Thank you Jayanthi Kannan dear Sister,
சுட்டு சாப்பிட்ட பதிவு
இன்னைக்கு வெளில சாப்பிடலாமா?” என்று கேட்டான் மகன்.
( இவனுக்கு இதே வேலையாப் போச்சு.... நல்லதா வீட்டில் எதைச் சமைத்தாலும் சாப்பிட மாட்டேங்கிறாங்க.வெளியில் எதைப் போட்டாலும் தின்கிறார்கள்)
‘வெளியே என்றால் எங்கே?
வெளியே என்பது ஒரு Broad term. கோடம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் மேம்பாலத்துப் படிக்கட்டில் சாப்பிடுவது கூட வெளியேயில் தான் அடக்கம்.
“பார்பக்யூல சாப்பிடலாமா?”
“பார்பர் ஷாப்ல எல்லாம் என்னால சாப்பிட முடியாதுடா. ஐஸ் க்ரீம் சாப்பிட்டு பழக்கம் இருக்கே தவிர ஷேவிங் க்ரீம் எல்லாம் இது வரைக்கும் சாப்பிட்டது இல்லே”
“அப்பா...
இது Barbeque.
ஒரு விதமான ஹோட்டல்”
“டேய்...
எனக்கு பார்வதி பவன் போதும்.
இந்த பார்பெக்யூ எல்லாம் வேணாம்”
“நீங்க வந்தே ஆகணும்..
நான் டேபிள் புக் பண்றேன்”
பிறகு மகன் ஹோட்டல் ஆட்களிடம் ஏதோ இங்கிலீஷில் பேசினான்.
“டேபிள் புக் பண்ணி ஆச்சு.
நமக்கு மத்தியானம் 2:30 மணிக்கு அலாட் ஆகி இருக்கு”
“பார்பெக்யூன்னா என்னடா?”
என்றேன்.
“க்ரில்.
நீ இதுவரைக்கும் Grill சாப்பிட்டது இல்லையா?”
“க்ரில்லை சாப்பிடறதா?
நம்ம வீட்டு வாசல் க்ரில் கேட் கீழே கொஞ்சம் காணாமத்தான் போயிருக்கு.
ஆனா நான் சாப்பிடல்லேடா...”
“Grill சாப்பிட்டுப் பழகிக்கோ..
நல்லா சூடா இருக்கும்”
“ஆமா.
வெல்டிங் வெச்சவுடனே க்ரில் சூடாத்தான் இருக்கும்”
அதன் பிறகு பார்பெக்யூ பற்றி மகன் விளக்க ஆரம்பித்தான்.
ஒரு இரும்புக் குச்சியில் பதார்த்தங்களை வைத்து நெருப்பில் சுட்டுத் தருவார்களாம். அதை அப்படியே லபக்க வேண்டுமாம். இந்த சிந்து சமவெளி நாகரீக உணவுக்குத்தான் அநாவசிய பில்டப் கொடுத்துக் கொண்டு இருந்தான்.
“சாப்பாடு ரொம்ப ஹெவியா இருக்கும். காத்தால ஒண்ணும் சாப்பிட வேணாம். வெறும் வயித்துல போனா நிறைய சாப்பிடலாம்” என்றான் மகன்.
“டேய்..
ஏதாவது இடைக்கால நிவாரணம் கொடுடா...
என்னால முடியாது”
2.15 மணிக்கு பார்பெக்யூ ஹோட்டலுக்குப் போனோம். கதவு அருகே பெரிய க்யூ இருந்தது.
நிறைய பட்டினியாளர்கள் காத்து இருந்தார்கள்.
“டேபிள் புக் பண்ணி இருக்கு என் பேர்ல. நாலு பேர்” என்றான் மகன்.
“உனக்கு ஏதுடா நாலு பேர்?
ஒரு பேர்தானே வச்சேன்”
“அப்பா...
சும்மா இருங்க...
