Blog Archive
Friday, April 30, 2021
Wednesday, April 28, 2021
ஆராய்ந்து மணம் செய்து.....
வல்லிசிம்ஹன்
காலம் தோறும் மாறி வருவது கல்யாணக் காட்சிகள்.
தேடாமல் வந்த,,,அல்லது, தேடித் தேடி கிடைத்த
மணமகன்கள்,
காதலித்துக் கைபிடித்த மணமகன்
என்று வரிசையாக வருபவர்களில்
இப்போது கார்ப்பொரேட் திருமணங்களைப்
பார்க்கிறேன்.
நான் அந்தத் திருமணங்கள், அதாவது ஒரு ஸ்தாபனத்துக்கும்
இன்னோரு ஸ்தாபனத்துக்கும் நடக்கு சம்பந்தம்
பற்றிப் பேசவில்லை.:)
இது உயர் மட்டங்களில் வேலை பார்க்கும் பெண்கள்
தங்களுக்குத் தேர்ந்தெடுப்பட்ட வரனை டிடெக்டிவ் ஏஜன்சி வழியே
அவர்களை முழுவதும் விசாரணைக்கு உள்ளாக்குவது.
சமீபத்தில் தெரிய வந்த வினோத செய்தி.
நம் பழைய காலங்களில் நடக்காதது இல்லை.
இன்னார் குடும்பம் இப்படிப்பட்டது,
அந்தப் பையன் நல்லவன் அல்லது வேறு மாதிரி...
பழக்க வழக்கங்கள் இப்படி, மாமியார்,மாமனார்,
சொத்து, பழக்க வழக்கங்கள் எல்லாம்
விசாரித்தே பெண்வீட்டுக்காரர்கள் சம்மதித்த காலம் உண்டு.
திருமணத் தரகர்கள் என்பது பழைய திரைப்படங்களிலும்
கதைகளிலும் பார்த்துப் படித்த நினைவு. பெரும்பாலும் கேலிக்குரியவர்களாகச்
சித்தரிக்கப் பட்டவர்கள்.
சுகா அவர்கள் நாவலில் வரும் பாத்திரம் உண்மையில்
நல்லபடியாகத் திருமணம் நடத்தி வைப்பவர்.
10 வருடங்களுக்கு முன் நடக்க இருந்த ஒரு திருமணத்துக்கு வருவோம்.
மணமகள் அப்போது செழிப்பாக நடந்து கொண்டிருந்த ஒரு கணினி
அலுவலகத்தில் மனித மேம்பாட்டுத் துறையில் அதிகாரி.
அப்போதே 30 வயதான பெண்.
அவளுக்குத் தன் கம்பெனிக்கு வேலைக்கு வருபவர்கள்
முழுமையாக விசாரித்து தகுதியானவர்களை
நேர்காணல் செய்து
வேலைக்குச் சேர்த்துக் கொள்ளும் நடைமுறை இருந்தது.
நல்ல பெண் தான் . எங்கள் வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளி இருந்த
அபார்ட்மெண்டில் இருந்த குடும்பத்தின் ஒரே வாரிசு.
உடை நடை பாவனை, கார் ஓட்டும் திறன் எல்லாம்
அசத்துகிற மாதிரி இருக்கும்.
பெயர் காயத்ரி.
அவளுக்குப் பழக்கப் பட்ட ஆண்களை எல்லாம்
சரியாக எடை போட்டு வைத்திருப்பதாகச் சொல்வாள்.
''ஒருவரையுமே உனக்குப் பிடிக்க வில்லையா.
பழகின நல்லவனை மணம் முடிக்கலாமே ''
என்பேன் நான். லேசில் மசிய மாட்டாள்.
அவள் பெற்றோர் கடைசியாக ஒரு 35 வயதுப் பையனை
சல்லடை போட்டுத் தேர்ந்தெடுத்து
அவன் பெற்றோரிடம் வெண்ணெயாகப் பேசி
பெண் படத்தை அனுப்பி
சம்மதிக்க வைத்து விட்டார்கள்.
காயத்ரி இதைக் கேள்விப்பட்டதும் முதல் வேலையாக
அவனை ஆராய்ச்சி செய்ய மூவரைத் தேர்ந்தெடுத்தாள்.
அந்தப் பையன் இருந்த ஊர் தில்லி.
பெரிய ஆராய்ச்சி கூடம் ஒன்றில் நல்ல வேலையில் இருந்தான்.
இவள் தன் சினேகிதர்கள் மூலமாக அவனை நாலு விதமாக
விசாரித்தாள். பிறப்பு, வளர்ப்பு, படிப்பு, நடத்தை,
பழக்க வழக்கங்கள் இதெல்லாம்
செய்ய வேண்டியவைதான்.
அதற்கப்புறம் அவள் செய்ததுதான் விபரீதம்.
தன் இன்னோரு மன நல சம்பந்தப்பட்ட துறையில் இருக்கும்
தோழனிடம் சொல்லி அவனது
மன நலம் எப்படி என்று விசாரிக்க,
அவனோடு பேச ஏற்பாடு செய்து,அதை ரெக்கார்ட் செய்து
இன்னோரு வைத்தியரிடம் அதை போட்டுக் காட்டி
பிறகுதான்
அந்தப் பையன் ,அவனது பெற்றோர்
எல்லோரும் வந்த நாள் நானும் அவள் அம்மாவுக்கு
உதவியாகப் போயிருந்தேன்.
உயர்தர சுடிதார் போட்டுக் கொண்டு
தனியாக இருந்த நாற்காளியில் கால் மேல் கால்
போட்டு அமர்ந்திருந்தாள் காயத்ரி.
நானோ ஒரு பழங்காலம். அவளிடம்
ஏன் இப்படி முன்னாடியே வந்து உட்கார்ந்து விட்டே?
