Blog Archive

Saturday, September 08, 2018

பொறுமையில் பூமாதேவி எங்கள் அத்தை ..1934

Vallisimhan

எல்லோரும் நலமே வாழ இறைவன் அருள்வான்.

செப்டம்பர் 5 ஆம் தேதி காலை.
எழுந்திருக்கும்போதே ராஜனுக்கு வயிறும் உடலும் சோர்வாக இருப்பது போல இருந்தது.
வீட்டுத் தோட்டத்தில் மாடுகள் அம்மாவென்று அழைப்பது கூட தலை வேதனையாக இருந்தது.
அவை கத்துவது தன்னை எதிர்பார்த்துதான் என்பது தெரிந்தும் அசதி உடலைத் தள்ளுவது போல உணர்ந்தார்.
ஏழு மணியாகி விட்டது. அதிகாலையில் எழுந்திருக்கும் கணவனை இன்னும் காணோமே என்று மெதுவாக மரப்படிகளில் ஏறி மாடிக்குத் தங்கள் அறைக்குச் சென்றாள் சரோஜா.
அங்கே இன்னும் கட்டிலில் படுத்திருக்கும் கணவனைப் பார்த்ததும் கவலை கூடியது.
என்னாச்சு மாமா ,உடம்புக்கு என்ன என்று கேட்டவளிடம் கண் திறந்து பதில் கூட சொல்ல முடியவில்லை. தலைவலியும் ஜுரமும் ஏறிக் கொண்டிருந்தது.
திடீரென்று வயிற்றைப் பிரட்ட வாயில் கசப்பு தூக்க வாந்தி வந்து விட்டது.
நடுங்கிவிட்டாள் சரோஜா. பதினெட்டு வயதில் அவள் பார்த்த காய்ச்சலோ,நோயோ குறைவுதான்.
நல்ல ஆரோக்கியமாக வளர்ந்த பெண். அவளுடைய சகோதரர்கள் மூவரும் ,ஒரு சகோதரியும் அவ்வாறே.
அதனால் என்ன செய்வதென்று தெரியாமல் கலங்கிய கண்களோடு கீழே வந்து மாமியாரிடம் விஷயத்தைச் சொன்னாள்.
ராஜா ,கொஞ்சம் கீழ வரயா ஒரு சுக்குக் கஷாயம் வச்சுத் தரேன். சரியாகிவிடும் ஏதாவது அஜீரணமா இருக்கும் 

நேத்திக்கு உங்க வீட்டில என்ன சாப்பிட்டான் ராஜன். இப்படி வாமிட் செய்யறத்துக்கு? அதான் அத்தை உன்னை அப்படிப் பார்த்தார் என்று சொல்லிவிட்டு விட்ட ராமாயணத்தைப் படிக்க பூஜை அறைக்குப் போய்விட்டாள் அவள்.!!!
அவள் சொன்ன வார்த்தைகள் சரோஜாவிற்கு சுரீர் என்று உரைத்தது.
நானும் தானே சாப்பிட்டேன். எனக்கு ஒண்ணும் ஆகவில்லையே
என்று யோசித்தாள்.... 

அன்று  ஆரம்பித்த  காய்ச்சலும்  வயிற்றுப் போக்கும்
தொடரவே  டாக்டர் குருசாமி முதலியார்  வந்தார்.
சோதித்துப் பார்த்து விட்டு  ''ரொம்ப ஜாக்கிரதையாக   இருக்கவேண்டும்.
இது டைஃபாய்ட்  'பத்தியம் முக்கியம்'' என்று மருந்தெழிதிக் கொடுத்துவிட்டுத் தினம் வந்துவிட்டுப் போவதாகச் சென்றார்.

அன்று ஆரம்பித்த ஜுரம் இறங்கவே இல்லை.
பாலில் இருந்து பிரிக்கப் பட்ட ''whey''
புழுங்கலரிசிக் கஞ்சி மாற்றி மாற்றிக் கொடுக்கப் பட்டது.

சரோஜாவின் கவலைக்கோ அளவே இல்லை. தாய் வீட்டில் சாப்பிட்டதாலா கணவனுக்கு உடல் நலம் கெட்டது?
சீமந்தம் நடக்கணும்மே இன்னும் ஒருவாரம்தான்  இருக்கு. இவருக்கு
உடம்பு சரியாகப் போய்விடுமா அதற்குள்.
பகவானே என்று சஹஸ்ரநாமம்சொல்லிக் கொண்டே இருந்தார். 


