மின் நிலாவுக்காக.
அம்மா செய்த மோர்க்குழம்பு திருமங்கலம் 1958 ++++++++++++++++++++++++++++++ பிடித்த மோர்க்குழம்பும், கொத்தவரங்காயும் எனக்கு நோ நோ. எனக்குப் பிடித்த கத்திரிக்காயும், மிளகு குழம்பும் அவனுக்கு ஒத்துக்காது.:) தம்பி வாடா. உனக்குப் பிடித்த உசிலி செய்து தருகிறேன். சின்னவனுக்கு ரசம் மட்டும் பிடிக்கும்.:) ++++++++++++++++++++++++++++++ மோர்க்குழம்பு எனக்குப் பிடிக்காத காரணம் அதன் புளிப்பு வாசனை. ஒரு நாள் அம்மா என்னையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு மோர்க்குழம்பு செய்யும் விதத்தைக் காட்டினார். நல்ல கடைந்த மோரில் பெருங்காயம்,கருவேப்பிலை, துளி தேங்காய் எண்ணேய் சேர்த்து தனியாக வைத்தார். தேங்காயை உடைத்து ஒரு மூடியைத் திருகச் சொன்னார். துவரம் பருப்பு இரண்டு தேக்கரண்டி அளவில் நன்றாக அலம்பி ஊறவைக்கக் காண்பித்துக் கொடுத்தார். எனக்கோ இவ்வளவுதானேம்மா. போதும் என்று சொல்லத்தோன்றியது. அதற்கு அடுத்தாற்போல அம்மா வாணலியை அடுப்பில் வைத்ததும் மீண்டும் கவனிக்க ஆரம்பித்தேன். அம்மாவின் அடுப்பு எப்பொழுதுமே நிதானமாக எரியும். அவசரமாக எதையும் கறுக்கி விடமாட்டார். ஒற்றை விறகும் சில சிராய்த் துண்டுகளிலும் சமாளிக்கும் திறமைசாலி. ஏம்மா இன்னோரு விறகு வையேன் என்றால், நீதானே விறகு மண்டி போய் வரணும். அதுக்காகத்தான் கொஞ்சமா வைக்கிறேன் என்று புன்னகைப்பார்.!!!!! என்ன லாஜிக்கோ.... எனக்குப் புரியாது. வாணலியில் 6 சிகப்பு மிளகாய், இரண்டு டீஸ்பூன் உளுத்தம்பருப்பு, கொஞ்சம் வெந்தியம்,குடவே துருவு வைத்திருந்த தேங்காய்த்தூளையும் போட்டு கவனமாக வறுத்துக் கொட்டினார். அம்மா தேங்காய்த் தொகையல் போல இருக்குமா என்று ஆவல் மீறக் கேட்டேன். பின்ன என்னன்னு நினைச்சே. அதே தான்.நீ வேணா பாரு என்று எல்லாவற்றையும் அரைக்கிற( ஏற்கனவே அலம்பி வைத்திருந்த) உரலில் சேர்த்தார். ம்ம். குழவியைச் சுத்து என்று சொல்லிவிட்டு, கத்திரிக்காய் திருத்தி வைக்க ஆரம்பித்தார். கையை,விரலைப் பார்த்துக் கொண்டு அரைத்து எடு. வெழுமூண வேண்டாம் என்று அவ்வப்போது புத்திமதிகள் வரும், அரைத்தவுடன் வந்த வாசனை மிகப் பிடித்தது. என்ன தான் போடலாம் என்றதும் சுற்றிப் பார்த்துவிட்டு வெண்டைக்காய் போடலாமா என்றேன். இன்னிக்கு வெள்ளைப் பூசணி எடுத்துக்கலாம். வெண்டைக்காய் தனியே வதக்கணும். சாப்பிட நேரமாகிறது .இன்னிக்கு கார்த்திகை இல்லையா. இன்னும் விளக்கெல்லாம் தேய்ச்சு வைக்கணும் அகல் விளக்கைத் தண்ணீரில் போட்டுத் துடைத்து வைக்கணும். திரிகள் போட்டு,,குங்குமம் சந்தனம் வைத்து, நல்லெண்ணெய் சிதறாமல்.அகல்களில் விடணும். நீயும் தம்பிகளும் அதை செய்யும் போது நான் பொரி உருண்டை,அப்பம்,வடை, திருக்கண்ணமுது எல்லாம் செய்யணும். இப்போ இதைப் பாரு என்று அடுப்பில் வென்னீரில் பூசணித்துண்டுகளைப் போட்டார். துளி உப்பு சேர்த்து,கொஞ்சம் மஞ்சள் பொடியும் போட்டார். து.பருப்பு,அரிசி ,உ.