புடவை கட்டிக்கலையா ''என்று விசாரித்த போது
''நாம் தான் மேல்கை என்று காட்டிக் கொள்ள வேண்டும்.
இந்தப் புடவை கட்டிக் கொண்டு அடக்கம்
காண்பிப்பது எல்லாம்......
இந்த மாப்பிள்ளை பந்தாவெல்லாம் என்னிடம் செல்லாது''
என்றாள்.
நீயென்ன அவர்களோடு சண்டை போடப்
போறீயா ,கல்யாணம் செய்து குடித்தனம்
செய்யப் போகிறியா?''
என்று நான் விலகி விட்டேன்.
பெண்பார்க்க வந்தவர்களின் திகைப்பு எனக்குப்
புரிந்தது. மிகச் சாதாரணக் குடும்பம்.
இந்தப் பையன் தானாக முன்னுக்கு வந்தவன்.
தாய் தந்தை கொஞ்சம் வசதி என்று இருப்பது
அவன் தலையெடுத்த பின்னால் தான்.
சிலதினங்களுக்குப் பிறகு காயத்ரியின்
அம்மாவை பாபா கோயிலில் வைத்துப் பார்த்தேன்.
அழாத குறையாக, திருமணம் நின்று போனதைச் சொன்னார்.
என்னவென்று விசாரித்த போது,
மாப்பிள்ளைப் பையனும்,பெற்றோரும்
திருமணத்துக்கு ஒத்துக் கொண்டு நாள் குறித்து
தட்டை மாற்றிக் கொண்டு தில்லி
சென்றதாகவும்,
அடுத்த இரண்டு நாட்களிலியே , அந்தப் பையனின்
தந்தை, தங்களுக்கு இந்த சம்பந்தத்தில்
இஷ்டம் இல்லை என்று சொல்லி விட்டதாகவும்.
வருத்தத்துடன் சொன்னார்.
ஏன் மனதை மாற்றிக் கொண்டார்கள் என்று கேட்டேன்.
அந்தப் பையனின் தோழன், இந்தப் பெண் இவனது
ஃபோன் உரையாடலை மருத்துவரிடம்
விசாரித்தது தெரிய வந்திருக்கிறது.
அத்தனை கோபமாம் அந்தப் பையனுக்கு,
முதலில் இந்தப் பெண்ணுக்கு மன நலம்
எப்படி என்று எனக்குத் தெரிஞ்சாகணும்.
அவள் இதற்கு சம்மதிப்பாளா என்று கேட்டு
தனக்கு இஷடம் இல்லை என்று விட்டானாம்:(
இப்போது அந்த காயத்ரிக்கும் மணமாகிவிட்டது.
எப்படிக் குடித்தனம் நடத்துகிறாளோ
போய்ப் பார்த்தால் தான் தெரியும். சாமர்த்தியசாலி.
நன்றாகத்தான் இருப்பாள்.!!!
Tuesday, April 27, 2021
Monday, April 26, 2021
கோடையிலே மயிலை...
வல்லிசிம்ஹன்
வீட்டின் நிறங்கள்.
கோடையின் கடுமை இருந்தாலும்
மரங்கள் தங்கள் கடமையைச் செய்ய மறக்கவில்லை.
மாமரம் பூத்து முடிந்து
மாங்காய் காய்க்க ஆரம்பித்து விட்டது.
வீட்டைச் சுற்றி எல்லோருக்கும்
கொடுக்கச் சொல்லி இருக்கிறேன்.
யாருக்குமே ஊறுகாய் மாங்காய்
வேண்டாமாம்:)
பழுத்த பிறகு எடுத்துக் கொள்கிறோம் என்கிறார்கள்.
மாங்கோ ஜாம் மிக நன்றாக வரும்.
செய்முறை கீழே.
முற்றிய மாங்காய்,,,,,பாதி பழுக்கும் நிலையில். 6
அதன் தோல் சீவி ,
கதுப்புகளை மிக்சியில் அரைத்துக் கொண்டு
வைத்துக் கொள்ளணும்.
2, கதுப்புக் கலவையின் எடைக்கு பழுப்பு சர்க்கரை அல்லது வெள்ளை
சர்க்கரை
எடுத்துக் கொள்ளவும்.
3, பொதுவாக நான் கெமிக்கல் கலப்பதில்லை.
4,எங்கள் வீட்டு மாங்காய் அளவுக்கு
அரை கிலோ சர்க்கரை தேவைப்
படும்.
5, கொதிக்கும் வென்னீரில் மாங்காய்க் கலவையைப் போட்டு
அது வெந்ததும்,
6,தண்ணீர் இறுத்துவிட்டு சர்க்கரையைச் சேர்க்க வேண்டும்.
7,கொஞ்சம் ஏலப் பொடி, குங்குமப்பூ
சேர்த்து
8, நல்ல சூட்டில் சுருள சுருள வதக்கி
9, கடைசியாக வாசனைக்கு இரண்டு டீஸ்பூன் நெய்யும்
சேர்த்து இறக்கி விடலாம்.
போக வர எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக எடுப்பார்கள்.
அதற்காக குட்டி கிசான் பாட்டில்களில்
தனித்தனியாகச் சேர்த்து வைப்பேன்.:)
Sunday, April 25, 2021
Saturday, April 24, 2021
Friday, April 23, 2021
என் என்கிற எழுத்துக்கான நாளாம் .............
வல்லிசிம்ஹன்
புத்தகங்களுக்கான நாள். மறக்க முடியாத வரிசையில்
முதல் இடம் புத்தகங்கள் பிடிக்கின்றன.
படிக்காமல் இருக்க முடியுமா.?
