பாகற்காய் மெழுக்குபரட்டி
+++++++++++++++++++++++++++++++
கோவை சென்ற புதிது. தடாகம் ரோடில் டிவிஎஸ்
நகரில் 1970 காரடையான் நோம்பன்று போய் இறங்கினோம்.
நல்ல பெரிய பங்களா. சுற்றி வர மண் தரை.
அங்கங்கே புல் வெளி. தண்ணீர் இல்லாததால்
வளராத செடிகள்.
கிட்டத்தட்ட 70 அடி பள்ளத்தில் தண்ணீர் தேங்கிய கிணறு.
வரை எல்லாக் காரியங்களையும் ஒன்றாகச் செய்வோம்.
சின்னவன் ஆகஸ்டில் தான் பிறக்கப் போகிறான்.
மகள் மழலை இனிமை. பெரியவன் நறுக்குத் தெறித்தாற்போல பேசுவான்:)
இத்தனூண்டு இருந்து கொண்டு
பெரியவன் செய்யும் விஷயங்கள் சொல்லி
முடியாது. இரண்டயும் காத்தாட
உட்கார்ந்து விளையாடட்டும் என்றால்,'' அண்ணா,
கோலி வாய்ல போட்டு" என்று சின்னது கத்தும்.
உடனே போய் அவனைத் தலை கீழா பிடித்து
முதுகில் தட்டி,
வாயில் விரலை விட்டு எடுப்பேன்.
இப்ப சொன்னால் ஐயா சொல்வார்.
குழந்தைகள் கைகளில் கோலி குண்டு கொடுக்கக்
கூடாதுமா என்று:)
சரி பாகல்காய்க்கு வரலாம்.
எதிர்த்த வீட்டில் ,சிங்கத்தின் உதவி மானேஜர் இருந்தார். திருனெல்வேலிக்காரர்.
திரு ஷண்முகம் பிள்ளை.
மனைவி கோமதி.
மூன்று மகள்கள் அவர்களுக்கு.
ராஜேஸ்வரி, பரமேஸ்வரி, செண்பக வடிவு.
குழ்ந்தைகளோடு அங்கே போய் நேரம் செலவழிப்பதும்,
அவர்கள் இங்கே இருப்பதுமாக
நாட்கள் இனிமையாக நகர்ந்த போது நான் கற்றுக் கொண்ட
சமையல் முறைகள் சில.
அதில் ஒன்றுதான் இந்தப் பாகல் மெழுக்குப்பிரட்டி.
எனக்கு இன்னும் அந்தப் பிரட்டி, மெழுக்கு
அர்த்தம் தெரியாது.:)
தேவையான பொருட்கள்.
நல்ல அளவில் தேங்காய் எண்ணெய்,
இளம் பாவக்காய் அரைக் கிலோ
சின்ன வெங்காயம் கால் கிலோ
மலைப்பூண்டு கால் கிலோ.
சிகப்பு மிளகாய் பத்து
எல்லாவற்றையும் ஒரே அளவில்
வட்டமாகத் திருத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.
தேங்காய் ஒரு பெரிய மூடி துருவி வைக்கணும்.
இரண்டு தேக்கரண்டி சீரகம் ,
நல்ல கனமான இரும்பு வாணலியில் தேங்காய் எண்ணேய் விட்டு
நன்றாகச் சூடானதும்
சீரகம், கிள்ளிவைத்த மிளகாய் எல்லாவற்றையும் போட்டு வதக்கணும்.
அடுத்தாற்போல் சின்ன வெங்காயம், பூண்டு, தேங்காய்,
பாகற்காய் எல்லாவற்றையும்
ஒன்றாகப் போட்டு கைவிடாமல் வதக்கணும்.
உப்பு சேர்த்து வதக்கும் போது அரைமணி நேரத்தில்
எண்ணெய் பிரிய ஆரம்பிக்கும்.
அவ்வளவுதான் கருவேப்பிலை போட்டு அடுப்பை அணைத்து விடலாம்
மூடி வைக்கவேண்டியது அவசியம்.
எஞ்சாய் பாகற்காய்!!!!!!!!!
பெரியவனும் ,மகளும் கோவையில் பாடும் பாட்டு இது.
Showing results for what does mezhukkupuratti mean?
Search instead for what does mezhukkuvaratti mean?
25 comments:
https://www.youtube.com/watch?v=jBspOUwBHRg
பாடலை இங்கு போய் கேட்டேன் . மிகவும் பிடிக்கும் சிறு வயதில் அண்ணனும் நானும் விவித்பாரதி கேட்டு மகிழ்வோம். இந்த இந்தி படமும் அண்ணனுடன் போய் இருக்கிறேன், இந்த படத்தை தமிழிலில் எடுத்தார்கள் ஜெயசங்கர் நடித்தார் என்று நினைக்கிறேன்.
1970 ல் கோவையில் பள்ளி படிப்பு படித்து கொண்டு இருந்தேன்.
உங்கள் மலரும் நினைவுகள் மிக அருமை.
எதை எடுத்தாலும் வாயில் போட்டுக் கொள்ளும் குழந்தைளை பார்த்து கொள்வது, வளர்ப்பது கஷ்டம் தான் .
பாகற்காய் மெழுக்குப்பரட்டி பேர் முதல்முறையாக கேட்கிறேன்.
செய்முறையும் புதிது கொஞ்சமாக செய்து பார்க்க வேண்டும்.
வல்லிம்மா நலம்தானே... குழந்தையைத் தலைகீழாகப் புரட்டி, வாயில் போனதை எடுப்பது.. ஹா ஹா ஹா எங்கட வீட்டிலும் இந்த அனுபவம் இருக்கு, ஆனா நான் எதுவும் செய்ய மாட்டேன் அழ மட்டுமே தெரியும், கணவர் ஒருதரம், அம்மா ஒரு தரமாக எங்கட மூத்தவரைத் தட்டி.. எடுத்திருக்கிறார்கள்..
பாவற்காய் சூப்பர், இப்படிச் செய்தால் கசப்பிருக்காதென நினைக்கிறேன், பார்க்க அழகாகவும் இருக்குது.
ஆஆ !! கோலி குண்டா ..நினைக்கும்போதே பதறுது .என் பெண்ணை கண்கொத்திப்பாம்பாய் பார்த்திட்டிருப்பேன் வல்லிம்மா .சில நேரம் சட்டையின் துணி பூக்களை எடுத்து பிரிச்சி வச்சிரப்பா ஒளிச்சு :) அதை தேடி கண்டுபிடிக்கறதுக்குள்ள அப்பப்பா :)
பாகற்காய் மெழுகுப்பிரட்டி அம்மாவும் இப்படித்தான் செய்வாங்கா ஆனா ஒரு வித்தியாசம் தேங்காய் சின்ன பற்களாக கீறி போடுவாங்க .தேங்காய் எண்ணெய்யுடன் பாகல் சேர்ந்து மணக்கும் ,.
அன்பு கோமதி மா,
வாழ்க வளமுடன்.
நீங்கள் பள்ளியில் படிக்கும் போது நான்
மூன்றாவது குழந்தை பெற தயாராகிக் கொண்டிருந்தேன்:))
கோவை எனக்கு மிகப் பிடித்த ஊர்மா. அவ்வளவு மரியாதை
எங்கேயும் பார்க்க முடியாது.
பிள்ளைகள் இருவரும் நர்சரி வகுப்புக்கு அடியெடுத்து வைத்தது அங்கேதான்.
பெரியவன் தட்டில் வைத்தால் உணவு எடுக்க மாட்டான்.
ஏண்டா வாயில் போட்டுக் கொண்டாய்
என்று கேட்டால்,
கல்கண்டு மாதிரி இருந்தது என்றான்.
