Thursday, September 23, 2021

தர்மம்...பழமொழிவல்லிசிம்ஹன்

#படித்ததில்பிடித்தது.
ஆள்காட்டி விரலுக்கும் அன்னதானப் பலன்:
தானத்துள் சிறந்த தானம் அன்னதானம் என்பர். எதை எவரும் எளிதில் செய்யலாம். தம்மிடம், பசித்து வருவோருக்கு வேறு இடத்தை சுட்டிக்காட்டி, அங்கே செல்லும்படி சொன்னாலும் சிறிதளவு அன்னதானப் பயன் உண்டாம். இதனையொட்டி எழுந்தது, மேலே உள்ள பழமொழி. இது தொடர்பான பாரதக் கதை:
கர்ணன் அர்ச்சுனனால் கொல்லப்பட்ட பிறகு தன் புண்ணிய பலத்தின் காரணமாக கைலாசம் சென்றான். அங்கே அவனுக்குப் பசி எடுத்தது. அந்தப் புனித லோகத்தில் எவருக்கும் பசி, தாகம் இல்லை. ஆனால், தனக்கு மட்டும் பசி ஏற்படக் காரணம் கர்ணனுக்குப் புரியவில்லை.
அவன் நந்திதேவரிடம் சென்று விசாரித்தான்.
நந்திதேவர், ‘‘கர்ணா! நீ பூவுலகில் எல்லா வகையான தானங்களும் செய்தாய். ஆனால், அன்னதானம் மட்டும் செய்யவில்லை. அதனால் உனக்கு இங்கே வந்ததும் பசிக்கிறது. நீ உன் ஆள்காட்டி விரலை வாயிலே வைத்துச் சுவை. அப்போது பசி போய்விடும்’’ என்றார்.
கர்ணனும் அப்படியே செய்தான்; பசி போய்விட்டது. உடனே கர்ணன் நந்தியடிகளைப் பார்த்து, ‘‘இந்த ஆள்காட்டி விரலில் என்ன மர்மம் இருக்கிறது?’’ என்றான். அதையடுத்து அவர் சொன்ன வரலாறு இது:
‘கிருஷ்ண பகவான் பாண்டவர்களுக்காகத் தூதுவராக அஸ்தினாபுரம் சென்றபோது அவரை வரவேற்க துரியோதனன் போகவில்லை. கிருஷ்ணருக்கு சிறப்பான தங்குமிடம் (மாளிகை) ஒன்றை அமைத்தான் துரியோதனன். பிறகு, கிருஷ்ணருக்கு விருப்பமுள்ள கர்ணனை வரவேற்குமாறு அனுப்பினான்.
கர்ணன், கிருஷ்ணருடன் தெருக்கள் வழியே வரும்போது மாயவர் ஒவ்வொருவரைப் பற்றியும் விசாரித்துக் கொண்டே வந்தார். இடையில் கர்ணன் தன் ஆள்காட்டி விரலினால் விதுரரின் வீட்டைக் காட்டி, ‘‘இது விதுரரின் வீடு; உங்கள் மீது மிகுந்த பக்தியுடையவர்; அவர். உங்களுக்கு விருந்திட ஆர்வம் மிகுந்தவர். ஆனால் அரசர் உங்களுக்கு வேறு தங்குமிடம் அமைத்திருக்கிறார்’’ என்றான்.
அதனை, உடன் இருந்து கேட்டு வந்த விதுரர், ‘‘கண்ணா! இது உங்கள் வீடு; என் வீடு அன்று!’’ என்றார்.
இதனையே ஆதாரமாகக் கொண்டு கிருஷ்ணர், ‘‘அஸ்தினாபுரத்தில் எனக்கும் ஒரு வீடு இருக்கிறதா? அப்படியானால், நான் இங்கேயே தங்குகிறேன்’’ என்று கூறி, உள்ளே புகுந்து விதுரருக்கு விருந்தினர் ஆனார்.
மேற்கூறிய கதையை நந்திதேவர் சொல்லக் கேட்ட கர்ணன், அன்னதானத்தின் பலனை அறிந்து கொண்டு, தனக்கு மறு பிறவியை வேண்டி, பூவுலகுக்கு வந்து, அன்னதானம் செய்து, கைலாசம் மீண்டான்.
இது வியாச பாரதத்திலோ, வில்லிபாரதத்திலோ இல்லாத நிகழ்ச்சி. பிறமொழிகளில் உள்ள பாரதத்தில் இருக்கக்கூடும். இதை புராணிகர்கள் உபன்யாசங்களில் கூறி, பரப்பினர்.

