Blog Archive

Wednesday, January 15, 2020

நிம்மதி உன் கையில் 3

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக   வாழ வேண்டும் 

நிம்மதி உன் கையில் 3
+++++++++++++++++++++++

இன்னும் இரண்டு நாளில் பொங்கல் நன்னாள் என்றிருக்கையில் 
சந்தர் வீட்டில்   உள்ள அனைவருக்கும் புத்தாடைகள் கொண்டு வந்தான்.
சுகந்தியும்,வனிதாவும் ஏற்கனவே வாங்கி 
சுகந்தி வீட்டில் வைத்திருந்ததைக் கொண்டு வந்தான்.

சுகந்தி பிறந்த வீட்டுக்கு வராததை  அம்மா வின் மனது 
ஒரு சோகமாகவே பார்த்தது.
ஏன் இந்தப் பெண் இவ்வளவு அலட்சியம் காட்டுகிறாள் அவளுக்கும் அம்மாவைப் பிடிக்காமல் போனதா என்ற நினைப்பு வருத்தியது. பொங்கல் நாள் வந்ததும் பொங்கல் பானை ஏற்பாடு செய்து 
வனிதாவை ப் பொங்கல் அடுப்பை ஏற்ற, பானையை வைக்கச் சொன்னாள்.

ஆச்சர்யத்துடன் பார்த்த வனிதா, அத்தை நீங்க வாங்க. வழக்கம்   மாற்றவேண்டாம் என்று கேட்டுக் கொண்டாள்.
'இல்லம்மா. புதுப்பானை போல நீயும்  நல்ல படியாக ஆரம்பித்து செய். 50 வருடங்களாக நான்  செய்தாச்சு.
இனி நீ எடுத்து நடத்து   ,எனக்கும்  முதுமை வந்தாச்சு.
முழு மனசோட சொல்கிறேன் ' என்று சொல்லும் அத்தையைப் பயத்துடன் பார்த்தாள்  வனிதா.

சந்தரும் அம்மாவைப் புரிந்து கொள்ளமுடியாமல் அம்மாவைப் பார்த்தான்.

அவர்களுக்குத் தெரியாதது,
சுகந்தி அம்மாவிடம் பொங்கல் தின வாழ்த்துகளோடு 
சொன்ன செய்தி.
போகி அன்று காய்கறிகள் கரும்பு வாங்க
வனிதா வெளியே போயிருந்த போது,
சுகந்தியின் ஃபோன் வந்தது.
அம்மாவிடம் தெளிவாகப் பேசினாள். சுகந்தி.
ஏன் அம்மா அவர்களை இது போல விலக்கி வைக்கிறாய். ரெண்டும் அப்பாவிகள்
உனக்கு அது கூடத் தெரியாதா.
அப்படி என்ன தான் உனக்கு நேர்ந்து விட்டது.
அப்பா மறைந்தது நீ எதிர்கொள்ள வேண்டிய உண்மை.
அவர்கள் உன்னை எந்த விதத்திலும் தாழ்த்தி விடவில்லை.
நீயா எதையோ நினைத்து இப்படி ஒரு மூர்க்கமாக இருந்தாயானால் நஷ்டப்படப்
போவது  நீ தான்.

இப்ப சொல்லு, இந்த மாதிரி நீ அவர்களை நடத்த என்ன காரணம்/?
என்றதும் ஒரு நிமிடம் அசந்து போனாள் பர்வதம்.
என்ன நீ இப்படி எல்லாம் பேசற. தினம் சமைச்சுப்போட்டு மஹாராணி போல அவளை வைத்திருக்கேன்.

உங்க அப்பா வச்சிட்டுப் போன பணத்துல பாதிக்கு மேல
அவர் வைத்திய செலவுக்கே போச்சு.  இப்ப நான் சாப்பிடறதுக்கு
நான் உழைத்தால் எனக்கு நிம்மதியாக இருக்கு 'என்று சொன்ன அம்மாவின் 
குரலைக் கேட்டுத் திகைத்தாள் மகள்.

