Wikipedia

Search results

Thursday, August 05, 2021

முன்னம் ஒரு காலத்திலே 3

வல்லிசிம்ஹன்
1972 ஆம் வருடம் மிகச் சிறந்த நினைவுகளைக் கொண்டது.
ஊட்டி எங்களுக்கு மிகப் பிடித்த இடமானது. அதுவும் குன்னூர், கோத்தகிரி
என்று பல இடங்களுக்கு
பைக்கில் சென்று மாலை திரும்பி விடுவோம்.

அப்போதிருந்த ஊட்டி ,மிக வளப்பமானது. இத்தனை வீடுகள்,
,மர முறிப்பு செய்த,  வெற்று மலைச் சரிவுகள்
இவை கிடையாது. யூகலிப்டஸ் மரங்களின்
வாசனை ஊட்டி மலை சாலைகளில் நிரம்பி இருக்கும்.
வண்டி செல்லும்போது சூரிய ஒளி
மரங்களோடு கண்ணாமூச்சி
விளையாடுவது ரசிக்குமாறு கூடவே வரும்.

இப்போது போல ஏசி வண்டிகள் இல்லை.
வண்டியின் ஜன்னல்களைத் திறந்து வைத்துக்
கொண்டு செல்லும்போது அத்தனை மகிழ்ச்சி
குழந்தைகளுக்கு.
சாரதாவின் மடியில் சின்னவன் சுகமாகத் தூங்க,
பெரியவன் அப்பாவின் தோளில் கைவைத்துக் கொண்டு நின்று 
கொண்டு வந்தான்  . . அவனைப் பிடித்துக் கொள்ள கோபாலன் சார்.

மகள் மூக்கருகே யூகலிப்டஸ் பாட்டிலை வைத்தபடி நான்.

ஒவ்வொரு வளைவிலும் 
ஒரு அலறல், ஒரு சிரிப்பு என்று கூனூர் வந்து சேர்ந்தோம்
சிங்கம் வண்டியைக் கொண்டு வந்து நிறுத்திய
இடத்தைப் பார்த்து அசந்து விட்டேன்.
''ஜன்னலை மூடுமா. எதிர்த்தாற்போல் என்ன வருகிறது பார்'' என்றார்.

அவ்வளவு பெரிய நாயை
என் வாழ்க்கையில் நான் பார்த்ததே இல்லை.

Great Dane!!!! அதன் உயரம் வண்டிக்கு மேல் இருந்தது.
அதன் பற்களையும் நாக்கையும் 
பார்த்து பெரியவனும் மகளும் அலறி விட்டனர்!
'' ஹே லியோ!! கட் தட்!!'' என்றபடி திரு வில்லியம்ஸ்
வந்தார்.
அட இவ்வளவு உயர்ந்த மனிதரா என்று நினைத்தேன்.
அச்சு அசல் ரங்காராவ் மாதிரி இருந்தவரைப் 
பார்த்ததும் பிடித்துவிட்டது.
அன்பான இன்னோரு அப்பா போல இருந்தார்.
Doberman


அவர் வண்டியின் பக்கத்தில் வந்து ''இவன் ஒரு நல்ல
பையன். ரொம்ப ஃப்ரண்ட்லி ''என்று சிரிக்க,
அதுவும் பல்லைக் காட்டியது.:)

அதைப் பிடிச்சுக்கோப்பா. நாங்க இறங்குகிறோம் என்றார் கோபாலன்.
வாங்க வாங்க வீட்டுக்குள் போகலாம் என்றபடி 
அந்தப் பிரம்மாண்ட மாளிகையின் படிகளில் ஏறினார் திரு வில்லியம்ஸ்.
படிகளின் மேல்படியில் நின்று எல்லோரையும் வரவேற்றார்
எலிசபெத் வில்லியம்ஸ்.
அசந்து போக வைக்கும் அழகு. பாந்தமான ஹேண்ட்லூம்
புடவை. குவித்த கைகள். 'தோத்திரம்'  என்று உச்சரித்த உதடுகள்.
உள்ளேயிருந்து வந்த சாம்பிராணி வாசனை...
என்று எனக்கு எல்லாமே அதிசயமாக இருந்தது.!

