Blog Archive

Friday, February 12, 2021

அவர்க்கும் எனக்கும் அமைந்த வாழ்க்கை.......பகுதி 2



வல்லிசிம்ஹன்
விசாலி கணேஷ் தம்பதி!!!!!!!!!!!

விசாலத்தின் கணவரைப் பார்க்கலாம் இப்போது.
கொஞ்சம் தி.ஜானகிராமன் கதை ,உயிர்த்தேனில் வரும் பூவராகன் மாதிரி
இருப்பார்.
நிதான உயரம். நல்ல கண்கள்,சிரித்த முகம்.
அரட்டை,உற்சாகம் என்று வலம் வருவார். 
பெண் பார்க்க வரும்போது அவரை செக் செய்ய என்னைதான்
எச்சரித்திருந்தாள்.
''ஒன்றும் வேண்டாம்.பாதங்கள் அழுக்கில்லாமல்
இருக்கான்னும் மட்டும் பார்த்து சொல்லு!!!"
என்றதும் எனக்கு வந்த சிரிப்புக்கு அளவே இல்லை.
இருந்தாலும் அக்கா ஆயிற்றே.!! ஒத்துக்கொண்டு

கண்கொட்டாமல் காத்திருந்து, ஜரிகை வேஷ்டிக்குக்
கீழே தெரிந்த பாதங்களை ஒரே நொடியில் 
பார்த்துவிட்டு,
அவளிடம் பிறகு சொன்னேன்.''நீட்டா இருக்கு சாலி,எல்லா விரலும்
சரியா இருக்கு" என்று பலமான Giggles க்கு நடுவே
சொன்னேன். 18 வயதில் அவளுக்கு எப்படி இவ்வளவு விஷயங்கள்
தெரிந்திருக்கு என்று எனக்கு ஆச்சரியம்.
என்னைப் பெண் பார்க்க சிங்கம் வந்த போது
எனக்குப் பழைய நினைவு வர சிரிப்பில் முகம் சிவந்து போச்சு.
அம்மா கண் காட்டியதில்
அடக்கிக் கொண்டேன்!!!:))
வாழ்க்கையின் களங்கம் இல்லாத தருணங்களில்
இதுவும் அடக்கம்.

விசாலிக்கு   அவரை,,,, அதுதான் நம்ம ஹீரோ கணேஷ்
மிகப் பிடித்து விட்டது.
அவருக்கும் அப்படியே .
 திருமணமாகி  ஒரு பெண் குழந்தையும் வந்து விட்டது. மதுரை தல்லாகுளத்தில்
மாமியார் வீடு. மாமனாரும் ,மாமியாரும் விசாலியைப் 
பொன் போலப் பார்த்துக்கொண்டார்கள்.

அவர்கள் குழந்தையைக் கவனித்துக் கொண்ட போது,
விசாலி, கணவனுடம் அவனுடைய
வெஸ்பா ஸ்கூட்டரில் மதுரையின் சினிமாக் கூடங்கள், 
ஹாஜீமூசா, தோழி குடியிருந்த வக்கீல் புதுத்தெரு என்று
சென்று வருவாள்.

கணேஷ் அண்ணா அவளைத் தனியே அனுப்பவே மாட்டார்.


வாரத்தில் ஒரு நாள் புதன் கிழமை மீனாக்ஷி அம்மன்
தரிசனம் உண்டு. கூடவே புது மண்டபம்,
"இக்கி பிக்கி"  அதாவது, வளையல்கள், காது தொங்கட்டான், 
கழுத்து மாலை என்று வாங்கி வந்து
அலமாரியை நிரப்புவாள். தாழம்பூ குங்கும வாசனையோடு
அவள் அலமாரி அழகாக இருக்கும்.

இந்த சமயத்தில் நாங்களும் பசுமலைக்கு வந்துவிட்டோம்.
தொலைபேசியில் என்னுடன் எப்பவாவது 
பேசுவாள்.