அம்மா நாங்க உனக்கு அவ்வளவு அன்னியமா
ஆகிட்டோமா. சந்தர் கேட்டால் இன்னும் நொந்துடுவான் மா.
செய்கிறதை சந்தோஷமா செய்யலாமே
வனிதாவை நீ ராணி போல நடத்துறது உண்மையானா
முதலில் கொஞ்சம் பாசத்தைக் காண்பி.
நாம் இருக்கிறதே மூணு பேர். அதில் அன்பாக இணைந்தவர்கள் வனிதாவும் என் கணவரும்.
நீ என் கிட்ட மத்திரம் நன்றாகப் பழகி என்ன பிரயோசனம்?
அவன் வெளினாட்டுக்குப் போகலாமா என்று யோசிக்கிறான் மா.
அவனுக்கு அது போல அழைப்பு.
வந்திருக்கு.
நீ இப்படி கொட்டாமல் கொட்டினியானால் அவன் ஓடியே போயிடுவான்.

ஏன் உன் புத்தி இப்படித் தடுமாறிப் போச்சு.
யார் உனக்கு இந்த மாதிரி உபதேசம் 
செய்தது. இல்லை டிவி சீரியல் மாமியார் காட்சிகள் பார்க்கிறியா.
வசனம் எழுதிக் கொடுத்த மாதிரி பேசறேயே.'
படபடவென்று பேசிய மகளின் குரல் கேட்டு அசந்து போனாள்
பர்வதம்.
வெளி நாடா? 
சட்டென்று நெகிழ்ந்தது அவள் மனம்.
பேசாமல் இருந்தே  தன் குடும்பத்தை இத்தனை தூரம் நோகடித்தோமே. அதுவும் 
இத்தனை வருடங்களாக.
என்ன நேர்ந்தது எனக்கு.
உண்மையான பாசம் கொண்ட குழந்தைகளை நோகடித்து விட்டேனே
என்று நினைத்தவள், மகளிடம் , பொங்கலுக்கு வரச்சொல்லி விட்டு ஃபோனை வைத்து
விட்டாள்.
அங்கே சுகந்தி அம்மாவைக் கடுமையாகப் பேசிவிட்டோமா
என்று குழம்பினாள்.
இதோ பொங்கல் அன்று சீராகிய மனத்துடன், மக்களை அரவணைக்க
பர்வதம் ரெடி.
மகனையும் மருமகளையும் குழந்தைகளையும்
அழைத்து தெய்வம் தொழுது, தன்னையும் வணங்கச் சொன்னாள்.
முகங்கள் வியப்பிலும் மகிழ்ச்சியிலும் விரிய 
அப்படியே செய்த மருமகளிடம், வெற்றிலை,மஞ்சள்,பாக்கு,பழம் ,பூ வைத்து
 நாமெல்லோரும் சேர்ந்து பொங்கலோ பொங்கல்!!! குரல் கொடுக்கலாமா
என்று கேட்டபடி  பேரன் களை அணைத்துக் கொண்டாள். நழுவிப்போன சொர்க்கம் கிடைத்த உணர்வு வந்தது.

டேய் சந்தர் ,
அக்கா வீட்டுக்குப் போங்கோ எல்லோரும். பொங்கல் கொடுத்து வீட்டுக் கு அழையுங்கள்.
எல்லோரையும் வரச் சொல்லு. சம்பந்தியோட பேசி நாட்களாச்சு
என்ற  அன்னையைப் பார்த்துப் பிரமித்தான். 
வேறெங்கும் போகும் எண்ணம் இனி எங்கிருந்து வரும்?


அனைவருக்கும் இனிய தினங்களுக்கான வாழ்த்துகள்.

12 comments:

Geetha Sambasivam said...

நல்ல அக்கா. அம்மாவுக்கு நல்லபடி ஆலோசனை சொல்லித் திருத்தி இருக்கிறாள். வேறொரு குணம் படைத்த பெண்ணாக இருந்தால் அம்மாவோடு சேர்ந்து கொண்டு தம்பி, தம்பி மனைவியைக் குற்றம் சொல்லி இருக்கும். எல்லாம் நல்லபடி முடிந்து பொங்கலும் பொங்கினதில் சந்தோஷம்.

