Blog Archive

Tuesday, February 20, 2024

மனமும் செயலும்...சில நிகழ்வுகள்.....



வல்லிசிம்ஹன்

எல்லோரும் ஆரோக்கியம் அமைதியோடு வாழ இறைவன்
அருள வேண்டும்.பேசுவதில் இனிமை, பொறுமை,பேசுபொருள்
அந்தத் தருணத்துக்கு ஏற்றார்ப்போல்
இருத்தல் எல்லாமே அவசியம்.

நல்லவராக இருப்பதைவிட நம் நன்மை 
பிறருக்குக் கடத்தப் படவேண்டும் 
என்றால் மனது, வாய்மைக்கு உட்பட்டு
நாவன்மை இருக்க வேண்டும்.

நன்மை கொடுக்கும் எனில் பொய் சொல்லலாம்
என்று படித்திருக்கிறோம்.
பொய் சொல்லவும் ஒரு திறமை வேண்டும்.

பொய் சொல்லிவிட்டு மறந்து போய்
மாற்றி சொல்லி மாட்டிக் கொள்பவர்களையும்
பார்த்திருக்கிறேன்.:)

புதிதாக இப்போது ஒரு நாவல், (தலையணை அளவு பெரிது)
வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
அதில் வரும் சட்ட மன்ற நிகழ்வுகள்
என்னை மேலே இருக்கும் சிந்தனையில் கொண்டு விட்டன.

இந்த ஊரில் நடக்கும் கொலை, அது தொடர்பான
சாட்சியங்கள் , நேர் விசாரணை, குறுக்கு விசாரணை
என்று திடீர் திருப்பங்கள், வழக்கு மும்முரத்தில் வீட்டைக் 
கவனிக்காத அதிகாரியின் மனைவி பிரிந்து போவது,
ஜூரியாக வந்தவர்கள் மிரட்டப் படுவது
என்று படு சுவாரஸ்யமாகப் போகும் நாவல் ஜேம்ஸ் பாட்டர்சன்
எழுதிய ''ஜட்ஜ் அண்ட் ஜூரி."
ஒரு நாளைக்குப் 30 பக்கங்களுக்கு மேல்
படிப்பதில்லை.

சுவாரஸ்யத்தை இழக்க விரும்பாவிட்டாலும்
மனதில் அழுத்தம் இல்லாமல் படிக்கவே விரும்புகிறேன்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அண்மை நிகழ்வுகள்.
முன்பு  வெகு நாட்களுக்கு முன்பு பிரியப் போகிற
ஒரு தம்பதியைப் பற்றி எழுதி இருந்தேன்.
காலமும் சூழ்னிலைகளும் மாறும் போது 
மனங்களும் மாறுகின்றன என்பதுதான்
யதார்த்தம்.
 அந்தக் கணவன் மனைவி இப்பொழுது மீண்டும் இணைய
முடிவெடுத்திருக்கிறார்கள்.

இத்தனை நாட்களாக அவர்களைக் கவனித்து வந்த பெற்றோர்கள் மீண்டும்
 சொந்த இடத்திற்குத் திரும்புவதாக
என்னிடம் சொல்லிச் சென்றார்கள்.
தம்பதியர் , குழந்தைகளுடன் இனிதே வாழ வாழ்த்துவோம்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சொல் பற்றியே மீண்டும் சொல்ல வருகிறேன்.
இனிய உளவாக நேர்மையான பேச்சுக்கு என்றும் பலனுண்டு.
வாய் மட்டும் மரியாதையாகப் பேசிச் செயலில் வன்முறை காட்டும்
மனிதர்களின் குடும்பங்கள்
சிதறு படுகின்றன.
கணவனின் இனிய பேச்சால் அவனையே நம்பி வந்த 
பெண்ணுக்கு
அவனுடைய செயல்கள் அதிச்சியூட்ட
இனி அவர்கள் வாழ்வு என்னாகுமோ என்ற கவலை
வருகிறது. இந்தக் கதைதான் அடுத்து வரப் போகும் பதிவு.

கணவன்,மனைவி இருவருக்கும் 35 வயதுக்குள் தான் இருக்கும்.
திருமணம் ஆகி பத்து வருடங்கள் ஆகின்றன.

அந்தப் பெண்  அவள் கணவன் இருவரும் ஒரே கல்லூரியில்
படித்துக் காதலித்து மணம் முடித்தவர்கள். மேக்னா முகேஷ் தம்பதியர்.
அடுத்தடுத்து இரு குழந்தைகளும் பிறந்தன.

சென்ற மாதம் ஒரு நாள் காலையில் 
அந்தப் பெண்ணிடம் இருந்து தொலைபேசி வந்தது.