அவர்கள் பெண்ணுக்கு மீனாக்ஷி என்றே பெயர் சூட்டினார்கள்.
மீனாக்ஷியின் ஆண்டு நிறைவு 
பிரமாதமாக நடந்தது.
அங்கே வந்திருந்த விசாலியின் பெற்றோர்
கமலிக்கு லேடி டோக் கல்லூரியில்
பியூசி முதல் பகுதியில் இடம் கிடைத்திருப்பதாகவும்

ஹாஸ்டலில் விடலாம் என்று திட்டம் 
என்றும் சொன்னார் விசாலியின் அப்பா.
விசாலி, ''இங்கே  ஏன்பா சேர்க்கணும்?
திருச்சி சீதாலக்ஷ்மி கல்லூரியில் சேர்க்கலாமே,
இந்தக் கல்லூரியைவிட அது தேவலை இல்லையா''
என்றாள்.
விசாலியின் மாமனார் குறுக்கிட்டு
''அதெல்லாம் பரவாயில்லை,இதோ இங்க பக்கத்தில் இருக்கு லேடி டோக்.
போகவர சௌகரியம். நம்மகத்திலேயே 
கமலி தங்கிக் கொள்ளட்டும்,
நீங்களும் கவலை இல்லாமல் இருக்கலாம்''
என்று சொன்னதும் விசாலியின் மனம்
சுணக்கம் கொண்டது.
அதைக் கண்ணுற்ற விசாலியின் மாமியார்,''அம்மா, இங்க உள்ள
வா.இந்தக் காப்பியைக் கொண்டு போய்க் கொடு''
என்று அழைத்தார்.
உள்ளே போனதும் உனக்கு இதில் என்ன ஆக்ஷேபணை.
பாவம் அவள் வந்து படிச்சுட்டுப்
போகட்டுமே என்று அன்புடன் கேட்க,
"அத்தை, அவள் சுபாவத்திலேயே என்னுடன் 
ஒத்துப் போக மாட்டாள். வீணே குழப்பம் வேண்டாமே
என்று பார்த்தேன் / என்றதும்,
அதை நான் கவனிக்கிறேன் நீ கவலைப் 
படாதே. உங்க அப்பாவைப் பார்த்தால்
பாவமாக இருக்கு.
சரின்னு சொல்லு என்ற மாமியாரைப் 
பார்த்ததும் விசாலிக்குக் கண் கலங்கிவிட்டது.

வெளியே வந்து, ''அப்பா கமலி இங்கே வருவதில்
எங்களுக்கு சிரமம் இல்லை.
நேரக் கட்டுப்பாடுகளுக்குள் அவள் இருக்கணும்''
என்றாள்.
தந்தை முகத்தில் நிம்மதி படர்ந்தது.
ஜூன் கடைசியில் நாங்கள் வருகிறோம்
என்று சொல்லி விடை பெற்றார்கள்.
இதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை
என்பது போல் அத்திம்பேருடன்
அரட்டை துவங்கிவிட்டாள் கமலி.
மீண்டும் பார்க்கலாம்.



19 comments:

கோமதி அரசு said...

கதை நன்றாக இருக்கிறது. விசாலி மனதில் பயம் வந்து விட்டது போலவே!

மதுரை வக்கீல் புதுதெருவில் நின்று ஸ்வாமி பார்ப்போம்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி கோமதிமா. எனக்குத் தெரிந்த சில தெருக்களில் வக்கீல் புதுத் தெருவும் ஒன்று. அங்கே நிறைய உறவினர்கள் இருந்தார்கள்.அங்கே ஸ்வாமி வீதி உலா வருவாரா? நீங்கள் அது பக்கத்தில் குடியிருந்தீர்களா. பழங்கானத்தம் பஸ் ஸ்டாப்பிலிருந்து 5 ஆம் நம்பர் பஸ்ஸில் பாட்டி அழைத்துப் போவார்.

கோமதி அரசு said...

நாங்கள் வக்கீல் புது தெருவில் குடி இருந்தது இல்லை.
இப்போது மதுரை வந்த பின் தான் வக்கீல்புது தெரி தெரியும்.
திருவிழாக்களில் ஸ்வாமி வீதி உலா வருவார்.
சுவாமி எந்த தெருவில் வந்து இருக்கு என்று கேட்டு கேட்டு சுவாமியை பார்க்க போவோம் ,அப்போது தங்கை "அந்த தெருவில் சுவாமி இருக்கு அங்கு வந்து விடு" என்றாள்
ஒரு முறை , அங்கிருந்து பார்த்தோம் சுவாமியை.

ஸ்ரீராம். said...

எண்பதுகளில் வக்கீல் புதுத்தெரு வழியாக அடிக்கடி சைக்கிளில் சென்று வருவேன் .  பசுமலையிலிருந்து ஒரு கிறித்தவப் பையன் என்னுடன் படித்தான்.  சாலமன் என்று பெயர்!