ஒரு பத்துப்படிகள் ஏறி வீட்டின் வரவேற்பறைக்குள்
 நுழைந்தோம். இள நீல திரைச்சீலைகள். வெள்ளைப் பெயிண்ட் அடித்த
சுகமான ஆசனங்கள். அந்த வீட்டைப் பற்றித் தனியாகப்
பதிவு போடவேண்டும்.
இப்போது மேற்கொண்டு பார்க்கலாம்.

உள்ளே சென்றதும்
 குழந்தைகளுக்கு உபயோகிக்க குளியலறையைக் 
காண்பித்துக் கொடுத்தார் மிஸஸ் வில்லியம்ஸ்.

நானும் குழந்தைகளும் வெளியே வந்தபோது ஆண்கள் 
அன்றைய விசேஷ்மான நிகழ்வுக்குக் கையில்
வைன் கிண்ணம் ஏந்தி  இருந்தார்கள்.
''இட்ஸ் ஹார்ம்லெஸ்'' என்றபடி பெண்களும் (சாரதா உட்பட)
ருசி பார்க்க, 
நான் அவரது பெண்களுடன் உரையாடிக் கொண்டிருந்தேன்.

நான் சற்றும் கண்டிராத சாரதாவை அங்கே பார்த்தேன்.
வெகு சகஜமாக எல்லோருடனும்
பேசிச் சிரித்துக் கொண்டிருந்தார்.
உள்ளே இருந்து பலவித இனிப்புகளைக் கொண்டுவந்து 
பரிமாறிக் கொண்டிருந்தார்கள் வேலை யாட்கள்.
மாலை எட்டு மணி ... குழந்தைகள் தூங்க வேண்டிய நேரம்.

சாரதாவும் கோபாலனும் அங்கேயே தங்குவார்கள் 
என்று  தெரிந்தது.
சீட்டுக்கட்டு விளையாட்டுத் தொடங்கி நடந்து கொண்டிருந்தது.
போகலாமா என்று கேட்டபடி வந்த சிங்கத்திடம்
உடனே சரி என்று சொல்லி விட்டேன்.

 சாரதா, கோபாலன், வில்லியம்ஸ் தம்பதிகளுடன் 
கிளம்பும்போது.
'ஐய்யர்' !! என்று சத்தமான குரலில் அழைத்தார் வில்லியம்ஸ்.
உடனே உள்ளிருந்த வந்தார்"ஐய்யர்"   அவர்களின் காரோட்டி.

''இவர்களை பங்களோவில விட்டு விட்டு வா. ''என்றவர் மனைவியிடம் அவர்கள் உணவு தயாரா என்று கேட்க,
அவளும் உள்ளே இருந்து சூடான இட்லிகள் நிரம்பிய
பெரிய தூக்கையும், சட்டினி நிறைந்த டப்பாவையும்
கொண்டுவந்து கொடுத்தார்.

இந்த அன்பைக் கண்டு மனம் நிறைந்தது.
''மிஸஸ் சிம்மு, எங்க வீடு கூட பார்ப்பனர்கள் வீடு மாதிரி சுத்தம் தான்"
என்று பெரிதாகச் சிரித்தார் வில்லியம்ஸ்.
எனக்கு வெட்கமாகிவிட்டது.
இரவு வணக்கம் சொல்லி விட்டு
குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு வண்டியில் ஏறி
அவர்களது  விருந்தினர் விடுதிக்கு வந்தோம்.

க்றிஸ்மஸ் விளக்குகள் பொருத்திய வீடுகளும்,
வீதிகளுமாக கூனூர் ஜ்வலித்தது.
இட்லி சாப்பிட்டு, அங்கிருந்த சுகமான 
கட்டிலில் நடுக்கும் குளிருக்கு இதமாக கனமான
ரஜாய் போர்வைகளுக்குள் நுழைந்தது தான் 
தெரியும்.
மறு நாள் காலை ஏழு மணிக்குக் கதவு தட்டப் படும் சத்தம்.
திறந்தால் காரோட்டி  சுந்தரம் ஐய்யர் நின்று கொண்டிருந்தார்.
இரண்டு பெரிய ஃப்ளாஸ்க் நிறைய காப்பியும் பாலும்
என்று கொடுத்தார்.

