Blog Archive

Thursday, August 05, 2021

முன்னம் ஒரு காலத்திலே 4

வல்லிசிம்ஹன்

கிருஸ்துமஸ் நாள் நல்ல மூடுபனியுடன், 
குளிர் சூழ லேசான சூரிய வெளிச்சத்துடன் மலர்ந்தது.
குழந்தைகளுக்கு மகா உத்சாகம். ஜன்னல்களைத் தொட்டுச்
சில்ல்ல் என்று சப்தம் எழுப்பினார்கள்.

அவரவர்களுக்கான பால், காப்பி கொடுத்ததும்
கொண்டு வந்திருந்த நல்ல் உடைகளையும் காலுறைகளையும்
மாட்டி ஷூ போட்டுக் கொண்டு 
சமர்த்துக் குடங்களாக வண்டியில் ஏறிக் கொண்டார்கள்.

நாங்கள் வில்லியம்ஸ் அவர்களின் வீட்டு வாசலில் இறங்கி சுற்றியுள்ள
பெரிய தோட்டத்தைப் பார்த்தோம்.
மலையை ஒட்டி அமைந்த தோட்டம் என்பதால் படிப் படியாக
அமைந்த நிலத்தில்
ரோஜாச் செடிகள்,பலவகை பெயர் தெரியாத ஃபெர்ன்ஸ்,
குரோட்டன்ஸ், மாதுளை மரங்கள், ஆரஞ்சு மரங்கள்
என்று வண்ணமயமாக   இருந்தது அந்த எஸ்டேட்.

குழந்தைகள் விளையாட சறுக்கு மரம்,ஊஞ்சல்கள்,
என்று விதவிதமான அமைப்புகள் தம்பதிகளின் ரசனையைக் காட்டியது.சுற்றி வரும்போது பெரிய பெரிய  kennels 
கண்ணில் தென்பட்டது.
நாங்கள் அருகே வந்த போது அத்தனை 11 நாய்ச்செல்லங்களும்
குரைக்க ஆரம்பித்தன:)

தாங்க முடியாமல் விரைந்து வீட்டு முகப்புக்கு வந்து விட்டோம்!!!
இத்தனை ஜீவராசிகளுக்கும் சாப்பாடு?
கூட வந்த  சுந்தரம், ''அவைகளுக்கு சமைக்கத்
தனி ஆள் இருக்கிறான். அவன் வர நேரம் தான்.
ஐய்யா நீங்கள் உள்ளே போய் உட்காருங்கள்''

''கதவைத் தாளிட்டுக் கொள்ளுங்கள்.  இவைகளை அவிழ்த்துவிட்டால்
இஷ்டத்துக்கு ஓடும்'' என்றார்.



இந்தப்படம்..............................,  அன்று மதியம்  சாப்பாட்டுக்குப் பின் பார்த்து ரசித்தோம்.

அன்று வெள்ளிக்கிழமை என்பதால் அவர்கள் வீட்டில் அசைவம்
கிடையாது.
அவர்கள் பழக்க வழக்கங்கள் என்னை ,என் சிந்தனைப் போக்கை மாற்றியது.

பிடிக்காதது ஒன்றே ஒன்று. ஆனால் மலை வாசஸ்தலத்தில் இருப்பவர்கள் 
எல்லோருக்கும்  அந்தப் பழக்கம்  இருந்தது தெரியும்.

மாலை கிளம்ப இருந்த எங்களை கோபாலன் தம்பதியினர்
வற்புறுத்தி இருக்க வைத்தார்கள்.

கூனூர், சுற்றிப் பார்த்துவிட்டு உதகமண்டலமும் போய் வந்த
போது மாலை 8 மணி ஆகியிருந்தது.
எங்கள் குழந்தைகளும் அவர்கள் பெண்கள் இருவரும்
உள்ளே இருந்த சின்ன சாப்பாட்டு அறையில் 
தோசை சாப்பிடச் சென்றார்கள்.

முதல் நாள் மாதிரியே ஷெர்ரி என்ற  வைன் மற்றும் சற்று அதிக
ஆல்கஹால் உடைய விஸ்கி  கலந்து
பேசின வண்ணம் குடித்துக் கொண்டிருந்தார்கள்.
எங்களைத் தவிர இன்னும்  சில சினேகிதர்கள்

கோவையிலிருந்து வந்திருந்தார்கள்.
 நிதானமாக ஆரம்பித்தது, எடுத்ததற்கெல்லாம்
சிரிப்பு என்று சென்று கொண்டிருந்தது.

