Blog Archive

Monday, January 21, 2019

முதுமை ...2

Vallisimhan

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் .
 வனஜா பாட்டியின் மகள் பத்மா ,மதுரையில் இருந்தார்.
பெரியகுளத்திலிருந்து வண்டியில் அழைத்துப் போய்.
அங்கிருக்கும் பெரிய டாக்டரிடம் பார்த்துக் கொள்ளவேண்டும்
என்று பாட்டிக்கு ஆசை.
நீலா நீயும் கொஞ்ச நாள் நிம்மதியா இரு. நான் மதுரைக்குப் போய் டாக்டர் கிட்டுவைப் பார்த்துவிட்டு,

மருந்து வகையறா வாங்கி வருகிறேன் என்று சொல்லிப் பார்த்தார்.
அவரது மகனுக்கு அம்மா அவ்வளவு தூரம் சென்று
 அவஸ்தைப் பட வேண்டாமே என்றிருந்தது.
பாட்டிக்கு  சகோதரிகள் அங்கே இருந்தார்கள்.

மகளும் பெரிய இடத்தில் வாக்கப் பட்டிருந்தாள்.
வாகனம்,பங்களோ,வேலைக்காரர்கள் என்று வசதியான இடம்.
பத்மாவுக்கும்.
கணவர் அங்கு போக்குவரத்து நிறுவனம் ஒன்றில்
உயர் பதவியில் இருந்தார்.
அவளுக்கும் இரு மகள்கள். அங்கே ஆங்கிலப் பள்ளியில்
படித்துவந்தார்கள்.
மதுரையில் அப்போது,பாடல் பள்ளிகளும், நடனப் பயிற்சிக் கூடங்களும்
 இருந்ததால் பொதுவாகவே கலகலப்பு மிகுந்த இடமாக இருந்தது
பத்மாவின் அகம்.
 மதுரை விஜயத்துக்கு முக்கிய காரணம்,
பாட்டிக்குத் தன் பாரம்பரிய வெள்ளிப் பாத்திரங்கள்
 நகைகள் புடவைகளை, மூன்று பேத்திகளுக்கும்
பிரித்துக் கொடுத்துவிடவேண்டும் என்பதே.
அதுவும் மகனுடைய பெண் சுந்தரியிடம் பாசம் அதிகம்.
ஏற்கனவே தன்னிடம் இருந்த காசுமாலையை அந்தப் பெண் கழுத்தில் அணிவித்து அழகு
பார்ப்பார்.
இன்னும் பவழ மாலை, கெம்புத் தோடு,காஞ்சிரக்காய் மாலை,
காசிமணிமாலை இரட்டைவடம் என்று
வரிசையாக இருந்த நகைகளை மகளுக்கும் மருமகளுக்கும்
 பிரித்துக் கொடுக்க எண்ணம்.
மகனிடம் சொல்லி மகளை வண்டி அனுப்ப சொன்னார்.
மனமில்லாமல் தங்கைக்குத் தொலை பேசினார் நடராஜன்.

அவளும் வார இறுதியில் வண்டியை அனுப்புவதாகவும்,
அம்மாவுக்குத் துணையாக நீரஜா,குமார் இருவரையும் அனுப்பும்படியும்
சொன்னாள்.
குழந்தைகளுக்குக் கார் பயணம், அத்தை வீட்டுக்குப் போவது
என்று இரட்டை சந்தோஷம்.. பயணத்திற்கு வேண்டிய உணவு,
தன் மாமியாருக்கான மருந்துகள்,நல்ல பட்டுப் புடவைகளாக
நான்கு, அவசரத்தேவைக்குத் துண்டுகள் என்று
தயார் செய்தாள் நீலா. மனம் முழுவதும் கவலை.
அம்மா ஒரு வாரத்தில் வந்துவிடுங்கள்
என்று கேட்டுக் கொண்டாள். ஓ. அப்படியே
செய்துடறேன். நீ கவலைப் படாதே. பத்மா எட்டூருக்குப் பாத்துப்பாள் என்று
கிளம்பியே விட்டார் வனஜாபாட்டி.

No comments: