Showing posts with label 2020. Show all posts
Showing posts with label 2020. Show all posts

Saturday, March 07, 2020

மெதுவா மெதுவா...

வல்லிசிம்ஹன்
எல்லோரும். வளமாக வாழவேண்டும்.
மானின் மேல் ஆசை வைத்து மாயையில் சிக்கிய மாது..
பரமாத்மாவை விட்டு  ஜீவாத்மா பிரிய  மாயை ஒரு காரணம் 



ஸ்ரீராமனின் கோபப் புருவ நெரிப்பும் அழகாக இருக்கிறதே.!!!!!!!
அரங்க ராமன் மணந்த சீதை எனும் கோதை

மேலே  உள்ள சித்திரங்கள் அனைத்தும் கோபுலு அய்யாவின் கைவண்ணம்.
இந்தப் படகு  படலத்தில் ஒரு கதை படித்தது 
நினைவுக்கு வந்தது.
கைகுவித்து  நிற்பது  குகன்.
இந்தப் படகு இல்லாமல் , காலில்  பாதுகை  இல்லாமல் ராமன் ,தன்  படகில் ஏறி க் கொள்வதற்கு 
அந்தப் படகோட்டி மறுத்தானாம்.
சாமி கால் பட்டு கல்லிலிருந்து ஒரு அம்மா 
வந்துட்டாங்களாம்.
என் கிட்ட இருப்பது இந்த ஒரு ஓடம் தான். சாமி கால் பட்டு அதுவும் மாறிவிட்டால்  நான்  பிழைப்புக்கு என்ன செய்வேன் என்றதும்,
ராமன் ,சீதை எல்லோருமே சிரித்துவிட்டார்களாம்.
ராமர் ,சீதையின் கரத்தை ப் பற்றியபடி ஏறி க் கொண்டு,

இந்தப் பெண்ணைத் தவிர வேறு ஒரு பெண் ,என் வாழ்க்கையில் இல்லை என்றாராம்.

ஸ்ரீராம் ஜெயராம் சீதாராமா.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Image result for ramayana scenes drawing



Sunday, February 16, 2020

Breadப்ரெட் பணியாரம் ,.

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக  வாழ வேண்டும் 

  இன்றைய காலை உணவாக ப்ரெட் பணியாரம் ,.
என் மாமியார் சொல்லிக் கொடுத்ததைச்
செய்தேன்.
மாடர்ன் ப்ரெட் வந்த புதில் , ஒரு பாக்கெட் ஒரு ரூபாய்க்கு வாங்கிய நினைவு இருக்கிறது. பிறகு நீல்கிரியில் (ஸ்டொர்ஸ்).2 ரூபாய்க்கு பெரிய அளவில்
கிடைத்தது.
வாங்கின அன்றே தீர்ந்து விடும்.சிலசமயம் ,கணவரும் 
வாங்கி வந்து நானும் வாங்கி
இருந்தால் உடனே  அதை உபயோகிக்க
 வேண்டிய அவசியம் நேரும்.
இல்லாவிட்டால், ஒரு மாதிரி மஞ்சள், பச்சை நிறம் எல்லாம் வந்துவிடும்.
இந்த ஊரில் ஷெல்ஃப் லைஃப் இரண்டு வாரமாவது
இருக்கிறது. குளிர்ச்சியின் காரணமாக இருக்கலாம்.

இப்போது பணியாரத்துக்கு வரலாம்.
மீதி இருக்கும் ரொட்டித் துண்டுகளை மிக்ஸியில்
இட்டு பொடி செய்து கொண்டு, அத்துடன்,
(கண்ணளவுக்கு) சமமான கோதுமை மாவும், அரிசிமாவும்,
தயிரும் சேர்த்து மாவாக்கி அரைமணி நேரம் வைக்க வேண்டும்.

இந்தக் கலவையில் வழக்கம் போல் 
ப.மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி,
உப்பு கலந்து கொண்டு,
பணியாரக் குழிகளில் போட்டு எடுக்க வேண்டும்.
எளிமையான, மொறு மொறு பணியாரம் தயார்.