''குளித்துவிட்டு வாருங்கள் எல்லோரும் கோயிலுக்குச் சென்றிருக்கிறார்கள்''
என்றார்....தொடரும்.11 comments:

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

அருமையான இனிதான பயணம். அழகாக ரசிப்பு தன்மையுடன் சொல்லியிருக்கிறீர்கள். உடன் நாங்களும் பயணித்த உணர்வை தந்தது. காரை விட உயரமான நாய் என்றதும், தங்களுக்கு ஏற்பட்ட அந்த நிமிடத்தை நினைத்து எனக்கும் சற்று பயம் ஏற்பட்டது. அவரின் அறிமுகத்திற்கு பின் அது உங்களுடன் அன்பாக இருந்திருக்கும். படங்கள் அருமையாக உள்ளன.

அவர்களின் அன்பான உபசரிப்பு குணங்கள் மனதுக்கு நிறைவை தருகிறது. தொடர்ந்து வரும் நிகழ்வுகளின் ஸ்வாரஸ்யத்தை அறிய ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

நெல்லைத் தமிழன் said...

நயத்தகு நாகரீகம் தெரிந்தவர் வீட்டுக்குச் சென்றிருந்திருக்கிறீர்கள். சுவாரசியமாகச் செல்கிறது

KILLERGEE Devakottai said...

உபசரிப்பு வெகு அருமை.
நினைவோட்டங்கள் அற்புதம்.

கோமதி அரசு said...

அன்று நடந்த நிகழ்வுகள் என்றாலும் நினைவாக அனைத்தையும் சொல்லி வருகிறீர்கள்.
எலிசபெத் தோத்திரம் சொல்லி வரவேற்றது மனகண்ணில் வந்தது.
சாம்பிராணி வாசனை, அழகிய வீடு அன்பான வரவேற்பு என்று படிக்க நன்றாக இருக்கிறது.
இட்லி, சட்னி, காப்பி, பால் என்று அன்பான உபசரிப்பும் அருமை.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
இனிய காலை வணக்கம் அம்மா.

அந்த செல்லங்கள் அந்த வீட்டு மனிதர்களிடம் மட்டுமே
நேசமும், நன்றியும் காட்டும்.
மற்றவர்களிடம் நட்பு பாராட்டாது.

வீட்டின் பாதுகாப்புக்காக வளர்க்கப் படும் நாய்கள்
அதே போலப் பயிற்சி கொடுக்கப்
பட்டிருந்தன. ஒரு குட்டி நாய் மட்டும் எஜமானியின்
மடியில் உட்கார்ந்து கொள்ளும்.அது
திபேத்திய நாய்.
தொடர்ந்து வந்த சம்பவங்கள் சிறிது கலங்க வைத்தாலும்
உண்மையான புரிதல் வந்ததும் சரியானது.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் முரளிமா,
நல்ல மனிதர்கள். பண்பு நிறைந்தவர்கள்.

சிங்கத்துக்கும் அவர் உற்ற தோழராக இருந்தார்.
அன்புடன் ரசித்துக் கருத்தும் சொன்னதற்கு மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேவகோட்டைஜி,
பொறுமையாகப் படித்ததற்கு மிக நன்றி மா.
அவர்கள் வீட்டில் எனக்குப் பிடித்ததே அந்த தோழமைதான்.
அவர்கள் நட்பு சிங்கத்திற்குக் கடைசி வரை இருந்தது.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி மா,

அவர்களின் உயர்ந்த பண்பு மிகப் பிடித்தது.
திருமதி வில்லியம்சுக்கு அவரது மாமியாரே
வழிகாட்டி. கட்டுப்பாடுகளோடு தான் இருந்தார்.
நான் சொல்லும் வருடம் அவருக்கு 37 வயது இருக்கும்.

சில விஷயங்கள் நினைவிலிருந்து அகலுவதில்லை.
அதே சமயம் 10 வருடங்களுக்கு முன் நடந்தது நினைவுக்கு
வருவதில்லை:)
நன்றி மா.

மாதேவி said...

அழகாக விரிந்து செல்கிறது...

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி.
நல்லபடியாகச் சொல்கிறேன் என்று நம்புகிறேன்
அம்மா.Tight rope walking :)

வெங்கட் நாகராஜ் said...

இனிதான பயணம் - நிகழ்வுகள்/நினைவுகள் நன்று. தொடர்கிறேன்.

மௌனம்...