Blog Archive

Thursday, January 24, 2008

261,கயத்தாறு ..ஸ்ரீவில்லிபுத்தூர்...1946


அம்மாவுக்கும் அப்பாவுக்கும் எட்டு வயது வித்தியாசம்.
அதைப் பெரிதாக நினைக்காத காலம் அது.
அம்மாவுக்குத் தெரிந்தது, அப்பா நன்றாகச் சாப்பிட வேண்டும்.
தன்னால் அவருக்கு ஒரு தொந்தரவு வரக் கூடாது.
கண்ணைக் கட்டிக் காட்டில விட்ட மாதிரி இருந்தாலும்,
அக்கம் பக்கம் வீடுகள் என்று எதுவும் இல்லாத போதும்,
அதைக் கண்டு சிந்திக்கவோ பயப்படவோ தெரியாத குணம்.
தபாலாபீஸ் ப்யூன் மூலம் காய்கறி வாங்கவும், மற்றபடி சென்னையிலிருந்து தனக்கு வேண்டும் என்கிற
எம்ப்ராய்டரி விஷயங்கள்,துணிகள் இவற்றைத் தன் அம்மாவுக்கு
எழுதி போஸ்ட் பார்சல் என்று வரவழைத்துக் கொண்டார்.
அப்பொழுது கல்கியிலு, ஆனந்த விகடனிலும்
வந்து கொண்டிருந்த தொடர் கதைகளின் சுருக்கம் சீனிம்மா(அம்மாவோட அம்மா)
மூலம் வாராவாரம் அப்டேட் செய்து கொண்டு விடுவார்.
அப்போது கல்கியில் அலை ஓசை வந்திருக்குமோ.
வீட்டு வைத்தியம் என்று ஸ்ரீஹரி என்பவர் எழுதிய வார அத்தியாயங்களை
அப்பா பைண்ட் செய்தது இப்போதும் அப்பா வீட்டில் இருக்கிறது.
இருவருக்கும் பத்திரிகை படிக்கும் வழக்கம் இருந்ததால் த ஹிண்டுவோ ,
இண்தியன் எக்ஸ்ப்ரசோ வாங்கினார்கள்.
அம்மாவுடைய ஆங்கில அறிவு வளர்ந்தது ஃப்ரான்க் மொரேஸ் இது போன்ற
அரசியல் எழுத்தாளர்களீன் சிந்தனைகள்,எப்பவாவது நெல்லை,தூத்துக்குடி போன்ற
பெரிய ஊர்களிலிருந்து அவ்வப்போது கிடைக்கும் ரீடர்ஸ் டைஜஸ்ட்,மஞ்சரி என்றுதமிழ்ப் பத்திரிகை
இவற்றால் தான்.
பிற்காலத்தில் நான் அம்மாவின் தெளிவான பேச்சைக் கேட்டு அதிசயித்திருக்கிறேன்.
இருவருக்கும் ஒரே மாதிரி விருப்பங்கள். கட்டுப்பாடுகள். கயத்தார்றில் கட்டபொம்மன்
தூக்கில் போடப் பட்டது கூட அம்மாவிடம் அப்பா சொல்லவில்லையாம்.வருத்தப் படுவாரோ என்று.
பிற்காலத்தில் 1957ல் வீரபாண்டிய கட்டபொம்மன் படம் பார்த்துவிட்டு ,வெளியே வரும்போது நான்
மிகவும் அழுது தலைவலி வரவழைத்துக் கொண்ட போது,
அம்மா ''எல்லாவற்றிலும் என்ன பலன் கிடைத்தது என்று யோசிக்கணும் அவர் அந்த மாதிரி இறந்ததால் நமக்குச் சுதந்திரம் கிடைத்தது. அதே போல நம்மால் பயனுள்ள செயல் ஏதாவது செய்ய முடியுமா என்று யோசிக்கணும்னு
சொன்ன போது அப்பா நமட்டுச் சிரிப்பு சிரித்தது இப்பவும் ஞாபகம் வருகிறது.:))
கொஞ்ச நாட்களில் செர்ருப்புப் போட்டுக் கொண்டு வெளியில் நடந்தால் அதிசயமாகப் பார்க்கும்
மற்றப் பெண்களையும்,
பாறைக் கிணாற்றிலிருந்து ஊறின
தண்ணீரை 'சேந்தி' எடுப்பதும் பழகிவிட்டது.
காலையில் குருணைக் கஞ்சி சாப்பிட்டு விட்டுக் காரியாலயம் செல்லும் அப்பா,
மதியம் உணவுக்கு 12 ம்ணிக்கு வருவதற்குள் விறகடுப்பில் வெண்கலப் பானையில்
சாதமும்,கரியடுப்பில் ஒரு குழம்பும்,ரசமும்,பொரியலும் செய்துவிடுவார்களாம்.
விறகு யார் வாங்கிக் கொடுப்பார்களோ என்று நான் கேட்டால் ,விறகு வெட்டும் இடம்தான் பக்கத்தில் இருந்தது.
அதில் நான்கு விறகு(காய்ந்தது) வாங்கினால் ஒரு வாரம் வரும் என்பார்கள்.
அம்மாவுக்கு கதை எழுதவும் பிடிக்கும்.
மதியம் தூங்க ரொம்பவே பிடிக்கும்.
பின்னாட்களில் ,தன் நீண்ட கூந்தலுக்கு ஒரு குட்டி முடிச்சுப் போட்டுக் கொண்டு
கையில் ஹிண்டு பத்திரிகையைப்(பிடித்து) படித்தவாறே தரையில் தூங்கும்
அம்மாவை சீண்டுவதும் நினைவில் இருக்கிறது;)
அப்பா அம்மா குடித்தனம் அழகாக நடப்பதற்கு சாட்சியாக ஒரு சிசு உருவானது.