சமையல் பேச்சு வரும்போது திரு வில்லியம்ஸ்
சாரதாவின் சைவ சமையலை வெகுவாகப் பாராட்டினார்.

அவர் ஒரு உணவுப் பிரியர் என்பது இரண்டு நாட்களாக 
நான் பார்த்ததில் தெரிந்தது.
அவர்கள் வீட்டில் எலிசபெத் அவர்களைத் தவிர இரண்டு
 சமையல்காரர்களும் இருந்தார்கள்.
எல்லோருமே சமையல் செய்வதில் தேர்ந்தவர்கள்.

இந்தப் பேச்சில் எலிசபெத் குறுக்கிட்டு,
''நம் வீட்டு சமையலை விட அவர்கள் வீட்டு உணவு 
உங்களுக்குப் பிடித்துவிட்டது'' என்று புன்னகைத்தபடி சொன்னாலும்
அதில் ஒரு கசப்பு இருந்தது தெரிந்தது.

வந்திருந்த இன்னோரு டாக்டர் தோழி,
''சாரதாவுக்குப் பிள்ளையா குட்டியா
சமைப்பதைத் தவிர  வேறு பொழுது போக்கு இல்லை.
கொடுத்துவைத்தவள்'' என்று குறிப்பிட
சாரதாவின் முகம் சிவந்தது.

எனக்கே கலக்கமாக இருந்தது.இந்த  கூட்டத்தில் கலந்து பேச
எனக்கு விஷயம் இல்லை.

சட்டென்று  எழுந்து போக இருந்த சாரதாவை , கோபாலன் 
தடுத்து நிறுத்தினார்.

எல்லோருக்கும் தோசையும் ,தயிர் சாதமும் ஏற்பாடு செய்ய
எலிசபெத்  சமையலறைய நோக்கி நடக்க
நானும் பின் தொடர்ந்தேன்.
'' நீங்கள் அவர்கள் வீட்டுக்குப் பக்கத்து வீடா ? "
என்று அவள் கேட்டதும் தலை அசைத்தேன்.
''இரண்டு வருடங்களாகத் தெரியும் ''என்றேன்.
உடனே அவள்
''எங்க வீட்டுக்காரர் வெள்ளிக்கிழமை தோறும்
அங்கே தான் சாப்பிடுகிறார். நன்றாகப் பிடித்திருக்கிறது
போல...''

''எங்கள் வீட்டுக்காரரும் அவர்கள் வீட்டுக்குப் போவார்.
நல்ல நண்பர்கள் எல்லோரும்.'' என்று பொதுவாகச் சொன்னேன்.

''நீயும் கொஞ்சம் ஷெர்ரி எடுத்துக் கொள்கிறாயா. குளிருக்கும் இதம்"
  என்றாள். 

வழக்கம் இல்லை. 

குழந்தைகளுக்குத் தூங்கும் நேரம் வந்து விட்டது
என்று சொன்னேன்.
 சமையலறையில் தயாராக இருந்த பணியாட்களிடம்
இரண்டு மூன்று தோசைக் கல்லைப் போட்டு சீராகத் 
தோசை வார்த்துக் கொண்டு வருமாறு
பணித்துவிட்டுப்
பக்கத்து அறையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த 
குழந்தைகளிடம்  சீக்கிரம் அவரவர் அறைக்குப்
போகச் சொன்னாள். இன்னும் கொஞ்ச நேரம் விளையாடுகிறோம்
என்று சொன்ன பெண்களிடம் , அடுத்த நாளும் கோயிலுக்குச் 
செல்ல வேண்டும் என்பதை  ஞாபகப் படுத்தி
அனுப்ப, அவர்களும் பக்கத்தில் வந்து கன்னத்தில் முத்தமிட்டு,

செல்லும் போதே என்னையும் குழந்தைகளையும் அணைத்து
பை பை என்று சொல்லிச் சென்றனர்.

பொருந்தாத சூழ்னிலையில் மாட்டிக் கொண்ட
கலவரம் என்ன்னைச் சூழ்ந்தது.
சிங்கத்தைத் தேடினேன். 
அவர் இன்னோரு சினேகிதருடன் மும்முரமாகப்
புதிதாக வந்த வண்டிகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்.

தோசைகள் வருவதும் எல்லோரும் சாப்பிடுவதுமாக நேரம்
கடந்தது.
நானும் உள்ளே சென்று குழந்தைகளை, இன்னோரு படுக்கை அறையில்
படுக்க வைத்துவிட்டு வெளியே வந்தேன்.
ஹாலில்
பேச்சு சத்தம் கொஞ்சம் அதிகமானது. சிரிப்பும்
உற்சாகமும் அதிகரித்தன.
எலிசபெத்  எல்லோரையும் உபசரித்த வண்ணம்
இருந்தாள். புன்னகை மாறாமல், அடக்கம் கலையாமல்
பழகுவதைப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.