கொஞ்ச நேரத்துல உள்ளே போகணும். உள்ளே டீசண்டா பிஹேவ் பண்ணு. நான் சொல்ற மாதிரி தான் சாப்பிடணும்”
கொஞ்ச நேரத்தில் சொர்க்க வாசல் திறந்தது.
நான்கு பேர் அமரும் ஒரு டேபிளில் அமர்ந்தோம்.
“வெஜிட்டேரியன்” என்று சொன்னதும் எல்லோருக்கும் பச்சை பார்டர் போட்ட ப்ளேட் கொண்டு வந்து வைத்தார்கள். நாங்களோ பச்சையாக சாப்பிடப் போவதில்லை. எதற்கு பச்சை ப்ளேட்?
டேபிள் மத்தியில் சதுரமாக ஒரு Slot இருந்தது.
கொஞ்ச நேரத்தில் அதில் ஹோம குண்டம் மாதிரி ஏதோ கொண்டு வந்து வைத்தார்கள். நல்ல வேளை... அதில் கோலம் எதுவும் போட்டு இருக்கவில்லை.
“அப்பா...
நமக்கு சாப்பிடறதுக்கு ரெண்டு மணி நேரம் டைம் இருக்கு.
4.30 வரைக்கும் சாப்பிடலாம்”
“சாப்பிட இரண்டு மணி நேரமா? அரிசியை ஊறப் போட்டால் இந்த நேரத்தில் மாவே அரைத்து விடலாமே!"
“ரொம்ப ரிலாக்ஸ்டா சாப்பிடு.
நிறைய சாப்பிடலாம்”
“டேய்.
எனக்கு ஒரே ஒரு வயிறு தான் இருக்கு...
அது என்ன ஸ்டேட் பாங்கா?
நிறைய ப்ராஞ்ச் வச்சிக்கறதுக்கு. வயிறு கொள்ற வரைக்கும்தான் சாப்பிட முடியும்”
“பஸ் எல்லா ஸ்டாப்பிங்லயும் நின்னு நின்னு போனா நிறைய பாசஞ்சர்ஸ் ஏறிக்கறது இல்லையா?
வயிறும் அந்த மாதிரிதான்.
நின்னு நின்னு சாப்பிட்டா நிறைய சாப்பிடலாம்”
இந்த Theory of Digestivity கண்டு பிடித்ததற்கு என் மகனுக்கு ஜீரண் மித்ரா என்ற பட்டமே கொடுக்கலாம்.
முதல் ரவுண்டு சர்விங் ஆரம்பமானது.
சுட்ட உருளைக் கிழங்கு வில்லைகளைத் தயிர் மாதிரி ஏதோ ஒரு பேஸ்டில் ஊற வைத்து ப்ளேட்டில் வைத்தார்கள்.
“இந்த வெள்ளை பேஸ்டுக்கு பேர் மயோனீஸ்”
என்றான் மகன்.
நல்ல வேளை அந்த பேஸ்ட்டில் உப்பு இருந்தது.
சூடான உருளைக் கிழங்குடன் ருசி அம்சமாக இருந்தது.
அதன் பிறகு ஒரு கம்பியில் சில பதார்த்தங்களை குத்தி ஹோம குண்டம் மேல் வைத்தார்கள். சென்ட்ரல் ஸ்டேஷன் ரயில்வே லைன் மாதிரி அருகருகே…
அருகருகே எட்டுக்கும் மேற்பட்ட கம்பிகள் இருந்தன. தீக்குள் விரலை விட்டு தொட்டுப் பார்த்தேன்.
தீண்டும் இன்பம் தோன்றியது உண்மைதான்.
ஒரு கம்பியை வெளியில் எடுத்தேன்.
Abacus மாதிரி இருந்தது.
கம்பியில் குத்துப்பட்டு பதம் ஆன பதார்த்தங்களை வெளியே உருவிச் சாப்பிட்டேன்.
இது வரை வருவல் சாப்பிட்டு இருக்கிறேன்.
இது போன்ற உருவல் சாப்பிட்டது இல்லை.
உருவல் உண்மையிலேயே நன்றாக இருந்தது.
