Tuesday, April 25, 2017

எங்கள் ப்ளாகிற்கு எழுதிய கதை ஒரு நாள் மயக்கம்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
மழையும் மந்தாரமாக இருக்கும் வானத்தை ஜன்னல் திரை வழியாகப் பார்த்த சுதாவுக்கு, உற்சாகம்  மனம் சுறுசுறுப்பானது.
குழந்தைகளின் படுக்கை அறையில் எட்டிப்ப் பார்க்கும்போது
இரண்டு பெண்களும் அழகு தேவதைகளைப் போல் ஒரே ரஜாய் அடியில் நல்ல உறக்கம் போட்டுக் கொண்டிருப்பது பார்த்து சந்தோஷப் புன்னகை வந்தது.


அடுத்து கணவனின் படிப்பறைக்கு வந்ததும் ,அவன் கைகளிலிருந்த கண்ணாடி
கிண்ணத்தைப் பார்த்ததும் அவள் மனம் சட்டென்று நின்றது.


அழகான புன்னகையோடு பாசு அவள் கை பிடித்து இழுத்தான். என்ன மழையைப் பார்த்ததும் அம்மாவுக்கு என்ன யோசனை வருது, என்ற கேலிக்குரலோடு அவளை வளைக்க முனைந்தான்.

''கட்டாயம் இந்த யோசனை இல்ல:)


...............................

வெளில போய் இந்த கோவை காற்றை ,சிலுசிலுப்பை அனுபவிக்க ரொம்ப ஆசையா இருக்கு. வாங்களேன்.  ராஜம்மாவிடம் குழந்தைகளை விட்டுவிட்டு ஒரு குட்டி ட்ரைவ் போய் விட்டு வரலாம்.  இல்லாவிட்டால் அதுகளயும் அழைத்துக் கொண்டு மேட்டுப்பாளையம் ரோடில் ஒரு நீள மழை ஊர்வலம் போலாமே என்றாள்.

'கொஞ்சம் வயசு ஆன பிறகு உன்னைக் கல்யாணம் செய்திருக்கணும்.'
யாருக்கு?
'ஏன் உனக்குத்தான் 'என்றவனைப் பார்த்து சிரித்தபடி ,அவன் கையிலிருந்த பானத்தைத் தனிப்படுத்தினாள்.
'சரி இது உள்ள போனால் வண்டி ஓட்ட வேணாம். நானும் குழந்தைகளோடு குட்டித் தூக்கம் போட நீங்களும் கொஞ்சம் தூங்குங்கள்' என்றபடி செல்பவளை யோசனையோடு பார்த்தான் பாசு.
ஏன் இவள் இப்படி இருக்கிறாள்? எல்லாத் திருமணங்களும் குழந்தைகள் பிறந்ததும் தேக்கமடைகின்றதா, இல்லை எனக்கு மட்டுமா இப்படி என்று ஏமாற்றத்தை மறக்க மீண்டும் பாட்டிலைத் தேடினான்.

சற்றே கிறங்கிய நிலையில் தோழனின் வருகையை அறிவித்தது அவனது பெரிய வண்டியின் ஹார்ன் சத்தம்.
ஹேய் பாஸ் ,வாடா வெளில போலாம் 'கெட் யுர் ஃபாமிலி' என்ற சத்ததோடு உள்ளே நுழைந்தான் சுரேஷ்.
சுரேஷ் பாசுவின் அலுவலகத்துக்கு மென்பொருள் சப்ளையர்.  இரண்டு மூன்று வருடப் பழக்கம்.  அவனால் தான் பாசு குடிக்கக் கற்றுக் கொண்டான் என்று சுதாவுக்கு அந்தக் குடும்பத்தை அவ்வளவாகப் பிடிக்காது.
அதுவும் அவர்கள் கல்கத்தாவிலிருந்து நவநாகரீகமாக வந்து இந்தியும் ஆங்கிலமும் கலந்து பேசுவது ,அதற்கு பாசுவும் தாளம் போடுவது, எல்லாரும் சேர்ந்து இரவுக் காட்சிகளுக்குப் போய் குழந்தைகளின் தூக்கம் கெடுவது இப்படி நீண்டு கொண்டே போகும் அவள் லிஸ்ட்.
சுரேஷின் மனைவி வட இந்தியப் பெண்.அழகி. விதம் விதமாக சமைக்கத் தெரிந்தவள்.  அடிக்கடி இவர்களை அவர்கள் வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுப்பார்கள்.
தான் வரவில்லையென்றால் தனக்கு தாழ்வு மனப்பான்மை என்று நினைத்து விடுவார்களே!! சுதாவும் குழந்தைகளை அழைத்துச் செல்வாள்.

