Showing posts with label நிகழ்வுகள். Show all posts
Showing posts with label நிகழ்வுகள். Show all posts

Monday, September 06, 2010

கதையல்ல நிஜம்!

முன் போல் இல்லை .உலகம்  மாறி வருகிறது என்று
நான் நினைக்கும் நேரம் இதைப் போல

செய்தி கிடைக்கிறது.



 பெரியவர்கள் என்று சொல்லப்படும் சம்பந்திகளின்,மாப்பிள்ளைகளின்

ஈனத்தனம் என்பது எந்த விதத்திலும் அகலவில்லை என்பது

அதிர்ச்சியாக எனக்குக் கிடைத்த புது விஷயம்.


வீட்டுக்குச்  சீரமைப்புப் பணிக்கு வரும் மேஸ்திரி முருகானந்தம்.

அவருக்கு இரண்டு மகள்கள்.

பெரிய பெண்ணு (பூங்காவனம்)ப்ளஸ் 2 முடித்துக் கல்யாணமும் செய்து கொடுத்தாச்சு.

அவளுக்கு இரண்டு குழந்தைகளும் உண்டு.

பத்து பவுன் போட்டுத் திருமணத்தை முடித்துக் கொடுத்தார்.

மயிலாப்பூர் மாடவீதியில் உள்ள சத்திரம் ஒன்றில் நாங்கள்

அனைவரும் சென்று முடிந்த அளவு உதவி செய்து திருமணம் நடந்தது.

பெண்ணுக்கு மாமனார் இல்லை.

மூன்று கொழுந்தனார்கள்.அனைவரும் கார் ஓட்டக் கற்று ஆட்டோ

ட்ரைவராகவோ, டாக்சி ட்ரைவராகவோ இருக்கிறார்கள்.


இரண்டாம் குழந்தை பிறந்ததும்,முருகானந்தம் தன் இரண்டாவது பெண்ணை,வேல்விழி யை

அவர்களுக்கு உதவியாகத் திருச்சிக்கு அனுப்பி வைத்தார்.
அதுவும் இரண்டு மாதம் இருந்துவிட்டு

சென்னைக்கு வந்துவிட்டது.

அதற்கப்புறமாதான் இந்த கலாட்டா ஆரம்பம்.



அக்கா வீட்டுக்காரர், திருச்சியிலிருந்து  இங்கு வந்து , இந்தப் பெண்ணை வெளியில் அழைத்துப் போவதற்கும்,காளஹஸ்திக்கு

நாக தோஷம் பரிகாரம் செய்ய அழைத்துச் செல்வதுமாக போக்குக் காட்டினார்.இவர்களுக்கு வித்தியாசமாக ஒன்றும் தோன்றவில்லை.

முருகானந்தத்தின் மனைவி( சிவகாமி)யும் வேலை நேரத்தில் இங்கே வருவார்.

திடீரென்று ஒரு நாள், அந்த அம்மாவும் ,பெண் வேல்விழியும்

வந்தார்கள்.

'இப்ப என்ன செய்யறதுன்னு சொல்லுங்கம்மா

என்று மடமடவென்று முதல் மாப்பிள்ளையின் அநாகரீகச் செயலைச் சொல்லிக் காட்டினார்.
எங்க(முதல்) பொண்ணு பலவீனமா இருக்காம்.அதனால் இந்தப் பெண்ணை

'நீ என்னைக் கல்யாணம் செய்துக்கோ. அக்காவும் நீயுமா இருப்பீங்களாம்னு

சொல்லி இருக்கார்மா'என்று அழுதவளை

மன அதிர்ச்சியில் வார்த்தை வராமல் பார்த்தேன்.

''எப்ப நடந்ததுப்பா இது' என்று அந்தப் பெண்ணைக் கேட்டால்,

நேத்திக்கு அம்மா அப்பா வேலைக்கு வந்ததும் வீட்டாண்ட வந்தார்மா,

நல்லவேளையா என் ஃப்ரண்டும் இருந்தா.

