Blog Archive

Tuesday, January 14, 2020

பொங்கல் மலர்கள் நினைவுகள்

வல்லிசிம்ஹன்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.
 நற்  பால் பொங்கி நாம் வாழ  வந்தது தைப்பொங்கல்.
அனைவருக்கும் வாழ்த்துகள் .

பொங்கல் மலர்கள் நினைவுகள் 
++++++++++++++++++++++++++++++++++++வருடம் குறிப்பிடாமல் ஒரு அனுபவத்தை எழுத ஆசை.
இது கொஞ்சம் அனுபவப்பட்ட  40 வயதான நான்.

வீட்டில் பெரியவர்கள் எல்லாம் இல்லாமல்
தனியாகப் பொங்கல் செய்ய வேண்டிய நேரம்.
பெரியவர்களோடு செய்த முறைகள் நினைவில் இருந்தது.

பொங்கல் பானை வைப்பது ஒரு பெரிய
 கம்ப சூத்ரமா என்ற கேள்வி எழலாம்.
ஆமாம். நாம் ஏற்கனவே பழகிய முறைகளில் இருந்து மாறுபடும் எதுவும்
நமக்கு ஒரு சவால் தான்.
அம்மா வீட்டில் வெண்கலப் பானை 5 ஆழாக்கு 
சாதம் வடிப்பது.
அதேபோல் கழுத்துடன் கூடிய பானை ஸ்பெஷல் பொங்கல் பானை. வருடத்துக்கு ஒரு முறைதான் வெளிவரும்.
அதற்கு அலங்காரம் செய்வது அப்பா.
நாலு பக்கமும் நாமம் இட்டு, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து கட்டி, கரும்பு வெட்டி 
 சிறு துண்டுகளாக
அரிந்து சணலில் கோர்த்து கட்டி விடுவார்.
புக்ககத்தில் அப்படி இல்லை.
எல்லாம் பெரிய அளவு.
சணலும் தடிமனாக இருக்கும்.
தேங்காய் உடைத்து அதில் துளையிட்டு, கடைசிக் கணுக்களை 
துளையிட்டு அவற்றையும் கோர்த்து, முழு வாழைப்பழம் சேர்த்து
இரண்டாவது கட்டாக மஞ்சள் இஞ்சி கொத்துகள் சேர்க்கப்படும்.

அளவில் மிகப் பெரிய பானை விறகடுப்பில் ஏற்றப்பட்டு,
முக்கால் அளவுக்குப் பாலும் நீருமாக கொதித்து,வழிந்து 
பிறகு முறைப்படி பொங்கல் தயாராகும்.
இதையே சட்டமாக நான் படித்துக் கொண்டு முதல் முறை அமலுக்குக் 
கொண்டுவந்தது என் மாமியார் மறைந்த பிறகு.
எல்லாமே புதிதாக இருக்க வேண்டும் என்று தெரியும்.
முதல் நாள் ஸ்டார் கடைக்குத் தொலைபேசி புது வெல்லம், அரைக்கிலோ வெண்ணெய்

ஏலக்காய், பச்சைக் கல்பூரம்.,முந்திரிப்பருப்பு 200 க்ராம்,குங்குமப்பூ ஒரு சின்ன டப்பா.
எல்லாம் பொங்கலுக்குப் புதிதாக வாங்கி வைப்பேன்.
எல்லாம் காலையில் வாங்கின கரும்பு, மஞ்சள் இஞ்சிக் கொத்தோடு
பெருமாள் அறையில் பத்திரமாக வைக்கப் படும்.
வெண்ணெய் மட்டும் ஃப்ரீசரில்.
போகி அன்று சாயந்திரமே வீட்டு வாசலில் இருந்து
கேட் வரை சகலமும் சுத்தம் செய்து கோலம் போட வசதியாகச்  செய்து விடுவோம் நானும் முனியம்மாவும்.
அன்று இரவு தூக்கம் அவ்வளவுதான் .எப்போது எழுந்திருப்போம் ,எப்போது வாசல் தெளித்துக் கோலம் போடுவோம் என்று உடல் பரபரக்கும்.
4 மணி காலைக்கு  வாயில் கேட் திறந்துவிடுவேன்.
தோட்டத்துக் குழயிலிருந்து தண்ணீர் பிடித்து மண்தரையில் தெளித்துக்
கோலம் போட ஆரம்பிதால் 45 நிமிடத்தில் கேட்டை மூடிவிடலாம். வீட்டு 
வாசலில் சிமெண்ட் தளம். பிறகு அதிலேயே கடப்பாக் கல் 
பதித்துக் கொடுத்தார் சிங்கம்.
Image result for Thai Pongal images



அங்கே செம்மண் இட்டுப் பெரிய கோலம்.
பிறகு வீட்டுக்குள்ளும் தொடரும்.

