''பாலசம்சாரம் .நாமதான் பார்த்துக்கணும்''
மதுரைப் பாட்டி சொல்வதை அவளின் பேரன்கள்
உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டார்கள்.
மொத்தம் ஐந்து பிள்ளைகளும் இரண்டு பெண்களும் கொண்ட குடும்பம்.
அதில் ஒரு மகன் திடீரென்று மூளைக்காய்ச்சலில்
இறக்க நேர்ந்த நேரம்.
அவரது மனைவியும் மூன்று குழந்தைகளும் மதுரை வந்து சேர்ந்தபோது
பாட்டி சொன்ன வார்த்தைகள்.
பாட்டியின் பெண்ணும் இறந்தவரின் தாயுமான திருமலை
இந்தவிவகாரம் எப்படிச் செல்லுமோ என்று
கவலையுடன் இருந்தார்.
எதிர்பாராத சங்கடம்.
மகன்கள் வேறு வேறு ஊரில் குடியிருக்கிறார்கள். தானும் கணவரும்
மட்டும் நெல்லையில் குடித்தனம்.
வரும் பென்ஷன் தங்களுக்கு மட்டும் போதும்
இதில் இன்னும் நான்கு உயிர்களைக் காப்பாற்றுவது ,படிக்கவைப்பது எல்லாமே பிரச்சினையாக இருந்ததால்
தன் நாத்தனாரிடம் கலந்தாலோசிக்க வந்திருந்தனர்.
அவர் மதுரையில் வக்கீல் புதுத் தெருவில் வசதியான இடத்தில்வாழ்க்கைப் பட்டு,
செழுங்கிளைத் தாங்கும் நற்குணம் படைத்தவராகவும் இருந்தார்.
வயதான தம்பியைக் காட்டிலும் உறுதியான இதயம் படைத்தவர்.
தானும் புதல்வர்களில் ஒருவரை ப் பறிகொடுத்திருந்ததால் ,தம்பியின் கலக்கத்தைப் புரிந்தவர்.
நீ ஒண்ணும் தாட்சண்யப் படாதே நம்பி.
நான் நம் காந்தி கிராமத்தில் உன் மருமகளுக்கு மேலே படிக்க
ஏற்பாடு செய்கிறேன்.கைத்தொழில் ஏதாவது கற்றுக் கொள்ளட்டும்.அவளுக்கு நன்றாகத் தைக்கத் தெரியுமே.
அதைச் சரிவரக் கற்றுக் கொண்டால்
அதுவே பெரிய உபகாரமாக இருக்கும்.
பெரிய பையனை நீ வைத்துக் கொள்.அவனுக்குப் படிப்புக்கு
நான் மாதாமாதம் பணம் அனுப்புகிறேன்.
உன்னிடம் இருந்தால்தான் அவனுக்குப் பொறுப்பு வரும்.
பின்னால் வரும் நாட்களில் தாயையும் தங்கைகளையும்
பார்த்துக் கொள்வான். பாளையங்கோட்டைப் பள்ளியில் நமக்குத் தெரிந்தவர்தான் தலமை ஆசிரியர்.
நல்ல ஒழுக்கம்,படிப்பு எல்லாம் கற்றுக் கொள்வான்.
கால்வருட,அரைவருட லீவுநாட்களில் உன் மருமகளும்பேத்திகளும்
உன்னிடம் வந்து இருக்கட்டும்.
முழுவருடக் கோடைவிடுமுறை நாட்களில் அவள் தன் தாய் வீடான பெரிய குளத்தில் போய் இருக்கட்டும்.
தம்பியின் மற்றப் புதல்வர்களையும் அவள் விட்டுவைக்கவில்லை.
நீங்கள் நான்கு பேரும் கடிதப் போக்குவரத்து வைத்துக் கொள்ளவேண்டும். அந்தக் குழந்தைகள் தாங்கள் கைவிடப் பட்டுவிட்டோம் என்கிற நினைப்புத் துளியும் வரக் கூடாது.
