புதிதாக வந்திருக்கும் பல பூக்கள்
1967 செப்டம்பர் மாதம் பெரியவனுக்குப் பத்துமாதங்கள் ஆகி இருந்தன. சிங்கத்துக்கு வருடாந்திர லீவுக்கான நேரம். பெற்றொர் அப்போது இராமேஸ்வரத்தில் இருந்தார்கள். அங்கே போய் வர இருவரும் முடிவெடுத்தோம். போகவர செலவு கம்பெனி ஏற்கும். சேலத்திலிருந்து திருச்சி. திருச்சியிலிருந்து இராமேஸ்வரம் மெயில். குழந்தைக்கான சாப்பாடு, ஹாமர்மாஸ்டர் ஃப்ளாஸ்க் இரண்டு என்று இரண்டு பெட்டி. அதிகாலையில் விழித்துக் கொண்டு பாம்பன் பாலத்துக்காக் காத்துக் கொண்டிருந்தேன்.
1967 செப்டம்பர் மாதம் பெரியவனுக்குப் பத்துமாதங்கள் ஆகி இருந்தன. சிங்கத்துக்கு வருடாந்திர லீவுக்கான நேரம். பெற்றொர் அப்போது இராமேஸ்வரத்தில் இருந்தார்கள். அங்கே போய் வர இருவரும் முடிவெடுத்தோம். போகவர செலவு கம்பெனி ஏற்கும். சேலத்திலிருந்து திருச்சி. திருச்சியிலிருந்து இராமேஸ்வரம் மெயில். குழந்தைக்கான சாப்பாடு, ஹாமர்மாஸ்டர் ஃப்ளாஸ்க் இரண்டு என்று இரண்டு பெட்டி. அதிகாலையில் விழித்துக் கொண்டு பாம்பன் பாலத்துக்காக் காத்துக் கொண்டிருந்தேன்.
ரயில் நெருங்க நெருங்க மனம் முழுவதும் உற்சாகம். அம்மா வெகு விவரமாக ராமேஸ்வர வாழ்க்கையையும் ,அடிக்கும் காற்று,மழை,புடவை தின்னும் மாடுகள்,
பர்வதவர்த்தினி அம்பாள் என்று ஒவ்வொரு கடிதத்திலும் எழுதி வந்தார்.
ஆடி மாதம் காற்றில் சிலசமயம் வண்டிகள் பாம்பன் பாலத்தில் வரத்தடை உண்டு அதனால் அடுத்த மாதம் வரலாம் என்று யோசனை சொல்லி இருந்தார். அப்போது மதுரை ராமேஸ்வரம் சாலை கிடையாது . யோசித்து கொண்டிருந்தபோதே தங்கச்சி மடம் வந்துவிட்டது. பிறகு பாம்பன் ஸ்டேஷன். அதைத் தாண்டியதும் பாலம்.
கண்ணுக்கெட்டிய வரை கடல். ரயில் பாலத்துக்கு மேல் மெதுவாக ஊறத்தொடங்கியது. இவருக்கோ ஒரே துடிப்பு. குழந்தை இதையெல்லாம் பார்க்க வேண்டும். '' ரேவ்,பாபுவை எடுத்துக் கொண்டு வா. கீழே அலை மோதுகிறது பார். அப்பா ஜீஸஸ் என்ன காத்து. எஞ்சாய் மா''
என்று கதவோரம் நின்று அழைத்துக் கொண்டிருந்தார். எனக்கோ ஜன்னல் வழி பார்த்த கடலே போதும் என்றாகிவிட்டது. பரபரப்பு இருந்தாலும் பயமும் இருந்தது. நீங்கள் முதலில் உள்ளே வாருங்கள் குழந்தை கூப்பிடுகிறான் என்று போய் இழுக்காத குறையாக அழைத்து வந்தேன்.