சாரதாவின் முகம் மட்டும் இறுகி ,அழுவதற்குத் தயாராவதை
யூகிக்க முடிந்தது. கோபாலனும் , திரு வில்லியம்ஸும்
அவளை அடிக்கடி நோக்கிய வண்ணம் இருந்தனர்.

முன்னம் கிண்டல் செய்த அதே டாக்டரும், 
இன்னோரு மில் சொந்தக்காரரின் மனைவியும்
ஏதோ தகாத வார்த்தை சொல்ல
ஒரு பூகம்பம் வரப் போவது போல எனக்கு அச்சம்
தோன்றியது. ...................................

மீண்டும் பார்க்கலாம்










18 comments:

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

நிகழ்வு பதிவு நன்றாகச் செல்கிறது. ஆனால், வெளியில் சென்று உதக மண்டலம் எல்லாம் சுற்றி வந்த ஸ்வாரஸ்யமான விஷயங்களைப் பற்றிச் சொல்லும் போது,நெருடலாக ஏதோ பேச்சு வார்த்தை வந்ததும் சங்கடத்தை ஏற்படுத்தியது. கதையாக நிகழ்வு அனுபவங்களை கேட்கும் எனக்கே ஒரு மாதிரி இருக்கும் போது,அங்கு உடனிருந்த உங்களின் மனநிலையை உணர முடிகிறது. சிரமமான சூழ்நிலைகள்தான். நாலு பேர் ஒன்றாக சேர்ந்துள்ள நிலையில் வேடிக்கையான பேச்சு கூட சமயத்தில் விபரீதமாக சென்று முடியும். அடுத்து என்னவோ என்ற பதட்டத்துடன் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி
சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

அங்கு சென்று ஊட்டி வரை உறவு படத்தை பார்த்திருக்கிறீர்களா.? இதைப்பற்றி கருத்தில் சொல்ல விடுபட்டு விட்டது. இடத்துக்கு ஏற்ற படந்தான். படமும் பாடல்களும் பொழுது போவதே தெரியாமல் நல்ல கலருடன்,கதையம்சமுமாக நன்றாக இருக்கும். நான் தொலைக்காட்சியில் நான்கைந்து முறை பார்த்து விட்டேன். நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா, முதலில் வந்து படித்து விட்டீர்களே!
ஆமாம் மா. நீங்கள் சொல்வது போல வார்த்தைகள் தடித்த அந்த நாளின்
நல்ல நினைவுகளை
இரண்டு பேரின் அநாகரீக வார்த்தைகளால்

மாறுபட்ட. சூழ்நிலை என்னை உதகமண்டலத்தின் காடசிகளைச். சொ ல்ல முடியாமல் இழுத்துச் சென்று விட்டன.

மேலும் ஊட்டிக்கு. முன்னமேயே பெய்த் தங்கியும் இருப்பதால்.

வித்தியாசமாகத் தோன்றவில்லை. எல்லாம் மன நிலை தான் காரணம். குழந்தைகளின் பசி, ஜீரணம் ,குளிர்
என்று பல பிரச்சினைகள்.:)

வல்லிசிம்ஹன் said...

ஊட்டி அவரை உறவு படம் எனக்கும் மிகப் பிடிக்கும் அவர்கள் வீட்டுப் பரொஜெக்டரில்
போட்டுக் காண்பித்தார்கள. திரு வில்லியம்சுக்குப் பட விநியோகஸ்தர்கள் பலரைத் தெரியும்.

ஊட்டியில் பட ஷூட்டிங்கிற்கு வருபவர்கள் கூனூர் எஸ்டேட்டுக்கும் வருவார்கள் என்று என் வீட்டுக்காரர் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

நல்ல கவனம் எடுத்துப் பின்னூட்டம் இடுவதே. பெரிய கலை. மிக நன்றிமா.

ஸ்ரீராம். said...

உள்ளே சென்ற திரவம் சில சுதந்திரங்களைக் கொடுப்பதாக எண்ணி சமயங்களில் வார்த்தை விடுவோரை நானும் கவனித்திருக்கிறேன்.  அலுவலக சூழலில் ஒருமுறை ஸ்ரீவில்லிபுத்தூரில் இரவுப்பணியில் இருந்தபோது இது மாதிரி ஒரு சூழ்நிலையில் என்னை வசைபாட ஒருவர் இதை உபயோகப்படுத்திக் கொண்டதும் நினைவுக்கு வருகிறது!