அப்பா இல்லாவிட்டாலும் சித்தப்பாக்கள் ,அத்தைகள் பார்த்துக் கொள்வார்கள்
என்ற நம்பிக்கை இருக்க வேண்டும்.'' ஒரு பெருமூச்சோடு
அக்கா எழுந்துகொண்டார்.
தம்பியும் .மனைவியும் அவள் கால்களில் விழுந்து மனப்பாரம் தீர அழுது தீர்த்தார்கள்.
தாய்தந்தையரைப் பின்பற்றி அவரது மகன்களும் அவர்கள் மனைவிகளும்
நமஸ்கரித்தார்கள்.
மகன் இறந்த போது இருந்த மலைப்பு கொஞ்சம் அவர்களது மனத்திலிருந்து
அகன்றது.
******************************************************************************
51 வருடங்களுக்குப் பிறகு அந்தக் குடும்பத்தின்
நிறைய முன்னேற்றம் கண்டது. பெரியவர்கள் யாரும் இப்போது இல்லை. அடுத்த தலைமுறைக்கே ஷஷ்டி அப்த பூர்த்தி நடந்துவிட்டது.
இந்தக் குடும்பத்துக்கும் எங்கள் சின்னப் பாட்டிக்கும் (ஆங்க்!அதே பாட்டிதான். என் கல்யணத்துக் கடிதம் கொடுத்தவர்:) )
தோழமை பலவருடங்களாக உண்டு.
சமீபத்தில் ஒரு திருமணத்தில் மதுரையைச் சேர்ந்த சிலரைச் சந்தித்தேன்.
உறவினர்(அவளுக்கும் எனக்கும் ஒரே வயது) ஒருவளிடம் அந்தக் குடும்பத்தைப் பற்றிக் கேட்டேன்.
தன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த என் வயது மதிக்கத்தக்க ஒரு அம்மாவைக் காண்பித்தாள். யார் தெரிகிறதா?என்று கேள்வி.
நமக்கு நேற்றுப் பார்த்தவர்களையே மறந்து போகிறது.
''தெரியலையே என்றேன். நம்ம 'ஜில்லி''
உண்மையாவா என்று வாய் மூடாமல் பார்த்தேன்.
ஹேய் ஜில்லியா..என்னைத் தெரிகிறதா,,,இது நான்.
இல்லையே. மதுரையை நான் மறந்தே நாளாகிறது. பழைய
உறவெல்லாம் விட்டுப் போச்சு என்று தோள் குலுக்கின பெண்ணை நான்
என்னுடன் வாடாமல்லி பறிக்கவும், மகிழம்பூ மாலை
தொடுக்கவும்
என் பின்னால் அலைந்த சிறுமியோடு சம்பந்திப் படுத்திப் பார்க்க முடியவில்லை.
நான் விடுவதாக இல்லை. உங்கள் பக்கத்து வீட்ல இருந்தோமே,
ஜானு,முகுந்தன்,கல்யாணி.?
உன்
குழந்தைகள் எங்கே இருக்கிறார்கள்.
தங்கை அண்ணா எப்படி இருக்கிறார்கள்.
அம்மா?
அம்மா காலமாகி ரொம்ப நாளாச்சு. எங்கள் திருமணங்கள் முடிந்ததும்
அவள் நிறைய நாட்கள் இருக்கவில்லை. நானும் 1972லியே காலிஃபோர்னியா
போய்விட்டேன்.
தங்கை வேற்று மதத்தவரைத் திருமணம் செய்து கொண்டு ஆஸ்திரேலியா
போய்விட்டாள்.
அண்ணா தாத்தா வாங்கிக் கொடுத்தவேலையில் ரிடயராகி இப்போது நெல்லை பக்கத்தில் கிராமத்தில் இருக்கிறான். பெரிய குடும்பம்.
சௌத் ரொம்ப ஹாட்டாக இருக்கிறது அதனால் அடுத்த ட்ரிப் ல தான் பார்க்கணும்.
என் குழந்தைகள் என்னுடன் இந்திய ட்ரிப்புக்கெல்லாம் வருவதில்லை.