''ஆஹா. உங்க அம்மாவைப் பாருடா குட்டிப்பையா இதுக்குப் போய் பயப் படுகிறாள். நான் இங்கே இருந்தே கடலில் டைவ் அடிப்பேன் தெரியுமா. ''
என்றதும் எங்கே சொன்னதைச் செய்துவிடுவாரோ என்று குழந்தையை அவரிடம் கொடுத்துவிட்டேன்:))
''நான் பெட்டிகளைச் சரியாக எடுத்து வைக்கிறேன் . நீங்கள் இவனை வைத்துக் கொள்ளுங்கள். அப்பா ஸ்டேஷனுக்கு வந்திருப்பார். நாம் ரெடியாக இருந்தால் இறங்கிவிடலாம். வீட்டுக்குப் போய்க் குளிக்கணும். கோவிலுக்குப் போகணும். அம்மா கிட்டப் பேசணும்'' என்று எதேதோ பேசிசமாளிக்கப் பார்த்தேன். நிமிர்ந்து பார்த்தால் ஆளைக் காணொம்.
என்னடா இந்த மனுஷனோட அவஸ்தையாப் போச்சு என்றபடி கம்பார்ட்மெண்ட் கதவுக்குப் பக்கத்தில் போனால் அப்பாவும் பிள்ளையும் ஹாய் ஹூய் என்று கடலை அழைத்தவண்ணம் இருந்தனர். இவர் கையில் பையன்.அவன் கையில் கரடி பொம்மை.
சரிதான் என்று நானும் அங்கேயே நின்று கொண்டேன். ஒரு வழியாகத் தொங்கு பாலம் கடந்து ராமேஸ்வரம் ஸ்டேஷனும் வந்தது. மதியம் 12 மணி இருக்கும். என் அப்பாவைப் பார்த்ததும் கையில் குழந்தை தாவி விட்டான். கூட வந்த ரங்கனுக்கோ உடம்பெல்லாம் மகிழ்ச்சி. அவனுக்கு என்னிடம் சொல்ல நூறு செய்தி. ராமேஸ்வரத்துக்கு வரும் வி ஐ பி களுக்கெல்லாம் அவன்தான் அஃபிஷியல் கைட்.
உங்களையும் எல்லா இடத்துக்கும் அழைத்துப் போகிறேன் என்று அவன் சொன்னதுதான் தாமதம். இவர் அவனை வளைத்துக் கொண்டார். ''கோவில் அக்கா போகட்டும் .நானும் நீயும் தனுஷ்கோடி போகலாம் சரியா'' என்றார். கிட்டத்தட்ட ஏழு மைல் நடக்கவேண்டும். அப்பா சரின்னு சொன்னால் போகலாம் என்றது அந்தப் பிள்ளை. அப்பா தயங்கினார். சீக்கிரம் காலையில் போகணும். கொஞ்ச நேரமானாலும் டைட்ஸ்( tides) வந்து வழி மூடி விடும். பிறகு தண்ணீர் வடிந்தபிறகே வரமுடியும் என்றார்.#இதுஒருமீள்பதிவு.
2021 April 2 nd.
+++++++++++++++++++++++
சமீப காலமாக ரயில் பயணங்களைப்
பார்த்து வருகிறேன். எத்தனை விதமான ரயில்கள்.
எத்தனை வேகம்.
நடுவில் வரும் ஸ்டேஷன்கள்.
அதில் கேட்கும் 'காப்பி,டீ சாய் கோஷங்கள்.
ஜன்னலருகே பயமில்லாமல் உட்கார்ந்து வெளியே உடன் வரும் நிலாவோடு
பேசிய பாடிய நாட்கள். ஒரு suspended life.
கிளம்பும்போது ஒரு உற்சாகம்.
முடியும் போது ஒரு எதிர்பார்ப்பு.
நல்ல பயணங்களை மட்டும் நினைவில் இருத்தும்போது
கடவுள் என்னிடம் கருணையோடு இருந்த நாட்களுக்கு
நன்றி சொல்கிறேன். இது 55 வருடங்களுக்கு
முன் மேற்கொண்ட கனவுப் பயணங்கள்
வகையைச் சேர்ந்தது.
பதிவில் இருந்த பிழையைச் சுட்டிக்காட்டின
தேவகோட்டைஜிக்கு நன்றி.
