Blog Archive

Wednesday, May 22, 2019

வேப்பம்பூ ரசம் இனிக்கும்..2

வல்லிசிம்ஹன்
வேப்பம்பூ ரச ருசி.....2
Vallisimhan

   அசதியில் சாய்ந்த வண்ணமே தூங்கி விட்ட ஜானம்மாவை எழுப்பியது
பெரியமகன் ஷண்முகத்தின் குரல். உடல் பரபரக்க, எழுந்து உட்கார்ந்தார். கண்ணில் உடனே நீர் கட்டியது.
வந்தியாப்பா, எப்போ புறப்பட்டீங்க இத்தனை நேரமாச்சே. 
பசி தாங்காதேப்பா உனக்கு என்று மகனையும் பேரன்களையும் அணைத்துக் கொண்டார்.

எங்களை வரச் சொல்றது இருக்கட்டும் . வெய்யில் திண்ணை ஏறிச் சுடுவது கூடத்தெரியாமல் என்னம்மா  உனக்கு உறக்கம் என்று அன்புடன் கேட்டான் மகன். அத்தை  வணக்கம் என்று கால்களைத் தொட்டு கும்பிட்டாள் வாடாமல்லி.
நல்லா இருங்க பசங்களா, உள்ளே போங்க நானும் வரேன்
என்று இறங்க முற்பட்டவளின் தலை சுற்றியது.

சட்டெனப் பிடித்துக் கொண்டான் மகன்.
ஏம்மா சாப்பிடலியா மணி ரெண்டாகப் போகுதே 
என்று கடிந்தபடி அவளைக் கைத்தாங்கலாக உள்ளே அழைத்துச் செல்லக் குடும்பம் பின் தொடர்ந்தது.

அப்போதுதான் கண் விழித்தவள் போல செண்பகா வந்தாள். குழந்தை மங்களா
தன் சகோதர்களைப் பார்த்துக் குதியாட்டம் போட்டது.
அடங்கி இருடி என்று விரட்டியவள், 
நீங்க எப்ப வரீங்கன்னு தெரியல.
நான் சாப்பிட்டுவிட்டேன். உங்க தம்பி சாயந்திரம் தான் வர முடியுமாம்.
அவசரப் பட்டு புது வீட்டுக்குப் போக வேணாம்னு சொன்னாரு.
இலை போடட்டுமான்னு திரும்பினாள்.
வாங்க என்று ஒரு வார்த்தை சொல்லாததைக் கவனித்த வாடாமல்லி,
செண்பகம், இந்தா உனக்கும், மங்களாவுக்கும்,
தாழம்பூ, மருக்கொழுந்து, மல்லி எல்லாம் நம் தோட்டத்திலிருந்து 
கொண்டு வந்திடருக்கிறோம். இந்தா, என்று ,பெரிய பெரிய மொந்தன் வாழைப்பழம், அறுவடை செய்த மணிலாக் கொட்டை என்று பைகளை வைத்தாள்.

எங்கக்கா இவ பூ வைக்கிறா. பள்ளிக்குப் பூ வைக்கக் கூடாது. தாழம்பூ
கை குத்துமே, பக்கத்து வீட்டம்மா இதெல்லாம் வச்சிக்கும் அவங்களுக்குக் கொடுக்கிறேன்
என்றபடி, தரையில் இலைகளை வைத்தாள். 
அம்மா உங்களுக்காகக் காத்திருந்தாங்க அவங்களைச் சாப்பிடச் சொல்லுங்க.
எனக்கு ரத்த அழுத்தம் இருக்காம். முன்ன மாதிரி ஒண்ணும் முடியல என்று கீழே உட்கார்ந்து கொண்டாள்.

அமைதியாகப் பார்த்த ஷண்முகம், குழந்தைகளைப் பின்புறம் அழைத்துச் சென்று கைகால் கழுவ வைத்து அழைத்து வந்தான்.
நீங்க சிரமப் படவேண்டாம் நாங்களே பார்த்துக்கறோம் என்று
அம்மாவுக்கு முதலில் சாதத்தை அளித்து,
சாப்பிடும்மா என்றான்.
அச்சத்துடன் அங்கு வைத்திருந்த சாப்பாட்டு பாத்திரங்களைப் பார்த்தார்
ஜானம்மா.
அம்மாவுக்குப் பத்திய சாப்பாடு, உங்களுக்கும் அதே செய்து விட்டேன்
என்றாள் சின்ன மருமகள்.
ரொம்ப நல்லா இருக்குமா என்று வாடாமல்லித் தானும் சாப்பிட்டுப் 
பிள்ளைகளையும் கவனித்தாள்.
மாமியாரின் தட்டில் சாதத்தைப் பிசிந்து குழம்பை விடும் போது 
அவள் கண்கள் கலங்கியது.

பையன் களும் அமைதியாகச் சாப்பிட்டு எழுந்தார்கள்.
 அனைவரும் இடத்தைச் சுத்தம் செய்யவும்,
சின்ன மகன் முத்துக் குமரன் வரவும் சரியாக இருந்தது.
அண்ணே, அண்ணி, சாப்பிட்டீங்களா வாங்க வாங்க 
இதோ வரவழியில் அல்வா பகோடா எல்லாம் வாங்கி வந்தேன், டேய் பசங்களா வாங்கடா சித்தப்பா கிட்ட என்று வாரி அணைத்துக் கொண்டான்.
என்ன படிக்கிறீங்க. 
இங்க பக்கத்திலியே நல்ல பள்ளி இருக்குது
மங்களா படிக்குது. அங்கேயே  நீங்களும் சேர்ந்துக்கலாம் டா
என்ற கணவனைச் சுட்டெரிப்பது போலப் பார்த்தாள் அவன் மனைவி.
ஏங்க அவங்க தாம்பரத்திலிருந்து தினமுமா இங்க வருவாங்க.
என்னமோ சொல்றீங்களே என்று கேலி காட்டினாள்.
ஷண்முகம் வாய் திறந்தான்.
தம்பி ,எனக்கு அடையாறு டிப்போவில் சூப்பர்வைசராகப் போட்டு இருக்காங்க.
பக்கத்திலியே சாஸ்திரி நகரில் வீடும் பார்த்துக் கொடுத்திருக்காங்க. 
 MIG  flats ல. சின்னதா இருந்தாலும் புதுசா இருக்கு. 
தன்னீர் பிரச்சினை எல்லாம் இல்லை, அங்கயே 
ஹிண்டு ஹை ஸ்கூலில் ,நண்பன் ஒருவன் தயவில் இடமும் கிடைத்துவிட்டது.
நான் பயந்தது போல நிறையக் கட்டணமும் இல்லை.

உன்னையும் அம்மாவையும் பார்த்துட்டு இன்னிக்கே அங்க போறோம்.
லாரியில் சாமான்கள்  வந்துவிட்டன. அவற்றை இறக்கிவிட்டு வரத்தாம் நேரமாகிவிட்டது.

நீ சிரமப் படாதேடா.
அடுத்த வாரம் வந்து அம்மாவையும் அழைத்துப் போகலாம்னு இருக்கேன்.
நீ என்ன சொல்லற.
அம்மாவுடன் இருந்து நாட்களாகி விட்டது.
வாடாமல்லியும் சேர்ந்து கொண்டாள். எப்பவும் அம்மா நினைப்புதான். சர்க்கரைக்கு மருந்து எடுத்துக் கிட்டாங்களா, சாப்பிட்டாங்களா என்று. சொல்லிக் கிட்டே இருப்பாங்க 
என்றாள்.
குமரன் அமைதியானான்.

