Blog Archive

Thursday, November 11, 2021

சேவை செய்வதே ஆனந்தம்.

வல்லிசிம்ஹன்
Thank you dear cousin Subha.


ஒருவர் செய்த சமூக சேவைக்காக, அவர் இறந்த பிறகு அவருக்கு பத்மஸ்ரீ விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. காரணம் வேறில்லை. இருக்கும்போது கொடுத்திருந்தால் அவர் ஏற்றிருக்கமாட்டார். பெருமைக்குரிய இந்த அறிமுகத்துக்கு சொந்தக்காரர் கோவை சாந்தி கியர்ஸ் நிறுவனர் திரு.சுப்பிரமணியம் அவர்கள் தான். கடந்த டிச.,11 அன்று அவர் மறைந்த பின்புதான் அவர் செய்த சமூகசேவை உலகமெல்லாம் பரபரப்பாக பேசப்பட்டது.

பொறியியல் தொழில்நுட்பத்தில் கோவைவாசிகள் விற்பன்னர்கள் என்றால் சுப்பிரமணியம் வித்தகர். பி.எஸ்.ஜி.,தொழில் நுட்பக் கல்லுாரியில் பகுதி நேர விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டே, சிறிய அளவில் லேத் அமைத்து படிப்படியாக முன்னேறி சாந்தி கியர்ஸ் என்ற கியர் நிறுவனத்தை உருவாக்கி உலகின் முதல் தரமான கியர் நிறுவனமாக உச்சம் தொட வைத்தவர். கோவையின் 'கியர்மேன்' என்று தொழிலாளர்களால் கொண்டாடப்பட்டவர்.

 பல கோடி ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருந்த நிலையில், தனக்குக் கிடைத்த செல்வத்தை பகிர்ந்து வாழ நினைத்து சமூகசேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் சுப்ரமணியம். சாந்தி கியர்ஸ் பங்க்கில் பெட்ரோல், டீசல் போட்டால் வண்டிக்கு எந்தப் பிரச்சினையும் வராது. ஒரு துளி அளவு கூட குறையாது என்பது கோவை மக்களின் நம்பிக்கை. 

பத்து ரூபாய் இருந்தால் காலையில் பசியாறிவிடலாம். ஒரு ரூபாய்தான் ஒரு இட்லி. மதியம் பசியாற சுவையான சாப்பாடு வெறும் 18 ரூபாய்தான். ஜி.எஸ்.டி., நடைமுறைக்கு வந்தபோது, எல்லோரும் விலையை ஏற்றியபோது அந்த வரியையும் தன் பங்கில் ஏற்று சாப்பாட்டின் விலையைக் குறைத்தவர்.வாங்கிச் சாப்பிடும் வசதியே இல்லாதவர்கள் பல நுாறு பேருக்கும் தினமும் இரண்டு வேளை அன்னமிட்ட அண்ணல் திரு.சுப்பிரமணியம் அவர்கள்.

அதிகாலையில் சாய்பாபா காலனியில் மகனிடம் 20 ரூபாய் வாங்கிக்கொண்டு அங்கிருந்து பஸ் ஏறி சாந்தி கியர்ஸ் வந்து காலையும், மதியமும் இலவச உணவை வாங்கிச் சாப்பிட்டு விட்டு இரவில் தங்குவதற்கு மட்டும் வீட்டுக்குப் போகும் ஒரு மூதாட்டி அவர். கடந்த ஆண்டில் சுப்பிரமணியம் அவர்கள் இறந்தபோது அவர் கதறிய கதறல் தான் சுப்பிரமணியம் வாழ்ந்த வாழ்க்கைக்கான அடையாளம்.