24 comments:

ஸ்ரீராம். said...

இந்தக்கதை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.  ஆனால் விதுரர் வீட்டைக் காட்டினானா, வேறு யாருக்கோ அன்னதானம் நடைபெறும் இடத்தைக் காட்டினானா என்று எப்படிப் படித்தேன் என்று நினைவில்லை.

பாடல் அருமையான பாடல்.  எனக்கு மிகவும் பிடித்த பாடல்.அதிலும் 'மலைபோல் வரும் சோதனை யாவும்' வரிகள் நான் அடிக்கடி பாடும் வரிகள்.

வல்லிசிம்ஹன் said...

🌺. அன்பின் ஶ்ரீராம்,
ஏதோ பழமொழி தேடும் போது இந்தக் கதை கிடைத்தது. வியாசர் விருந்தில் படிக்காதது.

விதுர்ர் கண்ணனே உபசாரம் செய்த கதை தனி.

இதில் கர்ணன் சேரந்ததே புதுமை. எம்ஜி ஆரின் தத்துவப் பாடல்கள் எல்லாமே. நன்றாக இருக்கும்.
கண்ணதாசன் என்றால் கேட்கவே வேண்டாம்:)

மாதேவி said...

இது நான் படிக்காதது.உங்கள் பகிர்வில் அறிந்ததில் மகிழ்கிறேன்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

தர்மம் பதிவு அருமை. கதை நன்றாக உள்ளது. இது போல் மஹாபாரதத்தில் இல்லாத கதைகள் என சிலதை நானும் கேள்விபட்டுள்ளேன். இந்தக் கதையும் சிறப்பாக உள்ளது. இறைவனுக்கு தெரியாததா? எங்கு தங்க வேண்டுமென அவர் எடுக்கும் முடிவுதானே இறுதியில் வெல்லும்.

இந்த தலைப்பை பார்த்ததும் இந்த பாடல்தான் எனக்குள்ளும் மெட்டுடன் நினைவுக்கு வந்தது. வந்து பார்த்தால் தாங்களும் அதையே பகிர்ந்திருக்கிறீர்கள். அழகான பாடல். வரிகள் தான் எவ்வளவு கருத்துடன் இருக்கிறது? எழுதியவர் அந்த கண்ணனுக்கு தாசன் அல்லவா? பகிர்ந்த படமும் இயற்கை அழகுடன் அருமையாக உள்ளது. அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

கோமதி அரசு said...

தர்மம் தலை காக்கும் பாடல் பிடித்த பாடல்.
அன்னதானம் சிறந்த தானம் தான். குட்டி பத்மினி மெஸ் நடத்தினாராம், அன்னத்தை விற்க கூடாது, தானமாக கொடுக்க வேண்டும் என்று கருடபுராணமோ வேறு எதோ புராணத்திலோ படித்தேன். உடனே ஓட்டலை மூடி விட்டேன் என்றார்.

கர்ணன் கதை சொற்பொழிவுகளில் கேட்டு இருக்கிறேன்.
உங்கள் பகிர்வுக்கு நன்றி.


வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி,

யாருக்காவது பயன் பட்டால் நன்மையே.
நீங்களும் ரசித்தது மகிழ்ச்சி.

வல்லிசிம்ஹன் said...அன்பின் கமலாமா,
இந்தப் பதினைந்து நாட்கள் காதில் படும் நல்ல செய்திகளைப்
பதிய விரும்புகிறேன்.

அதற்காகப் பழமொழிகள் தேடும்போது
கிடைத்த கதைகள் சில.

தர்மம் தலை காக்கும் பாடல் வந்த
போது என்னுடைய தோழிகளும்
நானும் விரும்பிச் சென்று பார்த்த படம். படத்தை
விடப் பாடல்கள் சிறப்பாகப்பிடித்தது.

எம் ஜி ஆர் ,அவரது படங்களில்
கடைப்பிடிக்கும் கொள்கைகளும், பழக்கங்களும்
வெகுவாகப் பாராட்டப் பட வேண்டியவை.

இன்னும் நல்ல செய்திகளைப் பார்ப்போம்.
மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,

வாழ்க வளமுடன்.
நல்ல செய்தி கண்ணில் பட்டதும் பதிய நினைத்தேன் மா.