பிள்ளைகளுக்கு ஏதாவது சினிமா போடு செண்பகா.
அப்படியே எனக்கும் சாதம் குழம்பு எடுத்துவை. 
இன்னிக்கு  வங்கியில் நேரமே கிடைக்கவில்லை என்று உள்ளே போனான்.
தட்டில் சாதமும் ,குழம்பு, பாவக்காய் கறியும், வேப்பம்பூ ரசமும் அவனை எதிர் நோக்கின.

இதுவா சமையல் என்று குரல் உயர்த்தினவனின் கண்களைச் சந்திக்கத் தயங்கினாள்
செண்பகம்.
அம்மாவுக்காக செய்தேங்க..
நீங்களும் வருவீங்கன்னு எதிர்பார்க்கல என்றாள். தயங்கியபடி.

அண்ணன் ,அண்ணி 2 வருஷம் கழிச்சி வராங்கன்னு நினைவிருக்கா உனக்கு
என்று அழுத்தமான குரலில் கேட்டான்.

குமரா என்று அண்ணன் விளிப்பது கேட்டதும் கசந்த உணவைச் சாப்பிட்டு முடித்தான்.

இதோ வரேன் அண்ணே  என்றபடி வெளியே வந்த
குமரன், அண்ணே நீங்க கொஞ்ச நேரம் ஓய்வெடுங்க,

நான் வெளிய போயி முக்கிய வேலையை முடிச்சுட்டு வரென்,
அம்மா நீங்களும் படுத்துக்கங்க மா.
என்றபடி அவசரமாய் வெளியேறினான்,

தம்பியின் போக்கு புரிபடாமல் அம்மாவோடு பேச உட்கார்ந்தான்
ஷண்முகம். 
நிமிடத்தில் புரிந்து கொண்டான் அம்மாவின் தள்ளாமையையும், சோகத்தையும்.
தந்தை இறந்த போது கூட இத்தனை தளர்வாக இல்லை அவள்.

கிராமத்தில் இருந்த போது ,வயல் வெளி, தன் தோழிகள், உறவுகளுடன்
வரவு செலவுக் கணக்கு எல்லாம் கவனித்துச் சுறு சுறுப்பாக இருந்தாள்.
சென்னை அவளுக்கு மாற்றம் கொடுக்கவில்லை. ஏமாற்றமே 

.. நல்ல முடிவுடன் அடுத்து சந்திக்கலாம்.

6 comments:

ஸ்ரீராம். said...

படித்து விட்டேன்மா.

கோமதி அரசு said...

சென்னை அவளுக்கு மாற்றம் கொடுக்கவில்லை. ஏமாற்றமே

.. நல்ல முடிவுடன் அடுத்து சந்திக்கலாம்.//

அம்மாவுக்கு என்ன வேன்டும் குழந்தைகள் ஒற்றுமையாக இருப்பது தான் வேண்டும்.

அது இல்லை, கிராம வாழ்க்கை இல்லை.

மாற்றங்கள் வந்து எல்லோரும் ஒற்றுமையாக இருக்கட்டும்.

அருமையான நடையில் கதை சொல்கிறீர்கள் அக்கா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஸ்ரீராம். மீண்டும் படித்ததற்கு மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

முதுமை வரும்போது பிள்ளைகளின் ஆதரவும்
அணைப்பும் மிகத் தேவைப்படுகிறது.
நாம் நம் வீட்டுப் பெரியவர்களைக் கவனித்துக் கொண்டோம்.
நம் மக்கள் அவர்களின் இரண்டு பக்கப்
பெரியவர்களையும் பேணவேண்டும்.

வழி வழி வரவேண்டிய பண்பு.
காலம் எல்லோரையும் காக்க வேண்டும்.

Geetha Sambasivam said...

இதைப் படிக்காமல் பின்னால் உள்ளதைப் படித்துக் கருத்தும் சொல்லி இருக்கேன். அவசரக் குடுக்கை! :)))))

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா.

அதனல் என்ன அம்மா. மீள் பதிவு தானே.