அவர்கள் மூவரும் பானங்களோடு இருந்து உரையாட,  பழைய இந்திப் பாடல்களைப் பாடி முடிக்கும்போது,குழந்தைகளைக் கவனித்து அவர்களை உண்ண உறங்க வைப்பாள்.
11 மணி அளவில் 'ஓ ஐ அம் ஃபைன் என்றபடி பாசு கிளம்ப அரவமற்ற வீதிகளில் புகுந்து வீடு வந்து சேருவார்கள்.
 
இதே போல ஒரு சனிக்கிழமை இரவு.  அடுத்த நாள் சுதா பாசு இருவருக்கும் திருமண நாள்.
கோவை ராம் நகர் ஸ்ரீராமனைத் தரிசிக்க இருவரும் யோசித்துவைத்து, முதலில் சுதாவுக்கும் தனக்குமாக உடைகள் எடுத்து வந்தான் பாசு. அவனுடைய அலுவலகமும் அங்கேயே இருந்ததால் சுலபமாக முடிந்தது வேலை. தனக்குப் பிடித்த மாதிரி,ஆரஞ்ச் வண்ண டெர்கோசா பெரிய பூக்களோடு இருந்த புடவையும், ஸ்கைப்ளூ வண்ண லிபர்டி டெரிகாட்  சட்டையும் வாங்கி வண்டியில் வீட்டுக்கு விரைந்தான்.

தெருமுனை திரும்பும் போதே சுரேஷின் வண்டியைப் பார்த்ததும் மனம் திக் என்றது.
நண்பனைக் காண்பதில் சந்தோஷம் என்றாலும் ,சுதாவின் அதிருப்தியை 
இன்று சம்பாதிக்க வேண்டாமே எனும் யோசனை முன் நின்றது.
வண்டியை நிறுத்தியதும் சுரேஷின் சிறுவர்களும், தன் மழலைகளும் ஆடும் ஆட்டத்தைக் கண்டு மனமகிழ்ச்சியோடு உள்ளே நுழைந்தான்.

முகம்,மனம் நிறைந்த காதலோடு கணவனையும் அவன் கைகளில் இருந்த பைகளையும் எதிர்கொண்டாள் சுதா. அடிக்குரலில் அவர்களைச் சீக்கிரம் அனுப்பிவையுங்கள் என்ற வேண்டுகோளோடு.
ஹ்ம்ம். நினைப்பதெல்லாம் நடப்பதில்லையே.
சுருக்கமாகச் சொல்லப் போனால் விபரீதமாக முடிந்தது.
இரண்டு மூன்று மடக்கு விஸ்கி உள்ளே போனதும் , எல்லோருக்கும் குஷி பிறந்து
பாடல்கள் ஆரம்பிக்க ,சுதா மணியைப் பார்த்தாள் 9 ஆகி இருந்தது.
கண்வனின் அருகில் நின்று தோசை தட்டில் தோசையைப் போட்ட வண்ணம், சீக்கிரம் ஆகட்டும் என்று கிசுகிசுத்தாள்.
சுரேஷின் மனைவி பலமாகச் சிரித்தபடி  நோ சீக்ரெட்ஸ் நவ் என்று பாசுவின் அந்தப்பக்கம் நின்று அவன் தோள் மேல் கைவைத்தாள்.
அவன் அதை உணர்ந்தானோ இல்லையோ, அவன் கை தன்னிச்சையாக அவளை வளைத்தது.  சுதாவின் வயிற்றில் இடி இறங்கியது போல ஒரு உணர்வு.

