Blog Archive

Wednesday, January 23, 2019

முதுமை சிறப்பு .3

Vallisimhan
எல்லோரும் இன்பமாக வாழ வேண்டும்.
  வந்து இரண்டு நாட்களுக்குப் பேச நிறைய விஷயங்கள் இருந்தன அம்மாவுக்கும் பெண்ணுக்கும்.
பாட்டியோட வண்டியில் வந்த குழந்தைகள் , திங்கள் காலை
வீடு திரும்பினர்.
அத்தையின் வீட்டை விட்டுப் போகவே மனமில்லை.
தோட்டம், அங்கிருக்கிற மாமரம், ,அதில் அத்திம்பேர் தொங்க விட்டிருந்த
ஊஞ்சல்,
நல்ல நட்பு காட்டிய அத்தையின் பெண்கள் எல்லாமே
குழந்தைகளுக்கு  வெகு இனிமையாக இருந்தன.
வசதியான வீடும்,அலங்காரமும், எங்கும் வீசிய இனிமையான வாசம்

எல்லாம் பிடித்து இருந்தன. அடுத்த ஞாயிறு அவர்கள் பெரிய குளம் வருவதாகக் கூறியதும் இவர்கள் கிளம்பினர்.
அடுத்த நாள் மருத்துவரோடு சந்திப்பு.
 வனஜாபாட்டியை அன்புடன் வரவேற்றவர் எல்லாவற்றையும் விசாரித்துத் தெரிந்து கொண்டார்.
இன்னும்  இதய பரிசோதனை செய்ய வேண்டும் அம்மா.
நீரிழிவு நோயால் வரும் பாதிப்புகளைச் சொன்னதும் பாட்டிக்கு
வருத்தம் அதிகரித்தது.

டாக்டர் ,பாட்டியின் அண்ணா 51 வயதிலியே இருதய நோயில் இறைவனடி
சேர்ந்ததை நினைவுக்கு  கொண்டு வந்தார்.
தனக்கு மருந்துகள் கொடுக்கும் படியும்,பரிசோதனை எல்லாம் வேண்டாம் என்றும் சொல்லிவிட்டார்
வனஜா பாட்டி.
தன் மருமகள் நன்றாகப் பார்த்துக் கொள்வதாகவும்.
உணவுக் கட்டுப்பாடில் இருப்பதாகவும், அடிக்கடி நீர் கழிப்பதுதான் வேதனையாக இருப்பதாகவும்
சொன்னார்.

இங்கு மகள் வீட்டில் பாட்டிக்கு அந்த வசதிகள் இருப்பதை
டாக்டர் அறிவார். இங்கேயே இருந்துவிடுங்கள்.
அவர்கள் உங்களை வாராவாரம் வந்து பார்க்கலாமே என்று யோசனை
சொன்னார்.
மகனை விட்டுக் கொடுக்க விரும்பாத பாட்டிம்மா
யோசனை செய்வதாகச் சொன்னார்.
கூட வந்த பத்மாவிடம்  விஷயங்களைக் கண்டிப்பாகச் சொன்னார்.
வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய கட்டாயத்தையும் சொன்னார்.
பத்மாவைப் பயம் சூழ்ந்தது.
வீடு திரும்பும்போது களைப்புடன் சீட்டில் சாய்ந்து
உறங்கிவிட்ட அம்மாவின் கைகளைப் பற்றிக் கொண்டாள்.
வீடு வந்ததும் பழைய உற்சாகத்துடன்
தன் அறைக்குச் சென்று பெட்டியைத் திறந்தார்  பாட்டி.
அம்மா அவசரம் இல்லை .நீ கொஞ்ச நேரம் படுத்துக் கொள்.
என்ற பத்மாவிடம், சும்மா இருடி,
இதுக்காகத்தான் வந்தேன்.
நீ வேண்டாம்னு சொல்லாதே.
உன் கணவர் நன்றாக எல்லாம் செய்கிறார். இருந்தாலும் பாட்டியின் ஆசீர்வாதமாக
உன் குழந்தைகளுக்கு நான் கொடுக்க வேண்டும்.
இந்த காசிமணி மாலை இரட்டை வடம், 20 பவுன் தேறும்.
சிகப்பு அட்டிகை நீலாவுக்குக் கொடுக்கிறேன்.
இந்தக் கெம்பு ராக்கொடியும், தோடுகளும்
புது மோஸ்தரில்  செய்து உன் பெண்களுக்குக் கொடு.
அப்பாவுக்கு  மலேயாவிலிருந்து  வைரம் கொண்டுவந்து கொடுத்தார்
ஒரு நண்பர். அதான் சாமினாதன்.  அவர்தான்.

அதை இரண்டு பதக்கமாக்கி வைத்திருக்கிறேன்.
உனக்கும் ,நீலாவுக்கும் ஒவ்வொன்று.

ஒரு மோதிரம் பேரனுக்கு செய்து வைத்துவிட்டேன்.
அப்பாவுக்கும் இதெல்லாம் தெரியும்.
என்று சொல்லி ஓய்ந்தாள்.
சரிம்மா. இப்ப சாப்பிடவா. காரமில்லாத கூட்டும், வேக வைத்த கொண்டக்கடலை சுண்டலும் கீரையும் இருக்கிறது.
உனக்குப் பிடித்ததைச் சாப்பிடு.
உன் பாத்ரூம் சௌகர்யமா இருக்கா.
ஆமாம் பத்மா. அறைக்கு வெளியிலேயே அழகாகக் கட்டி இருக்கியே.
ரொம்ப சௌகரியம்.
இதோ கைகால் அலம்பிக் கொண்டு வந்துவிடுகிறேன்.
உன் அண்ணா கிட்ட பேச வேணும். பக்கத்துத் தபால் ஆபீஸிற்கு வந்து அவன் பேசணும்.

சாயந்திரமா அவனைக் கூப்பிடு. நான் இல்லாமல் அவன் இருந்ததே இல்லை.
பாவம் குழந்தை என்று சொல்லும் அம்மாவைப் பார்த்து சிரித்துவிட்டாள்
பத்மா.  அடுத்த பதிவில் பூர்த்தியாகும்.

No comments: