Blog Archive

Tuesday, April 29, 2008

293,பயணமா ..மீண்டுமா...


உருண்டோடும் நாளில்,கரைந்தோடும் வாழ்வில் ஒளி வேண்டுமா? என்று பத்மினி கேட்பார் ஒரு படத்தில். பட்டி,விக்கிரமாதித்யன் கதைகளில் காடாறு மாசம் நாடாறு மாசம்னு படிப்பாவைகள்,கதைகள்,வேதாளம்னு கதை போகும். சம்சாரம் ஒரு சாகரம்னு தெரியும்.
நம்ம சம்சாரம் எல்லாம் சாகரத்தைத் தாண்டி இருக்கிறதுனால் ஒவ்வொரு சாகரத்தையும் தாண்டிப் போய்த்தான் சம்சாரத்தைப் பார்க்கவேண்டியிருக்கிறது.

எங்க சாகரத்தில லேட்டஸ்ட் ஆகக் குடியேறினவர் ஒருவர் அரபிக்கடலுக்கு அப்பால இருக்கிறார்:)

அவரைப் பார்க்கவும் கொஞ்ச நாட்கள் கொஞ்சவும் ,
சென்னையிலிருந்து கிளம்புவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.


இப்பத்தான் திரும்பி வந்தோம். என்ன, ஒரு எட்டு மாதம் ஆகிறது.
மறுபடி வீட்டுக்காவல்,மின்சார,தொலைபேசி கட்டண ஏற்பாடு என்று ஒரு சுத்து போக வேண்டும். ஏன் உங்களுக்கு இந்த ஈசிஎஸ் இதைப் பற்றித் தெரியாதான்னு நீங்க கேக்கலாம்.
இன்னும் அவ்வளவு முன்னேறவில்லை நாங்க.:)


உண்மையான ரிடையர்டு வாழ்க்கை நடத்துவது நான். சுறுசுறுப்புக்கு இன்னோரு பெயர் சிங்கம். ஒரு இடத்தில உட்காருவேனா என்பது போல் பார்வை.

'சும்மா இரு'ன்னு யாரோ எப்பவோ அதட்டுப் போட்டதில் உட்கார்ந்தவள் தான். இப்ப எல்லாம் நகருவதற்கு நாலாயிரம் கேட்கிறேன்.

இதெல்லாம் சரி வருமா. இயங்கினாத்ததானே உலகம்.
நானென்ன தக்ஷிணா மூர்த்தியா.

கண்ணை மூடித் தியானம் செய்துகொண்டால் எல்லாம் நடந்துவிடுமா.
அவர் சங்கல்பம் அவருக்கு எல்லாம் ஓடும்,ஆடும்.:)

நமக்கு நாமதான் ஓடணும்,
வேலை செய்யணும்.இப்பட்சியாகத்தானே நாம் சும்மா இருப்பது,கணினில ,இணையத்தில,வலைப் பதிவில
மொக்கை போடுவது,
பிடிக்காதவர்கள் செய்த ஏற்பாட்டினால் மீண்டும் புறப்படுகிறது க்ராண்ட்பேரன்ட்ஸ் எக்ஸ்பிரஸ்.:)


எல்லாம் சந்தோஷம்தான். ஆனா இந்த வலைகள் பக்கம் வர முடியுமா என்றுதான் தெரியவில்லை.
நமக்கோ இது புதிதாகத் திருமணம் செய்த தம்பதிகள் மாதிரிக் காலங்கார்த்தாலேனு ஆவர்த்தனம் ஆரம்பித்தால்,குளியல், உணவு,
குட்டித்தூக்கம், வங்கி,கோவில் இத்யாதிகளுக்கு நடுவில் யார் என்ன எழுதி இருக்கிறார்கள் என்று படிக்காவிட்டால், பதில் போடாவிட்டால்.......
என்னவோ சாப்பிடாவிட்டால் யாருக்கோ கைகாலெல்லாம் பறக்குமாமே:)
அப்படி ஆகிப் போகிறது.!!

ஏதோ தமிழ்மணத்தில சேர்ந்து இரண்டு வருடங்களுக்கு மேலேயும் ஆகிவிட்டது.
தத்தித் தத்தி 300 பதிவுகளாவது போட்டு விடலாம், அப்புறம் மீண்டும்
ஆட்டம் ஆரம்பிக்கலாம்னு பார்த்தால், நடுவில உனக்காச்சு எனக்காச்சுனு பேத்தி பிடித்து இழுக்கிறார்.

நாம் நம் தனித்துவத்தை எப்பவும் விடக்கூடாது இல்லையா.
மீண்டும் பார்க்கலாம்.
Posted by Picasa

Sunday, April 27, 2008

டீச்சருக்கான பதிவு(மாணவர்கள் கவனிக்க)

இது கேள்வி கேட்கும் மாணவன் படம் இது பலவகைகளில் படிப்புச் சொல்லித்தரும் தாத்தா பாட்டிகள்இது உண்மையான டீச்சர்
இதுதான் சந்தோஷமாக டீச்சர் இருக்கும் இடம்


இதனால் சகலருக்கும் அறிவிக்கப் படுவது. இன்று எனக்கும் டீச்சர் பட்டம் கொடுக்கப் பட்டது.


இல்லப்பா அதெக்கெல்லாம் மரியாதைப் பட்டவங்க ஏற்கனவே


வலைலே படு வேக நீச்சல் போட்டு எட்டாத சிகரங்களை எல்லாம்


எட்டிக்கிட்டு இருக்காங்கனு சொன்னாலும் இந்த மனுஷன் கேக்கிறதாத் தெரியலை:)
வேற யார்ர்?சதங்கா தான் இந்த மாதிரி செய்யாறார். சரிப்பாப் போனாப்போறதுனு பார்த்தால் அவர் பதிவுல போய் ஒரு உப்புச் சப்பாணி டீச்சரா நாம இருக்கலாம்னு சம்மதம் சொல்லிட்டுத் திரும்பறதுக்குள்ள சேதுக்கரசியையும் டீச்சர்னு கூப்பிட்டு இருக்காரு.
இங்க பாருங்கhttp://vazhakkampol.blogspot.com/2008/04/blog-post.html :)
ஆகக்கூடி நமக்கு பட்டம் கொடுத்தவரை வாழ்த்தறதுதான் நல்ல வழக்கம். எப்படியோ பட்டப் படிப்பு கூட முடிக்காத எனக்கு டீச்சர்னு மரியாதை கொடுத்த சதங்கா வாழ்க.
சதங்கா தப்பா எடுத்துக்க மாட்டார்னு நினைக்கிறேன்.
சும்மா தமாசுக்குத்தான்:)


:))

Wednesday, April 23, 2008

290,எங்க புது வாகனம் வாகனார்

வாகனார் வந்ததுமே போட்டு இருக்க வேண்டிய பதிவும்.

இவர் வெள்ளையும் சாம்பலும் கலந்த வர்ணத்திலிருக்கிறார்.

ரேடியோ கூட இருக்கிறது:)


சிங்கத்துக்குச் சத்தமாப் பாட்டு வச்சா பிடிக்காது.

எனக்கோ இசை என்னை மூழ்கவைக்கவேண்டும் என்று ஆசை.

அதனால் நடுவாப்பில சத்தம் வச்சுக்கிறது.முன்னால நம்ம ஃபியட்(அது விழுப்ப்ரத்தில கல்யாண அழைப்பு வண்டியாப் போயிருக்காம்.)

ஓட்ட எந்த ஓட்டியும் வரமாட்டாங்க.

எங்க நிக்கும். எங்க தண்ணீர் கேட்கும்னு எங்க ரெண்டு பேருக்குத் தான்

தெரியும்.