சரேலென்று கொந்தளிப்போடு கையிலிருந்த பீங்கான் தட்டை விட்டெறிந்தாள்..சுக்கு நூறாக உடைந்த தட்டை வெறித்தவள்,
தன் பெண்களை அழைத்துக் கொண்டு படுக்கை அறைக்குள் சென்று கதவை சத்தமில்லாமல் சாத்தினாள்.
கொஞ்ச நேரத்தில் சுரேஷ் வண்டி புறப்படும் சத்தமும், பாசு தன் அறைக்குள் செல்லும் சத்தமும் கேட்க. குழந்தைகள் உறங்கும் வரை தட்டிக் கொடுத்தவள் ,அழுத கண்களோடு உறங்கச் சென்றாள்.
காலை எழுந்தவள் கலக்கத்தைக் களைந்துவிட்டுக் கடவுளிடம் விளக்கேற்றி நிம்மதி வேண்டினாள்.
யந்திரத்தனமாக டோஸ்ட் செய்து, தோசை எல்லாம் வார்த்து, ஆரஞ் கிசான் கலந்து மூவருக்கும் சாப்பாட்டு மேஜையில் வைத்துவிட்டு, தன் துளசி, மல்லி என்று செடிகளொடு நேரம் கழித்தாள்.
பின்னால் பாசு வரும் சத்தம் கேட்டதும் தோசை வைத்திருக்கிறேன்.  குழந்தைகளோடு சாப்பிடுங்கள். நான் கோவில் போகவேண்டும் என்று திரும்பினாள்.

அழகான பாசுவின் முகம் சிவந்த கண்களோடு தன்னைப் பார்ப்பதும் தெரிய கண்ணில் தயாராக இருந்த துளிகள் கீழே சிந்தின.
 

சுதா மா. ஸாரி. ஐ டிட் நாட் know what came over me.  நாம் அனைவரும் கோவிலுக்குப் போகலாம். பத்துவருடம் முன் நாம் சேர்ந்த சிறந்த தினம் இல்லையா.
ஆமாம் ஆனால் அந்தப் புனிதம் இருக்கிறதா தெரியவில்லை.
நான் திருச்சி போய் வருகிறேன். எனக்கு அகிலாண்டேஸ்வரியிடம் முறையிட ஆசை என்று கலங்கிய மனைவியின் கரங்களைப் பிடித்தான் பாசு.

நீ போனால் நானும் வருவேன்.  எனக்கும் அவளிடம் கேட்கவேண்டும் என் மனைவி ஏன் என்னிடம் நெருங்க மறுக்கிறாள் என்று.
 மது அரக்கனை அழித்த மாதவன் கிடைத்தால் இந்த லக்ஷ்மியும் பாசுவிடம் வருவாள் என்கிற பதில் சட்டென்று வந்தது.
அன்று ராமர் கோவிலில் இருவரும் தரிசனம் செய்யும் போது மங்கையும் மணாளனும் சேர்ந்திருக்க மது வேண்டாம் என்கிற கையெழுத்திடாத ஒப்பந்தம் நிறைவேறியது.
மது இல்லாத புது இரவு வந்தது.

12 comments:

நெல்லைத் தமிழன் said...

ஒரு தடவை தவறு செய்யாமல் இருக்கும்வரைதான் உத்திரவாதம். ஒரு முறை இறங்கிவிட்டால், அப்புறம் எதுவும் தடுக்க இயலாது. இதற்கெல்லாம் முக்கியக் காரணம் நண்பர்கள்தான். ஒரு நல்லவனால், இன்னொருவனை நல்ல பழக்கத்துக்குக் கொண்டுவருவது கடினம், செய்யமாட்டார்கள். ஆனால் எப்போதும் ஒரு கெட்ட வழக்கம் உள்ளவன், எல்லோரையும் அதில் இழுத்துக்கொள்ள முயற்சிப்பான். இது சிகரெட், மது போன்ற அனைத்துக்கும் பொருந்தும். நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகக் கவனமாக இருக்கவேண்டும்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

வடநாட்டுக் கலாச்சாரங்களிலும், மேல்தட்டு மக்களிடமும் இதெல்லாம் சர்வ சாதாரணமாக தெரிந்தே நடைபெறுவதாக அறிகிறோம்.

