Blog Archive

Wednesday, April 28, 2021

ஆராய்ந்து மணம் செய்து.....

வல்லிசிம்ஹன்


 காலம் தோறும் மாறி வருவது கல்யாணக் காட்சிகள்.
தேடாமல் வந்த,,,அல்லது, தேடித் தேடி கிடைத்த
மணமகன்கள்,
காதலித்துக் கைபிடித்த மணமகன்
என்று வரிசையாக வருபவர்களில் 
இப்போது கார்ப்பொரேட் திருமணங்களைப் 
பார்க்கிறேன்.

நான் அந்தத் திருமணங்கள், அதாவது ஒரு ஸ்தாபனத்துக்கும்
இன்னோரு ஸ்தாபனத்துக்கும் நடக்கு சம்பந்தம் 
பற்றிப் பேசவில்லை.:)

இது உயர் மட்டங்களில் வேலை பார்க்கும் பெண்கள்
தங்களுக்குத் தேர்ந்தெடுப்பட்ட வரனை டிடெக்டிவ் ஏஜன்சி வழியே

அவர்களை முழுவதும் விசாரணைக்கு உள்ளாக்குவது.
சமீபத்தில் தெரிய வந்த வினோத செய்தி.
நம் பழைய காலங்களில் நடக்காதது இல்லை.

இன்னார் குடும்பம் இப்படிப்பட்டது,
அந்தப் பையன் நல்லவன் அல்லது வேறு மாதிரி...
பழக்க வழக்கங்கள் இப்படி, மாமியார்,மாமனார்,
சொத்து, பழக்க வழக்கங்கள் எல்லாம்
விசாரித்தே பெண்வீட்டுக்காரர்கள் சம்மதித்த காலம் உண்டு.

திருமணத் தரகர்கள் என்பது பழைய திரைப்படங்களிலும்
கதைகளிலும் பார்த்துப் படித்த நினைவு. பெரும்பாலும் கேலிக்குரியவர்களாகச்
சித்தரிக்கப் பட்டவர்கள்.

சுகா அவர்கள் நாவலில் வரும் பாத்திரம் உண்மையில்
நல்லபடியாகத் திருமணம் நடத்தி வைப்பவர்.



   10 வருடங்களுக்கு முன் நடக்க   இருந்த ஒரு திருமணத்துக்கு வருவோம்.
 மணமகள் அப்போது செழிப்பாக நடந்து கொண்டிருந்த ஒரு கணினி 
அலுவலகத்தில் மனித மேம்பாட்டுத் துறையில் அதிகாரி.
அப்போதே 30 வயதான பெண்.

அவளுக்குத் தன் கம்பெனிக்கு வேலைக்கு வருபவர்கள் 
முழுமையாக விசாரித்து தகுதியானவர்களை
நேர்காணல் செய்து 
வேலைக்குச் சேர்த்துக் கொள்ளும் நடைமுறை இருந்தது.
நல்ல பெண் தான் . எங்கள் வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளி இருந்த

அபார்ட்மெண்டில் இருந்த குடும்பத்தின் ஒரே வாரிசு.
உடை நடை பாவனை, கார் ஓட்டும் திறன் எல்லாம்
அசத்துகிற மாதிரி இருக்கும்.
பெயர் காயத்ரி.
அவளுக்குப் பழக்கப் பட்ட ஆண்களை எல்லாம்

சரியாக எடை போட்டு வைத்திருப்பதாகச் சொல்வாள்.
''ஒருவரையுமே உனக்குப் பிடிக்க வில்லையா.

பழகின நல்லவனை  மணம் முடிக்கலாமே ''
என்பேன் நான். லேசில் மசிய மாட்டாள்.
அவள் பெற்றோர் கடைசியாக ஒரு 35 வயதுப் பையனை
சல்லடை போட்டுத் தேர்ந்தெடுத்து
அவன் பெற்றோரிடம் வெண்ணெயாகப் பேசி
பெண் படத்தை அனுப்பி
சம்மதிக்க வைத்து விட்டார்கள்.

காயத்ரி இதைக் கேள்விப்பட்டதும் முதல் வேலையாக
அவனை ஆராய்ச்சி செய்ய மூவரைத் தேர்ந்தெடுத்தாள்.
அந்தப் பையன் இருந்த ஊர் தில்லி.
பெரிய ஆராய்ச்சி கூடம் ஒன்றில் நல்ல வேலையில் இருந்தான்.

