Sunday, January 10, 2010

ஒரே கல்யாண கொண்டாட்டம்தான் !!!மீள் பதிவு

அறிவிப்பு ...இதனால் சகலமானவர்களுக்கும் சொல்வது.

**********************************************************************

இந்தப் பதிவுக்குக் காரணம் திருமதி கீதா சாம்பசிவமும், தம்பி வாசுதேவனும்  தான்

**********************************************************************************************

.

எப்பவும் ஸ்கூல்பசங்களோட லீவு ஒட்டியே முன்னாளில் கல்யாணங்கள் நடக்கும். நாத்தனார் முடிச்சு போட வரணும்னால் அவங்க குழந்தைகளுக்கு லீவ் விட்டாத்தான் வரமுடியும்.

அதால கூட இருக்கலாம்.இப்பத்திக் கல்யாணம் மாதிரி இல்லையே.

வீட்டுக்கு முன்னாடி பந்தல். பந்தக் கால்போட்ட அன்னிலேருந்தே உற்சாகம் கிளம்பிடும்.

வண்டியில் வந்திருங்கும் கீற்றுகள்,வாழைமரம்,சரம் கட்டிவிடும் பழங்கள்

விதானம் கட்டும் துணி எல்லாமே ஒரே த்ரில்லிங்காக இருக்கும்.

வாசனை,பஜ்ஜி,பட்சண வகையறா செய்யப் போட்டக் கோட்டை அடுப்பு.பிரமாதமான சூழ்நிலை.

மருதாணி இட ஒரு நாள். அக்கம்பக்கம் இருக்கும் பெண்கள் முற்றுகையிட்டுவிடுவார்கள். பகல் மருதாணி,இரவு மருதாணி என்று எல்லோரும் பறித்துக் கொண்டுவந்த இலைகளை அம்மியில் வைத்து,பாக்குகளைஅதில் பொடித்துப் போட்டு,துளி எலுமிச்சஞ்சாறு பிழிந்து

ம்ம்ம் மருதாணிக்கே உண்டான ஸ்பெஷல் வாசனை வீட்டை நிரப்பும்.

அந்த மாமி,இந்த அத்தை,பாட்டிகள் குழுமிவிடுவார்கள்.

சின்னப் பெண்களிலிருந்து,பையன்கள் ,முதிர்ந்தவர்கள் எல்லோரும் கைகளில் மருதாணி இட்டுக் கொண்டுதிரியும் அழகு தனி.

மருதாணி இட்ட கைகள் காயும் வரை

அடுத்தவர்கள்,(சில பேருக்கு மருதாணி அலர்ஜி அப்பவே உண்டு) உதவி

சகல விஷயத்துக்கும் தேவைப்படும்.

இவ்வளவு நினைவும் வரக்காரணம் இந்த அனிவர்சரிப் பதிவுகள்தான்.

அப்படியே போற போக்கில எங்க கல்யாணம் நிச்சயமான கதையையும் சொல்லலாமே என்று தோன்றியது:-)

*******************************************************

மதுரையின் அருகே பசுமலை என்கிற ஊர் .அப்போது...41 வருடங்களுக்கு முன்னால் வயல்கள் ஒரு பத்துப் பதினைந்து புதிதாகக்கட்டிய வீடுகள் மெயின் ஹைவே(மதுரை/திருமங்கலம் சாலை)யை ஒட்டித்

இருந்தன.(பசுமலை பைக்காராவுக்கும் திருப்பரங்குன்றத்துக்கும்

இடையில் இருக்கும்.)

அவைகளில் ஒன்று தபால் அலுவலகம். இப்போதும் அங்கேயே தான் இருக்கிறது என்று நினைக்கிறேன்.அப்பா போஸ்ட்மாஸ்டர்.நான்கு வருடங்களுக்கு ஒரு முறை ஊர் மாறிக்கொண்டே இருப்போம்.

அப்படி வந்த இடம் பசுமலை.ஏற்கனவே பழங்காநத்தம்

இடத்தில் பாட்டியும் தாத்தாவும் இருந்ததால் மதுரை பழகின இடமாயிருந்தாலும் அப்பா என்னைத் தனியே அனுப்பமாட்டார்.

