வல்லிசிம்ஹன்
புத்தகங்களுக்கான நாள். மறக்க முடியாத வரிசையில்
முதல் இடம் புத்தகங்கள் பிடிக்கின்றன.
படிக்காமல் இருக்க முடியுமா.?
முடியாது. எழுத்துக் கற்ற நாட்களிலிருந்து
நான் தொடர்ந்த, என்னைத் தொடர்ந்த
பத்திரிக்கைகள், நாவல்கள்,தொடர்கள்,எழுத்தாளர்கள்,
சித்திரம் வரைபவர்கள்,
எல்லாவற்றையும் காணக் கண் கொடுத்த இறைவன்.
கல்வி கற்பித்த பெற்றோர்கள்
என்று நீளும் பட்டியல். இணையத்தில் இப்போது
இணைகிறது.
தமிழ் பேச முடியாத தனிக்காட்டில்
இருப்பது போலக் கொடுமை வேறெதுவும் இல்லை.
அதை மாற்றுவது வலைப் பதிவுகள்,நண்பர்கள்.
நட்புக்கு மதிப்பு கொடுக்கும் அன்பு.
எப்படி எப்படியோ சேர்ந்திருக்கிறோம்!!!
மனதளவில் வாழும் இந்த நேசமும் பாசமும்
எழுத்தினால் நீடிக்கிறது. வாழ்க புத்தகங்கள்.
இப்போது வாசிப்பில் மீண்டும் ''குபேர வனக் காவல்''
காலச்சக்கிரம் நரசிம்மாவின் முந்தைய படைப்பு.
கட்டிப் போடும் எழுத்தால் நம்மை
அங்கேயே நிற்க வைக்கிறது.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அடுத்தது எழுத்து என்.
தமிழ் என்' உடமைக்கானது.
என் வாழ்வில் என் பாதுகாப்பு தந்த எழுத்து.
அப்பா நாராயணன் என் பெயரின் ஆரம்பத்தில்
வந்த நாட்கள் முடிந்த போது
நரசிம்ஹன் இணைந்தார்.
இப்போதும் என் பாஸ்போர்ட்டில்
இருவரையும் இணைத்து என் என்றே இருக்கும்.
அப்பா என் ஆர் என் என்று பல இடங்களில்
குறிப்பிடுவார்.
''ஏன்'' என்று கேட்டால். அதுதான் மா
பாதுகாப்பு என்பார்.
இது என்ன கண்மூடிப் பாசம் என்று மனதில்
யோசனை வரும்.
பிள்ளைகளுக்கும் என் பாதுகாப்பானது.
எழுத்து என் பற்றிப் பல கட்டுரைகள்
இன்று கூகிளில் படித்தேன்.
நன்றி கூகிள்.
10 comments:
//நட்புக்கு மதிப்பு கொடுக்கும் அன்பு.
எப்படி எப்படியோ சேர்ந்திருக்கிறோம்!!!
மனதளவில் வாழும் இந்த நேசமும் பாசமும்
எழுத்தினால் நீடிக்கிறது. //
அருமையாக சொல்லி விட்டீர்கள் அக்கா.
நேசமும், பாசமும் காட்டும் நட்பை பெற்று தந்தது இந்த எழுத்துதான் .
நல்ல பதிவு. நன்றி.
வணக்கம் சகோதரி
பதிவு அருமை. ஆம்.. இன்று புத்தக நாள் மற்றும் பதிப்புரிமை நாளுக்கான தினம் என நானும் பார்த்தேன். இந்த நாளை நீங்கள் கூகுளில் பார்த்துச் சொன்ன விஷயங்கள் சிறப்பு. "என்" என்ற எழுத்து உங்கள் வாழ்வோடு ஒட்டியது குறித்து கூறியது இன்னமும் சிறப்பு. இன்ஷியல் மாறாமல் தங்கள் பெயரோடு உங்கள் வாழ்வான இரண்டு அத்தியாயத்திலும் "என்" என்றும் வருவதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். உங்களுக்கு பாதுகாப்பை மட்டுமல்ல... ஒரு நிறைவான சந்தோஷத்தையும் தந்திருக்கிறது அந்த "என்" என்ற எழுத்து. "என்"என்ற அந்த எழுத்திற்கு என் வாழ்த்துக்களும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பு கோமதிமா,
வாழ்க வளமுடன்.
புத்தகங்களும்,எழுத்தறிவும் நம்மை இந்த
காலத்தில் வாழ வைக்கின்றன.
இந்த இணையமும் பதிவுகளும் இல்லாத
வாழ்வை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.
இறைவன் நம்முடன் இருக்கட்டும்.
நன்றி மா.
அன்பு கமலாமா,
வணக்கம்..
உங்கள் எல்லோருடைய எழுத்துகளைப் படிப்பதும் இறைவன் அருள் தான்.
எத்தனையோ உணர்ச்சிகள், அன்புஅருமை எல்லாவற்றுக்கும் வடிகால்
இந்த எழுத்துக்களும் படிப்பும்.
நிறைய எழுதுங்கள் அம்மா.
ஆமாம் என் எழுத்து என் வாழ்க்கையின் அஸ்திவாரம்.
நன்றி மா.
// தமிழ் பேச முடியாத தனிக்காட்டில் //
அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும் என்று தோன்றுகிறது. தெருவில் இறங்கி நடந்தாலே நம்மூர், நம்ம பாஷை என்று இருக்கும் நாங்கள் உங்கள் போன்றோரின் கஷ்டத்தை உணர முடியாதுதான்.
பாதுகாப்புக் கொடுத்துக் கொண்டு வரும் "என்" எழுத்துக்கு நன்றியும் வணக்கமும். எழுத்தும்/ஆக்கமும் இல்லைனால் நமக்கெல்லாம் பித்துப் பிடிச்சிருக்கும். :))))
இந்த நாள் குறித்து அழகாய் எழுதி இருக்கிறீர்கள். அப்பா VKN என்றும் VNV என்றும் எழுதுவதை வழக்கமாக வைத்திருந்தோம். அப்பா இப்போதும் அப்படியே எழுதுகிறார். நான் எழுதுவது இல்லை! சிறப்பான தகவல்கள் வல்லிம்மா.
அன்பு ஸ்ரீராம்,
தமிழ் பேசாத தனிக்காடு இப்பதான் ...
முன்பு எல்லோரும் வரப் போக இருப்பார்கள். வீட்டுக்குள்ளாவது பேசுவோம்.
கோவிலில் சந்திப்போம்.
இப்போது அது அருகிப் போய்விட்டது.
அதைத்தான் சொன்னேன் மா.
அன்பு கீதாமா, இனிய காலை வணக்கம்.
உண்மைதான். நாம் பேசுவதே இணையம் வழிதானே.
15 வருடங்கள் முன்னால்
இத்தனை நட்புகளும் இல்லாமல் எப்படி இருந்தோம்
என்று யோசித்துப் பார்க்கிறேன்.
நன்றி மா.
அன்பு வெங்கட் இனிய காலை வணக்கம்மா.
என் என்று எழுதும்போது உங்கள் நினைவுதான் வந்தது.
நீங்களும் நா.வெங்கட் தானே. உங்கள் அப்பாவும்
VKV, VNV யா. அட!!! சில அப்பாக்கள் சில சிந்தனைகள்னு எழுதலாம்
போல இருக்கே.
வந்து படித்ததற்கு மிக மிக நன்றி மா.
ஆமாம் என் சிறந்த எழுத்து.
Post a Comment