மகாளய பட்சம் என்பது புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, புரட்டாசி மாதம் அமாவாசை வரை நீடிக்கும். வரும் 20.09.2021 ஆம் தேதி துவங்கி அக்டோபர் 6.10.2021ஆம் தேதி வரை 15 நாட்கள் மகாளய பட்ச காலமாகும். இந்த நாட்களை பயன்படுத்திக்கொண்டு பித்ருக்களுக்குரிய தர்ப்பணம், சிரார்த்தம் முதலியவற்றை தவறாமல் செய்யவேண்டும். தர்ப்பணத்தில் விடுகின்ற எள் மற்றும் தண்ணீரை ஸ்வேதா தேவி என்பவள் மிக எளிதாக பித்ருக்களிடம் சேர்த்துவிடுகிறாள்.
இந்த நாட்களில் தினமும் முன்னோர்களை வழிபடுவது நன்மையைத் தரும். தாயார் தகப்பனார் இல்லாதவர்கள் தினமும் தர்ப்பணம் செய்வது நல்லது. மற்றவர்கள் தினமும் காலையில் குளித்தவுடன் முன்னோர்களை வணங்கி விட்டு அதன் பின் வேலைகளை தொடங்குவது நல்லது.
மஹாளய பட்சமாகிய இந்த நாட்களில் நமது முன்னோர்களே நம் வீடு தேடி வந்து, நம்முடன் தங்கியிருந்து, நாம் அளிக்கும் உபசாரங்கள், பூஜைகள் ஆகியவற்றை மகிழ்ச்சியுடன் ஏற்று, நம்மை ஆசீர்வதிக்கின்றனர். பித்ருக்கள் மனநிறைவு பெற்று நம்மை ஆசீர்வதிப்பதால், முற்பிறவித் தவறுகளால் இப்பிறவியில் நமக்கு ஏற்படும் அல்லது ஏற்படக்கூடிய கடன் தொல்லைகள், நோய்கள், குடும்பப் பிரச்னைகள், குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்தில் தடங்கல்கள், செய்வினை தோஷங்கள், நியாயமில்லாமல் பிறரால் கொடுமைக்கு ஆளாகுதல், புத்திரப்பேறின்மை, கணவன்-மனைவியரிடையே அன்யோன்யம் குறைதல், கணவன்-மனைவி பிரிந்திருத்தல், உத்தியோகத்தில் தொல்லைகள், மனநலக்குறைவு, குடும்பத்தில் ஏற்படும் தற்கொலைகள், அகால மரணங்கள், காரணமற்ற மனபயம் ஆகிய மிகக்கொடிய துன்பங்களும்கூட அடியோடு நீங்கிவிடும் என்பது ஐதீகம்.
#பித்ருக்கள் எப்படி வருவார்கள்?
மஹாளய பட்சம் ஆரம்ப தினத்தன்று பித்ரு தேவதைகள், சூரிய பகவான், தர்மராஜன் ஆகியோரின் அனுமதி பெற்று பித்ருக்கள், ஸ்வர்ண (தங்கம்) மயமான விமானங்களில் ஏறி நம்மிடம் வருகிறார்கள். இந்த விமானங்கள் சூரியனின் ஒளிக்கற்றைகள் மூலம் பறந்து வருகின்றன. இவ்விதம் பித்ருக்கள் பூமியில் இறங்கும்போது அவர்களைத் தேவர்களின் உலகிலுள்ள மகரிஷிகள் ஆசீர்வதிக்கின்றனர். தேவர்கள் வணங்குகின்றனர்.
பித்ருக்கள் பரம பவித்திரமானவர்கள். தங்களது ஜீவித காலத்தில் செய்துள்ள புண்ணிய செயல்களால் புடமிட்ட தங்கம்போல் ஒளிபொருந்தியவர்களாகப் பித்ருக்கள் பிரகாசிக்கிறார்கள் எனப் புராதன நூல்கள் போற்றிப் புகழ்கின்றன. மீண்டும், தங்கள் குழந்தைகளைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியதால், அவர்கள் பேருவகை அடைவதாக ‘கருடபுராணம்’ கூறுகிறது. அவர்கள் நம்மிடையே வந்து நம்முடன் தங்கும் இந்தப் பதினைந்து புனித நாட்களும் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எப்படி பேசவேண்டும், வீட்டை எப்படிப் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை ‘வைத்யநாத தீக்ஷிதம்’ என்ற வடமொழி நூல் அதிஅற்புதமாக விளக்கியுள்ளது.
