Blog Archive

Sunday, April 17, 2022

இணையம் படுத்தும் நேரம். April 17.2022

வல்லிசிம்ஹன்இணையம் படுத்தும் நேரம்.

பாட்டு இல்லை.
சாட்டு இல்லை

நெட்ஃப்ளிக்சும் இல்லை. ப்ளாகர் இல்லை.
ஜி  மெயிலும் இல்லை.

கடவுளே நன்றி. 
இதை எழுதி சேமிக்க ஒரு அழகி இருக்கிறாள்.
6.33 காலை ஏப்ரில் 17.

நம் ஊரானால் பக்கத்தில் இருக்கும் எக்ஸேஞ்சை 
அழைத்து என்ன தொந்தரவு என்றால்
ஏதாவது பதில் வரும் .கம்ப்ளைண்ட் கொடுங்கம்மா
வந்து பார்க்கச் சொல்கிறேன்.

கொஞ்ச நேரம் கழித்து மணி வருவார்.
வீட்டை சுத்தி முத்தி பார்ப்பார்.
டெலஃபோன் கம்பி தவிர எல்லாம் அவர் கண்ணில்
படும்.
எலி இருக்குதாம்மா? இல்லையே அப்பா. எல்லா
வேரையும் கெல்லி வச்சிருக்கே மா.
நான் ஒரு நல்ல எலிபோக்கி வச்சிருக்கேன்
வாங்கி வரட்டுமா.?

வேண்டாம்ப்பா. நீ கனெக்ஷன் மட்டும் பாரு.
நீங்க ஒருத்தர்தான் இங்கே கணினி
பயன்படுத்துகிறீர்களா. 
உங்களுக்குக் கொடுத்த நேரம் எல்லாம் தீர்ந்து
போச்சோ?
இதுக்குன்னு கம்ப்ளைண்ட் கொடுக்கணும்னா
மந்தைவெளி தலமை போஸ்ட் ஆஃபீஸ் 
போகணும்மா.
இதெல்லாம்  20 வருடங்களுக்கு  முந்தின செய்தி.
அப்புறம் மொபைல் ஃபோனில் தம்பிகளொடு
பசங்களோடு ,தோழிகளோடு பணம் கொடுத்து
வாங்கிய இணைப்பில் பேசிய நாட்கள் தொடர்ந்தன.

நோகியா உலகை இணைத்த காலம்.
இணையம் இருக்கும் போது ஸ்கைப், யாஹூ மெசஞ்சர்,
எல்லாம் குடும்பங்களை இணைத்தன.
பேரங்களோடு, பேத்திகளோடு பார்த்து பேசி,
இணையம் கிடைக்காத காலங்களில் 
நெட் கஃபே சென்று, ஒரு மணிக்கு 
இத்தனை ரூபாய் என்று பேசி வந்த நேரங்கள்.


இணையம் இல்லாவிட்டால் இருக்கவே இருக்கு 
வீட்டுக் காரும், வீட்டுக்காரரும்.:)
அவர் அவரது வேலை முடிந்த போது 
என் மேல் இரக்கப் பட்டு வாகனத்தில் அழைத்துக் கோவில்கள், ராசியில் சீட்டுக் கட்டுவது, காஞ்சீவரம் சில்க்கில் காட்டன் புடவைகள் வாங்குவது, ஸ்ரீவித்யா ஸ்டோர்சில்
குங்குமம்,அகர்பத்தி,சாம்பிராணி,மஞ்சள் பொடி, லஸ் டெய்லர் 
கடை என்று அழைத்துச் சென்று
மயிலை ரவுண்ட் அப் முடிப்பார்.

அவருக்கும் தோதுப் படவில்லையானால்
இருக்கவே இருக்கு ஸ்ரீராம் டிராவல்ஸ், ஒரு பார்த்தசாரதியோ,
ஒரு கிருஷ்ணசாமியோ, ஒரு செல்வமோ
 நல்ல வண்டியுடன் வந்துவிடுவார்கள்.

வண்டி எடுத்துக் கொண்டு எங்கு செல்ல வேண்டும் 
என்று அவனுக்கும் தெரியும்.
அம்மா ஹிக்கின்பாதம்ஸா ? என்று கேட்பான்.
ஆமாம் என்றதும்

போகிற வழியில் நம்ம வீட்டுப் பாப்பாக்கு துணிமணி
எடுக்க ஃபாப் இந்தியா போகணுமா என்று வேறு
கேட்பான்.

அதுவும் முடிந்த பிறகு,கை நிறைய புத்தகங்கள், துணிமணிப்
பைகள் என்று வண்டியில் ஏறியதும்,
அம்மா? க்ராண்ட் ஸ்னாக்ஸ் போக வேண்டுமா என்பான்.
அச்சோ அது மறந்து போச்சே..
என்றபடி அங்கேயும் போய்,
சிங்கத்துக்குப் பிடித்த பாதாம் அல்வா, தட்டை ,முறுக்கு
என்று வாங்கி வருவேன்.
நமக்கும் ஒரு காஜி கிடைக்கும்.