ஒரு தடவை பெரியவனை விமான நிலையத்திலிருந்து அழைத்து வரும்போது, புதுசாப் பாலம் கட்டுகிற இடத்தில சட்டுனு நின்றுவிட்டது. அதற்குப் பிறகு ஒரு கால் டாக்ஸி பிடித்து வந்தோம்.

ரிப்பேரான பிறகு,

இரண்டு நாட்கள் கழித்து வந்த வண்டியில் ஏற இருவரும் மறுத்துவிட்டார்கள். உங்க பஞ்சகல்யாணி உங்களுக்குத்தான் ஓடும்னு ஒரே சிரிப்பு.


ஆனா சிங்கம் பக்கத்தில டிரைவ் செய்தா யாரும் அவரை நம்பி வண்டில வரலாம்.

ஒருதடவை அப்படித்தான் இங்கிருந்து ஒரு மஷ்டாங் என்கிற கறுப்புக் கலர்

அமெரிக்கன் வண்டியைத் திருச்சியில் கொண்டுவந்து விடச்சொல்லி இவரோட அத்தை மருமகன் கேட்டுக்கொள்ள

அது ஒரு வார இறுதியாக இருந்ததால்,

நாங்க எல்லோரும் கூட வருவதாக் அடம் செய்யவும்,

பின் இருக்கைகளில் இந்த மூணு பசங்களையும் தலையணை வசதிகளோடு பார்க் செய்து விட்டு ஒரு சனிக்கிழமை மாலை கிளம்பினோம்.

அபோதெல்லாம் இப்போதைய வசதிகள் கொண்ட சாலைகள் இல்லை, பயம் தரும் பெரிய லாரிகள் கிடையாது.

வேகமாக விரட்டி வரும் திருவள்ளுவர்கள்(மன்னிக்கணும் ஆசானே) கிடையாது.

அதனால் படு வேகமாகக் கிளம்பினோம்.

விக்கிரவாண்டி வருவதற்குள் குழந்தைகள் தூங்கியாச்சு.


நாங்அளும் நிலவை அனுபவித்தாறு போய்க்கொண்டிருந்தோம்.

நடுவில் வந்ததுப்பா ஒரு மோட்டார் சைக்கிள்.விளக்குப் பொருத்தாமல் வேகமாக வந்தவனை,

மோதிவிடாமல் சரேலென்று சாலையோரம் வண்டியை ஒடிக்க

அது இறனங்க்கியது ஒரு குட்டிப் பள்ளத்தில்.

பிள்ளைகள் அதிர்ச்சியில் விழித்துக் கொண்டு,என்ன்ன்ன்ன்னப்பா????னு சுதாரித்துக் கொண்டார்கள்.

நடுநிசினு சொல்கிற நேரம். இப்ப வண்டியை மேல எடுக்கணும். என் புஜபல பராக்கிரமம் மட்டும் போதாது.:)

இந்த மட்டும் விபத்து ஏற்படாமல் தப்பித்தோமேனு சுத்து முற்றும் பார்த்தால் கொஞ்சம் தள்ளி டீக்கடை ஒன்று தெரிந்தது.


டீயும் பொறையும் சாப்பிடறியானு கேட்டார். ஆஹா கட்டாயம், சாப்பிடலாமே என்று சம்மதித்து நான் வண்டியில் காவல் இருக்க,அவர் மட்டும் அந்தக் கடைக்குப் போனார்.
ஏம்மா இந்த வண்டில அஞ்சு மணி நேரத்திக்ல திருச்சிக்குப் போலாமுன்னு அப்பா சொன்னாரேனு பெரியவன் முணுமுணுக்கிறான்.
அவனைவிட இரண்டு வயசு சின்னவள்,எங்க பெண் இல்லடா அண்ணா,

அப்பா நமக்கெல்லாம் மூன்லைட் டின்னர் கொடுக்கிறார் என்று அழகாகச் சொல்கிறது.

அதையும் விடச் சின்னவருக்கோ,(3 வயசு) தூக்கக் கலக்கத்திலியே ''நாந்தான்

அப்பவே சொன்னேனே லின்கன் காந்டினெந்டல் வாங்கலாம்னு' அப்பாதான் கேட்கலைனு மீண்டும் தூங்கி விட்டான்.


அவனோட டஜன் காரில அதுதான் ரொம்ப நீளமான கார்:)

நான் காருக்கு வெளில நின்று கொண்டு அவர் வேற யாரையாவது கூப்பிட்டு வருவாரா,திருச்சிக்கு எப்போ போவொம்னு யோசித்துக்கொண்டிருக்க,அவரும் டீக்கடைப் பையன்,பொறை,டீ சகிதம் வந்து விட்டார்.

''இன்னா கார் சார் இது. இவ்வளவு குள்ளமா இருக்கு'' என்று வியந்தான், கடைப்பையன்.

நம்ம ஊருக்கு லாயக்கில்லை.இறங்கிடுச்சே:(

என்று வருத்தப் பட்டவனிடம் விவரத்தை சொல்லி,

வண்டிச் சக்கரத்தை மேல எடுக்கணும்னு விளக்கினார்.

ஆ,கொஞ்சம்தான் இறங்கி இருக்கு. செய்துடலாம்னு ஓடிப்போய் இன்னும் இருவரைக் கூப்பிட்டு வந்தான்.
குழந்தைகளைக் கீழே இறங்கவைத்து, காரோட மெத் மெத் காலடியை போட்டு உட்கார வைத்து எல்லோரும் 'மஷ்டாங்கை' வழிக்குக் கொண்டுவர முனைந்தோம்.
கடப்பாறை இல்லாமல் வெளியிலேயெ கிளம்பாத இவரது பழக்கத்தை
அன்று மிக மெச்சிக்கொண்டேன். எதுக்கும் உபயோகப்படும் என்று டிரன்க்கில் போட்டு எடுத்து வருவார்.


அந்தக் கடப்பாறையால் இவர் நெம்ப நாங்கள் அனைவரும் 'ஏய் ஐலசா'னு சொல்லித் தம் பிடித்து வண்டியைத்தூக்க அதுவும் வெளியே ரோட்டுக்கு வர

,,சூரியன் உதயமாவதற்குத் தயாராகிவிட்டான்.


முதலில் பார்த்தது ஏதாவது கீறல் விழுந்திருக்கான்னு தான் பார்த்தோம்.

நல்ல வேளை ஒன்றும் இல்லை.

பசங்க மீண்டும் உற்சாகமாக ஏறிக்கொள்ள உதவி செய்தவர்களுக்கான

மரியாதைச் செய்துவிட்டு, பெரம்பலூர் அய்யர் உணவு விடுதியில்

பெஞ்சில் உட்கார்ந்து காலைப் பலகாரம்(பல் தேய்த்துவிட்டுத்தான்)

சுவையாக முடித்துக் கொண்டு கண்டோன்மெந்ட் வீட்டுக்கு ஒரு 8 மணி வாக்கில் வந்தோம்.

மதியமே ஒரு ஸ்டேட் ட்ரான்ஸ்போர்ட் பஸ்ஸில் திரும்பினபோது குழந்தைகளுக்கு உற்சாகம் குறைந்து விட்டது.
முன்னாலியே ஏறிவிட்டதால் அவர்களை வண்டி ஓட்டுபவருக்கு அருகில் இருக்கும் இருக்கைகளிலேயெ உட்கார வைத்ததும்,ஃப்ரண்ட் சீட் கிடைத்த

சந்தோஷத்தில் ,பேசிப் பாடிக்கொண்டு சென்னை சைதாப்பேட்டை வந்து சேர்ந்தோம்.