“நாம சாப்பிடச் சாப்பிட அவங்க புதுசு புதுசா கம்பியை வச்சிகிட்டே இருப்பாங்க. இப்படியே ஒரு மணி நேரம் சாப்பிடணும். பக்கத்து டேபிளைப் பாரு”
பக்கத்து டேபிளில் ஒரு சேட்டுக் குடும்பம் இருந்தது. எங்களுக்கு முன்பாகவே அவர்கள் வந்து இருந்தார்கள்.
ராஜ் கபூர் 'மேரா நாம் ஜோக்கர்' படம் ரிலீஸ் செய்த போது டேபிளுக்கு வந்து இருப்பார்கள் போலத் தெரிந்தது.
மகன் போய் ராமர் கலரில் ஒரு ஜூஸ் எடுத்து வந்தான். எலுமிச்சை நறு மணத்துடன் ஜிவ் என்று இருந்தது.
ஏதாவது பாத்திரம் கழுவும் லிக்விட் ஆக இருக்குமோ?
“கொஞ்ச நேரத்துல பைனாப்பிள் க்ரில் வரும்”
என்றான் மகன்.
சொன்ன படியே ஆயிரத்தில் ஒருவன் கத்தியில் பைனாபிள் துண்டுகள் சொருகப்பட்டு வந்தன.
இந்திய ரெஸ்டாரண்டுகள் வரலாற்றில் முதன்முறையாக பழத்தை நெருப்பில் சுட்டு சாப்பிடுவதைப் பார்த்தேன்.
அவ்வையார் தீர்க்க தரிசி.
சுட்ட பழம் வேண்டுமா?
சுடாத பழம் வேண்டுமா?
என்று சங்க காலத்திலேயே கேட்டு விட்டார்.
மகன் வெயிட்டரைக் கூப்பிட்டான்.
“வாட்டர் மெலன் க்ரில் வைக்கவே இல்லையே?”
“கொண்டு வர்ரேன் சார்”
வாட்டர் மெலனை சுட்டு சாப்பிடுவதா? என் மகனுக்கு எப்படி இவ்வளவு விஷயம் தெரிகிறது?
அடிக்கடி நண்பர்களுடன் க்ரில் சாப்பிடுவானோ? ஏகப்பட்ட Grill friends வைத்திருப்பான் போல இருக்கிறது.
நான்கு சுற்று க்ரில் முடிந்தது. உருளைக் கிழங்கு தான் லீடிங்கில் இருந்தது. இப்படி பல சுற்றுகள் போயின.
இறுதிச் சுற்று வருவது மாதிரியே தெரியவில்லை. அரை மணி நேரம்தான் ஆகி இருந்தது.
சேட்டுக் குடும்பம் மறுபடியும் மயோனீஸ் பேஸ்டில் இருந்து ஆரம்பித்தது. வயிற்றில் One Thousand T.B. Expandable storage இருக்குமோ? அதிலும் அந்த அரை டிராயர் போட்ட பெண் மிகவும் மோசம்.
கேரம் போர்ட் ஆட்டத்தில் பாக்கெட்டில் வரிசையாக காயின் போடுவது போல வாய்க்குள் ஐட்டங்களை தள்ளிக் கொண்டு இருந்தாள்.
ஒரு பாத்திரத்தை எடுத்து வந்தார் வெயிட்டர். அதிலிருந்து புகை வந்து கொண்டு இருந்தது. Corn flakes பொறித்துக் கொண்டு வந்து இருந்தார்.
ரோடு போட லாரியில் இருந்து ஜல்லி கொட்டுவது போல தட்டில் கார்ன் ஃப்ளேக்கை தள்ளினார்.
சுடச்சுட கார்ன் ஃப்ளேக் பஞ்சு மாதிரி இருந்தது. லாரி இன்னொரு லோட் அடித்தது.
கடிகாரத்தைப் பார்த்தேன்.
முக்கால் மணி நேரம் தான் ஆகி இருந்தது.
“மெதுவா சாப்பிடுன்னு சொன்னேன் இல்லே..