Wednesday, January 15, 2020

நிம்மதி உன் கையில் 3

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக   வாழ வேண்டும் 

நிம்மதி உன் கையில் 3
+++++++++++++++++++++++

இன்னும் இரண்டு நாளில் பொங்கல் நன்னாள் என்றிருக்கையில் 
சந்தர் வீட்டில்   உள்ள அனைவருக்கும் புத்தாடைகள் கொண்டு வந்தான்.
சுகந்தியும்,வனிதாவும் ஏற்கனவே வாங்கி 
சுகந்தி வீட்டில் வைத்திருந்ததைக் கொண்டு வந்தான்.

சுகந்தி பிறந்த வீட்டுக்கு வராததை  அம்மா வின் மனது 
ஒரு சோகமாகவே பார்த்தது.
ஏன் இந்தப் பெண் இவ்வளவு அலட்சியம் காட்டுகிறாள் அவளுக்கும் அம்மாவைப் பிடிக்காமல் போனதா என்ற நினைப்பு வருத்தியது. பொங்கல் நாள் வந்ததும் பொங்கல் பானை ஏற்பாடு செய்து 
வனிதாவை ப் பொங்கல் அடுப்பை ஏற்ற, பானையை வைக்கச் சொன்னாள்.

ஆச்சர்யத்துடன் பார்த்த வனிதா, அத்தை நீங்க வாங்க. வழக்கம்   மாற்றவேண்டாம் என்று கேட்டுக் கொண்டாள்.
'இல்லம்மா. புதுப்பானை போல நீயும்  நல்ல படியாக ஆரம்பித்து செய். 50 வருடங்களாக நான்  செய்தாச்சு.
இனி நீ எடுத்து நடத்து   ,எனக்கும்  முதுமை வந்தாச்சு.
முழு மனசோட சொல்கிறேன் ' என்று சொல்லும் அத்தையைப் பயத்துடன் பார்த்தாள்  வனிதா.

சந்தரும் அம்மாவைப் புரிந்து கொள்ளமுடியாமல் அம்மாவைப் பார்த்தான்.

அவர்களுக்குத் தெரியாதது,
சுகந்தி அம்மாவிடம் பொங்கல் தின வாழ்த்துகளோடு 
சொன்ன செய்தி.
போகி அன்று காய்கறிகள் கரும்பு வாங்க
வனிதா வெளியே போயிருந்த போது,
சுகந்தியின் ஃபோன் வந்தது.
அம்மாவிடம் தெளிவாகப் பேசினாள். சுகந்தி.
ஏன் அம்மா அவர்களை இது போல விலக்கி வைக்கிறாய். ரெண்டும் அப்பாவிகள்
உனக்கு அது கூடத் தெரியாதா.
அப்படி என்ன தான் உனக்கு நேர்ந்து விட்டது.
அப்பா மறைந்தது நீ எதிர்கொள்ள வேண்டிய உண்மை.
அவர்கள் உன்னை எந்த விதத்திலும் தாழ்த்தி விடவில்லை.
நீயா எதையோ நினைத்து இப்படி ஒரு மூர்க்கமாக இருந்தாயானால் நஷ்டப்படப்
போவது  நீ தான்.

இப்ப சொல்லு, இந்த மாதிரி நீ அவர்களை நடத்த என்ன காரணம்/?
என்றதும் ஒரு நிமிடம் அசந்து போனாள் பர்வதம்.
என்ன நீ இப்படி எல்லாம் பேசற. தினம் சமைச்சுப்போட்டு மஹாராணி போல அவளை வைத்திருக்கேன்.

உங்க அப்பா வச்சிட்டுப் போன பணத்துல பாதிக்கு மேல
அவர் வைத்திய செலவுக்கே போச்சு.  இப்ப நான் சாப்பிடறதுக்கு
நான் உழைத்தால் எனக்கு நிம்மதியாக இருக்கு 'என்று சொன்ன அம்மாவின் 
குரலைக் கேட்டுத் திகைத்தாள் மகள்.

அம்மா நாங்க உனக்கு அவ்வளவு அன்னியமா
ஆகிட்டோமா. சந்தர் கேட்டால் இன்னும் நொந்துடுவான் மா.
செய்கிறதை சந்தோஷமா செய்யலாமே
வனிதாவை நீ ராணி போல நடத்துறது உண்மையானா
முதலில் கொஞ்சம் பாசத்தைக் காண்பி.
நாம் இருக்கிறதே மூணு பேர். அதில் அன்பாக இணைந்தவர்கள் வனிதாவும் என் கணவரும்.
நீ என் கிட்ட மத்திரம் நன்றாகப் பழகி என்ன பிரயோசனம்?
அவன் வெளினாட்டுக்குப் போகலாமா என்று யோசிக்கிறான் மா.
அவனுக்கு அது போல அழைப்பு.
வந்திருக்கு.
நீ இப்படி கொட்டாமல் கொட்டினியானால் அவன் ஓடியே போயிடுவான்.

ஏன் உன் புத்தி இப்படித் தடுமாறிப் போச்சு.
யார் உனக்கு இந்த மாதிரி உபதேசம் 
செய்தது. இல்லை டிவி சீரியல் மாமியார் காட்சிகள் பார்க்கிறியா.
வசனம் எழுதிக் கொடுத்த மாதிரி பேசறேயே.'
படபடவென்று பேசிய மகளின் குரல் கேட்டு அசந்து போனாள்
பர்வதம்.
வெளி நாடா? 
சட்டென்று நெகிழ்ந்தது அவள் மனம்.
பேசாமல் இருந்தே  தன் குடும்பத்தை இத்தனை தூரம் நோகடித்தோமே. அதுவும் 
இத்தனை வருடங்களாக.
என்ன நேர்ந்தது எனக்கு.
உண்மையான பாசம் கொண்ட குழந்தைகளை நோகடித்து விட்டேனே
என்று நினைத்தவள், மகளிடம் , பொங்கலுக்கு வரச்சொல்லி விட்டு ஃபோனை வைத்து
விட்டாள்.
அங்கே சுகந்தி அம்மாவைக் கடுமையாகப் பேசிவிட்டோமா
என்று குழம்பினாள்.
இதோ பொங்கல் அன்று சீராகிய மனத்துடன், மக்களை அரவணைக்க
பர்வதம் ரெடி.
மகனையும் மருமகளையும் குழந்தைகளையும்
அழைத்து தெய்வம் தொழுது, தன்னையும் வணங்கச் சொன்னாள்.
முகங்கள் வியப்பிலும் மகிழ்ச்சியிலும் விரிய 
அப்படியே செய்த மருமகளிடம், வெற்றிலை,மஞ்சள்,பாக்கு,பழம் ,பூ வைத்து
 நாமெல்லோரும் சேர்ந்து பொங்கலோ பொங்கல்!!! குரல் கொடுக்கலாமா
என்று கேட்டபடி  பேரன் களை அணைத்துக் கொண்டாள். நழுவிப்போன சொர்க்கம் கிடைத்த உணர்வு வந்தது.

டேய் சந்தர் ,
அக்கா வீட்டுக்குப் போங்கோ எல்லோரும். பொங்கல் கொடுத்து வீட்டுக் கு அழையுங்கள்.
எல்லோரையும் வரச் சொல்லு. சம்பந்தியோட பேசி நாட்களாச்சு
என்ற  அன்னையைப் பார்த்துப் பிரமித்தான். 
வேறெங்கும் போகும் எண்ணம் இனி எங்கிருந்து வரும்?


அனைவருக்கும் இனிய தினங்களுக்கான வாழ்த்துகள்.

Thursday, January 09, 2020

திருப்பாவை பாசுரம் 24 அன்றிவ்வுலகம் அளந்தாய்

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 

திருப்பாவை  பாசுரம் 24 அன்றிவ்வுலகம் அளந்தாய் 
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஸ்ரீ கோதை நாச்சியார் திருவடிகளே  சரணம்.

அன்றிவ்வுலகம் அளந்தாய்  அடி  போற்றி 
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல்  போற்றி 
பொன்றச்  சகடம் உதைத்தாய்  புகழ் போற்றி 
கன்று குணிலா எறிந்தாய்  கழல் போற்றி 
குன்று குடையா எடுத்தாய் குணம் போற்றி 
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி 
என்றென்றும் உன் சேவகமே ஏற்றிப் பறை கொள்வான் 
இன்று யாம்வந்தோம் இறங்கேலோ  ரெம்பாவாய்.


சென்றங்குத் தென்னிலங்கை  செற்றாய் திறல்  போற்றி 

Image result for RAMA RAVANA YUDDHAM
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி

Image result for SRI KRISHNA LEELALU
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி  Image result for anru ivvulakam alanthaay thiruppavai song images
என்றென்றும் உன் சேவகமே ஏற்றிப்  பறை கொள்வான் இன்று யாம் வந்தோம்  இறங்கேலோர் .Image result for THIRUPPAVAI IMAGES  பரிபூரண சரணாகதிப்   பாடல். யாதவ சிம்மத்தின் நடை அழகைக் கண்டு அவன் சீரிய  சிங்காதனத்தில்   அமர்ந்ததும் , அவனின்  ஆற்றல்களைப்  புகழ்ந்து போற்ற ஆரம்பிக்கிறாள்.   வாமனனாய் வந்து, த்ரிவிக்கிரமனாய்  வளர்ந்து அனைத்துலகத்தையும் அளந்து விட்டாய்  உன் பாதங்கள் போற்றி . 
உலகைக் காக்க   இலங்கைக்கு நடந்தே சென்றாய்  ராவணனை வென்றாய் எல்லாம் உன் திறல்  அல்லவா  போற்றி போற்றி.

சகடமாய் வந்த அசுரனை உதைத்தே கொன்றாய்  உன் 
கழல் போற்றி.போற்றி போற்றி !
 குன்றைக் குடையாய் பிடித்து  மக்களைக் காத்தாய் 
கண்ணா உன் குணம் போற்றி போற்றி போற்றி போற்றி.

உன் பகைவர்களை வென்று அவர்களுக்கு மோக்ஷ வழி காட்டுகிறாய்.
சிசுபாலன், கம்சன் , ஜராசந்தன்  எல்லோருக்கும் 
வைகுந்தத்திற்கே வழி காட்டினாய் அல்லவா 
உன் நாமம் போற்றி போற்றி,போற்றி ,போற்றி,போற்றி.

உனக்குச் சேவகம் செய்து உன்னை வழிபட வந்திருக்கிறோம் கேசவா 
எங்களை ஏற்றுக் கொண்டு  
எங்களைக் காப்பாய். 
இந்தப் பாசுரத்தைத் தினமுமே சொல்லி அவனைப்  போற்றிக் கொண்டே இருக்கலாம் . கண்ணன் கோதை திருவடிகள் சரணம்,

  



Image result for THIRUPPAVAI IMAGES
Image result for THIRUPPAVAI IMAGES

Saturday, January 04, 2020

மார்கழி 19 ஆம் நாள்.பாசுரம் குத்து விளக்கெரிய....

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக  வாழ வேண்டும்.
குத்து விளக்கெரிய  பாடல் மார்கழி 19 ஆம் நாள்.

பாசுரம் 


அன்னவயல் புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவை பல்பதியம்
இன்னிசையால் பாமாலை நற்பூமாலை சூடினாள்.
சூடிக்கொடுத்த சுடர்க் கொடியே
தொல்பாமாலை பாடி அருள வல்ல பைவளையாய்.
நாடி நீ வேங்கடவற்கு எம்மை விதி
என்ற இன் நாமம் நாம் கடவா வண்ணமே நல்கு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
குத்துவிளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னைக் கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய்திறவாய்.
மைத்தடங்கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ வொட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவாற்றகில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்.
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++
குவலயா பீடம் என்ற அசுர யானையை வென்று அதன் நான்கு
தந்தங்களையும் கொண்டு வந்த கண்ணன் செய்த
கோட்டுக்கால் கட்டிலில் மெத்தென்ற பஞ்ச சயனத்தில்
உறங்கும் கண்ணன் நப்பின்னையுடன் அணைத்தவாறு படுத்திருக்கையில்
கோதையின் பாசுரம் ஒலிக்க, தானே அருளவேண்டும் என்று
நப்பின்னைப் பிராட்டி எழும்ப,
இல்லை நானே செல்வேன் என்று கண்ணன்
விலக்க,
அவனை மைபூசிய கண்ணால் கட்டுப் படுத்துகிறாளாம்
பிராட்டி.
இதை அறிந்த கோதை பிணக்கம் கொள்ளாமல்
வந்து கதவைத் திறக்க வேண்டும் என்று
இறைஞ்சுகிறாள் ஆண்டாள். திறக்காமல் இருந்தால் அது தத்துவம் அன்று தகவும் அன்று
என்றும் உறுதியாகச் சொல்கிறாள்.

ஸ்ரீ கோதை திருப்பாதங்கள் சரணம் 

Related image



Friday, January 03, 2020

உந்து மதக் களிற்றன் பாசுரம் மார்கழி 18

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக  வாழ வேண்டும் .

