Blog Archive

Tuesday, August 03, 2021

முன்னம் ஒரு காலத்திலே 2

வல்லிசிம்ஹன்


வில்லியம்ஸ் ஜோன்ஸ் சாமிநாதன் இதுதான் 
எலிசபெத்தின் கணவர் பெயர்.முன்னோர்களில்
இந்துக்கள் இருந்திருக்கிறார்கள்
பிறகு மதம் மாறி இருக்கலாம்  என்பது சம்பந்தப் பட்ட
தோழி சொன்னது.

எலிசபெத்தின் குடும்பம் குடகு மலையில் ஏதோ
அரச குடும்பத்தின் திவானாக இருந்தவரிலிருந்து தோன்றியது
என்று அதே தோழி சொன்னாள்.
இந்தத் தோழி சாரதா ,கோவையில் எங்கள் வீட்டுக்குப் 
பக்கத்து வீட்டில் இருந்தாள். அவளும், அவள் கணவர்
கோபாலனும் கேரளத்தைச் சேர்ந்தவர்கள். கட்டிடக் கலையில்
தேர்ந்தவர் கோபாலன். கோவையிலும் ,மேட்டுப் பாளையத்திலும் இருந்த
வில்லியம்ஸின் வீடுகளை
அமைத்துக் கொடுத்தவர் அவர்தான். 
குழந்தைகள் இல்லை. நம் கதையின் நாயகர் வில்லியம்சுக்கு
உற்ற தோழர்.

வெள்ளிக்கிழமையானால் அவருக்கு இவர்கள் வீட்டில் தான் சாப்பாடு.

சைவ சமையலில் வில்லியம்சுக்கு அவ்வளவு ஈடுபாடாம்.
சாரதாவும் நன்றாகச் சமைப்பார். 

நம் வீட்டின் வேலியைத் தாண்டினால் சாரதாவின் வீடு.
அந்த வீட்டின் பெரிய ஜன்னல் வழியே 
எங்கள் குழந்தைகள் விளையாடுவதைப் 
பார்த்துக் கொண்டிருப்பார்கள் அந்தத் தம்பதியினர்.

திடீர் என்று ஒரு நாள், ஒரு கூடை நிறைய 
சாக்கலேட் டப்பாக்களும், உயர் ரக பிஸ்கெட்களும்
சாரதா கொண்டு வந்து கொடுத்தார்.
ஏன் என்று நான் கேட்டதற்கு,
''வில்லியம்ஸ் சாருக்கு குழந்தைகள்
மிகப் பிடிக்கும். இந்தக் குழந்தைகளைப் 
பார்த்ததும் கொடுக்கச் சொல்லி என்னிடம் கொடுத்தார்''
என்றவளை ஆச்சர்யத்துடன் பார்த்தேன்.

''அவர் அப்படித்தான் ரேவதி. நிறைய கொடுக்கத் தெரிந்தவர்.
இதோ இந்த டிசம்பர் மாதம் எங்களையும்
கூனூருக்கு வரச் சொல்லி இருக்கிறார்.''
என்றவள் உங்க வீட்டுக்காரருக்குக் கூட அவரைத் தெரியுமாமே
என்று கேட்டாள்.

அது ஒன்றும் ஆச்சரியமாக இல்லை எனக்கு.
கோவைத் தொழிற்சாலையில் வராத வண்டிகளே
கிடையாது. அந்த ஊரே பணக்காரர்கள் ஊர்.
அதில் இவரும்  ஒருவராக இருக்கலாம்.
கொஞ்சம் கிட்ட நெருங்கி விட்டதால்,
இனிமேல் திரு வில்லியம்ஸ் என்று சொல்கிறேன்:)
திரு வில்லியம்ஸ் வரும் வண்டியே செவர்லே 
வண்டி என்று பார்த்திருக்கிறேன்.
இது போல அன்னிய நாட்டு வண்டிகளைப்
பழுது பார்ப்பதில் சிங்கத்துக்கு நிகரே கிடையாது.

அன்று இரவு குழந்தைகளின் கும்மாளத்தைப் பார்த்து சிங்கம்
சிந்தாமணி மார்க்கெட் போய் வந்தாயா என்ன
இத்தனை டப்பாக்கள் இருக்கிறதே என்று கேட்டார்.
என்னவோ இந்த மூன்றையும் அழைத்துக் கொண்டு நான் தனியே
போகப் பழகினவள் மாதிரி:)))
அந்த 22
ஸாரதா  கோபாலன் இப்படித்தான் இருப்பார்.


