ரத்தின் கிளைகளில்
Blog Archive
Sunday, February 28, 2021
.கேட்க விரும்பும் சில பறவை ஓசைகள்.
சென்னையில் இருக்கும் போது
இந்தக் குயில்கள் தினம் நம் மாம
ரத்தின் கிளைகளில்
ரத்தின் கிளைகளில்
வந்து உட்காரும்.
தென்னை மரங்கள் இரண்டிலும் ஊஞ்சாலாடிக் கொண்டு பேசும்
கிளிகள் கூட்டமாக வந்து போகும்.
இதோ இன்றுடன் இங்கு வந்து
ஒரு வருடப் பூர்த்தி.
இன்னும் அந்த சாலை மும்முரமும்,
பல வியாபாரிகளின் குரல்களும் எப்போதாவது விசாரிக்கும்,''அம்மா
ஈயம் பூசலியா''வும்
''ஐயா இருந்த அரிவாள் கத்தி எல்லாம் சாணை
பிடிப்பாருங்க. நீங்க அந்த அருவாமணையைக் கூடத் தீட்டறதில்லை''
என்று வருந்தும் சாணைபிடிப்பவரும்,
பழைய பேப்பர் எடுப்பவர்''அம்மா நீங்க பேப்பர்
போடறதைக் கூட நிறுத்தீட்டீங்களா''
என்று பார்த்துப் பேசிப் பழகும்
காயலான் கடைக்காரருக்கும்
என்ன பதில் சொல்வது என்று விழிப்பேன்.
அந்த விதத்தில் தனிமையே இல்லாத ஊர்
நம்ம ஊர்.
Saturday, February 27, 2021
Friday, February 26, 2021
வாயு என்னும் தீராத தொல்லை.
வல்லிசிம்ஹன்
வாயுக்கு எதிரிகள்!
மொச்சை, பட்டாணி, பருப்பு, பயறு, பீன்ஸ், சோயாபீன்ஸ், முட்டைக்கோஸ், வெங்காயம், காலிஃபிளவர், முந்திரி போன்ற கொட்டை வகைகள், வாழைக்காய், உருளைக் கிழங்கு, சேனைக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, சாக்லேட், கேக், பிஸ்கட், பாப்கார்ன், செயற்கைப் பழச்சாறுகள், மென்பானங்கள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட மசாலா மிகுந்த உணவுகள், இறைச்சி, முட்டை, பால், பாலில் தயாரிக்கப்பட்ட பால் அல்வா, பால்கோவா, சீஸ் போன்ற உணவு வகைகள், அப்பளம், வடகம், வினிகர், பீர் ஆகியவற்றுடன் எந்த உணவைச் சாப்பிட்டால் உங்களுக்கு வாயு அதிகரிப்பதாகத் தோன்றுகிறதோ, அதையும் முடிந்தவரை குறைத்துக் கொள்ள வேண்டும்.
பூண்டு, வெங்காயம், இஞ்சி சேர்த்தகலவை
பெரும்பாலார்க்குப் பிடிப்பதில்லை.
எல்லாமே அளவோடு இருந்தால் அதிக பாதிப்பு
இருக்காது.1919 ஆம் ஆண்டு பரவிய ஒரு வித காய்ச்சலால் 40 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இது குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்து வந்தனர். இது எந்த விதமான நோய் என்றும், இதற்கு எவ்வாறு மருந்து தயாரிப்பது என்பது பற்றியும் யோசித்து வந்தனர். அந்த சூழ்நிலையில் ஒரு விவசாயின் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் எந்த ஆரோக்கிய சீர் கேடுகளும் இன்றி நலமுடன் வாழ்ந்து வருவது தெரிய வந்தது. எப்படி இருந்தாலும் இவரது குடும்பத்தினக்கும் நோய் தொற்று ஏற்பட்டிருக்க வேண்டும் எப்படி இவர்கள் ஆரோக்கியமாக இருப்பது சாத்தியம் என்று மருத்துவர்கள் சிந்தித்தனர்.
மற்ற குடும்பத்தினரை விட இவர்கள் எந்த விதத்தில், வேறுபட்டு இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தார்கள். ஒரு முறை அந்த விவசாயின் வீட்டிற்கு சென்று, நீங்கள் மற்றவர்களை விட எந்த விதத்தில் மாறுபட்டு இருக்கிறீர்கள் என்று கேட்டார்கள். ஆனால் அந்த விவசாய குடும்பத்திற்கு ஒன்றும் தெரியவில்லை. பின்னர் மருத்துவ ஆய்வாளர்கள் அவர்களது வீட்டின் ஒவ்வொரு அறையிலும் வெங்காயத் துண்டுகளை கண்டனர். இது எதற்கு என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் நாங்கள் நீண்ட நாட்களாக நாங்கள் வீட்டின் அனைத்து அறைகளிலும் வெங்காயத்தை இரண்டு தூண்டுகளாக அரிந்து வைத்து, காலையில் அதனை எடுத்து வெளியே எடுத்து எரிந்து விடுவோம். என்று கூறினர்.
பெருங்காயத்துக்கும் அதே வார்த்தைதான். அளவுக்கு மீற வேண்டாம்.
தேடியதில் கிடைத்தைப் பகிர்கிறேன்.
பெருங்காயம் நல்லதா கெட்டதா
* தைவானில் உள்ள ஆய்வாளர்கள் பெருங்காயம், பன்றிக்காய்ச்சலுக்குப் பயன் தரும் அமாண்டடின்/சைமடின் (Amandatine/Symadine) வைரஸ் மருந்துகளைப்போல, வைரஸ் எதிர்ப்புத் தன்மையைக் கொண்டது எனக் கண்டறிந்தார்கள். தினமும் ஒரு கிளாஸ் மோரில் துளிப் பெருங்காயம் போட்டுப் பருகினால், உடல் குளிர்ச்சியாகும். கால்சியமும் பெருகும். லாக்டோ பாசில்லஸ் என்னும் நலம் பயக்கும் நுண்ணுயிரியும் கிடைக்கும். கூடவே, பன்றிக்காய்ச்சல் தரும் நுண்ணுயிரியும் வாலைச்சுருட்டிக்கொண்டு ஓடும்.
* நல்ல, தரமான பெருங்காயம் வெளிறிய மஞ்சள் பழுப்பு நிறத்தில் இருக்கும். கறுத்திருந்தால் வாங்கக் கூடாது. கலப்படம் இல்லாத பெருங்காயம் கற்பூரம் மாதிரி எரிய வேண்டும். சில தாவர ரெசின்கள், ஸ்டார்ச் பொருள், சோப்புக்கட்டி போன்றவை சேர்க்கப்பட்டு பெருங்காயம் சந்தையில் உலா வருகிறது. அதனால், மூக்கைத் துளைக்கும் வாசம் வந்தாலும், கவனமாகப் பார்த்துத்தான் வாங்க வேண்டும். பெருங்காயத்தின் மணம் எளிதில் போய்விடும் என்பதால், காற்றுப் புகாத கண்ணாடிக் குவளையில் போட்டுவைத்திருந்தால் அதன் மணத்தையும் மருத்துவக் குணத்தையும் பாதுகாக்கலாம்.
* அஜீரணத்துக்கு இது சிறந்த மருந்து. புலால் சமைக்கும்போதும், வாய்வு தரக்கூடிய வாழை, கொண்டைக்கடலை, பட்டாணி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளைச் சமைக்கும்போதும் துளியூண்டு பெருங்காயத்தை உணவில் சேர்க்க மறக்கவே கூடாது.
Thursday, February 25, 2021
அம்மா செய்முறையில் மசாலா உருளைக் கிழங்கு
மூவரும் வந்துவிடுவோம்.
அன்றைய மாலை விளையாட்டுக்குப் போவதற்கு முன்ஸ்பெஷல் டிஃபன் உண்டு.
ஏதாவது எண்ணெய்ப் பலகாரம் செய்து கொடுப்பார்
அம்மா.
தேங்குழல்,ஓமப்பொடி, நாடா பக்கோடா
இப்படி கறுக் முறுக் இருக்கும்.
எல்லாமே அப்போது புதிதாக வந்த ஜனதா ஸ்டவ்வில்
தான் செய்வார்.
அதற்கு முன் விறகடுப்பில் செய்திருப்பாரோ
என்னவோ.
கரியடுப்பில் செய்வதனால் நானும் உதவி இருக்கிறேன்.
ஞாயிற்றுக் கிழமைக்கு சின்ன வெங்காய சாம்பாரும்
வடாம் பொரித்ததும் இருக்கும். சாயந்திரம்
பூரி உருளைக்கிழங்கு மசாலா இருக்கும்.
திருமங்கலம் உருளைக்கிழங்கு மிக மிக ருசி.
ஏன் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைக்கு
இவ்வளவு முக்கியத்துவம் என்றால்
காரணம் அப்பாதான்.
அலுவலகத்துக்குப் போகும் போது
க்ரோஷாவில் பின்னப்பட்ட ஒரு பையில் தெர்மாஸ்
ஃப்ளாஸ்கில் காப்பி மட்டும் எடுத்துச் செல்வார்.
தபால் அலுவலகம் அதே சாலையில் தான் இருக்கும்.