#இந்த நாட்களில் எப்படி இருக்க வேண்டும்?
இந்த, பதினைந்து நாட்களிலும், ஒவ்வொருவரும் நமது வீட்டை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் சண்டை போடுவது, தகாத சொற்களைப் பேசுவது, திரைப்படம் பார்ப்பது, ஆபாசமான படங்களைப் பார்த்தல், சஞ்சிகைகள், பத்திரிகைகள் ஆகியவற்றைப் படித்தல், புலால் உண்ணுதல், கள், மது குடித்தல் ஆகியவற்றைக் கண்டிப்பாகத் தவிர்த்தல் வேண்டும்.
நாம் எந்த அளவிற்குத் தூய்மையாக இருக்கிறோமோ, எந்த அளவிற்குச் சுத்தமாக இருக்கிறோமோ, எந்த அளவிற்கு ஒற்றுமையாக இருக்கிறோமோ, எந்த அளவிற்குப் பித்ருக்களைச் சிரத்தையுடன் பூஜிக்கிறோமோ அந்த அளவிற்கு இந்தப் பதினைந்து நாட்களும் நம்முடன் தங்கியிருக்கும் நம் பித்ருக்கள், மனமகிழ்ச்சியையும், மனநிறைவையும் அடைகிறார்கள். பித்ருக்கள் இவ்விதம் இந்தப் பதினைந்து நாட்களும் நாம் குடும்பம் நடத்தும் நேர்மையைக் கண்டு மனத் திருப்தி அடைவதன் பலனைப் பித்ரு தேவதைகள் அவர்களிடம் பெற்று நம்மிடம் சேர்க்கிறார்கள்.
நமக்கு உதவியவர்களுக்கும் திதி கொடுக்கலாம்...
நமக்குப் பல தருணங்களில் அன்பும், இரக்கமும் காட்டி உதவிய பித்ருக்களுக்கும் இந்த மஹாளய பட்சத்தில் நினைவுகூர்ந்து திதி செய்யலாம். இவர்களுக்கு ‘காருண்ய பித்ருக்கள்’ என்று பெயர். அதாவது நாம் துன்பப்படும்போது நம்மீது கருணைகாட்டி உதவிய பித்ருக்கள் என்று பொருள்.
இவ்வாறு, சிரத்தையுடன் மஹாளய பட்சத்தை அனுஷ்டிப்பவர்கள் குடும்பங்களில் எத்தகைய துன்பமானாலும் நொடியில் தீர்ந்து அந்தக் குடும்பம் செழிப்பதை அனுபவத்தில் காணலாம். இந்தப் பதினைந்து நாட்கள் பூஜையைச் செய்யாமல் விடுபவர்கள் எளிதில் கிட்டாத ஓர் அரிய நல்வாய்ப்பினை இழந்துவிடுகிறார்கள். ஆதலால் பரம பவித்திரமான இந்தப் பூஜையை அன்பர்கள் அனைவரும் செய்து பயனடைய வேண்டும்
மேஷம் - ரிஷபம் - சிம்மம் - துலாம் - விருச்சிகம் - தனுசுh ஆகிய ராசிக்காரர்கள் தினமும் முன்னோர்களை வணங்கி வந்தால் சனியின் உக்ரம் குறையும்.
Thank you Jeyanthi Kannan.
11 comments:
என் அப்பா பௌர்ணமி என்பதால் அவர் நாளில் மா. திதி செய்ய முடியாது. அம்மா நாளில்தான் செய்ய வேண்டும். அது அமாவாசைக்கு முதல்நாள் வருகிறது!
அறியாதன அறிந்தோம்..விரிவான பகிர்வுக்கு நல்வாழ்த்துகள்..
மகாளய பட்சம் பற்றி பயனுள்ள நல்ல தகவல்கள்.
அன்பின் ஸ்ரீராம். சதுர்த்தசி திதி அன்றே
ஸ்ராத்தம் கொடுக்கலாம்.
நல்லவை நடக்க பெற்றோரின் ஆசிகள்
கிடைக்கும் நிச்சயமாக.
அனேகமாக அனைவருக்கும் தெரிந்திருக்கலாம். எனக்கு,
இந்தப் பதிவை முன்னோர் நினைவாகப் பதிய
விரும்பினேன்.
நன்றி மா.