தங்கச்சிமடம் என்ற ஊர், பாம்பன் பாலம் தாண்டிய பிறகே
வரும். அந்த map இங்கே கொடுத்திருக்கிறேன்.
நன்றி மா.
17 comments:
பழைய பதிவுக்குப் பதுசாகச் சேர்த்தது என் ரயில் அனுபவமும் புகை வண்டியின் குரலும்.!
பழைய பதிவில் கொஞ்சம் புது வரிகள்...! பழைய பதிவு அப்பிடித்த நினைவு இருக்கிறது. தனுஷ்கோடியில் ஒரு வீர சாகசமும் உண்டு என்று நினைவு!
மலரும் நினைவுகளை நினைவு கூர்ந்தது அருமை அம்மா.
சிறிய பிழை மண்டபம் அல்லது மண்டபம் கேம்ப் என்பதற்கு பதில் தங்கச்சிமடம் என்று எழுதி விட்டீர்கள்.
த.மடம் இராமேஸ்வரத்திற்கும், பாம்பனுக்கு இடையில் இருக்கிறது.
தனுஷ்கோடியில் சிங்கம் செய்த சாகசச் செயல் அடுத்த பதிவில் வருமா? இதுவும் ஏற்கெனவே படிச்சிருக்கேன். படிக்கப் படிக்கச் சுவை தான்.
அன்பின் ஸ்ரீராம்,
ஆமாம். பழைய பதிவு 7 வருடப் பழசு:)
ரயில்களைப் பதிவு செய்து வருகிறேன்.
அதுவும் புகைவிடும் கரி எஞ்சின்களை
மிகவும் பிடிக்கும்.மீட்டர் கேஜ் பிடிக்கும்.
அதுதான் எழுத்துக்களையும் காணொளிகளையும்
ஒன்று சேர்த்துப் பதிவிட்டேன் மா. நன்றி.
அன்பு தேவ கோட்டைஜி,
மிகச்சரி.பாலத்துக்கு அப்புறம் தங்கச்சி மடம் வரும் இல்லையா.?
இந்தப் பதிவை எழுதும்போது
பெயர்கள் நினைவிருந்தது. ஊர் இருந்த இடம் நினைவில்லை.
இப்பொழுதாவது திருத்தி இருக்க வேண்டும்.
அந்த நாட்களில் ராமேஸ்வரத்திலேயே
ஒரு பதிவர் இருந்தார். பெயர் மறந்துவிட்டது.
மிக மிக நன்றி மா. திருத்த முடியுமா
என்று பார்க்கிறேன்.நலமுடன் இருங்கள்.
அன்பு கீதாமா,
சுவைதான். இது ரயிலுக்காகப் பதிந்தது. சிங்கத்துக்காக
எழுதியதைப் பிறிதொருமுறை
பதிகிறேன்.
பாவம் .நீங்கள் எல்லோரும் படிக்கிறீர்கள்
என்பதற்காக
உங்களைப் படுத்தக் கூடாது. நன்றி மா.
பதிவை மிகவும் ரசித்தேன்... இளம் மனைவியின் பதட்டத்தை (எங்க குழந்தையோடு இரயில் படிகளில் நின்றுகொண்டுவிடுவாரோ என்று) அப்படியே படிப்பவர்களுக்குக் கடத்தியிருக்கிறீர்கள்.
எனக்குமே இருபுறம் கடல், நடுவே பாலம் என்று இருக்கும்போது பயம் இருக்கத்தான் செய்யும்.
ஆமாம் மா. முரளி.
சுற்றிச் சுற்றிக் காற்று உய் உய் என்று
சத்தம் போட ரயில் பாலத்தின் மேல்
ஊர்ந்தது. இவரானால் கம்பார்ட்மெண்ட் கதவைத் திறந்து
கொண்டு நிற்கிறார். வயிற்றைக் கலக்காமல்
என்ன செய்யும்.:(
நிற்க வேண்டாம் உட்கார்ந்து கொள்ளலாம்
என்று உட்கார்ந்து விட்டேன்.
சிங்கத்துடன் த்ரில் விஷயங்களுக்குக்
குறையே இல்லை.:)
நன்றி மா.
மலரும் நினைவுகள் மிக அருமை.
தாய் வீட்டுக்கு செல்லும் ஆர்வம், புதுஊரை பார்க்கும் ஆர்வம். கணவரின் குறும்புதனத்தை சொன்ன விதம் அனைத்தையும் ரசித்தேன் அக்கா.
ரயில் பயணங்கள் தந்த மகிழ்ச்சியை விமான பயணங்கள் தரவில்லை.
அதுவும் சிறு வயது ரயில் பயணம், அக்கம் பக்கம் அமர்ந்து இருப்பவர்கள் பேச்சு , பயணத்தில் உள்ளே விற்க வருபவர்கள், பாடி காசு கேட்பவர்கள் , விற்பவர்கள் குரல் என்று கலவையான குரல்களை மறக்க முடியாது.
அன்பு கோமதிமா,
வாழ்க வளமுடன் அன்பு தங்கச்சி.
அந்த அனுபவங்கள் நினைவில் தங்கி இருப்பது
தான் இப்பொழுது மகிழ்வைத் தருகிறது.
இந்தக் குறும்பு எல்லாம் நாலைந்து வருடங்கள்
தான். மகள் பிறந்து ,இரண்டு வருடங்களில்
சின்னவன் பிறந்து வாழ்க்கை மிக மிக
பிசியாகிவிட்டது.
பேசக்கூட நேரம் இல்லாமல் போன காலங்கள்.:)
ஆமாம் அம்மா. ரயில் பயணங்களின் இனிமை
விமானத்தில் ஏது. இடுப்பு வலிதான் மிச்சம்!!
நடு நடுவில் விமானம் குதிப்பது வேறு:(
நமக்குக் கிடைத்த ரயில் பயணங்கள் இனியவை.
தூளி பழகி இருந்த மகனை,
ரயிலில் செல்லும்போது
சேலம் சென்னைப் பயணத்தில் தூளி கட்டித் தூங்க வைத்ததும் நினைவில்.
நன்றி மா.
வணக்கம் சகோதரி
இனிமையான மலரும் நினைவுகளை பகிர்ந்துள்ளீர்கள். இருபுறமும் கடல் நடுவில் பயணம் என்றால் சற்று பயத்தைத்தானே உண்டாக்கும். இள வயது என்பதினால்,கூடவே சுவாரஸ்யமும் சேர்ந்து இருந்திருக்கும். நானும் இராமேஸ்வரத்திற்கு அந்த வழியில் இன்னமும் பயணம் மேற்கொள்ளவில்லை. ரயில் விட்ட வுடன் உறவினர்கள் அந்த திரில் அனுபவங்களை சொல்லி கேள்விப்பட்டுள்ளேன். இன்று உங்கள் காணொளி மூலம் கண்டு மகிழ்ந்தேன். அழகான பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இனிய நினைவுகள். பயணங்கள் என்றாலே மகிழ்ச்சியும் கூடவே வந்து விடுகிறது - எனக்கு! :)
அன்பு கமலாமா,
அப்போது இந்தப் பாலம் பற்றிய முழுவிவரம் தெரியாது.
அதனால் பயமும் அதிகம்.
சுற்றி அடிக்கும் காற்றின் ஊ உஊ ஸத்தமும்:)
இப்பொழுது எல்லாம் கட்டுக்குள் இருக்கும் என்றே நினைக்கிறேன்.
உங்களுக்கும் அங்கே செல்லும் வாய்ப்பு கிடைக்கா வேண்டும். சாலைப்
பயணத்தைவிட ரயிலில் செல்வது
இன்னும் இனிமை.
அன்பு வாழ்த்துகளும் நன்றிகளும்.
அன்பு வெங்கட் ,இனிய மாலை வணக்கம்.
நீங்கள் செல்லாத பயணங்களா.
வந்து படித்துக் கருத்து சொன்னதற்கு மிக நன்றி மா,
Post a Comment