சுட்டு சாப்பிட்ட பதிவு
இன்னைக்கு வெளில சாப்பிடலாமா?” என்று கேட்டான் மகன்.
( இவனுக்கு இதே வேலையாப் போச்சு.... நல்லதா வீட்டில் எதைச் சமைத்தாலும் சாப்பிட மாட்டேங்கிறாங்க.வெளியில் எதைப் போட்டாலும் தின்கிறார்கள்)
‘வெளியே என்றால் எங்கே?
வெளியே என்பது ஒரு Broad term. கோடம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் மேம்பாலத்துப் படிக்கட்டில் சாப்பிடுவது கூட வெளியேயில் தான் அடக்கம்.
“பார்பக்யூல சாப்பிடலாமா?”
“பார்பர் ஷாப்ல எல்லாம் என்னால சாப்பிட முடியாதுடா. ஐஸ் க்ரீம் சாப்பிட்டு பழக்கம் இருக்கே தவிர ஷேவிங் க்ரீம் எல்லாம் இது வரைக்கும் சாப்பிட்டது இல்லே”
“அப்பா...
இது Barbeque.
ஒரு விதமான ஹோட்டல்”
“டேய்...
எனக்கு பார்வதி பவன் போதும்.
இந்த பார்பெக்யூ எல்லாம் வேணாம்”
“நீங்க வந்தே ஆகணும்..
நான் டேபிள் புக் பண்றேன்”
பிறகு மகன் ஹோட்டல் ஆட்களிடம் ஏதோ இங்கிலீஷில் பேசினான்.
“டேபிள் புக் பண்ணி ஆச்சு.
நமக்கு மத்தியானம் 2:30 மணிக்கு அலாட் ஆகி இருக்கு”
“பார்பெக்யூன்னா என்னடா?”
என்றேன்.
“க்ரில்.
நீ இதுவரைக்கும் Grill சாப்பிட்டது இல்லையா?”
“க்ரில்லை சாப்பிடறதா?
நம்ம வீட்டு வாசல் க்ரில் கேட் கீழே கொஞ்சம் காணாமத்தான் போயிருக்கு.
ஆனா நான் சாப்பிடல்லேடா...”
“Grill சாப்பிட்டுப் பழகிக்கோ..
நல்லா சூடா இருக்கும்”
“ஆமா.
வெல்டிங் வெச்சவுடனே க்ரில் சூடாத்தான் இருக்கும்”
அதன் பிறகு பார்பெக்யூ பற்றி மகன் விளக்க ஆரம்பித்தான்.
ஒரு இரும்புக் குச்சியில் பதார்த்தங்களை வைத்து நெருப்பில் சுட்டுத் தருவார்களாம். அதை அப்படியே லபக்க வேண்டுமாம். இந்த சிந்து சமவெளி நாகரீக உணவுக்குத்தான் அநாவசிய பில்டப் கொடுத்துக் கொண்டு இருந்தான்.
“சாப்பாடு ரொம்ப ஹெவியா இருக்கும். காத்தால ஒண்ணும் சாப்பிட வேணாம். வெறும் வயித்துல போனா நிறைய சாப்பிடலாம்” என்றான் மகன்.
“டேய்..
ஏதாவது இடைக்கால நிவாரணம் கொடுடா...
என்னால முடியாது”
2.15 மணிக்கு பார்பெக்யூ ஹோட்டலுக்குப் போனோம். கதவு அருகே பெரிய க்யூ இருந்தது.
நிறைய பட்டினியாளர்கள் காத்து இருந்தார்கள்.
“டேபிள் புக் பண்ணி இருக்கு என் பேர்ல. நாலு பேர்” என்றான் மகன்.
“உனக்கு ஏதுடா நாலு பேர்?
ஒரு பேர்தானே வச்சேன்”
“அப்பா...
சும்மா இருங்க...
கொஞ்ச நேரத்துல உள்ளே போகணும். உள்ளே டீசண்டா பிஹேவ் பண்ணு. நான் சொல்ற மாதிரி தான் சாப்பிடணும்”
கொஞ்ச நேரத்தில் சொர்க்க வாசல் திறந்தது.
நான்கு பேர் அமரும் ஒரு டேபிளில் அமர்ந்தோம்.
“வெஜிட்டேரியன்” என்று சொன்னதும் எல்லோருக்கும் பச்சை பார்டர் போட்ட ப்ளேட் கொண்டு வந்து வைத்தார்கள். நாங்களோ பச்சையாக சாப்பிடப் போவதில்லை. எதற்கு பச்சை ப்ளேட்?
டேபிள் மத்தியில் சதுரமாக ஒரு Slot இருந்தது.
கொஞ்ச நேரத்தில் அதில் ஹோம குண்டம் மாதிரி ஏதோ கொண்டு வந்து வைத்தார்கள். நல்ல வேளை... அதில் கோலம் எதுவும் போட்டு இருக்கவில்லை.
“அப்பா...
நமக்கு சாப்பிடறதுக்கு ரெண்டு மணி நேரம் டைம் இருக்கு.