அவளை வெளில போகச் சொல்லிட்டு,

நீ என்னோட இப்ப ஆட்டோல வா, உன்கிட்டப் பேசணும்'னு சொன்னார்மா.

அந்தாளு பார்வையே சரியில்லைன்னுட்டு, நான் அம்மா அப்பா வரட்டும் மாமா

நாம் எல்லாம் வெளில போகலாம்னுட்டு வீட்டுக்கு வெளியில் வந்து உட்கார்ந்துட்டேன்.அப்பவும்

விடாம எதிராப்புல உட்கார்ந்து கிட்டு, உங்க அக்காவால எனாக்குப் பலனொண்ணும் இல்ல. எப்பப்

பார்த்தாலும் பிள்ளைகளையே பார்க்கிறா. என்னோட வெளியில் வரமாட்டேங்கறா. சளி பிடிச்சுக்கும்

பெரிய பொண்ணுக்கு வீட்டுப் பாடம் எழுதணும்னு'' சொல்றா.

உனக்குத்தான் என்னைப் பிடிக்குமே ,நீ எப்படியாவது இதை நடத்திக் கொடுக்கணும்னு

சொன்னார்மா.
அதுக்குள்ள பக்கத்துவீட்டம்மா வந்து ''மாப்பிள்ளை, வேலுப் பொண்ணு தனியா இருக்கா

நீங்க கொஞ்சம் பொழுது சாய்ஞ்சு வாங்க'' என்று சொன்னதும்

கோபமாகத் திருச்சிக்குப் போவதாகச் சொல்லிக் கிளம்பிவிட்டாராம்.

படபடப்புத் தீராத நிலையில் வேல்விழியும் அம்மா வந்ததும்

நடந்ததைச் சொல்லிவிட்டாள்.

அப்பாவுக்கு ரத்த அழுத்தம் இருப்பதால் அவரிடம்

சொல்ல பயந்துகொண்டு இங்கே வந்திருக்கிறார்கள்.



என்னம்மா செய்யட்டும். பூங்காவனத்துக்குத் தெரிஞ்சா உசிரையே

விட்டுடும்மா'என்கிறாள். சிவகாமியின் சொந்த ஊர் திருமயம்,

அங்கே எல்லா உறவுகளும் இருக்கிறார்கள்.

முருகானந்தத்துக்கும் நார்த்தாமலை தான் சொந்த ஊர்.

இப்ப பேத்திக்கு  முடியிறக்கிக் காது குத்தப் போகப் போறோம்மா

அங்க போய் இந்த விஷயத்துக்கு முடிவு கட்டணும்.

பெரிய பொண்ணு வாழ்க்கையும் கெடக் கூடாது. இந்தப் பொண்ணுக்கும்

நல்ல இடம் அமையணும் என்று அழுதாள் சிவகாமி.
இப்படிக் கூட நடக்குமா. எப்பேர்ப்பட்டக் கிராதகனாக இருக்கணும் அவன்

என்று என் மனம் தத்தளித்தது.

இப்படியே விட்டால் இந்தப் பெண்ணோட வாழ்க்கையே பாழாகி விடும்.

'நீ முதலில் ஊரில் யாரை நம்ப முடியுமோ அவர்களிடம்

சொல்லிவிடு. இவர் இந்த மாதிரி இவளைப் பார்க்க வந்தது

தெரிந்தால் இவளுக்கு வரும் வரன்களும் தட்டிப் போகும்''

என்று நான் சொல்ல,அப்படியெல்லாம் விட்டுவிடுவோமா

அம்மா, நான் நாத்தனாரிடம் பேசி இதற்கு

முடிவு செய்கிறேன்''என்று கிளம்பிச் சென்றாள்.

அவள் திரும்பி இன்று வரும்வரை ஒரே யோசனை. என்னால் இந்த

மாதிரி நடத்தையை ஜீரணிக்கவே முடியவில்லை.

திருமயம் போய் ஐய்யனார் கோவிலில் முடியிறக்கி

காதும் குத்திவிட்டுத்  திரும்பி வந்து , நடந்த கதையையும் சொன்னாள் சிவகாமி.

கோயிலில்  முடியிறக்கிய பெண்ணின் மேல் சத்தியம் செய்து தரும்படியும் ,இல்லாவிட்டால் பஞ்சாயத்து வைக்கப் போவதாகவும் மிரட்டி இருக்கிறாள். மாப்பிள்ளையிடம்.
கொஞ்ச நேரம் யோசித்த அவன்
இனி தவறு ஏதும் செய்வதில்லை. அந்த எண்ணத்தோடு

வேல்விழியைப் பேசவும் இல்லை என்று சொன்னானாம்!

கேலிப் பேச்சே தவிர உண்மையில் பூங்காவுக்கு நான் தப்பு செய்ய மாட்டேன் அத்தை.
தயவு செய்து வேறு யாரிடமும் சொல்லிவிட வேண்டாம்,மானம் போய்விடும் ''

என்று சிவகாமியிடமும்,அவளுடைய வீட்டுப் பெரியவரிடமும்

உறுதி கொடுத்திருக்கிறான்.


சீக்கிரம் இந்த வேல்விழிக்கு வேலி போடு, ஊரில் மாப்பிள்ளை தேடாதே

இங்கயே தேடிக் கல்யாணம் செய்'என்று நான் சொன்னேன்.



மாப்பிள்ளை, ஒரு வரன் இருக்கார்மா,அவரும் ''கொல்த்து''   வேலைதான்  செய்கிறார். நல்ல வருமானம் ,. கல்யாணம்னா பத்துப் பவுன் வேணும்.மூணு பவுன் இருக்கிறது மிச்சம் ஏழு பவுனுக்கு

என்ன செய்யறது. அம்மாவைத் தான் நம்பி யிருக்கிறேன் இரண்டு பவுனாவது

கொடுத்து உதவணும் அம்மாதான்""

என்றாளே பார்க்கணும்!!

இது உண்மையிலியே நடந்தது. பெயரும் ஊரும் தொழிலும் மாற்றிவிட்டேன்.

எதற்கு வம்பு!

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.

Sunday, September 05, 2010

யாதொன்றும் தீமை இலாத சொல்

பாட்டி,


இன்னும் உனக்கு டிக்கட் கிடைக்கலியா.

இல்ல ராஜாத்தி.



''ஜனவரி மாசம் வரை வெயிட் செய்யணும் கண்ணம்மா.''



ஏன் உனக்குக் கொடுக்க மாட்டேன்னு சொல்றாங்க.?

பிளேன்ல இடம் இல்லையாம்பா.

எல்லாரும் ஹாலிடேக்கு புக் செய்துட்டாங்களாம்.



அப்ப நீ வரும்போது ரொம்ப குளிருமே பாட்டி.

உனக்கு ஜாக்கெட், வுல் பாண்ட் எல்லாம் இருக்கா.



ஓ வச்சிருக்கேனே.

தாத்தாக்கு>?

இருக்குப்பா.



அப்ப ஒண்ணு பண்ணு.

ஏர்போர்ட்ல மூணு மெஷின் இருக்கும்.

நீ அதில கார்ட் போட்டு ஜனவரிக்கு இப்பவெ டிக்கட் கொடுன்னு சொல்லு.

ரெண்டு டிக்கட் கொடுன்னு சொல்லு.''



சரிப்பா. எவ்வளவு பணம் கொடுக்கணும்.??

''உங்க ஊர் ரூபாய் கொடுக்காதே. எங்க ஊரு ஃப்ரான்க் 60 கொடு

அவ்வளவுதான் டிக்கட் விலை.

ஓ!! அப்படியா. சரிப்பா. செய்யறேன்.

கார்ட் எடுத்து வச்சுக்கோ. டிக்கட் வந்ததும்

எடுத்துண்டு வந்துடு.

பச்சை வளையல், மஞ்ச்ள்,ப்ளூ வளை வாங்கிண்டு வரியா.

சரிம்மா.

''நான் உன்னை எல்லா இடத்துக்கும் அழைச்சுண்டு போறேன்.

பயப்படாதே என்ன,.

சரிம்மா.

ஒரு சின்னக் குழந்தைக்கு தாத்தா பாட்டி எப்படியாவது

தன் வீட்டுக்கு வந்தால் போதும் என்ற நினைவு.

போக வேண்டியதுதான்:)






எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.

Saturday, May 24, 2008

303, நினைத்தாலே ...நடுங்கும்:)
















படங்கள் கூகிளாண்டவர் துணை.
டிஸ்கிப்பா.
துபாயில ஹெரிடேஜ் மியூசியம்னு ஒண்ணு இருக்கு.பழம் களப் பெருமைகள் அழகாக எடுத்து வைத்து விளக்கப்படும் இடம்.
இந்தப் பதிவில நான் சொல்ல வருவது அதைப் பத்தி அல்ல.
துபாய் ஹெரிடேஜ் கிராமம் ஒண்ணு எங்க வீட்டிலேருந்து கொஞ்சம் தொலவில் இருக்கு.
மம்சா பார்க்குக்கு அந்த வழியாப் போகும்போது நாந்தான் பையனிடம் இங்க ஒரு பழமையான கிராமத்தைக் கட்டி வைத்திருக்கிறார்களாமே.அதுவும் பவுர்ணமி அன்னிக்கு ரொம்ப அழகா இருக்குமே போலாமேப்பா என்றேன்.
தாய் சொல்லைத் தட்ட விரும்பாத மகனும் அப்பா மறுப்பதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் வண்டியைப் பார்க்கிங் லாட்டில் நிறுத்தினான்.
ஒரு பெரிய காம்பவுண்ட். அதற்குள் ஒட்டகங்களின் கனைப்புச் சத்தம், ஏதோ ஒரு அதீத இனிப்பு வாசனை காத்தில மிதந்து வந்தது.
ம்ம். நல்ல சாப்பாடும் இருக்கும் போல என்று நினைத்துக் கொண்டு ,நீளக்கால் ஜன்மங்கள்(என் புத்திரனும்,அவனைப் பெற்றவரும் தான்:)) உள்ளே சீக்கிரமாகப் போய் விட்டன.
மெதுவாக ஆடி அசைந்து கொண்டு அந்த இனிப்பு வாசனை வந்த இடத்துக்கு வந்து விட்டேன்.
பௌர்ணமினு சொன்னேன் இல்லையா. அங்கே நிஜமாகவே கிராமத்துப் பவுர்ணமி.
விளக்கே இல்லை. பெட்ரொமாக்ஸ் வெளிச்சத்தில் புஸ் புஸ் என்று மூச்சு விட்டுக் கொண்டு நாலைந்து ஒட்டகம். அதுக்குச் சற்றுத் தள்ளி அடுப்புகள். அடுப்புகள் முன்னால் கறுப்பு புர்கா தரித்த அழகுப் பெண்கள் அவர்கள் ஊர்த் தின்பண்டம் ஆட்டா மாவில் ரொட்டி மாதிரி செய்து அதை திறந்த அடுப்பில் வாட்டி எடுத்து அதன் மேல் பேரீச்சம்பழ சிரப்பை ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் செய்யும் அழகைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு நிமிர்ந்தால்
அப்பனையும் பிள்ளையையும் காணொம்.
சுற்றிவர ஒட்டகமும் பாஷைதெரியாத பெண்களும் இருட்டும் தான்.
இருட்டுக்கு அப்பால் சிரிப்பும் சத்தமுமாக சில யூரோப்பியர்கள்.
அந்தப் பெண்கள் செய்யும் பலகாரத்தைச் சாப்பிட்டு ஏதோ கதை பேசிக்கொண்டிருந்தார்கள்.
(இந்த ஊரில் தனியாக ஒரு பெண் நடந்து போவது அதுவும் அந்த இருட்டில்
தப்புதான். சந்தேகத்துக்கு இடமாகிறது)
நான்கு புறமும் பார்த்தபோது இன்னோரு கட்டிடம் தெரிந்தது. மெதுவாக வெளிச்சம் தெரிந்த அந்தக் கட்டிடத்துக்குள் போனதும் ஒரு குதிரையின் ஓவியத்தின் முன்னால் இவங்க இரண்டு பேரும் அலசிக் கொண்டிருந்தார்கள். பையன் நிலைமை புரியாமல் என்னம்மா அப்படியே M&B காலத்துக்குப் போயிட்டுயா அப்படீனு கேலி செய்கிறான்.