கொசுறு மாதிரி சின்னத் தம்பி கூட வந்தால், நான் போகலாம் .டவுன் என்று அழைக்கப் படும்

செண்ட்ரல் பஸ்ஸ்டாண்டைச் சுற்றியுள்ள உறவினர்களைப் பார்த்துப் பேசிவரச் சொல்லுவார்,.

அவனும் பெரிய மனது பண்ணி,தன் (சேதுபதி உயர்னிலைப்பள்ளிக்குப் ) போவதற்கு முன்னால்,என்னை எங்கள் சித்தப்பா வீட்டில் (சந்தைப்பேட்டை)விட்டு விட்டுப் போவான்.

இப்போது நினைத்தால் சிரிப்பக இருக்கிறது. அப்பொது சுதந்திரம் பறிபோன மாதிரி இருப்பேன்.

என்ன இருந்தாலும் சென்னையில் ஒரு வருடம் தங்கிக் கல்லூரிக்குப்

போய்வந்து விட்டேன்,எனக்கு இந்த அஞ்சாம் நம்பர் பஸ்ஸில்

போய்வரத் தெரியாதா என்று தோன்றும்.

கேட்க முடியுமா??

அத்தனை பயப்பட்டு இருக்க வேண்டாம்.

அதுபோல ஒரு தடவை டவுனு பக்கம் போனபோது சின்னப்பாட்டி வீட்டுக்குப் போனொம்.

அங்க வந்த தபால்களைப் படித்துக் காண்பிக்க ,மற்றும் அவங்களுக்கு வேணும் என்கிற ஏவல்கள் ,வேலைகள் எல்லாம் செய்து முடிக்கணும்.இதெல்லாம் நாமா எடுத்துச் செய்கிற வேலைகள்.

அப்படி வந்த ஒரு கடிதத்தில் நான் இது வரை கண்ணால் கூடப் பார்த்திராத

ஒரு அத்தை, ''தன் உயரமான சிவப்பான 26 வயசு ஆன பையனுக்கு

ஒரு ஒல்லியான, உயரமான,சிவப்பான,அழகான (!!!!)

பெண் யாராவது இருந்தால் பார்த்து எழுதவும் .ஜாதகம் அனுப்புகிறேன்

என்று எழுதி இருந்தார். எனக்கும் எங்க சித்தப்பா மகளுக்கும்

தாங்க முடியாத வம்பு பிடித்துக்கொண்டது.

" அதென்ன பேச்சு.ஏன் கொஞ்சம் அழகு குறஞ்சா கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்களோ. இவங்க எல்லாம் மன்மத ஜாதியோ "என்றெல்லாம் பேசி அந்தப் பாட்டியை உண்டு இல்லைனு செய்துட்டோம்.

அவங்க அசரவில்லை.

ஏன் நீங்க தான் ரெண்டு பேரு மாமா பெண்ணுங்க இருக்கீங்களே

இவ்வளவு பேசறவங்க பதில் கடிதம் எழுதுங்களேன்னு சொல்ல,

உடனே பேனாவை எடுத்தது நான்தான்..

அன்புள்ள கமலாவுக்கு,(அத்தைன்னா போட முடியும்..விஷயம் தெரிந்து போயிடுமே)

இப்பவும் உன் கடுதாசி பார்த்து சந்தோஷம்.உன் பையனுக்கு ஏத்தமாதிரி

இங்கே உன் பெரியப்பாவின் பேத்தி ஸோ அண்ட் ஸோ

இருக்கிறாள்.

சிவப்பிலேயும் சிவப்பு .

உயரத்திலேயும் உயரம்.

கிளி போல அழகு.(:))நீ ஜாதகத்தை அனுப்பு.
நான்

கோபாலன் கிட்டப் பேசிக்கறேன்.

இப்படிக்கு,

ஆசீர்வாதங்களுடன்

அம்முச் சித்தி.

இப்படி ஒரு கடிதம் அழகான கையெழுத்தில் உருவாகிப் பாட்டிக்கு வாசிக்கப்பட்டது.

