Blog Archive

Sunday, January 10, 2010

181,கல்யாணமே வைபோகமே,இன்னொரு மீள் பதிவு

முதல்ல டிஸ்கி.....இவை...இணையத்தில எடுத்த படங்கள்.

யாரு என்னனு தெரியாது.அதனால நீங்களாவே இருந்தாலும் கண்டுக்காதீங்க.







இந்தப் பதிவு வெளிவர நேரம் மணநாள் காணும் எல்லோருக்கும்,காணப்போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.


கடிதம் எழுதிவிட்டு தம்பியோடு அதே அஞ்சாம் நம்பர் பஸ்ஸைப் பிடித்து வீட்டுக்கு வந்து ரேடியோல பாட்டுக் கேட்டு,

என்ன ஏது என்று விசாரித்த பெற்றோரிடமும் எல்லார் நலங்களையும் சொல்லிவிட்டுப் படுக்கவும் செய்தாச்சு.
திடீரென்று மன உறுத்தல்.என்னடா ஏதாவது தப்பு செய்துட்டோமோ.
சாமி கடவுளே அந்தத் தபால் போகாம செய்திடேன் .

என்னவோ பிரார்த்தனை.
அது எப்படி நடக்கும்,நாமதான் போஸ்ட்மாஸ்டர் பொண்ணு.
சுத்தமா அட்ரஸ் எழுதி, ஐம்பது பைசா ஸ்டாம்பும் ஒட்டி
சந்தைப்பேட்டை தபாலாபீஸில் போய்ப் போடவும் போட்டாச்சு.இத்தனை நேரம் மெயில் பையில் திருனெல்வேலி எக்ஸ்ப்ரசில்
அது போய்க் கொண்டு இருக்கும்.

முகந்தெரியாத அத்தைக்குக் கடிதம்.
நமக்குக் கல்யாணத்தைப் பத்தி என்ன தெரியும்.
சிவாஜி,சரோஜாதேவி
ஜெமினி சாவித்திரி
பத்மினி எம்ஜீயார் பாடற டூயட் தெரியும்.
ஆளு யாருனு கூடத் தெரியாதே .பேரும் கேள்விப்படாத ஒரு பேரு.
அவஸ்தைடா கடவுளேனு தூங்கியும் போயாச்சு.
இரண்டு நாள் கழித்து எங்க அப்பா ஒரு பதினோரு மணிவாக்கில் வீட்டுக்குள் நுழைந்தார்.

சாவகாசமாக ஈசிசேரில் சாய்ந்துகொண்டு சேவற்கொடியோனின்தொடர் கதைபடித்துக்கொண்டிருந்த என்னை
ஒரு பார்வை பார்த்துவிட்டு சமையல் உள்ளுக்குப் போய்விட்டார்.
அப்பாவுக்கு இன்னிக்கு சீக்கிரமே பசித்துவிட்டது போலிருக்கே !என்று நினைத்தபடி மறுபடியும் ஆ.வி.யில் மூழ்கிவிட்டேன்.


கசமுச என்று பேச்சு.
இரண்டு பேருமாக வெளியே வந்தார்கள்.
அப்பா முகம் படுசீரியசாக இருந்தது.
அன்னிக்கு சித்தி வீட்டில என்ன நடந்ததுனு மெதுவாகத்தான் கேட்டார்.


சட்டுனு கடிதம் ஞாபகம் வர, ''இல்லைப்பா'',என்று ஆரம்பித்த என்னை அம்மா முறைக்க,எனக்குப் பேச்சு வரவில்லை.
''அத்தை கிட்டேயிருந்து அப்பாவுக்கு லெட்டர் வந்து இருக்கு. அப்பா பேரில எழுதினயா ஏதாவது.''
நான் மென்று முழுங்குவதைப் பார்த்த அப்பாவுக்கு
மனசு வரவில்லை.
''ஏம்மா அப்படி எழுதின.திஸ் இஸ் சம்திங் சீரியஸ்''.
என்று பேச ஆரம்பிக்க.

இவளைத் தனியா அங்கே அனுப்பினதே தப்பு. வாயை வச்சுண்டு சும்மா இருந்ததா பாரேன்.பதினேழு வயசுக்கு உண்டான விவரம் வேண்டாம்???????
என்று அம்மா வருத்தப்பட ,
சரி சரி முதல் முதல்ல மஞ்சள் தடவிக் கடிதம் வந்து இருக்கு.
தம்பிகிட்டப் பேசிட்டு மற்றதைப் பார்க்கலாம்..
என்று அப்பா திரும்பிப் போய்விட்டார்.

அம்மாவும் ஏதோ பெரிய பாரம் ஏற்றிவிட்டது போல யோசனையுடன் படுத்துக் கொண்டுவிட்டார்.
சுவற்றுக்கு அப்பால் , போனில் சித்தப்பாவுடன் அப்பா பேசுவது கேட்டது.
சொல்ல மறந்துவிட்டேன்.

போஸ்ட் ஆஃபீசும் வீடும் சேர்ந்துதான் இருக்கும்.கதவைத் திறந்து அடுத்தாற்போல் கார்ட் வாங்கலாம்,போன் பேசலாம்.
மகா சௌகரியம்:-)

மெதுவாக எழுந்து அப்பா வைத்துவிட்டுப் போன கடிதத்தைப் படித்துப் பார்த்தேன் ."அன்புள்ள,.....
சித்தி எழுதின கடிததிலிருந்த கல்யாண வயதில் உனக்குப் பெண் இருப்பது தெரிய வந்தது.
படிப்பைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம்.
கல்யாணம் ஆனபிறகு இங்கெ சென்னையில் தங்கி அவள் மேலே
டிகிரிக்குப் படிக்கலாம்.
அக்கா கணவரிடம் என் பையன் ஜாதகம் கொடுக்கிறேன்.
அவர் மதுரைக்கு நாளைக்கு வருகிறார். எல்லாம் சுபமாக முடியும். தையில் கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம்."
இதுதான் சாரம்.
அப்பா என் திருமணத்தைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.தயாராகவும் இல்லை.
பெரிய அதிர்ச்சியாகத்தான் இந்தக் கடிதம் இருந்திருக்கும் என்பது என்னுடைய சின்னமூளைக்குகூடத் தெரிந்தது.
அடுத்த நாள் சொன்னதுபோல வந்துவிட்டார் இன்னொரு அத்தை வீட்டுக்காரர்.
தானே எல்லாவற்றையும் சரி பார்த்துவிட்டதாகவும்
இதைவிடப் பொருத்தமான வரன் கிடைக்காது என்றும் பையன் 400ரூபாய் சம்பளத்தில் ...கம்பனியில் அசிஸ்டண்ட் மேனஜர் ஆக இருப்பதாகவும்
சொல்லச் சொல்ல ஒரு மாதிரி வடிவம் உருப்பெற்றது.
எனக்குப் பிடித்த ஒரே வார்த்தை அஸிஸ்டண்ட் மானேஜர்.!!!!
ஏனெனில் காதலிக்க நேரமில்லை படத்தில் அந்த நாளைய கதாநாயகன்
ரவிச்சந்திரன் அந்த வேலையில் இருப்பார்.
உங்களால் நம்பக் கூட முடியாது எங்களின் வெகுளித்தனத்தை.:)
கடிதங்கள் பறந்தன.ரகசிய விசாரணைகள் நடந்தன.
ஐப்பசியில் பெண்பார்க்கலாம் என்று முடிவாகியது.

தொடரும் அதிசயங்கள் :)




24 comments:

பாலராஜன்கீதா said...

//திடீரென்று மன உறுத்தல்.என்னடா ஏதாவது தப்பு செய்துட்டோமோ.
சாமி கடவுளே அந்தத் தபால் போகமலேயே இருக்கணுமே.
என்னவோ பிரார்த்தனை//

"அழகன்" திரைப்பட மதுபாலாவிடம் சொல்லிவிட்டால் போதும் எந்தப் போஸ்ட் மாஸ்டரிமிருந்தும் எழுதி அனுப்பிவிட்ட கடிதத்தைத் திரும்ப வாங்கிக்கொள்ளலாமாம்
:-)

வல்லிசிம்ஹன் said...

பாலராஜன் கீதா,
எங்க காலத்தில தெரிஞ்சிருந்தா செய்திருப்பேனோ என்னவோ.:-)

துளசி கோபால் said...

படு த்ரில்லிங்காத்தான் இருந்திருக்கும். 'இப்படிப் பூனை மாதிரி இருந்துக்கிட்டு,
சிங்கத்தையே வலையில் வீழ்த்திட்டாளே'ன்னு எல்லாரும் வாயப் பொளந்து இருப்பாங்க!!!!!

கனஜோரா இருக்கு படிக்க.

'உம்' கொட்டிக்கிட்டு இருக்கோம்:-)

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா துளசி.திருமணநாள் வாழ்த்துக்கள்.

உண்மையா சொல்லணும்னா பயந்த நாட்கள்.

அப்புறமா சொல்லிச் சிரிக்க வசதியாப் போச்சு.
ஆமாம் ரொம்பப் பேரு தேடிக்கிட்டுத்தான் இருந்தாங்க சிங்கத்தை....:-)))

மெளலி (மதுரையம்பதி) said...

ரொம்பவே திரிலிங்கான வேலையெல்லாம் பார்த்து பிடித்திருக்கிறீர்கள் சிங்கத்தை.....

மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது... .

வல்லிசிம்ஹன் said...

இதுக்குத்தான் மௌலி சொல்றது.
படிக்கிற பொண்ணை வீட்டில வைத்தா எதாவது இப்படிச் செய்யும்னு..

அனேகமா வாழ்க்கையில நான் தேடாம கிடைத்தது இந்த சுகரினம்தான். மத்ததெல்லாம் தேர்ந்து எடுத்ததுதான்:-))))

தருமி said...

பிள்ளைங்க கிட்ட இந்தக் கதைகளைச் சொல்றதில உள்ள சுகமே தனிதான். பேரப் பிள்ளைகளிடமும் சொல்ல வாழ்த்துக்கள்.

41 வருஷம்- கல்லூரி ஓராண்டு - அப்போ 1965-66 P.U.C. யா?

வல்லிசிம்ஹன் said...

தருமி சார் நம்ம கல்லூரி வாழ்க்கை பி.யூ.சி 1964//65.ஹிந்தி எதிர்ப்பு போராட்டம்லாம் நடந்ததே.
அதனால தேர்வுகள் முடிய ஜூன் மாதம் ஆகிவிட்டது.முடிந்ததும் சென்னையிலிருந்து
மதுரைக்கு வந்தேன் .பாத்திமா கல்லூரிக்கு அனுப்ப ...தொலைவு காரணமாக மறுத்துவிட்டார் அப்பா.
அப்பத்தான் இந்தக் கூத்து.
பேரப்பிள்ளைகளிடம் சொல்லலாம்.அவர்களுக்குப் பொறுமை வேண்டும்:-)))))

தருமி said...

அடடே! நமக்கு ரெண்டு வருஷம் ஜூனியர்!
நம்ம காலத்து இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் பற்றி எழுதியிருக்கேன் ரெண்டு மூணு பதிவு. வாசிங்க.
பிறகு இதே தலைப்பிலேயே நானும் ஒண்ணு எழுதியிருக்கேனே!

//இந்தக் கூத்து.
பேரப்பிள்ளைகளிடம் சொல்லலாம்.//
ஆனா அதுக்கு பேரப்பிள்ளைகளுக்கு 'அந்த' வயசு வரணும். அதுனாலதான் சொன்னேன் - அந்த வயதுவரை நலமுடன் வாழ ஒரு வாழ்த்தாகவே.

வல்லிசிம்ஹன் said...

அந்த வயசு வரை இருக்கலாம்.
சரி .
அப்படியே ஆகட்டும்.
தருமி ,அண்ணாவா நீங்க..

மதுரை அண்ணன் வாழ்த்துக்களுக்கு நன்றி.

உண்மைதான்.அவங்களுக்கு அந்த வயசில் சொன்னால் சுவாரசியமாக இருக்கும்.நம்ம முறைகளும் தெரியும்.
நல்லா இருக்கணும் எல்லோரோட
பேரன் பேத்திகளும் வளமாக இருக்கட்டும்.

தி. ரா. ச.(T.R.C.) said...