இன்று ஒரு நாள் குழந்தைகளைக் கவனித்துக்
கொள்ள முடியுமா என்று உதவி கேட்டாள்.
குழந்தைகள் வழக்கமாக ஒரு பாதுகாப்பகத்துக்குப்
போய் விடும் , இவளும் கணவரும் வேலைக்குக் 
கிளம்பிப் போவார்கள்.
ஒன்றும் புரியாததால் நாங்கள் சரியென்று விட்டோம். 
குழந்தைகளைக் கொண்டுவிட வந்த மேக்னாவின்
முகம் வெளிறிப் போய் இருந்தது.
சில மாதங்களாக அவர்கள் யார் வீட்டுக்கும் வருவதில்லை.
முகேஷ் மட்டும் எப்போதும் போல்
எங்களை வீட்டுக்கு வெளியே பார்த்தால் கையசைத்து விட்டு செல்வான்.

  ஏதாவது உடல் நலம் சரியில்லையா என்று புரியாமல் அவளைப் பார்த்த போது 
காலையிலிருந்து மூச்சு விடுவதே சிரமமாக இருப்பதாகவும்

மருத்துவரிடம் அப்பாய்ண்ட்மெண்ட் கிடைத்திருப்பதால் இப்போது செல்வதாகவும் சொன்னாள்.
அவளை உட்காரச் சொல்லி 
அக்குப்ரஷர்  வைத்தியம் செய்து அனுப்பினோம்.
இரண்டு மணி நேரம் கழித்து வருவதாகச் சொல்லி அவளும் 
சென்றாள்.

சற்று நேரத்தில் முகேஷின் கார் வந்தது.
படபடப்பாக உள்ளே வந்தவன். குழந்தைகளைக் கண்டதும் 
நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.

என்னா ஆச்சு ஏன் இந்தப் பதட்டம் என்று விசாரித்தோம்.
மேக்னாவின் டாக்டர் அவள் இரண்டு நாட்கள்
மருத்துவமனையில் தங்கிப் பரிசோதனை
செய்து கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்
என்ற செய்தியச் சொன்னான்.

மேற்கொண்டு அவன் சொன்னதுதான் பதட்டப் பட வைத்தது.
To be continued....






14 comments:

நெல்லைத் தமிழன் said...

பயமுறுத்தும் விதத்தில் கதை போய் சட் என நின்றுவிட்டதே

மளைவியின் அருமை ஆண்களுக்கு, நான் உட்படப் புரிவதில்லை. என்ன செய்ய?

நெல்லைத் தமிழன் said...

மீண்டும் எழுதுவதில் மகிழ்ச்சி. எப்போதும்போல் அருமை

நானும் பத்து பக்கம் படிச்சுட்டு அப்புறம் இரண்டு நாட்கள் கழித்து புக்கைத் தூக்குவேன்

ஸ்ரீராம். said...

எப்படியும் அந்தப் புத்தகத்தை முடித்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து சரியாக திட்டமிட்டு படித்து வருகிறீர்கள்.  நல்ல யுக்தி!

ஸ்ரீராம். said...

பிரிந்த தம்பதியர், மன்னிக்கவும் பிரிவதாக இருந்த தம்பதியர் மறுபடி இணையப்போவது சந்தோஷம் என்று சொல்லப்போகும் அது நேரம்...

ஸ்ரீராம். said...

அடுத்த தம்பதியர் பற்றி சொல்வது வருத்தத்தையும், ஒருவித பயத்தையும் ஏற்படுத்துகிறது.  பத்தாண்டு வாழ்ந்த பின்னர் புரிதல் இல்லையா...

வல்லிசிம்ஹன் said...

அன்பின் முரளிமா,
பொறுத்து விடாமுயற்சியுடன் எழுதுவதற்கு
முயற்சி செய்கிறேன். நம்ப முடியாத கைவலி!!!
என்னைப் பார்த்தால் எனக்கே சிரிப்பாக
இருக்கிறது:) இது போலப் பேசுவதும் சரியாகப்
படவில்லை. அதனால் தான் இந்தக் கட்டத்தில்
நிறுத்தினேன். வேறு பயமுறுத்த எண்ணம் இல்லை:)
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் மா முரளி, அப்போதுதான் உவை கூடும். இவ்வளவு விலை கொடுத்து வாங்கி விட்டு
ஒரே வாரத்தில் முடிப்பது சரியாகப் படவில்லை:)

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம், என்றும் நலமுடன் இருங்கள்.

புத்தகத்தை மேஜை மேல் வைத்துதான் படிக்கிறேன் . படு சுவாரஸ்யம். வீட்டு வேலைகள்
குறுக்கிடுகின்றன.
பிரிவதாக இருந்த தம்பதியர் இப்போது
நல்ல ஒற்றுமையுடன் இருக்கின்றார்கள்.

அவர்களைவிட இவர்கள் இளையவர்கள்.
புரிதல் இல்லாமல் மணம் செய்து கொண்டார்களோ என்று நினைக்கிறேன்.

பெரிய படிப்பு ,நல்ல சம்பளம் பணக்கார பின்புலம்.
தில்லிக்காரர்கள்.

அழகான குழந்தைகள். என்னவென்று உடனே எழுதப் பார்க்கிறேன்மா.
இறைவன் அவர்களுடன் இருக்க வேண்டும்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

நலமா? தங்கள் அருமையான எழுத்துடன் பதிவு அருமை.