முடியாது. எழுத்துக் கற்ற நாட்களிலிருந்து
நான் தொடர்ந்த, என்னைத் தொடர்ந்த
பத்திரிக்கைகள், நாவல்கள்,தொடர்கள்,எழுத்தாளர்கள்,
சித்திரம் வரைபவர்கள்,
எல்லாவற்றையும் காணக் கண் கொடுத்த இறைவன்.
கல்வி கற்பித்த பெற்றோர்கள்
என்று நீளும் பட்டியல். இணையத்தில் இப்போது
இணைகிறது.
தமிழ் பேச முடியாத தனிக்காட்டில்
இருப்பது போலக் கொடுமை வேறெதுவும் இல்லை.
அதை மாற்றுவது வலைப் பதிவுகள்,நண்பர்கள்.
நட்புக்கு மதிப்பு கொடுக்கும் அன்பு.
எப்படி எப்படியோ சேர்ந்திருக்கிறோம்!!!
மனதளவில் வாழும் இந்த நேசமும் பாசமும்
எழுத்தினால் நீடிக்கிறது. வாழ்க புத்தகங்கள்.
இப்போது வாசிப்பில் மீண்டும் ''குபேர வனக் காவல்''
காலச்சக்கிரம் நரசிம்மாவின் முந்தைய படைப்பு.
கட்டிப் போடும் எழுத்தால் நம்மை
அங்கேயே நிற்க வைக்கிறது.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அடுத்தது எழுத்து என்.
தமிழ் என்' உடமைக்கானது.
என் வாழ்வில் என் பாதுகாப்பு தந்த எழுத்து.
அப்பா நாராயணன் என் பெயரின் ஆரம்பத்தில்
வந்த நாட்கள் முடிந்த போது
நரசிம்ஹன் இணைந்தார்.
இப்போதும் என் பாஸ்போர்ட்டில்
இருவரையும் இணைத்து என் என்றே இருக்கும்.
அப்பா என் ஆர் என் என்று பல இடங்களில்
குறிப்பிடுவார்.
''ஏன்'' என்று கேட்டால். அதுதான் மா
பாதுகாப்பு என்பார்.
இது என்ன கண்மூடிப் பாசம் என்று மனதில்
யோசனை வரும்.
பிள்ளைகளுக்கும் என் பாதுகாப்பானது.
எழுத்து என் பற்றிப் பல கட்டுரைகள்
இன்று கூகிளில் படித்தேன்.
நன்றி கூகிள்.
Thursday, April 22, 2021
மட்ரி........மாலைவேளைப் பலகாரம்
வல்லிசிம்ஹன்
நாம செய்கிற துக்கடா தான்.:)
அப்போது மைதாமாவில் செய்வோம்.
இப்போது முழுக் கோதுமை மாவில் செய்தோம்.
முன்பு துபாயிலும், இப்போது இங்க குஜராத்தி கடையிலும்
ரெடிமேடாக வாங்கிய அனுபவம்.
வீட்டிலேயே செய்து பார்த்ததோம்.
அந்த அளவு நெய் விடவில்லை.
கோதுமை மாவை சலித்துக் கொண்டு
உப்பு, ஜீரகம், ஓமம்,பெருங்காயம், கொஞ்சம்
சோடா உப்பும் , ஒரு கப் மாவிற்கு
கால் கப் தண்ணீர்
எண்ணெய் மூன்று டீஸ்பூன் எல்லாம் தேவையான அளவு சேர்த்துப்
பிசைந்து வைத்து விட்டேன்.
சப்பாத்தி இடுவது போல , இட்டுக் கொண்டதும்,
ஒவ்வொரு லேயருக்கும் நெய் மேலாகத் தடவி
பராத்தாவுக்கு மடிப்பது போல மடித்து மடித்து
இட்டு,
எங்கள் பாட்டி செய்வது போல சுருட்டி வைத்தேன்.
சுருட்டின மாவை மீண்டும் சப்பாத்தி
மாதிரி இட்டு,
ஹார்லிக்ஸ் மூடியினால் வட்டமாக
அழுத்தி சாப்பிடுகிற முள் கரண்டியினால்
ஓட்டை போட்டுக் கொண்டதும்
மட்ரி துண்டுகள் தயார்.
வாணலியில் இந்த ஊர் ரைஸ் ப்ரான் எண்ணெயை வைத்து
மிதமான சூட்டில் பொரித்து எடுக்க
வேலை ஓவர்.
நல்ல கரமுரா பிஸ்கட் மாதிரி உப்பும் உறைப்புமாக
இருந்தது.
கொஞ்சம் நாசூக்காகச் செய்ய வேண்டும்:)
Wednesday, April 21, 2021
ராமனைத் துதி மனமே!!
வல்லிசிம்ஹன்
தசரதன் மைந்தன் ராமனை நினைக்காத நாளில்லை.
சந்தோஷம் வந்தாலும் அவன் நாமம்.
சங்கடம் வந்தாலும் அவன் நாமம்.
நோய் வந்தாலும் அவனே
அதைத் தீர்த்து வைப்பவனும் அவனே.
எப்போதும் படபடக்கும் இதயத்தின் துடிப்பை
அப்போதைக்கப்போதே நிதானம் செய்வதும் அவன் நாமமே.
மனதை நிலைப் படுத்தும் அவனது விசாலமான கண்கள்
கருணை ஒன்றை மட்டுமே பொழியும்.
என்றும் ஓடிக்கொண்டிருக்கும் புன்னகை
அவன் முகத்திலிருந்து நம்மை ஈர்த்துக் கொண்டே இருக்கும்.
அந்தக் காருண்ய மூர்த்தியை
சீதை கண்ட நாள் முதல் அவன் சீதாராமனாகவே
ஒன்றி ராமாயணக் காவியத்தை
நமக்குக் கொடுத்து
அனுமன் வழியே சுந்தரமாகக் கொண்டு சென்றான்.