நான் இந்த ஆட்டைக்கு வரலப்பானு தங்கை விலகிக் கொண்டாள்.

இதில வந்த வர்ணனைகள் நான் படித்த கதைகளிலிருந்தும்

எங்க பாட்டி அவ்வப்போது பேசும் பேச்சுகளிலிருந்தும் எடுக்கப்பட்டவை.

பாட்டிக்கு சிரிப்பு ஒருபக்கம். என் அப்பா என்ன சொல்வாரோ என்ற பயம் வேறு.

அதைப் பார்த்துவிட்டு நான் அவங்களைச் சமாதானப் படுத்தி

இதுக்கெல்லாம் பதிலே வராது என்று சொல்லி அடுத்த நிமிடம்

மறந்தும் விட்டேன்.

அதைவிட அப்போது வெளிவர இருந்த அடிமைப்பெண் திரைப்படம்,

எங்க வயசே இருக்கும் ஒரு பெண் நடிக்க வருவது பற்றிப் பேச்சு

என்று போய் விட்டது பொழுது.

பிறகு நடந்தது இன்னும் சுவாரசியம்.

நாளைக்குப் பார்க்கலாம்:-)

எல்லோரும் வாழ வேண்டும்.

இந்தப் பதிவு வெளிவர நேரம் மணநாள் காணும் எல்லோருக்கும்,காணப்போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

கடிதம் எழுதிவிட்டு தம்பியோடு அதே அஞ்சாம் நம்பர் பஸ்ஸைப் பிடித்து வீட்டுக்கு வந்து ரேடியோல பாட்டுக் கேட்டு,

என்ன ஏது என்று விசாரித்த பெற்றோரிடமும் எல்லார் நலங்களையும் சொல்லிவிட்டுப் படுக்கவும் செய்தாச்சு.

திடீரென்று மன உறுத்தல்.என்னடா ஏதாவது தப்பு செய்துட்டோமோ.

சாமி கடவுளே அந்தத் தபால் போகாம செய்திடேன் .

என்னவோ பிரார்த்தனை.

அது எப்படி நடக்கும்,நாமதான் போஸ்ட்மாஸ்டர் பொண்ணு.

சுத்தமா அட்ரஸ் எழுதி, ஐம்பது பைசா ஸ்டாம்பும் ஒட்டி

சந்தைப்பேட்டை தபாலாபீஸில் போய்ப் போடவும் போட்டாச்சு.இத்தனை நேரம் மெயில் பையில் திருனெல்வேலி எக்ஸ்ப்ரசில்

அது போய்க் கொண்டு இருக்கும்.

முகந்தெரியாத அத்தைக்குக் கடிதம்.

நமக்குக் கல்யாணத்தைப் பத்தி என்ன தெரியும்.

சிவாஜி,சரோஜாதேவி

ஜெமினி சாவித்திரி

பத்மினி எம்ஜீயார் பாடற டூயட் தெரியும்.

ஆளு யாருனு கூடத் தெரியாதே .பேரும் கேள்விப்படாத ஒரு பேரு.

அவஸ்தைடா கடவுளேனு தூங்கியும் போயாச்சு.

இரண்டு நாள் கழித்து எங்க அப்பா ஒரு பதினோரு மணிவாக்கில் வீட்டுக்குள் நுழைந்தார்.

சாவகாசமாக ஈசிசேரில் சாய்ந்துகொண்டு சேவற்கொடியோனின்தொடர் கதைபடித்துக்கொண்டிருந்த என்னை

ஒரு பார்வை பார்த்துவிட்டு சமையல் உள்ளுக்குப் போய்விட்டார்.

அப்பாவுக்கு இன்னிக்கு சீக்கிரமே பசித்துவிட்டது போலிருக்கே !என்று நினைத்தபடி மறுபடியும் ஆ.வி.யில் மூழ்கிவிட்டேன்.

கசமுச என்று பேச்சு.

இரண்டு பேருமாக வெளியே வந்தார்கள்.

அப்பா முகம் படுசீரியசாக இருந்தது.

அன்னிக்கு சித்தி வீட்டில என்ன நடந்ததுனு மெதுவாகத்தான் கேட்டார்.