இந்தக் கல்யாணமே மதுரைப் பாட்டிக்கு ஒரு பேரன்'' எல் ஏ''ல நல்ல பொஸிஷன்ல இருக்கானாம். அவன் மகனை என் பெண்ணுக்கு வரன் பார்க்கலாம்னு கேட்கத்தான் வந்தேன்.
அடுத்த நிமிடம் அவளே போலத் தோற்றமளித்த இன்னோரு
பெண்ணைப் பார்க்க நகர்ந்துவிட்டாள்.
நானும் என் பழைய தோழியும் சிரித்துவிட்டோம்.
நீ எங்கயும் சிங்கப்பூர் போலியா என்று நான் கேட்க , ஏன் நீதான் அமெரிக்கவாசின்னு கேள்விப்பட்டேன்'' என்று அவள் கலாய்க்க
அப்பாடி சில விஷயங்கள் மாறுவதில்லை என்று நிம்மதியாக இருந்தது.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
20 comments:
கால மாற்றங்கள் நம்ப முடியாத தருணங்களையும் தருகிறது.
ஆஹாஹாஹா....... 'அண்மை' ரொம்பவே நல்லதாம்.
அருமை தெரிஞ்சவங்களுக்குப் புரிஞ்சுருக்கும்:-)))))
பல நேரங்களில் பல மனிதர்கள்.
தலைப்பும் விவரித்த விதமும் ரொம்ப அருமை வல்லிம்மா.
முதல் பாதியில் பாட்டி (நாத்தனார்) எடுத்த முடிவுகள் அசர வைத்தன. எனன ஒரு தீர்க்கமான பார்வை! அடுத்த பாதி கலகலப்பாக இருந்தது.
கவிதைத் தலைப்பு...பகிர்வு கலகலப்பு...சில விஷயங்கள் மாறுவதில்லைதான்...
உண்மைதான் திருமதி.
என் அம்மாவே என்னை ''நீ திருமணத்துக்குப் பிறகு நிறைய மாறிவிட்டாய்'' என்று சொல்வார்கள்:)
சந்தர்ப்பங்கள் மாறும்போது மாறாமல் இருப்பது சிலரே.
வாழ்க்கையில் கஷ்டம் இல்லாமல் சில அருமைகள் கிடைக்கும் போது, அண்மைகள் ஒதுக்கப்படுகின்றன. அப்படித்தான் எனக்குத் தோன்றியது. துளசி.
ஆமாம் ராமலக்ஷ்மி ,காலம் ஒரு நாள் மாறும் .நம் கவலைகள் யாவும் தீரும் பாட்டு அந்தப் பெண்ணிற்கு மிகவும் பிடித்த பாட்டு.
காலமும் மாறி அவளும் மாறிவிட்டாள்.
பாட்டியின் முடிவுகள் வியக்க வைத்தது.....அந்த கால மனிதர்களுக்குண்டான உதவும் மனப்பான்மை.
யாருக்காவது ஏதேனும் என்றால் இங்கு இவர்களுக்கு மனது அடித்துக் கொள்ளும்.
கால மாற்றங்கள்....மனிதர்களையும் மாற்றி விட்டதா....
இந்த மாதிரி அனுபவம் அனைவருக்கும் இருந்திருக்கும். :(
காலமோ, நேரமோ சிலரை மாற்றித் தான் விடுகிறது. எங்கேயோ நல்லா இருந்தா சரி. அவ்வளவு தான். அந்தக் காலங்களில் செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல் என்பதை எப்படி எல்லாம் மெய்ப்பித்து வாழ்ந்திருக்கின்றனர். அருமையான பாட்டி. நமஸ்கரித்துக்கொள்கிறேன்.
எத்தனையோ கதைகள் நிகழ்வுகள் ஸ்ரீராம்.
அப்போது இருந்த கட்டுப்பாடும் பெரியவர்கள் வார்த்தைக்கான மதிப்பும் தனிதான்.