மதியம் கிடைக்கும் நேரத்தில்
குறைவான சாப்பாடு சாப்பிட்டு விட்டுப் போனால்
இரவுதான் வருவார்.
ஞாயிறன்றுதான் முழு ஓய்வு, எண்ணெய்க் குளியல்,
தோட்டம் கவனிப்பு, எங்கள் படிப்பு
பற்றி செக்கிங்க் எல்லாம் நடக்கும்.
அம்மாவுக்கும் சமையலில் உதவி செய்வார்.
அதில் சின்ன வெங்காயம் உரிப்பதும் அடக்கம்:)
அந்த வீட்டு சமயலறையீலேயே கிணறு இருக்கும்.
அந்த முற்றத்தில் நானும் அம்மாவும் குளிப்போம்.
வெளிப்புறம் இருக்கும் கிணற்றில் அப்பாவும் தம்பிகளும் குளிப்பார்கள்.
சமையலறையில் அம்மி, கல்லுரல் இருக்கும்.
தோசை வார்க்கும் போது அம்மா பக்கத்தில் உட்கார்ந்து கொள்வோம்.
சமையலறை அடுத்த அறை சாப்பிடும் அறை..
அங்கு தான் ஜன்னல்கள் மூடி இருக்கும்.
ஒரு தடவை பின்புறக்கதவில் பேர் சொல்லாதது வந்ததால்.,
இந்த ஏற்பாடு. இதமான அறை.இரண்டு பக்கத்திலிருந்தும் வெளிச்சம் வரும்
கொலுவைப்பதும் அந்த அறையில் தான்.
அதைத் தாண்டி பெரிய கூடம்.
படுப்பது,படிப்பது,விளையாடுவது அங்கே தான்.
ஒரு சாய்வு நாற்காலி, தாத்தா வந்தால் உட்கார,
படிக்கும் மேஜையும் நாற்காலியும்.
சுருட்டி வைக்கப் பட்ட மெத்தைகள்,
பாய்கள், ஜமக்காளம் எல்லாம் ஒரு மூலையில்.
''பத்து பைசா கொடுத்து ஆடச் சொன்னால் லட்ச ரூபாய் கொடுத்து
ஓயச் சொல்லணும்.'' பாட்டி சொல்வது எனக்கு மிகப் பொருத்தம்.:)
அம்மா செய்முறையில் மசாலா உருளைக்கிழங்கில் காரம் இருக்காது.
தக்காளி போட மாட்டார்.
ப்ளெயின் சிம்பிள் உ.கிழங்கு.
மிக நன்றாக வேகவைத்த உருளைக் கிழங்கை
தோல் எடுத்த பிறகு
நன்றாக மசித்து விடுவார்.
சின்ன வெங்காயம், பச்சை மிளகாயை ஒன்றிரண்டாக
நறுக்கி வைத்துக் கொண்டு ,
அடுப்பில் இரும்பு வாணலியில்
நல்லெண்ணெய் விட்டுக் கடுகு போட்டு
வெடித்ததும்
வெங்காயம் ,பச்சை மிளகாய் போட்டு வதங்கியதும்
மஞ்சள் பொடி சேர்ப்பார். உப்பும் அதில் சேரும்.
கொஞ்சம் ஜலம் சேர்த்துக் கொதித்ததும்
உ;கிழங்கும் அதில் சங்கமம் ஆகும்.
அதுவும் ஒன்று சேரக் கொதித்ததும்
வீட்டில் இருக்கும் கருவேப்பிலைச் செடியிலிருந்து
உருவின கருவேப்பிலை இலைகளைத் தாராளமாகத் தூவி
அடுப்பில் இருந்து
இறக்க வேண்டியதுதான்.
நடுவில் ஓடின குடும்ப புராணத்தைத் தடுக்க முடியவில்லை:)
வல்லிசிம்ஹன்
Tuesday, February 23, 2021
Madurai Kizhangu Pottalam | Spicy Potato Masala Parcels
நெடு நாளைய விருப்பம்.
இதைவிட இன்னும் மஞ்சள் நிறத்தில் இருக்கும்
மசாலா உருளைக் கிழங்கை,
உணவு விடுதி நடத்திய வைத்தி மாமா,
ஒரு மாட்டுவண்டியில் கண்ணாடிக் கொண்டுக்குள் வைத்துக்
கொண்டுவருவார்.
அதுசரியாக நமது இரவு சாப்பாட்டு நேரமாகவும் இருக்கலாம்
இல்லையானால் மாலை நேர டிஃபன் டைமாகவும் இருக்கலாம்.
எங்கேயோ உள்ளே இருக்கும் சின்னத்தம்பி
மணி சத்தம் கேட்டதும் அவ்வ்வளவு பெரிய நீண்ட முற்றத்தைத் தாண்டி வாசல் கேட்டுக்குப்
போய்விடுவான்.
நானும் ,பெரிய தம்பியும் அம்மாவிடம் காசு
அதாவது எட்டணா வாங்கிக் கொண்டு வெளியே
விரைவோம்.
வைத்தி மாமா அதற்குள் வண்டியை விட்டு இறங்கி
ஒரு இலையில் பூந்திலட்டுவை வைத்துத் தம்பியிடம்
நீட்டி இருப்பார்.
நானும் தம்பியும் பெரியவர்கள் இல்லையா....
கௌரவமாக வேண்டாம் என்று சொல்லிவிட்டு
எட்டணாவை அவர்கையில் கொடுத்ததும்,
இந்த இலை உருளைக்கிழங்கு மசாலா
மூன்று பொட்டலம் கொடுப்பார்.
மத்தியானம் அம்மா நல்ல காய்கறி வதக்கி செய்திருந்தால்
நாங்கள் காலி செய்திருப்போம்.
அந்த நாட்களில்
மாமா கொண்டுவரும் மசாலா உருளைக்கிழங்கு
தயிர் சாதத்துடன் சுகமாக உள்ளே இறங்கும்.
மீனாட்சி அம்மன் சன்னிதிதெருவில் அனேகமாக எல்லோருமே வாங்குவார்கள்.'
ராஜாமணி மாமாவின் அம்மாப்பாட்டி ரொம்ப ஆசாரம்.
அதனால் அந்தக் குழந்தைகளும் நம் வீட்டுக்கு
வந்துவிடுவார்கள்:)
சொகுசான வாழ்வுக்குத் திருமங்கலம் பெயர் போனது.
Monday, February 22, 2021
ரயிலே ரயிலே என் ஆசை ரயிலே!!
ஷண்டிங்க் யார்ட்... எத்தனை அழகு இந்தப் புகை வண்டி!!! மின்சார வண்டி வந்த புதிது எக்மோர் ரயில்வே ஸ்டேஷன். |
வல்லிசிம்ஹன்
பயணங்கள் வாழ்க. தொடர்க.அன்பு வெங்கட் நாகராஜ் பதிவில் சில ரயில்களைப் பார்த்துப்
படித்ததும்
Ian Manning பற்றிப் படிக்க ஆரம்பித்தேன். எத்தனை புகைப்படங்கள்!!
அத்தனையையும் தீராத ரயில் தாகத்துடன்
பார்த்து சில படங்களைச் சேமித்துக் கொண்டு
இங்கே பகிர்கிறேன்.
திரு நெல்வேலியில் ஆரம்பித்த பெற்றோரின்
பயணம் ஸ்ரீவில்லிபுத்தூர், திருமங்கலம்,திண்டுக்கல்,
மதுரை என்று தொடர்ந்து
என்னைச் சிங்கம் அவர்களின் பயணத்தில் அன்புடன் கோர்த்து விட்டது.
ரயிலையும், அது நிற்கும் நிலையத்தையும் பார்ப்பது எங்களுக்கு வாடிக்கை.
அடுத்த பயணம் எப்போது என்று தந்தையைக் கேட்ட
வண்ணம் இருப்போம்.
அதற்காக திருமங்கலம், மதுரை பாசஞ்சர் ரயிலில்
அழைத்துப் போனார்.
அந்தப் பயணம்,புதுக்கோட்டை, சேலம், கோவை ,திருச்சி என்று சுற்றி
மீண்டும் சென்னைக்கே கொண்டுவிட்டது.
மீட்டர் காஜ், ப்ராட் காஜ் பயணம் மீண்டும்
பாம்பே வரை சென்று
திரும்பியது. இப்போது
விமானங்களில் தொடர்கிறது.
ஆனால் பழைய நாட்களின் இனிமை புதிய
வண்டிகளில் கிடைக்கவில்லை.அதுவும் கடைசி தடவையாக பங்களூர் சென்னை பயணம்
வயிற்றுப் பிரச்சினையில் முடிந்த பிறகு
நிறைய யோசிக்க வேண்டி இருக்கிறது.இந்த ரயில் பயணம் துபாய், ஸ்விட்சர்லாண்டு, லண்டன்,சிகாகோ
என்று தொடர்கிறது.
எல்லா இடங்களிலும் சுத்தமாகக் காட்சிதரும்
டாய்லெட்கள்.
இவைதான் என்னை ஈர்த்தவை. பயமில்லாமல் பயணம் செய்யலாம்.
இன்னும் திருச்சி ஜங்க்சனில் கிடைக்கும் வறுத்து உப்பிட்ட
முந்திரிப்பருப்பும், கதம்பமும், செங்கல்பட்டுக் காப்பியும்
நினைவில் ருசி சேர்க்கின்றன.
ஸ்விஸ் ரயிலின் வருகை,புறப்பாடு மாறவே மாறாது.
லண்டன் ரயிலில்
ஒவ்வொரு நிலையம் வரும்போதும்
''இறங்கும்போது பார்த்து இறங்கவும். ரயிலுக்கும்
நடைமேடைக்கும் உயர வித்தியாசம் பார்த்துக்
காலைவைக்கவும் ''என்பார்கள் கிட்டத்தட்ட
100 வருடங்களாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்களோ?:))))
அனைவரும் அவரவர் பயணங்களில்
வெற்றி பெற வாழ்த்துகள்.
Sunday, February 21, 2021
உறவின் மேன்மை....அவர்க்கும் எனக்கும்...பாகம் 5
வல்லிசிம்ஹன்
முன் கதை சுருக்கம்.
++++++++++++++++++++++++
விசாலி ,கமலியும் வித்தியாசமான சகோதரிகள். விசாலியின் நிதானத்துக்கு
மாற்று தங்கை கமலி. துறு துறு ,குறும்பு,அக்காவை வம்புக்கு இழுப்பது.
எல்லா விஷயத்திலும் பொறுமை காட்டும்
விசாலி ,தனக்கு சொந்தமான எதையும் கமலி தொடுவதை
வெறுக்கிறாள்.
விசாலிக்கும் திருமணமாகி புக்ககம் வந்த பின் அங்கு
மேல் படிப்பு படிக்க வரும் கமலி,
தன் சீண்டுதலைத் தொடர்கிறாள்.இந்தத் தடவை
விசாலியின் கணவனைக் கவர்வதை.தொடர் வதை விசாலிக்கு.
அங்கே வந்த அவர்களின் தந்தை
கமலியை ஊருக்கு அழைத்துப் போய்
புத்தி சொல்ல விரும்புகிறார். தொடர்வோம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அப்பாவின் சொற்களைக் கேட்டு அதிர்ச்சி
அடைந்த கமலி''என்னப்பா. எதுக்கு என்னை அழைக்கிறாய். நிறைய வேலை இருக்குப்பா.
நாளைக்கு வேற தோழிகளோடு தங்கம் தியேட்டரில்
ஆயிரத்தில் ஒருவன் பார்க்கணு" என்று சிணுங்கினாள்.
''எல்லாம் நம்ம ஊர்லயும் வந்திருக்கு அங்கே பார்க்கலாம்.
முதலில் வேணும்கிற துணிமணிகள் எடுத்துக்கோ.
நாம் கிளம்பலாம். அம்மம்மா உன்னை அழைத்து வரச் சொன்னாள்.''
என்றார்.
அடுத்தாற்போல் அக்கா கணவனைப் பார்த்தாள்.
நீங்க சொல்லுங்களேன்'' என்று கேட்கும்
மைத்துனியை சங்கடமாகப் பார்த்தான்.
உள்ளேயிருந்து வந்த காமாட்சி ,
''அவள் இருக்கட்டுமே சம்பந்தி. எங்களுக்குத் தொந்தரவில்லை''
என்றாள். அவள் சொல்வதைப் புரிந்து கொண்ட
நடேசன், ''மாமியார் வந்திருக்கிறார் அம்மா, இரண்டு நாட்களில்
திரும்பி
வரட்டும்'' என்றார்.
ஒரு நிமிடம் நிதானித்தவர்
''நீ உள்ள வாம்மா. தக்காளி சூப் செய்திருக்கேன்.
உங்க அக்காவோட பேசிட்டு வா"
என்றாள்.
''அக்காவுக்கு இன்னுமா சரியாகலை. ஜாலியா
ஓய்வெடுத்துக் கொண்டு விட்டாளா''
(நம் வீட்டு சூப் படம்)
அப்போதுதான் கண் திறந்த விசாலி, கமலியைப் பார்த்து புன்னகைத்தாள்.
''ஏன் இப்படி தகர டப்பா மாதிரி சத்தம் போடறே கமலி.
நிதானமா இரேன். நமக்கு அம்மம்மா செல்லம் வேண்டும்தானே.
எனக்கும் சேர்த்து நீ பார்த்துவிட்டு வா"
என்றாள்.
" உனக்கு உன் அகத்துக்காரர் உன்னுடனேயே இருக்கணும்.
என்னை மாதிரி யாராவது அவர் பக்கத்தில் போய் சிரித்தால்
ஆகாது உனக்கு. எத்தனை நாளைக்கு
இந்த மாதிரி பிடிச்சு வைத்துக் கொள்றே
பார்ப்போம்" என்று விஷமத்தனமாகச் சிரித்தாள்.
விசாலிக்குக் கொஞ்சம் உறுத்தினாலும்
சமாளித்துக் கொண்டு ''என் வீட்டுக்காரர் எனக்கு
மட்டும் தான் வீட்டுக்காரர். அதுல உரிமை கொண்டாடறதிலே
எனக்கு சங்கடம் இல்ல. உனக்குத் திருமணம் ஆனாலும்
அப்படித்தான் இருக்கப் போறே. வீணாக வார்த்தை விடாதே.
நீ இன்னும் சின்னப் பாப்பா இல்ல. அடக்கமாக
இரு ''என்று சூடாகப் பதில் கொடுத்தாள்.
கொஞ்சம் திகைத்த கமலி'' அட உனக்குக் கூட
பேச வருமா.சரியான சௌகார் ஜானகி மாதிரி அழுமூஞ்சியா
இருக்கே. உலகத்தைப் பார்த்து கத்துக்கோ.
எனக்குக் கல்யாணம் ஆகும்போது அவரை என் பிடிக்குள் வைத்துக் கொள்ள
எனக்குத் தெரியும்" என்றபடி வெளீயேறி விட்டாள்.
விசாலிக்கு அவளை நினைத்தால் பாவமாக இருந்தது.
எதற்கு இந்த ஆர்ப்பாட்டம்? யாரைக் கவர்ந்து
இவள் என்ன நிலை நிறுத்தப் போகிறாள்.
அதிக சினிமா, அதிகப் புத்தகம்,அதிகக் கற்பனை என்று
ஏதோ ஒரு உலகில் இருக்கிறாள்.
முருகா மீனாட்சி இந்தப் பெண்ணைக் காப்பாற்றுங்கள்
என்று கண்களை மூடிப் பிரார்த்தனை
செய்தாள்.
''ஹை விஷ்," என்று சொன்னபடி உள்ளே வந்த
கணேஷ், தங்கைக்குப் பாடம் சொன்ன காசி விசாலாக்ஷி
அம்மையெ!!!!!
நீவிர் எனக்கும் ஏதும் சொல்லலாகுமோ"???
என்று நாடகக்காரன் போல் கைகுவித்ததும்
விசாலியின் கண்கள் சிரிப்பில் விரிந்தன.
''அன்னைக்குக் காவல் கணேசன் தான்!
உமக்கு நான் உபதேசம் செய்யப் போமோ?""
என்று சொல்ல இருவரின் சிரிப்பும்
அறைக்கு வெளியேயும் கேட்டது.
கணேஷின் தந்தையின் முகத்தில் புன்னகை விரிந்தது.
சமையலறைக்குச் சென்று கிண்ணங்களில்
தக்காளி சூப் எடுத்துக் கொண்டு
விசாலியைக் காண வந்த காமாக்ஷியம்மாவும்
''பேஷ் பேஷ், நம் விசாலிக்கு உடம்பு சரியாகி விட்டது"
என்று இருவரிடம் கிண்ணத்தைக் கொடுத்தாள்.
''அம்மா நாங்கள் வெளியே வந்து சாப்பிடுகிறோம்.
அறை முழுவதும் சாப்பாட்டு வாசனை.மீனாக்ஷி!!"
என்று விளித்தபடி வெளியே வந்த அம்மாவைப் பார்த்துக்
கால்களைக் கட்டிக் கொண்டது குழந்தை.
நம் விசாரத்தில் இந்தக் குழந்தையை மறந்தோமே
என்று அதை வாரி அணைத்துக் கொண்டவளின் தோள்களில்
மாமியாரின் கைகளும் படர்ந்தன.
சாப்பாட்டு மேஜையிலிருந்து இதைப் பார்த்த
அப்பா நடேசன் கண்களில் ஆனந்தம்.
''சரி கமலி. கிளம்பு. இந்த மதுரை வெய்யில்
நமக்கு ஆகாது. திண்டுக்கல் காற்று மாதிரி வருமா""
என்று எழுந்தார்.
தந்தையின் உறுதியைக் கண்ட கமலி மறுக்கவில்லை.
திண்டுக்கல் போய்ச் சேரும் வரை
மகள் காதில் நிதானமாக இருக்க வேண்டிய
அவசியத்தைச் சொல்லியபடி வந்தார்.
அடக்கம் இல்லாவிட்டால் வாழ்வில்
என்னாளும் முன்னேற முடியாது.
அதுவும் பெண்களுக்கு எவ்வளவு அவசியம்.
பழகும் விதத்தில் எல்லோரிடமும் மரியாதை பெறும்படிப்
பழக வேண்டும் என்று வலியுறுத்தினார்.