இவள் தன் சினேகிதர்கள் மூலமாக அவனை நாலு விதமாக
விசாரித்தாள். பிறப்பு, வளர்ப்பு, படிப்பு, நடத்தை,
பழக்க வழக்கங்கள்  இதெல்லாம் 
செய்ய வேண்டியவைதான்.
அதற்கப்புறம் அவள் செய்ததுதான் விபரீதம்.
தன் இன்னோரு மன நல சம்பந்தப்பட்ட  துறையில் இருக்கும்
தோழனிடம் சொல்லி அவனது 
மன நலம் எப்படி என்று விசாரிக்க,
அவனோடு பேச ஏற்பாடு செய்து,அதை ரெக்கார்ட் செய்து
இன்னோரு வைத்தியரிடம் அதை போட்டுக் காட்டி
பிறகுதான் 
அந்தப் பையன் தன்னைப் பெண் பார்க்க வர சம்மதித்தாள்.!!!!!

அந்தப் பையன் ,அவனது பெற்றோர்
எல்லோரும் வந்த நாள் நானும் அவள் அம்மாவுக்கு 
உதவியாகப் போயிருந்தேன்.

உயர்தர  சுடிதார் போட்டுக் கொண்டு 
தனியாக இருந்த நாற்காளியில் கால் மேல் கால்
போட்டு அமர்ந்திருந்தாள் காயத்ரி.

நானோ ஒரு பழங்காலம்.  அவளிடம் 
ஏன் இப்படி முன்னாடியே வந்து உட்கார்ந்து விட்டே?
புடவை கட்டிக்கலையா ''என்று விசாரித்த போது
''நாம் தான் மேல்கை என்று காட்டிக் கொள்ள வேண்டும்.
இந்தப் புடவை கட்டிக் கொண்டு அடக்கம்
காண்பிப்பது எல்லாம்......
இந்த மாப்பிள்ளை பந்தாவெல்லாம் என்னிடம் செல்லாது''
என்றாள்.
நீயென்ன  அவர்களோடு சண்டை போடப் 
போறீயா ,கல்யாணம் செய்து குடித்தனம்
செய்யப் போகிறியா?''
என்று நான் விலகி விட்டேன்.
பெண்பார்க்க வந்தவர்களின் திகைப்பு எனக்குப்
புரிந்தது. மிகச் சாதாரணக் குடும்பம்.
இந்தப் பையன் தானாக முன்னுக்கு வந்தவன்.
தாய் தந்தை கொஞ்சம் வசதி என்று இருப்பது
அவன் தலையெடுத்த பின்னால் தான்.

 சிலதினங்களுக்குப் பிறகு காயத்ரியின் 
அம்மாவை பாபா கோயிலில் வைத்துப் பார்த்தேன்.
அழாத குறையாக, திருமணம் நின்று போனதைச் சொன்னார்.

என்னவென்று விசாரித்த போது,
 மாப்பிள்ளைப் பையனும்,பெற்றோரும்
திருமணத்துக்கு ஒத்துக் கொண்டு நாள் குறித்து
தட்டை மாற்றிக் கொண்டு தில்லி 
சென்றதாகவும்,
அடுத்த இரண்டு நாட்களிலியே  , அந்தப் பையனின்
தந்தை, தங்களுக்கு இந்த சம்பந்தத்தில்
இஷ்டம் இல்லை என்று சொல்லி விட்டதாகவும்.
வருத்தத்துடன் சொன்னார்.
ஏன் மனதை மாற்றிக் கொண்டார்கள் என்று கேட்டேன்.

அந்தப் பையனின் தோழன், இந்தப் பெண் இவனது 
ஃபோன் உரையாடலை மருத்துவரிடம்
விசாரித்தது தெரிய வந்திருக்கிறது.
அத்தனை கோபமாம் அந்தப் பையனுக்கு,
முதலில் இந்தப் பெண்ணுக்கு மன நலம் 
எப்படி என்று எனக்குத் தெரிஞ்சாகணும்.
அவள் இதற்கு சம்மதிப்பாளா என்று கேட்டு
தனக்கு இஷடம் இல்லை என்று விட்டானாம்:(

இப்போது அந்த காயத்ரிக்கும் மணமாகிவிட்டது.
எப்படிக் குடித்தனம் நடத்துகிறாளோ
போய்ப் பார்த்தால் தான் தெரியும். சாமர்த்தியசாலி.
நன்றாகத்தான் இருப்பாள்.!!!



