வல்லிசிம்ஹன்
துணையின்றி வெண்புறா தனியாக வந்ததே
வனவேடன் சூழ்ச்சியால் வலை தன்னில் வீழ்ந்ததே
இனம் யாவும் சேர்ந்ததால் அதை மீட்டுச் சென்றதே
கதையான போதிலும் கருத்துள்ள பாடமே//
வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே
ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே//
பாகப் பிரிவினை படம் வந்த போது
மதுரை பழங்கானத்தில் தாத்தா பாட்டி இருந்தார்கள்.
வீட்டுக்குப் பக்கத்தில் நெல்விளையும் வயற்காடு..
சித்தப்பாவின் அறை ஜன்னலில் உட்கார்ந்தால் உழுவதிலிருந்து
களையெடுப்பது, நாற்று நடுவது,வயலில்
வரப்பில் நடமாடுவது எல்லாவற்றையும்
பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.
அடுத்த விடுமுறைக்கு வந்த போது
அறுவடை முடிந்து டிறந்த வெளியில் ஒரு கீற்றுக் கொட்டகை வந்திருந்தது.
படம் ஆரம்பிப்பதற்கு முன்னால்
பாடல்கள் ஒலிக்க ஆரம்பிக்கும்.
''தன்னானா தானனா பாடல் ஒலித்ததும் என்னைப்
பிடித்துக் கொள்ளும்.
இத்தனைக்கும் ''பாகப் பிரிவினை'' படங்க் திரையிடப் படவில்லை.
ஏதோ ''ராஜா ராணி'' என்ற சிவாஜி,பத்மினி படம்தான் திரையிடப்
பட்டிருந்தது. அந்தப் படத்து வசனம் எல்லாம் எனக்கு மனப்பாடம் ஆகிவிட்டது.
பிறகு திருமங்கலம் வந்த பிறகு
பாகப் பிரிவினை பார்த்தோம் என்று நினைக்கிறேன்.
மிக அழகான அருமையான குடும்பச் சித்திரம்.
ஒற்றுமையை விளக்கும் வண்ணம் எடுக்கப் பட்ட பெரிய படம்.
பாலையா அவர்கள், சுப்பையா, எம் வி ராஜம்மா
எல்லோரும் அவ்வளவு அருமையாக நடித்திருப்பார்கள்.
ஊனமுற்ற கை காலுடன் நடிகர் திலகத்தின்
சிறந்த நடிப்பு.
சிறந்த கருத்துள்ள படங்களைப்
பார்ப்பதால் எங்களுக்குக் கிடைத்த நன்மைகளை
எண்ணிப் பார்க்கிறேன்.
கதைகளைப் படிக்கும் வழக்கம் இருந்தாலும்
படங்கள் ஏற்படுத்திய விளைத்த நல் எண்ணங்கள்
அதிகம். பாகப் பிரிவினை நடக்கும் போது
மனம் வேதனைப்படும்.
இப்பொழுதும் நல்ல நட்புகளோ, சகோதரர்களொ
பிரிவதைப் பார்த்தால், வாழ்வின் நிலையாமையைப்
புரிந்து கொள்ள மறந்து விட்டார்களே என்று தோன்றும்.
நாம் அப்படி இருக்கக் கூடாது,
உறவுகளைப் பேண வேண்டும் என்ற உணர்வே
மேலிடும். நலம் விசாரித்த அனைத்து நட்புகளுக்கும் நன்றி.
சீக்கிரமே பகவான் கிருபையில்
வலி எல்லாம் தீரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
15 comments:
ஒரே பாடல் இரு முறை வந்துவிட்டது.
எடிட் செய்ய முடியவில்லை.
வணக்கம் சகோதரி
நலமாக உள்ளீர்களா? இப்போது வலி குறைந்துள்ளதா?
உங்களது வலிகள் குறைந்து பூரண குணமடைய இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
அந்த கால படங்கள் பொதுவாக ஒற்றுமையின் சிறப்பை காட்டும் படங்களாகத்தான் வரும். அதுவும் நடிகர் திலகத்தின் படங்கள் நல்ல குடும்ப கதையம்சத்தை பெற்றதாக இருக்கும். அதுவும் அவரது "ப" "பா" வரிசை படங்கள் முழுவதும் அன்பை, குடும்ப ஒற்றுமையை வலியுறுத்தும் படங்கள்தான்.
பாகப் பிரிவினை படம் நன்றாக இருக்கும். நானும் அந்தப் படத்தில் சில இடங்களில் கண்ணீர் மல்க பார்த்திருக்கிறேன். நம் குடும்பத்திலேயே அச்சம்பவங்கள் வந்து விலகுவது போல் தோன்றும்படியாக அப்படத்தில் நடிப்பவர்களும் உணர்ச்சியுடன் நடித்திருப்பார்கள். நீங்கள் பகிர்ந்த பாடல்களை பிறகு கேட்டு ரசிக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நலம் பெற வேண்டுகிறேன் அம்மா.
