2008 எழுதின பதிவு. மீள் வாசிப்புக்கு.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நாமும்தான் எழுத ஆரம்பிச்சு ஒரு ரெண்டு வருஷம் ஆகிறது.
பிடிச்ச பதிவு பிடிக்காத பதிவு ஒண்ணும் கிடையாது.
நம்ம பெத்த பசங்களை (எழுத்துகளை)
நாமே குறை சொல்லக் கூடாது.
எனக்கும் என் சின்னத் தம்பிக்கும் ஒரு அன்யோன்யம் உண்டு.
நான் சொல்றதுக்கெல்லாம் அவன் ஆமாம் சாமி போடுவான்.
சின்னவயசில் வாங்கின குட்டுகள் நினைவில வச்சிருந்தானு நினைக்கிறேன்.
அதே போல அவன் அங்க போனோம்,இங்க போனோம்னு அவன் அலுவல் விஷயமாக சென்ற இடங்களில் சம்யோசிதமாக நடந்து ஏகப்பட்ட அன்னிய செலாவணி கண்டுபிடிச்ச வீரப் பிரதாபங்கள் சொல்லும்போது, உன்னை மாதிரி உண்டாடா'ன்னு நானும் சொல்லுவேன்:))))))
அது எங்களுக்கு ஒரு மியூச்சுவல் அட்மிரேஷன் சொசைட்டினு பெயர் வாங்கிக் கொடுத்து விட்டது:)) அதனால் நாம சொல்லும் எல்லாமே சுவாரசியமானது என்கிற நினைப்பு வந்து மனதில் தங்கி விட்டது.
வலைப்பூ ஒன்று ஆரம்பித்து அதில் அபிப்பிராயங்களை எழுத ஆரம்பித்ததும் சில பதிவுகளுக்குப் பின்னூட்டங்கள் நிறைய வரும்(10னு வச்சுக்கலாமெ:) ) சிலதுக்கு 2 வரும்.
அதில ஒண்ணு என்னுடைய பதிலாக இருக்கும்.:)
திடீர்னு ஒரு நாள் தம்பி கிட்ட பேரன் பிறந்த போது நான் செய்த அசட்டுக் காரியங்களையெல்லாம் சொல்லிச் சிரித்த போது,ஏய், எல்லாத்தையும் குறிப்பெடுத்து வை. என்னிக்காவது ஒரு நாள் நீ ஜர்னலிஸ்ட் ஆனா நீ கருப்பொருள் தேட வேண்டாம் பாரு,என்று சீண்டுவான்.
''ஒரு நாள்...!!'' என்று அண்ணாமலை லெவல்ல சபதம் சொல்வேன்.
படித்தவர்கள் எங்கள் புகுந்த வீட்டில் சற்றே அதிகம்.
எல்லா மொழியும் கலகலப்பாக வந்து போகும்.
காளிதாசன்,பர்த்ஹரி,,ரகுவம்சம்,ஸ்ரீ பாஷ்யம் என்றெல்லாம் விவாதிக்கப் படும்.
நானும் சமையலறையிலிருந்து பஜ்ஜி,போண்டா எல்லாம்
கொண்டு வந்து சாப்பிடக் கொடுக்கும் போது,
ஆவலாக இருந்தாலும் புரியாத காரணத்தால் நீட்டோலை வாசியா நெடுமரமாக நிற்க மனமின்றி,
வெங்காய பஜ்ஜியா, காலிஃப்ளவர் பஜ்ஜியா ஆராய்ச்சிக்குப் போய் விடுவேன்.
அதில் ஒரு வெகு தூர உறவினர், ''நீ ஒண்ணுமே பண்ணலியா அப்புறம்?? ''என்று கேட்டால்
கேள்வி புரிந்தாலும், இல்லையே டீ போடலாம்னு இருக்கேன்.' என்பேன்.
உலக மகா ( நகைச்சுவை )ஜோக் சொன்ன மாதிரி அவர் சிரிப்பார்.