மார்கழி 18 ஆம் நாள் 
உந்துமதக் களிற்றன்  ஓடாத தோள்வலியன் 
நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய் 
காந்தம் கமழும் குழலி  கடை திறவாய் 
வந்தெங்கும் கோழி அழைத்தன காண்  மாதவிப் 
பந்தல்  மேல் பல்கால் குயிலி னங்கள்  கூவின காண் 
ப ந்தார் விரலி உன் மைத்துனன் பேர்பாட 
செந்தாமரைக்  கையால் சீரார்  வளையொலிப்ப 
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்......

ஆண்டாள் திருவடி  இணையடிகளே  சரணம் 
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பெருமாள் கோயிலுக்குப் போனால் நேராக சுவாமி சன்னதிக்கு போகக்கூடாது. தாயாரை முதலில் சேவிக்க வேண்டும். வீட்டில் கூட அப்படித்தானே! அப்பாவிடம் கோரிக்கை வைத்தால் “எதற்கடா அதெல்லாம் என்று மீசையை முறுக்குவார். அதையே, அம்மாவிடம் சொல்லி அப்பாவிடம் கேட்கச்சொன்னால், அதே கோரிக்கை பத்தே நிமிடத்தில் நிறைவேறி விடும். இதுபோல் தான் நாராயணனிடம் ஒரு கோரிக்கை வைத்தால்…அந்த மாயன் அவ்வளவு எளிதில் ஏற்கமாட்டான். அதையே தாயாரிடம் சொல்லி வைத்துவிட்டால் அவனால் தப்பவே முடியாது. நரசிம்மரின் கோபத்தைக் கூட அடக்கியவள் அல்லவா அவள்! அதனால், கண்ணனின் மனைவி நப்பின்னையை எழுப்பி, கண்ணனை எழுப்புகிறார்கள் பாவை நோன்பிருக்கும் பெண்கள்.

lமேற்சொன்னது  நான் இணையத்தில் படித்தது.


உந்து மதக்களிற்றான் பாசுரம் ஸ்ரீ ராமாஜுஜர்,நம் திருப்பாவை 
ஜீயருக்குண்டானது.

ஆண்டாள்  அழைத்தது நப்பின்னையை. மதக்களிறுகளை அடக்குபவன், அழகான  பரந்த தோள் களை 

உடைய நந்தகோபன் திரு மருமகளே , நங்காய்,

கோழிகளும் ,குயிலினங்களும் கூவி அழைக்கும் காலைப்  பொழுது 

விடிந்துவிட்டது.,
கிருஷ்ணனுடன் களி
த்திருக்கும் வேளையில் 
உன் கூந்தல் மணம் , மலர்மணம், துளசி  மணம் 
எல்லாம் கமழ,
உன்  மலர்க்கரத்தில்  வளைகளில்  ஓசை ஒலிக்க ,
அன்புடன்,மகிழ்ச்சியுடன் எங்களை வரவேற்பாய்.
என்பது  பாசுரத்தின்   பொருள்.

திருப்பாவை ஜீயர் என்றழைக்கப் பட்ட ஸ்ரீராமானுஜர் 
பாவைப்பாடல்களை  பாடியபடி உஞ்சவிருத்தி செய்யும் காலத்தில் அவரது ஆசான் பெரிய நம்பியின் வீட்டருகில் வரும்போது, அவர் மகள் அத்துழாய் 
என்னும் சிறுமி 

ஜீயரைக் காணும் ஆர்வத்தில் மல்லிகைப்   பூச்சூடிய கூந்தலும்,
வளையல்களும் கங்காணமும் மோதும் ஓசையுடன், வீட்டுக் கதவைத் திறந்த ஒலி யும் ஒளியும்     காட்சி அவரை மூர்ச்சை அடையச் செய்தது.

அவரின் திருப்பாவையின் லயிப்பில் நப்பின்னையே வந்த நினைப்பில் 
மயங்கி விட்டார்.

இதைப் போன்று  நெகிழ்வு நமக்கு நேருமா தெரியாது. ஆனால் பாசுரங்களை அனுபவிக்கலாம்.

நப்பின்னையையும் ,நம்பியையும், அவர்களை இணைத்துப் 
பார்த்த ஸ்ரீ கோதைநாச்சியாரையும் கொண்டாடுவோம்.
















அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.

வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...