வாகனாரைப் பற்றிச் சொல்ல வந்து வேறெங்கியோ சுத்தி வீட்டுக்கு வந்துட்டேன்:)


291, நூறும் ஒண்ணும்
Posted by Picasa இந்தப் பாட்டிக்கு நூறு வயசாச்சு.
நம்ப முடியுதா:)
அவங்களோட பேரன்தான் இவங்களை நல்லா வச்சிருக்காரு.
பாட்டிக்குப் பொண்ணு வயித்துப் பேரன்.                                                                                     அவரோட பொண்டாட்டி நம்ம பொண்ணுக்கு நல்ல சினேகிதி.
சாலினு பேரு.
க்ரானி,க்ரானினு கூப்பிடறதைப் பார்த்துட்டு நான் அசந்து போனேன்.அத்தனை அன்பு இந்தப் பாட்டிகிட்ட அவங்களுக்கு.
இந்த வயசுக்கே உரித்தான சில முக்கிய பிரச்சினைகள் இருந்தும், இந்த சாலி(Sally) ரொம்பப் பொறுமை சாலியா(!)ப் பார்த்துக்கறாங்க.
பாட்டிக்கு நல்ல க்ரொஷா பின்ன வருமாம். நான் பொண்ணு வீட்டில இருந்த சமயம் ஒரு நாள் இவங்களை ஒரு மாலைப் பொழுதுக்கு வரச்சொல்லி இருந்தோம்.
பாட்டிக்கு வாக்கர் கூடத் தேவையா இருக்கவில்லை. பேத்தி கையை இறுக்கப் பிடித்து மெதுவா ஏறி வீட்டுக்குள்ள வந்து இருக்கையில உட்கார்ந்து,எங்க குட்டிப் பேரனோட விளையாடினாங்க.
அவனுக்குத் தான் பாட்டியோட எலும்பு உறுத்தவே ரொம்ப நேரம் அவங்களோட இருக்கலை.
Sally, பொறுமையா பாட்டிக்கு என் பொட்டு, என் உடை எல்லாத்தையும் விளக்கிச் சொல்ல அவங்க கேட்டுக்கிட்டு கிராஸ் கேள்வி வேற கேட்க ஆரம்பிச்சாங்க.
நீ உன் பாட்டியைப் பார்த்துக் கொண்டாயா. உன் அம்மாவுக்கு சேவை செய்தியா.இப்படி....
நானும் என் பழைய வரலாறிலிருந்து கொஞ்சம் சொன்னேன்.
அவ்வளவா இம்ப்ரஸ் ஆகலை பாட்டி.
ஆனா சமோசாவையும், பால்கோவாவையும் ரசிச்சு சாப்பிட்டாங்க.
பாட்டிக்கு இப்பத்தான் ஒரு இடுப்பு எலும்பு முறிவு சிகிச்சை முடிஞ்சு இருக்கு. இல்லாட்டி மாடிக்கும் போய்ப் பார்த்துட்டு வருவாங்கனு சாலி சொன்னாங்க.
அங்க இருந்த ஒரு இரண்டு மணி நேரத்தில் பாட்டி எழுந்து கீபொர்ட் வாசிச்சு, குஷன் கவரெல்லாம் சுத்தமா முடி போட்டு வச்சு, கீழ சிதறிக் கிடைந்த விளையாட்டுப் பொருட்களை அதோட பொட்டில போட்டு,
(ஹய்யோ) மீண்டும் சோஃபாவில வந்து உட்கார்ந்து கொண்டா.ர்......                                                                                                                                                                                                                                                                       
சற்றே செனீலிடி வந்து இருக்கிறது என்பது எனக்குப் பிறகே உரைத்தது.
அடுத்த வீட்டு அல்(ஆதி)சேஷன் குரைக்க ஆரம்பித்ததும்,
ஓ டாகி டாகி, எனக்கு இப்பவே டாகி பார்க்கணும்.
'Sally you are a bad girl. you will not let me play''
என்று விசும்ப ஆரம்பித்துவிட்டார்.
எனக்கு மனமே என்னவோ ஆகிவிட்டது.
ஆனால் இதை அந்தப் பெண் ரொம்ப அழகா சமாளிச்சா.
உடனே ஒரு நாய் பொம்மையைக் கையில் கொடுத்து நீங்க இதோட விளையாடுங்க. நான் இதோ வரேன். நாம் கோவிலுக்குப் போகலாம். உங்க தோழி அங்க காத்து இருப்பாங்கனு சொன்னதும் பாட்டிக்கு மீண்டும் உற்சாகம் வந்து விட்டது.
சாலி நீ ரொம்ப நல்ல பொண்ணு என்று சர்ட்டிஃபிகேட்டும் கொடுத்து விட்டார்.
ம்ம். என்னவெல்லாமோ அயல் நாடு பத்திச் சொல்றாங்களே.
இப்படியும் ஒரு பேரன் பொண்டாட்டி பாட்டியைப் பார்த்துக்கிறாளே என்று சந்தோஷப்பட்டேன்.
இன்னும் பாட்டிக்குத் தன் சொந்த ஊரானமெம்ஃபிஸ் போகத்ட்தான் ஆசை. தனியாக இருந்தால் அடிக்கடி கீழே விழுந்து விடுவதால்
தாங்கள் தங்களுடைய வீட்டுக்கு அழைத்து வந்ததாக சாலி சொன்னார்.
பாட்டிக்கு ஒரே பெண் தான் அவரும் நோய் வந்து இறந்து விட்டார்.
அந்த பெண்ணின் பையந்தான் சாம்,சாலியின் கணவன்.
பாட்டிக்குப் பிறகு ஒரு எஸ்டேட் (20 ஏக்கர்)இவர்களுக்குக் கிடைக்கும் என்று என் பெண் அவர்கள் கிளம்பியதும் சொன்னாள்.:)

Tuesday, April 22, 2008

289,பாப்பா வழி தனி வழி.இங்க படங்களில் இருக்கும் பாப்பா,
சும்மா ஒரு யானை, டெடி,பார்பி னு விளையாடுவதில் இஷ்டம் கிடையாது.
எல்லாருடைய செருப்புகளையும் போட்டுக்கொள்ளும்.
கைப்பைகள் ரொம்பப் பிடிக்கும்.
உள்ள இருக்கிற கைப்பேசி, அழகு சாதனங்கள், வீட்டு சாவி, க்ரெடிட் கார்ட் எல்லாத்தையும் வெளில எடுத்து பிரித்து, தட்டி, கொட்டி மறுபடியும் உள்ள போட்டு
கொண்டாட்டம்தான்.
அதைத்தவிர எடை பார்க்கும் மஷின்தான் அதற்கு சக்கர வண்டி:)
எதையாவது கையில இருந்து வாங்கணும்னா வேற ஒண்ணைக்
கொடுத்துவிட்டுத்தான் பண்ட மாற்று செய்ய முடியும்.
இப்ப இன்னும் ஒரு வயசு கூடி விட்டாலும்,
இன்னும் ஷூ மோகம் போகலை.
பளையல்(வளையல்), செயின் எல்லாம் , பாட்டி கழுத்தில் இருப்பது ரொம்பப் பிடிக்கும்.
கொடுத்துடு பாட்டி என்று கேட்டு வாங்கிப் போட்டு நடக்கும் அழகே தனி!!
எங்க அப்பா வழிப்பாட்டியைப் பார்ப்பது போல ஒரு தோற்றம் கொடுக்கும்.

Wednesday, April 16, 2008

ஒரு காதல் 1928இல்

இந்த கோபுரம் சிகாகோ டௌன் டவுன்ல இருக்கிற ஒரு கட்டிடம்இதெல்லாம் திரு.சுந்தரராஜன் பேத்தி இருக்கும் ஊருக்கு நாங்க போன போது எடுத்த பல படங்களில் ஒன்று.
Posted by Picasaஇந்தப் பூங்கொத்து போன வருடம் எனக்கு அனுப்பப்பட்டடது:)
வாடவே இல்லை.:)


முந்திய பதிவில் எங்க மாமனாரின் அறுபதாம் கல்யாணம் பற்றிக் கொஞ்சம் எழுதி இருந்தேன்.