ஸ்ரீராம். said...

இது மாதிரி ஒரு அனுபவம் எங்கள் உறவில்லத்தில் நடக்கிறது.   ஆனான்ல் அந்த வயதான உறவு திருந்துவதாய் இல்லை.   பாதிக்கபப்டுபவர்களைப் பார்க்க பாவமாக இருக்கும்.  இங்கு இவர் உடனடியாக உண்மை நிலையை உணர்ந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.

கோமதி அரசு said...

மிக அருமையாக சொன்னீர்கள்.
உண்மையான அன்பை பூட்டி வைக்க முடியுமா?
அக்கா தம்பி, தம்பி மனைவியின் அன்பைச்சொல்லி அம்மாவின் பயத்தை போக்கி விட்டாள். கதை சுபமாக நிறைவு பெற்றது மனதுக்கு மகிழ்ச்சி.

வல்லிசிம்ஹன் said...

உண்மையே கீதா மா. நல்ல குணம் மறந்து போயிருந்த அம்மாவுக்கு நல்ல வழி காட்டினாள் பெண். நாம் அந்தப் பக்கதைப் பாரக்கவில்லை.
இன வரும் பெண்கள் இப்படி இருப்பார்கள் என்று நம்பவோம் நன்றி மா.

வெங்கட் நாகராஜ் said...

நல்லவிதமாக எடுத்துச் சொன்ன அக்கா... இப்படி ஒருவர் இருந்துவிட்டால் பல குடும்பங்களில் மகிழ்ச்சி நிலவும்.

நல்லதொரு தொடர். நாங்களும் கூடவே வந்து படித்து ரசித்தோம்.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகள் மா...

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஶ்ரீராம். எத்தனையோ இடங்களில்ல் பார்ககிறோம். ஒரே ஒரு தடவை தன் மகன் ,தன் மகள் என்று யோசித்தஆல் எல்லோரும் மகிழலாம்.
அக்ரம் வினை யாரை விட்டது!

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா, நம் ஶ்ரீராம் சொல்வதைப் பார்ததீர்களா. எப்பொழுதோ நடந்ததை இப்பொழுது எழுதினேன் இன்னும் அவ்வாறு நடப்பதாக எழுதி இருக்கிறார் நல் வழி போகும் போதே நமக்கு சங்கடங்கள் வருகின்றன.
இறைவன் அதன் காக்க வேண்டும். நல்லதே நினைப்போம் நன்மையே நடக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
நன்றி மா. நன்மையே வெல்லும் என்பதை எழுத ஆசை.
நன்மையே நினைப்போம். நன்மையே. நடக்கட்டும்.

துரை செல்வராஜூ said...

>>> நாமெல்லோரும் சேர்ந்து பொங்கலோ பொங்கல்!!! குரல் கொடுக்கலாமா
என்று கேட்டபடி பேரன் களை அணைத்துக் கொண்டாள். நழுவிப்போன சொர்க்கம் கிடைத்த உணர்வு வந்தது...<<<

கண்கள் கலங்கி விட்டன...

கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்!...

வல்லிசிம்ஹன் said...

கூடி இருந்து குளிர்ந்தால் தான் குடும்பம் ஒரு நல்ல வழியில் செல்லும்.
அன்பு துரை,
பெரியவர்கள் நல் மனதுடன் திடமாக அன்புடன் குழந்தைகளை
அணைக்க வேண்டும்.
மகள் அன்னையைப் புரிந்து ஒரு அதிர்ச்சி வைத்தியம் செய்தாள்.
மகனைப் பிரிவதில் அன்னைக்கு ஏது மகிழ்ச்சி.
நீங்கள் ரசித்துக் கருத்து சொன்னதற்கு மிகவும் நன்றிமா எல்லோரும் நலமுடன்
வாழ தாயே துணை.

மாதேவி said...

மகளின் அறிவுரையில் மாறிய அம்மா. என்றும் மகிழ்சியே இனிய குடும்பம்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் மாதேவி. அனைவரும் மகிழ்சசி அடைந்தால் குடும்பம் நிம்மதியாக இருக்கும்.நன்றி மா.