அதற்கு வழமையாகச் செய்ய வேண்டிய பூச்சூட்டல்,ஸ்ரிமந்தம்,வளைகாப்பு
என்று சகலமும் அழகாகச் செய்து வைத்துத் திருவேங்கடம் பாட்டி சென்னைக்குச் செய்தி சொன்னதும்,
அங்கிருந்து ஸ்ரீ வீரராகவனும் ருக்குமணி அம்மாளும் வந்து செங்கோட்டை எக்ஸ்ப்ரஸ்ஸில்


சேச்சிப் பாப்பாவைப் பூப் போல் அழைத்துப் போனார்கள்.
தன்னைப் போலவே அடக்கமாக இருக்கும் அங்கவஸ்திரத்தைப் பிடித்த கையோடு அப்பா ரயில்வே
ப்ளாட்ஃபார்மில் நிற்கும் காட்சி எனக்குத் தோன்றுகிறது..
அம்மாவுக்கு அப்போது பதினாறு வயது.

பின்குறிப்பு. ;
சென்னையில் அழகாக சுருள் சுருள் முடியாகப் பிறந்த ஆண் குழந்தை சரியாக ஆறாம் மாதம் தலையில்
கரப்பான் எனப்படும் தோல்வியாதி வந்து
குணப்படுத்த முடியாமல் இறைவனடி சேர்ந்தது ஒரு தீராத வருத்தம்.
அதை மறக்க ஒரு வருடம் ஆனது அந்த இளம் தம்பதிக்கு.
ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மாற்றலாகி வந்துவிட்டார் அப்பா.

இரண்டு வருடங்கள் கழித்து, திருவேங்கடவல்லி என்கிற ,ஆண்டாள் ரேவதி பிறந்தாள்:)


19 comments:

வல்லிசிம்ஹன் said...

முதலில் ,என் பெற்றோரின் முதல் குழந்தை பற்றி குறிப்பிட வேண்டுமா என்று நினைத்தேன். துளசி அதையும் எழுதணும்னு சொல்லியதும்,
ஏட்டில் இந்த அண்ணாவைப் பதியலாம் என்று அவனைப் பற்றியும் சொல்லிவிட்டேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

அருமையாக வரலாற்றினைப் பதிவாக்குகிறீர்கள். எனக்கெல்லாம் இந்த மாதிரி நேச்சுரலா எழுத எப்போ வருமோ தெரியல்ல. மேலும் உங்கள் நினைவாற்றல். என்னதான் பின்னாளில் தாய்-தந்தையிடம் கேட்டு அறிந்தாலும், அதனை எவ்வளவு ஸ்ரத்தையாக கேட்டுக் கொண்டிருந்தால் இன்று எழுத முடியும் என்று தெரிகிறது.