 எலிசபெத் வில்லியம்ஸ்.

அந்த 22 வயதிலும் தனியே வெளியே
போகத்தெரியாத
கிணற்றுத் தவளை நான்!!!

திரு வில்லியம்ஸ், சாரதா கோபாலன் என்று நான் கதை சொன்னதும்
அவரைப் பற்றி
மிகவும் சிலாகித்துப் பேசினார் சிங்கம்.
'ரொம்ப எளிமையான மனிதர்.பழக இனிமையானவர்.
வண்டிகள் பழுது பார்த்து எடுத்துக் கொண்டு போகும்போது
பணத்தைச் சரியாகக் கட்டிவிட்டுத்தான் எடுத்துச் செல்வார்'
என்றெல்லாம் கதை பறந்தது.
சிங்கத்துக்குக் கஸ்டமர்களே கண் கண்ட தெய்வம்:)

 டிசம்பர் மாதம் கோவையின் இளம் குளிர் இதமாக இருக்கும்.
எனக்கு  குழந்தைகளோட நர்சரிப் பள்ளி,
அவ்வப்போது வரும் சளி காய்ச்சல் என்று
இரவெது பகலெது என்று தெரியாமல் ஓடிக்கொண்டிருந்தது.


அப்பொழுதுதான் திரு வில்லியம்ஸ் தம்பதிகளின் 
அழைப்பு வந்தது.

சிங்கம் வந்து சொன்னார். பக்கத்து வீட்டு
சாரதா கோபால் தம்பதியினரும்,
நாமும் கிருஸ்துமஸ் தினத்துக்கு ஊட்டிக்குப்
போகிறோம். அங்கே டிராவலர்ஸ் பங்களோவில் ஒரு இரவு தங்கி
அடுத்த நாள் வந்துவிடலாம் என்றார்,.

காலையில் சந்தித்த சாரதாவும் இதையே சொல்ல
எனக்கு தெரியாத ஒருவர் வீட்டுக்குப் 
போகும் கூச்சம். மலை வளைவுகளில், வயிறு ஒத்துக் கொள்ளாமல்
வாந்தி எடுக்கும் மகள் நினைவு.
வேண்டாம் என்று சொல்லவும் தயக்கம்.

சில விஷயங்களில் சிங்கம் பேச்சை மீற முடியாது.

டிசம்பர் 24 ஆம் தேதி ,  ரிப்பேருக்கு வந்திருந்த
திரு வில்லியம்ஸ் அவர்களின் பெரிய வண்டியை
ஊட்டியில் ஒப்படைக்க வேண்டி இருந்ததால்
அதிலேயே சாரதா,கோபாலன்,நான் குழந்தைகள்
என்று ஏறிக் கொள்ள, சிங்கம் ஓட்ட
பாட்டும் பேச்சுமாகக் கிளம்பினோம்.



18 comments:

KILLERGEE Devakottai said...

சுவாரஸ்யமான விசயங்கள் தொடர்கிறேன் அம்மா....

Geetha Sambasivam said...

அருமையான நினைவுகள். ஊட்டியில் உங்கள் அனுபவங்கள் பகிர்வுக்குக் காத்திருக்கேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேவகோட்டைஜி,
வருகைக்கு மிக நன்றி மா.
எழுது சிறப்பாக இருக்க வேண்டும் என்று ஆசை.

கொஞ்சம் நீண்டு போகிறது மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா, நீங்கள் ஊட்டியில்
இருந்த நாட்களை நினைத்துப் பார்க்கிறேன்.

எவ்வளவு மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில். நான் கண்ட கூனூர் மிக வளப்பமாக
இருந்தது அந்தக் காலத்தில்.
நன்றிமா. தொடர்கிறேன்.

நெல்லைத் தமிழன் said...

நல்லா எழுதறீங்க. ஆர்வத்துடன் படிக்கிறேன். அடுத்தது என்ன?

சிம்ஹத்தைச் சந்திக்க வாய்ப்பு அமையவில்லையே என்று தோன்றுகிறது. (அது சரி... உங்களையே இரு வருடங்களுக்கு முன்பு பார்க்க முடியாமல் போய்விட்டது)

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யமாக தொடங்கி இருக்கிறது.  தொடர்கிறேன்.  கொண்டை ஊசி வளைவுகளில் திரும்பும்போது த்ரில்லாக இருக்கும்!

கோமதி அரசு said...

