Blog Archive

Saturday, January 26, 2019

சுமைகளை இறக்கி வைத்துவிடுங்கள் 1

Vallisimhan

எல்லோரும் நலமாக வாழ வேண்டும் .
2018.................
பொழுது போகவில்லை என்கிற பிரச்சினையே கிடையாது
நிர்மலாவுக்கு.
காலையிலிருந்து மகன் வேலைக்குக் கிளம்பி,
மருமகள் , பேத்திகள் அலுவலகம், கல்லூரிகள் என்று கிளம்பியதும்,

கையடக்கமாக இருக்கும் ரேடியோவைத் திருப்பிவிடுவாள்.பழைய கால டேப்
ரெகார்டரும் இணைந்த அந்த இசைப் பொக்கிஷம் கணவர் மஸ்கட்டிலிருந்து
வாங்கி வந்தது.

வீட்டிலிருப்பவர்களுக்கு இசை பிடிப்பது இல்லை.
இதுவே பெரிய அதிர்ச்சி நிர்மலாவுக்கு.
அவளுக்கு எழுந்ததிலிருந்து ஏதாவது இசை கேட்க வேண்டும்.
வேலைகள் செய்து கொண்டே  ,பாடுகள் பின்னணியில்
ஒலிக்க உற்சாகமாக அவள் நாட்கள் நகர்ந்த காலம் உண்டு.

இசையொலி கேட்டால் அங்கே நிர்மலா இருக்கிறாள் என்று அர்த்தம்.
அறுபதுகள், எழுபதுகள்,எண்பதுகள் எல்லா காலத்தின் ,தமிழ் ,
ஆங்கிலம்,இந்தி என்று பெரிய கலெக்ஷனே உண்டு..

2000ஆம் ஆண்டு மஸ்கட் பீச்சில் அவள் கணவர் சுந்தர்
ஒரு சுழலில் மாட்டி, உயிரில்லாத உடலாக கரையொதுங்கும் போது
 ,நம்பினவர்கள் யாரும் இல்லை.
நீச்சல் நன்கு தெரிந்தவர். எப்படி அந்த இடத்தில் இழுக்கப் பட்டார் என்பதே
பெரிய ஆச்சரியமாக இருந்தது.
ஆறடி உயரத்துக்கு ,நல்ல உறுதியான ,உடல் கட்டு கொண்டவர்.

அதுவும் மஸ்கட் கடற்கரை ரொம்ப சாதுவானது என்பது அனைவருக்கும்
தெரிந்ததே.
பையன்கள் அப்போது அமெரிக்காவுக்கு மேல் படித்துக் கொண்டிருந்தார்கள்.
பெரிய கம்பெனியில் நல்ல வேலையில் இருந்தவர்,
சகல மரியாதைகளோடு பிரத்தியேகமாகத் தயாரிக்கப்
பட்ட பெட்டியில், சென்னைக்குக் கொண்டுவரப்பட்டபோது
கதறிய
பெற்றோர்களுக்கு ஆதரவாக இருந்தது நிர்மலாவும்
அவள் மகன்களும் தான்.

வாழ்க்கை மாறியது. அதே வருடத்தில்  திருமணங்கள்
நடந்தன. மனைவிகளுடன் படிப்புக்குத் திரும்பினர்.
ஐந்தாறு வருடங்களில், தாத்தா பாட்டி மறையவே

திரும்பி வந்து தனியே இருந்த அம்மா நிர்மலாவை
அழைத்துக் கொண்டு திரும்பினர்.
இதோ 12 வருடங்களாக கனெக்டிகட்டுக்கும் சியாட்டிலுக்குமாக,இந்தியாவுக்குமாக
யார் சுமை 
மாறி மாறி இருந்து வருகிறாள்  62 வயது நிர்மலா.

அவள் தான் மாறவில்லை.அவள் பெற்ற செல்வங்கள்
பாதி அமெரிக்கன்களாக மாறி இருந்தனர்....

18 வயதில்  பையன்களாக அனுப்பி வைத்ததிலிருந்து
அவர்கள் மாறி இருக்க வேண்டும்.

தன் சோகம், மாமியார்,மாமனாரின் இழப்பு இந்த சுமைகளில்
இவள் உளைந்து கொண்டிருக்கும் போது அவர்கள்
 வாழ்வு மாறி இருக்க வேண்டும்.
ஏதாவது இவள் பேச முற்பட்டால்,ஏதாவது மாற்றுக்
 கருத்து சொல்ல வந்தாலே அவர்களுக்குத் தப்பாகப்
பட்டது.+++++++++++++++++++++++++++மீண்டும் பார்க்கலாம்






No comments: