Blog Archive

Tuesday, September 28, 2021

நீல நிறத்தின் சிறப்பு







மதிய நேரங்களில் பேரனை அழைத்து வருவது  வழக்கம் ஆகிவிட்டது.  நல்ல காற்று முகம் எல்லாம் படர, மதிய நேரமே இப்போது இனிமையாக இருக்கிறது. 

வல்லிசிம்ஹன்



இனியொரு மாதம் சென்றால் சாளரங்களைத் திறந்து வைக்க முடியாது.
இந்த நீல நிறத்தையும் காண முடியாது.

பள்ளிக்கூடத்தில் படம் எடுக்க முடியாது.
அங்கே  நடக்கும் கோலாஹலமான பேச்சுகள். மாணவ மாணவிகளின்
உற்சாகப் பேச்சுகள் கிண்டல்கள்
எல்லாமே காதில் விழும்.

விளையாட்டுக்குச் செல்லும் சத்தம். வாலி பால், சாக்கர்,
ஹாக்கி என்று வித விதமான யூனிஃபார்ம்கள்,
பெரிய மைதானத்தைச் சுற்றி
ஓடும் விளையாட்டு வீரர்கள்.

ஒன்றும் செய்யாமல் மரத்தடிகளில்
பேசிக்களிக்கும் சிலர்.

தனிதனியே உட்கார்ந்து மொபைல் பார்த்த வண்ணம்
நேரம் கழிக்கும் சிலர்.
கை கோர்த்தபடி  வண்டிக்குச் சென்று 
வண்டியை வேகமாக விரட்டும் 17 வயது விடலைகள்.
(அவர்களுக்கு வேகமாகச் செல்ல அனுமதி கிடையாது)

பள்ளி போன்ற இடங்களில் மாணவர்களுக்கே
முதல் உரிமை.
அதையும் மீறி அவர்கள் லைசென்ஸ் பெற்ற 
உற்சாகத்தில் 16 ஆவது பிறந்த நாளுக்குக் கொடுக்கப்
பட்ட வண்டியை வ்ரூம் வ்ரூம் ஒலிக்க
 எடுப்பது நம்மை சாலையோரத்தில் ஒண்ட வைக்கும்.:)

பதின்ம வயதின் சக்தியைச் சரியாக வடிகால் இடாவிட்டால்

வீணாவது தெரிகிறது.
அதுவும் வெள்ளிக்கிழமை என்றால் வார இறுதிக் குதூகலம்
அளவிட முடியாது. இத்தனைக்கும் கழுத்தை நெரிக்கும்
பாடங்கள் வீட்டுப் பாடங்கள்.

விளையாட்டுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு
நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கலாம்.
இல்லையானால் பெரிய யூனிவர்சிட்டிக்குப் போக வேண்டுமானால்
உ-ம். ஹார்வர்ட்,  எம் ஐ டி, கால்டெக் ,கார்னகி மில்லென்
இப்படி வரும் கல்லூரிகளுக்கு வாங்க வேண்டிய
க்ரேடுகள் 4.6 இருக்க வேண்டும்.

பேரன் படிப்புக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கிறான்.
பார்க்கலாம். வளரட்டும் மாணவர்கள். செழிக்கட்டும் அவர்கள் நலன்.


இந்த வண்ணங்கள் பற்றிய பேச்சு எங்கள் ப்ளாக்
புதன் கேள்வி பதிலின் போது

எழுந்தது. என்னையும் கணவரையும் இணைத்தது  அந்த வண்ணம் தான் அவரும் வெளிர் நீல 
முழுக்கை ஷர்ட் , நான் அடர் நீலப் புடவை,
எங்கள் குணங்களைப் பிரதிபலித்தன.

உடனே முடிவானது எங்கள் திருமணம்.

அதுதான் இந்தப் பதிவுக்கான அடித்தளம்.🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩


16 comments:

கோமதி அரசு said...

பாடலும், படங்களும் அருமை.
இந்த பதிவுக்கு அடித்தளம் நீலநிறம் அதன் காரணம் அருமை.