I am also did m P U C in 1963-64. atuththa varusham 10 maatham leave.

பாலராஜன்கீதா said...

//சுத்தமா அட்ரஸ் எழுதி, ஐம்பது பைசா ஸ்டாம்பும் ஒட்டி//

அந்தக்காலத்தில் போஸ்ட் கார்ட் 5 பைசா என்வலப்(கவர்) 10 பைசா என்று நினைவு.

தருமி said...

தப்புக் கணக்கு போட்டுட்டேன்! நான் 60-61 P.U.C. அதாவது நாலு வருஷம் சீனியர்.

இன்னொரு தம்பி வந்திருக்கார் :)

வல்லிசிம்ஹன் said...

வரணும் தி.ரா.ச.
அறுபது வயசானவங்க ப்ளாகர்ஸ் ஆகிவிடுவதாப் படிச்சேன்.அதை நம்ம கூட்டம் நிரூபிக்கிறது.:-))))

வல்லிசிம்ஹன் said...

பாலராஜன் கீதா, என்னப்பா ஏதோ அஞ்சு பைசாவை ஐம்பதுனு சொல்லிட்டேன்.

என்வலப் 25பைசா இருக்காது?
தபால் வீட்டுப் பொண்ணுக்கே...சாரி பாட்டிக்கே கணக்குத் தப்பாயிடறது:-)))))))
சொல்லமுடியாது அன்னிக்கு இருந்த ஜோரில் ஐம்பது பைசா ஒட்டி இருந்தாலும் அதிசயமில்லை.

வல்லிசிம்ஹன் said...

தருமி சார் உங்க தம்பி எங்க அண்ணா வந்துட்டார்.:-))))

துளசி கோபால் said...

//அறுபது வயசானவங்க ப்ளாகர்ஸ் ஆகிவிடுவதாப் படிச்சேன்.அதை நம்ம கூட்டம் நிரூபிக்கிறது.:-))))//

வன்மையாக(????) கண்டிக்கின்றேன்.:-))))))

இன்னும் சில வருசங்கள் பாக்கி இருக்கு!

வல்லிசிம்ஹன் said...

துளசி, சின்னக்குழந்தைகளெல்லாம்
சேக்கலைம்மா.:-))

இது பெரியவங்களுக்கு மத்திரம் தான்.
நீங்கதான் கடைக்குட்டி.
சரியா:-)))

கண்ணகி said...

அட பாட்டி...அப்பவே இந்த வேலையெல்லாம் செய்தீங்களா.

வல்லிசிம்ஹன் said...

வாங்க கண்ணகி, உங்க பதிவையும் படித்தேன்.
நன்றாக இருந்தது.

Geetha Sambasivam said...

என்ன அக்கிரமம் வல்லி, கேட்டது நானு, ஆனால் என்னோட ப்ளாகர் டாஷ்போர்டிலே அப்டேட் ஆகவே இல்லை இந்தப் பதிவும், அடுத்ததும், பொங்கல் பதிவு தான் வ்ந்திருக்கு, என்னடானு ஆச்சரியப் பட்டுப் பார்த்தால் சத்தம் போடாமல் எழுதி இருக்கீங்க! :))))))))))))))

Geetha Sambasivam said...

//வன்மையாக(????) கண்டிக்கின்றேன்.:-))))))

இன்னும் சில வருசங்கள் பாக்கி இருக்கு!//

அதானே, நானும் கூட்டுச் சேர்ந்துக்கறேன்.

Geetha Sambasivam said...

//இது பெரியவங்களுக்கு மத்திரம் தான்.
நீங்கதான் கடைக்குட்டி.
சரியா:-)))//
க்ர்ர்ர்ர்ர்ர் அக்கிரமமா இருக்கே?? பாப்பா நான் இருக்க! :)))))))))))

வல்லிசிம்ஹன் said...

கீதா, நீங்கதான் இருக்கிறதிலியே சின்னப் பாப்பான்னு எல்லாருக்கும் தெரியும்.
அதனால்தான் உங்களை 60களில் சேர்க்கலை.:)
1966லிருந்து சட்டுனு 2010க்கு வரவேண்டாமா.
அதான் சத்தமில்லாம பொங்கலுக்கு வந்துட்டேன்.