சின்ன மகனுக்குத் தான் அப்போது 
இந்தப் பண்டங்கள் கிடைக்காது. உடனே ஒரு
தொலைபேசி(எஸ்டி டி) அனுப்பறேண்டா என்றால்
சரிம்மா போஸ்ட் ஆஃபீஸ் வழியாவே அனுப்பு. டிஹெச் எல் எல்லாம்
நிறைய காசு ஆகும் என்பான்.
என் அப்பா வளர்த்த பையன் ஆச்சே. பணத்தின் 
மதிப்பு தெரிந்தவன்:)


 எல்லாம் செய்து முடித்து
வீட்டுக்கு வந்தால், சிங்கம் வேலை  முடித்து
தன்னோட நேஷனல் ஜியோக்ரஃபிக்குப் போய்
விடுவார். அதற்கப்புறமும் ஐயாவை
எதற்கும் அசைக்க முடியாது.
எட்டு மணிக்கு சாப்பாடு, 9 மணிக்குத் தூக்கம்.

நான் மட்டும் இணையம் கிடைத்ததா
என்று பார்த்து இருப்பதை
உறுதி செய்து கொண்டு ஒரு புலம்பல்
பதிவும், இதோ இந்தப் பதிவு மாதிரியே
செய்துவிட்டு சாயி நாதன், லக்ஹ்மி நரசிம்ஹன் 
எல்லோரையும் வணங்கி உறங்கச் சென்று விடுவேன். இதை எழுதி 
முடிக்கையிலும் கடந்த 5 மணி நேரமாக வைஃபை இல்லை.

ஹாட்ஸ்பாட் ஏற்படுத்திக்கிறான் பேரன்.
இதோ இன்னோரு இணையம் இல்லை பதிவும் ரெடி
அனைவரும் தொடர்பில் இருப்போம்.

+++++ Points:)
  ஒரு புத்தகம் படித்து முடித்தேன்.
இந்த வீட்டு வானொலியில் பாடல்கள் கேட்டேன்.
நம்ம ஊர் மாதிரி  நெட் இணைப்பை
நிறுத்தி ரீஸ்டார்ட் செய்து
செய்து பார்த்தேன்.

குளிர்பெட்டியைத் துடைத்து வைத்தேன்:)
மகள் இறங்கி வந்து இந்த சப்டிவிஷன் முழுவதும் 
இண்ட்டர் நெட் இல்லை என்று உறுதி செய்து விட்டுப் போனாள்.
காலை எழுந்ததும் வேர்டில் போடாதது கையைக் கட்டிப்
போட்ட மாதிரி ஆச்சு:)


17 comments:

இராய செல்லப்பா said...

இந்தப் பதிவைப் பத்திரப்படுத்துங்கள். எதிர்காலத்திலும் பயன்படும்! இணையம் என்பது எல்லா நாட்டிலுமே இப்படித்தான். திடீரென்று படுத்தி எடுத்துவிடும். ஆனால் ஒரு நாளைக்குள் சரியாகிவிடும்.

ஸ்ரீராம். said...

ஹா..  ஹா..  ஹா..  சில விஷயங்களுக்குப் பழகி விட்டால், அது கொஞ்சநேரம் இல்லை என்றாலும் கஷ்டமாக இருக்கிறது!  என்னதான் கோளாறாம்? இந்த சாக்கில் வெளிவந்த பழைய நினைவுகள் அருமை.

வல்லிசிம்ஹன் said...

வணக்கம் திரு. ராய செல்லப்பா.
நலமா?

நீங்கள் சொல்வது சரியே, முன்பு சென்னையில்
இது போல இருந்திருக்கிறது.
இங்கு வந்து இது இரண்டாவது தடவை.

பழகின எதையும் விட்டு இருப்பது சிரமமாகி விடுகிறது:)
மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
இங்கே எல்லாம் காரணம் சொல்ல மாட்டார்கள்.
டிவி, இணையம் எல்லாமே ஒரு கம்பெனி வழங்குகிறது.
திடீரென்று நின்றுவிடும்.
வாடிக்கையாளர்களுக்கு ஒரு அறிவிப்பு வரும் 11.30க்கு
இணைப்பு வரும் என்பார்கள். வந்துவிடும்:)
ஆமாம் பழைய நினைவுகள் வந்து போயின:)

Geetha Sambasivam said...

