Blog Archive

Tuesday, March 16, 2021

கனாக் கண்டேன்.......

வல்லிசிம்ஹன்

மீண்டும் ஒரு பழைய கதை.
அவசியமா என்று பார்த்தால். நடந்ததே மீண்டும் திரும்புவது போலத்
தோன்றுகிறது.

பூர்வ ஜன்ம நிகழ்வுகள் போலக் கனவுகள்
தொடர்கின்றன. இதற்கு என்ன அர்த்தம்?
பள்ளிப் பருவத்திலோ,  20 வருடங்கள் கழித்து
 மற்ற  தபால்வழித் தொடர்கல்வியில்
தேர்வுகள் எழுதும்போதோ
உண்மையாக அவதி இல்லை.
அதெல்லாம் முடிந்தே 37 வருடங்கள் ஓடிவிட்டன.
இன்னும் தேர்வு நடக்கும் இடத்துக்குப்
போகத்தடையோ
2,கையில் எழுதும் தாள் கிடைத்து என்ன எழுத என்று திணறுவது 
போலவும்,
3, படித்தது எல்லாம் மறந்து விட்டது மாதிரியும்
வரும் கனவுகள்:)

இது பரவாயில்லை. 
அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லை 
என்று தம்பி ஃபோன் செய்வது  ஒரு கனவு.
சட்டென்று எழுந்துவிடுவேன். அம்மா இப்போது 
இல்லை என்பது கூட நிம்மதி தருமா?
இல்லை அந்த மாதிரிக் கவலைப் பட இப்போது
தெம்பில்லையா?

சிங்கம் எங்கேயோ சென்றிருக்கும் இடத்தில்
அதென்ன இடம்,  ஆங்க்....கீழக்கட்டளை.
அங்கேயிருந்து தொலை பேசி  'ரேவ், கைகால் ரொம்ப
வலிக்கிறது. '' என்று சொல்லி அந்த கனவு நடுவில்
தொங்குகிறது.
இதற்கு நடுவில்  பெரிய தம்பி 5 ஆம் தேதிக்கப்புறம்
தொலை பேசவில்லை என்று சிங்கத்திடமே 
சொல்லிப் புலம்புகிறேன்.

தூங்கவே பயமாகிவிடும் சில நாள்.
இது எல்லாமே நாம் எதுவுமே செய்ய முடியாமல்
மாட்டிக் கொண்ட வேளைகளை நினைவு
படுத்துகிறது. என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டு
மீண்டும் தூங்க முயற்சிக்கிறேன்.

நிறைய நல்ல பாடல்களைக் கேட்கிறேன்.
இதோ நட்புகளுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
கடவுளிடமும் பாபாவிடமும்  முறையிட்டு
பிரார்த்தனை செய்து மீண்டு விடத் தீர்மானிக்கிறேன்.

உங்கள் யாராவதுக்கு இது போலச் சங்கடங்கள்
இருக்கின்றனவா என்று அறிய ஆசை.
எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்.







23 comments:

ஸ்ரீராம். said...

நம் எண்ணங்களே கனவுகளாகின்றன.  உங்கள் எண்ணங்கள் பல்வேறு திசையிலும் பழைய நினைவுகளை அசைபோடுகிறது போல..   அதுதான் இது மாதிரி கனவுகள்.  எனக்கும் இது போல கன்னாபின்னா கனவுகள் வருவதை அவ்வப்போது பதிவாக்கி இருக்கிறேன்.  இப்போதும் வந்துகொண்டுதான் இருக்கிறது.

ஸ்ரீராம். said...

பாடல் அழகிய பாடல்.  உணா ரமணனின் குரலில் அவ்வப்போது கேட்டு ரசிக்கும் பாடல்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

நல்ல அலசலான பதிவு. கனவுகளின் தொல்லைகள் தொடர்ந்து கொண்டேதான் உள்ளது. நிம்மதியான உறக்கங்கள் சில நாட்கள் வருகிறதே,என ஆனந்தபடும் அன்றிரவே காத்திருப்பது போன்று கனவுகள் வந்து தன் விருப்பப்படி ஆனந்தம் அடைந்து விட்டுப் போகும். விளைவு நம் தூக்கம் கலைவதுதான்...! நாம் பகலெல்லாம் சிந்திப்பது இரவு உறக்கத்தில் கனவாக வருகிறது என்கிறார்கள். என்ன செய்வது..? நம் சுயசிந்தனை என்ற கதவுக்கும் அழுத்தமான பூட்டுக்கள் இல்லையே? பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

கோமதி அரசு said...

