பாகம் 4

பதட்டத்தோடு தன்னைப் பார்க்கும் தன் நாத்தனாரை ,அணைத்துக் கொண்டு பாமா,


கவலைப் படாதடா. இத்தனை சுறுசுறுப்பா இருக்கிற அண்ணா, சீக்கிரம் எழுந்து நடப்பார்மா.

சைல்ட் ஜீஸஸ்ல தான் டெஸ்ட் எல்லாம் எடுத்தது.

ஒரு சின்ன ப்ள்ட் க்ளாட் தான். உடனே பார்த்ததால் அவசர சிகித்சை செய்து காப்பாற்றிவிட்டார்கள்.

இன்னும் கொஞ்ச நாளுக்குக் கண்ணும் கருத்துமாப் பார்த்துக்கணும். அவ்வளவுதான்.சிரிச்ச முகத்தோட வா,என்றபடி ராதையையும் கோவிந்தனையும் மட்டும் அழைத்துக் கொண்டு

வரவேற்பரை பக்கத்தில் இருக்கும் படுக்கை அறைக்கு அழைத்துக் கொண்டு போனாள் பாமா.

ஏன் நீ முன்னாலியே சொல்லலை பாமா என்று வருத்தத்தோடு கேட்டாள் ராதாஅ. சொன்னால் நீ மட்டும் வந்து

உதவிக்கு என்ற பிரமேயத்தில் ,உழைத்துக் கொட்டுவாய்.அவருக்கோ யார் என்ன செய்தாலும் தன் இயலாமையால் கோபம் வருகிறது. அதுவும் உன்மேல் உயிரையே வைத்திருப்பவர்.

தங்கையிடமே சார்ந்திருப்பது அறவோடு பிடிக்காது.

அதனால் ஒருவாரம் கழித்து வரச் சொல்லி உனக்கு மெயில் அனுப்பினேன்.

என்றாள், பாமா.எதையொ எதிர்பார்த்து கண்களில் தளும்பி விழக் காத்திருக்கும் கண்ணீரோட அந்த விசாலமான,தோட்டத்தைப் பார்த்து அமைந்திருந்த அறைக்குள் நுழைந்தாள் ராதா.

அங்கே அதே கம்பீரத்தோடு வெள்ளை வேஷ்டியும் வெள்ளை கதர் ஜிப்பாவுமாக அண்ணா, கட்டிலில்,

பளிச்சென்று சாய்ந்து உட்கார்ந்திருக்கும் அண்ணவைப் பார்த்து,ஒரு பக்கம் நிம்மதியும்,மறுபக்கம் பாசமும் போட்டி போடஎன்ன அண்ணா, உன்னைத்தான் முதலில் ஸ்டேஷனில் தேடினேன். நீ என்னடா என்றால் சாவகாசமாக

இங்க இருக்க, என்றபடி அண்ணாவின் தோள்களை மெலிதாக அணைத்தபடி கேட்டாள்.அவர், ஸ்ரீநிவாசன்,சிரிக்க முடியாமல் சிரித்தார்.அப்போதுதான்,ராதா அந்த முகத்தில்

ஒருபக்கம் பாதிக்கப் பட்டு இருப்பதையும் பார்த்தாள்.

உலகத்திலியே தன் அண்ணா தான் நிறைந்த அழகன் என்று நினைப்பவள் ராதா.

அவருக்கு இப்படியா என்று மனம் பொங்கியதும்,உடல் தளர்ந்துவிட்டது.ஒரு நிமிஷம் அண்ணா, கைகளைக் கழுவிவிட்டுத்தான் நோயாளியைப் பார்க்கவேண்டும் என்பதையே மறந்துவிட்டேன் 'என்றவாறு அந்த அறையிலிருக்கும் அட்டாச்டு பாத்ரூமிற்குள் போய்க் கதவைத் தாளிட்டுக் கொண்டாள்.

முகத்தில் தண்ணீரை வாரி அடித்து,தன்னை நிலைப் படுத்திக் கொண்டு

அந்த அறையில் இருக்கும் துவாலையை எடுக்க வந்த போதுதான்

பிடிப்புக்காகச் சுற்றிப் போடப் பட்டிருக்கும் கம்பிகளையும் பார்த்தாள்.

பாமாவின் முன்னேற்பாடுகளை மனதில் மெச்சியபடி

தெளிந்த மனத்தோடு வெளியே வந்த ராதா,மீண்டும் அண்ணன் அருகில் உட்கார்ந்து

கைகளைத் தடவிக் கொடுத்தாள்.

கைநுனியின் அருகில் இருந்த பஸ்ஸரை அழுத்தியதும்,

அவரைப் பார்த்துக் கொள்ளும் ஃபிசியோதெரபிஸ்டும், அட்டெண்டர் சம்பத்தும் வந்தார்கள்.சைகையினால் தன்னை அங்கிருந்த சக்கர நாற்காலிக்கு மாற்றச் சொன்னார்.

செயல்படும் இடது கையால் ராதாவையும் கோவிந்தனையும் அருகே உட்கார வைத்து,

சம்பத்திடம் ஏதொ சொல்ல,அதை அவர் புரிந்து கொண்டு,''அண்ணா தனக்கு வந்திருப்பது பெரிய தொல்லை என்றாலும்

ஒரு வாரத்தில் தன்னைச் சரிசெய்து கொள்ளமுடியும். கவலை வேண்டாம். உங்கள் சந்தோஷமே எனக்கு மருந்து என்று விளக்கினார்.

குழந்தைகளிடமும் சரியாக எடுத்துச் சொல்லுங்கள்.அவர்கள் என்னைப் பார்த்துப் பயப்பட வேண்டாம் உள்ளெ வரப் போக இருக்கலாம்.என்று சொல்லிவிட்டு முகத்தில் கேள்விக் குறியோடு ராதாவைப் பார்த்தார்.அண்ணாவின் அசராத நம்பிக்கை கண்டு ராதாவுக்கும் பலம் வந்தது.

''இதோ அவர்களை அழைக்கிறேன் ''என்று வெளியே சென்றாள்.

எல்லோரும் வாழ வேண்டும்.
Posted by Picasa