வேண்டா வெறுப்பாகக் கேட்டுக் கொண்ட கமலி
''முடிந்த வரை கடைப் பிடிக்கிறேன் அப்பா.
எனக்கு விசாலி வீட்டுக் கட்டுப்பாடு பிடிக்கவில்லை,
என் கல்லூரி விடுதிப் பெண்கள் இன்னும்
சுதந்திரமாக இருக்கிறார்கள்...என்னை அங்கே
சேர்த்து விடுங்கள்.காமாட்சி மாமி ரொம்பக் கட்டுப்
பெட்டி. இந்த விசாலியும் அவர்கள் கட்சி.
கணேஷ் ஒருத்தரைத்தான் எனக்குப் பிடிக்கும்.
அவரையும் விசாலி எடுத்துக் கொண்டுவிட்டாள்"
என்ற மகளின் பேச்சு அவரை அதிர வைத்தது.
வயசுக் கோளாறு என்று வைத்துக் கொண்டாலும்
இதைத் திசை திருப்ப வேண்டும் என்று
தீர்மானித்த பிறகு
எல்லாமே அந்தந்தக் கட்டத்தில் அடங்கின.
திங்கள் அன்று மதுரை திரும்பியவர்கள் கமலியின் உடமையோடு
கல்லூரி விடுதியில் சேர்ந்தார்கள்.
இன்னும் ஒரு பெண்ணோடு கமலிக்கு
அறை கிடைத்தது. ஆனந்தமாக அவள் விரும்பிய சுதந்திரம் கிடைத்தது.
அங்கேயும் கட்டுப்பாடுகள் உண்டு
என்று தெரிந்ததும் கொஞ்சம் சுணக்கம் தான்.
ஆனால் பாடங்கள் கற்றால் தானே செம்மை வழியில்
செல்ல முடியும்.?
படித்து முடித்து அதே கல்லூரியில் பாட போதகராகவும்
பரிமளித்தவள்,
தான் விரும்பிய ஒரு டென்னிஸ் விளையாட்டு வீரரைக்
கைபிடித்தாள்.
விசாலி,கணேஷ்,மற்றும் பெற்றோர் ஆசியுடன்
அவர்கள் சென்னைக்குக் குடி பெயர்ந்தார்கள்.
இன்னும் அனைவரும் நலமாகப் பேரன் பேத்திகளுடன்
நல் வாழ்க்கை வாழ்கிறார்கள்.
நல்ல தந்தையும் தாயும் இருந்து அவர்கள் சொல்வழி நாமும் நடந்தால்
வாழ்வு என்றும் சிறக்கும்.
இந்தப் பயணத்தில் என்னுடன் வந்த அனைவர்க்கும் நன்றி.
பெயர்,ஊர்கள் மாறினாலும் கதை அதுதான்.
வானில் என்ன?
வல்லிசிம்ஹன்
திடீரென்று வானில் இருந்து விமான இஞ்சினின் பாகம் பாகம் வந்து விழுந்தால்
எப்படி இருக்கும்.?
யாருக்கும் அடிபடவில்லை. இறைவன் கருணை. https://youtu.be/Ez0z8KNUA3s
Saturday, February 20, 2021
Friday, February 19, 2021
என்றும் இனியவை பாடல்கள் சில
சுஜாதா'' என்ற படம் வங்க மொழி நாவலைப் படமாக்கப்பட்டது. சமூக
அவலங்களையும்
அதைத் தீர்க்கும் காதலரையும் வைத்து எடுக்கப் பட்ட படம்.
மிக மிக அருமையான நடிப்பில்,
சுனில் தத்தும்,நூதனும் பாத்திரங்களாகவே
மாறி இருப்பார்கள்.
அந்தாஸ்' என்னும் பெயரில் வந்த படம் பெரும் வெற்றி பெற்றது.
பாடல்கள் அத்தனையும் இனிமை.
அந்தப் படத்திலிருந்தும்
இரு பாடல்கள். இதே போல தமிழில்
கனி முத்துப் பாப்பா என்றொரு படமும் வந்தது.
Thursday, February 18, 2021
பாகற்காய் மெழுக்குப்பரட்டி.
வல்லிசிம்ஹன்
பாகற்காய் மெழுக்குபரட்டி
+++++++++++++++++++++++++++++++
கோவை சென்ற புதிது. தடாகம் ரோடில் டிவிஎஸ்
நகரில் 1970 காரடையான் நோம்பன்று போய் இறங்கினோம்.
நல்ல பெரிய பங்களா. சுற்றி வர மண் தரை.
அங்கங்கே புல் வெளி. தண்ணீர் இல்லாததால்
வளராத செடிகள்.
கிட்டத்தட்ட 70 அடி பள்ளத்தில் தண்ணீர் தேங்கிய கிணறு.
வரை எல்லாக் காரியங்களையும் ஒன்றாகச் செய்வோம்.
சின்னவன் ஆகஸ்டில் தான் பிறக்கப் போகிறான்.
மகள் மழலை இனிமை. பெரியவன் நறுக்குத் தெறித்தாற்போல பேசுவான்:)
இத்தனூண்டு இருந்து கொண்டு
பெரியவன் செய்யும் விஷயங்கள் சொல்லி
முடியாது. இரண்டயும் காத்தாட
உட்கார்ந்து விளையாடட்டும் என்றால்,'' அண்ணா,
கோலி வாய்ல போட்டு" என்று சின்னது கத்தும்.
உடனே போய் அவனைத் தலை கீழா பிடித்து
முதுகில் தட்டி,
வாயில் விரலை விட்டு எடுப்பேன்.
இப்ப சொன்னால் ஐயா சொல்வார்.
குழந்தைகள் கைகளில் கோலி குண்டு கொடுக்கக்
கூடாதுமா என்று:)
சரி பாகல்காய்க்கு வரலாம்.
எதிர்த்த வீட்டில் ,சிங்கத்தின் உதவி மானேஜர் இருந்தார். திருனெல்வேலிக்காரர்.
திரு ஷண்முகம் பிள்ளை.
மனைவி கோமதி.
மூன்று மகள்கள் அவர்களுக்கு.
ராஜேஸ்வரி, பரமேஸ்வரி, செண்பக வடிவு.
குழ்ந்தைகளோடு அங்கே போய் நேரம் செலவழிப்பதும்,
அவர்கள் இங்கே இருப்பதுமாக
நாட்கள் இனிமையாக நகர்ந்த போது நான் கற்றுக் கொண்ட
சமையல் முறைகள் சில.
அதில் ஒன்றுதான் இந்தப் பாகல் மெழுக்குப்பிரட்டி.
எனக்கு இன்னும் அந்தப் பிரட்டி, மெழுக்கு
அர்த்தம் தெரியாது.:)
தேவையான பொருட்கள்.
நல்ல அளவில் தேங்காய் எண்ணெய்,
இளம் பாவக்காய் அரைக் கிலோ
சின்ன வெங்காயம் கால் கிலோ
மலைப்பூண்டு கால் கிலோ.
சிகப்பு மிளகாய் பத்து
எல்லாவற்றையும் ஒரே அளவில்
வட்டமாகத் திருத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.
தேங்காய் ஒரு பெரிய மூடி துருவி வைக்கணும்.
இரண்டு தேக்கரண்டி சீரகம் ,
நல்ல கனமான இரும்பு வாணலியில் தேங்காய் எண்ணேய் விட்டு
நன்றாகச் சூடானதும்
சீரகம், கிள்ளிவைத்த மிளகாய் எல்லாவற்றையும் போட்டு வதக்கணும்.
அடுத்தாற்போல் சின்ன வெங்காயம், பூண்டு, தேங்காய்,
பாகற்காய் எல்லாவற்றையும்
ஒன்றாகப் போட்டு கைவிடாமல் வதக்கணும்.
உப்பு சேர்த்து வதக்கும் போது அரைமணி நேரத்தில்
எண்ணெய் பிரிய ஆரம்பிக்கும்.
அவ்வளவுதான் கருவேப்பிலை போட்டு அடுப்பை அணைத்து விடலாம்
மூடி வைக்கவேண்டியது அவசியம்.
எஞ்சாய் பாகற்காய்!!!!!!!!!
பெரியவனும் ,மகளும் கோவையில் பாடும் பாட்டு இது.
Showing results for what does mezhukkupuratti mean?
Search instead for what does mezhukkuvaratti mean?
Search Results
Featured snippet from the web
Mezhukkupuratti is a style of preparation for vegetarian dishes in Kerala (especially in Central Travancore) where the vegetable is stir-fried with spices. Chopped onions or shallots may also be used. Usually the dish is prepared from any of the following vegetables: ... Dish is called as Pavakka mezhukkupuratti.
Wednesday, February 17, 2021
உறவு பலப்படும் நேரம்...அவர்க்கும் எனக்கும்...4
வல்லிசிம்ஹன்
எதேச்சையாக மதுரை வந்தார் விசாலியின் அப்பா.
ரங்காச்சாரி கடையில் அப்போது பிரபலமாக
விற்றுக் கொண்டிருந்த சின்னாளப்பட்டு
புடவைகளை நூற்றுக்கணக்கில்
வாங்கிக் கொண்டு ,சதர்ன் ரோட்வேஸ் வண்டியில்
திண்டுக்கல்லுக்கு அனுப்பிவிட்டு,
அப்படியே பேத்தி மற்றும் மகள்களைக் காண வந்தார்.
பேத்தி ,தாத்தாவைக் கண்டதும் தாவி வந்தாள்.
எங்கே விசாலியைக் காணோம்
என்றவரிடம் காமாட்சி....விசாலியின் மாமியார்
அவளுக்குத் திடீரென்று வந்த காய்ச்சல், மயக்கம்
எல்லாவற்றையும் விளக்கினார்.
''அதெப்படி சொல்லி விட்டது போல வந்துவிட்டீர்கள்.?
போனவாரம் தானே கமலி கல்லூரியில் சேர்ந்தாள்!!"
என்று ஆச்சரியப்பட்டார் காமாட்சி.
''உங்களிடம் சொல்வதில் என்னம்மா இருக்கு.
விசாலி அப்பாவி. கமலி அவளை மிகவும் துன்புறுத்துவாள்.
ஏதோ தோன்றியது வந்தேன் '' என்றார்.
கொஞ்சம் மௌனமாக இருந்த மாமி,
நேற்று கமலி, உங்க மாப்பிள்ளையுடன்
ஸ்கூட்டரில் செல்வதாகச் சொன்னதும்
விசாலி போய்
படுத்துக் கொண்டுவிட்டாள். ஏன் இப்படி நோஞ்சானாக
மனசை வைத்துக் கொண்டிருக்கிறாள்?
கணேஷ் ஒரு பிள்ளையாக வளர்ந்தவன்.
கமலியை இன்னோரு சகோதரியாகத் தான் பார்ப்பான்"
என்று சொல்லிவிட்டுத் தயங்கினாள்.
மறுக்க முடியாமல் யோசித்த நடேசன்,
''கமலியின் அசட்டுத் தனத்துக்கு எல்லை
இல்லாமல் போயிற்று.
இன்னோருத்தரைத் துன்புறுத்துவதில் என்ன மகிழ்ச்சி'காண்பாளோ,
தெரியவில்லை. இன்று வெள்ளிக்கிழமை.
நான் அவளை அழைத்துக் கொண்டு போகிறேன்.
நீங்கள் தவறாக எண்ண வேண்டாம்.விசாலி
அவளிடம் நிறைய அவதிப் பட்டிருக்கிறாள்''
என்று மன்னிப்புக் கூறும் விதத்தில் சொன்னார்.
''அடடா. சின்னம் சிறு வயதுப் பெண்கள் இருவரும்.
நாம் நிதானமாக இருப்போம்'' என்றாள்.
வாசலில் வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்டு
கவலையுடன் சென்றார் நடேசன்.
எதிர்பாராமல் தந்தையைக் கண்டதும்
விசாலியின் கண்களில் நீர்.
கணவனின் கைகளைப் பற்றிக்
கொண்டு வீட்டுக்குள் வந்தாள்.
எனக்கு கொஞ்சம் ரத்த அழுத்தம் அதிகமாகி இருந்தது
அத்தை. ஒரு நாள் ஓய்வெடுத்தால் சரியாகிவிடும். கவலை
வேண்டாம் என்று பொதுவாகச் சொன்னாள்.
இருவருக்கும் அதிர்ச்சி.கணேஷைப் பார்த்தார்கள்.
'' ரத்த பரிசோதனைக்கு ,சாம்பிள் எடுத்துக் கொண்டார்கள்
அம்மா. அயர்வும், ஊட்ட சத்து குறைந்திருப்பதும் தான்
காரணம். நம் விசாலிக்கு அதைக் கொடுக்கத்தானே
நாம் இருக்கோம்'' என்று மனைவியைத் தோளோடு
அணைத்துக் கொண்டான்.
நடேசனுக்குத் தொண்டையில் ஏதோ அடைத்தது.
''நான் ,அவளைக் கொண்டு போய் வைத்துக்
கொண்டு அனுப்பட்டுமா '' என்று கேட்டார்.
விசாலியின் கண்களில் பரவிய பயத்தைக் கண்டு
காமாட்சி,புரிந்து கொண்டவராக
உடனே அவளை அழைத்துக் கொண்டு
அறைக்குள் சென்றார்.
''நீ எங்கேயும் போக வேண்டாம் அம்மா. நாங்கள்
பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லி
அவளைப் படுத்துக் கொள்ள வைத்து,
கணேஷிடம் கண் காட்டி உள்ளே
போகச் சொன்னார்.
சம்பந்தி ஒரு நிமிஷம் மாடிக்கு வாருங்கள்.
இவர் உங்களிடம் தோட்டம் பற்றிக் கேட்க வேண்டும் என்று சொன்னார்.
நான் காப்பி எடுத்துக் கொண்டு வருகிறேன்
என்று உள்ளே சென்றாள்.
மருமகளுக்கு சாத்துக்குடி சாறு கொடுத்து தூங்கச் சொல்லி
விட்டு, ''கணேசா இங்கேயே இரு""
என்று மாடிக்கு விரைந்தாள்.
கணேஷின் தந்தை சுப்ரமணியம்
சம்பந்தியை வரவேற்று ஊர் நிலைமையை
விசாரித்தார்.
''எனக்கு இப்போது பெண்கள் கல்லூரி செல்லும் பாக்கியம் கிடைத்திருக்கிறது""
என்று சிரித்தவரைப்
பார்த்த நடேசன், ''உங்களுக்கெல்லாம் தொந்தரவு கொடுத்து விட்டேன்.''
என்றார் வருத்தத்துடன்.
''கமலி ரொம்ப கலகலப்பாகப் பழகுகிறாள்.
நல்ல பெண் ,உங்களுக்குக் கவலை வேண்டாம்'' என்றார்.
சற்றே யோசித்த நடேசன், ''நான் மாலை பஸ்ஸில்
ஊருக்குப் போகிறேன்.கமலி வரட்டும்.
பிறகு அவளைக் கல்லூரி விடுதியில் சேர்க்க
முயற்சிக்கப் போகிறேன்.
''மாமிக்கு விசாலியையும் கவனிக்கணும், மாப்பிள்ளை அலுவலகம் போக
உணவு தயார் செய்ய வேண்டும். இதன் நடுவில் கமலிக்கும் எல்லாம் செய்வது
அவருக்கு சிரமம். கமலி வீட்டு வேலையில்
அவ்வளவு ஈடுபாடு காண்பிக்க மாட்டாள்"
என்றார்.
''விசாலிக்குத் தற்காலிகமாகத் தானே நலமில்லை.
இரண்டு நாட்களில் சரியாகி விடும்.அவசரப் பட்டு
கமலியை விடுதியில் விடவேண்டாம்'' என்று அன்புடன்
சொன்னார் சுப்ரமணியம்,
காமாட்சி இருவரையும் சாப்பிட அழைத்துச் சென்றார்.
சிறிது நேர உறக்கத்துக்குப் பின் ,கொஞ்சம் தெளிவாக இருந்த
கமலியிடம் தந்தை அருகில் அமர்ந்து பேசினார்.
""ஏனம்மா, இப்படிக் கலவரப் படுகிறாய்./
உன் தங்கையிடம் நம்பிக்கை இல்லையானால்
கணவரிடம் நம்பிக்கை வேண்டாமா?
உன்னை மீறி என்ன நடக்கும் என்று பயப் படுகிறாய்.
முன் மாதிரியா.? இப்போது ஒரு குழந்தைக்குத் தாய்.
தைரியமாக எந்தப் பிரச்சினையையும் அணுக வேண்டும்.
சலனத்துக்கு இடம் கொடுத்தால் தாம்பத்யம்
ஆட்டம் கண்டுவிடும்.உன்னை நம்பு, கணேஷையும் நம்பு.
அன்பான மாமியார்,மாமனாரை நம்பு.கடவுள் உனக்குக் குறை வைக்க
மாட்டார்" என்று தைரிய வார்த்தைகளைச் சொன்னார்.
அவருக்கு தன் மகள்களைப் பற்றி நன்றாகவே தெரியும்.!!
பிரச்சினைகளிலிருந்து ஓட முடியாது புரிகிறதா...என்ற தந்தையைப் பார்த்தவளின் முகத்தில் வெட்கம் தெரிந்தது.
''ஆமாம் பா,சின்னக் குழந்தை போல நடந்து கொண்டுவிட்டேன்.
இனி கவனமாக இருக்கிறேன் பா.
நீங்கள் இரண்டு நாட்கள் தங்கிப் போகலாமே''என்று கேட்டுக் கொண்டாள்.
''இல்லை அம்மா. உனக்கு ஓய்வு தேவை.
அப்பா உன்னை விட்டுக் கொடுக்க மாட்டேன்.
அடுத்த வெள்ளிக் கிழமை வருகிறேன்.''
என்றபடி எழுந்து குழந்தையுடன் விளையாடச் சென்றார்.
மாப்பிள்ளை எங்கே என்று தேடினால்
காணவில்லை.
உள்ளே இருந்து வந்த காமாட்சி கணேஷ்
கமலியை அழைத்துவரப் போயிருப்பதைச் சொன்னாள்.
குழந்தையைத் தூக்கியபடி வாசலுக்குச் சென்றவர்
காதில் கமலியின் கலகலா சிரிப்பு எட்டியது.
தன் அத்திம்பேரின் முகத்தையே பார்த்தபடி
வந்தவள் தந்தையைக் கண்டதும் சிறிது
அடக்கமாக வந்தாள்.
''கமலி 5 மணி பஸ்ஸைப் பிடிக்க வேண்டும்.
நீ ஏதாவது சாப்பிட்டுவிட்டுக் கிளம்பு. அம்மம்மா வந்திருக்கிறாளாம்.
உன்னை உன் அம்மா அழைத்து வரச் சொன்னாள்"
என்றார்.
அடுத்த பகுதியில் பூர்த்தி செய்யலாம்.
Tuesday, February 16, 2021
Barry Manilow - Can't Smile Without You - 1978
😀80s hit
😊😚😚Remembering Christopher Plummer
Sound Of Music.
என்றும் நம்முடன்
வல்லிசிம்ஹன் https://youtu.be/pRZXDaweU10
என்றும் நம்முடன் இருக்கும் குரல்.
சுசீலா அவர்களைப் பற்றி வெறும் காணொளி
போதாது. அவர்களின் குரலை எத்தனை
பதிவில் பதிந்தாலும் ஒரு பெரிய மலையின் ,சமுத்திரத்தின்
ஓரமாக நின்று பார்க்கும்
சிறிய முயற்சியாகத் தான் முடியும்.70 ஆண்டுகளாக
நம்மைத் தொடரும் இந்தக் குரல்
தந்த களிப்பும், நிம்மதியும்,உற்சாகமும்
வேறு எவராலும் தர முடியாது.
நம்முடன் இப்பொழுதும் ஒளிவிடும் இந்த
அருமையான வரத்தைப் பற்றி ஒரு சின்ன காணொளி.
Monday, February 15, 2021
Pazham Pradhaman || Over Ripe Plantain Payasam || Recipe in Tamil
இன்று இருபைத்தாந்தாம் ஆண்டு திருமண நாள்
கொண்டாடும் மகளுக்கும் மருமகனுக்கும்
இனிய நல் வாழ்த்துகளும் ஆசிகளும்
வழங்கும்படி
எல்லாப் பெரியவர்களிடமும் வேண்டிக் கொள்கிறேன்.
இறைவன் அருள் என்றும் அவர்களுடன் இருக்க வேண்டும்.
குடும்பம் தழைத்தோங்க வேண்டும்.
அவர்க்கும் எனக்கும்.....3
வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
கமலியும் வந்துவிட்டாள். கூடவே வந்த தந்தை அவளை இரண்டொரு நாள்
கல்லூரி வரை சென்று விட்டு வந்து
அழைத்தும் வந்தார்.
விசாலிக்கு ஒரு பக்கம் தங்கை படிப்பாப் பற்றிப்
பெருமையாக இருந்தாலும்,
அடுத்து அவள் செய்தது அதிர்ச்சி கொடுத்தது.
ஒரு நாள் சாயந்திரம் எல்லோரும் சாப்பிடும்போது''அத்திம்பேர் ,தினமும் நீங்கள் எங்கள் காலேஜ் வழியாகத் தானே செல்கிறீர்கள்?
நானும் உங்களோடு வந்து இறங்கிக் கொள்கிறேன்.
சாயந்திரம் தோழிகளுடன் வந்து விடுகிறேன் "
என்றாள்.
விசாலிக்கு அடிவயிற்றிலிருந்து ஆத்திரம் பொங்கியது.
மாமியாரைத் தீனமாகப் பார்த்தாள்.
அவருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
குழந்தைத்தனமாகப் பேசுகிறாள்,
தன் மகன் மறுத்து விடுவான் என்றெண்ணி கணேஷைப்
பார்த்தாள். அவனோ யோசிக்கவே இல்லை.
அதனால் என்ன தயாராக இருந்தால்
அழைத்துப் போகிறேன்.
தாமதமானால் நிற்க மாட்டேன் என்று சொல்லிவிட்டான்.
அவனுக்கு மனதில் தப்பென்று படவில்லை.
விசாலிக்குத் தான் மனம் படபடத்தது.
இந்தப் பூட்டிலிருந்து எப்படி வெளிவருவது
என்று சிந்தித்து மனம் நொந்தாள்.
சாப்பிட்டு எழுந்திருக்கும் போது கமலி அவளைப்
பார்த்து கண் சிமிட்டியது இன்னும் வேதனை.
பலன்........அடுத்த நாள் காலை எழுந்திருக்கும் போதே
தலை நோவு.
கண்கள் சிவக்கக் காய்ச்சல் கண்டது.
மனைவி எழுந்திருக்காமல் இருப்பதைப்
பார்த்து திடுக்கிட்டான் கணேஷ்.
குழந்தை மீனாக்ஷி விடாமல்
அழ,
கணேஷின் தாயார் உள்ளே வந்தாள்.
என்னா ஆச்சும்மா விசாலி,?என்று தொட்டுப் பார்த்தவளுக்கு
அதிர்ச்சியும் கவலையும் சேர,
கணேஷ், நேற்றிலிருந்தே அவளுக்கு வேலை செய்யத் தள்ளவில்லை.
நீ இன்னிக்கு லீவு போட்டு விட்டு
அவளை டாக்சியில் டாக்டரிடம் அழைத்துப் போ.
மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்''
என்ற சொன்னபடி குழந்தையை அழைத்துக்
கொண்டு வெளியே சென்றாள்.
என்ன செய்தி என்று அறிய அறை வாசலில் நின்ற கமலி,
விசாலி துவண்டு படுத்திருப்பதும்,
கணேஷ் அவளுக்குத் தெர்மாமீட்டரில்
ஜுர அளவைப் பார்ப்பதும் தெரிந்தது.
அன்று முக்கியமான ரெக்கார்ட் ஒன்றைக்
கல்லூரியில் கொடுக்க வேண்டி இருந்தது
நினைவுக்கு வர, விசாலியின் மாமனார் உதவியை
நாடினாள்.
அவரும் தானே அவளை டாக்சியில் கொண்டுவிடுவதாகச் சொல்ல
அன்றைய பிரச்சினை தீர்ந்தது.
ஒன்றுமே அறியாமல் உறக்கத்தில் இருந்தாள்
விசாலி.
கணவன் அழைத்துக் கொண்டு சென்ற போதும்
உடல் தளர்வு அவளைப் பேச விடவில்லை.
குளிர் கைகளை உறைய வைக்கிறது.
அடுத்த பாகம் வெய்யில் வந்தவுடன்.
தொடரும்.
Sunday, February 14, 2021
Saturday, February 13, 2021
Friday, February 12, 2021
அவர்க்கும் எனக்கும் அமைந்த வாழ்க்கை.......பகுதி 2
வல்லிசிம்ஹன்
விசாலி கணேஷ் தம்பதி!!!!!!!!!!!
விசாலத்தின் கணவரைப் பார்க்கலாம் இப்போது.
கொஞ்சம் தி.ஜானகிராமன் கதை ,உயிர்த்தேனில் வரும் பூவராகன் மாதிரி
இருப்பார்.
நிதான உயரம். நல்ல கண்கள்,சிரித்த முகம்.
அரட்டை,உற்சாகம் என்று வலம் வருவார்.
பெண் பார்க்க வரும்போது அவரை செக் செய்ய என்னைதான்
எச்சரித்திருந்தாள்.
''ஒன்றும் வேண்டாம்.பாதங்கள் அழுக்கில்லாமல்
இருக்கான்னும் மட்டும் பார்த்து சொல்லு!!!"
என்றதும் எனக்கு வந்த சிரிப்புக்கு அளவே இல்லை.
இருந்தாலும் அக்கா ஆயிற்றே.!! ஒத்துக்கொண்டு
கண்கொட்டாமல் காத்திருந்து, ஜரிகை வேஷ்டிக்குக்
கீழே தெரிந்த பாதங்களை ஒரே நொடியில்
பார்த்துவிட்டு,
அவளிடம் பிறகு சொன்னேன்.''நீட்டா இருக்கு சாலி,எல்லா விரலும்
சரியா இருக்கு" என்று பலமான Giggles க்கு நடுவே
சொன்னேன். 18 வயதில் அவளுக்கு எப்படி இவ்வளவு விஷயங்கள்
தெரிந்திருக்கு என்று எனக்கு ஆச்சரியம்.
என்னைப் பெண் பார்க்க சிங்கம் வந்த போது
எனக்குப் பழைய நினைவு வர சிரிப்பில் முகம் சிவந்து போச்சு.
அம்மா கண் காட்டியதில்
அடக்கிக் கொண்டேன்!!!:))
வாழ்க்கையின் களங்கம் இல்லாத தருணங்களில்
இதுவும் அடக்கம்.
விசாலிக்கு அவரை,,,, அதுதான் நம்ம ஹீரோ கணேஷ்
மிகப் பிடித்து விட்டது.
அவருக்கும் அப்படியே .
திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் வந்து விட்டது. மதுரை தல்லாகுளத்தில்
மாமியார் வீடு. மாமனாரும் ,மாமியாரும் விசாலியைப்
பொன் போலப் பார்த்துக்கொண்டார்கள்.
அவர்கள் குழந்தையைக் கவனித்துக் கொண்ட போது,
விசாலி, கணவனுடம் அவனுடைய
வெஸ்பா ஸ்கூட்டரில் மதுரையின் சினிமாக் கூடங்கள்,
ஹாஜீமூசா, தோழி குடியிருந்த வக்கீல் புதுத்தெரு என்று
சென்று வருவாள்.
வாரத்தில் ஒரு நாள் புதன் கிழமை மீனாக்ஷி அம்மன்
தரிசனம் உண்டு. கூடவே புது மண்டபம்,
"இக்கி பிக்கி" அதாவது, வளையல்கள், காது தொங்கட்டான்,
கழுத்து மாலை என்று வாங்கி வந்து
அலமாரியை நிரப்புவாள். தாழம்பூ குங்கும வாசனையோடு
அவள் அலமாரி அழகாக இருக்கும்.
இந்த சமயத்தில் நாங்களும் பசுமலைக்கு வந்துவிட்டோம்.
தொலைபேசியில் என்னுடன் எப்பவாவது
பேசுவாள்.
அவர்கள் பெண்ணுக்கு மீனாக்ஷி என்றே பெயர் சூட்டினார்கள்.
மீனாக்ஷியின் ஆண்டு நிறைவு
பிரமாதமாக நடந்தது.
அங்கே வந்திருந்த விசாலியின் பெற்றோர்
கமலிக்கு லேடி டோக் கல்லூரியில்
பியூசி முதல் பகுதியில் இடம் கிடைத்திருப்பதாகவும்
ஹாஸ்டலில் விடலாம் என்று திட்டம்
என்றும் சொன்னார் விசாலியின் அப்பா.
விசாலி, ''இங்கே ஏன்பா சேர்க்கணும்?
திருச்சி சீதாலக்ஷ்மி கல்லூரியில் சேர்க்கலாமே,
இந்தக் கல்லூரியைவிட அது தேவலை இல்லையா''
என்றாள்.
விசாலியின் மாமனார் குறுக்கிட்டு
''அதெல்லாம் பரவாயில்லை,இதோ இங்க பக்கத்தில் இருக்கு லேடி டோக்.
போகவர சௌகரியம். நம்மகத்திலேயே
கமலி தங்கிக் கொள்ளட்டும்,
நீங்களும் கவலை இல்லாமல் இருக்கலாம்''
என்று சொன்னதும் விசாலியின் மனம்
சுணக்கம் கொண்டது.
அதைக் கண்ணுற்ற விசாலியின் மாமியார்,''அம்மா, இங்க உள்ள
வா.இந்தக் காப்பியைக் கொண்டு போய்க் கொடு''
என்று அழைத்தார்.
உள்ளே போனதும் உனக்கு இதில் என்ன ஆக்ஷேபணை.
பாவம் அவள் வந்து படிச்சுட்டுப்
போகட்டுமே என்று அன்புடன் கேட்க,
"அத்தை, அவள் சுபாவத்திலேயே என்னுடன்
ஒத்துப் போக மாட்டாள். வீணே குழப்பம் வேண்டாமே
என்று பார்த்தேன் / என்றதும்,
அதை நான் கவனிக்கிறேன் நீ கவலைப்
படாதே. உங்க அப்பாவைப் பார்த்தால்
பாவமாக இருக்கு.
சரின்னு சொல்லு என்ற மாமியாரைப்
பார்த்ததும் விசாலிக்குக் கண் கலங்கிவிட்டது.
வெளியே வந்து, ''அப்பா கமலி இங்கே வருவதில்
எங்களுக்கு சிரமம் இல்லை.
நேரக் கட்டுப்பாடுகளுக்குள் அவள் இருக்கணும்''
என்றாள்.
தந்தை முகத்தில் நிம்மதி படர்ந்தது.
ஜூன் கடைசியில் நாங்கள் வருகிறோம்
என்று சொல்லி விடை பெற்றார்கள்.
இதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை
என்பது போல் அத்திம்பேருடன்
அரட்டை துவங்கிவிட்டாள் கமலி.
Thursday, February 11, 2021
Wednesday, February 10, 2021
அவர்க்கும் எனக்கும் உறவு......சிறுகதை ......1
வல்லிசிம்ஹன்
" இலையிலிருந்து எடுக்காதே!! சத்தமாகச் சொன்னாள் விசாலம்.
என்னக்கா>? நான் தங்கை தானே .உன் ரத்த சம்பந்தம்..வெறும் வடை விள்ளலுக்கா இந்த சத்தம்?
என்று சிரிக்கிற தங்கை கமலத்தைப்
பார்த்துக் கடு கடுத்தாள் அக்கா.
எனக்குக் கல்யாணம் ஆயாச்சு. நான் வேற்று அகத்து
மனுஷி. இன்னோருத்தர் பொண்டாட்டி.
எனக்கும் அவருக்கும் தான் இந்த உணவு பந்தம்.
அதுவும் இன்னிக்கு இங்கே
விசேஷம் நடக்கும் போது
இது என்ன ஆகாத்தியம் ;''? என்று கடுகடுத்தாள்.
ஐய்ய , கோச்சுக்காதே.
என்னமோ பெரிய தப்பு நடந்த மாதிரி கத்தாதே!
உங்க அகத்துக்காரரை நன்றாக முடித்து வைத்துக்கோ"
என்று சொன்னபடி ஓடிய தங்கையை
கவலையுடன் பார்த்தவளுக்குப் பசி கூட போய்விட்டது.
விசாலத்துக்கு எப்பொழுதுமே, தன் உணவிலோ,
உடையிலோ யாரும் தொட்டு எடுத்தால்
மிக மிகக் கோபம் வரும்.
அவளை விட நாலு வயது குறைவான தங்கைக்கு
அவளை சீண்டுவதே பழக்கம். அதில் ஒரு மகிழ்ச்சி.
திருமணமாகி முதல் முறையாக இந்த வீட்டு விழா ஒன்றில்
பங்கெடுக்க விசாலத்தின் பெற்றோரும் தங்கையும்
வந்திருந்தனர்.
அப்போது நடந்த விருந்தில் தான் இந்த நாடகம்.
அதற்கு மேல் சாப்பிடப் பிடிக்காமல்
இலைகளை எடுத்துச் சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்
விசாலம்.
பெற்றோர் புறப்பட்டு சொந்த ஊர் சென்றபிறகு
ஒரே மாதிரி நடையில் வாழ்க்கை சென்றது.
1960 களின் ஆரம்பகாலத்தில் கல்விமுறை
எஸெஸெல் சியிலிருந்து 11 வகுப்புகள்
கொண்ட தேர்வு முறையானது.
அப்போது இந்த விசாலம் எனக்கு சீனியர்.
அவள் தங்கை எனக்கு ஒரு வருடம்
சிறியவள்.
எல்லோரும் ஒரே தெருவில் குடியிருந்ததால்
பள்ளிக்குச் சேர்ந்து வருவோம் போவோம்.
விசாலத்துக்குப் பள்ளிப் படிப்பு முடித்த கையோடு திருமணம்.
மாப்பிள்ளைவீடு மதுரை.
திண்டுக்கல்லில் வீட்டிலேயே திருமணம்
நடந்தது.
ஜவுளிக்கடை நடேசன் ,விசாலத்தின் தந்தை.
நல்ல வசதியுள்ள குடும்பம்.
சற்றே மா நிறமாக இருந்தாலும்
முக அழகும், தீர்க்க நாசியுமாக வடிவழகியாக இருப்பாள்.
அதற்கு நேர்மாறாக தங்கை. நல்ல உயரம். கண்ணில் குறும்பு.
தந்தை கடைக்கே சென்று
நல்ல வர்ணங்களைத் தேர்ந்தெடுத்து டெய்லரிடம் தைத்துக் கொள்வாள்.
அக்கா உடைகளையும் எடுத்துக் கையாண்டதில்
அக்கா தன் அலமாரியைப் பூட்டி வைத்துக் கொண்டாள்.அக்காவின் திருமணத்தின் போது,
கமலத்துக்குத் தான் நிறைய வரவேற்பு.
சகலருடனும் அரட்டை.
வரவேற்பிலிருந்து ஆரம்பித்து,
கட்டு சாதக் கூடை வரை எடுக்கப் பட்ட எல்லாப்
படங்களிலும் அவள் இருந்தாள்.
அன்றே அவளுக்கும் திருமணம் நிச்சயமாகி விடுமோ
என்று தோன்றியது எனக்கு.
அவளுக்கு வயது 14 என்றால், அவளைச் சுற்றி வந்த
காளைகளுக்கு(பசங்க) இருபதுக்குள் இருக்கும்.
சிரித்துப் பேசினாலும் படிப்பை முடித்து
மதுரையில் கல்லூரிப் படிப்பைத் தொடர வேண்டும் என்றே
ஆசை அவளுக்கு,...........தலைவலி ஆரம்பித்தது விசாலத்துக்குத் தான்.
தொடரும்.
Tuesday, February 09, 2021
Monday, February 08, 2021
இன்றும் இன்னும் வரப்போகும் நாட்களுக்கான.
தை மாத நாட்கள் குளிர் நின்று வெய்யில் படர ஆரம்பிக்கும்
காலம்.
பலப் பல திருமண் நாட்கள். இன்று
என் மாமனார் மாமியார் திருமண நாள். 1930இல்
நடந்தது.