ஏன் இப்படி அரக்கப் பரக்க சாப்பிடறே?” என்றான் மகன்.
“அடேய்...
மூகாம்பிகை கேட்டரிங்கா இருந்தா இந்த நேரத்துல மூணு பந்தி முகூர்த்த சாப்பாடு போட்டிருப்பாங்கடா. டி. வி. ல ரன் அவுட் ஸ்லோ மோஷன்ல காட்டுவானே.. அதைவிட ஸ்லோவா சாப்பிட்டுகிட்டு இருக்கேன்.
இதுக்கு மேல என்னால முடியாது. நான் மெயின் கோர்ஸ் சாப்பாடு எடுக்கப் போறேன்”
மெயின் கோர்ஸில் புலாவ், நூடுல்ஸ், சப்ஜி என்று இன்ன பிற ஐட்டங்கள் இருந்தன. கொஞ்சமாக எடுத்து வந்தேன்.
அதற்குள் மகன் பட்டர் ரொட்டி சொல்லி இருந்தான்.
டேபிள் மீது ஒரு கொடி இருந்தது. க்ரில் ஐட்டம் போதும் என்றால் அந்த கொடியை மடக்கி வைக்க வேண்டுமாம். நாங்கள் கொடியை மடக்கி விட்டோம். அந்த சேட்டுப் பெண் மடக்குவது மாதிரி தெரியவில்லை.
க்ரில் ஐட்டங்கள் முடிந்ததால் ஹோம குண்டத்தை எடுத்து விட்டு குழியை ஒரு பலகை போட்டு மூடினார்கள்.
“இந்தா பாஸ்தா எடுத்துக்கோ?” என்றான் மகன்.
“பாட்ஷா எல்லாம் வேணாம்டா”
“கொஞ்சம் டிரை பண்ணு”
‘உள்ளே போ...
உள்ளே போ’ என்று எவ்வளவு மிரட்டியும் பாட்ஷா வயிற்றுக்குள் போக மறுத்தது.
வலது பக்கம் திரும்பினால் எல்லா கலரிலும் கேக், கீர், சாக்லேட் என ஐட்டங்களை கொலு வைத்து இருந்தார்கள்.
“ஒவ்வொரு கேக்லயும் ரெண்டு எடுத்துக்கோ”
என்று கேக்கோபதேசம் செய்தான் மகன்.
இரண்டு நாட்கள் வேலைக்காரி வீட்டுக்கு வரா விட்டால் குப்பை பக்கெட் எப்படி நிரம்பி வழியும்? அந்த மாதிரி இருந்தது என் வயிறு...
இதில் இரண்டு கேக் எப்படி எடுப்பது? அவன் பேச்சை நான் கேக்கவில்லை.
கடைசியில் பில்லை ஹோம குண்டம் இருந்த இடத்தில் வைத்தார்கள். மகனுக்குத் தெரியாமல் பில்லைப் பார்த்தேன்.
க்ரெடிட் கார்டை ஹோம குண்டம் மேல் வைத்தான் மகன்.
நாலு பேர் சாப்பிட்டதற்கு 4,000 ரூபாய் ஸ்வாகா ஆகி இருந்தது.
டிங்.
********
சித்தானந்தம்
வாட்ஸ்அப்பில் வந்தது.
20 comments:
சிரிக்க சிரிக்க, ரசிக்க ரசிக்க எழுதி இருக்கிறார். என் மகன்களும் என்னை இப்போது இந்த இடத்துக்குக் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் செல்லவில்லை. கேஜிஜி கூட இப்படி ஒரு க்ரில் பதிவு முன்னர் எங்கள் தளத்தில் எழுதி இருந்தார்.பல திங்கள் ரசிக்க வித்தான. வருவல், உருவல், சுட்ட பழம், சுடாத பழம்...
இன்னும் சிரித்துக் கொண்டே இருக்கிறேன் ஶ்ரீராம்.:)
நன்றாக எழுதி இருக்கிறார் .என் தங்கை அனுப்பி வைக்கும் வாட்ஸாப்
பதிவுகளுக்காக இன்னோரு தளம் ஆரம்பிக்க வேண்டியதுதான்!
நல்ல தமாஷாக எழுதும் இவர் யாரோ!
ரொம்ப ரசனையா எழுதியிருக்கார் எழுதினவர்.
நானும் இந்த மாதிரி ஒரு அவுட்லெட்டில் (எங்கள் கம்பெனியோடதுதான்) சாப்பிட்டிருக்கேன் (இந்தியாவின் ப்ராண்ட் அது. இங்க, வைனும் பரிமாறுவாங்களாம். அங்க அது கிடையாது). ஆப்பிள் போன்றவற்றைச் சுட்டு கம்பியில் கோர்த்துக் கொடுப்பார்கள் (அப்புறம் என்னை மாதிரி அப்பாவிகளுக்கு ஏதோ ஒரு ஃப்ரைட் ரைஸும் உண்டு)
கத்தியில் பைனாபிள் துண்டுகள் சொருகப்பட்டு வந்தன. //
அது மிக சுவையாக இருக்கும் மகன் வீட்டிலே Barbeque. இந்த கரி அடுப்பு இருக்கிறது. மருமகளும், மகனும் சேர்ந்து செய்து தருவார்கள். மக்காசோளம், குடை மிளகாய், கலர் கலராக, இந்த முறை காளான் வைத்து செய்தான் நான் அது மட்டும் எடுத்து கொள்ளவில்லை.
வெளியில் அழைத்து போன இடத்தில் இரவு நேரம் சுட்டு சாப்பிட்டோம். குளிருக்கு நன்றாக இருந்தது.
மக்கா சோளம் வெண்ணை தடவி சுட்ட படம் முகநூலில் போட்டு இருந்தேன்.
படங்கள் எடுத்து இருக்கிறேன்.சுற்றிப்பார்க்க போகும் இடங்களில் எல்லாம் பார்பக்யூ அமைத்து இருப்பார்கள். ஏரியில் பிடித்த மீனை சுட்டு சாப்பிடுவார்களாம். அப்புறம் அவர்கள் சாப்பிடும் அசைவ உணவுகளை சுட்டு சாப்பிடுவார்களாம்.
நல்ல வேடிக்கையாக சொல்ல வந்த விஷயத்தை அழகாய் சொல்லி இருக்கிறார்.
அன்பின் முரளிமா,
அனுபவித்து ரசித்து நல்ல நகைச்க்சுவையோடு எழுதி இருக்கிறார்.
சித்தானந்தம்னு பெயர் போட்டிருக்கிறது.
ஒவ்வொரு வரியிலும் சிரிப்புதான்.
பார்பக்யூ இந்த ஊரில் எல்லா வீட்டிலும் இருக்கிறது.
வீட்டின் பின்புறம் , 'டெக்' கில், கரியடுப்பும் க்ரில்லும் வைத்து சுற்றி
இருக்கைகள் , பெரிய விருந்தே நடக்கும். கோடையென்றால் கொண்டாட்டம் தான்.:)
வெஜிட்டேரியன் மட்டும் என்றில்லை. வேறென்ன எல்லாமோ
இருக்கும் .
""(அப்புறம் என்னை மாதிரி அப்பாவிகளுக்கு ஏதோ ஒரு ஃப்ரைட் ரைஸும் உண்டு)"""
கிடைத்த வரைக்கும் லாபம்.
நீங்களும் இதை அனுபவித்தது மகிழ்ச்சி மா.
நம் கரியடுப்பு வாசனை மாதிரி நன்றாகத் தான்
இருக்கும்.
""அது மிக சுவையாக இருக்கும் மகன் வீட்டிலே Barbeque. இந்த கரி அடுப்பு இருக்கிறது. மருமகளும், மகனும் சேர்ந்து செய்து தருவார்கள். மக்காசோளம், குடை மிளகாய், கலர் கலராக,"""
அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்,.
பாலைவனக் குளிர் கொஞ்சம் சில்லென்று தான்
இருக்கும்.