ஆமாண்டா வெள்ளைக் குதிரையும் ஆரப் ரோபும் போட்டுக் கொண்டு யாரோ வந்த மாதிரி இருந்தது. லட்சியம் செய்யாம ,என்ன இருந்தாலும் தமிழ்ப் பொண்ணாச்சேனு இங்க வந்தேன். என்ன ஆச்சர்யம் நீங்க இங்க இருக்கீங்க!!!!!
அப்படீனு பல்லைக் கடித்தபடி சொன்னதும், பையன் ஓஹோ டேஞ்சர் சிக்னல் என்று அனுமானித்தபடி,
என் கையைப் பிடித்துக் கொண்டு இன்னோரு அறைக்கு அழைத்துப் போனான். அதில் 400 வருடங்களுக்கு முன்னால் இருந்த ராஜா ராணி படம், வெள்ளைக்காரன், நாணயங்கள் எல்லாம் வரிசையாக இருந்தது. கூடவே அந்தக் காலத்தில் பயன் படுத்திய வாட்கள் எல்லாம்(படு கோரம்)
இருக்கவே இருவரும் மீண்டும் அங்கேயே மூழ்கி விட்டார்கள்.
சரி நாம் அடுத்த அறைக்குப் போகலாம் ,அவங்க வெளில வரும்போது சட்டுனு வெளில வந்து சேர்ந்து கொள்ளலாம் என்று நல்ல வெளிச்சமாக இருந்த அறைக்குள் போனேன்.
அங்கே ஏற்கனவே ஒரு அராபியக் குடும்ப வாசனைத் திரவியத்தில் குளித்து குஞ்சு குளுவான்களோடு குடும்பமாக பேசிக் கொண்டிருந்ததும்
நான் மறுபடி வெளியே வந்துவிட்டேன்.
இங்கதான்பா தப்பாப் போச்சு.
நான் வெளீயே வந்த அறைக்கும் உள்ளே வந்த அறைக்கும் சம்பந்தமே இல்லை. இந்த அறையிலிருந்து இன்னோரு வாசல்... அது வழியாப் போனா இன்னோரு குட்டி அறை. அதுக்கு வாசலே இல்லை.
அது பிரேயர் செய்யற இடம் போலிருந்தது.
ஆத்தாடீனு பைத்தியம் பிடிச்ச மாதிரி ஒரு ஒரு அறையாப் போக ஆரம்பித்தேன். முதல் ரூமைக் கண்டு பிடிக்கவே முடியவில்லை.
அந்தப் பத்து நிமிஷத்தில் எனக்கு மூச்சு நிற்கும் அளவிற்குப் பயம் தொற்றிக்கொண்டது.
மெல்ல ''பாபு'' என்று கூப்பிட்டால் ஒரு குட்டிக் குழந்தை எட்டிப் பார்த்தது. அது எப்படியும் பெற்றோரோடுதானே இருக்கும்னு அது பின்னால் போனால் அந்தப் பழைய ஒட்டக,பலகாரம் செய்கிற இடம் வந்தது.
அங்க இருக்கிற பெண்ணிடம் '' ஹமாரா பதி தேகா??'' என்று கேட்டேன். அவள் சிரித்தாள். இங்க்லீஷ் நோ நோ. '' அடப்பாவி. நீ உருது பேசுவாய், உனக்கு இந்தி தெரியும்னுதானே கேட்டேன்.
என்று நொந்தபடி லம்பா டால் பாபா,சோடா புத்தர் என்றேல்லாம் சொல்லிப் பார்த்தேன்.
தூகான் கயா?? என்றாள். ஆஹா, என்று கொஞ்ச தூரத்தில் பார்த்தால் வாட்கள், ஓவியங்கள் என்று விற்கும் கடைகள் வரிசையாக இருந்தன.
அதில் சிங்கத்தோட குரல் சத்தமாகக் கேட்டதும், கோபம் பாதி,அழுகை பாதி என்று விரைந்து அங்கே போய் நின்றேன்.
இருவரும் என்னைப் பார்த்து ஏம்மா திருப்பித் தொலஞ்சு போயிட்டியே.
அந்தக் கட்டிடமெல்லாம் பூட்டறதுக்கு முன்னாடி வந்தியே என்றனர்.
''இல்லடா அம்மா இஸ் கோயிங் த்ரூ அ டஃப் பீரியட். மறந்து போயிடறது பாவம் ''
என்று கேலி செய்கிறார் இவர்.
காருக்குப் போகும் வரை ஒன்றும் பேசவில்லை நான்.
காருக்குள் வந்து கதவைச் சாத்தியதும் இருவரையும் நான் போட்ட போடில் பையன் வாயே திறக்காமல் வண்டியை எடுத்து ஒரு நல்ல பானிப்பூரி கடை முன்னால் நிறுத்தினான்.
பசியினால் அம்மாவுக்குக் கோபம்னு நினைக்கும் மகனை என்ன செய்ய!!!.
கடவுளே காப்பாத்து என்று நெற்றியில் தட்டிக் கொண்டு
கீழே இறங்கினேன்.:)