அப்போதெல்லாம் உடலில் வலு,மனத்தில் தைரியம்
இருந்தது மா.
இப்பொழுது இங்கே பிள்ளைகள்
மாடி ஏறி இறங்கி ஓடினாலே நான் அவர்களைக்
கண்டிக்கிறேன்.:(
பாகற்காய் கிடைத்தால் செய்து பார்க்கலாம்.
குழந்தைகளுக்கும் இங்கே இப்படிச் செய்தால் பிடிக்கிறது.
பூண்டு கிடையாது.:)
அன்பு அதிரா,
நான் நல்ல நலம்ப்பா. குளிர்தான் சிரமப் படுத்துகிறது.
எல்லோருக்கும் உண்டானதே இல்லையா.
உங்கள் ஊரிலும் கடுமையான குளிராகத் தான் இருக்கும்.!!
மகள் அவ்வளவு விஷமம் கிடையாது.
பெரியவனுக்கு Curious George என்று அழைக்கலாம். எதற்கெடுத்தாலும்
''ஏன் டாடி?" என்று கேட்டுக் கொண்டே இருப்பான்.
அந்த நிமிடத்தில் அங்கே நான் மட்டும் தான் கண்ணா.
யார் வருவார்கள் ?:(
தனி வீடு.குழந்தைகளைப் பூட்டி உள்ளே வைக்க முடியாது.
கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள்
பெற்றோரைப் பார்க்கக் கூட போக முடியவில்லை.
மருத மலை முருகன் காப்பாற்றினான்.
மிக நன்றி மா.
நலமுடன் இருங்கள்.
அன்பு ஏஞ்சல்,
நலமாப்பா. குளிர் தாங்கும் படியாக
இருக்கிறதா. லண்டன் குளிரை நினைத்தால்
இன்னும் உடல் நடுக்கம் எடுக்கும்.
இங்கே வெளியே போவதில்லை.
அதனால் நட்டமும் இல்லை.
இந்த பாகற்காய் தயாரிப்பதை
மிக அழகாகக் கோமதி ஷண்முகனாதன் சொல்லிக் கொடுத்தார்.
நீங்கள் சொன்னமாதிரிதான் ,
தேங்காய் கீறிப் போட்டார்கள்.
வறுத்துப் பாவக்காயோடு சாப்பிடும்போது
வெகு சுவை. தேங்காய் எண்ணெய்க்கே தனிவாசனை
அதுவும் சீரகமும் சேர்ந்தால் ருசியே தனி.
வந்து பின்னூட்டம் இட்டதற்கு மிக நன்றி மா.
நலமுடன் இருங்கள்.
பாகற்காய் மெழுகுபிரட்டி செய்முறை நல்லாத்தான் இருந்தது. வெங், பூண்டு தவிர்த்து செய்துபார்க்கலாம்.
தமிழ்தாத்தா உவெசா நூலில், அவருடைய தாத்தா(?) தன் மருமகளை கத்தரிக்காய் மெழுக்குவரட்டி செய்யச் சொல்லுவார் என எழுதியிருந்தார். அது நல்ல ருசி என்று சொல்லுவாராம். அது எப்படி இருக்கும் என அப்போது யோசித்தேன் (துவையலைத்தான் மெழுக்குவரட்டி என்கிறார்களா என்று)
பசங்க சின்ன வயசுல செய்தது பயத்தை உண்டுபண்ணியிருந்தாலும் இப்போது எண்ணும்போது சிரிப்பு வரும்.
பெரிய மகனின் விஷமங்கள் அவ்வப்போது ஒவ்வொன்றாக எடுத்து விடுங்கள். என் அண்ணனும் பயங்கர விஷமக்காரன் என்று எங்கள் வீட்டில் பெரியவர்கள் சொல்வார்கள்.
