நன்றி தம்பி முகுந்தன், மதுரை.
Humorous read....hare krishna.....
எட்டுதான் ஆகியிருந்ததது அதற்குள் குமாருக்குப் பசி எடுக்க ஆரம்பித்து விட்டது. காலையில் சீக்கிரம் எழுந்து அவசரமாகக் குளித்திருக்க வேண்டாம்! குளித்தவுடன் பழக்கத்தினால் வயிறு உணவு கேட்கிறது.
"என்னங்க கொஞ்சம் காப்பி குடிக்கிறீங்களா?" என்றாள் லதா சமையலறையிலிருந்து, உரத்த குரலில்.
"காப்பி குடிக்கறதா இருந்தா காலையில எழுந்தவுடனேயே குடிச்சிருக்க மாட்டேனா? நானே விரதம் இருக்கறதுக்காகக் கஷ்டப்பட்டு என்னைக் கட்டுப்படுத்திக்கிட்டிருக்கேன். நீ எதுக்கு இப்படி ஞாபகப்படுத்தறே?" என்றான் குமார் எரிச்சலுடன்.
"உங்களை யாரு ஏகாதசி விரதம் இருக்கச் சொன்னது?" என்று லதா முணுமுணுத்தது அவன் காதில் விழுந்தது.
எல்லாம் அந்த வாட்ஸ் ஆப் செய்தியால் வந்தது. ஏகாதசி விரதத்தின் மகிமைகளைப் பற்றி விளக்கிய அந்தச் செய்தி, ஒரு அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் ஒரு விரிவான ஆராய்ச்சிக்குப் பின் ஏகாதசி விரதம் இருப்பவர்களுக்கு உடல் நலப் பிரச்னைகள் வருவதில்லை என்றும் அவர்கள் நீண்ட நாள் வாழ்கிறாரகள் என்றும் கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தது.
அதைப் படித்ததுமே ஏகாதசி விரதம் இருந்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் குமாரின் மனதில் எழுந்தது. இந்தச் செய்தி வந்தது வெள்ளிக்கிழமை. அடுத்த நாளான சனியன்றே ஏகாதசி. அன்று அவனுக்கு அலுவலக விடுமுறை. அதனால் அன்றே ஏகாதசி விரதம் இருக்கலாம் என்று தீர்மானித்து விட்டான்.
வழக்கமாக விடுமுறை நாளன்று காலை 8 மணிக்கு மேல் எழுந்திருப்பவன் அன்று காலை 6 மணிக்கே எழுந்து குளித்து விட்டான். லதா காப்பி போடும் மணம் வந்தபோதும் தன் காப்பி ஆசையை அடக்கிக் கொண்டான்.
"காப்பி சாப்பிட்டா தப்பு இல்லேங்க" என்று லதா சொன்னபோதும் மறுத்து விட்டான்.
இப்போது 8 மணிக்கு மறுபடி காப்பி வேண்டுமா என்று கேட்டு அவனுக்கு சபலம் ஏற்படுத்துகிறாள்!
9 மணிக்கு"கோவிலுக்குப் போயிட்டு வரேன்" என்று கிளம்பினான் குமார்.
தெருவில் நடந்து செல்லும்போது ஹோட்டல்கள், டீக்கடைகள், நடமாடும் சிற்றுண்டிச் சாலைகள் இவற்றிலிருந்து வந்த மணம் அவன் பசியை அதிகமாக்கியது.
கோவிலுக்குள் நுழைந்ததும் ஒரு எண்ணம் தோன்றியது. கோவிலில் ஏதாவது பிரசாதம் கிடைத்தால் அதை உண்ணலாம், அதனால் விரதத்துக்கு பங்கம் வராது என்று நினைத்தான். ஆனால் ஏகாதசியன்று பெருமாளுக்கே உணவு படைப்பதில்லையாம்! அதனால் கோவிலில் பிரசாதம் எதுவும் கிடைக்கவில்லை.
கோவிலிலிருந்து திரும்பும்போது மிகவும் அலுப்பாக இருந்தது. சட்டென்று ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்து விட்டான்.
