எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
முன்பே எழுதி இருப்பதை
நினைவூட்டல் பதிவாக எழுத விரும்புகிறேன். முன்போ பின்போ பார்த்தறியாத ஒருவர் நம்மை எப்படி ஈர்க்க முடியும்.?
ஒரு சாதாரண சந்திப்பு . பாட்டிகளும் பேத்திகளுமாகப் பேசிக்கொள்வது எப்படி ஒரு திருமணமாக முடிந்தது?
அந்த 1965 இல் ஒரு வெட்டிப் பொழுது போக்கும் 17 வயதுப் பெண்ணுக்கு டவுன் என்ற சந்தைப் பேட்டைக்குப் போகப் பிடிக்கும். இதுவே என்னைக் கல்லூரியில் சேர்த்திருந்தால்
முதலாம் ஆண்டு இலக்கியத்தில் படித்திருப்பேன்.
''பசுமலையிலிருந்து ஃபாத்திமா கல்லூரி வெகு தூரம். இரண்டு பஸ் ஏறிப் போனால் மகள் தொலைந்து போக வாய்ப்பு அதிகம்'' என்று என் தந்தையின் கணிப்பு.
5ஆம் எண் பஸ் வருகிறது. அதில் ஏறிப்போனால் செண்ட்டிரல் பஸ் நிறுத்தம். 1 ஆம் எண் பஸ் வரும். அதில் ஏறினால் நேரே கல்லூரிக்குப் போய் விடலாம் என்று பக்கத்து வீட்டு திருமதி டானியல் சொன்னார்.
பெண்ணின் பாதுகாப்பு குறித்து அப்பாவின் கருத்துகள் எல்லாம்
பழங்காலம். டிப்ளோமா இன் ஜர்னலிசம் தபால் வழியா
படிக்கட்டும். ஊர் வம்பெல்லாம் தோழிகளுக்கு எழுதுகிறாள்.
தினம் இரண்டு கவர் நிறைய எட்டு தோழிகளுக்கு செய்தி போகிறது. என்னதான் எழுதுவாளோ.:(
அதனால் அவ்வளவு தூரம் போய்ப் படிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அம்மாவிடம் சொல்லியாகிவிட்டது.
நடுவில் மீண்டும் என்னைச் சென்னைக்கு அனுப்பும்படி கேட்டு வந்த மாமாவுக்கும் கண்டிப்பாக முடியாது என்று சொல்லிவிட்டார்.
அதற்கும் ஒரு காரணம் இருந்தது. அப்போது மாமாக்களுக்குக் கல்யாண வயது:))) அனாவசியப் பேச்சுகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்று எண்ணி விட்டார்.:)
என்னுடைய சென்னைத் தோழிகளின் படிப்பு அடுத்த வருடத்துக்கு நகர்ந்து விட்டது.
அப்பாவுக்குச் சித்தி பையன் டவுனில் இருந்தார். அடிக்கடி திருப்பரங்குன்றம் முருகனைத் தரிசிக்க வருவார்.
அப்பாவுக்கும் பிள்ளையார் மேல் அபார பக்தி. இருவரும் பேச ஆரம்பித்தால் நேரம் போவது தெரியாது. சித்தப்பாவுடன் அவர் மகளும் என்னைப் பார்க்க வந்தாள்.
சென்னையில் பியுசி படித்ததால் நான் தலை கீழாக
நடக்கிறேனோ என்று பார்க்க வந்தாளாம்.
கோபம் வந்தாலும் என் கல்லூரிப் பேராசியர்கள் மகிமை எல்லாம் சொல்லி அவளை சமாளித்தேன்..
டவுனுக்கு அவர்கள் வீட்டுக்கு வரச் சொல்லிவிட்டுக்
கிளம்பினார்கள்.
நான் தம்பியைப் பார்த்தேன். ''நீ ஸ்கூலுக்குப்
போகும்போது சித்தி வீடு வரை துணை வருகிறாயாடா
என்று கேட்டுக் கொண்டேன்.அவன் மதுரை சேதுபதி பள்ளியில் எட்டாவது வகுப்புப் படித்துக் கொண்டிருந்தான்.
அப்பாவிடம் சம்மதம் பெற இன்னும் ஒரு வாரம் ஆனது.
போனதுதான் வாழ்வின் திருப்பத்துக்குக் காரணம்.




No comments:
Post a Comment