ஸ்ரீராம். said...

பாவம் சாரதா அம்மா.   அவர் முன்னரே எழுந்து அங்கிருந்து அகன்றிருக்க வேண்டும்.  

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்.,
இது போன்ற நிகழ்வுகளைக் கோவையில் தான் அதிகம் சந்தித்தேன்.

இது என்ன சுதந்திரம் என்று தெரியவில்லை.
அது பெண்களும் சேர்ந்து நாகரீகம் என்று கருதிக்
கலந்து கொள்வது என்று அங்கிருந்து கிளம்பும்
வரை எனக்குப் புரியவில்லை.

மிக டீசண்ட் என்று நாம் நினைப்பவர்களுக்கு
நினைவும் வார்த்தைகளும் loose ஆவது
தெளிவாகத் தெரிந்தும்
அதைத் தடுப்பதில்லை. வருந்தத் தக்க நிலைதான். 1972 இல்
இது. இப்போது எப்படி இருக்கிறதோ.:(

வல்லிசிம்ஹன் said...

சாரதா அம்மா மிகப் பாவம்.
ஏன் வந்தோம் என்று பிறகு வருந்தினார். ஒரு நல்ல
நட்பு முறிந்தது.நன்றி மா.

கோமதி அரசு said...

நிகழ்ந்தவைகளை மிக அழகாய் சொல்லி வருகிறீர்கள்.
ஊட்டி வரை உறவு அருமையான படம். தொலைக்காட்சியில் வைக்கும் போது எல்லாம் பார்ப்பேன். படம் வந்த போது கோவை ராமு தியேட்டரில் பார்த்த நினைவு இருக்கிறது.

உள்ளே போன திரவம் பேச வைக்கிறது.

சாரதா அவர்களின் வருத்தமும், எலிசபெத் அவர்களின் ஆற்றாமையும் புரிகிறது.

பூகம்பம் வரப் போகிறதா?

தொடர்கிறேன்.

வெங்கட் நாகராஜ் said...

அடடா.... வார்த்தைகள் அடுத்தவர்களைக் காயப்படுத்தும் என்பதை உணர்ந்து கொள்ளாமல் பேசிவிடுகிறார்கள் சிலர். மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

KILLERGEE Devakottai said...

சிலர் இங்கிதம் தெரியாமல் பேசுவார்கள்.
பிறரது மனம் புரியாதவர்கள்.
தொடர்கிறேன்...

KILLERGEE Devakottai said...
This comment has been removed by a blog administrator.
மனோ சாமிநாதன் said...

பதிவிற்கு அப்பாற்பட்டு, ஒரு சின்ன request வல்லிசிம்ஹன்!
BENGAY OINMENT பற்றி கீதா அவர்களது தளத்தில் குறிப்பிட்டிருந்தீர்கள். சென்னையில் அது எங்கே கிடைக்கும் என்று சொல்ல முடியுமா? என் தளத்திற்கு வந்து இதற்கு பதில் போட முடிந்தால் மகிழ்ச்சியடைவேன்.

மாதேவி said...

சில உறவுகள் இப்படியாக வந்துவிடுவது வருத்தமாகத்தான் இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி மா,
வாழ்க வளமுடன்,.

பழைய பாடல்களெல்லாம் நினைவுக்கு வருகின்றன.
உண்மையில் அந்தத் திரவம் செய்யும் சூழ்ச்சி
அனியாயம். ஆனால் மனதில் நினைத்திருப்பதை
வெளியில் சொல்லி விடுவார்கள் ,உண்மை சொரூபம் வெளியே வரும் என்பதை அன்றுதான் கண்டேன்.

கலகமாக இருந்தாலும் நன்மையில் முடிந்தது
என்றே சொல்ல வேண்டும்.
மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட்,

மனிதர்களின் மன நிலைமை மாறுவதைக் கண்கூடாகக் கண்டது
அன்றுதான்.

எல்லாமே ஒரு அனுபவம் என்று தான் கொள்ள வேண்டும்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேவகோட்டைஜி,
உண்மையே. இங்கிதமும் நல் வார்த்தைகளும் மன சுத்தத்தைப்
பொறுத்து இருக்கின்றன.
மற்றவரை வருத்தப் படவைக்கும் செயல்களோ,
சொற்களோ என்றும் நலம் விளைவித்த நேரமே
இல்லை.
இதற்குப் பின்னால் இருந்த உண்மை தெரிய வந்த போது சிரிப்புதான்
வந்தது.
மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

Thank you Mano.