அதற்கு இந்த ஏற்பாடு நன்றாகத்தான் இருக்கும்.
அதுவும் அந்த அடுப்பில் கரித்துகள் பறப்பது கூட அழகுதான்.
மின் அடுப்பு என்றால் வேறு விதம்.
கையில் க்ளோவ் மாட்டிக் கொண்டு
செய்வது ஜாக்கிரதையாகச் செய்ய வேண்டும்.
வரப் போவதும் குளிர்காலம் தானே.
மீண்டும் இந்த அனுபவம் உங்களுக்குக் கிட்டும் என்று நம்புகிறேன் மா.
வணக்கம் சகோதரி
பதிவு அருமை. எழுதியவர் நன்றாக ரசித்து எழுதி, நம்மையும் ரசித்து சிரிக்க வைத்திருக்கிறார். ஒவ்வொரு வரிகளையும் ரசித்தேன். இங்கு என் குழந்தைகளும்,ஆபீஸ் நண்பர்களுடன்,அலுவலகம் மூலமாக இவ்வகையான உணவகங்களுக்கு சென்று வந்து அதைப்பற்றி விவரிப்பார்கள். கேட்கவே வியப்பாக இருக்கும். மாறி வரும் காலங்களை நாமும் அனுசரித்துதான போக வேண்டியுள்ளது. பதிவை படித்து குறிப்பாக நடுநடுவில் அதில் வரும் அப்பாவின் கலாட்டாக்களை ரசித்து நானும் வாய் விட்டு சிரித்தேன். நல்லதொரு நகைச்சுவை பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரி
நம் பழைய கால வாழ்க்கையில் அடிக்கடி அப்பளத்தை தவிர வேறெதுவும் கரியடுப்பில் சுட்டதில்லை.:) (மேலும் கத்திரிக்காய், வாழைக்காய் வகையறாக்களை துவையலுக்காக சுட்டிருக்கிறோம்.)எங்கே, இவர்கள் அதை,இதை எனச் சுட்டு தள்ளுவதில் அப்பளமும், இது போல் சில காய்களும் நினைவுக்கே வராமல் ஒதுங்கி விட்டது. ஹா.ஹா. அதுதான் நடுவில் இதை எழுத நினைத்து விட்டுப்போய் விட்டது.:) நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ரசித்தேன்...
ஹையோ அம்மா சிரித்து முடியவில்லை. ரொம்பவும் நன்றாக எழுதியிருக்கிறார். சான்ஸே இல்லை. யாரிவர் என்று கண்டுபிடிக்க வேண்டும். ரொம்ப ரொம்ப அனுபவித்து நகைச்சுவையா எழுதியிருக்கிறார். ராமர் கலர் திரவ்ம், ஹோமகுண்டம், ரயில்வெ லைன்....உருவல் எல்லாம் ரசித்தேன்!
நானும் சாப்பிட்டுருக்கிறேன். உறவினர் தயவில். நன்றாக இருக்கும் எனக்குப் பிடித்தது....நம் வீட்டில் விருப்பம் உண்டு என்பதால் நான் வீட்டிலேயே எலக்ட்ரிக் க்ரில் அதான் பேக்கிங்க் ஓவனோடு க்ரில் இருக்கே அதில் செய்வதுண்டு.
பைனாப்பிள் சுட்டது நன்றாக இருக்கும். கார்ன் எல்லாமே. குடைமிளகாய், காலிஃப்ளவர், ஏன் கத்தரிக்காய் கூட, பனீர் எல்லாம் செமையா இருக்கும் அதற்கு விதம் விதமான பேஸ்டில் மேரினேட் செய்து கொஞ்சம் நேரம் ஊற வைத்து...
முன்பு செய்தப்ப படம் எடுக்காததால் திங்க பதிவுக்கும் அனுப்பவில்லை. இனி செய்தால் அனுப்ப நினைத்துள்ளேன்.
பதிவை ரொம்ப ரசித்தேன் அம்மா.