அன்பின் மாதேவி,
முன்னோர்களை என்றும் மறக்கக் கூடாது என்பதை இளையோர்கள்
அறிய வேண்டும்.
இந்த ஊரில் தாங்க்ஸ் கிவிங் செய்கிறார்கள்.
எல்லாவிதத்திலும் செய் நன்றியை
மறக்கக் கூடாது என்று என் தந்தை சொல்வார்.
முன்னோர்கள் வழி பாடு நலம் தரும்.
//பித்ருக்கள் பரம பவித்திரமானவர்கள். தங்களது ஜீவித காலத்தில் செய்துள்ள புண்ணிய செயல்களால் புடமிட்ட தங்கம்போல் ஒளிபொருந்தியவர்களாகப் பித்ருக்கள் பிரகாசிக்கிறார்கள் எனப் புராதன நூல்கள் போற்றிப் புகழ்கின்றன. மீண்டும், தங்கள் குழந்தைகளைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியதால், அவர்கள் பேருவகை அடைவதாக ‘கருடபுராணம்’ கூறுகிறது.//
மகிழ்ச்சியாக இருக்கிறது. படிக்கும் போது.
//நமக்குப் பல தருணங்களில் அன்பும், இரக்கமும் காட்டி உதவிய பித்ருக்களுக்கும் இந்த மஹாளய பட்சத்தில் நினைவுகூர்ந்து திதி செய்யலாம். இவர்களுக்கு ‘காருண்ய பித்ருக்கள்’ என்று பெயர். அதாவது நாம் துன்பப்படும்போது நம்மீது கருணைகாட்டி உதவிய பித்ருக்கள் என்று பொருள்.//
காருண்ய பித்ருக்களுக்கு வணக்கம்.
நல்ல பல தகவல்களை சொல்கிறது பதிவு.
அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.
நாளையிலிருந்து ஆரம்பிக்கும் ,
இந்த மஹாலய பட்சம் பற்றி 1980 வரை தெரியாது,.
பிறகு சிங்கத்தின் பாட்டி, என் மாமியார்
எல்லோரும் இந்த நாட்களை பக்தியுடன் கடைப்பிடிக்கும் போது
நானும் உணர்ந்தேன்.
வருட திதி கொடுப்பதை விட இது இன்னும் கூடிய
பலன் தரும் என்பதே ஆச்சரியம் கொடுத்தது,.
எல்லாம் நம் மக்களின் நன்மைக்காகத்தான்.
நன்றி மா.
காருண்ய பித்ருக்களாக என் தம்பிகளையும் ,மாமாக்களையும்
நினைத்துக் கொள்வேன்.
அனைத்துத் தகவல்களுக்கும் நன்றி. நல்லதொரு நினைவூட்டல். அனைவர் வாழ்விலும் முன்னோர்களின் ஆசிகள் கிடைத்து அனைவரும் மன மகிழ்வுடன் வாழப் பிரார்த்திக்கிறோம்.
வணக்கம் சகோதரி
நல்ல பயனுள்ள பதிவு. பித்ருக்கள் நம் வாழ்க்கையில் என்றும் நல்லதாக நடக்க ஆசிர்வதிப்பார்கள். நாம் அவர்கள் இல்லாத வாழ்வை அவர்கள் நம்மை விட்டு பிரிந்த நாள் முதலாக நினைத்து வருந்தி கொண்டிருந்தாலும்,இந்த மஹாலயத்தில் அந்தந்த திதிகளில் எள்ளுத்தண்ணீர் வார்த்து அவர்களின் தாகம் தணித்து அவர்களை கூடுதலாக பாசமுடன் நினைக்கும் போது, அவர்களின் மனம் மகிழ்ந்து அவர்களின் மனப்பூர்வமான ஆசிகள் நமக்கு கிடைக்கும். பதிவில் நல்ல விளக்கமான தகவல்களுக்கு நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பின் கமலாமா,
தாமத பதிலுக்கு மன்னிக்கவும்.
அருமையாகச் சொன்னீர்கள். இப்போது நடக்கும் 15 நாட்களும்
புண்ணீய காலங்கள்.
அனைவரையும் நினைத்து நன்றி சொல்ல வேண்டிய நேரம்.
உங்களுக்கும் இனிய ஆரோக்கியமும் மன வளமும் கிடைக்க நம் முன்னோர்கள்
அருள வேண்டும்.
Post a Comment