கெட்-டுகெதர் என்ற பெயரில் இன்னும் என்னவெல்லாமோ, வெளியில் சொல்லவோ எழுதவோ கூச்சமளிக்கும் விவஸ்தை இல்லாத அசிங்கமான சம்பவங்கள் (மனைவிகள் தங்கள் முகத்தில் மாஸ்க் (முகமூடி) அணிந்துகொண்டு பிறரின் கார் சாவிகளில் எதையாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் கார் சாவி உரிமையாளர் அவர்களால், அவள் தனி அறைக்கு ஒதுக்கித் தள்ளிக்கொண்டு செல்வது, விடிய விடிய கூத்தடித்துவிட்டு, காலையில் ஒன்றுமே அறியாத அப்பாவிகள் போல தனது சொந்த ஒரிஜினல் ஜோடியுடன் வீடு திரும்புவது போன்றவை) அரங்கேறித்தான் வருகின்றன என்று ஒருசில பெண் பதிவர்களே என்னிடம் வருத்தத்துடன் பகிர்ந்துகொண்டுள்ளார்கள்.

இவை எல்லாவற்றிற்கும் குடி போதையே அடிப்படைக் காரணமாக இருப்பினும், வெட்கம், மானம், சூடு, சொரணை ஏதும் இல்லாமல், தேகத்தில் உள்ள கொழுப்பின் காரணமாகவும், பணத்திமிறு, சமூக அந்தஸ்து, குறுக்கு வழியில் வாழ்க்கையில் முன்னேற்றம் போன்ற லெளகீக விஷயங்கள் போன்ற பலவற்றையும் எதிர்பார்த்து, பல கணவன்மார்களால் இவை தங்கள் மனைவிகள் மீது நிர்பந்திக்கப் பட்டும், திணிக்கப்பட்டும் வருகின்றன.

ஒரு முறை இந்த சேற்றில் காலை வைத்து விட்டவர்களுக்கு (ஆணோ/பெண்ணோ) அதன்பின் இதுவே .... இந்தச் சேறே பழகிப்போய் சந்தனமாக மணக்கத்தான் செய்கிறது. :(

அடித்தட்டு மக்கள் என்றால் இவை ஊர் சிரித்துப்போய் வெட்டு, குத்து, கொலை, தற்கொலை என்று முடியக்கூடும்.

நடுத்த வர்க்கம் என்றால் உடலும் உள்ளமும் நடுங்கிப்போய், குறைந்தபக்ஷம் விவாஹரத்திலாவது போய் முடியக்கூடும்.

இவ்வாறான கலாச்சாரக் கேடுகள் நம் நாட்டுக்கும், குறிப்பாக நம் நாட்டுப்பெண்களுக்கும் சற்றும் உகந்தது அல்ல என்பதை அனைத்துப் பெண்களும் உணர்ந்து, மிகவும் உஷாராக இருந்து, இந்த விபத்துக்களை வரும்முன் காத்து, முளையிலேயே கிள்ளி எறிய முன்வர வேண்டும்.

ஸ்திரீகள் மட்டும் தங்களின் தர்மத்தை விட்டு, ஒழுக்கம் தவறிப் போவார்களேயானால்,
பிறகு இந்த சமுதாயத்தைத் திருத்தவே முடியாது. கலிகாலம் முற்றி விட்டது என்றே அர்த்தமாகும்.

இதையெல்லாம் தாங்கள் நன்கு தெரிந்து/புரிந்து மனதில் நிறுத்தி, பட்டும்படாததுமாகக் கச்சிதமாகக் கதையை நகர்த்திச் சென்றுள்ள விதமும், ஏதோ ஒரேயொரு நாள் மட்டும் அவளுக்குத்தெரிந்தே இந்தத் தவறு நடந்துவிட்டது போன்றும் காட்சிகளை அமைத்துக் கண்முன் நிறுத்தி, ‘ஒருநாள் மயக்கம்’ என்ற தலைப்பும் கொடுத்துள்ளதும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கதைம்மா..

மது அரக்கன் பலரின் வாழ்க்கையை புரட்டிப் போட்டு விடுகிறான்.

Angelin said...