கீதா
பதிவை மிக மிக நகைச்சுவையாக எழுதியிருக்கிறார். சிரித்து வாசித்தேன். க்ரில் என்பது இப்படித்தான் இருக்குமோ? அனுபவம் இல்லை. சாப்பிட்டதுமில்லை. கற்காலம் திரும்ப புது விதத்தில் வருகிறது போன்று தோன்றியது. ஓல்ட் வைன் இன் நியூ பாட்டில் என்பது போல.
அதிகம் வெளியில் சாப்பிடும் பழக்கம் இல்லாததால் அதுவும் சாப்பிட நேர்ந்தாலும் எங்கள் சாப்பாடுதான் சாப்பிடுவதால் தெரியவில்லை.
வீட்டில் அசைவம் சமைப்பதுண்டு வறுத்துச் செய்வதுண்டு. வீட்டில் விறகு அடுப்பும் உண்டு என்பதால் ஒரு சில எப்போதேனும் தணலில் சுட்டுச் செய்வதுண்டு. அது போன்று இருக்கும் போல. ஆனால் கரி உடம்புக்கு நல்லதல்ல என்பதால் செய்வதும் அபூர்வம்.
துளசிதரன்
பாட்டி கரியடுப்பில் ஜல்லித் தகடு க்ரில் ப்ளேட் போல இருக்குமே அதில் அடுப்பில் அப்பளம் சுடுவார், சப்பாத்தி சுடுவார், பனங்க்கிழங்கு (எங்களுக்கு) சுடுவார், கப்பைக் கிழங்கும் கொஞ்சம் வேக வைத்துச் சுடுவார். உப்பும் எலுமிச்சம்பழமும் கலந்து தடவி சுட்டுத் தருவார். நன்றாக இருக்கும்.
அதே போன்று இப்ப அந்த ஜல்லி போல இன்னும் கொஞ்சம் பெரிசாக எலக்ட்ரிக் க்ரில்லில் இருக்கிறதே. கடைகளில் பார்த்ததுண்டு. கரி போட்டுச் செய்வது போலும் மின்சாரத்தில் செய்வது போலவும் 2 இன் 1 ஆக...1500க்குள் ஒரு குடும்பத்திற்குச் செய்யும் அளவில் கிடைக்கிறது.
கீதா
அன்பின் கமலாமா,
ஹாஹ்ஹா.
ரொம்பப் பேர் வாயாலியே வடை சுடுவது நினைவுக்கு வருகிறது:)
கரியடுப்பு என்று ஒன்று இப்போது இருக்கிறதா என்ன?
இருந்தால் என்ன சுகம் அந்த வாசனை.
கார்பன் கெடுதி என்று சொல்லி எத்தனை
விஷயங்கள் ஒதுக்கப் பட்டுவிட்டன.:(
விறகடுப்பாவது மிஞ்சி இருக்கும் என்று நம்புகிறேன்.
அதாவது கோட்டை அடுப்பு சமாசாரங்களில்!!
கடந்த பத்து வருடங்களில் அதுவும் மாறி இருக்க வேண்டும்.
இங்கே நம் வீட்டில் ஹோமம் செய்வதைக் கூட
யோசிட்துத் தான் செய்ய வேண்டும். சென்னை
அபார்ட்மெண்ட்டுகளில் அதுவும் கூடாது.
வியப்பாக இருக்கும். மாறி வரும் காலங்களை நாமும் அனுசரித்துதான போக வேண்டியுள்ளது. பதிவை படித்து குறிப்பாக நடுநடுவில் அதில் வரும் அப்பாவின் கலாட்டாக்களை ரசித்து நானும் வாய் விட்டு சிரித்தேன்"
அந்த நகைச்சுவை தான் எடுப்பாக இருக்கிறது.
அப்பா மகன் கான்வர்சேஷன்:)
க்ரில் தேந்தது. நான் சாப்பிடவில்லையே. நன்றாக மகனைக் கலாய்க்கிறார்
அப்பா:)
இதை எழுதியவர் யார் என்று தெரியவில்லை.