லவகுசர் வழியே பூர்ட்தி செய்தான்.
லக்ஷ்மண,பரத சத்ருக்கினர்,குக,சுக்ரீவ,விபீஷணனுடன்
நாமும் பயணித்தோம். இன்னும்
பயணித்துக் கொண்டு இருக்கிறோம்.
என்னாளும் மறவாமல் அவன் நாமம்
நாவில் இனிக்க ராமா ராமா என்று கூவும்
குயிலாகக் கிளியாக இருப்போம்.
ஜெய் ஸ்ரீராமா. சீதா ராமா. அனுமந்த ராமா.
Tuesday, April 20, 2021
as it is: A Grand Canyon VR Documentary by 360 Labs
2007 இல் சென்று வியப்படைந்த ஒரு மாபெரும் இயற்கைக் காட்சி.
திரைப் படங்களின் இசை.
அகாதா க்றிஸ்டியின் மர்ம நாவல்கள்
படமாக்கப் பட்டபோது
தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட
சீரியல்தொடரின் இசை. கதா நாயகன் ,
டிடெக்டிவ் ஹெர்க்யூல் பைரோவின் அறிமுக இசை.
அடுத்தாற்போல் க்ளிண்ட்ட் ஈஸ்ட்வுடின் படம்
Good Bad Ugly என்று மூன்று படங்கள்
தொடராக வந்தன. இந்தத் தொடர் தம்பிக்கு
மிகப் பிடிக்கும்.
அவன் மயிலைக்கு வரும்போதெல்லாம்
நம் வீட்டில் ரெகார்டரில் வைத்துக் கேட்பது
இந்த இசையைத்தான்.
அடுத்தது சிங்கத்துக்கு மிகப் பிடித்த ஜேம்ஸ் பாண்ட்
பட இசை.
சந்தோஷமாகக் கேட்க ''ஹோம் அலோன்'' இசை.
ஜாஸ் Jaws பட இசை பயங்கரமாக இருக்கும்.
த்ரில்லர் என்றால் காதுகள் வலிக்க அதைக் கேட்க வேண்டாம்
என்று அதைப் பதிவிடவில்லை.
Monday, April 19, 2021
Sunday, April 18, 2021
சாலைப் பயணங்கள், பாடல்கள்
பயணங்கள் நாம் போக முடியாவிட்டாலும்
நம்மை அழைத்துச் செல்லும் திரைப் பாடல்கள்.
Friday, April 16, 2021
அன்பின் அரவணைப்பு,......
முகத்தில்
தெரியும். அத்துடன் குழந்தைகளைத் தொட்டுப்
பேசுவது, அருகில் அழைத்து அணைப்பது எல்லாம்
அந்தக் குழந்தையின் நாலு அல்லது ஐந்து
பிராயத்தில் முடிந்துவிடும்.
முதல் குழந்தைக்குப் பின் மற்ற குழந்தைகள்
வந்து விடுவார்கள்.
தாயின் கவனம், குட்டிக் குழந்தையை சமாளிப்பதிலும்
சமைப்பதிலும்
கணவனுக்கு ஈடு கொடுப்பதிலும் செலவழிக்கப் படும்.
அதனால் மற்ற குழந்தைகள் நிராகரிக்கப்
பட்டார்கள் என்று சொல்ல வரவில்லை.
அம்மாவின் தொடுதல் அணைப்பு குறைந்தால் என்ன?
கூடவே , சித்தப்பாக்கள், மாமாக்கள்,அத்தைகள்
எல்லோரும் தான்.
இந்தக் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள்
ஆகும்போது,
தங்கள் மணவாழ்க்கையில் நுழையும் நேரம்,
அவர்கள் எதிர்கொள்வது அன்பையும் அரவணைப்பையும்
நோக்கியே இருக்கும்.
அதே சமயம் உடல் வழி அணைப்பையோ,வேறெதையும் எதிர்
கொள்ளத்தயங்குவார்கள்.
உள்ளத்தால் மிக நெருங்கிவிட்ட தம்பதிகளின்
உணர்வு பூர்ணமாகத் தொடுதல்
இவை வருவதற்கு நாட்கள் பிடிக்கிறது.
இங்கே உட்கார்ந்திருக்கும் குடும்பம் உங்களுக்குப்
பழகிய குடும்பம் தான்.
குழந்தைகள் நெருக்கி அடித்துக் கொண்டு
உட்கார்ந்திருக்க
அம்மா தனி ஸ்டூலில்:)
1973இல்
படம் எடுக்கச் சென்ற திருச்சி ஸ்டூடியோவில்
இத்தனை ஏற்பாடு தான் இருந்தது.
இருந்தாலும் ,
மகளையாவது தன் மடியில் வைத்துக்
கொள்ள என்ன தடை அந்த அம்மாவிற்கு?
மன முதிர்ச்சி போதவில்லை.
அந்த ஸ்டூல் மூன்று காலில்
நின்று கொண்டிருந்ததும் ஒரு காரணம்:)
எனக்கு அந்த அம்மாவிடம் பிடிக்காத குணங்களில்
இதுவும் ஒன்று.
எத்தனை உன்னதமான நேரத்தில்
கட்டுப்பாடுகளை மட்டுமே கருத்தில் வைத்துக்
கொண்டு,
சுருங்குவது சரியா என்று கேட்க ஆவலாக இருக்கிறது. அந்தத் தம்பதிகளுக்கு
அன்று ஏதோ ஊடல் என்பது மட்டும் நினைவில்.
அது போகட்டும். நடந்த சம்பவத்துக்கு இப்போது
வருந்தி என்ன பயன்.:(
இதெல்லாம் நினைவுக்கு வந்தது சமீப காலங்களாக்ப் பார்த்து வந்த
இங்கிலாந்து அரச பரம்பரை பற்றிய
தொடர் என்னை வெகுவாகச் சிந்திக்க வைத்தது.
இந்த ஆங்கிலேயர்கள் என்ன ஒரு கொடுமையைப்
புகுத்தி விட்டுப் போயிருக்கிறார்கள் என்று தோன்றியது.!!
எதற்காக நம் ஆனந்தத்தையும், அழுகையையும்
வெளிப்படுத்தக் கூடாது?
திரைப்படங்களின் சோகக் காட்சிகள் நம்மை
அழவைத்த காலங்கள். நல்லிசைப் பாடல்கள்
நம்மனதை ஆட வைத்த காலங்கள்.
உன்னதமானவை.! அவை நம் உணர்ச்சிகளின் வெளிப்பாடுகளாகச்
செயல் பட்டன என்றே நம்புகிறேன்.
என் தலை முறையைக் குறை சொல்லவில்லை.
ஆனால் ''stiff upper lip'' கொடுமை இனி வேண்டாம்
என்று தோன்ற வைத்த கணங்கள் இப்போதாவது
வந்தால் சரியென்று தோன்றியது.
இப்போது நிறைய மாறிவிட்ட காலங்களைப் பாராட்டுகிறேன்.
நான் வளர்த்தாலும்,
என்னைப் பின்பற்றாமல் தங்கள் குழந்தைகளைத் தட்டிக் கொடுத்து
அரவணைத்து ,முத்தமிட்டு கொஞ்சியே வளர்க்கிறார்கள்.
*(((இப்போது இந்தத் தொற்று காலத்தில் யாரும் யாரையும்
அணைத்துக் கொள்வது என்பதே
நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றே ஆனது,
வேறு விஷயம்.))))))
வல்லிசிம்ஹன்
Thursday, April 15, 2021
லில்லி ஏப்ரஹாம் என் தோழி 1964
சென்னையில் எனக்குக் கிடைத்த தோழிகளில்
முக்கியமானவள் லில்லி.
புரசவாக்கத்தில் ஆங்க்லோ இந்தியர்கள் அதிகம்.
முதலில் பார்த்த போது
அவர்கள் உடையையும் பேச்சையும்
பார்க்கும் போது கொஞ்சம் வினோதமாக
இருந்தது.
ஆனால் பழகப் பழக அந்தக் குடும்பத்தின் வெள்ளை மனமும்
புரிய என் மனத்தடை அகன்றது.
பாட்டியோடு இருந்ததால், நான் அங்கே அவர்கள்
எழும்பூர் வீட்டுக்குப் போகிறேன்
என்றால் சற்று மனத்தாங்கல் வரும்.
இருந்தும் ஒரே பஸ்ஸில் போய் வரும் நேரங்களை
வெகுவாக அனுபவித்து ரசிப்பேன்.
அவளது சங்கீதமும் அவளுடைய கிடாரும்
என்னை அவ்வளவு ஈர்த்தது.
பார்க்க ஒரு பப்ளிமாஸ் போல நல்ல ஆகிருதியுடன் இருப்பாள்.
அவள் கூந்தல் கழுத்து வரை தான்.
குழந்தை முகம். நல்ல சிரித்த தோற்றம்.
எங்கள் குழுவில் எல்லா மானிலத்துப்
பெண்களும் இருப்பார்கள்.
எல்லா மொழிப் பாடல்களும் என்னையும்
சேர்த்து...... குழுவாகப் பாடுவோம்.
அந்த இனிய நாட்களை நினைத்து இந்தப் பதிவு.
Wednesday, April 14, 2021
Britain Welcomes the President of India (1963)
இன்னும் நம் மனதில் ஒரு கௌரவம் கூட்டும் மனிதர். பேராசிரியர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்.
Tuesday, April 13, 2021
மாங்காய்ப் பச்சடி
அனைவருக்கும் பிறக்கும் புது வருஷம்
ஆரோக்கியத்தையும்
நல் வாழ்வையும் அளிக்கட்டும்.
மனம் நிறை வாழ்த்துகள்.
Monday, April 12, 2021
Sunday, April 11, 2021
இப்போது இன்றைய உலகம்.....
வல்லிசிம்ஹன்
தடுப்பூசிகள் போடப்படும் வேகத்தில்
தொற்றும் அதிகரிப்பது
ஒரு வேதனைதான்.
தடுப்பூசி போட்டால் எல்லாம் சரியாகி விட்டது என்றும் இன்னும் கூட்டம்
அதிகமாகி விட்டது.
இப்போது ஈஸ்டர் விடுமுறையில் அனைவரும்
சந்தித்து ,ஏர்போர்ட்டில் குழுமி,
வேறு ஊர்களுக்குச் சென்று.,
தங்களால் ஆன (பரப்பும்)சேவைகளைச் செய்கிறார்கள்.
முகக் கவசம் அணிவது ஒரு வேடிக்கையாகி விட்டது.
இந்தியாவில் ஒரு திருமணத்தில்
எல்லோரும் பத்திரமாக இருங்கள் என்று சொன்னதே
தவறாகி விட்டது.
Spoilsport பட்டம் வேற. மனது கேட்காமல் தான் சொன்னேன்.
நாங்கள் எல்லோரும் மிக சௌக்கியமாக இருக்கிறோம்.
உன் வார்த்தை பலிக்கவில்லை
என்ற கேலி வேறு.ஒரே நாளில் 100000 க்கு மேல் பாதிப்பு.
நம்மூரில் எண்ணிக்கை கேட்கவே வருத்தமாக இருக்கிறது.