அருமையாக நிகழ்வுகளை விவரித்து வருகிறீர்கள்.
சாரதா, எலிசபெத் நமக்கு மிகவும் தெரிந்த முகம் . மிகவும் அருமையாக இருக்கிறது. அமைதி, கனிவு பொருந்திய முகங்கள்.

குழந்தைகள் அடுத்து அடுத்து இருக்கும் போது அவர்களை பார்த்துக் கொள்வதே சிரமம். அதில் அதனியாக அவர்களை அழைத்துக் கொண்டு கடைக்கு போவது மிகவும் கஷ்டம் தான்.
தொடர்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,

இரண்டு வருடங்களுக்கு முன் எனக்க்ப் பார்க்கக் கிடைத்தவர்கள் கொஞ்சமே.
அதில் ஸ்ரீராமும், அவர் பாஸும், பானுவும்

இருந்தார்கள்.
இன்னும் எத்தனையோ நல்லவர்களைக் காண முடியவில்லை.என்
மாமாக்களைச் சந்தித்தது நல்லதாச்சு,
ஒருவர் கோவிடில் பகவானிடம் சென்று விட்டார்.

கொடுப்பினை இருந்தால் நாமும் சந்திக்கலாம்.
இது கதையல்ல நிஜம் என்று சொல்ல ஆசை.
ஆனால் கொஞ்சம் நறுக்கிக்
கொஞ்சம் சேர்த்திருக்கிறேன்:)
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
எனக்கும் மலைப் பாதைப் பயணம் மிகப் பிடிக்கும்.
மிக நன்றி ஸ்ரீராம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,

வாழ்க வளமுடன்.
அவர்கள் இருவரும் நல்லவர்கள் தான் .
சட்டென்று புரிதல் இல்லாமல் போனது தான் சம்பவம்.

தனியாகக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு நான் பயணித்ததே இல்லை.
அதுவும் ஒரு தடவை கைப்பை தொலைய
எனக்கு இருந்த தன்னம்பிக்கையும்
தொலைந்தது:)
கோவையில் அப்போது தண்ணீர்ப் பிரச்சினை வேறு இருந்தது.

என்னவோ சமாளித்தேன்:)))))

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

உங்களின் அனுபவ நிகழ்வுகள் சுவாரஸ்யமாக செல்கிறது. நல்ல எழுத்து நடையுடன் பொறுமையாக அனைத்தையும் விளக்குகிறீர்கள்.இடையிடையே நல்ல நகைச்சுவை உணர்வுடன் கூடிய எழுத்துக்களை ரசித்தேன். நான் இன்னமும் தனியாக எங்கும் செல்வதில்லை.:) நிகழ்வில் உடன் பயணிக்கும் நட்புகளை நல்லதொரு படங்களாக தந்திருப்பது நன்றாக உள்ளது. அடுத்து நடப்பது என்னவென்றிய ஆவலுடன் உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
இனிய காலை வணக்கம் அம்மா.
பொறுமையாகப் படித்துக் கருத்தும் சொல்கிறீரள்.

எனக்கு சுருக்கம் என்பதே வருவதில்லை:)
பழைய நிகழ்ச்சிகளும் மறப்பதில்லை.
அதனால் என் கதைகளும் ஏழு சர்க்க
ராமாயணம் ஆகின்றன.:)

இருவரும் என்னை விட வயதில் மூத்தவர்களாக இருந்தும்
நல்ல நட்புடன் தான்
இருந்தார்கள்.
மிக நன்றி மா. நாளை அடுத்த அத்தியாயம்.

கரந்தை ஜெயக்குமார் said...

தொடக்கமே அருமை
தொடர்கிறேன்

மாதேவி said...

இனிய பயணம் பலவித அனுபவங்கள் இருந்திருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஜெயக்குமார்,
படித்துக் கருத்தும் சொன்னதற்கு மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி,
பதிவு உங்களுக்கும் பிடித்தது எனக்கு மகிழ்ச்சிமா.
நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

இவரைப் போல சிலர் பழகும் அனைவரிடமும் சந்தோஷத்தினை பகிர்ந்து கொள்கிறார்கள்.

ஸ்வாரஸ்யமாகச் செல்கிறது தொடர். தொடர்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

உண்மையே அன்பு வெங்கட்.

நல்ல கம்பீரமான தம்பதிகள். கண்டாலே ஈர்க்கும் தோற்றம்.எங்களுக்கும் அவர்கள் நட்பு கிடைத்ததே சந்தோஷம்.

படித்துக கருத்தும் இட்டதில் மகிழ்ச்சி மா.