அப்பொழுது சாப்பாட்டு வேளையில் மாமாவின் தோழர்கள் அவரையும் அம்மாவையும் பரிகாசம் செய்ய ஆரம்பித்தார்கள்.
முதல் கேள்வி என்னிடம் வந்தது. ரேவதி, உனக்குத் தெரியுமா
உங்க மாமனாரும் மாமியாரும் காதலித்துக் கல்யாணம் செய்தவர்கள் என்று?/
என்றதும் எனக்கு ஒரே அதிசயம்.
இல்லையே தெரியாதெ, அம்மா நிஜமாவா என்று அம்மாகிட்டக் கேட்கத் தயக்கம்.
நண்பரோ விடுவதாயில்லை.
உங்க மாமியார் நடுத்தெரு(மைலாப்பூர்)விலிருந்து லேடி சிவஸ்வாமி பள்ளிக்கு வரும்போது எஸ்கார்ட் யாரு தெரியுமா, உங்க மாமனார் தான்.
எப்படி கனெக்ஷன் ஒண்ணும் புரியலையே, என்று நான் சொன்னதும். அம்மாவும்,மாமாவின் தங்கையும் ஒரே வகுப்பில் படித்தார்களாம்.
தங்கை மாட்டுவண்டியில் முன்னால் போக மாமா சைக்கிளில் வந்து பள்ளி வாயில் வரை வருவாராம்.
அப்போதுதான் கமலம்மாவைப் பார்த்திருக்கிறார்.
தன் சீதை இதுதான்னு அப்பவே தீர்மானம் செய்துவிட்டாராம்.
அம்மாவுக்கு அப்போது 13 வயது .மாமாவுக்கு 16..
மாமா பளுதூக்கும் வழக்கம் உண்டு.
அதற்கேற்ற உடலமைப்பு:)
அந்தக் கால ஜானி வேய்ஸ்முல்லர் என்ற நிச்சல் வீரர் போலத் தோற்றமளிப்பாராம்.
அந்தத் தோற்றத்திற்காகவே தனக்கு அப்பா, தனக்கு வைத்த குடுமியைக் கிராப்பாக மாற்றிக்கொண்டவர்!!
எல்லா விளையாட்டும் பள்ளியில் பிரமாதமாக விளையாடுவாராம்.
அந்த விளையாட்டுகள் நடை பெறும் நேரம் அத்தை, அம்மாவைப்
பி.எஸ் பள்ளிக்கு அழைத்துவந்து, தன் அண்ணாவைச் சுட்டிக் காட்டினாராம்.
அம்மாவும் பார்த்துவிட்டுப் போய் விட்டார்.
இந்த விஷயம் பெற்றோருக்குத் தெரிய வந்துவிட்டது:0)மாமாவின் பெரிய அண்ணவிற்குக் கல்யாணம் முடிந்திருந்த வேளை.
ஆஜிப்பாட்டிக்கும் ஆச்சா தாத்தாவுக்கும் இந்தக் கல்யாணத்தையும் நடத்த ஆசை வந்துவிட்டது.
பிள்ளைவீட்டாரோ பெரும் தனக்காரர்கள்.
பொண்ணு அப்பாவோ ஹைக்கோர்ட்டில் வக்கீல்.நிறைய சமூக சேவை செய்பவர்.மைலாப்பூரில்,டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியோடு சேர்ந்து பெண்களுக்கான அபய நிலையம் கட்டியவர்.மரியாதைக்குரிய குடடூஊஉம்பம் என்ராலும் இவர்களைப் போல வைரங்களில் பேச்சு நடத்துபவர்கள் இல்லை.
கைத்தறி புடவை,எளிமை வாழ்க்கை என்று இருப்பவர்கள்.
பையனோட அம்மாவும் அப்பாவும் பெண் வீட்டிற்கு வந்ததும் அவர் சொன்ன முதல் வார்த்தை, ராஜகோபாலாச்சார், நான் என் பெண்ணுக்கு வைரத்தில ஒண்ணும் செய்ய மாட்டேன்.
என் பெண் குணவதி, படிப்பை முடிக்கட்டும்.
அவள் குடித்தனத்திற்கு வேண்டிய மற்ற அத்தனை சீதனங்களையும் அனுப்பி விடுகிறேன் என்றாராம்.
பையனின் அப்பாவும் சளைக்காதவராய், பெண்ணுக்குத் தேவையான ஆபரணங்களைத் தாங்களே போடுவதாக அருமையாகச் சொன்னார். இருவரும் ஏற்கனவே சினேகிதர்கள். அதனால் லௌகீக விஷயங்களில் வம்பு வரவில்லை.
இதெல்லாம் நடந்து முடிந்த சில நாட்களில் மாமா சைக்கிள் பந்தயம் ஒன்றில் ,வேகமாக ஓட்டி கீழே விழுந்து இடது கையை முறித்துக்கொண்டு விட்டது.
உடனே பெண்ணின் பாட்டிக்குக் கவலை.
கமலா இருக்கிற அழகிற்கு ஒச்சத்தோட(குறை) மாப்பிள்ளை
எடுப்பார்களோ,கொடுப்பார்களோ என்று கேட்டதும், இதைக் கேட்டு மாமா
அவர்கள் வீட்டுக்கே எலும்புமுறிவு கட்டை அவிழ்த்த அன்றே போய், அந்தப் பாட்டியை நேரவே கேட்டாராம்.
என்ன மதுரைப் பாட்டி! உன் பேத்தியை நான் காப்பாத்த மாட்டேனு கவலையா என்று கேட்டராம்.
பாட்டிக்கு வெட்கம் வந்துவிட்டது, இத்தனை சுந்தரமான சுந்தரராஜனைப் பார்த்ததும்.
அங்கே இருந்த ஒரு ஆறடிக்கு இரண்டடி பென்ச், நல்ல தேக்கு மரத்தில்
செய்தது, அதைச் சுட்டிக்காட்டி அதை நான் தூக்கி காட்டட்டுமா என்று கேட்டு இருக்கிறார்.
கமலம்மாவுக்கோ பயம். தன் எதிர்காலக் கணவர் கையைப் பற்றி.
யாரும் வேண்டாம் என்று தடுப்பதற்குள்ளேயே அந்தப் பெரிய பெஞ்சைத்
தன் அடிபட்ட இடது கையால் தூக்கி விட்டாராம்.
அந்த பெஞ்ச் இன்னும் இங்கே இருக்கிறது:)
அதிர்ந்து போன பெண்வீட்டார், வந்த மாப்பிள்ளைக்கு திரட்டுப்பாலும் முறுக்கும் இலையில் இட்டு உபசாரம் செய்து அனுப்பினார்களாம்.
பிறகென்ன,
அழகான மரபீரோக்கள், கட்டில்கள், வெண்கல பொம்மைகள்,திருநெல்வேலியிலிருந்து வரவழைக்கப் பட்ட பாத்திரங்கள், தாமிர சொம்புகள் எல்லாம் வண்டிகளில் வந்து இறங்க,
சாஸ்திரி கடையில் வாங்கிய பட்டுப் புடைவைகள் சகிதம் திருமணம் பெண்வீட்டில் ஆனந்தமாக நடந்தேறியது.
மணநாள் ஃபெப்ரவரி 8, 1930
அந்தக் கால கேம்ப்ரிட்ஜ் மாணவி கமலா, கணவனைக் கைபிடித்ததும்,அதற்குப் பிறகு
சுண்டு மாமா லொயாலாவில் பிஏ பாஸ் செய்து சிம்ப்சனில் வேலைக்குச் சேர்ந்தார். இரண்டு இரண்டு வருட இடைவெளியில் ஐந்து குழந்தைகள் பிறந்தன.
அதன் பிறகு 24 வருடங்கள் கழித்து நான் இந்த வீட்டிற்கு வந்து சேர்ந்தேன்:)

அறுபதுக்கு அறுபது 1972


திரு சுந்தரராஜனுக்கு
ஐந்து குழந்தைகள். முதல் நாலும் பெண்ணாகப் பிறந்ததால் இராமேஸ்வரத்துக்குப் போய்ச் சேதுக்கரையில் பூஜை செய்து மகனும் பிறந்தான்.