சட்டுனு கடிதம் ஞாபகம் வர, ''இல்லைப்பா'',என்று ஆரம்பித்த என்னை அம்மா முறைக்க,எனக்குப் பேச்சு வரவில்லை.

''அத்தை கிட்டேயிருந்து அப்பாவுக்கு லெட்டர் வந்து இருக்கு. அப்பா பேரில எழுதினயா ஏதாவது.''

நான் மென்று முழுங்குவதைப் பார்த்த அப்பாவுக்கு

மனசு வரவில்லை.

''ஏம்மா அப்படி எழுதின.திஸ் இஸ் சம்திங் சீரியஸ்''.

என்று பேச ஆரம்பிக்க.

இவளைத் தனியா அங்கே அனுப்பினதே தப்பு. வாயை வச்சுண்டு சும்மா இருந்ததா பாரேன்.பதினேழு வயசுக்கு உண்டான விவரம் வேண்டாம்???????

என்று அம்மா வருத்தப்பட ,

சரி சரி முதல் முதல்ல மஞ்சள் தடவிக் கடிதம் வந்து இருக்கு.

தம்பிகிட்டப் பேசிட்டு மற்றதைப் பார்க்கலாம்..

என்று அப்பா திரும்பிப் போய்விட்டார்.

அம்மாவும் ஏதோ பெரிய பாரம் ஏற்றிவிட்டது போல யோசனையுடன் படுத்துக் கொண்டுவிட்டார்.

சுவற்றுக்கு அப்பால் , போனில் சித்தப்பாவுடன் அப்பா பேசுவது கேட்டது.

சொல்ல மறந்துவிட்டேன்.

போஸ்ட் ஆஃபீசும் வீடும் சேர்ந்துதான் இருக்கும்.கதவைத் திறந்து அடுத்தாற்போல் கார்ட் வாங்கலாம்,போன் பேசலாம்.

மகா சௌகரியம்:-)

மெதுவாக எழுந்து அப்பா வைத்துவிட்டுப் போன கடிதத்தைப் படித்துப் பார்த்தேன் ."அன்புள்ள,.....

சித்தி எழுதின கடிததிலிருந்த கல்யாண வயதில் உனக்குப் பெண் இருப்பது தெரிய வந்தது.

படிப்பைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம்.

கல்யாணம் ஆனபிறகு இங்கெ சென்னையில் தங்கி அவள் மேலே

டிகிரிக்குப் படிக்கலாம்.

அக்கா கணவரிடம் என் பையன் ஜாதகம் கொடுக்கிறேன்.

அவர் மதுரைக்கு நாளைக்கு வருகிறார். எல்லாம் சுபமாக முடியும். தையில் கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம்."

இதுதான் சாரம்.

அப்பா என் திருமணத்தைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.தயாராகவும் இல்லை.

பெரிய அதிர்ச்சியாகத்தான் இந்தக் கடிதம் இருந்திருக்கும் என்பது என்னுடைய சின்னமூளைக்குகூடத் தெரிந்தது.

அடுத்த நாள் சொன்னதுபோல வந்துவிட்டார் இன்னொரு அத்தை வீட்டுக்காரர்.

தானே எல்லாவற்றையும் சரி பார்த்துவிட்டதாகவும்

இதைவிடப் பொருத்தமான வரன் கிடைக்காது என்றும் பையன் 400ரூபாய் சம்பளத்தில் ...கம்பனியில் அசிஸ்டண்ட் மேனஜர் ஆக இருப்பதாகவும்

சொல்லச் சொல்ல ஒரு மாதிரி வடிவம் உருப்பெற்றது.

எனக்குப் பிடித்த ஒரே வார்த்தை அஸிஸ்டண்ட் மானேஜர்.!!!!

ஏனெனில் காதலிக்க நேரமில்லை படத்தில் அந்த நாளைய கதாநாயகன்

ரவிச்சந்திரன் அந்த வேலையில் இருப்பார்.

உங்களால் நம்பக் கூட முடியாது எங்களின் வெகுளித்தனத்தை.:)

கடிதங்கள் பறந்தன.ரகசிய விசாரணைகள் நடந்தன.