அந்தக் கால மைலாப்பூரில்
இப்போதைய லேடி சிவஸ்வாமி, அப்போதைய நேஷனல்
பெண்கள் பள்ளியில் படித்த பெண்ணைப்
பார்த்து இவளே என் மனைவி என்று தீர்மானம் செய்தவர்
பி எஸ் பசங்க பள்ளியில் படித்த மாமனார்.
அவர் கல்லூரிப் படிப்பை முடித்த பிறகே
திருமணம் நடந்தது.
அவ்வளவு பெரிய ஆளுமையுடன் இருந்தவரை
என் மாமியார் சமாளித்த விதம்
மிக அருமையும் சிறப்பும் நிறைந்தது.
மாமனாரின் அரட்டல், உருட்டலுக்கெல்லாம்
மசிந்து விடமாட்டார்.
''நீ இரு மாமா. நானெல்லாத்தையும் பார்த்துக்கறேன்
என்று சொல்லி விடுவார்.!"
பெற்ற நான்கு பெண்களுக்கும் அருமையாகச் சீர் செய்து
சுணங்காமல் பார்த்துக் கொண்டு,
மாமியார் சொற்களுக்கு அசராமல்,
துணைக்கு என்னையும் மருமகளாக
ஆக்கிக் கொண்டவர்.
47 வருடங்கள் மங்கலமாக வாழ்ந்து
மாமனாரையும் நிறைவாகவே அனுப்பி வைத்தார்.
ஒரு குடும்பம் ஸ்திரமாக இருக்க
என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ
அவற்றைச் செவ்வனே செய்தவர்.
கண் பார்வை மங்கின காலத்திலும் அவர் காட்டிய தைர்யமும்
தன் நம்பிக்கையும் அளவிட முடியாதது.
இந்த இனிய தம்பதியை,
என் கணவரை எனக்குக் கொடுத்தவர்களைப்
போற்றி வணங்குகிறேன்.
👫👫👫👫👫👫👫👫👫👫👫👫👫👫👫👫👫👫👫👫👫👫👫👫👫👫👫👫👫👫👫👫👫
Sunday, February 07, 2021
Saturday, February 06, 2021
Friday, February 05, 2021
தாளிப்பு வடகம் செய்வது எப்படி /
இதைத் தவிர பூண்டு வெங்காயம் சேர்க்காமல்
நாம் செய்யும் குழம்பு வடகம் இருக்கவே இருக்கு.
உளுத்தம் பருப்பு ஊறவைத்து
பெருங்காயம்
மிளகாய் வற்றல் சேர்த்து
தண்ணீர் விடாமல் அரைத்து,சில்லு சில்லாக
வெய்யிலில் நன்றாகக் காயவைத்தால்
சேமித்து வைத்துக் கொண்டு கொதிக்கும் குழம்பில்
இந்த வடாத்தை வறுத்துப் போடலாம்.
அந்த மணமே தனி.
பாட்டி பூசணிக்காய் கூட்டுக்கும் இதை சேர்ப்பார்.
Thursday, February 04, 2021
திருமணம் என்ற நல்ல பந்தம்.
வல்லிசிம்ஹன்
வாழ்வில் சில நாட்கள் பெற்றோருடன்.
சில நாட்கள் நண்பர்களுடன். சில நாட்கள் சகோதர சகோதரிகளுடன்.
வாழ்வு முழுமை பெறுவது , துணை என்று ஒருவரோ ஒருத்தியோ
கிடைக்கும் போதுதான்.
பல உயிர்களுக்குக் கிடைக்கக் கூடிய நல்ல துணை
என்றும் மனத்திற்கு ஊட்டம் அளிக்கும்.
பரஸ்பரம் புரிந்தவர்கள் ஆக மாற சில வருடங்கள்
ஆகும்.
ஆனால் ஒருவர் இல்லாமல் மற்றவரால்
தனியே இயங்குவது கடினமே.
பொண்டாட்டி ஊருக்குப் போய்ட்டா '' ஜோக்
எல்லாம் சும்மா சொல்வது. அவர்களுக்கே மனதில்
உறுதியாக இறுதியாக நம்முடன் இருக்கப்
போவது இவள் அல்லது இவர் என்னும்
உண்மை.
இந்தத் திண்மை நிறைந்த ஆளுமையால்
வளர்க்கப் பட்ட குழந்தைகள்,
அவர்கள் திருமணத்திலும் ,அனத பந்தத்திலும் நிலைத்து இருப்பார்கள்.
என் பெற்றோர் அப்படி இருந்ததால் நான்ம் மண வாழ்க்கையில்
உறுதியாக இருந்தேன்.
என் கணவர் என் கரத்தைப் பற்றிய நாள்
இருவருக்கும் தோன்றிய ஒரே எண்ணம்
இந்த உறவு நிலைக்க நாம் தான்
உறுதியாக இருக்க வேண்டும் என்பதுதான்.
விளையாட்டுக் கோபங்கள் ,தாபங்கள்
எல்லாம் வந்து போனவை.
எங்களைப் பிரிக்க யாராலும் முடியாது என்பதே
நாங்கள் செய்து கொண்ட ஒப்பந்தம்.
எங்கே வேலை விஷயமாகச் சென்றாலும்
இரவு சாப்பாடு வீட்டில் தான். அந்த வண்டியோ ,
பைக்கோ வந்து நிற்கும் ஓசைக்காக
நான் காத்திருப்பேன்.
என்னளவு அத்தனை பேசாவிட்டாலும் செய்கையால்
உணர்த்தி விடுவார் சிங்கம்.
அவரை என்னுடன் 47 வருடங்கள் இணைத்து வைத்திருந்த
இறைவனுக்கு நன்றி.
இனி வருங்காலமும் அந்த துணை என்னுடன் இருக்கும்
என்பதில் எள்ளளவு சந்தேகமும் இல்லை.
இல்லறங்களை நல்லறங்களாக மாற்றுவது நம்
பொறுப்பு. இறைவன் துணை இருப்பான்.
நம் மக்கள் சுகம் பெற வேண்டும். அதற்கும் அவனே துணை.
தந்தையின் ஆசிகள் அவர்களுக்கு
என்றும் உண்டு. வாழ்க வளமுடன்.
நம் கோமதி அரசுக்கும் சேர்ந்தே இந்தப் பதிவு.
7 ஆம் தேதி மண நாள் அவர்களுக்கு.
திரு அரசுக்கும் தங்கச்சி கோமதிக்கும் மண நாள்
வாழ்த்துகள்.
NASA வேலையை உதறிவிட்டு விவசாயத்தில் புரட்சி கொண்டுவரும் மனுநீதி மாணிக்கம...
எப்படியாவது நல்ல ஆட்சி வரட்டும்.
நல்ல எண்ணம் நல்ல முயற்சி.
மனிதம் வளர வாழ்த்துகள். ஜெர்சி பசுவின் பாலை
ஆராய்ச்சி செய்து சொல்வது அதிர வைக்கிறது.
Wednesday, February 03, 2021
தந்தை என்னும் தெய்வம்
வல்லிசிம்ஹன்
தந்தையைப் போல் உலகிலே தெய்வம் உண்டோ
என்று ஒரு பழைய பாடல்.
சில பாடல்கள் நம்மை உலுக்கி
கலங்க வைக்கும்.
அனேகருக்கு தந்தை என்பவர் ஒரு முன் மாதிரி. எங்கள் அனைவருக்குமே
அப்பா என்றால் தனிதான்.
நாங்கள் ஒன்று கேட்டு அவர் தராமல் இருந்தார் என்பதே
கிடையாது.
அம்மாவின் சொற்களையும் மீறி அதை நிறைவேற்றுவார்.
இவர்கள் எல்லாம் இல்லாமல் நானும் இருந்து கொண்டிருக்கிறேன்.
அவர் இருந்தால் சொல்லி இருப்பார் உனக்கென்று கடமைகள்
இருக்கும் போது
அதிலிருந்து நழுவ முடியாது.
கீதையின் வார்த்தைகளைச் சொல்லுவார்.
பள்ளி நாட்களில் நான் வீடு திரும்ப நேரம் எடுத்தால்
திரும்பும் வழியில் அவரைப் பார்க்கலாம்.
என்னுடன் வரும் தோழிகளைக் கண்டுவிட்டு
வீடு திரும்பி விடுவார்.
என்னப்பா ,காவல் தெய்வமா உங்க அப்பா
என்று சொன்ன தோழியுடன் இரண்டு நாட்கள்
பேசவில்லை நான்.
என் தம்பியின் மகள் பள்ளியிலிருந்து வர
தாமதமாகுமா என்று கேட்டுத் தெரிந்து கொண்டு
ஹோலி ஏஞ்சல்ஸ் வாசலிலேயே
நிற்பார்.
திருமணம் நடந்தவுடன் கடிதங்களில்
அறிவுரை தொடருமே தவிர
மாப்பிள்ளையை விமரிசனம் எல்லாம்
செய்ய மாட்டார்.
அப்படி ஒரு பாசம் அவர் மேல்.
அதே பாசம் பேத்திக்கு நிச்சயம் செய்த மாப்பிள்ளையுடனும்.
அன்பு தெய்வம் அப்பாவுக்கு 25 ஆம் வருட அஞ்சலிகள்.
Tuesday, February 02, 2021
Subscribe to:
Posts (Atom)