அனுப்பிய தங்கைக்குத் தான் நன்றி சொல்லணும்/
நீங்களும் வரிக்கு வரி ரசித்தது மிகப் பிடித்ததுமா.Kamala Hariharan.
அன்பின் கீதாமா,
:"ஹையோ அம்மா சிரித்து முடியவில்லை. ரொம்பவும் நன்றாக எழுதியிருக்கிறார். சான்ஸே இல்லை. யாரிவர் என்று கண்டுபிடிக்க வேண்டும்""
அதை முதலில் செய்யுங்கள் கீதாமா. என்ன ஒரு ரசனை. என்ன ஒரு
நகைச்சுவை. !!
ஒரு வேளை பா. ராகவனாக இருக்குமோ.
இல்லை அகத்தியன்?
வீட்டு 'அவன்" இல் செய்வது இன்னும் ருசியாக இருக்கும்.
க்ரில்ல்ட் காய்கறிகள் உடம்புக்கு அவ்வளவு நல்லது என்கிறார்களே!!
நீங்க செய்ததைத் தயவு செய்து தேடி எடுத்துப்
பதிவிடவும். இங்கே மகளும் செய்வாள்.
என்ன ஒன்று அலுவலக வேலைகள் இப்போது
இன்னும் அதிகமாகிவிட்டன.
அதனால் நமக்குத் தெரிந்ததை நான் செய்கிறேன்.
அன்பின் தனபாலன். நலமுடன் இருங்கள் மிக நன்றி மா.
அன்பின் துளசிதரன்,
நலமுடன் இருங்கள்.
விறகடுப்பில் சுட்டுச் செய்யும் உணவு நல்ல ருசியாக இருக்கும்.
நீங்கள் அதுபோன்று உண்டதே மகிழ்ச்சி.
இந்த க்ரில் மின்சாரத்தில் இயங்குவதால்
புகை கரி கிடையாது.
சில வீடுகளில் கரி புழக்கத்தில் இருக்கிறது.
ஆமாம் ஓல்ட் வைன் இன் நியூ பாட்டில் தான்.
இங்கே மதுவும் இந்த மாதிரி விருந்துகளில்
சேரும்.
எதையும் உற்சாகத்தோடு செய்வதில் இவரளுக்கு இணை இவர்களே தான்.:)
நீங்களும் இந்தப் பதிவை சிரித்து ரசித்தது மகிழ்ச்சிமா.
அன்பின் கீதாமா,
அருமையான நினைவுகள் உங்களுக்கு.
பாட்டியின் அருமைக்கு வந்தனம்.
"அதே போன்று இப்ப அந்த ஜல்லி போல இன்னும் கொஞ்சம் பெரிசாக எலக்ட்ரிக் க்ரில்லில் இருக்கிறதே. கடைகளில் பார்த்ததுண்டு. கரி போட்டுச் செய்வது போலும் மின்சாரத்தில் செய்வது போலவும் 2 இன் 1 ஆக...1500க்குள் ஒரு குடும்பத்திற்குச் செய்யும் அளவில் கிடைக்கிறது."
1500 ரூபாய்க்குக் கிடைக்கிறதா!! தேவலையேமா.
நல்ல சிற்றுண்டிகள் செய்யலாம்.
வெளியே எடுத்து, நம்ம மெரினாவில் சாப்பிடுவது போல
உப்பும், எலுமிச்சையும், வெண்ணெயும்
தடவி சாப்பிடலாம்.
நன்றி மா.
நல்ல ரசனையாக எழுதியுள்ளார். சிரித்து முடியவில்லை.:)))))
பார்பக்யு பிள்ளைகள் விடுமுறையின் போது எங்கள் வீட்டிலும் செய்வோம்.
அன்பின் மாதேவி,
மிக அருமையான எழுத்து . அனுபவித்து எழுதி
இருக்கிறார்.
கைதேர்ந்த எழுத்தாளராகத் தான் இருக்க வேண்டும்.!!!
நன்றிமா
Post a Comment