Blog Archive

Monday, September 06, 2021

பழைய நினைப்புதான் பேராண்டி:)

வல்லிசிம்ஹன்

Friday, March 23, 2007
கவிதை(யா?) 
எதிர்காலம்..

கண்ணளவே வானம் என்றெண்ணித்
தலை குனிந்து போனதால்
அழகு கொண்ட மரமும் செடியும்
நான் காணவில்லை


காதளவே சொற்கள் என்றே எண்ணிக்
கருத்தினிலே போடவில்லை.
அரியனவெல்லாம் தெரியவில்லை.
அறிந்து கொள்ளவும் வழியில்லை
நெடி அடிக்கும் என்று மூக்கை
மூடியதால்
பூக்கள் என்னை பார்த்து சிரிக்கவில்லை.
உணவு தன்னை மதிக்காததால்
மணக்கும் உணர்வும் மறந்து போனது.

இப்போதோ பேரன் எனக்குச் சொந்தம்
நான் பேசுகிறேன்
அவன் கேட்கிறான்
இரண்டு வருடம் போய்வந்தால்
இவனும் பதில் எனக்குச் சொல்வான்.

இனியே கண்கள் திறக்கும்
காதுகள் கேட்கும்
வாய் நிறையக் கொஞ்சும்
விடுதலை கொடுத்தது யார்?

19 comments:

Geetha Sambasivam said...

நல்லா எழுதி இருக்கீங்க! அருமையா இருக்கு.

கோமதி அரசு said...

கவிதை நன்றாக இருக்கிறது.
பேரன் பிறந்த சமயமா?

நீங்கள் பேசுவதை பேரன் கேட்பது வரம் அல்லவா!
இறைவன் குழந்தைக்கு எல்லா திறமைகளும் கொடுத்ததை எண்ணி பாட்டி மனம் குதுகலித்து இருக்கும்.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

நெல்லைத்தமிழன் said...

ஆஹா... கவிதையிலும் இறங்கிவிட்டீர்களா?

ஒவ்வொரு புலனும் போதும் அனுபவித்தது செயல்பட்டது என மறைமுகமாகச் சொல்கின்றனவோ?

Jayakumar Chandrasekaran said...

தாழ்வோ எதுவோ 
தன்னைத்தானே சிறையிட்டு 
தளையிட்டு  ஒதுங்கி 
தனித்திருந்தபோது 
தன்னுடைய பேரன் 
தன் சொற்கள் கேட்பது 
தணியாத மகிழ்ச்சி உண்டாக்கியது 
தனிக்கதை அன்றோ? 

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
நயகரா அருவி விழுவதை தொலைக்காட்சியில்
பார்த்து, மீண்டும் நேரே பார்த்த போது
ஏதோ ஒரு விடுதலை கிடைத்த உணர்வு.
2007இல்
எழுதியது. அப்போதும் நீங்கள் பின்னூட்டம் கொடுத்திருந்தீர்கள்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன். இனிய காலை வணக்கம்.

2007இல் அமெரிக்கா வந்தபோது எழுதினது.
ஆமாம் பேரனுக்கு நான் பேசக் கேட்பது
மிகவும் பிடிக்கும்.
குழந்தைகள் நம்மைக் கட்டுகளிலிருந்து
விடுவிக்க வந்தவர்கள்
என்றே நான் நினைக்கிறேன். அதுவும்
சின்னவனிடம் நல்ல சொற்கள் சொன்னால்
உடனே நிறைவேற்றுகிறான்.
அதனால் நேர்மறையாகவே பேசுகிறேன். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தனபாலன் ,மிக நன்றி மா. நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
இரண்டு விதத்திலும் அர்த்தம் கொள்ளலாம்.

நமக்கே நாமே கட்டுக்குள் வைக்கிறோம்.
அந்த உணர்வுகள் சில பல காரணங்களுக்காக

வெளிவர நேரிடுகிறது.
காரணி யாராகவும் ,எதுவாகவும் இருக்கலாம்.
சிங்கம் கூடச் சொல்லுவார்.'' Be open about everything"
என்று.
எழுத்து என்னை விடுவிக்கிறது என்றே நினைக்கிறேன்.
விடுதலை மிகப் பிடித்த வார்த்தை:))
நன்றி மா.

கவிதை என்றில்லை.இதைப் போல்
சிறு வௌஅதிலிருந்தே எழுதுகிறேன்.
இங்கே பதிவதில்லை.
அதை இலக்கணப் பிரகாரம் கவிதை என்று சொல்ல முடியாதுமா.

வல்லிசிம்ஹன் said...

தாழ்வோ எதுவோ
தன்னைத்தானே சிறையிட்டு/////
அன்பு ஜயக்குமார் சந்திரசேகர் சார்,

அடித்தள
எண்ணத்தைப் பிடித்து விட்டீர்கள்.
நம்மை நாமே கீழே தள்ளி
அதிலிருந்து மேலே வர முயற்சிப்பது
பிரசவத்தை விடக் கடினம்!!!

வெளிச் சங்கிலிகள் நம்மைக் கட்டினால் கூட
உள்ளே விடுதலை பெறுவது மிக முக்கியம்.
இதைத் தான் உணர்ந்து 14 வருடங்கள் முன் எழுதி இருக்கிறேன்.
கண்ணில் பட்டதும் மீண்டும் பதிவிட்டு
உயிர் கொடுத்தேன். மிக நன்றி மா.

KILLERGEE Devakottai said...

ரசனையான வரிகள் அம்மா

ஸ்ரீராம். said...

நினைத்தது சரிதானா என்பதை JC சார் பின்னூட்டமும், அவருக்கான உங்கள் பதிலும் உறுதி படுத்தின.  நன்றாய் எழுதுகிறீர்கள்.  அவ்வப்போது தளத்தில் இதையும் சேர்த்து போடுங்கள் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேவகோட்டைஜி,
நல்ல வார்த்தைகளுக்கு மிக நன்றி மா.
நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,

நல்லவர் நட்புகள் எப்பொழுதும்
நம்மை சிந்திக்க வைக்கும்.
திரு ஜயக்குமார் நான் நினைத்ததை உணர்ந்ததே
மகிழ்ச்சி. நீங்களும் அதைத் தெரிந்து
கொண்டீர்கள். எழுதியதெல்லாம்
வேர்ட் தளத்தில் சேமித்திருக்கிறேன்.
அவ்வப்போது பதிகிறேன். ஊக்கம்
கொடுப்பதற்கு மிக நன்றிமா.

மாதேவி said...

நன்றாக இருக்கிறது. எழுதுங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி,
ரசித்ததற்கு மிக நன்றி மா.
எண்ணங்கள் தான் இவை.

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா... நல்லா இருக்கும்மா.

பழைய நினைப்புடா பேராண்டி! அட இது கூட நல்லா இருக்கே - என் காஃபி வித் கிட்டு பதிவுகளில் - பின்னோக்கிப் பதிவு என்பதற்கு பதில் இப்படி கொடுக்கலாம் போல இருக்கே! :)

வல்லிசிம்ஹன் said...
This comment has been removed by the author.
வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் முதலில் எழுதினதில் பிழை இருந்தது.
அதனால் அழித்து விட்டேன்.
தங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக நன்றி மா.

தாங்கள் சொல்லி இருப்பதைப்பதைப் போலவே செய்யுங்கள் மா.