அவர் மனைவி கமலம்மாவுக்குப் பொறுமையின் மறு அவதாரம்னு பேரு சொல்லுவாங்க.

பின்ன அடிக்கடி டூர் போகும் புருஷன், சதா நச்சு செய்யும் கூட்டுக் குடும்பம்,வளரும் குழந்தைகள். அவர்களுக்குத் தேவையான,உடை,படிப்பு

எல்லாவற்றுக்கும் மாமியாரையே சார்ந்து நிற்க வேண்டிய அவசியம்,

இதையெல்லாம் தாக்குப் பி்டிக்கக் கொஞ்சமாவது பூமா தேவி வேஷம் போட வேண்டுமே:)

இதைத் தவிர தோட்டம்,மாடுகள்.

நாலு மணிக்குக் காப்பி மெஷின் முகத்தில் முழித்து நாலு மச்சினர்கள் ஓரகத்திகள்,மாமனார்,மாமியார் இவர்களுக்குக் காப்பிப் பொடி அரைத்து,

எழுந்து வரும் கடைசிக் குட்டி ஓரகத்தியிடம் புழைக்கடைக் கதவு சாவியைக் கொடுத்துக் கோனாரிடம் பால் cans(5) கழுவச் சொல்லி, விளக்கும் விளக்கெண்ணை சகிதம் நின்று கறந்த பாலை உள்ளே கொண்டு வரச் சொல்லி...ஸ் அப்பா நினைத்தாலே பயமாக இருக்கிறது.!!

அப்போது ஆரம்பிக்கும் காப்பிக் கடை முடிய 8 மணி ஆகும்.

மாட்டு வண்டியில் (ஒற்றை மாடு பூட்டியது) 12வயதிலிருந்து 6 வயது வரை இருக்கும் (பெண் குழந்தைகளுக்கு மட்டுமே )பசங்களை ஏற்றிவிட்டு,

பாதி லேடி சிவஸ்வாமிக்கும் மீதி ரோசரி மெட்ரிக்கும் போகும்.

அதுவும் கடைசிப் பெண் பட்டுப் பாலாடை இல்லாமல் பள்ளிக்குப் போகாது.அதென்ன பட்டுப் பாலாடைனு கேட்டீர்களானால் அதற்கு ஒரு பெரிய கதை வரும். அது தன்னுடைய ஒரே ஒரு பட்டுப் பாவாடையைத் தான் அப்படிக் கேட்கும்.

அது தோய்த்துத் தோய்த்துக் கிழிந்த பின்னரே வேறு உடைக்கு மாறியதாக மாமியார் சொல்லுவார்:)

மற்ற மச்சினர்களின் பையன்கள் கல்லூரிக்குப் போகும்போது தன்பையனை அவன் விருப்பப்படிப் பள்ளிப் படிப்பு முடிந்ததும்,

மெகானிக்காக வேலை செய்ய மோட்டார் சுந்தரம் கம்பனிக்கு அனுப்பினார். அந்தப் பையனும் தன் வேலையில் சிறப்புப் பட்டம் வாங்கி,வெளிநாட்டுக்குப் போய் ஆட்டொமொபைல் என்ஜினீயர்னு பட்டமும் வாங்கி வந்தார்.

நாலே வருஷத்தில் அசிஸ்டண்ட் மேனஜர் பதவி.:)

காதலிக்க நேரமில்லை படத்தில் ரவிச்சந்திரன் போடுவாரே ஒரு வேஷம்!! அது:)

எல்லாப் பசங்களுக்கும் திருமணம் ஆகி, பேரன்கள் பேத்திகள்னு ஒரு பதினோரு செல்வங்கள் சேர்ந்தன.

''இப்பத்தான் பிஎஸ் ஹைஸ்கூலில் உன்னைப் பார்த்த மாதிரி இருக்கு, அதுக்குள்ள உனக்கு அறுபது ஆகிறதே மாமா'' என்று என் மாமியார் தன் கணவரிடம்,என் மாமனாரிடம்சொல்வதை நான் காதில் போட்டுக் கொண்டது 1972ஆம் வருஷம் புரட்டாசி மாதம்.

ஆமாம். இந்த வீட்டில் எல்லாம் வா போ. தான்.

எனக்குப் புழங்க முடியாத வார்த்தைகள்.பழகவில்லை.

அது வந்தது.இது போச்சு இந்த அஃறிணைப் பேச்சு மட்டும் சுலபமாகப் பிடித்துக் கொண்டது.

ஆகா அறுபதா!உடனே ஆஜிப் பாட்டியோடு எல்லோரும் கான்ஃபரன்ஸ்.

புரட்டாசி மூல நட்சத்திரத்தன்று தான், தன் பெண்டாட்டிக்குத் திருமாங்கல்யம் வாங்கிடத் தரமுடியும்,ஆனால் கட்டாயம் மணையில் உட்கார்ந்து மந்திரம் எல்லாம் சொல்ல நேரம் கிடையாது என்று தீர்மானமாகச் சுண்டு என்கிற சுந்தரராஜன் சொல்லிவிட்டார்.

ஒரே சத்தம் அந்தப் பெரிய வீட்டில் அன்று.

அதெப்படி சொல்லப் போச்சு இந்த மாதிரி? ஆயுஷ்ஹோமம் செய்ய வேண்டாமா.குழந்தைகளுக்கு நல்லதாச்சே? ம்ஹூம் எந்த அஸ்திரமும் பலிக்கவில்லை.

என் கமலா எனக்கு பலம் வேற ஒண்ணும் வேண்டாம் என்று விட்டார்.

கமலம்மாவும் பதிக்கேத்த பத்தீஇ. பாவம் மாமாவைக் கஷ்டப் படுத்த வேண்டாம். மத்தபடி ஜமாய்ச்சுடலாம் என்று தீர்மானம்.

ஒரு பட்டாளம் ஸ்ரீபார்த்தசாரதி கோவிலுக்குப் போய்

ஒரு தளிகைச் சர்க்கரைப் பொங்கலும் அரைத் தளிகை பிளியோதரையும்,கால் தளிகை (ஸ்பெஷல்) பொங்கலும் சொல்லி விட்டு,பெருமாளுக்கும் தாயாருக்கும் நிலமாலை ஏற்பாடு செய்துவிட்டு

வந்தது.

இன்னோரு கும்பல் புடைவைக் கடை (எல்லாம் நம்ம ராயப் பேட்டா நல்லிதான்)க்குப் படையெடுத்தத.

இன்னோரு கூட்டம் ஆசாரியைக் கூப்பிட்டு அவரோடு உட்கார்ந்து

நான்கு கிராம் தங்கக் காசுகள்(லக்ஷ்மி பொறித்தது) எல்லாப் பேரன்,பேத்திகளுக்கும் செய்யச் சொல்லிக் கேட்டுக் கொண்டது.

இத்தனை கூட்டம்னு எப்படிச் சொல்கிறேன்னு பார்க்கிறீர்களா. திரு.சுந்தரராஜனுக்கு மூன்று சகோதரகள் இரண்டு சகோதரிகள். அவர்கள் எல்லோருடைய புத்திரச் செல்வங்களும் இந்த முக்கியமான ஃபங்க்ஷனில்

படு உற்சாகமாகக் கலந்து கொண்டார்கள்.

எங்கள் பழைய வீட்டில் கலயாணக் கூடம் என்று ஒரு பெரிய

அறை இருக்கும். நான்கு உயரமான தூண்கள்.

அதற்கு நடுவில் பித்தளை சங்கிலிகளில் தொங்கும் அழகான ஆறடிக்கு ஒண்ணரையடி அகலத்துக்கு ஒரு ஊஞ்சல். ஆகா.என்னமா இருக்கும் அந்த வழ வழா ஊஞ்சல்.

பாட்டிக்கு மத்தியானத் தூக்கத்துக்கும்,எங்களுக்குச் சாயந்திர நேர அரட்டைக்கும்,

சில பெரியவர்களுக்குச் சாப்பாட்டு மேஜையாகவும் அது பயன்படும்.

அந்தத் தூண்களைச் சுற்றி மாவிலை கட்டி, பூச்சரம் தொங்கவிட்டு,

அம்மாவுக்க்கு கத்திரிப்பூ கலரில் இரட்டைப்பேட்டு ஒன்பது கஜம் புடவை, நல்ல கனமான சங்கிலியில் கோத்த திருமாங்கல்யாம்,

மாமாவுக்கு டில்லி சென்று முக்கியப்பட்டவர்களைப் பார்க்கும்போது தோதாகப் போட்டுக் கொள்ள ஒரு புஷ்கோட்(சஃபாரி மாதிரி)

ஆஜானுபாகுவாக 6'2'' மாமாவும்,பக்கத்தில் சிரித்த முகத்தோடு கொஞ்சமே குள்ளமாகக் கமலம்மாவும் அந்தக் கூடத்தில் மாலைகள் கூடப் போட்டுக் கொள்ளாமல் வெகு சந்தோஷமாக நின்ற காட்சி போன வாரம் என் நினைவில் நின்றது.

வழி நடத்தும்,காக்கும் பெரியவர்களுக்கு என் வணக்கங்கள்.
Tuesday, April 15, 2008

எனக்குக் காது சரியாகக் கேட்கிறது:)

இது நம் காது.
வலது காது.

ஒன்றும் இடாத வரையில் பிரச்சினையில்லை.
நாம் என்ன காதில் போடுபவர்களா?

காதில் போட்டுக்கறதே இல்லை என்பது தான் எல்லோருடைய கம்ப்ளைண்ட்.

வேணும்கறது மட்டும் காதில விழுமே!
காதை இந்தப் பக்கம் திருப்பேன் ஒண்ணு சொல்லணும்
இது வயசான பாட்டிகள் அடிக்கடி சொல்லும்
வார்த்தை.

ஏன் உனக்கு வயசாலயானு கேக்கக் கூடாது.

நான் இப்போ ஆறு வயது மோட்(mode)ல இருக்கிறேன்.

அப்போதெல்லாம் அம்மா நம் காதுகளைப் பார்த்துக் கொள்ளுவார்கள்.
எங்கள் மூன்று பேரையும்
உட்காரவைத்து , அது அநேகமாக இரவு வேளையாக இருக்கும்.
அப்பா இன்னும் வீட்டிற்கு வந்து இருக்க மாட்டார்,.

சாப்பாடு வேளை சரியாக 7 மணிக்கு.

அம்மா கையில் அந்த சிறு பாட்டிலை எடுத்ததும்
எங்களுக்கு உற்சாகம் பற்றிக்கொள்ளும்.
அம்மா இன்னிக்கு காதாம்மா?
என்று கேட்டுக்கொள்ளுவோம்.
ஆமாம் நேத்திக்கு நகம், இன்னிக்குக் காது என்று சின்னவன் ஒத்து ஊதுவான்.

எங்கள் ஆரோக்கியம், சுத்தம் இவைகளை அம்மா கவனிக்கும் அழகே தனி.

கையில் வைத்து இருந்த திரவம் ஹைட் ரஜன் பெராக்ஸைட் என்று நினைக்கிறேன்.

இன்னும் எனக்கு சரியாகத் தெரியாது.
நாகரீக நல்ல அம்மா எங்களுக்கெல்லாம்
வாய்த்தது எங்களுக்கு பாக்கியம்.

நாகரீகம் என்றால்அந்தவடிவத்துக்கு ஒன்பது கஜம்,சிறு புன்னகை
வாரிப் பின்னிய கூந்தல்.
சாதரண நூல் புடவை தான்.

ஓஹோ!!! சரி.
.காதுக்கு வருவோம்.
எங்களுக்கு ஆவல் தூண்டும் விதமாக
ஒரு சொட்டு திரவத்தை தரையில் அழுக்கு
இருக்கும் இடத்தில் விடுவார்கள். அங்கு அப்படிய்யெ அழுக்கு நுரைத்து வரும்.
ஏம்மா இப்போதானே சுத்தம் செய்தே நீ, என்று நாங்கள் கேட்டால்,
கண்ணுக்குத் தெரியாமல் எத்தனையோ இருக்கும்மா
என்று சொல்லி,
ஒவ்வொருவருக்கும் காதைச் சுத்தம்
செய்து முடிப்பதற்கும் அப்பா வருவதற்கும் சரியாக இருக்கும்.
இதில் எங்களுக்கு ரொம்பப் பிடித்த விஷயம்
அம்மா மடியில் படுத்துக் கொண்டு

சுகமாகக் காது சுத்தம் செய்து கொள்வது.அதெல்லாம் போய் இப்போ புதிதாக

அதே காதுக்கு வலி வந்தால் ,

என்ன செய்வது?முதலில் காட்டன் பட்ஸ்.
அது வலியை அதிகப் படுத்தும்.

எப்படியென்றால் காது குடைவது சுகம்.
வலியோ அதிகம்.

அடுத்தது தேங்காய் எண்ணை வைத்தியம்
1,எண்ணையைக் காய்ச்சி, அதில் உள்ளிப்பூண்டைப்

பொரித்து,
மிதமான சூட்டில் காதில் விட்டுக் கொள்வது.
பூண்டு பிடிக்காதவர்கள்
கற்பூர வில்லையைப் போட்டு
மணக்க மணக்கக் காதில் விட்டுக் கொள்ளலாம்.

அனேகமாக இந்த வாசனையெல்லாம்

பசியைக் கிளப்பி விடும்.
அதனாலேயெ காது வலி போகுமோ?
போகாது.
அது காத்துக் கொண்டு இருக்கும்.


இவள் ஏதாவது வாயிலெ போட்டு மெல்லுவாள்.
அப்போ நமக்கு வேலை என்று.
அதே போல வாயிலே சாப்பாடு போட்டதும் காது
வலிக்கும் ,
காது முறைக்கும்.
நான் இங்கே கஷ்டப்படறேன், நீ நாக்குதொண்டையைக் கவனிக்கிறயே என்று வலி கூட்டும்.

ஆகக்கூடி '' வெல் கனெக்டட்னு " சொல்லணுமுன்னா
இந்தக் காது மூக்குத் தொண்டை தான்.
உங்களுக்குத் தெரிஞ்ச விஷயம் தான்.

ஜலதோஷம் வந்தால் கூடவே காது சிவக்கும்.தொண்டை

வலிக்கும்.
என்ன ஒத்துமை பாத்திங்களா?
என்னை இப்படி எழுத வைத்ததே இந்தக் காதுவலி
தாங்க.