Friday, February 22, 2008

மாசி(ல்லாத ) பௌர்ணமி அலைகள்,இன்று


வட்டப் போட்டிக்கு அனுப்பலைப்பா. அதான் இன்னிக்குப் பவுர்ணமி நிலா எப்படி இருக்கும்னு யோசித்து
கூகிள்ள தேடிப் படமும் போட்டாச்சு.
உண்மையிலேயே நிலாவும் கடலும் மேஜிக் தான்.
லுனடிக் ,லூசுத்தனமான நடவடிக்கை இன்னிக்கு அதிகரிக்கும்னு சொல்றதை நான் நம்புகிறேன்.
உண்மையாகவே நாம் அதிகமாக உணர்ச்சி வசப் படுகிற நாட்கள் எப்போதுனு ஒரு சார்ட்(?) போட்டு வைத்தோமானால் அமாவாசை அன்னிக்குக் கோபமும்
முழுநிலா அன்னிக்குச் சோகமும் கொஞ்சம் மிகைப் படுகிறதோனு தோன்றும்:)
இல்லாட்டத் தான் என்ன!. சாதாரணமாவெ அமைதியா இருக்கறவங்க அமாவாசை அன்னிக்கு மட்டும் அம்மனோ சாமியோ செய்வாங்களா?
இதில எவ்வளவு லாபம் இருக்குனு பார்க்கலாம்.
யாராவது நம்மளை தொந்தரவு(விடாக் கண்டன்) செய்தாங்கனு வச்சிக்கலாம்.
அப்போ ரெண்டு போடு போடலாமானு தோணுமா தோணாதா?(மனசளவில தான்)
இப்போ அமாவாசை , பௌர்ணமின்னால் நிஜமாவே கம்பால சாத்தினாக் கூட யாரும் ஒண்ணும் நினைக்க மாட்டாங்க. எல்லாம் லூனார் சைக்கிள் செய்கிற வேலைனு சொல்லிடுவாங்க.
ஆனா அடிபட்ட ஆளு திருப்பி அடிச்சான்னால் அதையும் வாங்கிக்கொள்ள சக்தி வேணும்;)
அவனுக்கும் அதே லேசா கலங்கி இருக்கிறதுனாலத் தானே முதல்ல நச்சுப் பண்ண வரான்.
இதெல்லாம் ஏன் இன்னிக்கு எழுதணும்னு நீங்க கேக்கலாம்.
காரணம் இருக்கு.
எங்க வீட்டுக்கு அமாவாசை, வெள்ளிக்கிழமை,ஆடிக் கூழ், கோவில்,கும்பாபிஷேகம்னு ஒரு சில பேர் அப்பப்போ தரிசனம் கொடுக்க(வாங்க) வருவாங்க.
முடிந்த வரை உறுதியாக தர மாட்டேன் என்று சொல்லிவிடுவேன்.
ஏனெனில் செமையாக ஏமாந்த நிகழ்ச்சி ஒன்றினால், யாரைப் பார்த்தாலும் சந்தேகம்.
தர மாட்டேன்னு தெரிந்ததும் அவர்கள் பாடும் வசவு இருக்கே !!ஆஹா:))
அந்த மாதிரி இன்னிக்குத் திருவண்ணாமலை பேரு சொல்லிட்டு இரண்டு பேரு வந்தார்கள்.