சர்வரிடம் "ஒரு காப்பி" என்றான். "இட்லி, பொங்கல் எல்லாம் சூடா இருக்கு சார்!" என்றான் சர்வர். "காப்பி மட்டும் கொண்டு வா, போதும்" என்றான் குமார் எரிந்து விழாத குறையாக.
'ஒரு காப்பி சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது. வீட்டில் காப்பி சாப்பிட்டால் லதா கொஞ்சம் ஏளனமாக நினைப்பாள். அதனால் ஹோட்டலில் சாப்பிட்டது சரிதான்' என்று நினைத்துக் கொண்டான்.
சுமார் பதினோரு மணிக்கு அவனைப் பார்க்க ஒரு நண்பர் வந்தார். லதா அவருக்கு மட்டும் காப்பி கொண்டு வந்து வைத்தாள்.
"நீங்க சாப்பிடலியா" என்று நண்பர் கேட்டதும் "உங்களுக்கும் காப்பி கொடுக்கட்டுமா?" என்றாள் லதா.
"சரி" என்று தலையாட்டினான் குமார். தன்னை அறியாமலேயே சரி என்று சொல்லி விட்டோமா என்று நினைத்த குமார், 'ஏற்கெனவே ஹோட்டலில் ஒரு காப்பி சாப்பிட்டாகி விட்டது. இன்னொரு காப்பி சாப்பிட்டால் தவறில்லை' என்று சமாதானப்படுத்திக் கொண்டான்.
1 மணிக்கு, சமைத்த உணவுகளைச் சாப்பாட்டு மேஜையில் வைத்து விட்டு லதா சாப்பிட உட்கார்ந்தாள். குமாரைப் பார்த்து "நீங்களும் சாப்பிடறீங்களா?" என்றாள்.
"உனக்கு மட்டும்தானே சமைச்சிருப்பே?" என்றான் குமார்.
"அப்படி கரெக்டா சமைக்க முடியுமா? நான் சமைச்ச சாப்பாடு ரெண்டு பேருக்குக காணும். உங்களுக்கும் தட்டு எடுத்து வைக்கட்டுமா?"
"நான்தான் இன்னிக்கு விரதம்னு சொன்னேனே!" என்றான் குமார் எரிச்சலுடன்.
"எனக்குத் தெரிஞ்சு ஏகாதசி விரதம் இருக்கறவங்க நிறைய பேரு ஒருவேளை மட்டும் சாப்பிடுவாங்க. நீங்க கூட இப்ப சாப்பிட்டுட்டு ராத்திரி சாப்பிடாம இருக்கலாம்."
பசி வயிற்றைக் கிள்ளிக்கொண்டிருந்த நிலையில், "சரி" என்றான் குமார் அவசரமாக. "முதல்ல ஒரு வேளை மட்டும் சாப்பிட்டுட்டு விரதம் இருக்கேன். இது பழகிடுச்சுன்னா, நாள் முழுக்க விரதம் இருக்கறது சுலபமா இருக்கும்" என்றான்.
"ஒரு வேளைதானே சாப்பிடப் போறீங்க? கொஞ்சம் தாராளமாவே சாப்பிடுங்க. எல்லாம் நிறையவே செஞ்சிருக்கேன். எனக்கு இல்லாம போயிடுமோன்னு கவலைப்படாதீங்க" என்றாள் லதா.
தன் மீது எவ்வளவு அக்கறை இவளுக்கு என்று நினைத்தபடியே வயிறு முட்டச் சாப்பிட்டான் குமார்.
பிற்பகலில் காப்பி போடும்போது, "என்னங்க உங்களுக்கும் காப்பி கலக்கட்டுமா? ராத்திரி மட்டும்தானே விரதம் இருக்கப் போறீங்க? இப்ப காப்பி சாப்பிடலாம் இல்ல?" என்றாள் லதா.
குமார் எதுவும் சொல்லவில்லை.
சற்று நேரத்தில் லதா காப்பி கொண்டு வைத்தாள். "பிஸ்கட் ஏதாவது வேணுமா?" என்றாள்.
இவள் தன்னைக் கிண்டல் செய்கிறாளோ என்று நினைத்தபடி அவளை முறைத்த குமார், "வேண்டாம்" என்றான்.