நானும் பள்ளியிலிருந்து பேரனை அழைத்து வர போகும் போது போவேன்.
இப்போது பேரனை அழைத்து வர போகும் போது மகன் பேசுகிறான், காரில் வரும் போது பேரன் பேசுகிறான். அப்போது நானும் பள்ளி குழந்தைகளை பார்க்கிறேன்.
கொரோனா காலம் என்பதால் கார்கள் வரிசையில் காத்து இருக்க வேண்டும் . பள்ளி வாசலில் கார் நிற்கும் போது நம் பிள்ளைகள் ஏறிய பின் உடனே கிளம்ப வேண்டும். வாசலில் கூட்டம் சேராமல் இருக்க இப்படி ஏற்பாடு செய்து இருக்கிறார்கள் .

காரில் போகும் போது எடுத்த படங்கள் அழகு. வானின் நிறம் அருமை.

//வளரட்டும் மாணவர்கள். செழிக்கட்டும் அவர்கள் நலன்.//

வாழ்க வளமுடன்

ஸ்ரீராம். said...

இனிமையான பாடல்.  அழகான படங்கள்.  எனக்கும் நீலநிறம் பிடிக்கும்.  அதுதான் நான் எழுதும் எழுத்துகளை நீல நிறத்திலேயே அமைத்திருப்பேன்!!  பேரன் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவது சிறப்பு.  அங்கும் விடலைகள் அதே துடுக்குடன் வண்டி ஓட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவது வியப்பு.

வல்லிசிம்ஹன் said...

இங்கும் வண்டியில் இருந்து இறங்குவது கிடையாது.

மகள் வண்டி ஓட்டும் போது
படங்கள் எடுத்து வந்தேன்:)

நீங்களும் பள்ளிக்கு இப்போது போகாவிட்டாலும்,
பேரன் உங்களுடன் பேசுவதுதான் மகிழ்ச்சி.

கள்ளமில்லாத அன்பு. நலமுடன் இருக்கட்டும்.

எங்கள் இருவரிடமுமே நீல நிற உடைகள்
நிறைய இருக்கும்.
இயற்கையோடு இணைந்த வண்ணம் நம்
மனத்துடனும் இசைந்து செல்கிறது.
நன்றி மா.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பதிவு அருமை. படங்கள் கண்ணுக்கு குளுமையாக உள்ளது. நீல நிற வானமும், பச்சைபசேல் என மரங்களும் படங்களை அழகுபடுத்துகின்றன. பகிர்ந்த பாடலும் நல்ல பாடல். பன்முறை கேட்டு ரசித்தது.

உங்கள் மனதின் எண்ணங்களை அழகாக எழுதியுள்ளீர்கள். பதின்ம வயது பற்றி தெளிவாக கூறியிருக்கிறீர்கள். குழந்தைகள் வளரும் அந்த வயதுதான் குறும்புகள் எல்லைப் பருவம். அதில் அளவு மீறாமல்,பாதுகாப்புடன் நின்று சமாளித்து விட்டால், அவர்கள் நல்ல வாழ்வை பெறுவார்கள்.

தங்கள் பேரன் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. சீரும் சிறப்புமாக வளர பிரார்த்தித்துக் கொள்கிறேன். நீல நிறத்தைப் பற்றி தாங்கள் சொன்ன விஷயங்களை அறிந்து கொண்டேன். எனக்கும் இந்த நிறம் பிடித்தமானது. ஒரளவு அடர்த்தியான நிறங்களே கண்களை கவருவதுதான். கண்களை உறுத்தாத நீல நிறத்தைப்போல அழகான பதிவை தந்த உங்களுக்கு அன்பான நன்றிகள்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
இனிய காலை வணக்கம்.

ஆமாம். உங்கள் எழுத்து நீல நிறத்தில் தான்
இருக்கும்.

பேசிக் வண்ணங்கள் எல்லாமே அருமை.
இப்போது நடப்பது இந்த ஊரின் வசந்தம். என்று
தோன்றுகிறது.

துடுக்குப் பிள்ளைகளும் இருக்கிறார்கள் .
படிக்கும் பிள்ளைகளும் இருக்கிறார்கள்.
பள்ளி விட்ட பிறகு வீட்டுக்குப்
போகாமல் வண்டியில் சுற்றுபவர்களும் இருக்கிறார்கள்.

உலகமே அவர்கள் கையில் தான் மா.

வல்லிசிம்ஹன் said...

குழந்தைகள் வளரும் அந்த வயதுதான் குறும்புகள் எல்லைப் பருவம். அதில் அளவு மீறாமல்,பாதுகாப்புடன் நின்று சமாளித்து விட்டால், அவர்கள் நல்ல வாழ்வை பெறுவார்கள்.////////////////////


சந்தோஷமாக இருக்கட்டும். எத்தனையோ
குழந்தைகள் வீட்டுக்குத் தெரியாமல்

பல விஷயங்கள் செய்வதும் நடக்கிறது.

பேரனும் மொபைலில் மூழ்குவான். அவ்வப்போது
கண்டிக்கணும்.:)

இந்த வானமும் , மரங்களும் எப்போதுமே ஈர்க்கின்றன.
படம் எடுக்காமல் இருக்க முடியவில்லை.
கூடவே பசும்புல் தரைகளும்.


"உங்கள் மனதின் எண்ணங்களை அழகாக எழுதியுள்ளீர்கள். பதின்ம வயது பற்றி தெளிவாக கூறியிருக்கிறீர்கள்"

தினம் பார்க்கிறேன் இல்லையாமா?
எங்கள் குழந்தைகள் வளர்ந்த விதம் வேறு.
இந்த ஊர்க் குழந்தைகள்
வளரும் விதம் வேறு. வளமுடன்
இருக்கட்டும்.
ஆதரவான பின்னூட்டத்துக்கு மிக நன்றி மா.



KILLERGEE Devakottai said...

காட்சிகளுக்கு பொருத்தமான பாடல் வரிகள் அம்மா.

Geetha Sambasivam said...

எப்போது பதிவுகள் போடுகிறீர்கள் என்பதே தெரிவதில்லை. நான் வரும் நேரம் மத்தியானங்களில் மட்டுமே! அதுவும் அதிகம் உட்கார்ந்துக்க முடிவதில்லை. கொஞ்சம் படுக்கை/கொஞ்சம் எழுந்து உட்காருதல் என்று செய்கிறேன்.

Geetha Sambasivam said...

நீல நிறம் அநேகமாக அனைவருக்குமே பிடித்த நிறமாக இருக்கும்னு நினைக்கிறேன். பாடல் எனக்கும் ரொம்பவும் பிடித்த பாடலும் கூட. நீல நிறம் பிடிப்பதன் காரணம் அருமை. உங்கள் கல்யாண நிகழ்வுகள், நீங்களே கடிதம் எழுதினது/பெண் பார்த்தது எல்லாமும் இப்போது தான் உங்களோட வலைப்பக்கம் படிச்ச நினைவு இன்னமும் இருக்கு. மறக்க முடியாத பதிவு. ஒவ்வொரு முறையும் ரசித்துப் படிப்பேன். மெம்பிஸில் இருக்கையில் பெரிய பேத்தியைக் கூட்டி வரச் செல்வோம். கோமதி சொன்னாப்போல் காரின் முன்பக்கம் அவள் பெயர் எழுதின சின்னக் கொடியை நட்டு வைக்கணும். ஆசிரியை ஒவ்வொரு மாணவியாக/மாணவனாக அழைத்து வந்து காரைப் பார்த்துப் பெற்றோரையும் பார்த்துப் பின் காரில் பேபி ஸீட்டில் உட்காரச் சொல்லுவார்கள். காரை உடனே கிளப்பணும். தெருவில் பொதுப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுப் பள்ளிக்கு வந்த கார்கள், வான்கள், குழந்தைகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் ஆகியவற்றிற்கு மட்டும் அந்தச் சுற்று வட்டாரத் தெருக்களில் செல்ல அனுமதி கிடைக்கும். சுமார் எட்டுக் காவல் துறை அலுவலர்கள் கண்காணித்துக் கொண்டு இருப்பார்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேவகோட்டைஜி,

எல்லோரும் பல வேலைகளுக்கு நடுவில்
என் பதிவையும் வந்து படித்துக்'கருத்திடுவதே
மனதுக்கு மகிழ்ச்சி. உங்களுக்கும் பாடல் பிடித்தது
நன்மை .நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
எப்பொழுது எழுதுகிறேனோ
அப்போது பதிவிடுகிறேன். அது அனேகமாக இந்திய இரவு நேரமாக
இருக்கலாம்.