நானும் கனவுகளில் பேசி கொண்டு இருப்பேன்.
கோவில் போவது போல , வீடுகள் மாறுவது போல தம்பி, தங்கைகள் பேசவில்லை என்றால் கனவு வரும் பேசுவது போல .
விடிந்ததும் அவர்களிடம் பேசியதும் கொஞ்சம் நிம்மதி கிடைக்கும். பெரிய தம்பிக்கு இன்னும் உடல் நலம் சரியாகவில்லை, அந்த கவலையும் சேர்ந்து கொள்கிறது.
அனைவர் நலத்திற்கும் தினம் இறைவனை வேண்டிக் கொண்டுதான் இருக்கிறேன்.

இப்போது விழித்து இருக்கும் போதும் நினைவுகள் வந்து மனதை கலங்க வைக்கிறது.

எப்போதும் ஏதாவது உடலுக்கு வேலை கொடுத்து கொண்டு, ஏதாவது படித்து கொண்டு , இறை நாமங்களை சொல்லிக் கொண்டு இருக்கிறேன்.

வேறு ஒன்றும் செய்ய முடியாதே.

கோமதி அரசு said...

பாடல் கேட்டேன்.

KILLERGEE Devakottai said...

நினைவோட்டங்களின் சிதறல்களே கனவுகள் வரக் காரணம் என்பார்கள்.

அருமையான பாடல் அம்மா.

வெங்கட் நாகராஜ் said...

கனவுகள் - சில சமயங்களில் அர்த்தமற்றவையாகவே இருக்கிறது. நாம் அன்றைக்கு எந்த விஷயங்களை நினைத்துக் கொண்டிருந்தோமோ அவை கனவில் வர வாய்ப்பிருக்கலாம்! :) நேற்று எனக்கு அலுவலக வேலைகளில் இருந்த பிரச்சனைகள் கனவாக வந்தது! ஹாஹா....

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல பாடல்கள் மருந்து...

Geetha Sambasivam said...

பழைய நினைவுகள் ஆழ் மனதில் இருந்து மேலே எழுகின்றன. தினமும் படுக்கப் போகும்போது ஆஞ்சநேயரின் ஸ்லோகங்களைச் சொல்லிவிட்டுப் படுங்கள். தூங்கப் போகும் முன்னர் பால் அருந்தும் வழக்கம் இருந்தால் ஒரு டீஸ்பூன்/அரை டீஸ்பூன் கசகசாவைப் பாலில் போட்டுக் கொதிக்கவிட்டுக் குடியுங்கள். தூக்கம் வரும். பக்க விளைவுகள் இல்லை. பயப்பட வேண்டாம். இறைவன் துணை இருப்பான்.

Angel said...

ஒரு virtual hug கொடுக்கறேன் வல்லிம்மா உங்களுக்கு .ஒரு நாள் முழுதும் நாம் நினைவில்வைத்த நினைவு கூறிய விஷயங்கள் தான் மூளையால் அப்படியே கிரகிக்கப்பட்டு இரவில் கனவாக வருது .நம் வாழ்வில் நடந்த விஷயங்கள்தான் ஒவ்வொன்றா கனவா வருது .இன்னொன்று வல்லிம்மா எந் விஷயமா இருக்கட்டும் கில்ட்டி மற்றும் சோர்ந்து போகும் உணர்வுகளை மட்டும் உடனே தூக்கி போட்டுடுங்க .இப்படி செய்திருக்கலாம் அப்படி நடந்திருக்கலாம்னு நானா நிறையவே யோசிச்சி யோசிச்சி உடல் மன நலத்தை பாழாக்கி இருந்தேன் .எதுவாக இருந்தாலும் எல்லாமே நன்மைக்கென்னு ஒரு மனபோக்கை  உண்டாக்கிட்டேன் .நமது திறமைகளை நாம் சரியா எடைபோடல்லை .நம் அனைவ்ருய்க்கும் பற்பல நல்ல திறமைகள் இருக்கு ஆனால் பயம் காரணமா அது சரி வருமா வராதா என்று  யோசிச்சே பல விஷயங்களை நானா செய்யாம விட்டிருக்கிறேன் அதனால் தான இந்த ஸ்கூல் எக்ஸாம் பரீட்சை ட்ரீம்ஸ் எனக்கும் நிறைய வரும் :) .காலம் போன காலத்தில் ப்ளஸ்டூ ரிவிஷன் டெஸ்டல்லாம் வரும் .

Angel said...

//இது எல்லாமே நாம் எதுவுமே செய்ய முடியாமல்
மாட்டிக் கொண்ட வேளைகளை நினைவு
படுத்துகிறது.//
ஆமாம் வல்லிம்மா அதே பிரச்சினை எனக்குமுண்டு முன்பு ரொம்ப அழுவேன் .அப்பா அம்மா வின் கூட இல்லாம போனேன்னு .என்ன விஷயம்னாலும் கில்ட்டி சுய பச்சாதாபம் வேண்டாம் அதுதான் நம்மை உருக்குலைக்கும் பிசாசு .பகவத் கீதையில் வரும் எது நடந்ததோ என்ற வசனத்தை அடிக்கடி நினைப்பதுண்டு .எதையம்  கொண்டு வர முடியாதது  .நம் கவலைகளால் யோசிப்பதால் எந்த நன்மையையும் பெறப்போவதில்லை கோமதி அக்காவும் கீதாக்கவும் சொன்னதுபோல்  ஸ்லோகங்கள் பக்தி புத்தகங்களை உறங்குமுன் படியுங்க .மனதில் கவலைகளை தேக்காதிங்க அது உடலுக்கு கெட்டதைத்தான் அதிகரிக்கும் ..கூடுமானாவரை keep yourself occupied ..லவ் யூ வல்லிம்மா .டேக் கேர் .

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ஸ்ரீராம்.

பெரும்பாலும் மௌனத்தில் காலம் கழியும் போது
மனத்தை நிலைப்படுத்தும் பயிற்சிகளையும்
மேற்கொள்ள வேண்டும்.
சட்டென்று கடற்கரையில் நின்று
அலைகளோடு பேசுவது போலக் கற்பனை செய்வேன். கடல் ஒரு அருமருந்து.

நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் மா. உமா ரமணனும் அந்த ஹை பிட்ச்
இசையும் உற்சாகத்துக்கே படைக்கப் பட்டவை.
நல்ல பாசிட்டிவ் ராகம்.

வல்லிசிம்ஹன் said...

நல்ல அலசலான பதிவு. கனவுகளின் தொல்லைகள் தொடர்ந்து கொண்டேதான் உள்ளது. நிம்மதியான உறக்கங்கள் சில நாட்கள் வருகிறதே,என ஆனந்தபடும் அன்றிரவே காத்திருப்பது போன்று கனவுகள் வந்து தன் விருப்பப்படி ஆனந்தம் அடைந்து விட்டுப் போகும். விளைவு நம் தூக்கம் கலைவதுதான்...!//////////////////////////////////////////////////////////////////////////////////அன்பு கமலாமா,

எத்தனையோ நல்ல நிலைமையில்
பகவான் வைத்திருக்கிறார். வீணே வருந்தாமல்
அடுத்த நாளை எதிர்பார்க்கப் பழகுகிறேன்.
உங்கள் எல்லோரையும் நினைத்து ,இந்த சினேகத்துக்குக்
கடவுளிடம் நன்றி சொல்கிறேன்.
பழையதை நினைத்து
தற்போதைய நேரத்தையும் வீணடிப்பது முட்டாள் தனம்.

ஆனால் கனவுகளைக் கட்டுப்படுத்தத் தான் தெரியவில்லை.

என் ஆழ்ந்த அன்பு உங்களுக்கு.
நாம் சேர்ந்து நல்ல காலத்தையும் கனவுகளையும்
படைக்கலாம். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா,

எத்தனை நிஜமான வார்த்தைகள்!!!!

பெரிய தம்பி சீக்கிரம் நலமடைவார் அம்மா.
நித்தமும் என் பிரார்த்தனைகளில் அவரும் உண்டு.

உங்கள் சங்கடங்கள் புரிகின்றன.
இந்தியாவில் இருந்திருந்தால் எல்லோருடைய நல்ல, அல்லாத வேளைகளில்

பேசிப் பேசியபடி சமாதானம் அடையலாம்.
இப்போதும் ஒன்றும் நஷ்டமில்லை.
வாட்ஸ் ஆப்பில் தைரியம் சொல்லுங்கள்.நம்பிக்கை
நம்முடன் இருக்கும்.நல்லதே நடக்கும்.

உங்கள் கனவுகளும் நன்மை தர திருவெண்காட்டு ஈஸ்வரனே
கருணை புரிவார். அவரே ஞானக் கடவுள்.
தெளிந்த ஞானம் சிந்தைக்குத் தருவார்,.

என் அன்பு உங்களுடன் அன்பு கோமதி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி,
ஆமாம் சிதறிய நினைவுகளுக்கு நல்ல ஆரோக்கியம் கொடுக்க வேண்டும்.
மிச்சமுள்ள நாட்களுக்கு உறுதி கொடுக்கப் போவது நற்சிந்தனையே.

நம் கோமதி அரசு சொல்வது போல வேறு ஒன்றும் நம்மால் முடியாவிட்டால்
நம்மை நாமே தேற்றிக் கொள்ளத்தான் வேண்டும்.
முட்டுக் கொடுத்துக் கொண்டே இருப்பவர்களுக்கு
அலுக்கக் கூடாது அல்லவா.?

நலமுடன் இருங்கள் அப்பா. நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
சிரிப்பாகத் தான் காலையில் தோன்றும்.
மனம் பிரச்சினைகளால் அலுத்துக் கனவுகளில்
தீர்வு காணக் கூடாதோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.:)
பிரச்சினைகள் தீரட்டும் வெங்கட்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்,
உண்மையே அதுதான்.
நல்ல பாடல்கள் தரும் மகிழ்ச்சி நம் மனதை நல்ல நிலையில் வைக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,

மிக உண்மையான வார்த்தைகள். நன்றி மா.
கசகசா இங்கே கிடைக்கும்.
முயல்கிறேன்.
அருமருந்து கடவுள் நாமம். துர்ஸ்வப்னே ஸ்மர கோவிந்தம்னு
அப்பா சொல்வார்.
அனுமன் கண்கண்ட தெய்வம்.
மனசுக்கும் புத்திக்கும் பலம் தருவான்.

நினைவூட்டியதற்கு நன்றி மா. கோவிலுக்கு செல்ல ஆசை.
நல்ல படியாகவே நடக்கிறது.
நிதானமாக இருப்பதும் நம் கையில் தான்.

மிக மிக நன்றி மா.நீங்கள் சொல்வதைக் கடைப்
பிடிக்கிறேன்.

நெல்லைத் தமிழன் said...

எனக்கும் இந்த மாதிரி கனவுகள் வரும். ஓரிரு வாரங்களுக்கு முன்பு பெரியப்பா கனவில் வந்தார், கோபமாக இருந்தார். எதற்கு என்று எனக்கு ஒரே கவலை. எக்ஸாம் கனவுகள் நிறையதடவை வந்திருக்கு. சில சமயங்களில் சில நினைவுகள், சட் என்று தூக்கத்தை விரட்டிவிடுகிறது. அப்புறம் என்ன முயற்சித்தாலும் தூக்கம் வருவதில்லை. ஹாஹா. அதனால ரொம்ப கவலைப்படாதீங்க. நகைச்சுவை சேனல் போட்டுப் பாருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏஞ்சல்,
அத்தனை அன்புக்கும் ஒரு Tight Hug.
you hit the right nail!!!
yes it is the guilt crying out to look at myself.

ஆனால் இப்போது எதையும் திருத்தி அமைக்கும் வலிமை
நமக்கு இல்லையே.
இதைத்தான் எனக்கே நான் சொல்லும் வார்த்தைகள்.
வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள்
இப்படி தூக்கத்தைத் தொலைத்தாலும்
மற்ற நாட்கள் தூங்கி விடுகிறேன்.

தூக்கம் வரும் வரை ஸ்லோகங்கள் சொல்லிக் கொண்டே
இருப்பேன். சொல்வதில் தடம் மாறும் போது தூக்கம் வந்துவிட்டது என்று
அர்த்தம். தாங்க் காட்!!!!

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏஞ்சல்,
தங்கள் இழப்புகளை நினைத்து வருத்தம்.
எப்பொழுது கடல் கடந்து வந்து விடுகிறோமோ
அப்போது
சில தியாகங்களைச் செய்யத்தான் வேண்டி இருக்கிறது.

அன்பு கோமதிக்கு அருகில் இருந்தும்
ஒன்றும் செய்ய முடியாத நிலை. எனக்கும் அப்படித்தான்.
இவை எல்லாம் நம்மை மீறி நடந்தவை.
நாம் சாவித்திரி இல்லையே. சென்ற உயிரை மீட்க.!!!!

உண்மையிலேயே கீதாமா, கோமதி மா, கமலாமா
அனைவரும் தெளிவான சிந்தனை உடையவர்கள்.
கடவுள் பக்தியில் திளைப்பவர்கள்.

அவர்கள் வார்த்தைகள் பொன் போன்றவை.
அக்கறையுடன் அவர்கள் சொல்லும் மொழிகளை
மனதில் தேக்கி உருப்படுகிற வழியைப்
பார்க்க வேண்டும்.
அன்பு மகளே,
நற்சிந்தனைகளும், நமைகளும் உங்கள் வாழ்க்கையிலும்
எல்லோர் வாழ்க்கையிலும் நிறைய
பிரார்த்தனைகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
இனிய காலை வணக்கம்.
உங்களுக்கும் இது போலக் கனவுகள் வருமா.

பெரியப்பாவுக்கு என்ன கோபமோ. பாவம்.
கனவுகளில் நம் நினைவுகளே பேசுகின்றன என்று நினைக்கிறேன்,.

சிங்கம் பேசுவது போல நான் நினைத்தாலும் அவர் குரல் எனக்குக் கேட்பதில்லை.
உணர்கிறேன்.
இது ஒரு மாயா ஜால உலகு.கவலைப் படுவது பழகிவிட்டது.
ஆனால் சிரிக்கவும் கற்று விட்டேன்.
வடிவேலு கொஞ்ச நேரம் பார்த்தால் போதும்.

மிக மிக நன்றி மா.