புலம்பறதுக்கும் , அதைக் கேக்கறதுக்கும் ஆளெ,
இந்தப் பதிவாப் போனதாலே,
இங்கேயே எழுதறேன்.
போன
வியாழன் இரவுத் தூக்கத்தின் நடுவில்

எங்கேயோ டிரில்லிங் சத்தம் கேக்கிறது.
ஓக்கே, ரோடில ஏதோ ரிப்பேர் என்றூ திரும்பிப்
படுத்தால், அந்த வினோத சத்தம் காதுக்குள்

வலியோடு கூட்டு வைத்துகொண்டு கச்சேரி ஆரம்பித்துவிட்டது.

தேவுடா, என்று மருந்துப் பெட்டியைப் பார்த்தால்
க்ரோசின் தான் இருந்தது.

சாமி காப்பாத்துனு அதை முழுங்கித் தூக்கம் வராமல் முழித்து, டி.வி பார்த்து, காலையில்
சோக முகத்தோடு, ஈ.என்.டி டாக்டர் கிட்டே போனொம். அன்று நவராத்திரி வெள்ளி.

டாக்டர் அம்மா என்ன காட்டானாலே காதைக் குடைந்தீர்களா எண்று நக்கலாகக் கேட்டுவிட்டு


முகத்தை அப்படி இப்படித் திருப்பி,
வலது காதில், கம்மலை ஆராய்ந்து,

பல்லைப் பார்த்து, மூக்கைப் பாத்து
மறுபடி ஆரம்பித்த இடத்துக்கு
வந்தார்.
அவர்கையில் ிருந்த சின்ன கூரான ஊசியைப் பார்த்ததும்
கொஞ்சம் நடுக்கமாக இருந்தாலும்

மெலிதாக அவர் காதுக்குள் பரிசோதனை செய்து "ஓ
சம் டெப்ரீஸ் ஆர் தெர்"
எண்று அவைகளை எடுக்க ஆரம்பித்தார்.

எனக்கொ நாம் மூளையைக் கசக்கும் வேலையை செய்யவில்லையே
எப்படி பொடிகள் வரும் 'என்ற சிந்தனையில்
ஆழ்ந்தேன். '

'லுக் அட் திஸ் லுக் அட் திஸ்'
என்று சில பொடிகளைக் காண்பித்தார்.
நானும் பூம் பூம் மாடு மாதிரி
தலையை ஆட்ட முற்பட்டுக் காது வலித்ததால்
நிறுத்திக் கொண்டேன்.

சிங்கம் வேற சும்மா இல்லாமல்
ரொம்ப நேரம் சத்தமாப் பாட்டுக் கேக்கறாங்கனு சொன்னார் அவர்களிடம்.

இவருக்குப் பாட்டு என்றால்
டி.விக்கு க்கூட கேக்காமல் கேட்கணும்.
எனக்கோ பாட்டோடு ஒன்றும் அளவிற்கு
சத்தம் வேண்டும்.
எப்படியோ அதற்கும் வலிக்கும் சம்பந்தம் இல்லை
என்று டாக்டர் சொல்ல , இரண்டு பக்க மருந்துகளை எழுதிக் கொடுத்தார்.
''அம்மாவுக்கு வயசு 58ஆ. ''(மூன்று வருடம் முன்னால்)
ஓ?? !!!!!

என்று மெதுவாக ,ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப்ப்ப்ப்ப்ப்ப்பா
வயசானவர்களுக்கு சொல்லுவது போல

''இதை(மாத்திரை) உடனெ எடுத்துக்கணும்.

காதுக்குள்ள பஞ்சு போடக்கூடாது.

இதை சாப்பிட்ட பிறகு எடுத்துக்கணும். (இன்னோரு மாத்திரை)

''நாட் பிஃஃபோர் ஃபுட்'' என்றெல்லாம் திருப்பி திருப்பி சொல்லி முடித்து வெளில அனுப்பியதும் ,

அடுத்த வந்த வாலிபரிடம் அவர் சொன்ன வார்த்தை
தான் டாப்.

''பாவம் வயசானாலே புரிஞ்சுக்கிறது

கஷ்டமாகி விடுகிறது.

வி ஹேவ் டு பி பேஷண்ட்,"

என்றதும் எங்கே போயி முட்டிக்க என்று தெரியாமல் மருந்துக் கடைக்கு வந்தோம்.

நான்கு நாள் படாத அவஸ்தை பட்டாச்சு.

கொலு பார்க்கவந்த மாமி சொன்னது
இன்னும் சிரிப்பு.
உங்க காதுக்கு இன்னும் பெரிய தோடு போடலாம் போல இருக்கே என்றதுதான்.
நானும் கீதா மாதிரி ஹி ஹி சொல்லி, ஒண்ணுமில்லை
காது வீங்கி இருக்கு என்றேன்.

பதிவு ஆரம்பத்தில் ெழுதிய யோசனைகள் எல்லாம
ஊரார் எனக்குக் கொடுத்த அறிவுரைகள்.


இந்தப் பதிவைப் படித்து உங்களுக்குத் தலைவலி வந்தால்
சொல்லுங்கள்.
தனிதனியாகப் பிரித்து வைத்தியம் செய்து விடலாம்.

Monday, April 14, 2008

இராம ராம சரணம்!இது மிகவும் அதிசயம். நேற்று முழுவதும் இ கலப்பை,தமிழ்த் தட்டச்சு எல்லாம் தடுமாறி சோர்ந்து போன போது, பரவாயில்லை ராமன் பிறக்கிறான் அவன் படங்களாவது போடலாம் என்று ஆரம்பித்து ஏதோ ஒரு நொடி ஆசையில் மீண்டும் கலப்பையைத் தேடி
வேலை செய்யறதானு பார்த்தால் வந்தேன் வந்தேன் நானும் தானே வந்தேன் என்று தமிழ் எழுத்து வந்துவிட்டது:)
என் அருமை விஸ்டாவே உனக்கு என் பரிபூர்ண நமஸ்காரம்.
அதுவும் இந்தக் கணினியில் முதலாக ராமனைக் கொண்டாடுவதில் மகிழ்ச்சியே.
மன்னுபுகழ் கோசலைதன் மணி வயிறு வாய்த்தவன்,
பேராண்மை வள்ளல்,
சீதையின் அன்பன்,
இலக்குவனின் உயிர்த் தலைவன்,
தசரதன் மனம் மயக்க வந்த கண்மணி,
அனுமனின் பேராற்றலுக்கு வழி வகுத்தவன்,
வாய்மை வாழ வந்த பட்டாபிராமன்
எங்கள் ராமா, நீ என்றேன்றும் இருப்பாய்.
நாங்கள் எடுக்கும் பிறவிகள் அனைதிலும் உன்னை மறக்காமல்,
உன்நாமம் ஜபிக்கும் புத்தியைக் கொடுப்பாய்.
ஸ்ரீராம,லக்ஷ்மண,ஜானகி
பரத,சத்ருக்கின,ஹனுமான் சூழ
அமைந்த உலகம் ஸ்ரீராமராஜ்யமாக அமைய அருள வேண்டும் ஐயா.

Saturday, April 12, 2008

சித்திரை நன்னாள் வாழ்த்துகள்


விநாயகன் துணையோடு விக்கினங்கள் இல்லாமல்

புதியச் சித்திரையை வரவேற்போம்.

எனது அறுபது வயது நிறைவுக்கு நீங்கள் எல்லோரும் அன்பு மழை பொழிந்து திக்கு முக்காட வைத்துவிட்டீர்கள்.

அன்பு துளசியும் ஜிகேயும் ஆரம்பித்த வாழ்த்துக்கள் அனுபவம் இரவு 10 மணி வரை தொடர்ந்தது.

என் மனப் பூரிப்பை மேலும் நிறைவு படுத்த தி.ரா.ச வும் ரவி கண்ணபிரானும் வந்து ஒரு சீதாகல்யாண குறுந்தகட்டையும் கொடுத்து,....