பிறகு நடமாட்டத்தின் போது கலைந்து போகத்தான் செய்யும்.
வருபவர்கள் செல்பவர்களைக் கோபிக்க முடியுமா:)
மாக்கோலம் இட்டால் தாங்கி நிற்கும்.நாம் தான் இட்ட
எழுத்துக்கு மாறி எழுதாதபவர்கள் ஆயிற்றே,
பெரியவர்கள் சொன்னதுதான்.
பிறகு ஆரம்பிக்கும் உள் வேலைகள்.
முதலில் அகத்துப் பெருமாள் ஸ்ரீ லக்ஷ்மின்ருசிம்ஹருக்குத் திருமஞ்சனம். அவருக்கு மடியாய்ப் புது வஸ்திரம் தோய்த்து உலர்த்தியதை
நேர்த்தியாகக் கட்டி அழகு பார்த்து,
பின்னர் குட்டி கிருஷ்ணர் தாயார் எல்லோரையும் தயார் செய்து மாலைகள்
சூட்டி, சாம்பிராணி, ஊதுபத்தி எல்லாம் காண்பித்து வெளியே
வந்தால் பொங்கல் நேரம் வந்திருக்கும்.
பால் பொங்கி குழந்தைகள் கணவர் டமடம என்று தட்டுகளைத் தட்ட
,சிறிது நேரத்தில் பொங்கலும் ஆகிவிடும்.
வாங்கின அரைக்கிலோ வெண்ணெயும் சர்க்கரைப் பொங்கல்
விழுங்கி விடும். பிறகுக் கண்டருளப் பண்ண சிங்கத்தை
அழைக்க வேண்டும். கைகால் அலம்பி நான் சொன்னபடியே
செய்து,பெரியவன் மணியடித்து கலாட்டா செய்ய, எல்லோரும் கையும் கிண்ணமுமாகப்
பொங்கலுக்கு வந்து நிற்பது
 நேற்று நடந்ததைப் போல் இருக்கிறது.

Related image



13 comments:

கோமதி அரசு said...

பொங்கல் நினைவுகள் மிக அருமை.
பொங்கல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் அன்பு குடும்பத்தினர்களுக்கும்.

முன்பு கோலம் போட நிறைய இடங்கள் இருந்தன இரவு படுத்துக் கொள்ளவே நேரம் ஆகும்.

இப்போது சாமி முன் மட்டும் கோலம்.

காலை ஒரு கோலம் அவ்வளவுதான்.செம்மண் பட்டை, சுண்ணம்பு பட்டை படிகளில் போட வேண்டும். இப்போது அந்த வேலை இல்லை.

காலமாற்றம் !

ஸ்ரீராம். said...

இனிமையான நினைவுகள்.

வெங்கட் நாகராஜ் said...

இனிய நினைவுகள் மா...

தட்டுகளில் நானும் ஒலி எழுப்பி இருக்கிறேன்! ஹாஹா...

KILLERGEE Devakottai said...

நினைவுகளை மீட்டியது அருமை அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி அப்போது உடலில் நிறைய தெம்பு இருந்தது மா. அநேகமாகக் கோலங்களே போடாத ஊர்களில் தான் இருக்க வேண்டி இருக்கிறது.
இங்கும் ஸ்வாமி சந்நிதியில் தான்

காலங்கள் வெகுவாக மாறி விட்டன.நாமும் மாறத்தான் வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ஶ்ரீராம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட். எல்லா வீட்டிலும் உண்டு என்று நினைக்கிறேன் நன்றி மா.பொங்கல் நலம் வளரட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டை ஜி, வளமும் அன்பும் நிறைய என் வாழ்ததுகள்.மா. நலமே பெறுக.

துரை செல்வராஜூ said...

இல்லத்தில் என்றென்றும் பால் பொங்கட்டும்.. அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

மனம் நிறைந்த பொங்கல் வாழ்த்துகள்

வல்லிசிம்ஹன் said...

அதையே விரும்பிப் பிரார்த்திக்கிறேன் அன்பு துரை.
வளம் பெருகி நிலைக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முனைவர் ஐயா,
வாழ்த்துகளுக்கு மிக நன்றி. உங்கள் குடும்பத்துக்கும்,
என் நல் வாழ்த்துகள்.

மாதேவி said...

இனிய பொங்கல் நினைவுகள். தைதிருநாள் வாழ்துகள்.