பழைய நினைவுகள் எனக்குள்ளும் வந்தன. அப்போ ஆரம்பகாலத்தின் டாடா இன்டிகாம் தான் இணைய சேவை வழங்கியது. பாடாய்ப் படுத்தி எடுத்து விட்டார்கள். பின்னர் பிஎஸ் என் எல் வாங்கினதும் பிரச்னை அதிகம் வந்தது இல்லை. ஆனால் இங்கே ஶ்ரீரங்கம் வந்ததும் கொஞ்சம் பிரச்னை தான். அதுவும் என்னோட மொபைலில் பிஎஸ் என் எல் இணைய இணைப்பை இணைக்கவே முடியலை. ஆகவே தனியாருக்கு மாறினோம். அது தான் ஏழு வருடங்களாக. பராமரிப்பு எனச் சொல்லாமல் கொள்ளாமல் நிறுத்துவாங்க. அதோடு அவங்க இருக்கும் பகுதியில் மின்சாரம் போச்சுன்னாலும் எங்களுக்கு வராது.

நெல்லைத்தமிழன் said...

இணையம் இல்லைனா நிஜமாவே கை ஒடிந்தது போலத்தான். அதிலும் மோகைல் கனெக்‌ஷனும் போனால்... அது ஒரு தனி சுகம்... எதையெல்லாம் இழந்திருக்கிறோம் என யோசிக்கலாம்.

Thulasidharan V Thillaiakathu said...

ஹாஹாஹாஅ ஹாஹ அம்மா இணையம் பழகிவிட்டதால் அது இல்லை என்றால் கொஞ்சம் கஷ்டமதான் ஆனால் அன்று வீடு சுத்தமாகும்! ஹாஹாஹா அதாவது என்னைச் சொன்னேன். கரண்ட் இல்லை என்றாலும் இப்படித்தான். வாசிப்பது எல்லாமே இணையத்தில் என்பதால் கையில் புத்தகம் கிடையாதே வாசிக்க முடியாது என்பதால் பெண்டிங்க் வீட்டு வேலைகள், யாருக்கேனும் அழைப்பது பெண்டிங்கா என்று யோசித்து நினைவுபடுத்தில் கொண்டு அழைப்பது என்று.

சென்னை என்றால் உறவினர் வீடு உண்டு. இங்கு கடைக்குத்தான் போவேன்.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா நீங்கள் சொல்லியிருப்பது எல்லாம் நினைவுக்கு வந்தது. அப்போது பி எஸ் என் எல் இணையம் தானே. போய்விடும். லைன் எங்கேனும் கட் ஆகும். அடிக்கடி அழைக்க வேண்டியதாக இருக்கும். அப்போது ப்ளாக் இல்லை எனவே இந்தக் கவலை இல்லை!

அப்போது யாஹூ சாட். ஸ்கைப். நீங்கள் சொல்லியிருப்பது போல். ஆனால் நெட் சென்டர் போனது இல்லை. இணையம் ரொம்ப காஸ்ட்லி அப்போது அப்படித் தோன்றியது.

ரசித்து வாசித்தேன் அம்மா உங்கள் பழைய நினைவுகளை.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

இப்போது இணையம் இல்லை என்றால் கடினம்தான் சில விஷயங்களுக்கு. நான் மொபைல் வழிதானே இணையம். இல்லை என்றாலும் ரொம்பத் தெரிவதில்லை. ஏதேனும் முக்க்கியம் என்றால் மட்டும் தெரியும்.

உங்கள் நினைவலைகள் சுவாரசியம்

நீங்கள் சொல்லியிருக்கும் காலகட்டத்தில் இணையம் எங்கள் வீட்டில் இல்லை. இங்கெல்லாம் அது இல்லாமலே போன காலம் அது, ஏதேனும் என்றால் கம்ப்யூட்டர் நெட் சென்டருக்குத்தான் போக வேண்டும். இப்போது அப்படி இல்லை

துளசிதரன்

கோமதி அரசு said...

இணையம் இல்லாவிடால் கஷ்டம்தான்.
பழைய நினைவுகள் அருமை.
பழைய காலத்தில் உள்ளவர்கள் எப்படி இருந்தார்களோ ! இப்போது மின்சாரம், நெட் இல்லாமல் நம்மால் இருக்க முடியவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாசாம்பசிவம் மா,
என்றும் நலமுடன் இருங்கள்.

இணைய இணைப்பு வந்ததிலிருந்து நாம் சந்தித்த சவால்கள்
கொஞ்சம் இல்லை.
அப்புறம் ஏடிஎஸெல் வந்தது.
கணக்குப் பார்த்து உபயோகித்தோம். இப்போது போல்
விழித்திருக்கும் நேரம் எல்லாம்
இணைந்திருக்கும் காலம்.

மொபைல்,டிவி, இணையம் இல்லாத நேரம் சிரமமாக
இருந்தது.
பிறகு பழகி விட்டது.
வெளியில் போவதற்கும் வழி இல்லை.
தொற்று பயம். சாதாரண ஜலதோஷம் வந்தாலேயே

குடும்பத்தினருக்குப் பயம் வந்து விடுகிறது.

