Vallisimhan
எல்லோரும் இன்பமாக வாழ என் வாழ்த்துகள்.
ஜானம்மா திண்ணையில் கால் நீட்டி உட்கார்ந்திருந்தார்.
காலையில் உள் சென்ற காப்பி செரித்துவிட்டு மறு பசி வந்துவிட்டது.
பாட்டீ.... வேப்பம்பூ ரசம் எப்படி வைக்கணும். அம்மா கேட்கிறாங்க
என்று கீச்சிட்டாள் பேத்தி குயிலி.
சிரமப்பட்டு கீழே இறங்கி உள்ளே சென்ற ஜானம்மா, மருமகளிடம்
ரசம் வைக்கும் விதத்தைச் சொல்லிவிட்டு,
ஏம்மா கொஞ்சம் கஞ்சி கொடுக்கிறாயா தலை சுத்தற மாதிரி
இருக்கு என்று சொன்னதும் முகம் சுளுக்கினாள் மருமகள் செண்பகா.
ஏற்கனவே உங்க பெரிய மகனும் குடும்பமும் வராங்கன்னு
போன் வந்திருக்கு. இந்த ஊரோட வரப் போறாங்களாமே.
கண்டிப்பா சொல்லி வைங்க ஊருக்கு வெளிய தாம்பரம்
பக்கத்துல வீடு பார்த்துக்கச் சொல்லி.
அடிக்கடி வரப் போக இருக்க வேண்டாம் என்று சிடுசிடுத்தாள்.
அப்படியா, எனக்குத் தெரியாதே எப்ப வராங்க என்றார்.
மதியம் சாப்பாட்டுக்கு வராங்க.
வேப்பம்பூ ரசம் வைக்கப் போறியா. கசப்பாயிடுமே தாயி என்று கெஞ்சினாள்
மாமியார்.
கசக்கட்டும். பாவக்காய் கறியும், வெறும் குழம்பும் இன்னிக்கு செய்தாச்சு.
அவங்களே புரிஞ்சுக்கட்டும் என்று சமையலறைக்குள்
புகுந்து கொண்ட மருமகளைத் திகைப்போடு பார்த்தார்.
தனக்குக் கஞ்சி கிடைக்காது என்று புரிந்து கொண்டு
வாசல் திண்ணையில் படுத்துக் கொண்டார்.
பேத்தி மங்களா ,பாட்டியிடம் இரண்டு பிஸ்கட்டைக் கையில் வைத்து அழுத்தினாள்.
ரகசியக் குரலில் சாப்பிடு பாட்டி. மோர் கொண்டுவரேன் என்று ஓடிவிட்டாள்.
உள்ளே செண்பகா தன் தாயிடம் உரக்கப் பேசுவது கேட்டது.
அந்த அம்மாவும் இல்லாதப் பட்டவங்க கண்ணுல படாம முக்கியமான
பொருளை மறைச்சு வச்சிடு.
கெட்டும் பட்டணம் சேருன்னு வராங்க போல என்று மகளுக்குப்
புத்திமதி சொல்லிக் கொண்டிருந்தாள்.
ஜானம்மாவின் பெரிய மகன் கொஞ்சம் அப்பாவி.
ஏதோ போக்குவரத்துக் கழகத்தில் சிறிய வேலையில்
இருந்தான். அவனுக்கும் இரண்டு மகன்கள் பத்து,எட்டு வயதில் இருந்தார்கள்.
மருமகள் வாடாமல்லி, ஜானம்மாவின் சொந்த ஊரான செய்யாறிலிருந்து வந்தவள்.
கிராமப் பழக்க வழக்கங்களோடு கட்டுப் பெட்டியாக இருப்பாள்.
அதுவே செண்பகத்துக்கு இளப்பமாகத் தெரியும்.
சென்னையில் தண்டையார்பேட்டையில் வளர்ந்தவளுக்கு
பள்ளி இறுதி வரை படிக்க வாய்ப்பு கிடைத்தது.
கணவனுடன் பேசிப் பழகி ,தனக்குப் பிடித்த பொருட்களை
வாங்கிச் சேமித்து வைத்திருந்தாள். மாமியாரை வீட்டுக்குக் காவல் வைத்துவிட்டு, சினிமா
,உறவினர் வீடு என்று சென்று வர ஒரு ஸ்கூட்டரும்
வாங்க வைத்திருந்தாள்.
மருமகளின் சாமர்த்தியத்தை மெச்சினாலும்,
தன்னை ஒதுக்கி வைப்பதைப் புரிந்து பல நேரம் வருந்துவார் ஜானம்மா.
பெரியவனுக்கு வருமானம் போதாது. தான் அவனுக்குப் பாரமாக இருக்கக்
கூடாது என்றே சிறியவனுடன் இருந்தார். தொடரும்.
No comments:
Post a Comment