பாகற்காய் மெழுகுப்பிரட்டி அளவு அதிகமாக இருக்கிறதே... அவ்வளவு வெங்காயம், அவ்வளவு பூண்டு போடலாமா? சில நாட்கள் வைத்திருந்து சாப்பிடுவதோ..
பாடல் அருமையான பாடல். பாடலில் வரும் ராஜேஷும் ஹேமாவும் அழகு. அருமையான வரிகளைக் கொண்ட பாடல்.
கோமதி அக்கா... தமிழில் இந்தப் படம் எடுக்கப்பட்டதாய் நினைவில்லை. ஆனால் அந்தாஸ் படத்தின் இரண்டு பாடல்கள் தமிழில் காபி செய்யப்பட்டன. ஒன்று இந்தப் பாடல். தமிழில் "காலங்களே.. காலங்களே.. (எஸ்பிபி)" இன்னொன்று "சித்தி சொல்லு சொல்லு...: (ஹெய்நா போலோ போலோ பாடலின் தமிழ்".
விஷமக்காரப் பிள்ளை. பெண் ரொம்பவே சாதுவாக இருந்திருக்கிறாள் போல. எங்க பெண்ணுக்கு எதைப் பார்த்தாலும் அணிந்து அழகு பார்க்கும் ஆசை. ஒரு முறை இரும்பு வளையம் ஒன்றை மோதிரம்னு கையில் போட்டுக்கொண்டு அதை எடுப்பதற்குள் பட்ட பாடு! பிள்ளைக்கு எல்லாவற்றையும் கீழே தள்ளிவிட்டுச் சிரிக்கும் ஆவல். இஃகி,இஃகி, இதெல்லாம் மலரும் நினைவுகள். உங்க நினைவுகள் அருமை.
பாகற்காய் மெழுக்குப் பிரட்டி கேட்டதே இல்லை. இந்த முறை எளிமையாக இருக்கு. பூண்டு சேர்க்காமல் பண்ணிப் பார்க்கிறேன். பாகற்காய் தினமும் ஏதேனும் ஒரு முறையில் சேர்த்துடுவேன்.
பாகற்காய் மெழுக்குப் பிரட்டி - வீட்டில் அத்தைப் பாட்டி செய்வார். அப்போது சாப்பிட்டதுண்டு. பழைய செய்முறைகள் பலவும் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து வருகிறார்கள்.
பாகற்காய் மெழுக்குப்பரட்டி புதிதாக இருக்கிறது... செய்து பார்க்கிறோம்...
பாகற்காய் எனக்கு மிகவும் பிடித்தமானது.
பாகற்காய் மெழுக்குபுரட்டி ருசியாக தான் இருக்கும் செய்முறை அதைச் சொல்கிறது நன்றாக இருக்கு அன்புடன்
அன்பு முரளிமா,
எண்ணெயில் பிரட்டுவது என்று அர்த்தம் வருமோ.?
நன்றாக வறுத்துவிட்டால் பாகற்காயைக் குழந்தைகளும் சாப்பிடுவார்கள்.
இங்கே ஒரு ஆள் வெங்காயம் பூண்டு போட்டால் சாப்பிட மாட்டார்.
எனக்கு சொல்லிக் கொடுத்த அம்மா வீட்டில்
எல்லாப் பொருட்களும் ஒரே அளவில் சேர்த்தார்.
அது மொத்தத்தில் ஒரு ஊறுகாய்
மாதிரி வந்தது.
நான் செய்யும்போது எல்லாவற்றையும்
சிறிதளவில் தான் சேர்த்துக் கொண்டேன்
பூண்டு வாய் நாற்றம் கொடுக்கும் என்று
சிறிதுதான் சேர்ப்பேன்.
தமிழ்த் தாத்தா என் சரித்திரம் பெரியவன் தான்
வாங்கிக் கொடுத்தான். கொஞ்சம் கொஞ்சமாகப்
படித்துக் கொண்டிருக்கிறேன்.
மிக நன்றி மா.