டீச்சரும் சரியாகவே சொல்லியிருக்கிறார்கள். இல்லையென்றால் அந்த 6 மாசமே வாழ்ந்த ஜீவனை யார் ஆவணப்படுத்த முடியும்?.

அப்படியாகத்தானே குழந்தை ரேவதி ஜெனனம். "ஜனனி ஜென்ம செளக்யானாம் வர்தனிம் குல சம்பதாம்" என்கிறபடியாக குழந்தை ரேவதி @ வேங்கட வல்லி பிறந்தார்.

துளசி கோபால் said...

ஆறு மாசமோ, ஆறு நாளோ, ஆறு நிமிஷமோ நம்மோடு இருந்த நம் சொந்தத்தை விட்டுறமுடியுமா வல்லி.

வாழ்க்கைச் சரித்திரமுன்னா எல்லாமே 'அடக்கம்'தான்.
பாவம் அண்ணா.

ஆமாம். என்ன பெயர் வைத்தார்களாம்?

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் மௌலி.
அப்படித்தான் இந்த அண்ணன் பந்தத்தை இப்போதும் நினைக்கிறேன்.
எந்தப் புண்ணிய ஆத்மாவொ தன் மிச்ச் ஆYஉளை இங்கே வந்தூ பூர்த்தி செய்து கொண்டு போய்விட்டது. அம்மா,அப்பா பேச மாட்டார்கள் அந்தக் குழந்தையைப் பற்றி. பாட்டி சொல்லுவார். அப்படியொரு அழகோடு இருந்தது என்று.
பரவாயில்லை.கஷ்டப்படாமல் போனதும் நல்லதுதானே.:))

வல்லிசிம்ஹன் said...

வரணும் துளசி.
அடக்கம் தான்.

அம்மா எந்தக் குழந்தையும் தூக்கிப் போகிறார்கள் என்றால் பார்க்கவே மாட்டார்.
மிருதுவான மனுஷி.நன்றிம்மா.

கோபிநாத் said...

\\மதுரையம்பதி said...
அருமையாக வரலாற்றினைப் பதிவாக்குகிறீர்கள். எனக்கெல்லாம் இந்த மாதிரி நேச்சுரலா எழுத எப்போ வருமோ தெரியல்ல\\

வல்லிம்மா

மதுரையம்பதி சார் சொல்லறது 100 /100உண்மை. ஒவ்வொரு விஷயத்தையும் கவனமாக, அழகாக பதிவு பண்ணியிருக்கிங்க ;)

ambi said...

அருமை. நான் பேச நினைத்தையேல்லாம் மதுரையம்பதி பேசி விட்டார். :))

//அப்போது கல்கியில் அலை ஓசை வந்திருக்குமோ.//
கீதா பாட்டிகிட்ட கேட்டா தெரிஞ்சுட போகுது. :p

அலையோசை எழுத கல்கிக்கே நான் தான் ஒரு குயர் பேப்பர் வாங்கி குடுத்தேன்!னு உங்களுக்கு பதிலை ஒரு பதிவாக போடவும் வாய்ப்புள்ளது. :))

வல்லிசிம்ஹன் said...

கோபிநாத்,
கதையாக எழுதுவது வரலாறாக ஆகிவிடுகிறது.
நீங்களும் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
எல்லா மகிழ்ச்சியான சம்பவங்களையும்
எழுதலாம்.
நன்றாகத்தான் வரும். கவலையே வேண்டாம்....

வல்லிசிம்ஹன் said...

அம்பி தெமேன்னு இருக்கிற கீதாவை வம்பு பண்ணலைன்னா உங்களுக்குப் பொழுதே போகாது.:))

எப்போலிருந்து மதுரையம்பதி அம்பிக்குக் குரல் கொடுக்க ஆரம்பித்தார்:))0

மெளலி (மதுரையம்பதி) said...