4.30 வரைக்கும் சாப்பிடலாம்”
“சாப்பிட இரண்டு மணி நேரமா? அரிசியை ஊறப் போட்டால் இந்த நேரத்தில் மாவே அரைத்து விடலாமே!"
“ரொம்ப ரிலாக்ஸ்டா சாப்பிடு.
நிறைய சாப்பிடலாம்”
“டேய்.
எனக்கு ஒரே ஒரு வயிறு தான் இருக்கு...
அது என்ன ஸ்டேட் பாங்கா?
நிறைய ப்ராஞ்ச் வச்சிக்கறதுக்கு. வயிறு கொள்ற வரைக்கும்தான் சாப்பிட முடியும்”
“பஸ் எல்லா ஸ்டாப்பிங்லயும் நின்னு நின்னு போனா நிறைய பாசஞ்சர்ஸ் ஏறிக்கறது இல்லையா?
வயிறும் அந்த மாதிரிதான்.
நின்னு நின்னு சாப்பிட்டா நிறைய சாப்பிடலாம்”
இந்த Theory of Digestivity கண்டு பிடித்ததற்கு என் மகனுக்கு ஜீரண் மித்ரா என்ற பட்டமே கொடுக்கலாம்.
முதல் ரவுண்டு சர்விங் ஆரம்பமானது.
சுட்ட உருளைக் கிழங்கு வில்லைகளைத் தயிர் மாதிரி ஏதோ ஒரு பேஸ்டில் ஊற வைத்து ப்ளேட்டில் வைத்தார்கள்.
“இந்த வெள்ளை பேஸ்டுக்கு பேர் மயோனீஸ்”
என்றான் மகன்.
நல்ல வேளை அந்த பேஸ்ட்டில் உப்பு இருந்தது.
சூடான உருளைக் கிழங்குடன் ருசி அம்சமாக இருந்தது.
அதன் பிறகு ஒரு கம்பியில் சில பதார்த்தங்களை குத்தி ஹோம குண்டம் மேல் வைத்தார்கள். சென்ட்ரல் ஸ்டேஷன் ரயில்வே லைன் மாதிரி அருகருகே…
அருகருகே எட்டுக்கும் மேற்பட்ட கம்பிகள் இருந்தன. தீக்குள் விரலை விட்டு தொட்டுப் பார்த்தேன்.
தீண்டும் இன்பம் தோன்றியது உண்மைதான்.
ஒரு கம்பியை வெளியில் எடுத்தேன்.
Abacus மாதிரி இருந்தது.
கம்பியில் குத்துப்பட்டு பதம் ஆன பதார்த்தங்களை வெளியே உருவிச் சாப்பிட்டேன்.
இது வரை வருவல் சாப்பிட்டு இருக்கிறேன்.
இது போன்ற உருவல் சாப்பிட்டது இல்லை.
உருவல் உண்மையிலேயே நன்றாக இருந்தது.
“நாம சாப்பிடச் சாப்பிட அவங்க புதுசு புதுசா கம்பியை வச்சிகிட்டே இருப்பாங்க. இப்படியே ஒரு மணி நேரம் சாப்பிடணும். பக்கத்து டேபிளைப் பாரு”
பக்கத்து டேபிளில் ஒரு சேட்டுக் குடும்பம் இருந்தது. எங்களுக்கு முன்பாகவே அவர்கள் வந்து இருந்தார்கள்.
ராஜ் கபூர் 'மேரா நாம் ஜோக்கர்' படம் ரிலீஸ் செய்த போது டேபிளுக்கு வந்து இருப்பார்கள் போலத் தெரிந்தது.
மகன் போய் ராமர் கலரில் ஒரு ஜூஸ் எடுத்து வந்தான். எலுமிச்சை நறு மணத்துடன் ஜிவ் என்று இருந்தது.
ஏதாவது பாத்திரம் கழுவும் லிக்விட் ஆக இருக்குமோ?
“கொஞ்ச நேரத்துல பைனாப்பிள் க்ரில் வரும்”
என்றான் மகன்.
சொன்ன படியே ஆயிரத்தில் ஒருவன் கத்தியில் பைனாபிள் துண்டுகள் சொருகப்பட்டு வந்தன.
இந்திய ரெஸ்டாரண்டுகள் வரலாற்றில் முதன்முறையாக பழத்தை நெருப்பில் சுட்டு சாப்பிடுவதைப் பார்த்தேன்.
அவ்வையார் தீர்க்க தரிசி.
சுட்ட பழம் வேண்டுமா?
சுடாத பழம் வேண்டுமா?
என்று சங்க காலத்திலேயே கேட்டு விட்டார்.
மகன் வெயிட்டரைக் கூப்பிட்டான்.
“வாட்டர் மெலன் க்ரில் வைக்கவே இல்லையே?”
“கொண்டு வர்ரேன் சார்”
வாட்டர் மெலனை சுட்டு சாப்பிடுவதா? என் மகனுக்கு எப்படி இவ்வளவு விஷயம் தெரிகிறது?