எங்கள் தாத்தா சொன்ன வார்த்தையை எங்க அப்பா,அத்தைகள்,சித்தப்பாக்கள் மீறிய நாளே கிடையாது.ஒரே சீராக வாழ்க்கை ஓடியது.நாங்களும் அப்படித்தான். சில மாற்றுச் சிந்தனையாளர்களில் இந்தப் பெண்ணும் ஒருத்தி.கடலைத் தாண்டினால் குணமும் மாறுமோ என்னவோ:)
எத்தனை எத்தனை மாற்றங்கள்.... பழைய நிகழ்வுகளை சுலபமாக மறந்து விடுகிறது மனித மனம் என்பதற்கு இந்த பகிர்வு ஒரு நல்ல உதாரணம்....
நிதரிசனமாக பக்கத்தில் இருந்து பார்த்தா மாதிரியே இருக்கு. பல நேரங்களில் இந்த போக்கை பார்த்த நினைவுகள்,மனதில் எழுகின்றன.
ஒரு தலைமுறை செய்த தியாகத்தில் பயனடைந்தவர்கள், அதிர்ஷ்டசாலிகள்.;-)
அன்பு மலர். அந்த நாட்கள் பசுமையாக நினைவில் இருக்கின்றன.
கடமைகளைக் கண்டு யாரும் ஓடாத நாட்கள்.
நன்றி மறப்பது சிலசமயம் நடக்கிறது. மறக்கவே முடியாத என் மாதிரி பிறவிகளும் இருக்கின்றன.:0)
அன்பு ஆதி,
அடிப்படையில் மிகவும் நல்ல பெண் தான்.
அவள் கல்யாணத்துக்கு அவளின் சிறிய தகப்பனார்கள் எத்தனை உதவி செய்தார்கள் என்பதெல்லாம் எங்க அம்மா எனக்குக் கடிதம் எழுதி தெரிவிப்பார்.
பாதைகள் மாறும்போது மனமும் மாறிவிடுமோ என்னவோ.நன்றாக இருக்கட்டும்.
உண்மைதான் கீதா. பத்துக் குழந்தை பிறந்தது. ஆறு தக்கித்து என்று எங்க பாட்டியே சொல்லிக் கேள்வி.
அந்தத் தம்பிகளில் தாத்தாவும் ஒருவர்.:)
காலமானவரின் சித்தப்பா.பாட்டி பழங்கானத்திலிருந்து பஸ் ஏறிப்போய்
உதவி செய்து விட்டு வருவார்.
ஒற்றுமை என்பது உடலோடு ஊறிப்போன விஷயமாய் இருந்தது.
எங்களோடயும் அந்தக் குழந்தைகள் வந்து இருக்கும்.சந்தோஷமான நாட்கள்.
வரணும் வெங்கட்.
காலங்கள் துன்பமும் தரும் இன்பமும் தரும். இளமையில் வறுமை சில மனங்களை இறுக்கிவிடும்.
இந்தப் பெண்ணும் தான் பட்ட துயரத்தை எங்கள் மூலம் மீண்டும் அநுபவிக்கத் தயாராயில்லை.செலக்டிவ் அம்னீஷியா மாதிரி வைத்துக் கொள்ளலாம். பாவம்.
நல்ல பதிவு ! வாழ்த்துக்கள் !
மலரை பக்கத்தில் எடுத்த படத்தைப் பார்த்து அழகாய் இருக்கிறது என்று சொல்லலாம் என்று வந்தால் பதிவு அதைவிட அழகு.
சில மனிதர்கள் பழைய விஷயங்களை எளிதில் மறந்து விடுகிறார்கள்.
பாட்டியின் ஆலோசனைகள் மிகவும் அற்புதம்.
நேசிக்கமட்டுமே தெரிந்த நல்ல இதயம் உள்ள அற்புதமான மனுஷி.
பெரியவர்களின் அண்மை நமக்கு எவ்வளவு அவசியம் என்று நினைத்தே எழுத ஆரம்பித்தேன் கோமதி.
படம் இல்லாமல் பதிவு போட மனம் வரவில்லை.
உண்மைதான், பிரச்சினைகளில் மூழ்கிவிடாமல் நிதானமாகச் சிந்திந்து
பாட்டி முடிவுகள் சொன்னதும் அந்தக் குடும்பம் அதை ஏற்றுக் கொண்டதுமே பெருமை. நன்றாக இருக்க வேண்டும்.
Post a Comment