அது போக என்னை,மாற்றி ஒரு அசாதாரண அறிவு ஜீவியாக மாற்ற இவர்கள் செய்த அத்தனை முயற்சியும் வீணாகின.
நமக்கு அப்போது சமையல்,வெளிவேலைகள்,குழந்தைகள்,பாடங்கள், துணிமணி மடித்து இஸ்திரி,ஒட்டடை இதற்கு நடுவே கந்தன் லைப்ரரி புத்தகங்கள். இதுவே போதுமானதாக இருந்தது.
ஆனால் பதிவுகளில் நீடித்து இருப்பதற்கு இவை போதாது,. இன்னும் நிறையப் படிக்க வேண்டும் தமிழை.
நேரம் இருக்கிறதே!!
சுஜாதா சார் கையெழுத்துப் போட்டுக் கொடுத்த புத்தகத்தையாவது இன்னும் ரெண்டு தடவை படிக்கலாம்.
பாவை விளக்கு படிக்கலாம்.
எப்படி எழுதினார்கள் என்று கொஞ்சமாவது தெளியலாம் இல்லையா.
17 comments:
பழைய நினைப்புதான் - மீள் பதிவாக இருந்தாலும் எனக்கு புதிய பதிவு தான். ரசித்தேன் மா.
மீள் பதிவா? நாங்கள் வலையுலகுக்கு வருவதற்கு முன் எழுதி இருக்கிறீர்கள். நகைச்சுவையாக ஜாலியா எழுதி இருக்கிறீர்கள். இவ்வளவு சுவாரஸ்யமாக எழுதிக் கொண்டு ஒன்றும் தெரியாதது போல எழுதி இருக்கிறீர்கள்!
நீங்கள் எழுதுவது பலவித சிந்தனைகளை வரவழைக்கிறது.
நானும், ஏகப்பட்டது சின்ன வயதிலேயே கற்றுக்கொண்டிருக்கலாம். அதில் மனம் செல்லவில்லை. ஸ்ரீபாஷ்யம்..... ஆஹா.. அருமையான க்ரூப்பின் அருகிலேயே இருந்திருக்கிறீர்கள்.
உங்கள் எழுத்து எப்போதுமே மனதுக்கு நெருக்கமானது
இறுதியில் உள்ள அந்த வீடும் நினைவுகளும் சுகம்.
மிக அருமையான நினைவுகள்.
உங்கள் எழுத்துக்களை மீண்டும் படித்தாலும் அலுப்பது இல்லை.
அருமையாக எழுதுவீர்கள்.
உடன்பிறப்புகளின் நினைவுகள் அருமை.
அன்பின் வெங்கட்,
தங்கள் பயணம் நடக்கும் போது இங்கே வந்து கருத்து சொல்வது
பெரிய மகிழ்ச்சி.
எனக்குக் கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது. நீங்கள் புதிதாகப்
படிக்கிறீர்கள் என்பது மிக மகிழ்ச்சி.நன்றி மா.
அன்பு ஸ்ரீராம்,
அப்போதிருந்த உற்சாகம் வேறு தான்.
2012 வரை அது நீடித்தது.
வலைப்பதிவர்கள் அனைவரும் நண்பர்கள்.
துளசி கோபாலின் சஷ்டி அப்த பூர்த்தி நடந்தது.
இருனூற்றுக்கும் மேற்பட்டவர்கள்
கலந்து கொண்டோம்.
அத்தனை பூரிப்பு.
இப்போது எல்லோறும் முக நூலிலும் ,வாட்ஸாப்பிலும்
இருக்கிறோம்.;0)
எழுத்தை ரசித்ததற்கு மிக நன்றி மா. எழுதலாம்.
அன்பு முரளிமா,
நீங்கள் சொல்வது உண்மைதான்.
எல்லோரும் சம்ஸ்கிருதம் கற்றவர்கள்.
ஆங்கிலப் புலமையும் உண்டு.