பருப்பு,வெந்தியம் தேங்காய் அரைத்த கலவையை வைத்திருந்த மோரில் சேர்த்தார். பூசணித்தான் வெந்து விட்டதா என்று பார்க்கும் கட்டம். கையில் வைத்து சோதிக்காமல் ஒரு ஸ்பூனால் நசுக்கிப் பார்ப்பதை வேடிக்கை பார்த்தேன். இப்ப என்ன செய்யணும்? என்னைக் கேட்டார், இந்த மோரை அதில சேர்க்கணும்.'' என்று சொல்லி மூக்கைப் பிடித்துக் கொண்டேன். முதல்ல கையெடு. தளிகை செய்யும் போது கொனஷ்டை செய்யாதே. இப்ப பாரு, என்று மோர்க்கலவை பொங்கி வருவதைக் காட்டினார். இவ்வளவுதான் இதற்கு மேல் கொதிக்கக் கூடாது. இதற்கு சீரகம் திருமாறினால் போதும். என்று முடித்தார். பக்கத்திலிருந்த கிண்ணத்தை எடுத்து அதில் மோர்க்குழம்பையும் தானையும் போட்டு என்னிடம் கொடுத்து,,,,,," சாப்பிடு" என்றதும் தயக்கம் தான். உம்மாச்சிக்குக் காண்பிச்சுட்டு சாப்பிடலாம் என்றவளைப் பார்த்து வாய்விட்டு சிரித்து விட்டார். ம்ம்ம் .மோர்க்குழம்பு நன்றாகத் தான் இருந்தது. அனைவருக்கும்திரு நாள் வாழ்த்துகள்.
|
22 comments:
நன்றி அம்மா.
மிக மிக நன்றி ஸ்ரீராம்.
பொங்கல் நாள் சுபமாக நடந்தது என்று நம்புகிறேன்.
ஆம் அம்மா. மிகச் சுவையாகக் கழிந்தது. இன்று கனு சார் வாங்க சகோதரிகள் வருவார்கள். கலந்த சாதம்.
இன்னும் எங்கள் வீட்டில் மோர்க்குழம்பு வைக்கின்றார்கள். மோர்க்குழம்பு வைக்கும் நாளன்று அக்குழம்பினை ஊற்றி வயிறு முட்ட உண்பது என் வழக்கம்.
வணக்கம் சகோதரி
அருமையான மோர் குழம்பு பதிவு. மோர் குழம்பு எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்தமானது. அதுவும் நீங்கள் உங்கள் அம்மாவின் கைப்பக்குவத்தில், விவரணையாக சொல்லிய போது, நானும் உங்களுடன் இருந்து நீங்கள் தயாரித்த மோர்குழம்பை வாங்கி சுவைத்தது போன்ற உணர்வையடைந்தேன். மிக அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் சகோதரி. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நீங்கள் எழுதிய மோர்க்குழம்பு குறிப்பு ரொம்பவும் அருமை என்றால் அதை உங்கள் அம்மா சொல்லிக்கொடுத்த அழகும் நேர்த்தியும் மிக மிக அருமை! மிகவும் அழகாய் எழுதியிருக்கிறீர்கள்!!
ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.
நிறையபேர் படிக்கிறார்கள், பின்னூட்டம் வருவதில்லை என்று சொல்லியிருந்தீங்க. நீங்க ரொம்ப அடிக்கடி இடுகை போடும்போது பின்னூட்டம் இடத் தவறிடுது. அதுவும் தவிர காணொளி, ஹிந்தி பாடல்கள் இவையெல்லாம் நான் பார்க்க ரொம்ப நேரம் எடுக்கும்.
விமர்சனத்தில் இந்தக் குழம்பு பற்றி எழுதியிருக்கேன்.
இது கிட்டத்தட்ட இருபுளிக்குழம்பு செய்யும் முறையில் செய்திருக்காங்க. புளி சேர்க்கலை. மோரே புளிப்பாக இருந்திருக்கும். மோர்க்குழம்பு முன்னெல்லாம் ரொம்பப் பிடிக்கும். அதுவும் கத்திரிக்காய்க் கூட்டும் இருந்தால்! வேறே வேண்டாம். இப்போல்லாம் சாப்பிட முடிவதில்லை.
பிடித்தமானது
வாசிக்கும்போதே சுவை அருமையாக தெரிகிறது அம்மாவின் கைப்பக்குவத்தை நிக்க அழகா விவரியிச்சிருக்கீங்க வல்லிம்மா .காய்ந்த மிளகாய் இதுவரைக்கும் தாளிச்சிதான் போட்டிருக்கேன் இம்முறையில் அரைத்து செய்கிறேன் .எனக்கு ரொம்ப பிடிச்ச மோர்க்குழம்பு .
வணக்கம் முனைவர் ஐயா.
மோர்க்குழம்பு எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. நல்ல புளிப்பு, காரம்
எல்லாம் சேரும்போது சுவைதான்.