அன்பு ஸ்ரீராம்,
அதற்கென்ன குழந்தைகள் விஷமம் செய்யும் போது கோபம் வந்தாலும்
இப்பொழுது நினைக்கும் போது
சமாளித்த விதம் தான் நினைவில்.
மஹா புத்திசாலி. நாலு வயசில் நிகழ்ச்சியின்
தீவிரம் தெரியாது இல்லையா.:(
இவரோ காலை போனால் இரவு தான் வருவார். தொழிற்சாலை
தொலைதூரம்.
அப்படியும் அந்த புல்லட் பைக்கின் சத்தம்
கேட்டவுடன் குழந்தைகள் விழித்துக் கொள்வார்கள்.
சின்னவன் வந்தவுடன் இன்னும் நிறைய
ரோதனைகள் கொடுத்து ,அண்ணனை வென்று விட்டான்:))))))))))
மிக மிக இனிமையான சந்தர்ப்பங்கள்.நன்றி மா.
அன்பு ஸ்ரீராம்,
பெரியவன் சாது. அது சின்னவன் பிறந்தாட்டுதான் தெரிய வந்தது:))))
கனி முத்து பாப்பா படம் ,இந்த அந்தாஸ் மாதிரி வந்தது என்று நினைக்கிறேன்.
''ராதையின் நெஞ்சமே'' அந்தப் படத்தில் தானே.
ஜெய் சங்கரும் லக்ஷ்மியும் ஜோடி.
கோவையில் தான் கேட்டிருக்கிறேன் இந்தப் பாடல்களை.
அப்போ ரிலீஸ் ஆச்சு.
பாடல் வரிகளைப் படத்தலைப்பாக வைப்பது
அப்போதே வந்துவிட்டது.
ஹேமா மாலினியின் நளினம் மிக அழகு.
அன்பு கீதாமா,
அவனும் சாதுதான். கொட்டி,அட்டகாசம் பண்ணினது
சின்னவன்.
கோலிக் குண்டை கொடுத்தது என் தப்புதான்.
நானே சின்ன வயதுல தம்படிய மூக்கில போட்டுக் கொண்டேன் என்று அம்மா
வருத்தப் படுவார்.!!
அம்மாக்களுக்கு எப்பொழுதும் அடுப்படியில் வேலை இருக்கும்.
குழந்தைகள் மேல் கண் வைக்கப்
பெரியவர்கள் இருந்தால் தேவலை.
உங்க பெண்ணும் இப்படி விஷமமமா:)))
எல்லாத்தையும் தாண்டி தான் .. நாம் வர வேண்டி இருக்கு.
ஆமாம் கீதாமா,
பாகற்காயில் எதுவும் சேர்க்கவே இவர்
விடமாட்டார்.
அதுவே அப்படியே சாப்பிட்டால் தான் பலம்
என்பார்.
குழந்தைகளுக்குக் கொஞ்சம் வெங்காயம்,வெல்லம் சேர்த்துக் கொடுத்தால்
சுலபமாக இறங்கும்.
மிக நன்றி மா.
அன்பு வெங்கட்,
ஆதி கிட்ட சொல்லுங்கோ.
இதமாகச் செய்து வலை ஏற்றுவார்.
நம் இஷ்டப்படி சேர்ப்பதைச் சேர்க்கலாம்.
அத்தைப் பாட்டி....அடடா கேட்கவே நன்றாக
இருக்கிறது. மிதி பாகலில் செய்தால்
இன்னுமே அருமை. நன்றி மா.
அன்பு தனபாலன், நம் திண்டுக்கல்லில்
இந்தப் பாகல் காய் நன்றாகக் கிடைக்கும்.
சர்க்கரை (என்னைப் போன்றவர்கள்)
உள்ளவர்கள் சாப்பிட நல்ல பலன் கிடைக்கிறது என்று சொன்னார்கள். நன்றி மா.
அருமை
Post a Comment