Blog Archive

Thursday, January 12, 2023

கறவைகள் பின் சென்று.........28 Margazhi 2023



வல்லிசிம்ஹன்,






கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்

அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து உந்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை
சிறு பேர் அழைத்தனமும் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்//


 ஆய்க்குலத்து இடையர்கள் இடைச்சியர் போல எங்களுக்கும் 
உன் பரிபூரண மகிமை தெரியாது. பீஷ்மரைப் போல ஆயிரம் நாமம் சொல்ல
இயலாத அறியாத பிள்ளைகள்
நாங்கள். உன்னைச் சிந்தையில் வைத்து பலவிதமாக அழைக்கிறோம்
''கோவிந்தா! மாடுகளுடன் அன்பாகக் கருணையுடன்
அவைகளைத் தழுவி , மகிழ்ச்சியுடன் மோக்ஷம் அளிக்கப் 
போகிறாய்.
உன்னையே பின் தொடர்கிறோம் நாங்கள்.
உனக்குப் பிடித்த தயிர் அன்னத்தை
இந்தக் காடுகளின் நிழலில் உட்கார்ந்து
உன் கை பட்ட சோற்றை 
உண்ண வந்துள்ளோம்.

சிறுபிள்ளைகளான எங்களின் அறியாத் தமிழைக் கேட்டு 
நீ சினம் கொள்ள மாட்டாய். பசுக்களின் பார்வை மொழி அறிந்த 
உனக்கு எங்களின் கள்ளமில்லாப் பாசமும் புரியும்.

அதை உணர்ந்து 'கேசவா எங்களை நீ ரட்சிக்க வேண்டும் என்று
மனமுருக யாசிக்கிறாள். ஆண்டாள் நாச்சியாரின்
நேசமும் பக்தியும்  என்றும் நம்முடன்.

இந்தப் பாசுரம், எனக்கு என் பாட்டிகளை எப்பொழுதுமே நினைக்க வைக்கும்.
அவர்களின் அன்பையும் தயவையும் எப்பொழுதும் நினைக்கக்
கடமைப் பட்டிருக்கிறேன்.

கண்ணன் நாமம் வாழி. ஆண்டாள் திருவடிகளே சரணம். 
அடுத்தாற்போல் வரும் போகி,பொங்கல், கனு நாட்களுக்கான் இனிய வாழ்த்துகள்.

ஆரோக்கியமும் ஆனந்தமும் நம் வாழ்வில் பொங்கட்டும்.


ஸ்ரீ கோதையின் திருப்பாவை 28 ஆம் பாசுரம்.

முந்தைய பாசுரத்தில் கோவிந்தனைக் கண்ட உற்சாகத்தில்
அவனிடமிருந்து பரிசாகப் பெற்ற  ஆடை அணிகலன் களை

அணிந்து,
அடுத்த வேலையாக அவன் மாடுகளை
மேய்க்கும் கானகத்துக்கு அவனுடனேயே 
சென்று  வீட்டில் தயார் செய்த தயிர் சாதம் முதலானவைகளை
உண்டு அவனுடன் களித்திருக்க வேண்டுமாம்.

ஒரு சிறுமி உல்லாசப் பயணம் செய்யும் ,  தோழிகளோடும் கண்ணனுடனும் அனுபவிக்கும்
பூரண மகிழ்ச்சியைக் கண்கூடாக உணர்த்துகிறாள்.
நாச்சியார்.
எல்லோரும் வாழ்க வளமுடன்.

6 comments:

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

நலமா? எப்படி உள்ளீர்கள்.? தங்கள் பதிவுகளுக்கு நான் வந்து வெகு நாட்களாகி விட்டன. இடையில் உங்களின் நிறைய பதிவுகளை மட்டுமின்றி, நம் சகோதர, சகோதரிகளின் பதிவுகளையும், முறையாக முன்பு போல் படிக்க முடியாதபடிக்கு ஏதோ சூழ்நிலைகள் அமைந்து விட்டன. மன்னிக்கவும்.ஆனால் உங்களை நினையாத நாளில்லை.

இன்றைய பதிவின் பாசுரமும் அதன் விளக்கமும் அருமையாக உள்ளது. கண்ணன் நாமங்களைச் சொல்லி அவனை இடையறாது துதித்துக் போற்றுவோம். அதற்கும் அவனருள் கிடைக்கட்டும். ஸ்ரீஆண்டாள் நாச்சியாரின் அனுக்கிரஹமும் உடனிருந்து அவனிடம் நம்மை அழைத்துச் செல்லட்டும்.

வரும் நல்ல நாட்களுக்கான தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. தங்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

ஸ்ரீராம். said...

பாசுரமும் விளக்கமும் அருமை.

நெல்லைத்தமிழன் said...

நன்றாக எழுதியிருக்கீங்க.

கூடாரை வெல்லும் பாசுரத்தைக் கேட்டால் சர்க்கரைப் பொங்கலும், கறவைகளைக் கேட்டால் தயிர் சாதமும் எனக்கு நினைவுக்கு வரும்.

மாதேவி said...

'சூடிக்கொடுத்த பூங்கொடி ' அவளின் பக்தியும் , காதலும் சொல்ல வார்த்தைகள் இல்லை. மார்கழி வெள்ளி நாளில் அவள் பாதம் பணிந்து வணங்குகின்றோம்.

கரந்தை ஜெயக்குமார் said...

தமிழர் திருநாள் வாழ்த்துகள்

வல்லிசிம்ஹன் said...

அன்பின் சகோதரி கமலாமா,
என்றும் நலமுடன் இருக்க வேண்டும். இனிய பொங்கல் திரு நாள்
நல் வாழ்த்துகள்.

சம்சாரம் சாகரம் என்று இந்த மூன்று மாதங்களாக
மிகச் சிறப்பாக இறைவன் உணர்த்தி வருகிறார்.

தாங்களும் இது போல சிரமங்களை உணர்ந்திருப்பீர்கள். குடும்பம்
நோயின் பிடியிலிருந்து விடுபடுவது தீராக் கொடுமையாக இருக்கிறது.
வழி காண்பித்து இறைவன் காத்து வருகிறார்.
இருந்தும் விடாது இறைவனை வழிபடுவது ஒன்று தான் நிம்மதி.

தங்களின் நல் வார்த்தைகளுக்கு மிக நன்றி மா.
இந்தத் தை மாதத்திலிருந்து அனைவரும்
கதிரவன் அருளில் புது வெளிச்சம் பெற்று நன்மை அடைய வேண்டும்.
வாழ்க வளமுடன்.