எப்பொழுதும் ருசித்து சாப்பிடும்போது
வாழ்வே ருசிக்கும். என்றும் ருசிக்க வாழ்த்துகள்.
அன்பு கமலாமா,
அம்மாவுக்குப் பொறுமை அதிகம்.
அன்று சொன்னது இன்னும் மறக்கவில்லை.
இதே போல எண்ணெய் நிறைய ஊற்றாமல் எல்லாக் காய்கறிகளையும் வதக்கும் முறைகளையும் சொல்லித் தருவார்.
நீங்கள் கூட இருந்து ரசித்ததற்கு
மிக நன்றி.
என்றாவது ஒரு நாள் சந்தித்து நாம் பேசலாம். இந்த அன்புக்கு மிக நன்றி மா.
அன்பு மனோ,
இனிய பொங்கல் வாழ்த்துகள்.
மோர்க்குழம்புக்கு பச்சை மிளகாய் சீரகம்
என்று அரைத்துவிட்டு முடிப்பது வழக்கம்.
இந்த முறையில் செய்யும் போது மணமாக இருக்கும்.
நீங்களும் அன்புடன் ரசித்தது மிக மகிழ்ச்சி.
நன்றி மா.
அன்பு முரளிமா,
நான் அதை வருத்தமாகச் சொல்லவில்லை.
பக்க வருகையின் போது கவனித்ததைச் சொன்னேன்.
ஆமாம் இப்போது இடுகை யிடுவது அதிகரித்துவிட்டது.
எல்லாம் இணையத்தில் பார்க்கும் போது
பகிர்ந்து கொள்ளலாமே என்று
நினைக்கிறேன்.
காணொளி என் பக்கத்தில் இருக்கும்போது
மீண்டும் அதைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு அதிகரிக்கிறது.
என்னுடைய வருங்காலத்துக்காகப்
பதிகிறேன். நன்றி மா. நான் வேறெதையும் எதிர்பார்க்கவில்லை.
விமர்சனத்தில் இந்தக் குழம்பு பற்றி எழுதியிருக்கேன்.///////பார்த்தேன் மா. நன்றி.
அன்பு கீதாமா,
நேரில் பார்த்த மாதிரி சொல்லிவிட்டீர்கள். ஆமாம் அதுதான் உண்மை.
அங்கெல்லாம் மோர் புளிக்காமல் இருந்தால் தான் அதிசயம்.
அந்தப் புளிப்புக்கேற்ற காரமும் சேர்த்தால் சுவை
அதிகம்.
புளியும், மோரும் சேர்த்தும் அம்மா செய்வார். எனக்கு அவ்வளவாக ஏற்காது:)
எல்லா உணவுக்கும் இப்போது
தடா சொல்லியாகிவிட்டது. மிதமான உணவே மேல்.
நன்றி மா.
அன்பு ஜெயக்குமார்,
உங்களுக்கும் பிடித்த குழம்பா இது.
கருத்துக்கு மிக நன்றி மா.
அன்பு ஏஞ்சல்,
அம்மா கைபக்குவம் குழந்தைகளுக்கு மறப்பதில்லை.
அவள் அன்பு போலவே சொல்லிக் கொடுக்கும் முறையும் அழகாக அருமையாக இருக்கும்.
உங்களுக்கும் இந்த முறை
நன்றாக செய்ய வந்து ருசித்தால் இன்னும் மகிழ்ச்சியே.
நலமுடன் இருங்கள்.
மிக நன்றிமா. உங்கள் ரசனை மிகுந்த பின்னூட்டம்
இன்னும் ஒரு ஊக்கம்.
அப்படி இல்லை வல்லிம்மா... பின்னூட்டம் இடும்போது, actually we are interacting with you. Something like meeting and chatting. When we meet personally, we will only continue the chat from where we left the previous day in the blog. Something like this..
படிக்கும்போதே மோர்க்குழம்பின் வாசனை வந்ததோ என்று எனக்குத் தோன்றியது. அம்மா சொல்லித் தந்து சமைக்கக் கற்றுக் கொண்டது நல்ல அனுபவம் - எனக்கும் அப்படியான அனுபவம் உண்டு.
சுவையான பதிவு வல்லிம்மா. நன்றி.
Yes you are right Muralima,
whatsapp and EB has been my main stay mostly,.
as the timelines are different I get delayed in replying. my children do not have time to
read. or their Thamizh is not upto standard . my mistake.
so as you say this connection thru the blog is a soul booster.Thank you for coming and reading . I appreciate it very much.
அன்பு வெங்கட்,
நலமாப்பா. தில்லி குளிர் மிக மோசம்.
கவனமாக சமாளியுங்கள்.
அம்மா வாசனை எல்லா இடத்திலும் நிறைவது
அவளின் அன்பு கைப் பக்குவத்தால் தான்.
அதுதான் உங்கள் வீடு வரை வந்து விட்டது.
நன்றி ராஜா.
Post a Comment