22 comments:

ஸ்ரீராம். said...

'கணக்குப் போட்டுக் காதல் வந்ததது' என்று ஒரு பாட்டு உண்டு.  அதுபோல கணக்குப் போட்டு விசாரித்து மாப்பிள்ளை பார்த்தால் சமயங்களில் இப்படியும் ஆகலாம்.  எதையுமே ரொம்ப ஓவராக செய்து விடக்கூடாது.

ஸ்ரீராம். said...

காயத்ரிக்குத் திருமணமாகி விட்டது சரி, அந்தப் பையனுக்கு?!!

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பதிவு அருமை. ஆம். முன்பெல்லாம் தெரிந்தவர்களாக இருந்தாலும்,எப்படியும் பல விதத்தில் விசாரித்த பின்தான் பெற்றோர்கள் பையனையும், பொண்ணையும் கொடுப்பார்கள்.அதற்கு மேல் விதி வசத்தில் நடப்பது "அவன்" கையில். ஆனாலும் விசாரிப்பது நம் கடமையாக இருந்தது.

/திருமணத் தரகர்கள் என்பது பழைய திரைப்படங்களிலும்
கதைகளிலும் பார்த்துப் படித்த நினைவு. பெரும்பாலும் கேலிக்குரியவர்களாகச்
சித்தரிக்கப் பட்டவர்கள்./

உண்மைதான்.. நானும் நிறைய படங்களில் பார்த்துள்ளேன்.

தாங்கள் கூறிய பெண் நிறைய விசாரித்து விட்டார் போலும். இந்த விசாரிப்பின் முடிவில் பையன்கள், பெண்கள் ஒத்து வராமல் போவது இயல்புதான். சிலரின் முகங்கள் விசாரிப்புகளையும் மீறி, திருமணத்திற்கு பிறகுதான் தெரிய ஆரம்பிக்கும். அதைத்தான் விதி என குறிப்பிட்டேன்

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயக்கப்படும் என்பது பழமொழி. இன்னாருக்கு இன்னாரென்று "அவன்" சொர்க்கத்தில் இருந்தபடி இருந்து நிறைவேற்றி வைக்கிறான்.. அதைத்தான் அப்படி கூறியிருப்பார்களோ என்னவோ... நீங்கள் கூறிய அந்தப் பெண்ணும் நல்லபடியாக திருமணம் செய்து கொண்டு நலமாக இருந்திருப்பார்./இருப்பார். நல்லதையே நாமும் நினைக்கலாம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Thulasidharan V Thillaiakathu said...

கொஞ்சம் ஓவர்தான்...

எதிர்பார்த்தேன் அவள் செய்வது பையனுக்குத் தெரிந்துவிட்டால் கல்யாணம் நடக்குமோ என்று.

இப்போது பெண் தேடும் படலம் ரொம்பவே கஷ்டமாகத்தான் இருக்கிறது. என்று பையனைப் பெற்றவர்கள் சொல்வது நிறையவே தெரிகிறது. வீடு இருக்க வேண்டும், லோன் இருக்கக் கூடாது என்று

ஆனால் மன நலத்திற்கு மாத்திரை ட்ரீட்மென்ட் எடுப்பதை/எடுத்த விவரம் சொல்லாமலும் செய்யும் திருமணங்கள் இருக்கிறதே அம்மா.

அதுவும் எங்கேயோ கிராமத்தில் இருக்கும் பெண்ணின் அல்லது ஆணின் அப்பாவிப் பெற்றோருக்கு எதுவும் தெரியாமல் என்னவோ தலைவிதி என்று செல்லும் திருமணங்களும் ...

இதில் வேறு 1000 பொய் சொல்லி திருமணம் என்றும்...

ஆனால் இப்போது டெக்னாலஜி வளர்ந்திருக்கும் வேளையில் அப்படி நடப்பது அபூர்வமாகத்தான் இருக்கும்...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

நீங்கள் சொல்லியிருப்பது போல் டிடெக்க்டிவ் மூலம் கூட ஆராய்கிறார்கள் என்பதும் நான் கேள்விப்பட்ட்துண்டு...

கீதா

Geetha Sambasivam said...

ஆச்சரியமான செய்தி! இப்படியும் உண்டா? நல்லவேளையாக அவளுக்குப் பொருந்தும் பிள்ளையைத் திருமணம் செய்து கொண்டு போனாளே! இந்தப் பிள்ளை பிழைத்தான்!

Bhanumathy V said...

ஏ அப்பா! இப்போதெல்லாம் திருமணத்தை நிறுத்துவதற்கும், விவாகரத்திற்கும் பெண்கள் கூறும் காரணங்கள் ஆச்சர்யமாக இருக்கின்றன.எங்களுக்கு தெரிந்த ஒரு இடத்தில் நிச்சயதார்த்தத்திற்கு உடை வாங்கச் சென்ற பொழுது, அவள் சொன்ன ஷர்டை அவன் வாங்கிக் கொள்ளவில்லை என்பதற்காக அந்தப் பெண் திருமணத்தை நிறுத்தி விட்டாள். 

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
அவனுக்கும் ஆகி இருக்கலாம். உலகத்தில்
பெண்களுக்குக் குறைவில்லை. நம் கண்ணில் படத்தான்
நாழியாகிறது இல்லையாமா.

சமீபத்தில் தெரிந்தவருடைய மகன் வாட்ஸாப்பில் சொன்னான்
20 வருஷமாகத் தனியாத்தான் இருக்கேன் என்று.
அவனுக்கு மணமாகி இருபது வருடங்கள்
ஆகின்றன. மனசு மிக மிக வருத்தப் பட்டது.
அதுவும் ஆராய்ந்து நடந்த திருமணம் தான். கடவுள் எல்லோருக்கும் துணை
இருக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

எதையுமே ரொம்ப ஓவராக செய்து விடக்கூடாது./////
இதைத்தான் சொல்ல வந்தேன்.
நூற்று நூற்று பார்த்து நல்லதை விட்டு விட்டு, கிடைத்ததைப்
பிடித்துக் கொண்டாள்.
சந்தோஷமாக இருந்தால் சரி ஸ்ரீராம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
பொன்னான வார்த்தைகள். அந்த 'இன்னார்க்கு இன்னார்''
தான் எப்பவும் நடக்கிறது. தலையெழுத்தை மாற்ற முடியவில்லை.

அந்தப் பெண் விசாரித்ததில் தப்பில்லை.
தில்லியில் பசங்க எல்லோரும்
சரியான பாதையில் நடப்பதில்லை
என்று யாரோ சொல்லி விட்டார்கள்.

அதற்காகப் போருக்குப் புறப்படுவேன் என்று திட்டம்
போட்டால்
அந்தத் திருமணம் எப்படி சரியாக இருக்கும்.?
அந்த attitude தான் எனக்கு விளங்கவில்லை.

திருமணம், மனைவி,கணவன் அமைவது பல சமயங்களில்
தவறி விடுகிறது....இது கண்கூடப் பார்க்கிறோம்.
என்ன செய்வது:(
நம்பிக்கையோடு மணவாழ்க்கை ஆரம்பிக்க வேண்டும்.
இது ஒரு பெரிய விவாதத்துக்கு உரிய விஷயம்.

சில சமயம் வருத்தம் தான் மிச்சம்.
காயத்ரியின் அம்மா புத்திசாலி.
நான் சென்னை சென்று நாட்களானதால் விசாரிக்கவில்லை.
நன்றாகவே இருப்பாள் அவள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் சின்ன கீதாமா,

அச்சோ உண்மைதான் ராஜா. இப்போதிருக்கும் டெக்னாலாஜி அப்போ
இருந்திருந்தால் பல திருமணங்கள்
நடந்திருக்காது.

நான் பெண்ணின் கதையைச் சொன்னேன்.
பையன் தரப்பில் ஏமாற்றினவர்களும்
இதில் அடங்கும்.
எதுவுமே லகுவில் வருகிறது என்றால்
யோசிக்க வேண்டும் என்பதை இன்னோரு திருமணம் நடந்த
பிறகு யோசித்தோம்.
அறியாத பெண்ணின் வாழ்வு சிதைந்தது.

இந்த காயத்ரியின் குணத்துக்கும் அந்த பெண்ணின் குணத்துக்கும்
சம்பந்தமே இல்லை. ஏமாற்றப் பட்டாள்.
அத்துடன் முடிந்தது.

வல்லிசிம்ஹன் said...

எனக்கு இன்னும் இந்த விஷயத்தில்
மனக் கிலேசம் ஜாஸ்தி.

மஹாபுத்திசால் யாக் இருக்கும் பையன், திருமணத்தில்
ஏன் ஈடுபடுவதில் இத்தனை கோளாறுகள் செய்கிறான்.
பெண் பாவம் என்று சொல்கிறார்களே....
அதற்கு அவன் பெற்றோர்கள் பதில் சொல்ல வேண்டாமா!!!

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
இது நடந்த கதைதான்.
இன்னும் அவள் தன் இஷடப்படி இருக்கிறாள்.
அவள் கணவர் தன் இஷ்டப்படி இருக்கிறார்.

என்ன செய்வது. பெற்றவர்கள் எல்லா நாட்களிலும்
பிரார்த்திக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.

ஸ்ரீராம். said...

சின்ன கீதாம்மா!!!!

வல்லிசிம்ஹன் said...

அன்பின் பானுமா,

நீங்கள் சொல்வதைப் போல
திருமணங்கள் நின்றுதான் போகின்றன.

கட்டாயத்தின் பேரில் திருமணங்கள் நடக்க வேண்டாம்
என்கிற வரையில் ஒத்துக் கொள்ளலாம். ஆனால்
ஒரு சின்ன விஷயத்துக்கு இப்படி ஒதுங்கி
விடுவார்களா.
எங்கள் காலத்தில் ,பெண்பார்த்ததோடு நம் ஆவல் பூட்டி வைக்கப் படும்.
இப்போது வாட்ஸாப் காதல், நெருக்கம்,அடிக்கடி சந்திப்பு என்று
திருமணத்தின் புதுமை நீர்த்திவிட்டது.
விட்டுக் கொடுப்பது இரு பக்கமும் இல்லையோ"?
தலைவலிதான் மிச்சம். எல்லாம் மோதிக் கொண்டு தெளியட்டும்.

Angel said...

ஹயோ !!! நல்லவேளை அந்த திருமணம் அவர்களாகவே நிறுத்திட்டாங்க .இல்லைன்னா பின்னாளில் தெரிஞ்சு கஷ்டப்படறதைவிட இது மேல் .முன்பெல்லாம் மாப்பிளை பற்றி பெண் வீட்டார் அவருடன் வேலை செய்பவருடன் விசாரிப்பாங்க .எங்கப்பா கிட்ட  கூட வேலை செய்த் மற்றொரு டாக்டர் ஒருவரைப்பற்றி விசாரித்து பிறகு  அவர் திருமணம் முடிந்து சந்தோஷமா இருந்தது .அதுவும் வீடு தேடி வந்து விசாரித்ததில் எங்களுக்கு ஆச்சர்யம் .இப்படி விசாரிப்பதில் தவறில்லை டிடெக்டிவ் வைத்ததுதான் கொஞ்சம் ஓவர் .மன நலம் பற்றி அந்த பெண்ணே அவருடன் பேசி புரிந்துகொள்ள முயன்றிருக்கலாம் அவரது படிப்பும் அறிவும் நிச்சயம் நல்ல தீர்வை கொடுத்திருக்கும் .என்ன சொல்ல எல்லாம் இறைவன் போட்ட முடிச்சு 

கோமதி அரசு said...

//காலம் தோறும் மாறி வருவது கல்யாணக் காட்சிகள்.
தேடாமல் வந்த,,,அல்லது, தேடித் தேடி கிடைத்த
மணமகன்கள்,//

காலம் மாறுது, கருத்து மாறுது.

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயம் செய்யபடுகிறது என்றும், விதிகாரி யாரோ! என்று எல்லாம் முன்பு சொல்வார்கள்.

இப்போது பையன், பெண் விருப்பம் என்றாகி விட்டது.

முன்பு ருதுவாகும் முன் திருமணம் செய்து வைத்து விடுவார்கள் அதுதான் சிறந்தது என்று என் பாட்டி சொல்வார். அப்புறம் நம்ம காலம் 17, 18 என்று இருந்தது. நம் பெண்களுக்கு 23 என்றானது இப்போது சொல்வதற்கு இல்லை . வயது அது பாட்டுக்கு கூடி கொண்டே போகிறது.


விருப்பு , வெறுப்புகளும், கற்பனைகளும் மாறி கொண்டே இருக்கிறது.

காயத்ரிக்கு திருமணம் ஆனது மகிழ்ச்சி.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம்,
எத்தனை நாளைக்கு கீ ர,கீ ர என்று அழைத்துக் கொண்டிருப்பது? இப்போதைக்கு நமக்குத் தெரிந்த அன்யோன்யம் இவர்கள் இருவர்தான். அதுதான் சின்ன கீதா என்றேன்:_)

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஏஞ்சல்,
ஆமாம் நல்லவேளையாகத் திருமணத்துக்கு முன்பே
புரிந்து கொண்டார்கள்.
இல்லாவிட்டால் இரண்டு குடும்பமும்
உறவுகளும் கெட்டுப் போயிருக்கும்.

விசாரணை இல்லாமல் திருமணம் கிடையாது.
அந்தப் பத்து வருடங்களுக்கு முன்பே
மணமகன் ,மணமகள் எல்லோரும்
பழகிக் கொள்ளத்தான் செய்தார்கள். திருமண முதல் நாள் வரை கூட
சேர்ந்து வெளியே போய் விட்டு வந்தவர்களைத் தெரியும்.
இந்தப் பெண்ணும் அதுபோலச் செய்திருக்கலாம்.

வேலை செய்யுமிடத்தில் செய்வது போலவே
இத மாப்பிள்ளைப் பையனையும் தீர போலீஸ்
விசாரணை நடத்தி விட்டாள்.

மனமொத்த கணவனோடு இருப்பாள் என்று நம்புகிறேன்.
நன்றி ஏஞ்சல்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி மா, வாழ்க வளமுடன்.
எத்தனையோ விசாரணை செய்து , குடும்பத்துக்குள்
உறவினருக்குள் செய்த திருமணங்களே
முறிந்து போகின்றன.

குழந்தைகளுக்காக சில திருமணங்கள் நீடிக்கின்றன.

புரியத்தான் இல்லை.
காலம், மனித மனம் எல்லாமே மாறியாச்சு.
இனிமேல் வரப்போகும் குழந்தைகள் மனமும் மணமும் எப்படி இருக்குமோ
தெரியவில்லை.
நலமே நினைப்போம். நன்றி மா.

நெல்லைத்தமிழன் said...

விசாரிப்பதில் தவறு இல்லைம்மா... ஆனால் அதுவே அப்சஷனாக மாறினால்தான் கஷ்டம். இந்தமாதிரி பெண் பிள்ளைகளோடு வாழ்க்கை நடத்த முடியாது. சினிமா பீச் என்று வேணும்னா சுற்றலாம்.

அடிப்படை நம்பிக்கை பரஸ்பர மரியாதை இல்லாமல் யாருக்காகத் திருமணம் செய்யணும்?

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
அதைத்தான் நானும் நினைத்தேன்.
இவ்வளவு காபந்து செய்ய வேண்டுமா.
விசாரிக்க வேண்டியது அந்தப் பிள்ளைக்கு கெட்ட பழக்கம் ஒன்றும் இல்லையா.
அவன் குடும்பம் நல்லவர்களா
என்று கேட்பதில் தவறில்லை.
அப்படி சந்தேகம் இருந்தாலும் அதில் பிரவேசிக்கவே
வேண்டாமே.
இது போல சைக்காலஜிஸ்ட்டைக் கேள்வி கேட்கச் சொல்லி
அந்தப் பிள்ளையும் ,இந்தப் பெண்ணின்
சகோதரன் விசாரிக்கிறான்
போல இருக்கிறதுன்னு பதில்
சொல்லி அப்புறம் தெரிய வந்து
இதெல்லாம் என்ன அபத்தம் என்று அப்பவே தோன்றியது.

வாழ்வெல்லாம் சந்தேகித்துக் கொண்டே இருந்தால்
வாழ்வது எப்போது.

உங்கள் புரிதலுக்கு நன்றி மா.