//எப்போலிருந்து மதுரையம்பதி அம்பிக்குக் குரல் கொடுக்க ஆரம்பித்தார்:))0//

அதானே, எனக்கே தெரியல்ல?, அம்பி எப்போதிருந்துங்கறதையும் நீயே சொல்லிடுப்பா....அப்படியே சர்விஸ் சார்ஜும் குடுத்துடு...சரியா?

தி. ரா. ச.(T.R.C.) said...

வீட்டு வைத்தியம் என்று ஸ்ரீஹரி என்பவர் எழுதிய வார அத்தியாயங்களை
அப்பா பைண்ட் செய்தது இப்போதும் அப்பா வீட்டில் இருக்கிறது.

ஆமாம் இவர் நுங்கம்பாக்கத்தில் வைத்தியம் செய்துகொண்டு இருந்தார். நான் கூட இவரிடம் என் அம்மாவைக் கூட்டிக்கொண்டு சென்று இருக்கிறேன். அதே மாதிரி நாடோடி என்பவரும் ஹாஸ்யக்கதைகள் எழுதிவந்தார்

அலையோசை எழுத கல்கிக்கே நான் தான் ஒரு குயர் பேப்பர் வாங்கி குடுத்தேன்!னு உங்களுக்கு பதிலை ஒரு பதிவாக போடவும் வாய்ப்புள்ளது. :))
சூப்பர் அம்பி

தி. ரா. ச.(T.R.C.) said...

உண்மை விஷயங்களை உள்ளது ஊள்ளபடி உணர்ச்ச்சிபூர்வமாக எழுத்து வடிவில் படைக்கிறீர்கள் நன்றி.

இலவசக்கொத்தனார் said...

அட ஹீரோயின் இண்ட்ரொடக்ஷன் ஆயாச்சு!! இனிமே கதை சும்மா பிச்சு உதறப் போகுது!! :))

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் தி.ரா.ச.

ஸ்ரீஹரி எழுதின தமிழ் வார்த்தைகள் வைத்துத் தான் நிறைய நோய்களைப் பற்றியும்,மருந்துகளைப் பற்றியும்,
அவைகளைத் தடுப்பது எப்படி என்றும் ஒரு சிறு துளி தெரிந்து கொண்டேன். ஏட்டு அறிவுதான்:)
நீங்கள் நேரேயே பார்த்து இருக்கிறீர்கள்!!!

//உண்மை விஷயங்களை உள்ளது உள்ளபடி உணர்ச்ச்சிபூர்வமாக எழுத்து வடிவில் படைக்கிறீர்கள் நன்றி.//

என்ன செய்யறது தி.ரா.ச.,
பெற்றோர்னு வரும்போது
எத்தனை நன்றி சொன்னாலும் முழுவதும் சொன்ன திருப்தி வரவில்லை. முடிந்ததை எழுதியாவது வைக்கலாம் என்ற நப்பாசை தான்..

வல்லிசிம்ஹன் said...

இ.கொ.:)))
ரொம்ப வயசான ஹீரோயின்!!

மசாலா இல்லையே(கதைல:))

சாதாரணமாதான் ஓடும்..:))

பாச மலர் / Paasa Malar said...

உறவுகள் பற்றிச் சும்மா நினைத்தாலே சுகம்..அதிலும் இப்படிச் சுவையாக நீங்கள் எழுதுவது படிக்கையில்..நன்றாக உள்ளது..

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் பாசமலர்.
உறவுகள் சுவை. இன்னும் கற்றுக்கொண்டு இருக்கிறேன்.
நம் இணைய உறவூகளும் மேம்பட
இறைவனை வேண்டிக்கொள்ளுகிறேன்.
நன்றிம்மா.

Geetha Sambasivam said...

//அம்மாவுக்கும் அப்பாவுக்கும் எட்டு வயது வித்தியாசம்.
அதைப் பெரிதாக நினைக்காத காலம் அது.//

இது நம்ம காலத்திலேயும் தொடருது, இப்போவும் தான் வல்லி, இந்த வித்தியாசமெல்லாம் பெரிசா நினைக்காதவங்க உண்டு இல்லையா? :))))))))))))))))

Navaneeth said...

i request you to please inform me whether the book "veettu vaithiyam" by Shri Hari is available in any book shop. if do where? kindly mail me : navaneeth.15460@gmail.com