ஐப்பசியில் பெண்பார்க்கலாம் என்று முடிவாகியது.

தொடரும் அதிசயங்கள் :)

15 comments:

வல்லிசிம்ஹன் said...

நேயர் விருப்பமாகப் போடப்படும் பதிவு:)
நேயமிக்க நண்பர்கள் கீதா சாம்பசிவம்,
திருமூர்த்தி வாசுதேவன் என்கிற தம்பி வாசுதேவன்.

ஹுஸைனம்மா said...

அட, நல்ல ஸ்வாரஸ்யமாப் போகுதே கதை!! முடிவு தெரிஞ்சதுதான்னாலும் என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கு.

கீதா சாம்பசிவம் said...

எத்தனை முறை படிச்சாலும் அலுக்காத கதையல்ல வாழ்க்கை! அருமை! வேறே என்ன சொல்றது?? இது தான் உங்க மாஸ்டர் பீஸ் என்னைப் பொறுத்தவரைக்கும்!

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா ஹுசைனம்மா.
முதலா வந்திருக்கீங்க.:0)
நன்றி.
கதைதான். இதுவே என் பெண் செய்திருந்தால் எப்படி ரிஆக்ட் செய்திருப்பேன்னு தெரியலை:)

சந்தனமுல்லை said...

ஆகா...என்னென்ன வேலை நடந்துருக்கு வல்லியம்மா! :-))) சுவாரசியமா இருக்கு இடுகை..வெயிட்டிங் அடுத்த பார்ட்டுக்கு!

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா முல்லை.
மூன்று வருடம் முன்னால் எழுதினது. :)
இப்பவும் உங்களுக்குப் பிடிச்சிருக்குன்னு சொன்னால் சந்தோஷமே.

மதுரையம்பதி said...

முதல் முறையும் படித்தேன்...இப்போதும் படித்தேன் :-).
பண்டாபீஸ் காலனியில் 10 வருடங்கள் இருந்திருக்கிறேன்....பசுமலை போஸ்ட் ஆபிஸ் பக்கத்தில் இருக்கும் ரேஷன் கடையில் சாமான்கள் வாங்க வருவதுண்டு...

2 வாரம் முன்னாடி அந்த இடத்தைக் கடந்து திருப்பறங்குன்றம் செல்கையில் உங்களது நினைவு வந்தது... தற்போது போஸ்ட் ஆபிஸ், ரேஷன் கடை அங்கில்லை...

திவா said...

அடடா! நாங்கதான் குற்றவாளிகளா?
:-))
ஆனா மீள் பதிவு செய்யக்கூடியதுதான்.

துளசி கோபால் said...

மகிழ்ச்சியைப் பகிர்ந்தால் பலமடங்கு பெருகிரும்.

மீண்டும் காதல் கதை. நல்லா இருக்கு:-)))))

வல்லிசிம்ஹன் said...

வரணும் கீதா.
நன்றி. நல்ல வார்த்தைகள் கேட்க இனிமையா இருக்கு.
இன்னும் அறிவு விருத்தியாகி ,கற்பனையும் உதவி செய்யணும்னு பகவானை வேண்டிக்கறேன்.:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் மௌலி. ரொம்ப நன்றி மீண்டும் இண்டரஸ்ட் எடுத்துண்டு படித்ததற்கு:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் திவா,
குற்றவாளிகள் னு எப்படி சொல்றது.
சந்தோஷத்தை அல்லவா கொடுத்து இருக்கிறீர்கள்!!
ரொம்ப நன்றி தம்பிக்கு;)

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் துளசி, சந்தோஷத்தைப் பகிர்ந்தால் தான் மற்றவற்றை மறக்க முடியும்.:)

LK said...

@valli madam

ungal virupa padi ennoda marriage pathivu

http://lksthoughts.blogspot.com/2010/01/wedding-day.html

அபி அப்பா said...

அப்பவும் படிச்சேன், இப்பவும் படிச்சேன். எப்பவும் ரசிப்பேன் வல்லிம்மா!!!