அடிக்கடி நண்பர்களுடன் க்ரில் சாப்பிடுவானோ? ஏகப்பட்ட Grill friends வைத்திருப்பான் போல இருக்கிறது.
நான்கு சுற்று க்ரில் முடிந்தது. உருளைக் கிழங்கு தான் லீடிங்கில் இருந்தது. இப்படி பல சுற்றுகள் போயின.
இறுதிச் சுற்று வருவது மாதிரியே தெரியவில்லை. அரை மணி நேரம்தான் ஆகி இருந்தது.
சேட்டுக் குடும்பம் மறுபடியும் மயோனீஸ் பேஸ்டில் இருந்து ஆரம்பித்தது. வயிற்றில் One Thousand T.B. Expandable storage இருக்குமோ? அதிலும் அந்த அரை டிராயர் போட்ட பெண் மிகவும் மோசம்.
கேரம் போர்ட் ஆட்டத்தில் பாக்கெட்டில் வரிசையாக காயின் போடுவது போல வாய்க்குள் ஐட்டங்களை தள்ளிக் கொண்டு இருந்தாள்.
ஒரு பாத்திரத்தை எடுத்து வந்தார் வெயிட்டர். அதிலிருந்து புகை வந்து கொண்டு இருந்தது. Corn flakes பொறித்துக் கொண்டு வந்து இருந்தார்.
ரோடு போட லாரியில் இருந்து ஜல்லி கொட்டுவது போல தட்டில் கார்ன் ஃப்ளேக்கை தள்ளினார்.
சுடச்சுட கார்ன் ஃப்ளேக் பஞ்சு மாதிரி இருந்தது. லாரி இன்னொரு லோட் அடித்தது.
கடிகாரத்தைப் பார்த்தேன்.
முக்கால் மணி நேரம் தான் ஆகி இருந்தது.
“மெதுவா சாப்பிடுன்னு சொன்னேன் இல்லே..
ஏன் இப்படி அரக்கப் பரக்க சாப்பிடறே?” என்றான் மகன்.
“அடேய்...
மூகாம்பிகை கேட்டரிங்கா இருந்தா இந்த நேரத்துல மூணு பந்தி முகூர்த்த சாப்பாடு போட்டிருப்பாங்கடா. டி. வி. ல ரன் அவுட் ஸ்லோ மோஷன்ல காட்டுவானே.. அதைவிட ஸ்லோவா சாப்பிட்டுகிட்டு இருக்கேன்.
இதுக்கு மேல என்னால முடியாது. நான் மெயின் கோர்ஸ் சாப்பாடு எடுக்கப் போறேன்”
மெயின் கோர்ஸில் புலாவ், நூடுல்ஸ், சப்ஜி என்று இன்ன பிற ஐட்டங்கள் இருந்தன. கொஞ்சமாக எடுத்து வந்தேன்.
அதற்குள் மகன் பட்டர் ரொட்டி சொல்லி இருந்தான்.
டேபிள் மீது ஒரு கொடி இருந்தது. க்ரில் ஐட்டம் போதும் என்றால் அந்த கொடியை மடக்கி வைக்க வேண்டுமாம். நாங்கள் கொடியை மடக்கி விட்டோம். அந்த சேட்டுப் பெண் மடக்குவது மாதிரி தெரியவில்லை.
க்ரில் ஐட்டங்கள் முடிந்ததால் ஹோம குண்டத்தை எடுத்து விட்டு குழியை ஒரு பலகை போட்டு மூடினார்கள்.
“இந்தா பாஸ்தா எடுத்துக்கோ?” என்றான் மகன்.
“பாட்ஷா எல்லாம் வேணாம்டா”
“கொஞ்சம் டிரை பண்ணு”
‘உள்ளே போ...
உள்ளே போ’ என்று எவ்வளவு மிரட்டியும் பாட்ஷா வயிற்றுக்குள் போக மறுத்தது.
வலது பக்கம் திரும்பினால் எல்லா கலரிலும் கேக், கீர், சாக்லேட் என ஐட்டங்களை கொலு வைத்து இருந்தார்கள்.
“ஒவ்வொரு கேக்லயும் ரெண்டு எடுத்துக்கோ”
என்று கேக்கோபதேசம் செய்தான் மகன்.
இரண்டு நாட்கள் வேலைக்காரி வீட்டுக்கு வரா விட்டால் குப்பை பக்கெட் எப்படி நிரம்பி வழியும்? அந்த மாதிரி இருந்தது என் வயிறு...
இதில் இரண்டு கேக் எப்படி எடுப்பது? அவன் பேச்சை நான் கேக்கவில்லை.
கடைசியில் பில்லை ஹோம குண்டம் இருந்த இடத்தில் வைத்தார்கள். மகனுக்குத் தெரியாமல் பில்லைப் பார்த்தேன்.
க்ரெடிட் கார்டை ஹோம குண்டம் மேல் வைத்தான் மகன்.
நாலு பேர் சாப்பிட்டதற்கு 4,000 ரூபாய் ஸ்வாகா ஆகி இருந்தது.
டிங்.
********
சித்தானந்தம்
வாட்ஸ்அப்பில் வந்தது.