நீங்கள் சிரமப்பட்டுப் படிக்க
அத்தனை விஷயங்கள் இங்கே இல்லை.

மெதுவாகவே படிக்கலாம் அம்மா.
உடல் நலனைக் கவனியுங்கள்.
ஓய்வு மிகத் தேவை.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
ஆமாம் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் இருக்குமோ என்னவோ.

''பிடிப்பதன் காரணம் அருமை. உங்கள் கல்யாண நிகழ்வுகள், நீங்களே கடிதம் எழுதினது/பெண் பார்த்தது எல்லாமும் இப்போது தான் உங்களோட வலைப்பக்கம் படிச்ச நினைவு இன்னமும் இருக்கு. மறக்க முடியாத பதிவு"

இறைவன் பல செய்திகளை மறக்க விடுவதில்லை.
சென்ற நொடியில் என்ன நினைத்தேன்
என்பதே சில நேரங்களில் மறந்துவிடுகிறது:)

நடந்தவை மறப்பதில்லை.!!

வல்லிசிம்ஹன் said...

@ Geetha ma,

:"கோமதி சொன்னாப்போல் காரின் முன்பக்கம் அவள் பெயர் எழுதின சின்னக் கொடியை நட்டு வைக்கணும். ஆசிரியை ஒவ்வொரு மாணவியாக/மாணவனாக அழைத்து வந்து காரைப் பார்த்துப் பெற்றோரையும் பார்த்துப் பின் காரில் பேபி ஸீட்டில் உட்காரச் சொல்லுவார்கள். காரை உடனே கிளப்பணும்."


ஆமாம் இது ப்ரைமரி, மிடில் ஸ்கூலில்

உண்டு. இப்போது ஹைஸ்கூல் இல்லையா. அதனால் நாம் வரிசையில் செல்வது
தான் ரூல்.
சில பெற்றோர்களே அவசரத்தில்
சட்டத்தை மீறி அவசர வண்டி மாதிரி
செயல் படுகிறார்கள்.

அவர்களே அந்த மாதிரி நடந்தால்,
அவர்கள் பெற்ற பிள்ளைகள்
எப்படி இருப்பார்கள்!!!

இங்கே ஆசிரியர்களும் ,பெற்றோர்களும்
கை காட்டுவதோடு சரி. எல்லாம்
பனைமரத்தில பாதி இருக்கு இந்தப் பசங்க.:)

Thulasidharan V Thillaiakathu said...

எனக்கு மிகவும் பிடித்த நிறம் நீலம். அதுவும் வானின் கலர் லைட் ப்ளூ. ரொம்பப் பிடிக்கும். நீங்கள் எடுத்த படங்கள் அத்தனையும் அழகாக இருக்கின்றன.

சாலைகள் அங்கு எவ்வளவு நேர்த்தியாக இருக்கின்றன.

உங்களையும் கணவரையும் இணைத்ததே நீலம் என்பது ஆச்சரியம்!

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா ஆமாம் அங்கு பள்ளிகளில் குழந்தைகளை அழைத்துவருவது என்பது ரொம்ப கருத்தாக அனுப்புவார்கள்.

பள்ளி வாயிலில் முதலில் பள்ளி பிள்ளைகளுக்கு முக்கியத்துவம். ட்ராஃபிக் எல்லாம் இல்லாமல்...

அம்மா ஃபோட்டோஸ் வாவ்!! எனக்கு ரொம்பப் பிடித்த கலர் லைட் ப்ளூ, லைட் க்ரீன் ஷேட்ஸ், மற்றும் லைட் பிங்க் எல்லா லைட் கலருமே பிடிக்கும்..லைட் ஆரஞ்சு

சில காம்பினேஷன்ஸ் ...

அட ஆச்சரியம்!!! //எழுந்தது. என்னையும் கணவரையும் இணைத்தது அந்த வண்ணம் தான் அவரும் வெளிர் நீல
முழுக்கை ஷர்ட் , நான் அடர் நீலப் புடவை,
எங்கள் குணங்களைப் பிரதிபலித்தன.// ரொம்ப ரசித்தேன்

கீதா

மாதேவி said...

நீலவர்ணம் இணைத்து வைத்தது அற்புதம்.