திருமணங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
குறைவான கூட்டம் என்று 200 நபர்கள் கூடுகிறார்கள்.
சின்ன மண்டபத்தில் தான் நடக்கிறது.
தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் போட்டுக் கொள்ளாதவர்கள்
கலந்துதான் நடக்கிறது.
என் தோழி முகக் கவசம் போட்டுக் கொண்டதால் கேலி செய்தார்களாம். அவள் மதிய உணவுக்கே
போகவில்லை.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்கள் அக்கம் பக்கத்தில் எல்லோரும் இரண்டு ஊசியையும்
போட்டுக் கொண்டாகிவிட்டது.
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி
ரியாகஷன்.
ஊசி போட்ட இடத்தில் இன்னும் வலி.மூன்று முழு நாட்கள்
ஆனபிறகும்!!
நோய்த்தடுப்பு நன்மை என்பதால் பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான்.
++++++++++++++++++++++++++++++++++++++++
என் வயதொத்தவர் திருச்சியில் திடீர் என்று மறைந்தார்.
தடுப்பூசி போட்ட பிறகும் பத்து நாட்களில்
வெளியே வரப்போக இருந்திருக்கிறார்.
அவர் வேலை அப்படி.
அவர் மனைவியிடம் அழைத்துப் பேசக்கூட
தயக்கமாக இருக்கிறது.அத்தனை பூஜை,புனஸ்காரம் என்றிருப்பவர்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சென்னையில் ஆன்லைனில் வாங்கி இருந்த புடவைகள், மருந்துகள் ,பிந்தி
எல்லாவற்றையும் நண்பர் ஒருவர் பணம் கொடுத்த உலகப்
பிரசித்தி பெற்ற நிறுவனம் மூலம் அனுப்பி இருந்தார்.
ஒருமாதமாக அந்தத் துறைமுகத்தில் தங்கி இருந்தது.
என்ன புடவை,பொட்டுகள் எப்படி செய்தார்கள் இத்யாதி
செலவுக்கு 110$ அனுப்புங்க என்று சொல்லிவிட்டார்கள்.
அனுப்பிய பிறகு இதோ நேற்று வந்தது.
சுண்டைக்காய் கால் சுமைகூலி முக்கால்
நினைவுக்கு வருகிறதா!!!!!
Tony Brent - Amore, Ammammaa.
இந்தப் பாட்டின் தமிழ் வண்ணம் அம்மம்மா..மனோகர்,ஷீலா
நடிப்பில். வேதா இசையில்.
Saturday, April 10, 2021
Cheeni Kum Title Track | Full Video Song | Cheeni Kum | Amitabh Bachchan...
2007இல் துபாயில் இருக்கும் போது பார்த்த படம். மிக
நளினமான காதல் கதை.
கொஞ்சமும் வேறு நினைப்பு வராமல் தபுவும் அமிதாப்
பச்சனும் நடித்திருக்கும்
சிறந்த காட்சிகள்.
Thursday, April 08, 2021
Wednesday, April 07, 2021
Yeh Jeevan Hai | Kishore Kumar | ..வாழ்க்கை இது தான்
பாடகர் கிஷோர் குமாருக்காக இசைப் பேரரசி லதாமங்கேஷ்கர் பாடிய பாடல்.
இருவரும் எத்தனையோ பாடல்களினால்
நம்மை மகிழ்வித்திருக்கிறார்கள்.
கிஷோரும் ஆஷாஜியும்
Tuesday, April 06, 2021
Monday, April 05, 2021
அன்னையும் தந்தையும் தானே.
வல்லிசிம்ஹன்
பெற்றோர் நினைவு நம்மை விட்டு அகலாது என்பது
எல்லோரும் உணர்ந்தது.
அவர்களும் எங்கிருந்தாலும் நம்மை
நினைத்து அருள் செய்வார்கள்,
அவர்களின் புண்ணியங்கள் நம்மைக் காக்கும்
எண்ணங்கள் நம்மைத் தொடரும்
என்பதை நிரூபித்திக் கொண்டே இருக்கும் ஒரு நிகழ்வு.
தினமும் அப்பா அம்மா படத்தை வணங்கிவிட்டு
படுக்கச் செல்வேன். ஒரு நாள் இரவில்
"வெளிச்சமே போதவில்லையே'' என்று குரல்
கேட்டது.
மகள் அறையை நோக்கினேன். குறட்டை சத்தம். பேரன்
இருவர்களின் அறை நிசப்தம்........
நானே உளறினேனா என்று யோசித்ததில்
அதை எல்லாம் நிறுத்தி 25 வருடங்கள் ஆனது நினைவுக்கு வந்தது.;0)
மீண்டும் படுத்துக் கொண்டால் உறக்கம் வரவில்லை.
காலை 5.30க்கு இறங்கி வரும்போது கீழே நல்ல இருட்டு.
என் கணினி இருக்கும் அறைக்குச் சென்று
விளக்கைப் பொறுத்தி மீண்டும் பெற்றோரை வணங்கிவிட்டு
காப்பி ஏற்பாட்டில் இறங்கும் போது,
நினைவுக்கு வந்த விஷயம் இதுதான்.
அப்பா எப்பொழுதும் தன் படுக்கைக்குப் பக்கத்தில் ஒரு நாற்காலியில்
நல்ல டார்ச் லைட், மற்றும் சொம்பில் தண்ணீர் வைத்துக்
கொண்டுதான் படுப்பார்.
அம்மாவுக்கு உடல் நலம் இல்லாத போது,
அவருக்கு இரவில் எழுந்து கழிவறைக்குச் செல்ல
டார்ச் போட்டுக் கொண்டுதான் வழிகாட்டுவார்.
அம்மா திரும்பி வந்ததும் தான் மீண்டும் தூங்குவார்.
ஏதோ மனதில் தோன்ற மகளிடம்,
தாத்த பாட்டி படத்துக்குச் சின்னதாக விளக்கு வைக்கலாமா
என்று கேட்டேன்.
அதுக்கென்ன பாட்டரி செல் போட்டு
எல் இ டி விளக்கு கிடைக்கும்.
40 மணி நேரம் எரியும் . மீண்டும் சார்ஜ் செய்யலாம் என்றாள்.
அதையே ஒரு டஜன் அமேசானில் சொல்லி வந்தும் விட்டது.
இங்கே அலங்கார விளக்குகள் எப்பொழுதும்
கிடைக்கும்.
நானும் தூங்கப் போகும் சமயம் அந்த விளக்கை
ஏற்றி விட்டுச் செல்வது வழக்கமாகிவிட்டது.
கீழே காலையில் வந்ததும் விளக்கை அணைத்து விடுவேன்.
ஆறாம் நாள் அதை ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்று நினைத்த போது
அதன் wire காணோம்.:(
ஒரு வேலையைச் சரியாகச் செய்ய முடியவில்லையே என்று வருந்தியவாறு
சரி இருக்கிற வரை வெளிச்சம் தரட்டும்.
என்று குட்டி விளக்கை பெற்றோர் படம்
பக்கத்தில் வைத்துவிட்டுச் சென்றேன்.
அடுத்த நாள் காலையில் எனக்கு அதிசயம் காத்திருந்தது.
அந்த விளக்கு எரிந்து கொண்டுதான் இருந்தது.
இது நடந்து 40 நாட்கள் ஆகிறது. இன்னும்
ஒவ்வொரு நாளும் எட்டு மணி நேரம்
எரிந்து கொண்டுதான் இருக்கிறது.
இது எப்படி என்றே புரியவில்லை.
Any time...any help , ஃபோன் பண்ணு என்று அப்பா,
அம்மா இருவரும் சொல்வதுதான்
நினைவில் நிற்கிறது.
நன்றி அப்பா.
Sunday, April 04, 2021
VR 360 Video of Top 5 Roller Coaster Rides 4K Virtual Reality
பேரன் புதிதாக வாங்கி இருக்கும் வர்ச்சுவல்
ரியாலிட்டியில்
நான்uம் பங்கெடுத்து
அந்தக் கண்ணaடியைக் கண்களில் மாட்டிக் கொண்டதுதான்
தெரியும் இன்னோரு புதிய உலகத்துக்குப் போய் வந்து விட்டேன்.
இந்த ரோலர் கோஸ்டரில் சென்று வந்தேன்.
வாழ்வில் முதன் முறை சென்று வந்தது
மிக அருமை.
அப்படியே நிஜத்தில் நடப்பது போல
இருந்தது.
வயிறு கொஞ்சம் மேலே கீழே சென்று வந்ததுதான்
பயங்கரமான த்ரில்.அந்த வளைவுகளில் உடலும் வளைந்து கொடுப்பதைப்
போலத் தோற்றம்.
Friday, April 02, 2021
ரயிலும் பயணங்களும் நாங்களும்.
புதிதாக வந்திருக்கும் பல பூக்கள்
1967 செப்டம்பர் மாதம் பெரியவனுக்குப் பத்துமாதங்கள் ஆகி இருந்தன. சிங்கத்துக்கு வருடாந்திர லீவுக்கான நேரம். பெற்றொர் அப்போது இராமேஸ்வரத்தில் இருந்தார்கள். அங்கே போய் வர இருவரும் முடிவெடுத்தோம். போகவர செலவு கம்பெனி ஏற்கும். சேலத்திலிருந்து திருச்சி. திருச்சியிலிருந்து இராமேஸ்வரம் மெயில். குழந்தைக்கான சாப்பாடு, ஹாமர்மாஸ்டர் ஃப்ளாஸ்க் இரண்டு என்று இரண்டு பெட்டி. அதிகாலையில் விழித்துக் கொண்டு பாம்பன் பாலத்துக்காக் காத்துக் கொண்டிருந்தேன்.
1967 செப்டம்பர் மாதம் பெரியவனுக்குப் பத்துமாதங்கள் ஆகி இருந்தன. சிங்கத்துக்கு வருடாந்திர லீவுக்கான நேரம். பெற்றொர் அப்போது இராமேஸ்வரத்தில் இருந்தார்கள். அங்கே போய் வர இருவரும் முடிவெடுத்தோம். போகவர செலவு கம்பெனி ஏற்கும். சேலத்திலிருந்து திருச்சி. திருச்சியிலிருந்து இராமேஸ்வரம் மெயில். குழந்தைக்கான சாப்பாடு, ஹாமர்மாஸ்டர் ஃப்ளாஸ்க் இரண்டு என்று இரண்டு பெட்டி. அதிகாலையில் விழித்துக் கொண்டு பாம்பன் பாலத்துக்காக் காத்துக் கொண்டிருந்தேன்.
ரயில் நெருங்க நெருங்க மனம் முழுவதும் உற்சாகம். அம்மா வெகு விவரமாக ராமேஸ்வர வாழ்க்கையையும் ,அடிக்கும் காற்று,மழை,புடவை தின்னும் மாடுகள்,
பர்வதவர்த்தினி அம்பாள் என்று ஒவ்வொரு கடிதத்திலும் எழுதி வந்தார்.
ஆடி மாதம் காற்றில் சிலசமயம் வண்டிகள் பாம்பன் பாலத்தில் வரத்தடை உண்டு அதனால் அடுத்த மாதம் வரலாம் என்று யோசனை சொல்லி இருந்தார். அப்போது மதுரை ராமேஸ்வரம் சாலை கிடையாது . யோசித்து கொண்டிருந்தபோதே தங்கச்சி மடம் வந்துவிட்டது. பிறகு பாம்பன் ஸ்டேஷன். அதைத் தாண்டியதும் பாலம்.
கண்ணுக்கெட்டிய வரை கடல். ரயில் பாலத்துக்கு மேல் மெதுவாக ஊறத்தொடங்கியது. இவருக்கோ ஒரே துடிப்பு. குழந்தை இதையெல்லாம் பார்க்க வேண்டும். '' ரேவ்,பாபுவை எடுத்துக் கொண்டு வா. கீழே அலை மோதுகிறது பார். அப்பா ஜீஸஸ் என்ன காத்து. எஞ்சாய் மா''
என்று கதவோரம் நின்று அழைத்துக் கொண்டிருந்தார். எனக்கோ ஜன்னல் வழி பார்த்த கடலே போதும் என்றாகிவிட்டது. பரபரப்பு இருந்தாலும் பயமும் இருந்தது. நீங்கள் முதலில் உள்ளே வாருங்கள் குழந்தை கூப்பிடுகிறான் என்று போய் இழுக்காத குறையாக அழைத்து வந்தேன்.
''ஆஹா. உங்க அம்மாவைப் பாருடா குட்டிப்பையா இதுக்குப் போய் பயப் படுகிறாள். நான் இங்கே இருந்தே கடலில் டைவ் அடிப்பேன் தெரியுமா. ''
என்றதும் எங்கே சொன்னதைச் செய்துவிடுவாரோ என்று குழந்தையை அவரிடம் கொடுத்துவிட்டேன்:))
''நான் பெட்டிகளைச் சரியாக எடுத்து வைக்கிறேன் . நீங்கள் இவனை வைத்துக் கொள்ளுங்கள். அப்பா ஸ்டேஷனுக்கு வந்திருப்பார். நாம் ரெடியாக இருந்தால் இறங்கிவிடலாம். வீட்டுக்குப் போய்க் குளிக்கணும். கோவிலுக்குப் போகணும். அம்மா கிட்டப் பேசணும்'' என்று எதேதோ பேசிசமாளிக்கப் பார்த்தேன். நிமிர்ந்து பார்த்தால் ஆளைக் காணொம்.
என்னடா இந்த மனுஷனோட அவஸ்தையாப் போச்சு என்றபடி கம்பார்ட்மெண்ட் கதவுக்குப் பக்கத்தில் போனால் அப்பாவும் பிள்ளையும் ஹாய் ஹூய் என்று கடலை அழைத்தவண்ணம் இருந்தனர். இவர் கையில் பையன்.அவன் கையில் கரடி பொம்மை.
சரிதான் என்று நானும் அங்கேயே நின்று கொண்டேன். ஒரு வழியாகத் தொங்கு பாலம் கடந்து ராமேஸ்வரம் ஸ்டேஷனும் வந்தது. மதியம் 12 மணி இருக்கும். என் அப்பாவைப் பார்த்ததும் கையில் குழந்தை தாவி விட்டான். கூட வந்த ரங்கனுக்கோ உடம்பெல்லாம் மகிழ்ச்சி. அவனுக்கு என்னிடம் சொல்ல நூறு செய்தி. ராமேஸ்வரத்துக்கு வரும் வி ஐ பி களுக்கெல்லாம் அவன்தான் அஃபிஷியல் கைட்.
உங்களையும் எல்லா இடத்துக்கும் அழைத்துப் போகிறேன் என்று அவன் சொன்னதுதான் தாமதம். இவர் அவனை வளைத்துக் கொண்டார். ''கோவில் அக்கா போகட்டும் .நானும் நீயும் தனுஷ்கோடி போகலாம் சரியா'' என்றார். கிட்டத்தட்ட ஏழு மைல் நடக்கவேண்டும். அப்பா சரின்னு சொன்னால் போகலாம் என்றது அந்தப் பிள்ளை. அப்பா தயங்கினார். சீக்கிரம் காலையில் போகணும். கொஞ்ச நேரமானாலும் டைட்ஸ்( tides) வந்து வழி மூடி விடும். பிறகு தண்ணீர் வடிந்தபிறகே வரமுடியும் என்றார்.#இதுஒருமீள்பதிவு.
2021 April 2 nd.
+++++++++++++++++++++++
சமீப காலமாக ரயில் பயணங்களைப்
பார்த்து வருகிறேன். எத்தனை விதமான ரயில்கள்.
எத்தனை வேகம்.
நடுவில் வரும் ஸ்டேஷன்கள்.
அதில் கேட்கும் 'காப்பி,டீ சாய் கோஷங்கள்.
ஜன்னலருகே பயமில்லாமல் உட்கார்ந்து வெளியே உடன் வரும் நிலாவோடு
பேசிய பாடிய நாட்கள். ஒரு suspended life.
கிளம்பும்போது ஒரு உற்சாகம்.
முடியும் போது ஒரு எதிர்பார்ப்பு.
நல்ல பயணங்களை மட்டும் நினைவில் இருத்தும்போது
கடவுள் என்னிடம் கருணையோடு இருந்த நாட்களுக்கு
நன்றி சொல்கிறேன். இது 55 வருடங்களுக்கு
முன் மேற்கொண்ட கனவுப் பயணங்கள்
வகையைச் சேர்ந்தது.
பதிவில் இருந்த பிழையைச் சுட்டிக்காட்டின
தேவகோட்டைஜிக்கு நன்றி.
தங்கச்சிமடம் என்ற ஊர், பாம்பன் பாலம் தாண்டிய பிறகே
வரும். அந்த map இங்கே கொடுத்திருக்கிறேன்.
நன்றி மா.
Thursday, April 01, 2021
Subscribe to:
Posts (Atom)