நீட்டி முழக்கி லட்சுமியை அழைத்துவிட்டு, நான் வெளில வந்து என்னனு கேட்டதும் பௌர்ணமி மகிமை, தானம் செய்ய வேண்டிய அவசியம், எல்லாம் சொல்லி முடித்து ஒரு திருமணப் பத்திரிகையும் கொடுத்தார்கள். அவர்கள் தங்கைக்காக,
சென்னையைச் சுற்றிப் பணம் சேகரித்து
பங்குனி மாதம் கல்யாணம் செய்யப் போவதாகச் சொன்னார்கள்.
நாம தான் ஏற்கனவே சூடு கண்ட பூனையாச்சே(சாரி துளசி)
வாசலிலேயே நிறுத்தி, பொறுமையாகக் கேட்டுக் கொண்ட பிறகு அவர்களிடம் இன்னும் 10 அழைப்பிதழ்களைக் கேட்டேன்.
என் சினேகிதிகள் ,உறவுகளிடம் சொல்லி பணம் வசூலித்துக் கொடுப்பதாகச் சொன்னதும் அவர்கள் மேற்கொண்டு பேசவில்லை. சென்னை முழுவதும் வினியோகம் செய்ய ஒரு பத்திரிகை எப்படி போதும் என்று கேட்டுக் கொண்டே பத்திரிகையைப் பிரித்தால்,
அவசரத்தில் காப்பி எடுக்கப்பட்ட இன்னோரு பத்திரிகை.
அதுவும் ஏற்கனவே நடந்த திருமணத்துக்கானது.!!
எங்க மாமியார் சொல்லுவார்கள், தனக்கு கோபம் வந்தால்
எப்படி ரத்தம் கொதிக்கும்(அநியாயத்தைக் கணும் சமயம்) என்று;)
எனக்கு தற்போது அந்த அளவு கோபம் வரவில்லை.
இப்படி மதச்சின்னங்கள் தரித்து,எல்லோரையும் ஏமாற்றுகிறார்களே என்றுதான் வருத்தமாக இருந்தது.
கதவைச் சாத்தியபிறகுதான்,
சுர்ரென்று கோபம் ஏறியது.
கோபமும் தாபமும் நமக்குச் சர்க்கரை அளவைக் கூட்டி விடும். அதனால் நிறையத் தண்ணீரைக் குடித்து
நிதானத்துக்கு வந்தேன்.
பின்ன 'இதுதான் உலகமா'னு பாடவா முடியும்!!
அதான் சமாதான நிலாப் படங்கள் போட்டுப் பதிவும் எழுதியாச்சு.
ஏமாற்றாதே , ஏமாறாதேனு சும்மாவா சொன்னாங்க:).









தம்பிகள் பாசம்

வல்லிசிம்ஹன்  எல்லோரும் வளமாகவாழ வேண்டும்.  படிக்காத மேதை. ரங்கன்.  என் தம்பி ரங்கன்படித்த பண்பான அன்பானவன், இந்தப் பாட்டில் வரும் அத்தனை வர...