மாலை லதா கடைக்குப்போய் விட்டாள். மத்தியானம் வயிறு நிறையச் சாப்பிட்டும் சீக்கிரமே ஜீரணம் ஆகி விட்டது போல் வயிறு பசிக்க ஆரம்பித்தது. 'பிஸ்கட் வேணுமா?' என்று மனைவி கேட்டது நினைவு வந்தது.
சமையலறை ஷெல்ஃபில் தேடினான். இரண்டு மூன்று வகை பிஸ்கட்கள் இருந்தன. ஒவ்வொன்றிலும் இரண்டு எடுத்துக் கொண்டான். பிஸ்கட் பாக்கெட்டுகளுக்கு அருகிலேயே கடையில் வாங்கிய ஒரு மிக்சர் பாக்கெட் மற்றும் ஒரு வேர்க்கடலை பாக்கெட் ஆகியவை இருந்தன. அவற்றையும் எடுத்துக் கொண்டான்.
டிவி பார்த்தபடியே பிஸ்கட், மிக்ஸர், வேர்க்கடலை எல்லாவற்றையும் சுவைத்தான்.
கடைக்குப் போன லதா ஆறு மணிக்குத் திரும்பி வந்தவுடன், "ராத்திரி உங்களுக்காக வாழைப்பழம் வாங்கிக்கிட்டு வந்தேன். வெறும் வயத்தோட படுக்க வேண்டாம். பழமும் பாலும் சாப்பிட்டா தப்பு இல்லை" என்றாள்.
உள்ளே சென்று கடையில் வாங்கியவற்றை வைத்து விட்டு வந்தவள் கையில் ஒரு பொட்டலத்துடன் வந்தாள். "போளி ஸ்டால்ல சூடா பஜ்ஜி போட்டுக்கிட்டிருந்தாங்க. சூடா இருக்கு. சாப்பிட்டுப் பாருங்க" என்று பாக்கெட்டை அவனிடம் கொடுத்தாள்.
இரவில்தான் விரதம். மணி ஆறுதான் ஆகிறது. 7 மணிக்குதான் இரவு வரும். 7 மணிக்கு மேல் எதுவும் சாப்பிட வேண்டாம் என்று நினைத்தபடி பஜ்ஜியை உண்டு முடித்தான் குமார். பஜ்ஜி சூடாகவும் சுவையாகவும் இருந்தது.
"வாழைப்பழம் வாங்கிக்கிட்டு வந்தியே அதைக் கொடு. இப்பவே சாப்பிட்டுடறேன். ராத்திரி சாப்பிட வேண்டாம்" என்றான்.
மனைவி கொடுத்த நான்கு வாழைப்பழங்களைத் தின்றபின் வயிறு முழுமையாக நிறைந்திருந்தது.
இரவு 9 மணிக்கு "என்னங்க பால் கொடுக்கட்டுமா?" என்றாள் லதா. 'சரி" என்றான் குமார் பலவீனமாக. சாயந்திரம் நிறைந்திருந்த வயிற்றில் இப்போது மீண்டும் பசி எடுக்க ஆரம்பித்து விட்டது.
"இல்லை, கொஞ்சம் உப்மா சாப்பிட்டுட்டு பால் குடிக்கிறீங்களா?"
"உப்மா செஞ்சிருக்கியா என்ன?'
"எனக்கு ரவா உப்மா பண்ணப் போறேன். வேணும்னா உங்களுக்கும் சேர்த்து செய்யறேன்" என்றாள் லதா.
உப்புமாவை நினைத்ததும் நாவில் நீர் ஊறியது. 'சரி " என்றான்.
சூடான உப்புமாவை உண்டு விட்டுப் பால் குடித்தான்.
இரவு படுக்கப்போகும்போது, விரதம் இருக்க முயன்ற இன்று எப்போதும் சாப்பிடுவதை விட அதிகமாகச் சாப்பிட்டு விட்டதாகத் தோன்றியது.
துறவறவியல் அதிகாரம் 27
தவம் குறள் 262
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவமதனை
அஃதிலார் மேற்கொள் வது.
பொருள்:
ஒழுக்கமும், கட்டுப்பாடும் உள்ளவர்க்கே தவம் கூடும். தவத்துக்கே உரித்தான இந்த குணங்கள் இல்லாதவர் தவம் மேற்கொள்ள முயல்வது வீண்.