இதை எல்லாவற்றிலிருந்து தப்பிக்க ஒரு மருந்துதான்
எழுதுவது.


நம் எல்லோரின் நிலைமையும் இதே தான்,. தனியார்
கனெக்ஷன் தான் இப்போது சென்னையில்
சாத்தியம் ஆகிறது.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் முரளிமா,

என்றும் நலமுடன் இருங்கள்.
நம் வாழ்க்கை இந்த அலைபேசியிலும் இணையத்திலும்

கலந்து விட்டது. முன்பாவது யாரையாவது சென்று பார்ப்போம்.
யாராவது வீட்டுக்கு வருவார்கள்.

இப்போது பேசுவதே வாட்ஸாப் பில் தான்.
முகம் பார்த்துக் கொள்வதும் அதிலே.
இந்தத் தொற்று வந்து நாம் இணையத்தோடு சார்ந்திருப்பது அதிகரித்து
விட்டது.
அதனால் தான் இந்தக் கவலை பிடித்துக் கொள்கிறது.
என் மகன் களுக்கு என்னைக் காலை வேளையில்
விளித்துப் பேசுவது வழக்கம்.
அம்மா ஃபோனை எடுக்கவில்லை என்றதும்

சட்டென்று திகைத்துப் போகிறார்கள். அதனால் தான் நேற்று
திண்டாடிப் போனேன்.

மிக நன்றி மா

வெங்கட் நாகராஜ் said...

இணையம் இல்லாத நாட்கள்...... எனது சில பயணங்களில் இப்படியான அனுபவம் உண்டு அம்மா. இதுவும் நல்லதற்கே. இணையம் இல்லாத நாட்கள் அவ்வப்போது தேவையும் கூட!

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
நலமுடன் இருங்கள்.

இணையம் என்று மரத்தடி.காம் இதெல்லாம் இருந்தன.
மகள்,மகன் இருவர் வெளியூருக்கு 1996க்குக்
கிளம்பிப் போனார்கள். அப்போதான் கணினியே வாங்கினேன்:)

கணினி வழியாகப் பேரனைப் பார்க்கத்தான்
யாஹூ , எம் எஸ் எண் மெசஞ்சர். சிஃபி.காம் எல்லாம்
பயன்படுத்தினோம்.ஜி மெயில் ஆரம்பித்தோம்.
ப்ளாகருக்கு வந்தோம்..
பெரிய கதை.
எல்லோருக்குமே இந்த ப்ரேக் தேவைதான்.
வேறு வேலைகள் நடக்கும்.
புத்தகங்களைக் கையில் பிடித்துப் படிக்கத்தான்
இஷ்டம். இன்னும் மின் புத்தகங்கள்
பக்கம் போகவில்லைமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் துளசிதரன்,
என்றும் நலமுடன் இருங்கள்.

அவசியத்துக்காகக் கணினியும், இணையமும்
வந்தன. பிறகு பதிவுலகம் அறிமுகம்.

நீங்கள் சொல்வது போல மொபைலில் செய்யலாம்.
என்னால் அப்படி அதில்
இணைய வேலை செய்ய முடியவில்லை.

ரொம்பச் சிறிய எழுத்தாக இருக்கிறது.
கம்ப்யூட்டர் நெட் செண்ட்டர் எனக்கு மிக உதவியாக
இருந்தது அப்போது.
துபாய் போன்ற இடங்களில் அதுதான் எனக்கு மிகப்
பெரிய உதவி. இப்போது வைஃபை எப்போதும் இருக்கிறது.
ஒன்றும் கஷ்டம் இல்லை.
மிக நன்றி மா

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.
தபால் மட்டுமே இருந்த காலங்களை நாம் பார்த்திருக்கிறோம்.
கடிதம், சில சமயங்களில் தந்தி.
பிறகு தான் தொலைபேசியே வந்தது.

26 வருடங்களாகக் கணினி வந்திருக்கிறது.
எல்லாமே தலைகீழாக மாற்றியது இணையம்.

தற்போது சற்று விலகி இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டிய நேரம்.

இப்போது வாட்ஸாப் பயன் படுவது போல வேறொன்றும்
இல்லை. கடவுளுக்கு நன்றி.
பழங்கணக்குப் பார்க்க வைத்து விட்டது
இந்த ஓய்வு.:) நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட்
என்றும் நலமுடன் இருங்கள்.

ஆமாம். நீங்கள் சொல்வது சரிதான். விலகி வேறு விஷயங்களையும்

அனுபவிக்கக் கற்க வேண்டும்.
இந்தத் தொற்று வந்ததில் நிறைய நல்ல
பழக்கங்கள் விலகிப் போயிருக்கின்றன.
மீண்டும் பழகுவோம். நன்றி மா.