/நல்லவராக இருப்பதைவிட நம் நன்மை
பிறருக்குக் கடத்தப் படவேண்டும்
என்றால் மனது, வாய்மைக்கு உட்பட்டு
நாவன்மை இருக்க வேண்டும்./

அழகாக வார்த்தைகள்.. அருமையான வாசகம். தாங்கள் திட்டமிட்டு படிக்கும் கதை புத்தகத்தின் கதையும் நன்றாக உள்ளது. தங்கள் திட்டமிட்டபடி தொடர்ந்து அப் புத்தகத்தை படித்து முடிக்க என் வாழ்த்துக்கள்.

அந்த பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்ந்து வாழ முடிவெடுத்திருப்பதற்கும் வாழ்த்துகள். இனியாவது காலம் முழுக்க ஒருவரையொருவர் விட்டுப் பிரியாமல் இருக்க இறைவன் அருள் செய்ய வேண்டும்.

இரண்டாவது நிகழ்வு மனதை கலங்கச் செய்கிறது. அவர்களுக்குள் அப்படி என்ன மனஸ்தாபம்.? அந்த குழந்தைகளின் தாய்க்கு இப்போது உடல்நிலை எவ்வாறுள்ளது.? நல்ல பதட்டமான இடத்தில் தொடரும் எனப் போட்டு விட்டீர்கள். விரைவில் நல்ல செய்தியோடு சுபமான தகவலை தெரிவியுங்கள்.

அவர்கள் பட முடிவு ஞாபகமில்லை. எப்போதோ பார்த்தது. அதில் அனைவரின் நடிப்பும் நன்றாக இருக்கும்.சுஜாதா எனக்கு மிகவும் பிடித்த நடிகை. அவர் எல்லா படங்களிலும், அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை நன்றாகச் செய்வார். தொடர்கிறேன் பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வெங்கட் நாகராஜ் said...

அன்பின் வல்லிம்மா... நலம்தானே. நாங்களும் நலம்.

புத்தக வாசிப்பு - நல்ல விஷயம். ஒரு நாளைக்கு முப்பது பக்கம் - நல்லது தான். சில மாதங்களாக விட்டிருந்த வாசிப்பு வழக்கத்தினை நானும் இப்போது மீண்டும் தொடங்கியிருக்கிறேன். வாசிப்பு மகிழ்ச்சியைத் தரவல்லது.

பிரிய இருந்த தம்பதியர் மீண்டும் இணக்கமாக இருப்பது மகிழ்ச்சி அளித்தது. நல்லதே நடக்க எல்லாம் வல்லவன் அருள் புரியட்டும்.

அடுத்த தம்பதியர் பற்றிய தகவல் - வேதனை. அவர்களுக்கும் நல்லதே நடக்க எனது பிரார்த்தனைகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் சகோதரி கமலா மா,
என்றும் நலமுடன் இருக்கப் பிரார்த்தனைகள்.

முதலில் மேக்னா நலமுடன் இருக்கிறாள்.குழந்தைகளும் நலம்.
முகேஷும் நலம்.

உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி.

தம்பதிகளின் பிரிவுக்கு அவர்கள் மன சஞ்சலமே காரணம்.
இப்படிப்பட்ட விவாகம், விவாக ரத்து எல்லாம் நிறைய
காதில் விழுகின்றன.
நம் காலம் வேறு. இப்போதைய தலைமுறையின்
ஈடுபாடுகளும் எண்ணங்களும் வேறு.

திரு பாலச்சந்தர் எடுத்த 'அவர்கள்' படம் இப்போது
நினைவுக்கு வந்தது தான் அதிசயம்.
முடிந்தால் பார்க்கவும். மீண்டும் தொடர்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட், என்றும் நீங்கள் ஆதி, ரோஷ்ணி அனைவரும் நலமுடன் இருக்கப்
பிரார்த்தனைகள்.

புத்தகங்கள் நம் பிரியாத் துணைகள்.
இப்பொழுது இன்னோரு புத்தகம் ஆரம்பித்து விட்டேன்.

பலவித காரணங்களால் மன விகாரம் ஏற்படுகிறது.
பாதிக்கப் படுபவர்கள் குழந்தைகளே.
அந்த வகையில் பார்க்கப் போனால் விவாஹம் அமைதியாக இருக்கப்
பிரிவும் ஒரு நன்மையே.

வந்து படித்ததற்கு மிக நன்றி மா.

மாதேவி said...

பிரிந்த தம்பதியர் சேர்ந்தது மகிழ்ச்சி.

தொடர இருக்கும்கதை ஆரம்பத்திலேயே மனதை உறுத்துகிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி என்றும் வளமுடன் இருக்க வேண்டும்.
சில சமயங்களில் மாறுபட்ட முடிவுகளையும் ஏற்க வேண்டி வருகிறது.
தனித்தனியாக வாழ்ந்தாலும் நெருடல் இல்லாத வாழ்க்கை
மனசுக்கு அவசியம் இல்லையா அம்மா? தொடருவோம்.