''எங்கள் ப்ளாக்'' வியாழன் பதிவில்
காதலும் காமமும் பற்றிய அரட்டை சுவாரஸ்யம்.
எப்பொழுதுமே முடிவு பெறாத பொருள்.
என்றோ கேட்ட கதை. உண்மையில் நடந்த சம்பவம்
ஏதோ ஜெயகாந்தன் கதை போல்
மனதில் நினைவு வந்தது.
கதைக்குள் போகலாம்.
திருமணமாகி மூன்று வருடங்களில் இரண்டு குழந்தைகள்
பெற்ற அலுப்பில் கமலா.
எப்பொழுதும் துறு துறுவென்றிருக்கும்
அவள் கணவன் ஸ்ரீனிவாசன். வாழ்க்கையில் அலுப்பே சொல்லாத உற்சாகத்துடன்
வளைய வருபவன்.
பெற்றோர் பார்த்து முடித்த திருமணம்.
கமலாவை அவளது பதினைந்து வயதிலேயே பார்த்து
மனதில் முடிபோட்டுக் கொண்ட போது
ஸ்ரீனிவாசனுக்கு வயது 20.
இருவர் வீட்டுக்கும் இடையில் மரியாதை சமம் என்றாலும்
அந்தஸ்தில் நிறைய வேறுபாடு.
ஆசாரத்திலும் தான். எப்படியோ சம்மதிக்க வைத்து திருமணம்
செய்து கொண்டு விட்டான் ஸ்ரீனிவாசன்.
பெரிய குடும்பத்திலிருந்து பிரிந்து இருவரும்
பெங்களூருவில் தனிக்குடித்தனம்
ஆரம்பித்தனர்.
கமலாவுக்கு ஐம்பது வயது ஆகும் போது பெண்கள், மகன்
எல்லோரும் திருமணம் முடித்து
வீட்டை விட்டுக் கிளம்பியதும், ஸ்ரீனிவாசனுக்குப்
பால்யம் திரும்பியது போலப்
புத்துணர்ச்சியுடன்
மனைவியுடன் இழைவதைப் பார்த்து
கமலாவுக்கு சந்தோஷம் சலிப்பு இரண்டும்
இருந்தன,.
விட்டுக் கொடுக்க முடியாமல் ஈடு கொடுத்தாள்.
அவளுக்கும் 50 வயது அதற்கு உண்டான
ஹார்மோன் மாற்றங்களில்
சங்கடங்களைத் தோற்றுவித்துக் கொண்டிருந்தது,.
இது போல ஒரு இரவில் மிக உற்சாகமான
மன நிலையில் ,மனைவி மேல் இருந்த
ஆழ் நம்பிக்கையில் தன் இளவயதில்
நடந்ததாக ஒரு நிகழ்ச்சியை விவரிக்க ஆரம்பித்தான்.
கணவனின் சொல்வளத்தில் கமலாவுக்கு அபரிமிதமான காதல்.
சொன்ன செய்தி ரசிக்கும்படியாக இல்லை அவளுக்கு.
''உனக்கு நம் பண்ணையில் வேலை பார்த்த
செங்கமலம் நினைவிருக்கிறதா?" என்று கேட்டான்.
''ஆமாம் ,இப்பவும் கூட அங்கே இருக்கிறாளே''
என்ன அழகா இருப்பா இல்ல? ''
கணவனை ஆழப் பார்த்தாள் கமலா. அவளது
பார்வையைக் கண்டதும் ஸ்ரீனிவாசனுக்கு
மனதில் உற்சாகம்.
இவளை எப்படியாவது பொறாமை கொள்ள வைக்க வேண்டும்
என்று கதை சொல்வது போல,
நீ முதல் பையன் பிறக்க பிறந்தகம் போன போது
அவள் எனக்கு நல்ல விளையாட்டு பொம்மையாகக்
கிடைத்தாள்'' என்றபடி அவளை ஏறிட்டான்.
அவன் எதிர்பார்த்தபடி அங்கே அருவருப்பும்,அசூயையும்
ஒன்று சேரக் கிளம்பின.ஆனால்
அவன் நினைத்துப் பார்க்காத வெறுப்பும் அங்கே
வந்தது.
''இது நிஜமா?"
அவன் வெறிப்பதைப் பார்த்துத் தனக்குள்
முடிவு செய்த கமலா''போதும்'' என்று நினைக்கிறேன்
என்றபடி அடுத்த அறைக்குச் சென்று விட்டாள்.
சட்டென்று சுதாகரித்துக் கொண்ட ஸ்ரீனிவாசன் விரைந்து
அடுத்த அறைக் கதவைத் தட்ட
''காலையில் பார்க்கலாம்'' என்ற ஒரே பதில்.
கலவரம் சூழ்ந்தது கணவனிடம். ';என் நாக்கில் இன்று சனி
புகுந்ததோ! வேறு ஏதாவது சொல்லி
நல்ல பொழுதாகக் கழித்திருக்கலாமே'' என்று விடிவதற்காகக்
காத்திருந்தான்.
அடுத்த நாள் ஃப்ளாஸ்கில் காபி இருந்தது.
''கோவிலுக்குப் போகிறேன்" என்று எழுதிய
காகிதம் மேஜை மேல்.
இடையில் மகள்,மகன் தொலைபேசி விசாரிப்புகள்.
''அம்மா குரல் சரியில்லையே''
உடம்பு நேராகத்தானே இருக்கிறாள்?
தன் அந்தரங்கத்தை எங்கேயுமே சொல்ல முடியாமல்
புழுங்கத்தான் முடிந்தது அவனால்.
கமலாவிடம் தான் சொன்னது கற்பனை
என்று விவரிக்க முயற்சித்தும்
முடியவில்லை. அவள் விலகியது விலகியதுதான்.
அந்த வீட்டின் கலகலப்பு பேரன் பேத்திகள்
வரும்போது மட்டும்.
வெளிப்பார்வைக்கு ,சமூகத்தில் நடுவது கம்பீர தம்பதிகள்
போன்ற தோற்றத்தைக் கொடுக்க
முடிந்தாலும்
மனதில் கொண்ட நோய் கமலாவை உருக்க
அவளைக் கண்டு ஸ்ரீனிவாசன் நொந்தார்.
90களில் எங்கள் வீட்டுக்கு வந்த போது
எடுத்த படத்தில் இருவரும் அருமையாக
சேர்ந்து உட்கார்ந்திருந்தது இப்போது
கனவாகத் தோன்றுகிறது.
சிங்கம் மறைந்த போது இருவரும் தனித் தனியே
தொலைபேசினார்கள்.
அவனைவிட நான் பெரியவன் என்று ஸ்ரீனிவாசன்
கலங்கினார்.
கமலா ''அவரை மாதிரி நேர்மையான கணவனைப்
பார்க்க முடியாது" என்று அழுதபடி சொன்னாள்.
மூன்று வருடங்களுக்கு முன் நானும் மகனும்
பெங்களூரு சென்ற போது நடமாடும்
பொம்மைகளாக இருவரும் இருந்தனர்.
வருடங்கள் தாண்டிய ஒரு மிதமான
காதல் மட்டுமே அங்கு காண முடிந்தது.
வயது முதிர்ந்ததால் மனமும் கனிந்திருக்கலாம்.
சிங்கம் சொல்லி இருக்காவிட்டால் எனக்கும் தெரிந்திருக்காது.
வீண் பேச்சு வாழ்க்கையைக் கெடுத்தது.