Unknown author......
10 comments:
என்னையே நான் படிப்பது போல இருந்தது!
மனித மனம் விசித்திரமானது. சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் சாப்பிடாத தோன்றாது.. இன்று விரதம் இருப்போம் என்று நினைத்தால் அன்றுதான் அதிகம் பசி எடுக்கும்!
அருமை
வணக்கம் சகோதரி
நல்ல பதிவு. விரதம்,தவமிருப்பவர்களுக்கு சுய கட்டுப்பாடு எண்ணங்கள் வலிமை மிகுந்ததாக இருக்க வேண்டும். சிந்தனை முழுக்க கடவுளை (உள்+கட=கடவுள்) நினைத்து அவரை (நம் ஆத்மா) உணர்ந்து கொண்டிருக்க வேண்டும். விரத பங்கம் என்கிறார்கள். அது நம்மாலும், நம்மை சுற்றியுள்ளவர்களாலும் நடக்கலாம். கதையில் அவர் மனைவியும் அந்த பங்கத்திற்கு ஒரு காரணம் என நினைக்கத் தோன்றுகிறது. இதனால்தான் புராண கதைகளில் (ஒரு அசுரனோ, தேவரோ, யாராக இருந்தாலும் மனம் என்பது ஒன்றுதானே) தவமிருப்பவர்களின் சிந்தனைகளை கலைக்க தேவலோக நடனமாதர்களை பயன்படுத்தினார்கள் போலிருக்கிறது.:) கதை அருமையாக உள்ளது. ரசித்தேன். குறள் நெறியும் அதற்குப் பொருத்தம். எதற்கும் மனமே (ஆத்மாவை உணர்வது) மார்க்கம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பின் ஸ்ரீராம் ,
நன்றி மா. எனக்குத் தெரிந்து 16 வயதில் ஏகாதசி, திருவோணம் என்று விரதம் இருந்த தோழியை வியப்புடன் பார்த்திருக்கிறேன்.
தண்ணீர் கூடப் பருக மாட்டாள்.
மனத் திடம் ,உடல் திடம் வேண்டும்.
50 வயது வரை என்னால் முடிந்தது.
பிறகு முடியவில்லை மா.
நன்றி ஜெயக்குமார். நலமுடன் இருங்கள்.
நல்ல பதிவு. விரதம்,தவமிருப்பவர்களுக்கு சுய கட்டுப்பாடு எண்ணங்கள் வலிமை மிகுந்ததாக இருக்க வேண்டும். சிந்தனை முழுக்க கடவுளை (உள்+கட=கடவுள்) நினைத்து அவரை (நம் ஆத்மா) உணர்ந்து கொண்டிருக்க வேண்டும். ////////////////////////////////////////////////////
மிக மிக அருமை அன்பு கமலாமா.
இதை அனுப்பின என் கசின், விரதங்கள் அனுஷ்டிப்பவன் தான்.
அவனைப் பார்க்கும் போது ,
தாத்தாவைப் பார்க்கும் நினைவு வரும்.
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.
பக்தியும் வைராக்கியமும் பழகப் பழகத்தான்
வரும் இல்லையாம்மா?
அன்பான பின்னூட்டத்துக்கு மிக நன்றி மா.
'பக்கத்து வீட்டு சுப்பம்மாக்கு இன்று ஏகாதசி விரதம்..... 'என்று மழலைகளுக்கான சி டி பாடலில் வரும் பேரன் பார்ப்பான் . நீங்கள் எழுதியதை படிக்கும்போது அதே ரசனையாக இருந்தது.
நல்ல விரதம் இருந்தார் போங்க! எப்போதையும்விட அதிகமாக சாப்பிட்டு இருக்கிறாரே... ஹாஹா....
அன்பின் மாதேவி,
நலமுடன் இருங்கள் அம்மா.
ஓ.அந்தப் பழமொழி நினைவு இருக்கிறது:)
பக்கத்து வீட்டு சுப்பம்மாவுக்கு ஏகாதசி விரதம்
பானை நிறைய பலகாரம்!
நன்றி அம்மா.
நன்றி அன்பு மாதேவி.
Post a Comment