பழைய நினைவுகள் மனதுக்கு இதமானதே...
இனிமையான பாடல்கள். கேட்டு ரசித்தேன் மா.
நேற்று ஏதோ தொலைக்காட்சியில் வைத்துக் கொண்டு இருந்தார்கள் இந்த படம்.
நல்ல படம், பாடல்கள் மிக அருமையாக இருக்கும்.
கதையான போதிலும் கருத்துள்ள பாடமே! என்ற பாட்டு மிக அருமை.
கருத்துள்ள பாடல், கருத்துள்ள படம்.
சிறப்பான பாடல்கள்...
பழைய பாடல்கள் இனிமை கேட்டு ரசித்தேன்.
துளசிதரன்
அம்மா இந்தப் பாட்டுகள் கேட்டதில்லை இப்பத்தான் கேட்கிறேன்
கீதா
அன்பு சகோதரி கமலாமா,
இந்த அன்புக்கு என்ன நன்றி சொல்லப்
போகிறேனோ தெரியவில்லை.
இந்தப் பா, ப வரிசைப் படங்கள் அனைத்துமே ஏதோ
நீதியை சொல்லும்.
கருத்தைத் தெளிவாகப் படமாக்கி இருப்பார்கள்.
சிலருக்கு மிகை நடிப்பாகத் தோன்றலாம்.
இந்தப் படங்களின் பாடல்களும்
நடிப்பும் என்னை அந்த வயதிலேயே மிகக் கவர்ந்தன.
அதற்காக அந்த நடை உடைகளைப்
பின்பற்றவில்லை.
சாராம்சத்தைப் பிடித்துக் கொண்டோம்.
நான் வேலை பார்த்த காலங்களில் ,
பத்து தரம் படிப்பதும் ஒரு தடவை பார்ப்பதுவும் ஒன்று
என்று சொல்வார்கள்.
இந்தப் பதிவு ஏற்கனவே எழுதி வைத்ததுதான்.
கொஞ்சம் பௌடர் போட்டுப் பதிவிட்டேன் அம்மா.
நன்றி.
அன்பு தேவ கோட்டைஜி,
வந்து கருத்திட்டதற்கு மிக நன்றி. நலமுடன் வாழவும்.நானும் நலமுடன் இருக்கிறேன்.
இனிய காலை வணக்கம் அன்பு வெங்கட்.
ரசித்ததற்கு மிக நன்றி மா.
இனிய காலை வணக்கம்
அன்பு தனபாலன். அப்போது இனிய பாடல்களுக்குக்
குறைவே இல்லை. நன்றி ராஜா.
அன்பு துளசிதரன்,
அன்பு கீதா
இந்தப்படம் 1958 இல் வந்தது என்று நினைவு.
நீங்கள் எல்லாம் பிறப்பதற்கு முன்பே
வந்துவிட்டது.
பாடல்கள் கேட்க வாய்ப்பு குறைவே.
அதற்காகவே பதிகிறேன்
மிக நன்றி மா,
அன்பு கோமதி ,இப்பொழுதும் பழைய
படங்கள் திரையிடுகிறார்களா. சுவையாகத்தான் இருக்கும்.
ஆனால் நல்ல காட்சிகள் பல வெட்டப்பட்டு இருக்கும் இவை எல்லாம்
மிக நீளமான படங்கள் அல்லவா.
கொஞ்சம் கொஞ்சம் பார்க்கலாம்.
மிக நன்றி அன்பு கோமதிமா.
உடம்பு சரியில்லையா? என்ன ஆச்சு? வலி என்றால் எங்கே வலி? மருந்து சாப்பிடுகிறீர்கள் அல்லவா? உடல் நலனைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். பாகப்பிரிவினை படம் பார்த்தேன் என நினைக்கிறேன். உண்மையில் அப்போதெல்லாம் படங்களும் நீதியைத் தான்போதிக்கும். இப்போது போல் கதாநாயகன் வலுவில் போய் ஒரு பெண்ணிடம், "நீ என்னைக் காதலித்தே தீர வேண்டும். பார்க்கப் பார்க்கப் பிடிச்சுடும் பார்!" என்றெல்லாம் சொல்லுவது அப்போதெல்லாம் இல்லை. நல்ல படங்கள்னு இப்போல்லாம் வரதாவே தெரியலை.
அன்பு கீதாமா.
இந்த வார முதலில்,
வீட்டுக்குள்ளயே செருப்பு தடுக்கி விழுந்து விட்டேன். தலை
சாப்பாட்டு மேஜையில் இடிக்க
முழங்கால் மடிந்து சரியான வலி.
நானே சமாளித்து எழுந்து விட்டேன்.
இப்போது எவ்வளவோ தேவலை.
முன்பே எழுதி வைத்திருந்த பதிவுகளை வெளியிடுகிறேன்.
பாடல்களும் பிரவசனமும் தான் இப்போதைக்கு மருந்து.
மிக நன்றி மா.
Post a Comment