குட்டி பத்மினி மெஸ் நடத்தினாரா!!
அதனால் என்ன நாம் உழைத்து அதை விலைக்குக்
கொடுப்பதைத்தானே ஹோட்டல்கள்
செய்கின்றன:)

அன்னதானமும் செய்யலாம். உணவு விடுதியும்
நடத்தலாம்.
நம் கோயில்களில் அதற்காக வழி வகுத்திருக்கிறார்கள்
இல்லையா மா.

முடிந்த வரை தர்ம வழியில்தான் செல்ல வேண்டும். இறைவன் நம்மைக்
காக்கட்டும்.

KILLERGEE Devakottai said...

அன்னதானத்தின் விளக்கம் அருமை அம்மா.

Geetha Sambasivam said...

கதை அடிக்கடி உபந்நியாசங்களில் சொல்லக் கேட்டிருக்கேன். முடிந்தவரை தர்ம வழியில் செல்வோம். ஆனால் தர்மம், அறம் என்பதன் பொருள் ஆளுக்கு ஆள் மாறுபடுமே! உங்கள் அறம்/தர்மம் எனக்குச் சரியா வராது. அதே போல் ஒவ்வொருவருக்கும்!

ஆனால் நாம் பொதுவாகக் கொடுத்தலையே தர்மம் என்கிறோம். இல்லாதவர்களுக்குக் கொடுப்பதை! அப்படியே இங்கேயும் எடுத்துக்கலாம் இல்லையா?

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா இந்தக் கதை இப்போதுதான் அறிகிறேன்.

என்னவோ கர்ணனைப் பற்றியவை மனதிற்கு வருத்தமாக இருக்கும் பாவம் கர்ணன் என்றே தோன்றும்.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

இந்தப் பாடல் நிறையக் கேட்டிருக்கிறேன் அம்மா பிடித்த பாடல்

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

வல்லிம்மா நலமா?

உங்களின் முந்தைய பதிவின் பாடல்களும் கேட்டேன் அதில் ஹிந்திப்பாடல்கள் கேட்டதில்லை. மீட்டாத வீணை மற்றும் அக்பர் படப் பாடலும் கேட்டிருக்கிறேன்.

இன்றைய பதிவின் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். வரிகள் எல்லாமே மிக அருமையாக இருக்கும்.

கர்ணன் கதை புதிது.

மிக்க நன்றி வல்லிம்மா

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா தர்மம் தலைகாக்கும் பாடல் வாழ நினைத்தால் வாழலாம் பாடலையும் நினைவுபடுத்தும் இரண்டையும் டக்கென்று மெட்லி செய்யலாம்

கீதா

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் பிடித்த பாடல்...

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேவ கோட்டைஜி மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
தர்மம் ,தானம் என்ற பொருளில் தான் இந்தக் கதைகளைப்
படித்தேன்.
நம் மனோ, வாக், வாழ்க்கை தர்மம்
ஒவ்வொருவருக்கும் வேறு படுமே.

வியாசர் காண்பித்த கர்ணன் வேறு. நாம் இப்போது காணும்
கொடை வள்ளலாலச் சித்தரிக்கப்
படும் கர்ணன் வேறாகத் தான் தெரிகிறான்.
அவன் கடை பிடித்த மனித தர்மம்
முரண் படுகிறது.

படிப்பதற்கு ரசமாக இருந்ததால்
பகிர்ந்தேன் மா.

Geetha Sambasivam said...

படிக்க நன்றாகவே இருக்கு ரேவதி. இந்த இடத்தில் எப்படிப் பொருள் கொள்ள வேண்டும் என்பதையே கேட்டுத் தெரிந்து கொண்டேன். நன்றாக இருக்கிறது பல முறை உபந்நியாசங்களில் கேட்டிருந்தாலும் மீண்டும் படித்துக் கேட்க நன்றாகவே உள்ளது.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் சின்ன கீதாமா,
அந்த வருத்தம் சிவாஜி படம் பார்த்ததால்
வந்த வருத்தம்.
நிஜத்திலேயே கர்ணன் பாவப்பட்ட மனிதன் தான்.
அலட்சியப் படுத்தப் படும்போது வரும்
அகங்காரம் அவன் வாழ்க்கை முழுவதும்.

பாஞ்சாலி வஸ்த்ர அபஹரணத்தின் போது,
நிலை தவறுகிறானே.

இங்கே சொல்லப்படும் தர்மக் கதைகளில்
அவனுடைய ஒரு பக்கம் மட்டும் பார்க்கிறோம் மா.

அவன் ஏமாற்றப் பட்டவன், பரசுராமரால்
கைவிடப்பட்டு சாபமும் பெற்றவன்.

குந்தி செய்த ஒரே தவற்றினால்
அவன் வாழ்வு மாறி மஹாபாரதத்தின்
ஒரு கருவியாகிறான்.
பாவம் தான்.

Geetha Sambasivam said...

ஹிஹிஹி, கர்ணனைப் பற்றி வருந்தித் தூங்கற புலியை(ஹிஹிஹி, நாந்தேன்!) இடறி விட்டுட்டீங்களோ! கர்ணன் ஏமாற்றப்படவே இல்லை. ஏமாற்றினான். குருவையே! அதனால் தான் பரசுராமர் சாபம் கொடுத்தார். அவருடைய கொள்கை தெரிந்தும், "க்ஷத்திரியர்களுக்குக் கற்பிக்க மாட்டேன்!" என்பது தெரிந்தும் அவன் பிராமணன் போல் வேஷம் போட்டுக் கொண்டு கற்கச் சென்று கற்று முடித்தும் விட்டான். பின்னர் தான் பரசுராமர் அவன் மடியில் தூங்குகையில் வண்டு ஒன்றால் மாட்டிக் கொண்டு விழித்தான். அதுவும் அவனுக்கு அப்போது நேர்வதற்கு என நடந்தது என்றும் சொல்வார்கள். அவன் பிராமணன் இல்லை.க்ஷத்திரியன் என்று தெரிந்த பின்னரே பரசுராமர் சாபம் கொடுக்கிறார்.

அதே போல் துரோணரும் கர்ணனுக்குக் கற்பிக்க மறுக்கவில்லை. அவருடைய பாடசாலை அனைவருக்கும் திறந்தே இருந்தது. கர்ணன் பிரம்மாஸ்திரப் பிரயோகத்தைக் கேட்டதோடு அதை அர்ஜுனன் மேல் பிரயோகிக்க வேண்டும் என்னும் எண்ணத்துடனும் இருந்ததாலேயே துரோணர் அவனுக்குக் கற்பிக்க மறுத்தார். கர்ணனின் உள் மனம் எப்போதும் அர்ஜுனனை அழிப்பதிலேயே இருந்தது என்பதை துரோணர் நன்கு அறிந்திருந்தார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் துளசிதரன்,
நான் நலமே நீங்கள் நலமா. ?
கேரளாவில் தொற்று அதிகரித்திருப்பதாகத் தோழி சொன்னார்.

நீங்கள் எல்லோரும் நல சௌக்கியத்துடன் இருக்க வேண்டும்.

பாடல்களை நீங்களும் கேட்டு ரசித்தது
மிக அருமை.

இசையை ரசிக்கும் இதயமும், கேட்க நல்ல செவிகளும் இருந்தால்
மனதுக்கு எவ்வளவோ நிம்மதி.

மிக மிக மகிழ்ச்சியும் நன்றியும் மா.

வல்லிசிம்ஹன் said...

''அம்மா தர்மம் தலைகாக்கும் பாடல் வாழ நினைத்தால் வாழலாம் பாடலையும் நினைவுபடுத்தும் இரண்டையும் டக்கென்று மெட்லி செய்யலாம்""

ஹாஹ்ஹா. நானும் இப்படியே செய்வேன்.
ஹை ஃபைவ்!!!!!!!
ஒரு பாடலிலிருந்து இன்னோரு
பாடலுக்குத் தாவுவேன்.
இசையின் கொடையே அதுதான்.
மகிழ்ச்சி!!!! கீதாமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தனபாலன், மனதுக்கு ஊக்கம் கொடுக்கும்
பாடல்.
வாழ்க்கைக்கு வேண்டிய நீதி.
நீங்கள் ரசிப்பதில் ஆச்சரியமே இல்லை.
மிக நன்றி மா. வளம் பெருகட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
புலி எழுந்தால் தான் எங்களுக்கு
நிறைய செய்திகள் கிடைக்கும்.
நன்றாகச் சொல்லுங்கள்.
எனக்கும் கர்ணனைப் பற்றிய உயர்ந்த அபிப்பிராயம்
கிடையாது.
க்ஷத்திரியன் ,பிராம்மணன் என்று சொல்ல வேண்டாமே
என்று நிறுத்திக் கொண்டேன்.

செய்த அட்டகாசங்களுக்கு அவனுக்குப்
பலன் கிடைக்கிறது.
வெறும் பந்துலு நினைத்து ஒரு சரித்திரத்தையே
மாற்ற நினைத்தால் மாறுமா என்ன!!!!!!
விளக்கத்துக்கு மிக நன்றி மா.