சுதா மிகவும் மென்மையானவர் மற்றும் பொறுமைசாலின்னு நினைக்கிறேன் ..இக்கால பெண்கள்னா முதலில் பிரிவுக்குத்தான் துடித்திருப்பாங்க ..சுதா இறைவன் மேல் வைத்த நம்பிக்கை பாசுவை மீள வைத்தது ..தெய்வம் அனைவரையும் காக்கட்டும் ..
இயல்பில் பாசு நல்லவராகவே இருந்திருப்பார் அதனால்தான் அவரது குற்ற உணர்வே மன்னிப்பு கேட்டு மனம் திருந்த எதுவாக இருந்தது

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் நெல்லைத்தமிழன்,
நன்மைகள் செய்யும் நட்புகளைப் பார்த்திருக்கிறேன்.
இது போலக் கூடா நட்புகளையும் பார்த்திருக்கிறான். பரிதாபமாய் இருக்கும்.
சிகரெட்டாவது பிடிப்பவனை மட்டும் தாக்கும். மது குடும்பத்தையே கலக்கிவிடும்.
முதல் தொடுதல் மதுவோடு ஆரம்பிக்கும்போதே தடுக்கும் பாக்யம் சிலபேருக்கே அமைகிறது. அதில் இந்த சுதா அடக்கம்.
பாதி கற்பனை என்றாலும் இதெல்லாம் நடக்க சாத்தியமே.
முழு இறை நம்பிக்கை, பொறுமை,அன்பு,தன்னடக்கம் இவை இருவரிடமும் இருந்தால் மட்டும் ஒரு குடும்பம் பிழைக்கும்.மிக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஒரு முறை இந்த சேற்றில் காலை வைத்து விட்டவர்களுக்கு (ஆணோ/பெண்ணோ) அதன்பின் இதுவே .... இந்தச் சேறே பழகிப்போய் சந்தனமாக மணக்கத்தான் செய்கிறது. :(

அடித்தட்டு மக்கள் என்றால் இவை ஊர் சிரித்துப்போய் வெட்டு, குத்து, கொலை, தற்கொலை என்று முடியக்கூடும்.

நடுத்த வர்க்கம் என்றால் உடலும் உள்ளமும் நடுங்கிப்போய், குறைந்தபக்ஷம் விவாஹரத்திலாவது போய் முடியக்கூடும்........
ஆமாம் வைகோ சார்.


நீங்கள் சொன்னது சுரேஷ் தம்பதியினரின் வாழ்வில் நடந்தது.அவர்
தன் தவறை உணர்ந்த போது மனைவி விலகிப் போயிருந்தார்.

மிக மிக சோகம். பிற்பாடு தெரியவந்தது.
கேட்கவே முடியாத சம்பவங்கள். விழிப்புணர்வு இல்லாவிட்டால்
குடும்பம் பலியாகும். மிக மிக நன்றி சார்.
இறைவன் நம்முடன் இருக்கட்டும்

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி அன்பு வெங்கட். இறைவன் அனைவரையும் காக்கவேண்டும்..

ஸ்ரீராம். said...

சங்கடமான விஷயங்களை ஒரு வரியில் தாண்டிய எழுத்து வன்மை ரசிக்க வைத்தது.

ஸ்ரீராம். said...

கீதாக்கா எழுதிய கண்ணனுக்காக கதையில் முன்பு ஒரு முறை படித்த போது துரியோதனன் பானுமதியிடம் போடும் கட்டளை நினைவுக்கு வந்தது. (என் நினைவு சரியாய் இருந்தால்)

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம்,பானுமதி துரியோதனன் சம்பாஷணை தானே,.

சங்கடமான நேரம் சட்டென்று தாண்டிவிடவேண்டும்.
நீங்கள் இவ்வளவு உன்னிப்பாகக் கவனித்தது மிக மகிழ்ச்சி மா.

நிறையத் தொடர்கள் அந்த வருடம் எழுதினேன்.
இது கச்சிதமாகப் பொருந்தியது.
அதை வெளியே கொண்டு வந்து எனக்குப் பெருமை சேர்த்தீர்கள். உங்கள்
பணி சிறக்க வேண்டும்.

ராமலக்ஷ்மி said...

அவசியமான கருத்தை அருமையான நடையில் கொண்டு சென்று அழகாக முடித்திருக்கிறீர்கள். வாழ்த்துகள் வல்லிம்மா! நன்றி எங்கள் ப்ளாக்!

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி,
சுணங்கி இருந்த எனக்கு இது பெரிய உதவியைக் கொடுத்தது மா. என்
மனம் நிறை வாழ்த்துகள் ஸ்ரீராமுக்கு,எங்கள் ப்ளாக் குழுமத்திற்கும்.