Blog Archive

Monday, January 04, 2021

சௌந்தரம்மாள் எழுத்தில்.....

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.

அடிக்கடி படிக்கும் புத்தகங்களில் திரு  எஸ்வி வி அவர்களின் 
  ''சௌந்தம்மாள்''
மனதில் பதிந்தவர். அப்படியே என் மாமியார் நினைவு வரும்.


அதில்  சில பாகங்கள்.
 '' இரண்டாம் கட்டுத் தாழ்வாரத்தில் ஒரு திண்ணை.
சிவப்புச் சாந்து பூசி மழ மழவென்று இருக்கும்.
ஓர் ஓரத்தில் தலைவைத்துப் படுக்க 'சும்மாடு'ம் கட்டி இருக்கும்.
வேலை செய்கிற நேரம் போக மற்ற நேரங்களில்
கையில் ஒரு விசிறியுடன் அந்தத் திண்ணையின் மேலேயே
உட்கார்ந்திருப்பாள்.
மழையோ வெய்யிலோ அந்த விசிறி வீசிக்கொண்டுதான் 
இருப்பாள். 
எழுந்திருக்கும் போது அந்தத் திண்ணை மேல், சுவற்றில்
அடித்திருக்கும் ஆணியில் விசிறியை மாட்டி விட்டு
வருவாள்.''

கண் முன்னே எங்க பாட்டி வருகிறார்,.
அவருக்கும் விசிறி இல்லாமல் ஆகாது.:)


''எங்கள் சித்தி மிக அழகாக  இருப்பாள் என்று
முன்பே சொல்லி இருக்கிறேன்.வீட்டிலிருக்கும் போது கூட
இரண்டு பட்டைச் சரிகை போட்ட 70, 80 ரூபாய்ப் பட்டுப்புடவையைத் 
தான் கட்டிக் கொள்வாள். ஒட்டியாணம் ,நாகவொத்து
என்று எல்லா நகைகளையும் போட்டுக் கொண்டு அந்தத் திண்ணையில் 
உட்கார்ந்தால் எழுந்திருக்க மாட்டாள் .ஒரு கோயில் அக்கம் பக்கம்
என்று எங்கேயும் போகமாட்டாள்.''
இது போல இரண்டு நபர்கள் என் புக்ககத்தில் . ஒருவர்
சிங்கத்தின் அத்தை.:)



''அதற்காக யாரும் அவளைச் சிடுமூஞ்சி ,சோம்பேறி
என்று நினைத்து விடவேண்டாம்.
அடுப்பில்  பானையில் அரிசி களைந்து போட்டுவிட்டு,
கொதிக்க நாழியாகுமே என்று
எங்கள் அகத்துக்காரைப் பார்க்க மாடிக்கு விரைவேன்.
அது என்னைப் பேசப்  பிடித்துக் கொள்ளும்!!
அச்சோ  சாதம் குஹைந்து போயிருக்கப் 
போகிறதே என்று கீழே ஓடி வருவேன்.
அப்பொழுதும் சித்தி திண்ணையில் உட்கார்ந்து விசிறியோடு
இருப்பாள்.
என்னைப் பார்த்ததும்.
சாதம் வடித்துவிட்டேன். அப்படியே குழம்புக்கு உப்பு புளி கரைத்துக் 
கொதிக்க வைத்திருக்கிறேன். நீ இறக்கினால் போதும் என்று

நிதானமாகச் சொல்வாள். கொஞ்சம் கூட முகத்தில் கோபமோ வெறுப்போ
இருக்காது.!!!''................ இன்னும் பார்க்கலாம்.





7 comments:

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யம்.  காட்சிகள் யதார்த்தம்.  நிஜங்கள்தான் கற்பனையாகின்றன.

ஸ்ரீராம். said...

எஸ் வி வி கேள்விப்பட்டிருக்கிறேன். எஸ் வி எஸ்?

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
நன்றி மா. திருத்தி விட்டேன்.
எஸ்வி எஸ் அப்புறம் அல்லவா வந்தார்!!!!

ஆமாம். அதுவும் இந்தக் கதை ஆஜிப் பாட்டி, எங்க மதுரைப் பாட்டி,
மாமியார் எல்லோரும் கண்முன் வருகிறார்கள்.

Geetha Sambasivam said...

எஸ்விவி, நிறையப் படித்திருக்கேன். முதலில் ஆங்கிலத்தில் எழுதியவர் கல்கி அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கித் தமிழில் எழுத ஆரம்பித்தார் என்பார்கள். அவரின் "சிவராமன்" மிகவும் பிடித்த ஒன்று. என்னிடம் அவருடைய "உல்லாஸ வேளை" இருந்தது. அலயன்ஸ் பதிப்பக வெளியீடு. இப்போக் காணோம். :))))

காமாட்சி said...

அருமை

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
எல்லாம் அங்கே சென்னையில் இருக்கிறது. சிவராமன்
கொஞ்சம் சோகமா இருக்கும். உல்லாச வேளை அருமை. அல்லையன்ஸ்
புத்தகக் கடைக்குப் போக மிகவும் பிடிக்கும்.
பெரியவர் இருந்ததிலிருந்தே வழக்கம்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி அன்பு காமாட்சிமா. மீண்டும் எழுத ஆரம்பித்திருக்கிறீர்களா.
அருமை.