தமிழ்ப் பெண்ணுக்கு அந்த சூழல் அந்த இளவயதில்
கொஞ்சம் பயமுறுத்தியது:)
பிறகு அஞ்சல் வழியில் கொஞ்சம் படித்தேன்.
புத்தகங்களே எனக்கு என்றும் நெருங்கியவை மா.
நன்றி.
அன்பின் மாதேவி ,
நன்றி மா.
பழையனவற்றைத் தேடியபோது
கிடைத்த படம்..உங்களுக்கும் பிடித்ததில்
மிக மிக மகிழ்ச்சி.
அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.
நீங்கள் எல்லோரும் இணைந்து வருவதால் தான்
என்னால் அப்பொழுதும் இப்பொழுதும் எழுத முடிகிறது மா.
மிக மிக நன்றி.
உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். இப்பதிவினை இப்போதுதான் பார்த்தேன். நினைவுகூர்ந்த விதம் சிறப்பு. அனுபவங்கள் எழுத்தாகும்போது கிடைக்கும் இன்பம் அலாதியானது என்பதை நான் உணர்ந்துள்ளேன். நீங்களும் உணர்ந்துள்ளீர்கள் என்பதை இப்பதிவு மூலம் அறிந்தேன்.
இனிய நினைவுகள் அருமை...
ஆஹா, அருமை. அப்போது எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் மிக சந்தோஷமாக அரட்டை போலப் பதிவுகள் வந்து கொண்டிருந்தன. பின்னர் தான் மெல்ல மெல்லக் கருத்தாழமுள்ள விஷயங்களுக்கு மாறினோம். இல்லையா? உங்கள் தம்பி மாதிரித் தான் எனக்கு என் தம்பியும். ஆனால் பயங்கரமாகச் சண்டையும் போட்டுப்போம். அவன் கிட்டே எனக்குப் பிடிக்காத ஒன்று மர்மக்கதைகள், திகில் சினிமாக்களின் முடிவை முன்கூட்டியே சொல்லி வெறுப்பேத்துவான். :)))) அந்த மாதிரித் தான் "அந்த நாள்" படத்தோட முடிவைச் சொல்லிட்டான். பயங்கரச் சண்டை. சண்டை போட்டப்போ எனக்கு 40 வயசும் அவனுக்கு 35 வயசும் ஆகி விட்டது. :))))))
அன்பு முனைவர் ஐயா,
நம் அனுபவங்களை வெளியே வந்து பார்க்கும்
போது அவைகளின் இனிமையை
உணர முடிகிறது. அதனாலயே எழுத நினைத்தேன்.
நீங்களும் வந்து படித்ததும்
கருத்து சொன்னதும் தான் எனக்குப்
பெருமை.நன்றி ஐயா.
அன்பின் தனபாலன். நலமுடன் இருங்கள்.
நன்றி மா.
கீதாமா,
சண்டைக்கு வயது ஏது. 60 வயதில் கூட வரலாம்:)
சத்தம் போடாம மனசுக்குள்ள சண்டை போடுவாமாயிருக்கும்.
சின்னவனோட எனக்கு எப்பவும் ஜகடாதான்:)
பாவம்,, உடனே தணிஞ்சுபோய் விடுவான்.
சினிமாக்கு டிக்கெட் வாங்குவதிலிருந்து
செய்துவிட்டுச் சொல்வான்.
நம்மால் உடனே கிளம்ப முடியாது, கோபம் வரும்.
எப்படியோ என் மாமியாரைத் தாஜா செய்து
அனுமதி வாங்கி அழைத்துப்
போய் விடுவான். நன்றி மா.
ஆஹா! அம்மா என்னமா எழுதறீங்க....என்னவோ ஒன்றுமே தெரியாதது போல சொல்றீங்க பல சமயம். அருமையான எழுத்து. செம ஜாலி நகைச்சுவை!
மீள் பதிவஆ? மீக்கு நான் இப்பத்தான் வாசிக்கிறேன்.
ரொம்ப ரசித்தேன் ம்மாஅ.
கீதா
Post a Comment