ஸ்ரீராம். said...

விசாலி வாழ்க்கையில் கமலி புயலைக் கிளப்பாமல் இருந்தால் சரி.  அதற்கான ஆரம்பம் இப்போதே தெரிவது கவலை!

ஸ்ரீராம். said...

பாதங்களை பார்த்துச் சொல்லு என்றதும் குறிஞ்சி மலர் நாவலில் நாபா அரவிந்தனின் பாதத்தை வர்ணித்திருப்பது நினைவுக்கு வருகிறது.

நெல்லைத்தமிழன் said...

இந்தமாதிரி இடங்களில் கதையை நிறுத்தினால், அடுத்தது என்ன என்ற கவலை தோன்றிவிடுகிளது.

நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா,
ஒவ்வொரு தடவை போகும் போதும்
மதுரை மாறிக் கொன்டே இருந்தது.
நீங்கள் ,நான், கீதாமா,ஸ்ரீராம் எல்லோருக்கும் மதுரை நினைவுகள்
இருந்து கொண்டே இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
நீங்கள் மதுரையில் எங்கே இருந்தீர்களோ.
இளவயதில் மதுரை கட்டாயம் ருசித்திருக்கும்.

ஆமாம் பசுமலையில் கிறிஸ்தவர்கள் ஜாஸ்தி.

கமலி என்ன செய்தாலும் சமாளிக்கும் சாமர்த்தியம்
விசாலிக்கு வந்து விடும்மா.
இள சம்சாரம் இல்லையா.

வல்லிசிம்ஹன் said...

சரியாகச் சொன்னீர்கள் ஸ்ரீராம். அவள்
படிக்காத நாவல்களே கிடையாது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா.

நீட்டமாக எழுதிக் கொண்டே போனால்
எங்க நிறுத்தறது.
என்னை விட்டால் எழுதிக் கொண்டே இருப்பேன்:)
கவலைப் படுவார்களா மா.

Geetha Sambasivam said...

கமலி வருவது விசாலிக்கு மட்டும் இல்லை; எனக்கும் கவலையாகத் தான் இருக்கு. பொறுத்திருந்து பார்க்கலாம்.

திண்டுக்கல் தனபாலன் said...

கதை அருமை...

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா, பொறுத்திருந்தால் நன்மை கிடைக்கும்:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன் மிக நன்றி மா.

வெங்கட் நாகராஜ் said...

//என்னைப் பெண் பார்க்க சிங்கம் வந்த போது
எனக்குப் பழைய நினைவு வர சிரிப்பில் முகம் சிவந்து போச்சு.
அம்மா கண் காட்டியதில்
அடக்கிக் கொண்டேன்!!!:))// ஹாஹா... ரசித்தேன் மா.

தொடர்ந்து என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள நானும் காத்திருக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,இனிய காலை வணக்கம்.

நல்ல பெண். கொஞ்சம் இன்செக்யுரிட்டி.
நல்ல கற்பனை. சரியாக இருக்க வேண்டும்
என்று நினைப்பவள்.அப்போது 22 வயதுதான்
இருக்கும்.
எப்படி நடந்து கொண்டாள்
என்பதுதான் முக்கியம்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

கதை (அல்லது உண்மை) அருமையாய் நகர்ந்திருக்கிறது. என்ன இருந்தாலும், சின்ன வயதில் திருமணமான புதிதில் புருஷனை யாருடனாவது சிரித்துப் பேசுவதற்கு கூட விட்டுத்தர மனது வராது. இது பெண்களின் சுபாவம். வயதாக வயதாக பக்குவம் வரும். கமலிக்கும் இது விளையாட்டுத்தனமாக இருப்பதால் அக்காவை சீண்டிப் பார்க்கும் எண்ணம் வரும். அடுத்து நடப்பதை அறிய ஆவலுடன் இருக்கிறேன். தொடருங்கள்.. பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கமலாமா,
கரு உண்மை. கொஞ்சம் மாறுதலோடு
நான் உணர்ந்ததை எழுதி வருகிறேன்.

அந்த வயதுக்கான புரிதல் அவ்வளவுதான்.
நீங்கள் இதை ரசிப்பதே மகிழ்ச்சி.