அன்பு கொண்டாடியதை மறக்க முடியாது,.

வீட்டில் தம்பி மகன் திருமண வைபவத்தில் இரண்டு நாட்கள் சென்றதால் உடனே எல்லோருக்கும் பதில், நன்றி சொல்ல முடியவில்லை.

எல்லோரும் வாழவேண்டும்

நாம் எல்லோரும் வாழ வேண்டும்!!

Saturday, April 05, 2008

அது என்ன சாமர்த்தியமோ!!


நமக்குத்தான் ரெண்டு மாசத்துக்கு ஒரு தரம் போய், டாக்டரம்மா சொல்ற புத்திமதி எல்லாம் கேட்டுகிட்டு
ரத்தம் நிறைய:0
கொடுத்துப் பரிசோதனை செய்யற வழக்கம் உண்டு இல்லையா?

இந்தத் தடவையும் காலையில் எழுந்து, அன்னிக்குப் பார்த்து 5 மணிக்கே கண் முழிச்சு விட்டுதா.
ஏழு மணி வரை காப்பி சாப்பிடாமல் (fasting sugar)இருக்கிறதை யோசிச்சு மண்டை காய்ஞ்சு, (வேலை செய்தால் பசிக்காது)
இறைந்து
கிடந்த புத்தகங்களை எடுத்து வைத்து பார்த்தாலும் 7 மணி ஆகவில்லை. சரி எதற்கும் முன்ஜாக்கிரதையா நாம் க்ளினிக் போய்க் கதவுகள் திறந்து வைத்து
அங்க இருக்கிற கதவுகள் எல்லலம் எண்ணலாம்னு போனால் எனக்கு முன்னாலேயெ இரண்டு அம்மாக்கள் இருந்தார்கள்.
அவர்களிடம் குசலம் விசாரித்துவிட்டு, இடம் பார்த்து உட்கார்ந்து, ரத்தம் எடுப்பவருக்காகக் காத்து இருக்கும்போதுதான் இந்த அம்மா வந்தாங்க.
தூக்கி வாரின தலை(சரியா வார நேரம் இல்லையாம்)
கொஞ்சம் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று தெரியும்படி, மாட்டல், சிவப்புத்தோடு,,கிழங்கு கிழங்கா வளையல்கள், கொத்துச் சங்கிலி என்று வந்து அமர்ந்தவர், என்னிடம் என்ன சர்க்கரையா என்று கேட்டு விட்டு, தன் குடும்பம் மாமியார்..90 வயசாம், மருமகள்,பேரன்,பேத்தி ஏன் அவர்களைத் தான் தனிக்குடித்தனம் வைத்தார் என்பதையெல்லாம் ஆதியோடுஅந்தமாகச் சொன்னார்.

பொறுப்புகள் முடிந்த பின்னால் பேரன் பேத்திகளொடு ஓடத் தன் வாழ்வில் இடமில்லை எண்றும், நம்மளை நாமே கவனிச்சுக்கலை என்றால் யார் சும்மா இருனு சொல்லப் போறா. நம்ம குழந்தைகள் பின்னால் ஓடியாச்சு. இன்னும் அதுகள் பெத்தது பின்னால் ஓடணுமா???
அதான் நான் அவர்களைத் தனியே போக வைத்து விட்டேன் என்றெல்லாம் அவர் பேச நான் ஒரு புது டைப்பான மாமியாக இருக்கிறாரே என்று திறந்த வாய் மூடாமல் அவர் பேசுவதையே கேட்டுக் கொண்டிருந்தேன்.

இத்தனை காலைல தி.நகர்லேருந்து தனியா வந்தீங்களானு கேட்டேன்
''அதெதுக்கு. பையந்தான் கார் வச்சிருக்கான்.
நேத்திக்கே சொல்லிட்டேன். அதான் வந்து அழைத்து வந்து விட்டான்.
வெளில கார்ல உட்கார்ந்து இருக்கான்.''
அய்யோ பாவமே (அந்தப் பையந்தான்)
என்று நினைத்துக் கொண்டேன்.
நல்ல பிள்ளைதான்!!. சும்மா இருக்காமல்
உங்க வீட்டுக்காரரோட வரலியான்னும் கேட்டேன்.

அவரை எதுக்கும்மா சிரமப் படுத்தணும்னு சொன்னாங்க.
உலகம் பலவிதம்!!

அப்போது பார்த்து அங்கு ரத்தம் சோதிக்கும் பெண் வந்ததும் என்ன நடந்தது தெரியுமா.
கதை சொல்லி முடிக்காத கையோடு ,நாங்கள் சுதாரித்துக் கொள்ளும் முன்னால் சோதனை அறைக்குள் இந்த சிவப்புத் தோடம்மா ஓடி விட்டார்.
தான் தான் முதலில் சோதிக்கப் பட வேண்டும் என்பதில் அத்தனை அவசரம்.
நானும் எழுந்து போய், நாங்க அப்பவே வந்துட்டோமே,
நீங்க இப்பதானெ வந்தீங்கனு கேட்டேன்.

அதெல்லாம் கணக்கில்லம்மா. எனக்கு வீட்டுக்குப் போய் தலைக்கு மேல வேல இருக்கு. உங்களை மாதிரி எல்லாம் இல்லை''
என்று போட்டாரே ஒரு போடு. நானும் மற்ற அம்மையார்களும் ஒருவரை ஒருவர் பார்த்து அசடு வழிந்து கொண்டோம். என்ன செய்வது நாங்கள் எல்லாம் நாகரீக நாரீமணிகளாச்சே.
அவரைத் தட்டிக் கேட்க துணிச்சல் போதவில்லை.
ஒரு சாதாரண ,
எங்களைப் போலவே இருக்கும் மற்றொரு பெண்மணியின் சாமர்த்தியத்துக்கு முன்னால் ஏமாந்துவிட்டோம்.:)
நான் என் முறைக்குக் காத்திருந்து உள்ளே
போய் அங்கிருந்த பெண்ணிடம் என்ன இந்த அம்மா இப்படி ஒரு தாட்சண்யம் இல்லாமல் செய்தாரே என்று கேட்டால்,
அந்தப் பெண் சொல்கிறது... 'அவங்களுக்கு இந்த ஊசியினால் வேற வியாதி வந்துடுமோன்னு பயம்மா.''
''ரொம்ப முன் ஜாக்கிரதை.
நாங்க ஒரு ஒரு பேஷண்டுக்கும் ஊசி மாத்திவிடுவொம், டிஸ்போசபிள் ஊசிதான் போடுவோம் என்று சொன்னாலும் நம்ப மாட்டார்கள்' என்றாளே பார்க்கலாம்!!!

தனிமை...புகைப்படப் போட்டிக்காக

ஏப்ரில் மாதப் புகைப்பட்ப் போட்டிக்காக எனக்கு மிகவும் பழக்கமான ஒருவர் ,

ஆனந்தமாக ஒரு பார்சலைத் திறப்பதை அவர் அறியாமல் போட்டோ எடுத்துவிட்டேன்.

அவருக்குத் தனிமை மிகவும் பிடிக்கும்.

எனக்கோ எதிர்மறையாகக் கூட்டம் போட்டுப் பேச ஆசை:)

எப்படியோ சண்டை கிண்ட போடாம,சிரிச்சுகிட்டு கிரிச்சுகிட்டு

சன்ன்ன்ந்தோஷமா இருக்கிறதா முடிவு பண்ணி ரொம்ப வருஷங்கள் ஆச்சு.

எங்க மறுபாதி இவங்க. அவங்க சம்மதம் கேட்டுத்தான்

போட்டு இருக்கேன்.


Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

Posted by Picasa