மருந்துகளுக்கு 20 சதவீதம் சலுகை, மூன்றில் ஒரு பங்கு கட்டணத்தில் ஸ்கேன், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பூங்கா என்று வெளியுலகிற்கு தெரிந்து அவர் செய்த சேவை குறைவு. ஆனால் பறவைகளுக்கான பழத்தோட்டம், கிராமங்களுக்கு தரமான தார்ச்சாலை என்று யாருமறியாது அவர் செய்த சேவைகளின் பட்டியல் வெகுநீளம். அதனால் சுப்ரமணியத்துக்கு விருது கொடுத்ததை கோவை மக்கள் கொண்டாடுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

பத்மஸ்ரீ விருது சுப்பிரமணியம் போன்ற மாமனிதர்களுக்குத் தரப்படுவதன் மூலமாக பத்மஸ்ரீ விருது மேலும் கவுரவம் பெற்றிருக்கிறது. இந்த விருதை அவரது குடும்பத்தினர் வாங்கியிருந்தாலும் அதைப் பற்றி பெருமையாக ஒரு வார்த்தை சொல்லவும் தயாராக இல்லை சாந்தி கியர்ஸ் குடும்பம்...என்றைக்கும் ததும்பாத நிறைகுடம்!!! வாழ்க வளமுடன்!!!

படித்ததில் பிடித்தது. உங்களுக்கும் இந்த பதிவு பிடித்திருந்தால் அனைவருக்கும் பகிருங்கள்.

R.ராமகிருஷ்ணன்
மதுரை.

9 comments:

மனோ சாமிநாதன் said...

மிகச் சிறப்பான பதிவு! சாந்தி க்ரூப்ஸ் பற்றி முன்பேயே கோவை வாழ் சினேகிதிகள் மூலம் கேள்விப்பட்டிருக்கிறேன். முக்கியமான அவர்களின் எளிமையான மருத்துவமனை, சேவைகள் பற்றி!
இப்படிப்பட்ட நல்லவர்களால் தான் நாட்டில் மழை பெய்கிறது!!

KILLERGEE Devakottai said...

//ஒரு துளி அளவு கூட குறையாது என்பது கோவை மக்களின் நம்பிக்கை//

ஆம் எனது அனுபவத்தில் உண்மையே...

மனிதரில் மாணிக்கம்...

வல்லிசிம்ஹன் said...

அன்பு மனோ, மிக நன்றி மா.
நல்லவர்களைப் பற்றிப் படித்து அறிவது எப்பொழுதுமே மகிழ்ச்சி. என்றும் இவர்கள் நல் வாழ்வு பெற வேண்டும்.
மிய நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேவகோட்டைஜி,
என்றும் நலமுடன் இருங்கள் அப்பா.

நல்லவர்கள் மத்தியில் நாம் இருக்கிறோம் என்பதே

நமக்கு நன்மை மா.நீங்களும் இவர்களை அறிந்திருப்பதே
மகிழ்ச்சி.

மாதேவி said...

நற்சேவை செய்யும் உள்ளங்கள் நலமுடன் இருக்கட்டும்.

கோமதி அரசு said...

சாந்தி உணவத்தில் தரமான சாப்பாடு கிடைக்கும்.
அவர் நடத்தும் மருந்துகடையில் குறைவான விலையில் மருந்துகள், மாத்திரைகள் கிடைக்கும்.
மிகவும் நல்ல மனிதர்.

நல்ல பகிர்வு.

நல்ல மனிதருக்கு இந்த பதமஸ்ரீ விருது கிடைத்தது அந்த விருதுக்கு பெருமை.

Thulasidharan V Thillaiakathu said...

எவ்வளவு உயர்ந்த மனிதர்!!!!

நம்மைச் சுற்றி நல்ல உள்ளங்களும் இருக்கிறார்கள்..விருது ஒன்றும் பெரிதல்லா அம்மா. அவரது சேவை மனமும் அதைப் பிரகடனப்படுத்தாதும்தான். வ்லது கை கொடுப்பது இடது கைக்குக் கூடத் தெரியக் கூடாது என்பதுதான்

கீதா

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான பதிவு...

Geetha Sambasivam said...

இவரைப்பற்றி நிறையக் கேள்விப் பட்டிருக்கேன். சென்ற வருடம் இறந்த போதும் பலரும் கண் கலங்கிப் பரிதவித்ததையும் கண்டேன். தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுத்துப் பத்ம விருதுகளைக் கொடுக்கும் இந்த அரசையும் பாராட்ட வேண்டும். அரசுக்கும் கௌரவம். விருது வாங்கியவர்களுக்கும் கௌரவம்.