ஒரு தடவை இல்லை இரண்டுதடவை இல்லை. எட்டு தடவை ஒருநாள் முழுவதும். இப்படித் தொடர்ந்த  பிரார்த்தனையில்
தன்  திருமாங்கல்யத்தைத் திருப்பதி உண்டியலில்
சமர்ப்பிப்பதாகவும் வேண்டிக் கொண்டார்.

அப்பொழுது  முழுவதும் பகவனிடம் நம்பிக்கை இருந்தது. நம்பிக்கையும் பொய்க்கவில்லை.

சரோஜாவின் மாமனாருக்கு அதீதக் கவலை. ஆறடிக்கும் மேலெ ஆஜானுபாகுவான மகன் அவனுக்கென்ற சுத்தமாக்கப் பட்ட அறையில் இப்படிக் கண் திறக்காமல் படுத்திருப்பது அவரை வருத்தியது.
தனியாக   நர்ஸ் ஒருத்தர் அமைக்கப் பட்டார்.
நோயாளிக்கு வேண்டிய அத்தனை தேவைகளையும் அந்த அறையை விட்டு நகராமல் கவனித்துக் கொண்டார்.
பிள்ளைத்தாய்ச்சியாக இருந்ததால் சரோஜா அங்கே அனுமதிக்கப் படவில்லை.
நடுவில் மாப்பிள்ளையைப் பார்க்கவந்த சரோஜாவின் பெற்றொருக்கும்
முகம் கொடுத்துப் பேச ஆளில்லை.
மாமனார்  மட்டும்  சம்பந்தியிடம்  வந்திருக்கும் நோயின் தீவிரத்தை எடுத்துரைத்தார்.

அனந்தன் அசரவில்லை. நாம் யாருக்கும் தீங்கு நினைக்கவில்லை,.
இறைவன் கைவிடமாட்டான்.
சரோஜா நல்ல குழந்தை அவளுக்கும் கெடுதி ஒன்றும் நேராது.

இன்னும் ஒரு வேண்டுதல். வானமாமலை தோதாத்ரி நாதனுக்கு ஒரு கோட்டை நெல் நேர்ந்து விடுவதாக வும் வேண்டிக் கொண்டார்.
நாளுக்கு நாள் வயிற்றுப் போக்கு இருக்கும் போது மாமனார்தான் கழிவுப் பொருட்களை அகற்றிச் சுத்தமான  வேஷ்டியில் சுற்றி வாசலில் இதற்காகக் கட்டிய  தொட்டியில் கொண்டுபோய்ப் போடுவார்.

அதைப் பார்க்கும்போது சரோஜாவின் மனம் நெகிழும்.
இதுமட்டுமல்ல. அந்தக் காலத்தில் அந்தச் சாலை வழியே சென்று கொண்டிருந்த ஒரே ஒரு தட எண் 4.
அந்த வண்டியையும் நிறுத்தி தன்வீட்டைக் கடக்கும் போது  ஹார்ன் அடிக்கவேண்டாம் என்றும் வேண்டிக்கொண்டார்,.
உடல் அதிர்ந்தால் இன்னும் பலவீனமாவதை நேரில் கண்டதனால் இந்த வேண்டுகோள். அப்போது அந்தச் சாலையில் இருந்ததோ ஆறே ஆறு
வக்கீல் வீடுகள். அங்கே  ஒலி எழுப்ப  வேண்டிய அவசியமும் இருக்காது.

எப்படியோ மாபெரும் கண்டத்தைத் தாண்டி வந்தனர்.
அதற்குள்  சரோஜாவுக்கு இடுப்புவலி கண்டதால்
சீமந்தம் விழா இல்லாமலயே அழகிய பெண்சிசு பிறந்தது.


மூன்றுமாதங்கள் கடந்துதான் ராஜனால்   இயல்பான நிலைக்கு வரமுடிந்தது.
அதன் பிறகு குழந்தையை மடியில் வைத்துக் கொண்டே
சீமந்த விழாவை லகுவாக நடத்தினார்கள்.

 வாழ்வும் வளம் பெற்றது.நான்கு   பெண் குழந்தைகளும் ஒரு ஆண் மகவுமாக வளர்ச்சி அடைந்து   இனிதே இல்லறம் நடத்தினர்.

அந்தப் பொருத்தமான தம்பதியினருக்குப் பிறந்தநாள் காணும்  மாதம் இது

என்றேன்றும் எங்களை அவர்கள் காத்து நிற்பார்கள்என்பதில் எள்ளளவு சந்தேகமும் இல்லை.



இதுவும் மீள் பதிவுதான் .
 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by revathi narasimhan at 7:16:00 AM     
 

No comments: